Author: ஜோசப் பால்ராஜ்
•12:23 AM
தமிழ் இன‌ தானைத் தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி அவர்கள் ஈழத்தில் நடக்கும் இன ஒழிப்புப் போரில் அநியாயமாய் கொல்லப்படும் தமிழர்களின் உயிர்களைக் காக்க மிக நீண்ட காலமாக யோசித்து சமீபத்தில் அறிவித்த அருமையான திட்டமான பிரதமருக்கு தந்தி திட்டம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று ஒரு நாளில் மட்டும் கோடிக்கணக்கான தந்திகள் பிரதமருக்கு குவிந்துள்ளன. தமிழகமெங்கும் அனைத்து தந்தி அலுவலகங்களிலும் வேறு எந்த தந்தியும் அனுப்ப இயலாத அளவுக்கு இன்று முழுவதும் பெருமளவில் மக்கள் வரிசையாக நின்று தந்தி அனுப்பியுள்ளனர். மேலும் பல தந்தி அலுவலகங்களுக்கு அருகில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு கடுமையான கூட்டம் கூடி பல மணி நேரம் வரிசையில் நின்று அனைவரும் தந்தியடித்துள்ளனர்.

பிரதமர் அலுவலகத்தில் தமிழர்களிடம் இருந்து வரும் தந்திகளை குவிக்க என மாபெரும் கிடங்கு ஒன்றை வாடகைக்கு எடுக்க முடிவு செய்துள்ளார்கள். அந்த அளவுக்கு வந்து குவிந்த தந்திகளைப் பார்த்து பிரதமர் பதறிபோய் உடனடியாக என்ன செய்வது என்றுத் தெரியாமல் சோனியாவை சந்தித்துவிட்டு அவரது ஆலோசனையின் பேரில் உடனடியாக மத்திய அமைச்சரவை கூடி ஒரு கடுமையான முடிவை எடுத்துள்ளது. அந்த கடுமையான முடிவை உடனடியாக செயல்படுத்தியும் விட்டார்கள்.

அதன்படி, உடனடியாக இந்தியாவில் உள்ள இலங்கை தூதரை வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அழைத்து அவரிடம் இந்தியா தனது கடுமையானக் கண்டணங்களை தெரிவித்துள்ளது. இந்தக் கடும் கண்டணத்தை நேரில் வாங்கிய இலங்கைத் தூதர் தற்போது டெல்லியில் நிலவும் கடுமையான குளிரிலும் பயங்கரமாய் வேர்த்து கொட்டி, மிக அதிகளவில் நீர் கேட்டு வாங்கி குடித்துள்ளார். இந்த கடும் கண்டணத்தை வெளியுறவு அமைச்சரது அனுமதியுடன் வெளியுறவு அமைச்சகத்தில் இருந்தே தொலைபேசி வாயிலாக இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவிடம் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி வாயிலாக இந்த கடும் கண்டணத்தை கேள்வியுற்ற இலங்கை அதிபரும் பேரதிர்ச்சிக்குள்ளாகி அலரி மாளிகையில் இருந்த அவ்வளவு நீரையும் குடித்தப் பின்னரும் மேலும் நீர் கேட்டமையால் உடனடியாக இரு லாரிகளில் குடிநீர் கொண்டுச் செல்லப்பட்டதாக கொழும்பில் இருந்து வந்த நம்பத்தகுந்த செய்திகள் அறிவிக்கின்றன.

போதுமான அளவு நீர் அருந்தி முடித்த‌ இலங்கை அதிபர் உடனடியாக ராணுவத் தளபதி சரத் பொன் சேகாவை அழைத்து அனைத்து படை நடவடிக்கைகளையும் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டுள்ளார். மேலும் இனி இலங்கைக் கடற்படையினர் கடலுக்குள்ளேயே செல்லக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். எனவே இனி இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட மாட்டார்கள் எனவும், தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது இலங்கைக் கடற்படையினரின் தொல்லை இனி இருக்காது என்றும் தெரியவருகிறது.

இது கலைஞர் கருணாநிதியின் அறிவுப்பூர்வமான போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.

