Author: ஜோசப் பால்ராஜ்
•9:54 PM
கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக ஏறி, அதனால் பல நாடுகளின் பொருளாதரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,நான் ஏற்கனவே எழுதிய இப்பதிவை மீள்பதிவு செய்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

மேலும், இப்பதிவை நான் வெளியிட்ட போது எனது வலைப்பூவை தமிழ்மணத்துடன் இணைக்காததால் இது மிகச்சிலரையே சென்றடைந்தது. தற்போது தமிழ்மணத்தின் வாயிலாய் பெரும்பாலனவர்களை சென்றடையும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துகளை பின்னூட்டமிடுங்கள்.

மிக நீண்ட நாட்களாக என் மனதை அரித்துக்கொண்டிருக்கும் ஒரு ஆதங்கம் தான் இந்த பதிவு. இது ஒரு சுயநலம் கலந்த பொதுநலப் பார்வையும் கூட.

வளர்ந்து வரும் நவீனயுகத்தில் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையால் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் போன்ற மரபுசார் எரிபொருட்களின் தேவையும், சர்வதேச சந்தையில் அதிகரித்துவரும் கச்சா எண்ணெயின் விலையால் எல்லோரும் பாதிப்படைவது பற்றி நான் ஓன்றும் தனியாக சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் மரபுசாரா எரிசக்தி எனும் ஒரு அரிய வளத்தை நம் கையில் வைத்துக்கொண்டு இன்னும் ஏன் நாம் அதை உயோகிக்க மறுக்கிறோம் என்பது தான் எனது கேள்வி.

கரும்பில் இருந்து சர்கரை தயாரிக்கும் போது கிடைக்கும் கழிவுப்பாகில் (மொலாசஸ்) இருந்தும், மக்கா சோளத்தில் இருந்தும் தயாரிக்கப்படும் எத்தனாலை உயிர் எரிபொருளாக உபயோகிக்கலாம் என்பதை ஏற்கனவே பிரேசில் போன்ற நாடுகள் நிரூபித்துவிட்டன. விவசாயத்தை முக்கியத்தொழிலாக கொண்டுள்ள இந்தியாவில் கரும்பும் , சோளமும் மிக அதிகமாக பயிரிடப்படும் பயிர்கள் தான்.

பிரேசில் நாட்டில் உயிர் எரிபொருள்(Bio Fuel) ஆக எத்தனாலை பயன்படுத்தி கார் போன்ற வாகனங்களை இயக்கிவருகிறார்கள். தொழில்நுட்பம் குறித்த மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள இணைய முகவரிக்கு சென்று பாருங்கள். (http://en.wikipedia.org/wiki/Ethanol_fuel).


இது நாள்வரை சர்க்கரை ஆலைகளில் கழிவாக வெளியேற்றும் மொலசஸ் தற்போதுவரை வேண்டாத ஒரு கழிவாகத்தான் வீணாக்கப்படுகிறது. சொல்லப்போனால் ஆலைகளுக்கு இது ஒரு செலவு தான். ஆனால் இதே மோலாசஸ்தான் எத்தனால் தயாரிக்க முக்கியமான மூலப்பொருள்.

ஆனால் எத்தனால் என்பது இதுவரை சாரயமாகவும், மிக சில மருத்துவ தேவைகளுக்காகவும் மட்டுமே உபயோகிக்கப்படுவதால் தற்சமயம் பெருமளவில் தயாரிக்கப்படுவதில்லை. இதே எத்தனாலை உயிர் எரிபொருளாக உபயோகிக்கும் நிலை வந்து மிகப்பெருமளவில் தயாரிக்க வேண்டியத் தேவைகள் உருவானால் இன்று சர்க்கரை ஆலைகளுக்கு செலவாக இருக்கும் மொலசஸ் எத்தனால் தயாரிப்புக்கு மூலப்பொருளாக விற்கப்பட்டு வருவாயாக மாறிவிடும். இதனால் கரும்புக்கு கூடுதல் விலை கிடைக்கும் .

