Author: ஜோசப் பால்ராஜ்
•12:29 AM
காதல் என்ற வார்த்தையை கூட எழுத்துக்கூட்டி சில பல பிழைகளுடன் படிக்கும் ஒரு பச்சிள‌ம் பாலகன் ஆகிய பால்ராஜ்ஜை இந்த தொடர் விளையாட்டில் மாட்டிவிட்ட அன்பு அண்ணண் அப்துல்லா வாழ்க.

அண்ணண் அப்துல்லாவின் பதிவை படித்தவுடன் பதறி அடித்துக்கொண்டு எழும் குரல் -‍ இது இன்னமும் மனதளவில் குழந்தையாகவே இருக்கும் பால்ராஜ் எழுப்புவது.

காதல் எனப்படுவது யாதெனில்னு ஒரு தலைப்பை குடுத்து வேற ஒன்னும் விவரமா சொல்லாம நம்மள எழுத சொல்லிட்டு போயிட்டாரே இந்த அப்துல்லா, நம்ம காதல் கதைய எல்லாம் எழுத ஆரம்பிச்ச அது உழவும் உழவர்களும் தொடர விட பெருசா போகுமே, எத எழுதுறது, எத விடுறது ?? - இது நம்ம ஜொசப் குரல்.

அடப்பாவி உன் மனைவி ஊர்ல இல்லங்குறதுனால நீ எல்லாத்தயும் சொல்லிடுவியா, அவங்க வந்தபின்னாடி உன் பதிவ எல்லாம் படிச்சா உனக்கு டின் கட்டிருவாங்கடினு ஒருத்தன் நடுவால இருந்து குரல் கொடுக்குறான், உத்து கேட்டாதான் தெரியுது அது நம்ம பெனடிக்ட்டோட குரல்.

( நல்ல வேளை இவனுக்கு ஜோசப் பெனடிக்ட் பால்ராஜ்னு மட்டும் பேரு வைச்சாங்க, இல்ல இவன் பாட்டுக்கு இந்த குரல் அந்த குரல்னு பதிவ நிரப்பிட்டு போயிருப்பான்னு நம்ம குசும்பன் குரல் கொடுப்பாரு, இருடி, அடுத்த ஆப்பு உனக்குத்தான்.)

ஆளாளுக்கு ஒரு குரல் கொடுத்துகிட்டு இருந்தா நம்ம அண்ணண் அப்துல்லாவுக்கு என்னா பதில் சொல்றதுனு நாங்க கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்து எழுதுவது யாதெனில்....

கவலைப்படாதிங்க, தொடரும் எல்லாம் போட மாட்டேன்.

காதல்...

அர்த்தமே புரியாத காலத்தில் இந்த வார்த்தை எனக்கு கெட்டவார்த்தை, ( அப்போ நான் விசயகாந்த ரசிகரு பாருங்க, ஏன்னா அவரு படத்துலதான் நிறைய சண்டை இருக்கும்).

10 ஆம் வகுப்பு படிச்சு முடிச்ச காலத்துலதான் நமக்கு காதலோட அர்த்தம் கொஞ்சம் கொஞ்சமா விளங்க ஆரம்பிச்சுது, ஆனா பாருங்க, அப்ப பார்த்த எல்லா பெண்ணையுமே பிடிச்சதே தவிர காதல்னு சொல்லிக்கிறமாதிரி எதுவும் வரலை.

அது இதுனு நிறைய படிச்சதுல , இதெல்லாம் இனக்கவர்ச்சினு புரிஞ்சுச்சு.
ஆனா பத்தாம்பு படிகிறப்பவே கல்யாணம்ணா அது காதலிச்சுத்தான்னு மனசுல ஒரு உறுதி வந்துருச்சு.

உன் பெற்றோரையோ, உடன்பிறப்புகளையோ, உறவினர்களையோ நீ தேர்ந்தெடுக்க முடியாது, இவையெல்லாம் உன்னை மீறியவை.
ஆனால் நண்பர்களையும், காதலியையும் மட்டும் நீயே தேர்ந்தெடுக்கலாம் .

இந்த தத்துவம்தான் காதல் திருமணம்தான் செஞ்சுக்கனும்னு என்னைய ரொம்ப தூண்டிய ஒன்று.

ஆன, படிச்சது எல்லாம் ஆண்கள் மட்டுமே படிக்கிற பள்ளிக்கூடத்துல, சரி கல்லூரிகாலத்துலயாவது பார்த்துக்கலாம்னு இருந்தா அங்கயும் நமக்கு வாய்ப்பு கிடைக்கல.