இப்போராட்டத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்து தமிழகத்தில் மின்வெட்டை கண்டித்து ஆற்காடு வீராச்சாமிக்கு தந்தி அடிப்பது அல்லது தபால் கார்டு எழுதுவது போன்ற போராட்டங்களை கலைஞர் அறிவிப்பார் எனவும் தெரிகிறது.

பின்ன என்னங்க, எங்க ஊருல ஒரு கதை சொல்லுவாய்ங்க. ஒரு சரியான கஞ்சன், சாப்பிட்டுக்கிட்டு இருக்கப்ப எச்சக்கையால காக்கா கூட விரட்டாத ஒருத்தன் வீட்டுக்கு, ஒரு நாள் ஒரு விருந்தாளி வந்தாராம். என்னடா இது நம்ம ஊட்டுல சாப்புட இவன் வந்துட்டானே, எப்படி துரத்துறதுனு திரு.கஞ்சனும், அவரது மனைவியும் திட்டமிட்டு கணவண் மனைவி இடையே கடுமையான சண்டை என்பது போல நடித்தார்களாம். திரு.கஞ்சன் தன் திருமதியை அடி அடி என அடிப்பது போல் நடித்தாராம். அதப் பார்த்த விருந்தாளி, இது என்னடா நாம வந்த நேரம் சரியில்லைப் போலன்னு நினைச்சுக்கிட்டு அப்படியே திரும்பி போயிட்டாராம். அவர் போயிட்டாருன்னு நினைச்சுக்கிட்டு கஞ்சனும், அவரு மனைவியும் தங்கள் சாதனையை பெருசா பேசிக்கிட்டாங்களாம்.

திரு.கஞ்சன்: நான் வலிக்காமல் அடித்தேனே!!.

திருமதி.கஞ்சன்: நானும் நோகாமல் அழுதேனே!!.

இவ‌ங்க‌ ரெண்டு பேரும் போயிட்ட‌தா நினைச்ச‌ விருந்தாளி உள்ள‌ குதிச்சு..

நானும் போகாம‌ல் இருந்தேனே!!!! அப்டினு சொன்னாராம்.

வ‌லிக்காம‌ல் அடித்த‌ க‌ருணாநிதியும், நோகாம‌ல் அழுத‌ ம‌த்திய‌ அர‌சையும், போகாம‌ல் இருக்கும் இல‌ங்கைய‌ர‌சின் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தையும் வேற‌ என்ன‌ச் சொல்லுவ‌து.

தன்னால் முடியும் என்ற நிலையில் இருந்த போதும், எதிர்கட்சிகள் எல்லாரும் உண்ணாவிரதம் இருக்கின்றார்களே, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரு காரணத்தால் மட்டும் இப்படித் தனது கட்சியும் அங்கம் வகிக்கும் மத்தியரசின் கவனத்தை ஈர்க்க, தந்தி போராட்டம் அறிவிக்கும் கலைஞரை என்ன சொல்லி வாழ்த்துவது?

இதனால் யார் மகிழ்ச்சியடைந்தார்களோ, கட்டாயம் மத்தியமைச்சர் இராசா மகிழ்ந்திருப்பார். பின்ன அவருதானே தபால் தந்தி துறைக்கும் அமைச்சர். அவங்களுக்கு இன்னைக்கு நல்ல வசூல் ஆகியிருக்கும்ல? Udanz
This entry was posted on 12:23 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

26 comments:

On Mon Oct 06, 11:17:00 PM GMT+8 , Ŝ₤Ω..™ said...

அது தான பார்தேன்.. நான் கூட உண்மையோனு பயந்துட்டேன்.. அப்படி ஏதாவது நடந்துட்டா அப்புறம் நம்ம மரியாதை என்னாவறது???

 
On Mon Oct 06, 11:18:00 PM GMT+8 , Ŝ₤Ω..™ said...

நான் தான் ஃபஸ்டா???

 
On Mon Oct 06, 11:57:00 PM GMT+8 , Anonymous said...

