Author: ஜோசப் பால்ராஜ்
•1:17 AM
உழவும் உழவர்களும் - 1

பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ ல்அவர்.


அறுவடை முடிந்தது, விளைச்சல் கையில் இருக்கின்றது. இனி என்ன விற்று காசு பார்க்க வேண்டியது தானே என தான் எல்லோரும் நினைப்பார்க‌ள். ஆனால் உழைக்க‌த் தெரிந்த‌ எங்க‌ள் உழ‌வ‌ர்க‌ளுக்கு பிழைக்க‌ அவ்வ‌ள‌வாக‌த் தெரியாது. இனியும் ப‌ல‌ போராட்ட‌ங்க‌ளை ச‌ந்தித்துதான் காசு பார்க்க‌ வேண்டும். அவை என்ன‌வென்று பார்ப்போமா...

தற்காலங்களில் கூலியாட்களின் பற்றாகுறையால் அறுவடை பெரும்பாலும் இயந்திரங்களின் மூலமாகத்தான் நடைபெறுகின்றது.

ஆட்கள் மூலம் அறுவடை செய்தால் கையால் அறுத்து கதிர்களை கட்டாக கட்டி, வயலுக்கு வெளியே அமைக்கப்படும் களங்களுக்கு அவற்றை எடுத்து வந்து, பின் அடித்து நெல்லை பிரிப்பார்கள். இதில் நெல் களத்தில் இருப்பதால் நேரடியாக வண்டி வைத்து ஏற்றிக்கொண்டு சென்றுவிடலாம்.

ஆனால் இயந்திரங்கள் கொண்டு அறுவடை செய்யும் போது, அவை வயலிலேயே அறுத்து, அடித்து நெல்லை கொடுத்துவிடும். இவற்றை மூட்டைகட்டி அங்கிருந்து வண்டிகளுக்கு எடுத்துவந்து தர தனியாக கூலியாட்களை நியமிக்க வேண்டும்.
இப்படி கஷ்டப்பட்டு கொண்டுவரும் நெல்லை விற்க, இரண்டு வழிகள் தான் எங்களுக்கு. ஒன்று தனியார் நெல் வியாபாரிகளிடம் விற்பது, அல்லது அரசாங்கத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பது.

தனியார் வியாபாரிகள் என்றால் அவர்கள் எங்களது வீட்டிலேயே வந்து எடை போட்டு நெல்லை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். ஆனால் இவர்களிடமிருந்து உடனடியாக பணம் கிடைக்காது. ஒரே நேரத்தில் மொத்தப்பணமும் கிடைக்காது. கொஞ்சம் கொஞ்சமாக இழுக்கப்போட்டுத்தான் தருவார்கள்.

இதுமட்டுமா, கட்டாயம் இவர்கள் எடைபோட பயன்படுத்தும் தராசுகள் சரியான அளவை காட்டாது. எடையில் தில்லுமுல்லு செய்துதான் இவர்கள் நெல்லை வாங்குவார்கள். கேட்டால் நெல்லை ஓரிட‌த்தில் இருந்து ம‌ற்றொரு இட‌த்திற்கு கொண்டுசெல்லும் போது சிந்துவ‌து,சித‌றுவ‌து இவ‌ற்றால் ஏற்ப‌டும் இழ‌ப்பை ச‌ரிக‌ட்ட‌த்தான் இப்ப‌டி செய்வ‌தாக‌ நியாய‌ம் வேறு பேசுவார்க‌ள்.

த‌னியார் வியாபாரிக‌ள் ஒரு மூட்டை 61கிலோ என்ற‌ அள‌வில் பிடிப்பார்க‌ள் ( நெல் எடை 60கிலோ + சாக்கு எடை 1கிலோ). ஆனால் அவ‌ர்க‌ள் த‌ராசில் 61கிலோ காட்டிய‌ மூட்டையை ஒரு ந‌ல்ல‌ த‌ராசில் வைத்துப்பார்த்தால் குறைந்த‌து 63 கிலோவாவது இருக்கும்.

குறுவை சாகுபடி அறுவடை சமயங்களில் பெரும்பாலும் மழை வந்துவிடும். மழை இல்லாவிட்டாலும் பனியால் குறுவை நெல்லில் சற்று ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இது போன்ற சமயங்களில் நெல்லில் ஈரம் அதிகமாக இருக்கின்றது என்று கூறி காயவைக்க சொல்வார்கள். அல்லது எடை அதிகமாக வைத்து வாங்கிக்கொள்கிறோம் என்று அதிலும் நல்ல லாபம் பார்ப்பார்கள் எங்கள் வியாபாரிகள்.

