Author: ஜோசப் பால்ராஜ்
•7:15 PM
இரவார் இரப்பார்க்குஒன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.

உழவும் உழவர்களும் - 1
உழவும் உழவர்களும் - 2
உழவும் உழவர்களும் - 3
உழவும் உழவர்களும் - 4

இயற்கை சீற்றங்களின் போது அரசாங்கம் விவசாயிகளுக்கு எப்படி உதவி செய்கின்றது என்றும் அதை பெறுவதில் எம்மவர்கள் படும் பாடு இருக்கின்றதே, அது உலகின் மிக உயர்ந்த குலமான உழவர் குலத்தை மிக கேவலமாக இழிவுபடுத்தும் செயல்கள் , அவற்றைப் பார்க்கும் முன்பு, இப்பதிவின் ஆரம்பத்தில் கொடுத்திருக்கும் திருக்குறளின் பொருளை சொல்லிவிட்டால் உங்களுக்கே புரியும்.

உழவுத்தொழிலைச் செய்து வாழ்பவர்கள் தாங்கள் பிறரிடம் சென்று யாசிக்கமாட்டார்கள். வறியவர்க்கு ஒரு பொருளை வஞ்சனை இல்லாமல் கொடுத்து உதவுவார்கள்.

இத்தனை பெருமை மிக்க உழவர்கள் இன்று இருக்கும் நிலை என்ன ?
இயற்கையின் சீற்றங்களை அவர்கள் எதிர் கொள்ளும் போது அரசாங்கம் கொடுக்கும் நிவாரணம் எவ்வளவு? ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமாக செலவு செய்யும் விவசாயிக்கு ஏக்கருக்கு சில ஆயிரங்களை தருவார்கள். கடைசியாக கொடுத்த நிவாரணம் வெறும் மூவாயிரம் ரூபாய்.

இதுவே சொற்பத் தொகை என்றால் அதை வாங்க நாங்கள் படும்பாடு இருக்கின்றதே அது சொல்ல முடியாத சோகம்.

எரிகின்ற வீட்டிலும் பிடுங்கும் செயலை செய்ய வருவார்கள் நம் அரசு அதிகாரிகள். கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று உங்களுக்கு எவ்வளவு விவசாய நிலம் இருக்கின்றது என்று சிட்டா அடங்கல் எல்லாம் வாங்கனும்.


இதுக்கு ஒரு ஏக்கருக்கு 100 ரூபாயாவது வாங்காம கொடுக்கமாட்டாரு அந்த கி.நி.அ, இவ்வளவையும் வாங்கி யாருகிட்ட கொடுக்கனும், அதே கிராம நிர்வாக அலுவலர் கிட்ட தான் கொடுக்கனும், அவருதான் அரசாங்கம் தரும் நிதியை கொண்டுவந்து எங்களுக்கு கொடுப்பாரு. அப்போ ஒரு ஏக்கருக்கு ஒரு 200 முதல் 300 வரை அடிச்சுட்டு மீதியத்தான் கொடுப்பாரு. இப்படி எல்லாரும் சாப்பிட்டது போக மிச்சம் ஒரு 2500 வரும். இது எங்களோட இழப்பில் 4ல் ஒரு பங்கு. இப்படியே 2 வருடம் தொடர்ந்து நடந்தால் எந்த விவசாயியால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியும் ? இப்போது தெரிகின்றதா ஏன் இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றார்கள் என்று ?

விவசாயம் பற்றி எதுவுமே தெரியாத சில நண்பர்கள் உங்கள் தொழிலில் ஏற்படும் இழப்புகளுக்கு ஏன் அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும்? மற்ற தொழில் செய்வோர்களுக்கு எல்லாம் அவர்கள் தொழிலில் இழப்பு ஏற்பட்டால் அரசா இழப்பீடு வழங்குகின்றது என்று கேட்பார்கள்.