//தமிழகத்தில் மின்வெட்டை கண்டித்து ஆற்காடு வீராச்சாமிக்கு தந்தி அடிப்பது அல்லது தபால் கார்டு எழுதுவது போன்ற போராட்டங்களை கலைஞர் அறிவிப்பார் எனவும் தெரிகிறது.//

கிழிஞ்சுது. நானெல்லாம் ஆர்காடு வீட்டு முன்னால தீக்குளிக்கலாமான்னு யோசிக்கேன்.

இன்னையில இருந்து தினம் 8 மணி நேரம் மின் தடையாம்.

விவரமில்லாம் வெள்ளைக் கலர் ரேசன் கார்ட வேற வாங்கீட்டன். யாராவது 1 ரூபாய் அரிசியும், 50 ருப்பாய்க்கு மளிகை சாமானும் வாங்கித்தந்தா புண்ணியமா இருக்கும்.

”பேய்கள் அரசாட்சி செய்தால் பினந்தின்னும் சாத்திரங்கள்.”

வெறென்ன சொல்ல. படித்த, கையாலாகதவர்கள் நாமென்னு அவருக்கு நல்லாத் தெரிஞ்சுருக்கு.

 
On Tue Oct 07, 12:28:00 AM GMT+8 , சி தயாளன் said...

:(

 
On Tue Oct 07, 12:57:00 AM GMT+8 , ஜெயமூர்த்தி said...

super

 
On Tue Oct 07, 01:26:00 AM GMT+8 , Anonymous said...

True picture. Even though we like to here more noices from MU.KA, as Sri Lankan Minister rightly said ' they don't care these noices'. Yes , all these years Mu.Ka demonstated his dublicity. it is another example.

K. R
a disappointed Sri Lankan Tamil, based in Colombo

 
On Tue Oct 07, 02:00:00 AM GMT+8 , Anonymous said...

நான்காவது பந்தியை படிக்கும் வரை நீங்கள் ஒரு திமுக தொண்டன் என்றே நினைத்திருந்தேன் :)

 
On Tue Oct 07, 02:47:00 AM GMT+8 , Santhosh said...

பால்ராஜ்,
இதுல அமெரிக்க எம்.பிக்களின் கடுதாசியை விட்டுடிங்க..

//இன்னையில இருந்து தினம் 8 மணி நேரம் மின் தடையாம்.//
அடங்கொக்கா மக்கா.. எப்ப கரெண்டு இருந்துச்சி அதை 8 மணி நேரம் தடைசெய்ய?

 
On Tue Oct 07, 03:12:00 AM GMT+8 , அசோக் said...

அது தான பார்தேன்.. நான் கூட உண்மையோனு பயந்துட்டேன்.. அப்படி ஏதாவது நடந்துட்டா அப்புறம் நம்ம மரியாதை என்னாவறது??? Super comments, Can u change the title...

 
On Tue Oct 07, 05:37:00 AM GMT+8 , தீபா said...

கலக்கல் பதிவு !!! இதெல்லாம் நடந்திடச்சிதோன்னு சந்தோஷப்பட்டுட்டேன்.(அவசரப்பட்டு).

 
On Tue Oct 07, 10:10:00 AM GMT+8 , Anonymous said...

இப்படியெல்லாம் நடப்பது வெறும் கதைகளில் தானே... :(
வேதனை..

 
On Tue Oct 07, 10:34:00 AM GMT+8 , Mahesh said...

நெத்தியடி.... நாங்கூட மொத ரெண்டு பத்தி படிக்கறதுக்குள்ள இது உண்மயோன்னு நெனச்சு 1 பாட்டில் த்ண்ணி குடிச்சுட்டேன்.... கலக்கறீங்க பால்ராஜ். ஆற்காட்டாருக்கு ஓலை அனுப்பும் போராட்டம் எப்போ?

 
On Tue Oct 07, 10:49:00 AM GMT+8 , நசரேயன் said...

கலக்கல் பதிவு, உங்க பதிவோட ஆரம்பத்தை படித்து விட்டு உண்மையோ என்னோவோனுலா நினைச்சுட்டேன் :)

 
On Tue Oct 07, 10:56:00 AM GMT+8 , ஜோ/Joe said...