இப்ப‌டி எல்லாம் இவ‌ர்க‌ளிட‌ம் விற்க‌ வேண்டுமா? ஏன் அர‌சாங்க‌ நேர‌டி நெல் கொள்முத‌ல் நிலைய‌ங்க‌ளில் விற்க‌ கூடாது என‌ தோண‌லாம்.

அரசு கொள்முதல் நிலையங்களுக்கு எல்லாம் கொள்ளை நிலையங்கள் என்றுதான் பெயர் வைக்க வேண்டும்.
அங்கு நடக்கும் அநியாயங்கள் அத்தனை. அதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.. Udanz
This entry was posted on 1:17 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

21 comments:

On Fri Jul 11, 03:38:00 AM GMT+8 , Selva Kumar said...

ஜோசப்..

பாராட்டுக்கள் பல...

உண்மை நிலையை தெளிவாச் சொல்லியிருக்கீங்க..

தொடர்ந்து எழுதுங்க..

 
On Fri Jul 11, 03:43:00 AM GMT+8 , Selva Kumar said...

//கூலியாட்களின் பற்றாகுறை..
//

//கேட்டால் நெல்லை ஓரிட‌த்தில் இருந்து ம‌ற்றொரு இட‌த்திற்கு கொண்டுசெல்லும் போது சிந்துவ‌து,சித‌றுவ‌து இவ‌ற்றால் ஏற்ப‌டும் இழ‌ப்பை ச‌ரிக‌ட்ட‌த்தான் இப்ப‌டி //

//61கிலோ காட்டிய‌ மூட்டையை ஒரு ந‌ல்ல‌ த‌ராசில் வைத்துப்பார்த்தால் குறைந்த‌து 63 கிலோவாவது இருக்கும்//

//இது போன்ற சமயங்களில் நெல்லில் ஈரம் அதிகமாக இருக்கின்றது என்று கூறி காயவைக்க சொல்வார்கள். அல்லது எடை அதிகமாக வைத்து வாங்கிக்கொள்கிறோம் //

இதல்லாம் சின்ன வயசுல இருந்து பாத்துகிட்டே இருந்ததுனால விவசாயத்துல மிகுந்த ஈடுபாடு இருந்தாலும் "பொழைக்க முடியாதுன்னுதான்" விட்டுட்டு வர வேண்டியதா இருக்கு..

 
On Fri Jul 11, 04:44:00 PM GMT+8 , Syam said...

//இதல்லாம் சின்ன வயசுல இருந்து பாத்துகிட்டே இருந்ததுனால விவசாயத்துல மிகுந்த ஈடுபாடு இருந்தாலும் "பொழைக்க முடியாதுன்னுதான்" விட்டுட்டு வர வேண்டியதா இருக்கு..//

ரொம்ப சரி, இருந்தாலும் ஏதாவது செஞ்சு விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்தனும் அப்படின்னு எண்ணம் எப்பொழுதும் உள்ளது...

 
On Fri Jul 11, 05:43:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி வழிபோக்கன் & ஷ்யாம்.

எப்படி ஏமாற்றப்படுகின்றோம் என்பதை இப்போது சொல்லிக்கொண்டுள்ளேன்.
என்ன செய்யலாம் என்பதையும் எழுதுவேன். என் யோசனைகள் குறித்த உங்கள் கருத்துக்களையும், உங்களுக்கு தோன்றும் கருத்துகளையும் கட்டாயம் எழுதுங்கள். தொடர்ந்து ஊக்கமளித்துவருவதற்கு எனது நன்றிகள்.

 
On Fri Jul 11, 06:23:00 PM GMT+8 , Anonymous said...

Hi Joseph
very good writings.keep writing more . we learn so many things.
hey when i spoke to my friend about your articles and surprisingly he know about you. He told me that you are a SAP Consultant working in Singapore. I couldn't believe such a good article about farmers from a SAP consultant. This shows you never forgot your roots.
keep writing more.

