Author: ஜோசப் பால்ராஜ்
•7:19 PM
கீழே இருப்பது அண்ணண் ஆதிமூலகிருஷ்ணண் அவர்களின் பதிவு.

உதவி தேவைப்படாமல் யாருக்கும் உதவவேண்டிய அவசியமில்லை
இப்படி சொல்லிகொடுத்து அவர்களை படிப்பிலும், திறமையிலும் மட்டுமல்ல தன்னம்பிக்கையிலும் முன்னேற்ற பாடுபடும் திரு. எஸ். இராமகிருஷ்ணண் அவர்களின் இந்த சேவைக்கு நம்மால் முடிந்த உதவியை செய்வோம். நண்பர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்ய அன்புடன் வேண்டுகிறேன்.
***********************************************

அவனுக்கு ஒரு 10 வயதிருக்கும். அவ்வளவு அழகாக இருப்பான். படிப்பில் படு சுட்டி. சோடாபுட்டி கண்களை உருட்டி விழித்து 'கெக்கெக்கெ' என்று அடக்கமுடியாமல் அவன் சிரிப்பதை இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவனால் நடக்க இயலாது, வீல் சேரில்தான் அமர்ந்திருப்பான். பல சமயங்களில் அவனை விளையாட்டுத்திடலில் காணலாம். மிகவும் கஷ்டப்பட்டு அந்தச் சேரைக் கைகளால் நகர்த்தி விளையாட்டுத்திடலுக்கு வந்து பிற பிள்ளைகளுடன் பந்து விளையாடிக்கொண்டிருப்பான்.

நான் அங்கு பணியில் சேர்ந்திருந்த சமயத்தில் ஒருநாள், அவன் வீல் சேரில் போய்க்கொண்டிருந்தான். நான் அவனை கடந்து போகும் போது, "சார் சார், கிளாஸுக்கு டைமாயிடுச்சு.. என்னை கிளாஸில் விட்டுடுங்க சார்.. ப்ளீஸ்" என்றான். நானும் அவனது வீல் சேரைத் தள்ளிக்கொண்டு வகுப்பறை நோக்கிப் போனேன். கிளாஸை அடையும் முன்பே காரிடாரில் எதிரே நிறுவனத் தலைவர் வந்துகொண்டிருப்பதைக் கண்டேன். பக்கத்தில் நெருங்கியதும் அவர் அவனை நோக்கி சற்று கோபத்துடன், "குமரா, வாட் இஸ் திஸ்.?" என்றார்.

நான் விழித்துக்கொண்டிருக்க, குமரன் கூலாக பதிலளித்தான், "நான் வேண்டாம்னு சொன்னேன் சார். இந்த சார்தான் கேட்கலை, நானே கிளாஸ்ல விடறேன்னு சொல்லி தள்ளிக்கொண்டு வருகிறார்.". அவரது கோபம் என் மீது திரும்பியது, ‘உதவி தேவைப்படாமல் யாருக்கும் உதவவேண்டிய அவசியமில்லை, தேவையெனில் அவர்களே அழைப்பார்கள். அதுவரை நீங்கள் உங்கள் வேலையைக் கவனிக்கலாம்’ என்று கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டுப் போய்விட்டார். முதலில் அதிர்ச்சியடைந்தாலும் இந்த நிகழ்ச்சியும், அவனது குறும்பும் என்னால் மறக்கமுடியாத ஒன்று.

அங்கு பள்ளி, இல்லம், உணவு விடுதி, உள்ளேயே இருந்த விளையாட்டுத்திடல் என மாற்றத்திறன் கொண்ட பிள்ளைகள் அங்குமிங்கும் திரிந்துகொண்டிருப்பார்கள். தாங்குகட்டைகள், காலிபர்கள், மூன்று சக்கரசைக்கிள்கள், வீல்சேர்கள் என கருவிகள் உதவியோடு அவர்கள் இயங்குவார்கள். சிலர் அதையும் பயன்படுத்தமுடியாமல் இன்னும் மோசமான நிலையிலும் இருப்பார்கள். நல்ல நிலையில் உள்ள குழந்தைகளும், சிறிதளவு பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளும் அவர்களுடன் எப்படிப் பழக கற்பிக்கப்படுகிறார்கள் என்றும் ஒருவருக்கொருவர் எந்தச்சூழலில் எவ்வாறான உதவிகளைச் செய்துகொள்கிறார்கள் என்பதையும் அனுபவத்தாலறிந்தேன். நாளடைவில் அவர்களது நிஜமான தேவை என்ன என்பது புரியத்துவங்கியது. அந்தக் குழந்தைகளில் பலரோடு அவர்களது விளையாட்டு நேரங்களில் நட்புடன் பழகத்துவங்கினேன். அது ஓர் அனுபவம்.

அந்த அனுபவத்தை எனக்குத் தந்தது அமர் சேவா சங்கம்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள ஆய்குடி கிராமத்தில் இருக்கும் இந்த 'அமர்சேவா சங்கம்' மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்திற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியாக வரும் அக்டோபர் 30ம் தேதி மாலை 6.30க்கு சென்னை, ராணி சீதை ஹாலில் கிரேஸிமோகனின் 'சாக்லெட் கிருஷ்ணா' நாடக நிகழ்வு நிகழவிருக்கிறது.