மக்காசோளம் மிக குறைந்த நீரைகொண்டு பயிரிடப்படும் ஒரு பயிர். கரும்பைவிட மிக குறைவான நாட்களில் விளையும், மழையை மட்டும் நம்பி விவசாயம் செய்யும் இடங்களிலும் பயிரிட முடியும். ஆனால் தற்போது உணவு பொருளாகவும், கோழி பண்ணைகளில் தீவனமாகவும் மட்டுமே பயன்படுவதால் மிகக்குறைந்த விலையே இதற்கு கிடைத்துவருகிறது. சோளத்தில் இருந்தும் எத்தனால் தயாரிக்கமுடியும் என்பதால் இதற்கும் நல்ல விலை கிடைக்கும். இவையெல்லாம் விவசாயிகளுக்கு கிடைக்கும் பலன்கள்.

பெட்ரோலிய எரிபொருட்களை உபயோகிப்பதால் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை விட , எத்தனாலையோ அல்லது எத்தனால் கலந்த எரிபொருளையோ உபயோகிப்பதால் ஏற்படும் கேடு குறைவானது என்றும் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. உலகின் வெப்பம் அதிகரித்து பல கடலோரப்பிரதேசங்கள் வெகுவிரைவில் நீரில் மூழ்கும் என்ற எச்சரிக்கை விடப்பட்டுள்ள இந்த சூழலில் சுற்றுபுறச் சூழலை பாதுகாக்கவும் இது ஒரு மி்கச்சிறந்த வழியாகும் என்பதில் ஐயமில்லை. ஆக சுற்றுப்புற சூழலை காரணமாக கொண்டும் இதை தடுக்க முடியாது.

நாட்டின் இறக்குமதியில் பெருமளவு கச்சா எண்ணெய் தான் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று , வெறும் 30 % எத்தனால் கலந்த எரிபொருளை உபயோகித்தால் கூட , கச்சா எண்ணெய் இறக்குமதி 30% குறையும் இதனால் ஒரு 15% பெட்ரோலிய பொருட்களின் விலை குறைந்தாலும் எல்லோருக்கும் நன்மைதானே ? மேலும் இறக்குமதி குறைவதால் நாட்டின் பொருளாதாரமும் உயரும் அல்லவா?

மேலும் இந்தியாவில் உயிர் எரிபொருள் பயன்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்தினால், மேலும் பல நாடுகள் இதை பயன்படுத்த முன்வரலாம், எல்லோராலும் எத்தனால் தயாரிக்கமுடியாது என்பதால் எத்தனால் ஏற்றுமதியில் கூட பெரும் லாபம் ஈட்ட முடியும்.

உயிர் எரிபொருள் தயாரிப்புக்கு உணவுப் பொருட்களை பயன்படுத்துவதால், உணவு பொருட்களுக்கு பற்றாகுறை ஏற்படும் என்ற ஒரு குற்றச்சாட்டும் வந்துகொண்டிருக்கின்றது.

ஆனால் நான் இங்கே குறிப்பிட்டிருக்கும் மொலசஸ் ஒரு உணவுப்பொருள் அல்ல. அதே போல் மக்காச்சோளம் ஒரு மானாவாரி பயிர் என்பதால், அதை உயிர் எரிபொருள் தயாரிப்பிற்கு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டால், அதற்கு நல்ல விலை கிடைக்கும் என்பதால் மேலும் பல விவசாயிகள் அதை பயிரிட முன்வருவார்கள். தரிசு நிலங்களை மேம்படுத்தி சுலபமாக மக்காச்சோளம் பயிரிடலாம் என்பதால் கட்டாயம் உணவுப் பற்றாகுறைக்கு இத்திட்டம் வழிவகுக்காது. ( இதை நான் என் முந்திய பதிவில் குறிப்பிடவில்லை).


ஆக என் சிற்றறிவுக்கு புரிந்த வகையில் எந்த கோணத்தில் பார்த்தாலும் நன்மையளிக்கும் இந்த திட்டத்தை ஏன் எந்த அரசாங்கமும் கண்டுகொள்ளவதில்லை?

