Author: ஜோசப் பால்ராஜ்
•8:53 PM
இலம்என்று அசைஇ இருப்பாரக் காணின்
நிலம்என்னும் நல்லாள் நகும்.


உழவும் உழவர்களும் - 1
உழவும் உழவர்களும் - 2
உழவும் உழவர்களும் - 3

விவசாயம் இயற்கையோடு பின்னிப்பிணைந்த ஒரு தொழில்.
இயற்கை பல நேரங்களில் எம்மை வாழ வைப்பதும் உண்டு, வீழ வைப்பதும் உண்டு.

நாற்று நட்டு வேர்விட நடவு செய்ததில் இருந்து ஒரு 10 நாட்கள் ஆகும். அதன் பின் அறுவடைக்கு 20 நாட்களுக்கு முன் வரை மழை பெய்தால் பயிர்களுக்கு எந்த சேதமும் இருக்காது. சொல்லப் போனால் இந்த நாட்களில் மழை பெய்வது பயிரை நன்கு வளர உதவி புரியும். இப்படி பெய்ய வேண்டிய நாட்களில் பெய்து காக்காமல், பயிர் அறுவடைக்கு தயாராக இருக்கும் நேரத்தில் மழை பெய்தால் மொத்த விளைச்சலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிவிடும்.

அடுத்து எங்கள் உழவர்களின் உழைப்பை பதம் பார்ப்பது பூச்சிகள். மிகக் கடுமையான விலை கொடுத்து வாங்கி பூச்சி கொல்லி மருந்தடித்தால் அடித்த ஒரு வாரத்திற்காவது வெயில் அடித்தால்தான் நல்லது. மருந்தடித்த உடன் மழை பெய்தால் எல்லாம் போச்சு.

இயற்கை நம் கைகளில் இல்லாத ஒன்று. மனித சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கையை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் காவிரி???

உணவு சம்பந்தப்பட்ட காவிரியை இருமாநிலங்களின் உணர்வு சம்பந்தப்பட்ட ஒன்றாக மாற்றி, ஓட்டுக்காக பயன்படுத்தும் அரசியல்வாதிகளால் பாதிக்கப்படுவது தமிழகத்தின் விவசாயி தானே?

இப்போதுகூட மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகு வேகமாக குறைந்து கொண்டே வருகின்றது, அணைக்கு வரும் நீரின் அளவு மிக குறைவாக இருக்கின்றது, கர்நாடகா எந்த தீர்ப்புக்கும் கட்டுப்படாமல், நமக்கு தரவேண்டிய நீரை தரவில்லை என செய்தித்தாள்களில் வாசிக்கும் போது இந்த ஆண்டு என்ன நேருமோ என உள்ளம் பதைபதைக்கின்றது.

பசியால் அழும் குழந்தைக்கு உணவு தர வழியில்லாத நிலையில் இருக்கும் தாயின் மனநிலை என்ன நிலையில் இருக்குமோ அதைவிட மோசமான நிலையில்தான் நீரின்றி வாடும் பயிறுக்கு நீர் தர வழியின்றி தவிக்கும் உழவனின் நிலையும் இருக்கும்.

தான் பெற்று, வளர்த்து ஆளாக்கிய மகன், அகால மரணமடைந்தபோது கூட அழாமல் இருந்த ஒரு முரட்டு மனிதர், தன் வயலில் நீரின்றி காய்ந்த பயிருக்கு நீர் தர எந்த வழியும் இல்லாத கையறு நிலையில் இருந்தபோது கதறி அழுததை கண்களால் கண்டவன் நான்.

நதி நீரை தேசியமயமாக்கிட துணிச்சல் இல்லாத மத்திய அரசுகளும், நதி நீர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண நினைக்காமல் அதை அரசியலாக்கி பிழைக்கப் பார்க்கும் மாநில அரசுகளும் இருந்து என்ன பிரயோசனம்?