 
On Fri Jul 11, 06:30:00 PM GMT+8 , Sriram said...

i have seen your blog on "farmers".These are field difficulties in almost all the job.Dont make the "difficult process" as problem or somthing stops you to run the life.I understand these are difficult process, but i wont consider as a problem.
I just list down the problems,
1.Not enough urea in hand.
2.Not enought seeds/good seeds in the sense earning more profit.
3.Not enought profit, one thing you need to understand the same farmer expecting to give rice for "Rs 2" , should not expect to sell out his rice for "Rs.50". Hope you understand in right sprit.

 
On Fri Jul 11, 07:36:00 PM GMT+8 , Anonymous said...

கஸ்டபட்டு உழைச்சு இப்படி வேறு கொட்டணுமா..அநியாயமா இருக்கே

 
On Sat Jul 12, 02:42:00 PM GMT+8 , Selva Kumar said...

//உழவு செய்ய உழவுஇயந்திர (Tractor) கூலி ஒரு ஏக்கருக்கு ஒரு உழவுக்கு 300 ரூபாய். கட்டாயம் 3 உழவு செய்துதான் நடவு செய்யமுடியும்,ஆக உழவு கூலி மட்டும் 900ரூபாய்.//

இப்ப மணிக்கு 350ருபாய்ங்க...அப்படி பாத்தா குறைந்நது 3500 ருபாய் ஆகுதுங்க எங்க ஊர்ல..

 
On Sat Jul 12, 03:08:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

@sumathi,
நன்றி சுமதி.
என்னைபற்றி நீங்கள் பேசிய எனது நண்பர் யார் என்று எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
என்னதான் இன்று கணிப்பொறித்துறையில் நான் வேலைப்பார்த்தாலும், நீங்கள் சொல்வது போல் எனது வேர் இன்னும் விவசாயத்தில் உள்ளது என்பதுதான் உண்மை. மீண்டும் அங்கேயே செல்லவேண்டும் என்பதுதான் எனது விருப்பமும்.

@Sriram,
சற்றுப்பொருங்கள் நண்பரே.
நான் எங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தெரிந்துகொண்டால் தானே எங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப்புரிந்து கொள்ள முடியும்?
எல்லா வேலைகளிலும் பிரச்சனை இருப்பது உண்மைதான். ஆனால் விவசாயத்தில் எங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்னவென்பதை குறித்து கொஞ்சமும் அறிந்துகொள்ளாமல் எப்படி எங்களைப்பற்றி புரிந்துக்கொள்ள முடியும்?
சற்று பொருங்கள். இத்தொடரின் கடைசி பாகத்தில் உங்களது அனைத்து கேள்விகளுக்கும் நான் விடை அளிக்கின்றேன்.

 
On Sat Jul 12, 03:14:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாருங்கள் தூயா,
இதற்கே அதிர்சியடைந்தால் எப்படி? இன்னும் நிறைய இருக்கின்றது.


வருகைக்கு நன்றி வழிப்போக்கன் அவர்களே.

ஒரு உழவுக்கு 350 ரூபாய் என்றாலும் மூன்று உழவுக்கு 1050 தானே ஆகும்.
3500 ரூபாய் என்றால் 10 உழவு செய்கின்றார்களா என்ன ?

 
On Sat Jul 12, 08:00:00 PM GMT+8 , Selva Kumar said...

//ஒரு உழவுக்கு 350 ரூபாய் என்றாலும் மூன்று உழவுக்கு 1050 தானே ஆகும்.
3500 ரூபாய் என்றால் 10 உழவு செய்கின்றார்களா என்ன ? //
ஜோசப் நான் சொல்றது மணிக்கணக்குங்க.எங்க நெலத்துல முப்போகம் நெல் பயிர் பண்ண மாட்டங்க. அதனால கொறஞ்சது 10 மணி நேரம் தேவைப்படுங்க. இதனால 3500ரூபாய்னு குத்தகையா பேசி விட்ருவங்க. இன்னும் சணப்பை, கொளுஞ்சி போட்டிருந்தா ரேட் வேறங்க.

 
On Sun Jul 13, 03:03:00 AM GMT+8 , Syam said...

//என்ன செய்யலாம் என்பதையும் எழுதுவேன். என் யோசனைகள் குறித்த உங்கள் கருத்துக்களையும், உங்களுக்கு தோன்றும் கருத்துகளையும் கட்டாயம் எழுதுங்கள்.//

கண்டிப்பா ஜோசப் அது எனது கடமையும் கூட... நீங்கள் பதிவு இடும் போது எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப முடிந்தால் உங்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன்..
mcvsyam1@gmail.com

 
On Sun Jul 13, 02:55:00 PM GMT+8 , Unknown said...