சரி இதுல என்ன பொது நலம் கலந்த சுயநலம் உனக்கு அப்டினு யாரும் கேட்குற மாதிரி வைக்க கூடாதுல, அதையும் தெளிவா சொன்னாதானே சரியா இருக்கும்

பொது நலம் : 1) கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவதால் அதிகரிக்கும் நாட்டின்
பொருளாதார முன்னேற்றம்
2) குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்கள்.
3) சுற்றுப்புற சூழல் பாதிப்பு குறைவது.

சுய நலம் : என்னதான் கணிப்பொறி துறையில வேலை பார்த்துகிட்டு இருந்தாலும் நான் மாரனேரி என்னும் கிராமத்துல ஒரு விவசாய குடும்பத்துல பிறந்தவன் தானே. கரும்புக்கும் சோளத்துக்கும் நல்ல விலை கிடைக்கும்னா எங்க விவசாயகுலத்துக்கு பெரிய நன்மைதானே ... Udanz
This entry was posted on 9:54 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

13 comments:

On Sun Jul 06, 10:31:00 PM GMT+8 , வழிப்போக்கன் said...

// என்னதான் கணிப்பொறி துறையில வேலை பார்த்துகிட்டு இருந்தாலும் நான் மாரனேரி என்னும் கிராமத்துல ஒரு விவசாய குடும்பத்துல பிறந்தவன் தானே.//

விவசாயம் முன்னேறாம இந்தியா முன்னேற முடியாதுங்க..

 
On Sun Jul 06, 10:36:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

சரியா சொன்னீங்க வழிபோக்கன். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

உள்நாட்டு உற்பத்தி விகிதம் 9% தாண்டினாலும் இன்னும் விவசாய வளர்ச்சி 4% க்கு கீழ தான் இருக்கு.
விவசாய உற்பத்தி வளர்ந்தால் தான் நாட்டிற்கு உண்மையிலேயே பலன் ஏற்படும்.

இது குறித்து விரைவில் தனி பதிவு எழுதனும்னு இருக்கேன்.

 
On Sun Jul 06, 10:39:00 PM GMT+8 , வழிப்போக்கன் said...

//விவசாயத்தை முக்கியத்தொழிலாக கொண்டுள்ள இந்தியாவில் கரும்பும் , சோளமும் மிக அதிகமாக பயிரிடப்படும் பயிர்கள் தான்.
//

பல பெரிய கம்பெனிகள் இந்த துறையில ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்க..(Including Reliance)..

நிச்சயம் இப்ப இருக்கும் பெட்ரோல் விலை Ethanol உற்பத்தியை அதிகப்படுத்தும்..

2010-லு 10 சதவிகிதம்
எதிர்பார்கலாம்.


ஓரே பிரச்சனை நம்முர்ல தண்ணி அதிகமா பயன்படுத்தி கரும்பு பயிர் பண்ண பழகிட்டோம், அதனால கரும்பு சாகுபடி அதிகரிச்சா மற்ற பயிர்கள் பாதிக்கும் நெலம.

பதிவிற்கு நன்றி....நல்ல பதிவு..

 
On Sun Jul 06, 10:42:00 PM GMT+8 , வழிப்போக்கன் said...

//இது குறித்து விரைவில் தனி பதிவு எழுதனும்னு இருக்கேன்.
//

நிச்சயம் எழுதுங்க...கூடவே IT எப்படி விவசாயத்துக்கு உதவலாம்னு சொல்லுங்க...

 
On Mon Jul 07, 01:03:00 AM GMT+8 , Known Stranger said...

there is a invention of oil reserve called sand crude oil. Most populated area is Canada and Russia. Technology is not developed to extract the oil from sand crude oil. The latest oil & gas magz was publishing an article on this and if canada can develope the reserve of oil will be humpty of centuries to come. Just an information. you may have a read about in google. This comment is nothing to do with your post. just for information

 
On Mon Jul 07, 01:44:00 AM GMT+8 , Anonymous said...