ஜோசப் பால்ராஜ்,
கலைஞர் ஈழ விவகாரத்தில் தேவையான முயற்சிகளை செய்யவில்லை என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு .ஆனால் இங்கே கலைஞர் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத கிண்டலும் கேலியும் உண்மையான ஈழத்தமிழர் ஆதரவாளர்களை விட ,ஈழத்தமிழர் வெறுப்பாளர்களுக்குத் தான் அதிக ஆனந்தத்தைக் கொடுத்திருக்கும் ..ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் தானே ?

தமிழகத்தில் ஈழத்தமிழரை ஆதரிப்பவர்களில் பெரும்பான்மையோர் கலைஞர் மேல் அபிமானம் உள்ளவர்களா ,அல்லது கலைஞரை வெறுப்பவர்களா என நெஞ்சில் கை வைத்தி சிந்தித்துப் பார்த்தால் உங்களுக்கு உண்மை விளங்கலாம் .

நடைமுறை சிக்கலைகளை மனதில் கொள்ளாமல் பொத்தாம் பொதுவான இந்த பரபரப்பு பதிவு ஒரு நுனிப்புல் மேய்தல் என்பது என் தாழ்மையான கருத்து.

 
On Tue Oct 07, 10:59:00 AM GMT+8 , Anonymous said...

M.K will not initiate action like this until the opposite party's do so, He always making record as he want show it in future.. he will quote this action, whenever there is a question rising about his contribution to Tamil community... He just making records... People should ignore him

 
On Tue Oct 07, 12:10:00 PM GMT+8 , கயல்விழி said...

வழக்கம் போலவே நல்ல ஆழமான அரசியல் கட்டுரை ஜோசப் பால்ராஜ்.

 
On Tue Oct 07, 12:38:00 PM GMT+8 , Unknown said...

அப்போ என்ன செய்யலாம் சார். கலைஞர் வேலைக்காக மாட்டார்.
மத்திய பார்வை வேறு, மாநில பார்வை வேறு. இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பது தவறல்லன்னு சொன்ன விஜய காந்த்க்கு ஓட்டு போட்டுரலாமா?
அல்லது ஜெயாவுக்கு ஓட்டு போடுவோமா? ஜெயாவுக்கு ஓட்டு போட்டா மவனே போராட்டம் என்ன போராட்டம், இப்படி பிளாக் கூட எழுத முடியாது.

//
ஜோ / Joe said...
ஜோசப் பால்ராஜ்,
கலைஞர் ஈழ விவகாரத்தில் தேவையான முயற்சிகளை செய்யவில்லை என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு .ஆனால் இங்கே கலைஞர் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத கிண்டலும் கேலியும் உண்மையான ஈழத்தமிழர் ஆதரவாளர்களை விட ,ஈழத்தமிழர் வெறுப்பாளர்களுக்குத் தான் அதிக ஆனந்தத்தைக் கொடுத்திருக்கும் ..ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் தானே ?

தமிழகத்தில் ஈழத்தமிழரை ஆதரிப்பவர்களில் பெரும்பான்மையோர் கலைஞர் மேல் அபிமானம் உள்ளவர்களா ,அல்லது கலைஞரை வெறுப்பவர்களா என நெஞ்சில் கை வைத்தி சிந்தித்துப் பார்த்தால் உங்களுக்கு உண்மை விளங்கலாம் .

நடைமுறை சிக்கலைகளை மனதில் கொள்ளாமல் பொத்தாம் பொதுவான இந்த பரபரப்பு பதிவு ஒரு நுனிப்புல் மேய்தல் என்பது என் தாழ்மையான கருத்து.
//

ஜோ கருத்துகள் தான் என்னுடையதும். மேலும் இப்போது ஈழதமிழர் ஆதரவு என்ற போர்வையில் கலைஞர் எதிர்ப்பு என்பது ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் யுக்தி. அதற்கு உங்களைப் போன்றோர் பலிகடா ஆவதுதான் கொடுமை. கலைஞர் இதற்காக ஆட்சியையுமே துறந்தாலும் அதற்கும் ஒரு சுயநல காரணம் சொல்லி கும்மி அடிப்பார்கள்(ஈழத்தமிழர் நலனுக்காக கலைஞர் ஆட்சி துறக்காமல் இருப்பது அவசியம்). கடுப்பாக இருக்கிறது. இப்படியே போனால் தி.மு.க தொண்டர்களின் உணர்வுகளும் மாறலாம். தமிழின உணர்வாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாதிக்க வேண்டிய விஷயம்.

