Author: ஜோசப் பால்ராஜ்
•8:00 PM
கோடைக்காலம் வந்தாலே எங்க ஊரு வயலுக்கு எல்லாம் ஆட்டுக்கிடை ( ஆட்டு உரம்) வைப்பதற்காக இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கீதாரிங்க ஆட்டு மந்தைய ஓட்டிக்கிட்டு வந்துருவாங்க.ஒரே சமயத்துல நிறைய கீதாரிங்க குடும்பத்தோட ஆடுகள் ஓட்டிக்கிட்டு வந்துருவாங்க. செம்மறியாடுங்க எல்லாம் கூட்டம் கூட்டமா போறத பாக்குறதே அழகா இருக்கும். வெளி ஆளுங்கள பார்த்தா இதுங்க வெறிச்சுக்கும், தாண்டி ஓடிடும். சின்ன பசங்க இருக்க வீடுகள்ல எல்லாம் கீதரிங்ககிட்ட போய் ஒரு குட்டி ஆடு வாங்கிட்டு வந்து வளர்ப்பாங்க. வருசா வருசம் நாங்களும் ஒன்னு வாங்கிடுவோம்.

வீட்டில் இருக்கும் வெள்ளாடுக‌ளுட‌ன் சேர்த்து வ‌ள‌ர்காம‌ல் இதை த‌னியாக‌த்தான் க‌ட்டி வைப்போம். வெள்ளாடுக‌ள் இவ‌ற்றை முட்டிவிடும். இவை கோடைகால‌ங்க‌ளில் ம‌ட்டும் எங்க‌ள் ஊர்க‌ளுக்கு வ‌ருவ‌த‌ற்கு கார‌ண‌ம், ம‌ற்ற‌ கால‌ங்க‌ளில் எங்க‌ள் ஊர்க‌ளில் எல்லாம் விவ‌சாய‌ம் ந‌டைபெறும், இவை வ‌ய‌ல்க‌ளில் உள்ள‌ ப‌யிர்க‌ளை மேய்ந்துவிடும் என்ப‌தால் கோடைகால‌ங்க‌ளில் ம‌ட்டுமே கொண்டுவ‌ருவார்க‌ள்.

செம்ம‌றியாடுக‌ள் இலைக‌ள், த‌ழைக‌ள், க‌ட‌லை புண்ணாக்கு போன்ற‌வ‌ற்றை சாப்பிட்டாலும் விரும்பி உண்ப‌து க‌ருவ‌க்காய் என‌ப்ப‌டும் வேலிக்க‌ருவை ம‌ர‌த்தின் முற்றிய‌ காய்க‌ளைத்தான். நீள‌மான‌ குச்சியின் நுணியில் அருவாளை க‌ட்டி ( இதை அல‌க்கு என்பார்க‌ள்) அதை கையில் எடுத்துக் கொண்டு ஆட்டை அழைத்துக் கொண்டு வ‌ய‌ல் வெளிக‌ளில் பாதையோர‌மாக‌ இருக்கும் க‌ருவை ம‌ர‌ங்க‌ளிலிருந்து காய்க‌ளை உலுக்கி கொடுப்போம், ஆடுக‌ள் பிரிய‌மாக‌ சாப்பிடும். அப்ப‌டி க‌ருவ‌க்காய் ப‌றிக்க‌ எடுத்துப் போகும் அல‌க்கை வைத்து அப்ப‌டியே மாங்காய், புளியம்ப‌ழ‌ம் எல்லாம் அடிச்சு நாங்க‌ சாப்பிடுற‌தும் உண்டு.இப்போது நினைத்தால் கொடூர‌மாக‌ இருக்கிற‌து. ஒரு ஆட்டுக்கு சாப்பாடு கொடுக்க‌ போய் நாம‌ எத்த‌னை மாங்காய் சாப்பிட்ருக்கோம்.