//ஆனால் உழைக்க‌த் தெரிந்த‌ எங்க‌ள் உழ‌வ‌ர்க‌ளுக்கு பிழைக்க‌ அவ்வ‌ள‌வாக‌த் தெரியாது.//

ஒரு வரியில் உண்மையை நச்சுன்னு சொல்லிட்டீங்க. தொடருங்கள் ...

 
On Tue Jul 15, 02:11:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

//தற்காலங்களில் கூலியாட்களின் பற்றாகுறையால் //

ஜோசப் அண்ணே கடந்த வருடம் காவேரியில் தண்ணீர் திறந்த நிலையில் கூலியாட்கள் பற்றாக்குறையால் கீழத் தஞ்சை மாவட்டத்தில் நடவு துவங்காமல் உள்ளது என்ற செய்தியை படித்தேன்.படித்த சில நாட்களூக்குள் ஊட்டி செல்லும் வழியில் திருப்பூரில் நிறுத்தி ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டு இருந்தோம்.அப்போது அங்கு இருந்த ஒரு இளைஞர் நீங்க தஞ்சையா என்றார்.இல்லை நான் புதுக்கோட்டை என்றேன்.உங்க பேச்சு வழக்கைப் பார்க்கும் போது தஞ்சை போல் இருந்தது என்றார்.பக்கத்து பக்கத்து மாவட்டமாதலால் இரண்டு மாவட்ட பேச்சு வழக்கில் ஒன்றும் வித்தியாசம் இருக்காது என்றேன்.பின் அவரிடம் பேசியதில் தஞ்சயை சேர்ந்த அவர் ஒரு கம்பெனியில் 100 ரூபாய்க்கு தினக் கூலி அடிப்படையில் வேலை பார்பது தெரிந்தது.நான் அவரிடம் இப்பத்தான் தண்ணீர் வந்துருச்சே!ஊரில் விவசாயக் கூலிக்கு போகலாமே? இதே கூலி கிடைக்குமே என்றேன். அவர் தயங்கித் தயங்கி என்னிடம் ஊரில் வேலைக்குப் போகலாம் சார் இதே கூலி கிடைக்கும்.ஆனால் மரியாதை கிடைக்காது.இங்கு எனது சாதிய அடையாளங்கள் தொலைந்து விட்டது. தஞ்சையில் பெரும்பாலும் விவசாயக் கூலிகள் தாழ்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் வெகு பேர் அங்கு இருக்காமல் திருப்பூருக்கு வரத்துவங்கி விட்டார்கள்.
அப்படி வருவதற்கு பணத்தேவை மட்டும் காரணம் அல்ல என்றார். எனக்கு மிகுந்த மனசங்கடம் ஆகி விட்டது.
நீங்க அந்தப் பகுதியைச் சேர்ந்தவர். இது எந்த அளவிற்கு உண்மை ஜோசப்?

 
On Tue Jul 15, 03:37:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

நன்றி அப்துல்லா அண்ணா.
நீங்கள் திருப்பூரில் கேள்விபட்டதில் ஓரளவுக்கு உண்மையுள்ளது.

தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் விவசாய கூலி வேலை செய்கின்றனர். முன்னர் கடுமையான சாதி பாகுபாடுகள் இருந்தது. ஆனால் இன்று அந்தளவுக்கு இல்லை. எங்கள் கிராமத்தில் எல்லாம் இரட்டை டம்ளர் முறை இல்லை. எல்லோருக்கும் ஒரே மாதிரிதான்.

தற்சமயம் எல்லா கிராமங்களிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மிக இழிவாக நடத்தும் செயல்கள் எல்லாம் எங்கள் கிராமங்களில் இல்லை.

ஆனாலும் விவசாய கூலி வேலையை விட்டுவிட்டு திருப்பூருக்கும், திருச்சி துவாக்குடி பகுதியில் உள்ள சிறு தொழிற்சாலைகளுக்கும் வேலைக்கு செல்ல முக்கிய காரணம், நிரந்தரமான வேலை , வருடத்தின் எல்லா நாட்களும் இவர்களுக்கு வேலை விவசாய கூலியாக இருந்தால் கிடைக்காது.
காவிரி நீர் வராமல் போனால் விவசாய வேலை கிடையாது. எனவே தான் இவர்கள் அந்த வேலைகளுக்கு செல்கின்றார்கள்.
அவ‌ர்க‌ளும் என்ன‌தான் செய்வார்க‌ள், வெறும் விவ‌சாய‌ கூலியை ம‌ட்டும் ந‌ம்பினால் அவ‌ர்க‌ளால் பிழைக்க‌முடியாதே.