"தமிழ் நண்டு" கதை தான் ஞாபகத்திற்கு வருகிறது.

ஹூம் என்ன செய்ய காலையில படிச்ச முதல் பதிவே என்னய குடம் குடமா தண்ணி குடிக்க வச்சிருச்சி.

 
On Tue Oct 07, 01:20:00 PM GMT+8 , ஜோ/Joe said...

//மேலும் இப்போது ஈழதமிழர் ஆதரவு என்ற போர்வையில் கலைஞர் எதிர்ப்பு என்பது ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் யுக்தி. அதற்கு உங்களைப் போன்றோர் பலிகடா ஆவதுதான் கொடுமை.//

உண்மை சேவியர்!

உதாரணத்திற்கு ஒரு அற்பன் போட்ட இந்த பதிவையும் ,அதில் வந்து தேசிய கும்மியடிக்கும் ஜந்துகளையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்

http://puthuyugam.blogspot.com/2008/10/blog-post_5969.html

 
On Tue Oct 07, 01:48:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

உடன்பிறப்பு என்பவர் எதிர்பதிவு இட்டுள்ளார் அவருக்கு அளித்த பின்னூட்டம். இதே பதில் தான் ஜோ, மற்றும் சேவியர் ஆகியோருக்கும் சொல்ல விரும்புவது.

நீங்க ஒரு விசயத்த தெளிவா புரிஞ்சுக்கனும், ஒரு குழந்தை தனது தேவையை தன் தந்தையிடம் தான் கேட்க முடியும், எதிர் வீட்டுக்காரனிடம் கேட்க முடியாது. அது போல தன் தந்தையின் தவறைத்தான் உரிமையோடு தட்டிக்கேட்கலாம். எதிர்வீட்டுக்காரனின் தவறை உரிமையோடு கேட்க முடியாது. தமிழகப் பிரச்சனைக்காக தமிழக முதல்வரைத்தானே கேட்க முடியும்? எதிர்கட்சித்தலைவரையா கேட்க முடியும்? தமிழர்களுக்காக தமிழர்களின் மூத்த தலைவரை விட்டுவிட்டு தமிழரே அல்லாதவர்களிடமா கேட்க முடியும்?

நானும் திமுக அனுதாபி தான். எனது குடும்பமே திமுக குடும்பம் தான். ஆனால் இந்த ஆட்சியில் கலைஞரின் செயல்பாடுகள் எனக்கு பிடிக்கவேயில்லை. அவர் நல்லவற்றைச் செய்து கொண்டுதான் இருக்கிறார். ஆனாலும் அதையெல்லாம் அவர் செய்யும் சில தவறுகள் தூக்கி சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. இது என் உணர்வு மட்டுமல்ல, திமுக தொண்டர்களில் பெரும்பாலோனோரின் உணர்வும் இப்படித்தான் இருக்கிறது.

ஈழப்பிரச்சனைக்காக அவர் ஆட்சியைத் துறக்க வேண்டியதில்லை, ஆனால் இன்னும் தீவிரமாக செயல்படலாம் என்பதுதான் பெரும்பாலோனோரின் கருத்து. சொந்தப் பிரச்சனைகளுக்கு காட்டும் முக்கியத்துவம் ஏன் இந்தப்பிரச்சனைக்கு இல்லை ? ஈழத் தமிழர்களை விடுங்கள் ,தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதில் கூட கடுமையான நடவடிக்கை எடுக்க இயலாமல் இவர்கள் கைகளை கட்டிப்போட்டிருப்பது எது?

ஜெயலலிதாவை நான் ஒரு தலைவராக மதிப்பது இல்லை. வைகோ வின் மேல் இருந்த மரியாதை சென்ற தேர்தலோடு போய்விட்டது, விசயகாந்த், மருத்துவர் ராமதாசு போன்றவர்களைப் பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மேலும் இன்று தமிழக முதல்வர் பொறுப்பில் இருப்பவர், மத்தியில் ஆளும் கூட்டணியின் முக்கியத் தலைவர் கலைஞர் தானே? இவரை விட்டு விட்டு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத ஜெயலலிதாவைப் பற்றி என்ன பேச வேண்டும்?