காலையில பொறுமையா எழுந்திருச்சு, நாங்க‌ ஆட்டுக்குட்டியை கூட்டிக்கிட்டு கிள‌ம்பிருவோம். வீட்டுக்கு வ‌ந்த‌ ரெண்டு நாள்ல‌யே ந‌ம்ம‌ளோட‌ ந‌ல்லா ப‌ழ‌கிடும், எங்க‌ போனாலும் பின்னாடியே வ‌ரும். ஊர்ல‌ இருக்க‌ ஆத்துல‌ போயி குளிய‌லுங்கிறப்பேருல‌ ஒரு ஆட்ட‌ம் ஆடிட்டு வருவோம். எங்க‌ளோட‌ சேர்ந்து ஆடும் குளிக்கும். அப்ப‌ற‌ம் வீட்டுல‌ப் போயி சாப்பிட்டுட்டு அப்ப‌டியே ஆட்ட‌ கூட்டிக்கிட்டு தோட்ட‌த்துக்குப் போயி அதுக்கு இலை வெட்டிப்போட்டுட்டு நாங்க‌ளும் விளையாண்டுட்டு வ‌ருவோம்.

ம‌த்தியான‌ம் சாப்பிட‌ வீட்டுக்கு வ‌ரும்போது வீட்டுக்கு பின்னாடி இருக்க‌ தொழுவ‌த்துல‌ எங்க‌ ஆட்டுக்குட்டியை க‌ட்டிருவோம். எங்க‌ ஊர்ல‌ இருக்க‌ எல்லா வீட்ல‌யும் சாதார‌ண‌மா வீட்டுக்குப் பின்னாடி மாடு, ஆடு எல்லாம் க‌ட்டி வைக்க‌ தொழுவ‌ம் இருக்கும். அங்க‌ ஆட்டுக்குன்னு த‌னியா இட‌ம் ஒதுக்கி அங்க‌ க‌ட்டிருவோம். ஆட்டுக்குட்டிக்கு பெய‌ர் எல்லாம் வைச்சு கூப்டுவோம். அதுக‌ளும் த‌ன்னைதான் கூப்பிடுறான்னு தெரிஞ்சு உட‌னே ஓடியாந்துரும். ப‌ச்ச‌ப்புள்ளைங்க‌ங்க‌ மாதிரி ப‌ழ‌கும், விளையாடும்.

மாலை நேர‌த்துல‌ ப‌ச‌ங்க‌ கூட‌ விளையாடிட்டு அப்டியே ஆத்துல‌ போயி இன்னொருக்கா குளிச்சுட்டு வ‌ருவோம். அப்ப‌ எல்லாம் எல்லாருக்கும் ஆட்டுக்குட்டியை ப‌ற்றிய‌ நினைப்புதான் மூளையில‌ நிறைஞ்சுருக்கும். எல்லாரும் அவ‌ன் அவ‌ன் ஆட்டுக்குட்டியப்ப‌த்தி பெருமை பேசிக்குவோம்.

“ நான் என்ன சொல்றனோ அதத் தாண்டா என் ஆடு கேக்கும்.. நான் கூப்டா வரும்.. எங்க அப்பா கூப்ட்டா கூட‌ வரவே வராது..” என்பான் ஒருவன்.

“ டே... அதாவது பரவால்லடா.. எங்க ஆடு கருவக்காய பறிச்சு கீழ போட்டா தின்னாதுடா.. என் கைல வச்சா தான் நல்லா தின்னும்.. அதுக்கு என்னா கொழுப்பு பாத்தியாடா” என்பான் இன்னொருவன் பெருமையாக..

இப்படி ஏராளமான பேச்சுகள் அந்த செம்மறி ஆட்டுக்குட்டிகளை வைத்து பேசப் படும். பின் குளித்து முடிந்தவுடன் ஆடுகளை அழைத்துக் கொண்டு கிளம்பி விடுவோம். மாலை நேரத்தில் அவ்வளவாக கருவக்காய்கள் கிடைக்காது. காலையிலேயே பறித்துவிட்டது அல்லது இருள் காரணமாக இருக்கலாம்.. ஆனாலும் எங்கள் ஆடுகளுடன் வெளியே சுத்துவது எங்களுக்கு பெருமை... இதில் வேடிக்கை என்னன்னா.. யாருமே ஆடுகளின் முழு ஆயுளுக்கு அவற்றை வளர்த்ததில்லை.. திருவிழாக்களில் வெட்டப்படுவதில் இருந்து காப்பது அவ்வளவு சிரமம். அதில் தப்பினாலும் இருக்கவே இருக்கு அரிசிப்பானை. எப்படி தான் கண்டுபிடிக்குமோ.. நாம் கொஞ்சம் அசந்தாலும் போதும்.. ஆட்டுக்குட்டி வீட்டினுள் நுழைந்து அரிசியை தின்றுவிடும், அரிசியை தின்னுடுச்சுன்னா அவ்ளோதான் ஆடு காலி, அதுக்கு முன்னாடியே அறுத்துருவாங்க. அப்படியே அவைகளிடம் தப்பி வளர்த்தாலும் கொஞ்ச்ம பெரிசானவுடன் குழம்பாக‌வும், உப்புக‌ண்ட‌மாக‌வும் ஆகிவிடும்.

