Author: ஜோசப் பால்ராஜ்
•2:10 PM
விகடன் பதிப்பாளர் அவர்களுக்கு மிக நீண்ட காலமாக தமிழ் பத்திரிக்கை உலகில் கோலோச்சிக்கொண்டிருக்கும் விகடன், நவீனயுகத்திற்கேற்ப மாற்றங்களை உள்வாங்கிக்கொள்வது கண்டும் மகிழும் அதே வேளையில், நாளுக்கு நாள் விகடனில் அதிகரித்து கொண்டே வரும் ஆங்கில கலப்பு எம்மை வருத்தமடைய செய்கிறது.

ஏன் தமிழில் நவீன கருத்துக்களை எழுதகூடாது? தமிழில் வார்தைகள் இல்லையா அல்லது தமிழில் எழுதினால் யாரும் படிக்கமாட்டார்களா? தற்போது பெருகிவரும் வலைப்பூக்களில் பல இளையோர்கள் தூய தமிழில் தங்களது கருத்துக்களை அழகாக எழுதுகின்றார்கள். 2 வாரங்களுக்கு முன்னர் விகடன் வரவேற்பரையில் குறிப்பிடப்பட்டிருந்த சாத்தன்குளம் ஆசிப் மீரான் அவர்களின் வலைப்பூ ஒரு உதாரணம்.

வலைப்பூக்களை எழுதும் இளையோர் அனைவரும், தற்கால நவீன சமுதாய வாழ்வில் ஈடுபடும், நன்கு படித்து நல்ல வேலையில இருப்போரே. இது போன்ற இன்றைய இளையோர்களே, தூய தமிழில் எழுதவேண்டும் என்ற சமூக பொறுப்போடு செயல்படும்போது, விகடன் போன்ற மிக பிரபலமான பத்திரிக்கைகள் தங்களது சமூக கடமையில் இருந்து தவறுவது மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது. தயவு செய்து விகடன் குழும பத்திரிக்கைகளில் பிறமொழிக் கலப்பை இல்லாதொழிக்குமாறு உங்களை அன்புடன் வேண்டுகின்றோம்.

இந்த கருத்தை படிக்கும் பிற வாசகர்கள், இதை ஆதரித்தால் உங்கள் ஆதரவையும் , எதிர்த்தால் உங்கள் எதிர்பிற்கான காரணங்களையும் இப்பகுதியில் இணைக்குமாறு வேண்டுகிறேன்


விகடனுக்கு வேண்டுகோள்னா அதை விகடனுக்கு அனுப்பாம, இங்க எதுக்குடா எழுதுறனு கேட்காதிங்க, மேல இருக்க வேண்டுகோள் நான் விகடன் ஆசிரியருக்கு , இந்த வார ஆனந்த விகடன் இதழின் வாசகர் கருத்து பகுதி மூலமா அனுப்பியதுதான். இதை படிக்கிற தமிழ் மீது ஆர்வம் கொண்ட என்ன போல சிந்திக்கிற நாலு பேராவது விகடனுக்கு எழுதி ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்துனா நல்லதுதானே, அதுக்குத்தான் இங்கயும் எழுதியிருக்கேன். நல்லது நடக்கணும்ணா நாலு வழியிலயும் முயற்சி செய்யணும் பாருங்க.
. Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•10:50 PM
மிக நீண்ட நாட்களாக என் மனதை அரித்துக்கொண்டிருக்கும் ஒரு ஆதங்கம் தான் இந்த பதிவு. இது ஒரு சுயநலம் கலந்த பொதுநலப் பார்வையும் கூட.

வளர்ந்து வரும் நவீனயுகத்தில் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையால் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் போன்ற மரபுசார் எரிபொருட்களின் தேவையும், சர்வதேச சந்தையில் அதிகரித்துவரும் கச்சா எண்ணெயின் விலையால் எல்லோரும் பாதிப்படைவது பற்றி நான் ஓன்றும் தனியாக சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் மரபுசாரா எரிசக்தி எனும் ஒரு அரிய வளத்தை நம் கையில் வைத்துக்கொண்டு இன்னும் ஏன் நாம் அதை உயோகிக்க மறுக்கிறோம் என்பது தான் எனது கேள்வி.