2007 அக்டோபர் 1ம் நாள் ஏதோ ஒரு பிரச்சனைக்காக தமிழகத்தில் முழு அடைப்புக்கு மாநில அரசு அழைப்பு விடுத்தபோது, விடுமுறை நாள் என்ற போதிலும் இதுவரை இல்லாத வழக்கமாக நீதிமன்றம் கூடி அந்த முழு அடைப்பை சட்டவிரோதம் என்று தீர்பளிப்பதில் அக்கறைகாட்டிய வானளாவிய அதிகாரம் படைத்த உச்ச நீதிமன்றம், அதன் தொடர்சியாக தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசையே கலைக்க பரிந்துரை செய்வோம் என்றெல்லாம் தமிழக அரசின் மீது அத்தனை கடுமை காட்டிய மாண்புமிகுந்த உச்சநீதிமன்றம்,மக்களின் வாழ்வாதார நதி நீர் பிரச்சனைகளில் தனது தீர்ப்பை மதிக்க தவறி, நீதிமன்ற அவமதிப்பை செய்யும் கேரள, கர்நாடக மாநில அரசுகளை கண்டிக்க வழியில்லமல் இருப்பதும், தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளில் இரு மாநிலங்களும் பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும் என கூறும் போது, எப்படி பிழைக்க முடியும் எங்கள் உழவர்கள்?

நண்பர் ஸ்ரீராம் அவர்கள் எனது முந்தைய பதிவில் எல்லா வேலைகளிலும் தான் சிரமங்கள் உள்ளன, இதை எப்படி ஒரு விஷயமாக சொல்லலாம் என்ற அர்தத்தில் கேட்டிருந்தார்.

உழவர்கள் சந்திக்கும் எல்லா சவால்களையும் நீங்கள் சந்திக்கின்றீர்களா? மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்க்கும் நீங்கள் உங்களது ஊதியத்தை நீங்கள் நிர்ணயிப்பீர்களா, அல்லது நிறுவனத்தார் உங்கள் வேலைக்கு என்ன ஊதியம் கொடுக்கின்றார்களோ அதை மட்டும் வாங்கிக்கொண்டு சந்தோஷமாக இருப்பீர்களா?

உங்களுக்கு உங்கள் வேலையை செய்வதற்கு தேவையான கணிணியை மட்டும் கொடுத்துவிட்டு, அதை இயக்கத் தேவையான மின் இணைப்பை கொடுக்காமல் விட்டால் உங்களால் வேலை செய்ய முடியுமா? மென்பொருளை உருவாக்கத்தான் முடியுமா? கணிணியை இயக்க மின் இணைப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உழவுத் தொழிலுக்கு நீர். அது இல்லாமல் என்ன செய்வான் எங்கள் உழவன்?

ஒரு மென்பொருளாளரின் வேலையில் உள்ள சிரமங்கள் என்ன? அந்த சிரமங்களை எதிர்கொள்ள அவனுக்குள்ள வசதிகள் என்னென்ன? அப்படி சிரமங்களை எதிர்கொள்ளும் வசதி உழவனுக்கு இருக்கின்றதா?

20 பைசா உற்பத்தி செலவு செய்து ஒரு தீப்பெட்டியை தயார் செய்யும் தயாரிப்பாளர் கூட 30 பைசா லாபம் வைத்து 50 பைசாவுக்கு தனது பொருளை விற்க முடியும் எனும் போது, ஏராளமான சிரமங்களை தாண்டி , இயற்கையோடு போராடி உழைத்து விளை பொருளை கொண்டுவரும் உழவனுக்கு தனது பொருளின் விலையை நிர்ணயிக்கும் உரிமை உள்ளதா?

யூரியா போன்ற உரத்தட்டுபாடு, விதை தட்டுபாடு எல்லாம் செயற்கையானது. இதையெல்லாம் கூட எங்களவர்கள் எதிர்கொண்டு விடுவார்கள். உழைப்பிற்குறிய ஊதியம் கிடைக்காத போதுதான் துவண்டுவிடுவார்கள்.