Biofuels responsible for food crisis: World Bank

http://economictimes.indiatimes.com/News/Economy/Indicators/Biofuels_responsible_for_food_crisis_World_Bank/articleshow/3198573.cms

+++++++++++++

Canada recently has found technology to extract oil from Sand Oil(bitumen)

 
On Mon Jul 07, 10:44:00 AM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

// வழிப்போக்கன் said...
ஓரே பிரச்சனை நம்முர்ல தண்ணி அதிகமா பயன்படுத்தி கரும்பு பயிர் பண்ண பழகிட்டோம், அதனால கரும்பு சாகுபடி அதிகரிச்சா மற்ற பயிர்கள் பாதிக்கும் நெலம.//

கரும்பையும் சொட்டுநீர் பாசன முறையில் விளைவிக்க முடியும் என பலர் நடைமுறையில் நிரூபித்துள்ளனர். எனவே அது ஒரு பிரச்சனை ஆகாது.

 
On Mon Jul 07, 10:48:00 AM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

நன்றி வைஷ்ணவ். ( Known Stranger)
மணல் கச்சா எண்ணெய் என்பது குறித்து தற்போது உங்கள் பின்னூட்டத்திலிருந்துதான் அறிகிறேன். இது குறித்து பெரிய அண்ணண் (கூகுள்) அவர்களை கேட்டு தெரிந்துகொள்கின்றேன். என்னதான் புதிய வளம் கண்டறியப்பட்டாலும், அதுவும் ஒரு மரபு எரிபோருள்தானே? சில நூற்றான்டுகளுக்குப்பிறகு அதுவும் குறைந்து போகலாம். எனவே இப்போதே ஒரு மாற்றுவழியாக உயிர் எரிபொருட்களை பயன்படுத்த ஆரம்பித்தால் பிற்கால சந்ததியினர் கவலையின்றி இருக்கலாம் தானே.

 
On Mon Jul 07, 10:56:00 AM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

பின்னூட்டமிட்ட பெயரிலிக்கு(Anonymous) நன்றி .
நான் கூறுவது சர்கரை ஆலைகளில் இருந்து கிடைக்கும் கரும்பு கழிவில் இருந்து எத்தனால் தயாரிக்கும் முறை. இதில் எந்த உணவுப்பயிரையும் உயிர் எரிபொருள் உற்பத்திக்கு நாம் பயன்படுத்தப்போவதில்லை. நாடு முழுவதும் தற்சமயம் இருக்கும் அனைத்து சர்கரை ஆலைகளிலும் இருக்கும் ஆலை கழிவை உபயோகித்தாலே போதும்.
மேலும் கரும்பு எல்லா நிலங்களிலும் வளராது என்பதால், நல்ல விலை கிடைக்கின்றது என்பதற்காக எல்லோரும் பயிரிட்டுவிட முடியாது. கரும்பு உற்பத்தி அதிகரிக்கும் தான். ஆனால் கரும்பு ஒரு 13 மாத கால பயிர். ஒரு முறை கரும்பு சாகுபடி செய்யும் காலத்தில் 3 பொகம் நெல் விளைவித்துவிட முடியும். எனவே எல்லோரும் கரும்பை நோக்கி செல்வார்கள் என்றும் சொல்ல முடியாது. எனவே அது உணவுப் பற்றாகுறையை ஏற்படுத்தும் அளவுக்கு அதிகரிக்காது என்று முழுமையாக நம்பலாம்.

 
On Mon Jul 07, 08:40:00 PM GMT+8 , Sriram said...

Paul,
One question to you, how much % did you get the loan waiver from the government.To frank on this, i just want to know how many big shots (hope your family also have rich lands (mirasudar)) got this loan waiver from indian government.
did you use the free electricity for your land? or using paid service..
this question is not to insult or hold you, As far as i know , no small farmer got benifit from the government for the loan wavier..this is wat people heard and thought of people around me..Can you clarify on this...

 
On Mon Jul 07, 09:17:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

நல்ல கேள்விதான் Sriram .
விவசாயிகளின் உண்மை நிலவரம் அறிந்தால் சிறு விவசாயிகள் , பெரும் விவசாயிகள் என்று பேச மாட்டீர்கள் என நினைக்கின்றேன்.