உப்புக்க‌ண்ட‌ம் என்ப‌து ஆட்டின் க‌றியுட‌ன் ம‌சாலா எல்லாம் சேர்த்து, வெயிலில் க‌ருவாடு போல் காய‌வைத்து எடுத்து வைத்துக் கொள்வ‌து. இதை வ‌றுத்து அல்ல‌து குழ‌ம்பில் போட்டு சாப்பிட‌லாம்.

இப்படி ஏடாகூடமா ஏதாச்சும் ஆகி ஆடு குழம்பாகிடுச்சுன்னா எங்களால பெருமையா எல்லாம் பேசிக்கிட்டு திரிய முடியாது. மனசு ரொம்ப சோகமாகிடும். இவன் தான் அந்த ஆட்டுக்குட்டிய கஷ்டப்பட்டு வளர்த்தான் இவனுக்கு கொஞ்சம் அதிகமா கறிய வைன்னு சொல்லி குடுத்தாலும் நமக்கு சாப்பிடவே மனசு வராது. நாங்க என்ன எங்க ஆட்டுல எலும்பே இல்லன்னா சொல்லிக்க முடியும்? நாங்க சோகமா திரியிறதப் பார்த்துட்டு முதல்ல பெரியவங்க எல்லாம் சரிடா விடுங்க, அடுத்த வருசம் நல்ல ஆட்டுக்குட்டியா வாங்கிக்கலாம்னு சமாதானப்படுத்துவாங்க. அதையும் மீறி சோகமா இருந்தா அப்புறம் இனிமே எனக்கு ஆட்டுக்குட்டி வேணும்னு கேளு, அப்பறம் இருக்கு பூசன்னு மிரட்டிருவாங்க.

அவங்க சொல்ற சமதானத்த ஏத்துக்கிட்டோ அல்லது மிரட்டலுக்கு பயந்தோ நாங்களும் எல்லாத்தையும் மறந்துட்டு அடுத்தவருசத்து ஆட்டுக்குட்டிக்காக காத்திருப்போம்.

டிஸ்கி: இது என் பால்ய கால நினைவுகளின் பதிவு தான். இதுக்கும் எதிர்பதிவு ஏகம்பரம் பொடியன் சஞ்சயோட கலர் கோழிக்குஞ்சு பதிவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
Udanz
This entry was posted on 8:00 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

25 comments:

On Wed Oct 15, 12:51:00 PM GMT+8 , Sanjai Gandhi said...

அடப்பாவி அடப்பாவி.. எதோ புள்ள ரொம்ப பொறுப்பா பழைய நினைவுகளை எழுதி இருக்குன்னு நானும் பொறுமையா படிச்சிட்டு இருந்தேன்..

அந்த அலக்கு மேட்டர் தாண்டி படிக்கும் போது தான் தெரியுது .. இது பொறுப்பு இல்ல ஆப்புன்னு.. :)))

பொதுவா எதிர் பதிவு போடும் போது கற்பனையா தான் பதிவு போடுவாங்க.. ஆனா நிஜ அனுபவத்தை வைத்தே எதிர் பதிவு போட்டது செம மேட்டர்மா..

அடிக்கடி இந்த மாதிரி எழுதுங்க ஜோசப் மாமா.. :))

//இதை அல‌க்கு என்பார்க‌ள்//

எங்க ஊர்ல ”ஆக்கருவாள்” என்று சொல்வார்கள்.