ஒரு வருடத்திற்கு 32000 ரூபாய் கட்டி படிக்கும் பிரிவில்( Government Payment Quota) பொறியியல் படிப்பிற்கு இடம் கிடைத்ததால், ஒழுங்கா படிச்சு அரசு ஒதுக்கீட்டுல (Merit Seat) இடம் வாங்க முடியாத உனக்கு பொறியியல் படிப்பு ஒரு கேடானு கேட்டு பி.எஸ்.ஸி இயற்பியல் பாடத்துல, அதுவும் ஆண்கள் மட்டுமே படிக்கும் பூண்டி புஷ்பம் கல்லூரியில படினு சொல்லி என் அண்ணண் சேர்த்துவிட்டதால என்னடா செய்யிறதுனு ஒரே சோகமா அந்த கல்லூரியில சேர்ந்த எனக்கு இருந்த ஒரே ஆறுதல் தஞ்சாவூர்ல இருந்து எங்க கல்லூரி வழியா திருவாரூர் போற புகை வண்டிதான்.

நாங்க போற அதே புகைவண்டியிலத்தான் எங்க கல்லூரியில இருந்து இரண்டு நிறுத்தம் தள்ளி இருக்க ஒரு பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளும் போவாங்க.

சாதரண கலைக்கல்லூரியில படிக்கிற நாம, ஒரு பொறியியல் கல்லூரி மாணவிய காதலிக்கனும்னா, நமக்குனு சில தனித்தகுதிகள் இருக்கனும்ல..
இதுனால பல பல தனித்தகுதிகள வளர்த்துகிட்டோம் பாருங்க..

எல்லாம் செஞ்சு என்ன உபயோகம், திடீர்னு இரயில்வே துறையினர் புகைவண்டியின் நேரத்தை மாத்தி சோதனை செஞ்சுட்டாங்க, இதனால ஒரே ரயில்ல போற அந்த ஒத்தை சந்தோஷமும் ஒன்றரை வருடங்களில் போயே போச்சு..

இந்த‌ ஒன்ற‌ரை வ‌ருட‌ங்க‌ளில் செந்தில் , ச‌ர‌வ‌ண‌ண் என்ற‌ என் இரு ஆருயிர் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து சென்சார்பால் என்ற‌ பெய‌ரில் ஒரு கையெழுத்து வார‌ இத‌ழை ஆர‌ம்பித்து வெற்றிக‌ர‌மாக‌ ந‌ட‌த்தினோம் என்ப‌து ஒரு த‌னிப்ப‌திவாக‌ போடும‌ள‌வுக்கு பெரிய‌ செய்தி. ( நாங்க‌ ஒன்னும் புதுசா எழுத‌ வ‌ர‌லை, அப்ப‌வே ஆர‌ம்பிச்சுட்டோம்!!).

இப்ப‌டியே க‌ழிந்த‌ என் க‌ல்லூரிக்கால‌ம் ஒரு முடிவுக்கு வ‌ந்து
சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவ‌ன‌த்தில் வேலைக்கு சேர்ந்தேன்.வேலைக்கு சேர்ந்து ச‌ம்பாதிக்க‌ ஆர‌ம்பித்துவிட்டாலும், வாழ்வின் ப‌ல‌ உண்மைக‌ள் தெரியாத‌,புரியாத‌ ப‌ருவ‌ம் அது.

என‌க்கு பிடித்த‌ பெண்ணிற்கு என்னை பிடிக்க‌வில்லை, என்னை விரும்பிய‌ பெண்களில் எவரையும் என‌க்கு பிடிக்க‌வில்லை .

வ‌ள்ளி ப‌ட‌த்துல‌ ர‌ஜினி சொல்ற‌ மாதிரி நாம‌க்கு பிடிச்சவங்களவிட , ந‌ம்ம‌ள‌ பிடிச்சவங்கள‌ ஏத்துகிட்டு இருந்துருக்க‌ணுமோ??????

என்னை விரும்பிய‌வ‌ர்க‌ளுட‌னும், நான் விரும்பிய‌ பெண்ணுட‌னும் இன்ற‌ள‌வும் ந‌ல்ல‌ ந‌ட்போடு இருப்ப‌தால் இத‌ற்கு மேல் என்னால் தெளிவாக‌ எழுத‌முடிய‌வில்லை . ( அவ‌ர்க‌ளோடு ந‌ல்ல‌ ந‌ட்பு இல்லாவிட்டாலும் அவ‌ர்க‌ளை ப‌ற்றி விரிவாக‌ எழுதுவ‌து நாகரீக‌மாக‌ இருக்காது என்ப‌துதான் என‌து நிலை).

எல்லாத்துக்கும் மேல தமிழகத்தில் சங்க இலக்கிய காலத்தில் இருந்தே இருப்பதாக சொல்லப்பட்டாலும், இன்று காதல் திருமணங்களை எல்லாப் பெற்றோரும் முழுமனதுடன் ஆதரிக்கின்றார்களா?