எல்லா தொழில்களும், விவசாயமும் ஒன்று இல்லை. மற்ற தொழில்களில் எல்லாம் தயாரிப்பாளர்தான் விலை நிர்ணயம் செய்வார். ஆனால் உணவுப் பொருட்கள் மக்களின் அத்தியாவசியத் தேவையென்பதால் அரசுதான் அதன் விலையை நிர்ணயிக்கும். எங்கள் உற்பத்தி மிக அதிகமானாலும் எங்களால் அதிக லாபம் அடைய முடியாது. எங்களது லாபம் எவ்வாறு அரசால் கட்டுபடுத்தப்படுகின்றதோ, அதே போல் எங்கள் இழப்பும் அரசால்தான் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அது தானே நியாயம்?

நன்கு விளைந்து நெல்லை அரசின் கொள்முதல் நிலையங்களில் விற்றாலும் சரி, வெள்ளத்தாலோ அல்லது வறட்சியாலோ ஒன்றும் விளையாமல் உதவி தொகை பெறுவதானாலும் சரி, எங்களுக்கு சேர வேண்டிய முழுத் தொகையையும் நாங்கள் வாங்கவே முடியாது. அவர்கள் எடுக்க வேண்டியதை எடுத்துக் கொண்டு மிச்சம் மீதியைத் தான் எங்களிடம் கொடுக்கின்றார்கள்.

பாருங்கள் அய்யா, யாரிடமும் யாசிக்காத உழவனுக்கு அவனுக்கு சேரவேண்டிய தொகையை கூட அவனால் முழுதுமாய் பெற இயலாது, தனக்கு உரியப் பொருளை கூட இரந்து வாங்க வேண்டிய நிலை. வறியவர்க்கு ஒரு பொருளை வஞ்சனை செய்யாது கொடுப்பவர்களுக்கு , அவர்கள் பொருளையே வஞ்சனை செய்யும் கொடுமை. இது தானே இன்று உழவர்களின் நிலை ?

நெல் விவசாயிகள் மட்டும்தான் இத்தணை சோகங்களையும் அனுபவிக்கின்றார்கள் என்று நினைக்க வேண்டாம். 11 மாத பயிரான கரும்பு விவசாயிகள் இருக்கின்றார்களே, அவர்கள் பாடு மிக மோசமானது. அதை கட்டாயம் தனி பாகமாகத்தான் எழுத வேண்டும், அடுத்த பாகத்தில் கரும்பு விவசாயிகளின் சோகங்களை பார்ப்போம். Udanz
This entry was posted on 7:15 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

10 comments:

On Thu Jul 31, 02:32:00 PM GMT+8 , வழிப்போக்கன் said...

மீண்டும் ஒரு நல்ல பதிவு..வாழ்த்துக்கள்.ஜோசப்.

 
On Thu Jul 31, 02:33:00 PM GMT+8 , வழிப்போக்கன் said...

//அது உலகின் மிக உயர்ந்த குலமான உழவர் குலத்தை மிக கேவலமாக இழிவுபடுத்தும் செயல்கள் , அவற்றைப் பார்க்கும் முன்பு, இப்பதிவின் ஆரம்பத்தில் கொடுத்திருக்கும் திருக்குறளின் பொருளை சொல்லிவிட்டால் உங்களுக்கே புரியும்//

உண்மை..உண்மை..

 
On Thu Jul 31, 02:34:00 PM GMT+8 , வழிப்போக்கன் said...

நான் கூட விவசாயத்த பத்தி ஒரு பதிவு போட்டிருக்கேன். நேரம் கிடைக்கறப்போ பாருங்க..

 
On Thu Jul 31, 02:39:00 PM GMT+8 , வழிப்போக்கன் said...

//எங்கள் உற்பத்தி மிக அதிகமானாலும் எங்களால் அதிக லாபம் அடைய முடியாது. எங்களது லாபம் எவ்வாறு அரசால் கட்டுபடுத்தப்படுகின்றதோ, அதே போல் எங்கள் இழப்பும் அரசால்தான் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அது தானே நியாயம்?
//

எனக்கென்னமோ இந்த முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றே தோன்றுகிறது.