2 ஏக்கர் நிலம் மட்டும் வைத்திருப்பவர்களுக்கு என்ன செலவு ஆகின்றதோ, அதை விட அதிக செலவுதான் பெருமளவில் விவசாயம் செய்பவர்களுக்கும் ஆகின்றது. விளைச்சல் எல்லோருக்கும் சற்றேறக்குறைய ஒரே அளவுதான் வருகின்றது. பெய்ய வேண்டிய நேரத்திலும், பெய்யக்கூடாத நேரத்தில் பெய்தும் கெடுக்கும் மழை, காவிரி நீர் பிரச்சனை என பல சோதனைகளை தாண்டி , விளை பொருளை கொண்டுவந்தால் சந்தைபடுத்துவதிலும் பல பிரச்சனைகள் உள்ளன.
இது குறித்து ஒரு தனிப்பதிவு வெகு விரைவில் எழுதுகின்றேன்.
அப்போது உங்களுக்கு தெரியும்.

பெரு விவசாயிகள் அதிக அளவில் கடன் பெற்றிருப்பார்கள், எனவே அவர்களுக்கு அதிகமாக தள்ளுபடி கிடைக்கும். சிறு விவசாயிகள் குறைந்த அளவில் கடன் பெற்றிருப்பார்கள். விவசாயக்கடன் என்பது ஒரு விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அடிப்படையில் தரப்படுவது தான். எனவே இது போன்ற ஒரு கருத்து பரவியுள்ளது.

விவசாயி அல்லாத சிலர் போலியான விவசாயக்கடன்களைப் பெற்று, தற்போது கடன் தள்ளுபடி சலுகையில் பலன் அடைந்திருப்பதாகத்தான் பரவலான செய்தியுள்ளது.

என் தந்தையாருக்கு வயதாகிவிட்டதாலும், அவருக்கு துணையாக நாங்கள் யாரும் அங்கில்லை என்பதாலும் , சென்ற ஆண்டுமுதல் பெரும்பகுதியான எங்கள் நிலங்களை குத்தகைக்கு விட்டுவிட்டதால், சென்ற ஆண்டு நாங்கள் விவசாயக் கடனை அதிக அளவில் பெறவில்லை. எனவே எங்களுக்கு இதனால் பெரிய பலன் எதுவும் இல்லை.

இன்னெரு உண்மையையும் இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும். மத்திய அரசு அறிவித்த கடன் தள்ளுபடி சரியான முறையில் பயன் தரும் ஒன்று அல்ல. தேர்தல் காலச்சலுகை என்றுதான் சொல்லவேண்டும். இதன் பயனாளிகள் பட்டியல் தற்சமயம் தான் வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் பல நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் தள்ளுபடி தரப்படுகின்றது. இதனால் எங்களுக்கு எவ்வளவு தள்ளுபடி கிடைத்தது என்பது குறித்த விவரங்களை என் தந்தையாரிடமிருந்து பெற்று, விரைவில் என் பதிவில் வெளியிடுகின்றேன்.

 
On Tue Jul 08, 08:40:00 PM GMT+8 , Sriram said...

How about free electricity?...how about the insurance card farmers?..Hope vajpayee introduced insurance scheme for farmers?...whether all are implemented or its on paper...

 
On Mon Apr 19, 08:41:00 AM GMT+8 , பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு, இதுபோன்ற உயிரித் தொழில் எண்ணெய் அனைவரும் தயாரிக்கலாமா? அல்லது யாராவது காப்புரிமை பெற்றியிருக்கின்றார்களா? இந்த திட்டம் செயல்பட்டால் ஸ்பிரிட் மற்றும் சாராயம் குறையவும் வாய்ப்பு உண்டு. எத்தனால் தொழில் நுட்ப செலவுகள் மற்றும் உற்பத்திப் பொருளின் சந்தை மதிப்பு இதன் மூலகமாக கிடைக்கும் ஆதாயம் போன்ற காரணிகளும் ஆராயப் பட வேண்டும். நன்றி.

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க