இன்னும் சில‌ர், விவ‌சாய‌ நாட்க‌ளில் விவ‌சாய‌ வேலைக‌ளையும், வேலை இல்லா நாட்க‌ளில் ம‌ற்ற‌ வேலைக‌ளுக்கும் செல்கின்றார்க‌ள்.

எல்ல‌வ‌ற்றையும் விட‌ விவ‌சாய‌ கூலி வேலை செய்வ‌து மிகுதியான‌ உட‌ல் உழைப்பை இட்டு செய்ய‌வேண்டிய‌ க‌டின‌மான‌ வேலை. ம‌ழையிலும் , வெயிலிலும், சேற்று வ‌ய‌ல்க‌ளில் இற‌ங்கி வேலை செய்வ‌து மிகுந்த‌ சிர‌ம‌மான‌ ஒன்றுதான்.
திருப்பூரில் பின்ன‌லாடை நிறுவ‌ன‌ங்க‌ளில் இவ்வ‌ள‌வு சிர‌ம‌ப்ப‌ட்டு வேலை செய்ய‌ வேண்டியிருக்காது. இதுவும் ஒரு கார‌ண‌ம்.

ந‌ல்ல‌ கேள்வியை கேட்டீர்க‌ள் அப்துல்லா அண்ணா, ஆனால் என்னை அண்ணா என்று சொல்வ‌து உங்க‌ளை இள‌மையாக‌ காட்டிக்கொள்ள‌த்தானே?

 
On Tue Jul 15, 04:03:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

சமீபத்தில் 1949 ல் ராபின்சன் பூங்காவில் தி.மு.க வை துவக்கியபோது அண்ணாதுரையை அண்ணா என அழைக்கத் துவங்கி பின்னர் அனைவரையும் அப்படியே அழைப்பது எனக்குப் பழக்கமாகிவிட்டது.சரி..சரி டென்ஷன் ஆவாதீங்க! மிகச்சிறு வயதில் இருந்தே எங்க அப்பாவோட கடைக்கு போய் (பள்ளி முடிந்து) அங்க தான் இரவு வரை இருப்பேன். அப்பா கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை வயது வித்யாசம் இன்றி அண்ணே என்று அழைப்பார்.நமக்கும் அது தொத்திக்கிச்சு. எனது பிறந்ததேதி 30/07/76 நான் அண்ணணா இல்ல தம்பியான்னு இனி நீங்கதான் சொல்லனும்.

 
On Tue Jul 15, 04:11:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

//"எனது பிறந்ததேதி 30/07/76 நான் அண்ணணா இல்ல தம்பியான்னு இனி நீங்கதான் சொல்லனும்."//

நீங்க அண்ணண், நான் தம்பிதான். என் பிறந்த நாள் 11.07.1978.

//" சமீபத்தில் 1949 ல் ராபின்சன் பூங்காவில் தி.மு.க வை துவக்கியபோது "//.

டோண்டு ஐயா பதிவ படிச்சுட்டு நிறைய பதிவர்கள் இப்டி தான் ஆயிட்டாங்க.

ஒரு நாள் ஒரு பதிவர் கிட்ட பிறந்த தேதி கேட்டேன், சமீபத்துல 1969ல பிறந்தேன்னு சொன்னாரு. எல்லாம் டோண்டு ஐயாவோட மகிமை.

 
On Tue Jul 15, 08:38:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

அடடே எனக்கு நீங்க தம்பியாண்ணே? ரொம்ப சந்தோஷம் அண்ணே!

 
On Tue Jul 15, 10:46:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

என் பிறந்த நாள் 11.07.1978.
//

சற்றே காலம் கடந்த பிறந்தநாள் வாழ்த்துகள்

 
On Wed Jul 16, 12:56:00 AM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணா.

 
On Wed Jul 16, 03:01:00 AM GMT+8 , Selva Kumar said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜோசப் அண்ணே...

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க