விவசாயம் ஒரு தொழிலாக நடத்தப்பட வேண்டும். அரசாங்கம் விலை நிர்னயம் செய்ய கூடாது. சந்தை முடிவு செய்ய வேண்டும். அதற்கு முதலில் நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.அத்தியாவசிய சேவையாக அல்ல.

 
On Fri Aug 01, 12:35:00 AM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி வழிப்போக்கன்.

வழிப்போக்கன்,
நான் எனது உழவும் உழவர்களும் தொடரின் கடைசி பாகத்தில் ரொம்ப சீரியசாக எழுத இருந்த கருத்தை நீங்கள் மிக அருமையாக எழுதிவிட்டீர்கள்.

இது இன்று தகவல் தொழில் நுட்ப வேலைகளில் ஆணிபுடுங்கும் நம் போன்றோர்கு கற்பனையாக தோணலாம். ஆனால் இதுதான் அய்யா இன்னும் 20 ஆண்டுகளில் நடக்க இருக்கின்றது.

இன்று போகும் போக்கில் எல்லா விளைநிலங்களையும் வீடு கட்டவோ அல்லது தொழிற்சாலையாக்கவோ அல்லது சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கவோ அழித்து கொண்டே வருகின்றார்கள். மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டு இருக்கின்றது, ஆனால் விளைநிலங்கள் குறைந்து கொண்டே வருகின்றது. நீங்கள் எந்த வேலை செய்து வேண்டுமாணாலும் பொருள் ஈட்டலாம். ஆனால் உணவுக்கு ???? டாலரை உண்ண முடியுமா அல்லது அமெக்ஸ், விசா , மாஸ்டர் கடன் அட்டைகளை உண்ண முடியுமா?
சாப்பிட உணவு வேண்டும் தானே? விவசாயம் இல்லாமல் நம்மால் உணவு உண்ண முடியுமா? கட்டாயம் நீங்கள் இன்று எழுதியது நடக்கும் வழிப்போக்கன்.
இன்னும் சில வருடங்களில் விவசாயம் ஒரு கார்பரேட் தொழிலாக மாறிவிடும்.

 
On Fri Aug 01, 02:52:00 AM GMT+8 , வழிப்போக்கன் said...

ஜோசப்..

விவசாயிகளின் தற்கொலை மற்றும் Gujarat Jyotigram பற்றி இங்கே

https://www.blogger.com/comment.g?blogID=15577023&postID=5383837205870097760

ஒரு பின்னூட்டம் போட்டிருக்கேன்.. நேரம் கிடைக்கறப்ப பாருங்க. சில லிங்க்ஸ் கொடுத்திருக்கேன்.

இந்த செய்திகள் உங்களுக்கு முன்னாடியே தெரியும்னு நினைக்கிறேன். பகிர்ந்துக்கலாம்னு சொல்றேன்..

 
On Fri Aug 01, 04:38:00 AM GMT+8 , வழிப்போக்கன் said...

அத இன்னொரு பதிவா போட்டுட்டேன். வந்து பாருங்க.

 
On Fri Aug 01, 07:34:00 PM GMT+8 , Anonymous said...

ரொம்ப கஸ்டமான தொழில்...

 
On Fri Oct 17, 03:14:00 PM GMT+8 , ரவிச்சந்திரன் said...

ஜோசப்,

இந்த தொடரை முன்பே படித்துவிட்டேன். மிக தெளிவாக விவசாயிகளின் நிலைமயயை எழுதியிருக்கும் உங்களை பாரட்டியும் எனது கருத்துகளையும் எழுதலாம் என்றிருந்தேன். வழக்கம்போல் வேலை மற்றும் நீண்ட நாட்கள் கழித்து தமிழில் தட்டச்சு செய்வது ரொம்ப நேரம் ஆகிறது.

எனது மனமார்ந்த பாரட்டுக்கள். இதே தளத்தில் தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

 
On Mon Apr 05, 12:12:00 AM GMT+8 , *இயற்கை ராஜி* said...

அடுத்த பாகம் வருமா? வராதா:-(

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க