கரும்பில் இருந்து சர்கரை தயாரிக்கும் போது கிடைக்கும் கழிவுப்பாகில் (மொலாசஸ்) இருந்தும், மக்கா சோளத்தில் இருந்தும் தயாரிக்கப்படும் எத்தனாலை உயிர் எரிபொருளாக உபயோகிக்கலாம் என்பதை ஏற்கனவே பிரேசில் போன்ற நாடுகள் நிரூபித்துவிட்டன. விவசாயத்தை முக்கியத்தொழிலாக கொண்டுள்ள இந்தியாவில் கரும்பும் , சோளமும் மிக அதிகமாக பயிரிடப்படும் பயிர்கள் தான்.

பிரேசில் நாட்டில் உயிர் எரிபொருள்(Bio Fuel) ஆக எத்தனாலை பயன்படுத்தி கார் போன்ற வாகனங்களை இயக்கிவருகிறார்கள். தொழில்நுட்பம் குறித்த மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள இணைய முகவரிக்கு சென்று பாருங்கள். (http://en.wikipedia.org/wiki/Ethanol_fuel).


இது நாள்வரை சர்க்கரை ஆலைகளில் கழிவாக வெளியேற்றும் மொலசஸ் தற்போதுவரை வேண்டாத ஒரு கழிவாகத்தான் வீணாக்கப்படுகிறது. சொல்லப்போனால் ஆலைகளுக்கு இது ஒரு செலவு தான். ஆனால் இதே மோலாசஸ்தான் எத்தனால் தயாரிக்க முக்கியமான மூலப்பொருள். ஆனால் எத்தனால் என்பது இதுவரை சாரயமாகவும், மிக சில மருத்துவ தேவைகளுக்காகவும் மட்டுமே உபயோகிக்கப்படுவதால் தற்சமயம் பெருமளவில் தயாரிக்கப்படுவதில்லை. இதே எத்தனாலை உயிர் எரிபொருளாக உபயோகிக்கும் நிலை வந்து மிகப்பெருமளவில் தயாரிக்க வேண்டியத் தேவைகள் உருவானால் இன்று சர்க்கரை ஆலைகளுக்கு செலவாக இருக்கும் மொலசஸ் எத்தனால் தயாரிப்புக்கு மூலப்பொருளாக விற்கப்பட்டு வருவாயாக மாறிவிடும். இதனால் கரும்புக்கு கூடுதல் விலை கிடைக்கும் .

மக்காசோளம் மிக குறைந்த நீரைகொண்டு பயிரிடப்படும் ஒரு பயிர். கரும்பைவிட மிக குறைவான நாட்களில் விளையும், மழையை மட்டும் நம்பி விவசாயம் செய்யும் இடங்களிலும் பயிரிட முடியும். ஆனால் தற்போது உணவு பொருளாகவும், கோழி பண்ணைகளில் தீவனமாகவும் மட்டுமே பயன்படுவதால் மிகக்குறைந்த விலையே இதற்கு கிடைத்துவருகிறது. சோளத்தில் இருந்தும் எத்தனால் தயாரிக்கமுடியும் என்பதால் இதற்கும் நல்ல விலை கிடைக்கும். இவையெல்லாம் விவசாயிகளுக்கு கிடைக்கும் பலன்கள்.

பெட்ரோலிய எரிபொருட்களை உபயோகிப்பதால் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை விட , எத்தனாலையோ அல்லது எத்தனால் கலந்த எரிபொருளையோ உபயோகிப்பதால் ஏற்படும் கேடு குறைவானது என்றும் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. உலகின் வெப்பம் அதிகரித்து பல கடலோரப்பிரதேசங்கள் வெகுவிரைவில் நீரில் மூழ்கும் என்ற எச்சரிக்கை விடப்பட்டுள்ள இந்த சூழலில் சுற்றுபுறச் சூழலை பாதுகாக்கவும் இது ஒரு மி்கச்சிறந்த வழியாகும் என்பதில் ஐயமில்லை. ஆக சுற்றுப்புற சூழலை காரணமாக கொண்டும் இதை தடுக்க முடியாது.

நாட்டின் இறக்குமதியில் பெருமளவு கச்சா எண்ணெய் தான் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று , வெறும் 30 % எத்தனால் கலந்த எரிபொருளை உபயோகித்தால் கூட , கச்சா எண்ணெய் இறக்குமதி 30% குறையும் இதனால் ஒரு 15% பெட்ரோலிய பொருட்களின் விலை குறைந்தாலும் எல்லோருக்கும் நன்மைதானே ? மேலும் இறக்குமதி குறைவதால் நாட்டின் பொருளாதாரமும் உயரும் அல்லவா?