மக்களே .. இது வெரும் எதிர்பதிவல்ல.. கிராமப் புறங்களில் இருக்கும் நிகழ்வு தான்.. :)

 
On Wed Oct 15, 12:54:00 PM GMT+8 , Sanjai Gandhi said...

//இப்படி ஏராளமான பேச்சுகள் அந்த செம்மறி ஆட்டுக்குட்டிகளை வைத்து பேசப் படும். பின் குளித்து முடிந்தவுடன் ஆடுகளை அழைத்துக் கொண்டு கிளம்பி விடுவோம். மாலை நேரத்தில் அவ்வளவாக கருவக்காய்கள் கிடைக்காது. காலையிலேயே பறித்துவிட்டது அல்லது இருள் காரணமாக இருக்கலாம்.. ஆனாலும் எங்கள் ஆடுகளுடன் வெளியே சுத்துவது எங்களுக்கு பெருமை... இதில் வேடிக்கை என்னன்னா.. யாருமே ஆடுகளின் முழு ஆயுளுக்கு அவற்றை வளர்த்ததில்லை.. திருவிழாக்களில் வெட்டப்படுவதில் இருந்து காப்பது அவ்வளவு சிரமம். அதில் தப்பினாலும் இருக்கவே இருக்கு அரிசிப்பானை. எப்படி தான் கண்டுபிடிக்குமோ.. நாம் கொஞ்சம் அசந்தாலும் போதும்.. ஆட்டுக்குட்டி வீட்டினுள் நுழைந்து அரிசியை தின்றுவிடும், அரிசியை தின்னுடுச்சுன்னா அவ்ளோதான் ஆடு காலி, அதுக்கு முன்னாடியே அறுத்துருவாங்க. அப்படியே அவைகளிடம் தப்பி வளர்த்தாலும் கொஞ்ச்ம பெரிசானவுடன் குழம்பாக‌வும், உப்புக‌ண்ட‌மாக‌வும் ஆகிவிடும்.//

இது டாப்பு.. :)

 
On Wed Oct 15, 12:57:00 PM GMT+8 , Sanjai Gandhi said...

//உப்புக்க‌ண்ட‌ம் என்ப‌து ஆட்டின் க‌றியுட‌ன் ம‌சாலா எல்லாம் சேர்த்து, வெயிலில் க‌ருவாடு போல் காய‌வைத்து எடுத்து வைத்துக் கொள்வ‌து.//

என்னாது மசாலா எல்லாமா? என்னா மசாலா சக்தி மசாலாவா? அடிங்க..

சிறு சிறு மாமிசத் துண்டுகளாக்கி உப்பும் மஞ்சள் பொடியும் மட்டுமே சேர்ப்பார்கள். பிறகு மெல்லிய கம்பியில் கோர்த்து உயரமான இரு கொம்புகளை நட்டு அதில் கம்பியை கட்டி வைத்துவிடுவார்கள். சில நாட்களுக்கு காயந்துக் கொண்டிருக்கும். இது தான் உப்புகண்டம். :)

 
On Wed Oct 15, 02:44:00 PM GMT+8 , வெண்பூ said...

நல்ல நினைவுகள் ஜோசப்... எதிர்பாத்த மாதிரியே ஆடுகள் குழம்பா ஆகுறத சொல்லிட்டீங்க..

//
உப்புக்க‌ண்ட‌ம் என்ப‌து ஆட்டின் க‌றியுட‌ன் ம‌சாலா எல்லாம் சேர்த்து, வெயிலில் க‌ருவாடு போல் காய‌வைத்து எடுத்து வைத்துக் கொள்வ‌து. இதை வ‌றுத்து அல்ல‌து குழ‌ம்பில் போட்டு சாப்பிட‌லாம்.
//

அதுதானே.. இப்போதெல்லாம் யார் இதை செய்கிறார்கள். என் சின்ன வயதில் நானும் இதை சாப்பிட்டு இருக்கிறேன். உப்பு கண்டத்தை ஒரு கயிற்றில் கோர்த்து கூரையில் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள்..

 
On Wed Oct 15, 03:29:00 PM GMT+8 , Unknown said...