என்னைக் கண்டித்த அந்நிறுவனத்தலைவர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன்.

அவர் உலகின் அபூர்வ உடல் பிரச்சினைகளில் ஒன்றான தண்டுவடம் பாதிக்கப்பட்டவர் (Paraplegic). தலையைத் தவிர உடலின் வேறு எந்த அங்கமும் வேலை செய்யாது. 1986ல் இந்தியாவின் சிறந்த மனிதராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அந்நிறுவனத்திலிருந்து வெளிவந்த பின்னும், இன்றும் அவரது அன்புக்கு பாத்திரமானவனாக நான் இருப்பதில் எனக்கு எப்போதும் ஒரு கர்வம் உண்டு. சங்கம் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கல்விக்கூடம், இல்லம் மற்றும் இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி போன்ற பல விஷயங்களில் ஈடுபட்டுவருகிறது. சங்கத்தின் நம்பகத்தன்மைக்கு நானே சாட்சி. மேல் விபரங்கள் தேவையெனில் சொல்லத் தயாராக இருக்கிறேன். இந்த இணையத்தளத்தையும் நாடலாம். https://www.amarseva.org/

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான கொஞ்சம் டிக்கெட்டுகளை விற்கும் பொறுப்பை ஏற்றுள்ளேன்.
Rs.250 - Rose - 3rd Class
Rs.500 - Jasmine - 2nd Class
Rs.1000 - Lotus - 1st Class

டிக்கெட்டுகளுக்காக மட்டுமின்றி விருப்பமிருப்பவர்கள் சிறிய, பெரிய தொகைகளை நன்கொடைகளாகவும் அனுப்பலாம். நிகழ்ச்சி நிகழ்வதால் இந்நேரத்தில் Rs. 5000க்கு மேல் அனுப்புவர்கள் 3 Lotus டிக்கெட்டுகளை பரிசாகப் பெறலாம். Rs. 10000க்கு மேல் அனுப்புபவர்கள் ஒரு விஐபி பாஸ் உட்பட மேலும் சில Lotus டிக்கெட்டுகளைப் பெறலாம். வாய்ப்பு இருப்பவர்களிடமிருந்து லட்சங்களில் நன்கொடைகளை எதிர்பார்க்கிறோம். நன்றி.

நிகழ்ச்சிக்காகவோ/ அல்லது நிகழ்ச்சிக்காக அல்லாமலோ நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் பணம் அனுப்பவேண்டிய வங்கி எண் : 612901093918. இது அமர்சேவாசங்கத்தின் ஐசிஐசிஐ வங்கி கணக்கு எண்ணாகும்.

செக்/டிடியாகவும் அனுப்பலாம் (in favour of Amar Seva Sangam payable at Chennai). அவற்றை அனுப்பவேண்டிய முகவரி : Amar Seva Sangam, No. 1, First Street, Lakshmipuram, Royapettah.Chennai 600 014. Phone No. 044-28114035 24618666

மேற்கண்ட வழிகளில் பணம் அனுப்பியவர்கள் உடனே sumathi.srini@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரில் டாக்டர். சுமதியைத் தொடர்பு கொண்டு பணம் அனுப்பிய விபரங்களைக் கூறி, டிக்கெட்டுகளுக்கான முன்பதிவைச் செய்துகொள்ளுங்கள். மெயிலில் உங்கள் முகவரியையும் தெளிவாக குறிப்பிடுங்கள். தயவுசெய்து அந்த மெயில் அனுப்பும் போது நிர்வாக வசதிக்காக mail@amarseva.org என்ற முகவரிக்கும், தகவலுக்காக thaamiraa@gmail.com என்ற எனது முகவரிக்கும் காப்பி (CC) அனுப்ப மறக்காதீர்கள்.

அனுப்பியவர்களுக்கான டிக்கெட்டுகள் மற்றும் ரசீதுடன் அக்.30 மாலை 4 மணி முதல் ராணிசீதை ஹாலில் நான் காத்துக்கொண்டிருப்பேன். நிகழ்ச்சிக்கான விருப்பமிருப்பவர்கள், டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யவேண்டியிருப்பதால் 25ம் தேதிக்கு முன்னர் விரைந்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நிகழ்ச்சிக்காக அல்லாமல் பணம் அனுப்ப விரும்புபவர்கள் காலக்கெடுவின்றி எப்போதும் அனுப்பலாம்.

நன்றி.
Udanz
|
This entry was posted on 7:19 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 comments:

On Fri Oct 15, 07:45:00 PM GMT+8 , ரோகிணிசிவா said...

காபி அடிச்சாவது ஊருக்கு நல்லது செய்யற ராபின் ஹூட் நீங்க ,
//அண்ணண் ஆதிமூலகிருஷ்ணண் அவர்களின் பதிவு.//
உங்க நேர்மை பிடிச்சு இருக்கு பாஸ்
ஜோக்ஸ் அபார்ட் பகிர்வுக்கு நன்றி

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க