மேலும் இந்தியாவில் உயிர் எரிபொருள் பயன்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்தினால், மேலும் பல நாடுகள் இதை பயன்படுத்த முன்வரலாம், எல்லோராலும் எத்தனால் தயாரிக்கமுடியாது என்பதால் எத்தனால் ஏற்றுமதியில் கூட பெரும் லாபம் ஈட்ட முடியும்.

ஆக என் சிற்றறிவுக்கு புரிந்த வகையில் எந்த கோணத்தில் பார்த்தாலும் நன்மையளிக்கும் இந்த திட்டத்தை ஏன் எந்த அரசாங்கமும் கண்டுகொள்ளவதில்லை?

சரி இதுல என்ன பொது நலம் கலந்த சுயநலம் உனக்கு அப்டினு யாரும் கேட்குற மாதிரி வைக்க கூடாதுல, அதையும் தெளிவா சொன்னாதானே சரியா இருக்கும்

பொது நலம் : 1) நாட்டின் பொருளாதார முன்னேற்றம்2) குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் போன்றவை3) சுற்றுப்புற சூழல் பாதிப்பு குறைவது போன்றவை.

சுய நலம் : என்னதான் கணிப்பொறி துறையில வேலை பார்த்துகிட்டு இருந்தாலும் நான் மாரனேரி என்னும் கிராமத்துல ஒரு விவசாய குடும்பத்துல பிறந்தவன் தானே. கரும்புக்கும் சோளத்துக்கும் நல்ல விலை கிடைக்கும்னா என்ன மாதிரி விவசாயிகளுக்கு பெரிய நன்மைதானே ... Udanz
Author: MaYa
•10:37 PM
இயற்கையின் வரத்தில் இந்திரலோகம் பூமிக்கு வருமா?
வரும்.. அப்படி வந்த ஒரு அமுதத்துளி.. விழுந்த இடம்.. மாரனேரி..!


இன்றைய மனிதனால் அதுபல மாற்றங்களை அடைந்திருக்கலாம்! ஆனால் அது எனை பாதிக்காது..! நான் என் நினைவுகளில் நிதமும் மகிழ்வித்துக் கொண்டிருக்கும்.. என் அழகிய கிராமத்தை.. உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

அப்படி என்ன அழகு?! இந்த மாரனேரி?.. சொல்கிறேன்...

காவிரியின் கிளைநதி வெண்ணாறு எனும் தாய் தன் பாலெனும் நீரை வாரித் தெளித்து வளர்த்த பசுமை! அது போதாதென்று அதன் கிளைக்கால்வாய் தானும் தன் பங்குக்கு பசுமை சேர்த்தது இங்கே! இவ்விரு சகோதரிகளை வைத்தே ஆயிரம் கதைகள் இங்கே அமையக் காரணம் சாத்தியமானது. எத்தனை சிறார்கள் எத்தனை இளம் காளைகள், நங்கைகளின் கதைகள் இதில் ஒளிந்துகொண்டு இருக்கிறது என்பதை இந்த ஆற்றின் நீரும், கோடையில் காற்றும், நீரூற்றும், கானலும் இடைவிடாது இங்கே உரக்க கூறிக்கொண்டிருக்கின்றன.

ஒருபுறம் தாயென வெண்ணாறு வளம் சேர்க்க..! தந்தையாய் இன்னொரு புறம் காவிரியின் இன்னொரு கிளையாறு "புதாறு" (இது மாரனேரியில் வழங்கும் பெயர்) ஊரின் தென்கரையை பச்சை ஆடைகள் இட்டு வயல்களை அலங்கரித்தது. முத்தாய்ப்பாய் ஒரு குளத்தையும் பருவத்தில் தவறாது நிரப்பிக்கொண்டுதான் இருக்கிறது. தண்ணீர் இப்படி வளம் செய்ததால் கோடையைத்தவிர முப்போகம் விவசாயம் இங்கே கிட்டத்தட்ட எல்லா வருடங்களும் நடந்து வந்தது..!

இந்த சொர்க்கத்தில் ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு இடமும் எப்படி உருக்கொண்டு இருந்தன?! அந்தந்த பருவத்தில் அங்கே என்னென்ன கதைகள் உருவாகிக்கொண்டு இருந்தன?! இதை சொல்லி உங்களையும் அந்த சொர்க்கத்தில் சில நேரம் தங்கவைக்க செய்வதே எங்கள் நோக்கம்!