அருமையான நினைவுகள் :) எங்க வீட்டு ஆட்டுகுட்டி ஒண்ணு செத்துப் போனதுக்கு 2 நாள் அழுதது நினைவுக்கு வருது :( அடிக்கடி ஆட்டுக்குட்டிய தூக்காதே, 'தூக்குக்குட்டியா' ஆயிடும்னு திட்டு வாங்குனதும் உண்டு!!

//உப்புக்க‌ண்ட‌ம் என்ப‌து ஆட்டின் க‌றியுட‌ன் ம‌சாலா எல்லாம் சேர்த்து, வெயிலில் க‌ருவாடு போல் காய‌வைத்து எடுத்து வைத்துக் கொள்வ‌து. இதை வ‌றுத்து அல்ல‌து குழ‌ம்பில் போட்டு சாப்பிட‌லாம். //

யாருக்காவது இந்த செய்முறை தெரியுமா? எங்கிட்ட கொஞ்சம் ஸ்டாக் இருக்கு :) வீட்டு செய்முறை வேண்டாமேன்னு கேக்குறேன், ஏதாவது வித்தியாசமா செய்ய.

 
On Wed Oct 15, 03:51:00 PM GMT+8 , சந்தனமுல்லை said...

மிகவும் அருமை! நல்ல பால்ய கால நினைவுகள்!! ஆனால், எங்கள் பாட்டி வீட்டில் கோழிகள் நிறைய இருந்தன..லீவு நாளில் நாங்கள் கேட்போமென்று கலர் கோழிகளையும் வாங்கிக் கொடுப்பார்கள்..ஆனால், அதற்கு ஜூரம் வந்து செத்துவிடும்!! :(
உங்க டெம்ப்ளேட் மிகவும் அருமை..ஒரு கிராமத்திற்கு வந்துவிட்டது போலிருந்தது!!

 
On Wed Oct 15, 03:54:00 PM GMT+8 , சந்தனமுல்லை said...

அப்புறம் அந்த உப்புக்கண்டம், பக்ரீத அப்போ ஆம்பூரில எல்லார் வீட்டு பால்கனி, மாடின்னு முழுசையும் ஆக்ரமிச்சு இருக்கும்! கொஞ்ச நாள் கழிச்சு அம்மி உருட்டற சத்தம் கேட்கும்..அதை போட்டு நசுக்கிகிட்டு இருப்பாங்க!

 
On Wed Oct 15, 04:17:00 PM GMT+8 , விஜய் ஆனந்த் said...

சூப்பர் ஃப்ளாஷ்பேக்....

புது டெம்ப்ளேட் கலக்கல்!!!

 
On Wed Oct 15, 05:46:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாங்க சஞ்சய்.
ஆகா, உங்க பதிவுக்கு எதிர்பதிவுன்னு தெரியாமலேயே பாதிவரைக்கும் படிச்சீங்களா?
//என்னாது மசாலா எல்லாமா? என்னா மசாலா சக்தி மசாலாவா? அடிங்க..
//
அட, அந்த மஞ்சள், உப்பு இதத்தான்பா நானு மசாலான்னு சொல்லிப்புட்டேன்.

 
On Wed Oct 15, 07:49:00 PM GMT+8 , pudugaithendral said...

பொதுவா எதிர் பதிவு போடும் போது கற்பனையா தான் பதிவு போடுவாங்க.. ஆனா நிஜ அனுபவத்தை வைத்தே எதிர் பதிவு போட்டது செம மேட்டர்//

ரிப்பீட்டு.

அருமையா எழுதியிருக்கீங்க. அனுபவத்தை அனுபவத்து சொல்லியிருப்பது அருமையிலும் அருமை.

 
On Wed Oct 15, 08:01:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

ஒரு சிரிப்பானை மட்டுமே பின்னூட்டமாக வழங்கிய ஜெகதீசனுக்கு நன்றி

வாங்க வெண்பூ,
இப்பவும் எங்க வீட்ல செய்வாங்க. நாங்களும் ஊருக்கு போறப்ப எல்லாம் கட்டாயம் உப்புகண்டம் எடுத்துகிட்டு வருவோம். இங்க குழவிக்கல்லு வைச்சு ஒரு நசுக்கு நசுக்கிட்டு எண்ணெய்ல பொரிச்சோ அல்லது குழம்புல போட்டோ சாப்பிடுவோம்.