ந‌ண்ப‌ர் ஸ்ரீராம் ஒரு த‌வ‌றான‌ த‌க‌வ‌லை குறிப்பிட்டிருந்தார். எந்த‌ உழ‌வ‌ரும் அரிசி விலை கிலோ 2 ரூபாய்க்கு விற்க‌ வேண்டும் என்று விரும்ப‌வில்லை. எந்த‌ விவ‌சாயியும் த‌ன‌து விளை பொருள் இந்த‌ அள‌வு குறைவான‌ விலையில் விற்க‌ப்ப‌டுவ‌தை வ‌ர‌வேற்க‌ மாட்டான். வேண்டுமானால் விவ‌சாய‌ கூலித் தொழிலை செய்ப‌வ‌ர்க‌ள் அதை வ‌ர‌வேற்க‌லாம். நான் ஏற்க‌ன‌வே என் ப‌ழைய‌ ப‌திவுக‌ளில் குறிப்பிட்டிருந்த‌ப்டி கிலோ 2 ரூபாய்கு அரிசி திட்ட‌ம் ப‌ல‌ரையும் சோம்பேறிக‌ள் ஆக்கி, விவ‌சாய வேலைக்கு ஆள் ப‌ற்றாகுறையைத்தான் ஏற்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தை அனைத்து உழ‌வ‌ர்க‌ளும் உண‌ர்ந்துள்ள‌ன‌ர்.

இப்படி இயற்கை சீற்றங்களாலும், செயற்கையான காரணங்களாலும் பாதிக்கப்படும் உழவர்கள் இழப்பது தங்களது லாபத்தை தான்.

2007 ஆன் ஆண்டு அறுவடை நேரத்தில் பெய்த மழையால் எங்களுக்கு ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 5000 முதல் 7500 வரை நட்டம்.இப்படி நஷ்டம் அடைந்தால் எங்களால் எப்படி தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட முடியும் ?

இயற்கை சீற்றங்களின் போதெல்லாம் அரசாங்கம் தான் உழவர்களுக்கு நிவாரண நிதி வழங்குகின்றதே என கூறுகின்றீர்களா?

அந்த கொடுமையைப் பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போமா? Udanz
This entry was posted on 8:53 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments:

On Thu Jul 17, 02:29:00 PM GMT+8 , Anonymous said...

"இயற்கை பல நேரங்களில் எம்மை வாழ வைப்பதும் உண்டு, வீழ வைப்பதும் உண்டு. "

நச்சுன்னு சொல்லிட்டீங்க.

"பசியால் அழும் குழந்தைக்கு உணவு தர வழியில்லாத நிலையில் இருக்கும் தாயின் மனநிலை என்ன நிலையில் இருக்குமோ அதைவிட மோசமான நிலையில்தான் நீரின்றி வாடும் பயிறுக்கு நீர் தர வழியின்றி தவிக்கும் உழவனின் நிலையும் இருக்கும்."

மிக சரியான உதாரணம். உண்மையிலேயே விவசாயிகள் விவசாயத்தை எவ்வளவு நேசிக்கின்றார்கள் என்பதை இதைவிட அருமையாக யாராலும் சொல்லமுடியாது.

தொடர்ந்து எழுதுங்கள்.

 
On Thu Jul 17, 02:34:00 PM GMT+8 , Anonymous said...

மிக அழகாக சொல்லியுள்ளீர்கள்.
உச்ச நீதிமன்றத்தின்மீதான உங்கள் கோபம் மிக நியாயமானது. நீதிம‌ன்ற‌ அவ‌ம‌திப்பு வ‌ழ‌க்கில் அப்போதைய‌ க‌ர்நாட‌க‌ முத‌ல்வ‌ர் எஸ்.எம்.கிருஷ்ணா, நீதிம‌ன்ற‌த்தில் ம‌ன்னிப்பு கேட்டுவிட்டு, பிர‌ச்ச‌னையை திசை திருப்ப‌ மாண்டியாவில் பாத‌யாத்திரை போனார்.