காஷ்மீர் இந்துக்களுக்காக ஜெ எழுதிய கடிதம் குறித்து வெளியிட்டிருந்தீர்கள். மதமாற்ற தடை சட்டம் போட்டு நான் உங்களை விட பெரிய ஆள் என்று பிஜேபிக்கே சொன்ன அவரை பற்றி எழுதி எந்த பிரயோசனமும் இல்லை என்பதை தவிர அவர் மேல் எந்த பயமும் எங்களுக்கு இல்லை.

பயம் இருந்தால் அது ஜெவிடம் மட்டுமல்ல எல்லா அரசியல் கட்சிகளிடம் இருக்க வேண்டும். அவரைப்பற்றி எழுதக் கூட பிடிப்பதில்லை.

நான் இந்த தந்தி போராட்டத்தை தாக்கி எழுதியதற்கு காரணம் கோபம் என்பதை விட ஆதங்கம் அல்லது ஏமாற்றம் என்று சொல்லலாம். இவரிடம் இருந்து இன்னும் பெரிய அளவில் எதிர்பார்க்கும் போது, இப்படியா இவர் தந்திபோராட்டம் நடத்த சொல்வது? இந்த போராட்டத்தால் இலங்கை தூதரை அழைத்து கண்டணம் தெரிவித்துள்ளார்கள். இந்த கண்டணத்தால் என்ன பயன் என்று எண்ணுகின்றீர்கள்? இது போதும் என்று நீங்களே நினைக்கின்றீர்களா? என்ன கொடுமை இது? இது தான் நாம் சக தமிழர்களுக்கு செய்யும் உதவியா?
நீங்களே சொல்லுங்கள்.

சென்ற முறை விடுதலைப் புலிகளால் ஆட்சியையே இழந்தார் என்று சொல்வீர்கள். ஆனால் சென்ற முறை கலைஞரின் ஆட்சியை கவிழ்க சதிகாரர்கள் பயன்படுத்திய ஆயுதமே புலிகள் பிரச்சனை. ஆனால் தற்போதைய நிலை அப்படியில்லையே, இப்போது மத்திய அரசிலும் அங்கம் வகிக்கும் ஒரு முக்கிய கட்சி என்ற நிலையில் இருக்கும் போது தந்திப் போராட்டம் தான் ஒரே வழியா?

 
On Tue Oct 07, 01:58:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

:)

கலைஞரை கலாய்த்த இந்த பதிவுக்கு
நானும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

 
On Tue Oct 07, 02:08:00 PM GMT+8 , ஜோ/Joe said...

//நீங்க ஒரு விசயத்த தெளிவா புரிஞ்சுக்கனும், ஒரு குழந்தை தனது தேவையை தன் தந்தையிடம் தான் கேட்க முடியும், எதிர் வீட்டுக்காரனிடம் கேட்க முடியாது. அது போல தன் தந்தையின் தவறைத்தான் உரிமையோடு தட்டிக்கேட்கலாம். எதிர்வீட்டுக்காரனின் தவறை உரிமையோடு கேட்க முடியாது. தமிழகப் பிரச்சனைக்காக தமிழக முதல்வரைத்தானே கேட்க முடியும்? எதிர்கட்சித்தலைவரையா கேட்க முடியும்? தமிழர்களுக்காக தமிழர்களின் மூத்த தலைவரை விட்டுவிட்டு தமிழரே அல்லாதவர்களிடமா கேட்க முடியும்?//

ஜோசப் பால்ராஜ்,
இதெல்லாம் தெரிந்த விஷயம் தான் .நீங்கள் ஆதங்கத்தில் சொல்கிறீர்கள் என்பதால் தான் நான் இங்கே வந்து கருத்து சொல்கிறேன் .இல்லையென்றால் கண்டு கொள்ளாமல் போயிருப்பேன் .