நாங்க ரெடி! நீங்க ரெடியா? Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•6:59 PM
எல்லாரயும் பார்துட்டு நாமளும் ரொம்ப வீராப்பா வலைப்பூவ தொடங்கிட்டோமே, என்னடா எழுதறதுனு யோசிச்சுகிட்ட்டே வெள்ளிகிழமை சாயங்காலம் சீக்கிறமா வேலைய விட்டு வீட்டுக்கு வந்த நானு யோசிச்சுகிட்டே, இணையத்துல ஆனந்த விகடன படிச்சுகிட்டு இருந்தேன். நீ என்ன பண்ணா எங்களுக்கு என்னா? சொல்ல வந்தத சொல்லுடானு திட்டக்கூடாது, ஏன்னா, நம்மள எது எழுதத் தூண்டுதுனு சொல்லுறதுதானே ஒரு பெரிய எழுத்தாளனுக்கு அழகு? ( 2 வது பதிவுலயே பெரிய எழுத்தாளனானு கேள்வி* உங்களுக்கு வந்தா அதுக்கு விடை கடைசியில இருக்கு) .

இந்த வார விகடன்ல சினிமா பகுதியில நம்ம இளம் கதநாயகர் பரத்தோட பேட்டி இருந்துச்சு. அவரு இப்போ "சூப்பர் ஹிட்" இயக்குநர் பேரரசுவோட படத்துல நடிக்கிறாரு. படம் பேரு பழனி, இந்த பேட்டில பரத்து " விஜய்க்கு ஒரு சிவகாசினா, எனக்கு பழனி" அப்டினு சொல்லிப்புட்டாரு.

இப்போ எல்லாம் விகடன் பத்திரிக்கைய இணையத்துல படிச்சா , அதுல ஒரு ஒரு பகுதிக்கும் நாம கருத்து எழுதலாம் பாருங்க, அங்க தான் நிறைய பேரு அவங்க அவங்க கருத்து சுதந்திரத்த காட்டுவாங்க( நான் உட்பட). அட நீ வலைப்பூவுல எழுதிகிழிக்கிறப்ப, அவங்க எல்லாம் விகடன்ல எழுதகூடாதானு நீங்க எல்லாம் கேட்க கூடாது.

அதுல ஒருத்தர், கீழ்கண்ட கருத்த எழுதியிருந்தாரு

"அய்யா சாமி நீங்கள்லாம் சினிமாக்கு எதாவது நல்லது பண்ணனும்னு நெனச்சா காதல் மாதிரி படங்கள்ல நடிக்கிறதோட நின்னுக்குங்க. விஜயோட கம்பேர் பண்ணி பேசறதெல்லாம் கொஞ்சம் ஓவர்ங்கண்ணா... அவர் இன்னைக்கு இவ்வளவு பெரிய ஸ்டார் ஆக எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை சந்தித்து இருப்பார். திடீர்னு யாரும் பெரிய ஆள் ஆகிவிட முடியாது. "

இங்க தான் என் கேள்வி ஆரம்பிக்குது. (அப்பா ஒரு வழியா ஆரம்பிச்சுட்டேன்).
அப்டி என்னங்ணா விஜய் கஷ்டப்பட்டாரு? அவங்கப்பா டைரக்டரு சும்மா மவனுக்காக பக்கா மசாலா படமா எடுத்து மவன ஒரு கமர்ஷியல் ஹீரோவாக்குனாரு, நடிக்க வந்து ரொம்ப நாளைக்கு அப்றம் பூவே உனக்காக படத்துல நடிச்சதுக்கு அப்றம் தானே விஜய் வெளியிலயே தெரிஞ்சாரு. ஆக விஜய் ஒண்ணும் யாருமே படாத கஷ்டம் எல்லாம் பட்டு பெரிய ஆளா ஆகலை. வேற மொழிகள்ல நல்லா ஒடுன படத்த வாங்கி, ரீ மேக் பண்ணித்தான் அவரோட பாதி படம் வருது. அப்டி எந்த விதத்துல அவரோட ஒப்பிட கூட முடியாத அளவுக்கு அவரு பெரிய ஆளு?