 
On Wed Oct 15, 08:03:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வருகைக்கு நன்றி தஞ்சாவூரு அண்ணா,
உப்புகண்டம் செய்யிறதுக்கு செய்முறை வேணுமா என்ன ? நான் யாருகிட்டயாவது கேட்டுத்தான் சொல்லணும், எனக்கு சமையல்ல சுடுதண்ணியத்தாண்டி ஒன்னும் தெரியாதுங்ணா.

 
On Wed Oct 15, 08:08:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாங்க சந்தன முல்லை அக்கா,
கோடை காலத்துல கலர் கோழிக்குஞ்சுகள் சூடு தாங்காதுக்கா.

என் வலைப்பக்கத்தின் வடிவமைப்பிற்கானப் பெருமைகள் முழுவதும் என் அன்புத் தங்கை தூயா பபாவிற்கே. எனக்கு இதெல்லாம் தெரியாது அக்கா. தங்கச்சிதான் எல்லா செஞ்சது.

 
On Wed Oct 15, 08:09:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாங்க தம்பி விஜய் ஆனந்த்.
டெம்ப்ளேட் எல்லாம் தங்கச்சி செஞ்சதுப்பா.

 
On Wed Oct 15, 08:12:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாங்க புதுகை தென்றல் அக்கா,
அனுபவம்னா சும்மாவ, வருசத்துக்கு ஒரு ஆட்டுக்குட்டினு எத்தன வருசம் ஆடு வாங்கிருக்கோம். இதுல நானும் என் சின்ன அண்ணணும் ஒரு ஆட்டுக்குட்டிய வைச்சுக்கிட்டு அடிச்சிக்கிட்டோம்னு, ஆளுக்கு ஒரு ஆட்டுக்குட்டி வாங்கிக்குடுத்து அதுக்கு அப்றமும் நாங்க அடிச்சுக்கிட்டது எல்லாம் வேற நடந்துச்சு.

 
On Thu Oct 16, 12:11:00 AM GMT+8 , தமிழ் அமுதன் said...

அப்ப‌டி க‌ருவ‌க்காய் ப‌றிக்க‌ எடுத்துப் போகும் அல‌க்கை வைத்து அப்ப‌டியே மாங்காய், புளியம்ப‌ழ‌ம் எல்லாம் அடிச்சு நாங்க‌ சாப்பிடுற‌தும் உண்டு.இப்போது நினைத்தால் கொடூர‌மாக‌ இருக்கிற‌து. ஒரு ஆட்டுக்கு சாப்பாடு கொடுக்க‌ போய் நாம‌ எத்த‌னை மாங்காய் சாப்பிட்ருக்கோம்.



புளியங்கா, மாங்கா, சாப்புடுறது என்ன கொடூரமா? நாங்கல்லாம் இந்த மாதிரி போகும்போது இதுக்காகவே உப்பு,மொளகாபொடி எல்லாம் கொண்டு போவோம்!
ஆனா கால்ல செருப்பு போட்டுக்க மாட்டோம்! அப்போதான் ஓடுறதுக்கு வசதியா இருக்கும்.

 
On Thu Oct 16, 12:40:00 AM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

உப்புக்க‌ண்ட‌ம் என்ப‌து ஆட்டின் க‌றியுட‌ன் ம‌சாலா எல்லாம் சேர்த்து, வெயிலில் க‌ருவாடு போல் காய‌வைத்து எடுத்து வைத்துக் கொள்வ‌து. இதை வ‌றுத்து அல்ல‌து குழ‌ம்பில் போட்டு சாப்பிட‌லாம்
//

ஆமா..இது உலகத்துல யாருக்குமே தெரியாத மேட்டரு
:)

 
On Thu Oct 16, 03:23:00 PM GMT+8 , VIKNESHWARAN ADAKKALAM said...

சூப்பர்... மலரும் நினைவுகள்... நாங்களும் எங்கள் தோட்டபுறத்தில் ஆடுகள் வளர்தோம்... சில ஆடுகள் நன்கு பழகிடும்...

 
On Thu Oct 16, 04:37:00 PM GMT+8 , கிரி said...