முல்லை பெரியார் அணையின் நீர்ம‌ட்ட‌த்தை உய‌ர்த்த‌ உச்ச‌ நீதிம‌ன்ற‌ம் உத்த‌ர‌விட்ட‌பின்ன‌ரும், இன்னும் கேர‌ளா அர‌சு செய்யும் அட்ட‌காச‌ங்க‌ளை ஏன் உச்ச‌ நீதிம‌ன்ற‌ம் க‌ண்டிக்க‌வில்லை? உங்க‌ள் கேள்வியில் நியாய‌ம் உள்ள‌து.

 
On Thu Jul 17, 02:37:00 PM GMT+8 , Anonymous said...

விவசாயமும், மீன் பிடித்தொழிலும் இயற்கையோடு இணைந்த தொழில்கள். இயற்கையின் சீற்றங்களை மீறிதான் பலனை அடைய முடியும். உங்கள் தொடர் மிக அருமையாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.

 
On Thu Jul 17, 02:51:00 PM GMT+8 , Anonymous said...

என்ன சார், கலைஞர வாருவருனு வாரி இரண்டு மூனு பதிவு போட்டிங்க, இப்ப கலைஞருக்கு பூச்செண்டு கொடுத்தீங்க, கடைசிய இந்த பதிவுல கலைஞர கண்டிச்சதுக்கு உச்ச நீதிமன்றத்தையே தாக்கியிருக்கீங்க. என்ன உடன்பிறப்புகளுக்கு பயந்துட்டீங்களா?

 
On Thu Jul 17, 04:55:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

//
not for publishing//

ஜோசப் உடனே என்னோட புதுப் பதிவைப் போய் படிங்க. உங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்துகிட்டு இருக்கு
:0)))

 
On Thu Jul 17, 04:57:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

என்ன சார், கலைஞர வாருவருனு வாரி இரண்டு மூனு பதிவு போட்டிங்க, இப்ப கலைஞருக்கு பூச்செண்டு கொடுத்தீங்க, கடைசிய இந்த பதிவுல கலைஞர கண்டிச்சதுக்கு உச்ச நீதிமன்றத்தையே தாக்கியிருக்கீங்க. என்ன உடன்பிறப்புகளுக்கு பயந்துட்டீங்களா?//

என்ன சொன்னீங்க லோகு? பயமா?
பயம்...அண்ணன் ஜோசபுக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை
:))

 
On Fri Jul 18, 03:58:00 PM GMT+8 , Syam said...

அனைவருக்கும் புரியும்படி விவசாயிகளின் வாழ்கை சிரமங்களை எடுத்து கூறி உள்ளீர்கள், உங்களது இந்த பயணம் தொடர மனமார்ந்த வாழ்த்துகள்..

 
On Sat Jul 19, 01:19:00 AM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

//"என்ன சார், கலைஞர வாருவருனு வாரி இரண்டு மூனு பதிவு போட்டிங்க, இப்ப கலைஞருக்கு பூச்செண்டு கொடுத்தீங்க, கடைசிய இந்த பதிவுல கலைஞர கண்டிச்சதுக்கு உச்ச நீதிமன்றத்தையே தாக்கியிருக்கீங்க. என்ன உடன்பிறப்புகளுக்கு பயந்துட்டீங்களா?"//


நான் கலைஞர் செய்வதையெல்லாம் கண்ணைமூடிக்கொண்டு ஆதரிப்பவனும் அல்ல, எதிர்ப்பவனும் அல்ல.
உடன்பிறப்புக்கள் எல்லாம் எனக்கும் சகோதரர்கள்தான்.

எது சரியோ அதை ஆதரிக்கின்றேன். எது தவறோ அதை எதிர்க்கின்றேன்.

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க