நம்ம பரத் அப்டியா? 5 பேரோட ஒருத்தரா பாய்ஸ் படத்துல அறிமுகமாகி, அப்டியே 4 ஸ்டூடண்ட்ஸ் ல 4 பேருல ஒருத்தரா வந்து, அப்றம் வில்லத்தனமா எல்லாம் நடிச்சு, படிப்படியா முன்னேறி இன்னைக்கு ஒரு கதநாயகனா வந்துருக்காருல. இதுல முக்கியமான விஷயம் அவங்க அப்பா தயாரிப்பாளர் இல்ல, அவங்க அண்ணண் இயக்குநரும் இல்ல.
அது ஏன் நம்ம தமிழ் நாட்ல மட்டும் நான் அடுத்த சூப்பர் ஸ்டாரவேண் அப்டினு யாரும் சொன்னா, உடனே எல்லாரும் சீறி பாய்ஞ்சு வந்து, அது எப்டி நீ அடுத்த சூப்பர் ஸ்டாரவேன்னு சொல்லலாம்னு திட்றாங்க?
பாவம் ஒருத்தரு அப்டி சொல்லிட்டு, எல்லாரும் சொன்ன கருத்தையெல்லாம் கேட்டு " நான் பேஷ் மாட்டேன், இனிமே நான் பேஷ்வே மாட்டேன்னு" புலம்பிக்கிட்டி கிடந்தாரு. (இப்பதன் மறுபடியும் பேஷ ஆரம்பிச்சுருக்காரு)

ஒரு பள்ளிகூடத்துல படிக்கிற பையன் நான் முதல் ரேங்க் வாங்க ஆசைப்படுறேன்னு சொன்னா தப்புனு சொல்வீங்களா? ஆசைப்படுறது அவன் அவன் உரிமை. அதுக்கு தகுந்தபடி உழைச்சா அவன் அதை அடையப்போறான். இது நாம வேலை பார்குற இடம், சினிமா, அரசியல் எல்லாத்துக்கும் பொருந்தும்.

இப்போ சரத்குமார், விஜயகாந்த், ராமதாசு, இவ்ளோ ஏன் நம்ம தமிழ்நாடு காங்கிரஸ்ல சிலரே 2011 ல நாங்கதான் ஆட்சியமைப்போம்னு சொல்றாங்கள்ல ? நான் கூட சீக்கிரம் ப்ராஜெக்ட் மானேஜர் ஆகணும், அப்றம் சொந்தமா கம்பெனி ஆரம்பிச்சு, பெருசா இல்லனாலும் ஏதோ ஒரு பில்கேட்ஸ் அளவுக்காவது வரணும்னு ஆசைப்படுறேன்.

தகுதியும் திறமையும் இருந்தா ஆசைப்படுறத அடையப்போறோம். அப்துல் கலாம் சொன்ன மாதிரி எல்லாரும் கனவு கண்டாதனே முன்னேற முடியும்?
அப்டித்தான் நம்ம பரத்தும் சொல்லியிருக்காரு. அத போய் தப்பு சொன்னா எப்டி ? ஆசைப்படுறது தப்பாங்க ?

* 2 வது பதிவுலயே பெரிய எழுத்தாளாராடா நீ ? என்ற கேள்விக்கு பதில்: நான் பெரிய எழுத்தாளராகணும்னு ஆசைப்படுறேன். ஏனுங்க, ஆசைப்படுறது தப்பா? Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•12:11 AM
எல்லாரயும் புடிச்ச வலைப்பூ மோகம் என்னைமட்டும் விட்டுடுமா என்ன?
ஆகையால் இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் நானும் இனிமே எழுதி தள்ள போறேன்.
படிச்சுட்டு உங்களோட மேலான கருத்துக்களை தவறாம அனுப்புங்க.

நான என்ன தான் சிங்கபூர்ல வேலை பார்த்தாலும், பிறந்த இடத்த மறக்க கூடாது பாருங்க, அதான் மாரனேரினு* என் வலைப்பூவுக்கு தலைப்பு வைச்சுருக்கேன்.

எத்தனையோ பேரு எனக்கு முன்னாடி இதே வேலைய செஞ்சாலும், உடனே நானும் வலைப்பூ களத்துல குதிச்சே ஆகணும்னு என்னைய தூண்டியது சாத்தான்குளம் ஆஸிப் மீரான் அண்ணாச்சி தான். இவரு பிரபல பத்திரிக்கையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்களின் மகன் , 4 வருசமா, நெல்லை தமிழ்ல ரொம்ப நல்லா எழுதுறாரு. இவரு வலைப்பூவ ( http://www.asifmeeran.blogspot.com/) படிச்சுபுட்டு தான் நானும் கிளம்பிட்டேன்.
இனி யாரவது என்ன அடிகிறதா இருந்தா அண்ணாச்சிய அடிச்சுட்டுதான் என்கிட்டே வரணும். அண்ணாச்சி இப்போ துபாய்ல இருக்காக.

* மாரனேரி.
தஞ்சாவூர் மாவட்டத்துல கல்லணைக்கு பக்கத்துல வெண்ணாற்றங்கரையில இருக்க ஒரு அழகிய கிராமம். அது தான் என்னோட சொந்த ஊர். Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க