ஜோசப் பால்ராஜ் உங்க டெம்ப்ளேட் பட்டாசா இருக்கு :-)

//இவன் தான் அந்த ஆட்டுக்குட்டிய கஷ்டப்பட்டு வளர்த்தான் இவனுக்கு கொஞ்சம் அதிகமா கறிய வைன்னு சொல்லி குடுத்தாலும் நமக்கு சாப்பிடவே மனசு வராது//

:-)

//அவங்க சொல்ற சமதானத்த ஏத்துக்கிட்டோ அல்லது மிரட்டலுக்கு பயந்தோ நாங்களும் எல்லாத்தையும் மறந்துட்டு அடுத்தவருசத்து ஆட்டுக்குட்டிக்காக காத்திருப்போம்.//

அவ்வ்வ்வ்வ்வ் வேற வழி

 
On Thu Oct 16, 04:50:00 PM GMT+8 , Anonymous said...

45 ஆண்டுகளுக்கு முன் ;நான் வளர்த்த ஆடுகள் என் மனக் கண்ணில் வந்து சென்றன. இறைச்சிக்கு ஆடுகளை விற்கும் போது நிலத்தில் விழுந்து உருண்டு அழுது; ஆடு வாங்கிக் கொண்டு செல்லும்
இறைச்சிக் கடைக்காரர் மிதிவண்டிக்குப் பின்னால் ஓடியது நினைவுக்கு வந்து ;சிரிப்பு வந்தது.
இரைபோடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே... பாடலும் நினைவுக்கு வந்தது.
நன்கு ரசித்தேன் உங்கள் அனுபவ விபரிப்பை.....

 
On Fri Oct 17, 02:52:00 PM GMT+8 , Ravichandran Somu said...

ஜோசப்,

தஞ்சைத்தரணியின் அசத்தலான மலரும் நினைவுகள். வாழ்த்துக்கள்!!
எங்க ஊர் வெட்டிக்காட்டிற்கு போய் வந்தது போன்ற உணர்வு. ”மதுரை வீரன்” என்று பேர் வைத்து நான் அருமையாக பேணி வளர்த்த வெள்ளாட்டு கிடா எங்கள் குலதெய்வம் மதுரை வீரன் சாமிக்கே ஒரு நாள் வெட்டப்பட்டவுடன் அழுத அழுகை, எங்கள் வீட்டு மக்க்ள் எல்லாம் அதன் கறியை சாரய போதையுடன் வெட்டு வெட்ட நானும், அண்ணனும் அழுதுகொண்டேயிருந்தது என்றும் மறக்க முடியாது. ஊரே பயந்து நடுங்கும் எங்க வீட்டு ”கொட்டாப்புலி” காளைகள் பற்றி ஒரு தொடர் எழுதும் அளவுக்கு கதைகள் உள்ளன!!

 
On Fri Oct 17, 11:36:00 PM GMT+8 , Mahesh said...

மேட்டருக்கு மேட்டர், பதிவுக்கு பதிவு, கொசுவத்திக்கு கொசுவத்தின்னு ஒரே கல்லுல 3 மாங்கா... கலக்குங்க....

 
On Sat Oct 18, 12:26:00 AM GMT+8 , குடுகுடுப்பை said...

//உப்புக்க‌ண்ட‌ம் என்ப‌து ஆட்டின் க‌றியுட‌ன் ம‌சாலா எல்லாம் சேர்த்து, வெயிலில் க‌ருவாடு போல் காய‌வைத்து எடுத்து வைத்துக் கொள்வ‌து. இதை வ‌றுத்து அல்ல‌து குழ‌ம்பில் போட்டு சாப்பிட‌லாம். //

நாக்கு ஊருதே. ஏன்யா இப்படி பண்றீங்க

 
On Wed Oct 22, 07:42:00 PM GMT+8 , வடுவூர் குமார் said...

என்னதான் முதல் பாதியில் குஜாலாக படித்தாலும்,கறி குழம்பு,கண்டம் என்று படிக்கும் போது சோகமாகி போகிறது.

 
On Wed Oct 22, 09:51:00 PM GMT+8 , முத்துலெட்சுமி/muthuletchumi said...

புதுகை அப்துல்லா, நான் இப்பத்தாங்க இது படிச்சு உப்புக்கண்டம்ன்னா என்னன்னு தெரிஞ்சுகிட்டேன் :)

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க