நீங்கள் ஆதங்கத்தில் சொல்கிறீர்கள் ..புரிகிறது .ஆனால் இங்கு வந்து ஆமாம் சாமி போட்டவர்களெல்லாம் உங்களைப்போல (நம்மைப் போல) ஆதங்கப்படுபவர்களா அல்லது கலைஞரை தாக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததடா என உள்ளுக்குள் ஆனந்தப்படுபவர்களா என சற்று யோசித்துப்பாருங்கள் .

நீங்கள் அனுதாபி என்றால் நானும் தான் .மற்றபடி கொடிபிடிக்கும் கட்சி உறுப்பினர் அல்ல .எனக்கும் கோபம் இருக்கிறது .கடுப்பு இருக்கிறது .ஆனால் குழந்தை தன் தேவையை தந்தையிடம் தெரிவிக்கும் போது பக்கத்து வீட்டிலிருந்து தந்தையை இழிவு செய்ய நேரம் பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஏதுவாக அது வரம்பு மீறிப்போனால் யாருக்கு கேடு ?

இன எதிரிகள் சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் .அவர்களுக்கு எப்படியோ கலைஞர் ஒழிந்து தங்கள் அபிலாஷைகளுக்கு ஒத்தூதும் ஆட்சி வந்தால் போதும் .அவர்கள் அக்கறையுள்ளவர்கள் போல இப்போது உங்களுக்கு ஒத்தூதுவார்கள் .ஆனால் உங்கள் நோக்கமும் அவர்கள் நோக்கமும் வேறு என்பதை மறந்து விடாதீர்கள்.

 
On Tue Oct 07, 02:26:00 PM GMT+8 , சரவணகுமரன் said...

:-))

 
On Tue Oct 07, 06:04:00 PM GMT+8 , கூடுதுறை said...

//இதனால் யார் மகிழ்ச்சியடைந்தார்களோ, கட்டாயம் மத்தியமைச்சர் இராசா மகிழ்ந்திருப்பார். பின்ன அவருதானே தபால் தந்தி துறைக்கும் அமைச்சர். அவங்களுக்கு இன்னைக்கு நல்ல வசூல் ஆகியிருக்கும்ல? ///

இது ரொம்ப சூப்பர் ...

 
On Tue Oct 07, 09:24:00 PM GMT+8 , அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//சென்ற முறை விடுதலைப் புலிகளால் ஆட்சியையே இழந்தார் என்று சொல்வீர்கள். ஆனால் சென்ற முறை கலைஞரின் ஆட்சியை கவிழ்க சதிகாரர்கள் பயன்படுத்திய ஆயுதமே புலிகள் பிரச்சனை. ஆனால் தற்போதைய நிலை அப்படியில்லையே, இப்போது மத்திய அரசிலும் அங்கம் வகிக்கும் ஒரு முக்கிய கட்சி என்ற நிலையில் இருக்கும் போது தந்திப் போராட்டம் தான் ஒரே வழியா?//

அந்த சதிகாரர்கள் இராஜீவ் காந்தி, ஜெயலலிதா, ஆர்.வெங்கட்ராமன்.
உள்துறை இணை அமைச்சர் சுபோத் காந்த் சகாய் வாரத்துக்கு 3 நாள் சென்னையில தான் இருந்தார். தி.மு.க ஆட்சியைக் கலைக்க காரணங்களைத் தேடுவது இந்த அமைச்சரின் வேலை. சந்திரசேகர் என்கிற இளந் துருக்கியனை இவர்கள் பயன்படுத்திக் கொண்டு அவர் பெயரைக் கெடுத்தார்கள். ஈழத்தமிழர்களால் கலைஞர் பதவி இழந்தார் என்பது உண்மை அல்ல.
காரணம்: ஜெயலலிதா முதல்வர் பதவிக்கு வரவேண்டும் என்கிற நோக்கமே தவிர. கதைகளும் காரணங்களும் உண்மையும் பொய்யும் கலந்த கலவை.

 
On Wed Oct 08, 08:21:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

Test comment in new setup

 
On Sat Oct 11, 03:02:00 AM GMT+8 , குடுகுடுப்பை said...

இலங்கையில் ரத்தம் சிந்தும் தமிழனை காக்க புதிய பிளாக் ஆரம்பிச்சு பின்னூட்டம் தான் நாம் போட முடியும்.

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க