அன்றும், இன்றும் காலத்தால் அழியாத காதல் பாடல்களை பல திரைப்படங்களுக்கு எழுதியவரும், தன் கவிதை தொகுப்புகளில் எல்லாம் காதலை மிக உயர்வாக எழுதியவரும் கவிப்பேரரசு என்று அழைக்கப்படுபவருமான வைரமுத்துவின் மகன் கூட தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ள முதலமைச்சர் வீட்டிலிருந்து உதவியை எதிர்பார்க்க நேர்ந்தது என்றால், மற்றவர்கள் எல்லாம் ???

என்னை பொருத்தவரை காதல் என்பது எல்லோரையும் ஒரு குறிபிட்ட வயதில் தேடிவந்து கதவை தட்டும் ஒரு காற்று. அது க‌த‌வை த‌ட்டுவ‌து ஒரு இய‌ற்கை நிக‌ழ்வு. ( அறிவிய‌ல்ப‌டி இதை ஹார்மோன்க‌ளின் செயல்பாடு என்கிறார்க‌ள்.)

வெகுபலர் இந்த‌ க‌த‌வு த‌ட்டல் ஓசை கேட்டு வெகுண்டெழுந்து க‌த‌வை திற‌ந்து , காத‌லை வ‌ர‌வேற்று எல்லாவ‌ற்றிலும் காத‌லையே நிர‌ப்பி,ம‌ற்ற‌வையெல்லாம் இர‌ண்டாம்ப‌ட்ச‌ம் என்று க‌ருதி அந்நாளில் செய்ய‌வேண்டிய‌ ப‌ல‌வ‌ற்றை செய்ய‌ த‌வ‌றுகின்றார்க‌ள். ஒரு சில‌ர் இந்த‌ க‌த‌வு த‌ட்ட‌லை கேட்டாலும் கேட்காத‌துபோல் தாங்க‌ள் செய்ய‌ வேண்டிய‌ வேலையில் ஆழ்ந்து, சாதிக்க‌ வேண்டிய‌தை சாதிக்கின்றார்க‌ள்.

ஒன்று ம‌ட்டும் உண்மை. இப்ப‌டி முத‌ல் த‌ட்ட‌லின் போது காத‌ல் காற்றுக்கு க‌த‌வை திற‌க்காத‌வ‌ர்க‌ள், க‌த‌வை திற‌ந்த‌வ‌ர்க‌ளைவிட‌ ச‌ற்று அதிக‌மாக‌த்தான் சாதிக்கின்றார்க‌ள். காத‌ல் காற்று ஒரு முறை ம‌ட்டும் க‌த‌வை த‌ட்டுவ‌தில்லை. இவ‌ர்க‌ள் சாதித்த‌ப்பின் ச‌ற்று ப‌ல‌மாக‌வே இவ‌ர்க‌ளின் க‌த‌வை காத‌ல் த‌ட்டுகின்ற‌து.

என்னதான் பலமாக காதல் காற்று கதவை தட்டினாலும் , தாங்களே போய் கதவை திறக்காமல் பெற்றோரிடம் அந்த உரிமையை வேறு வழியின்றோ, அல்லது தாங்களாக விரும்பியோ ஒப்படைப்பவர்களும் உண்டு.

நாம‌ வாழ்க்கையில‌ செய்யிற‌ ப‌ல‌ த‌வ‌றுக‌ளுக்கு கார‌ண‌ம் என்ன‌னு யோசிச்சா, ஒன்னு முடிவெடுக்க‌ வேண்டிய‌ நேர‌த்துல‌ முடிவெடுக்காம‌ இருப்பது, இல்ல‌ முடிவெடுக்க‌ கூடாத‌ நேர‌த்துல‌ முடிவு எடுப்பது.இது தான் காரணமா இருக்கும்.
சரியான நேரத்துல சரியானத செய்யிறவங்களுக்கு காதல் மட்டும் இல்ல, எல்லாமே நல்லாத்தான் நடக்கும் .

"சீரியசான விஷயங்களைத் தவிர வேறு எதுவும் எழுதுவது இல்லை என சர்ச்சில் சத்தியம் செய்து வலைப்பூவைத் துவங்கி இருக்கும் "இன்டர்நெட் இங்கர்சால்'', வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும்''வலைத்தளத்தின் வள்ளலார்" அருமை அண்ணன் ஜோசப் பால்ராஜ் " என்றெல்லாம் எனக்கு அண்ணண் அப்துல்லா அடைமொழி கொடுத்ததை மெய்யாக்கும் வண்ணம் நானும் ரொம்ப சீரியசாத்தான் காதலைபத்தியும் எழுதிகிட்டு இருக்கேன்னு எனக்கெ தெரியுறதால ரொம்ப சுருக்கமா காதலை பத்தி நச்சுனு சொல்லிடுறேன்.

காதல்ங்கிறது ஒரு நெருப்பு மாதிரி, இத வச்சு விளக்கு ஏத்தி இருளையெல்லாம் அகற்றவும் செய்யலாம்,
வீட்டை கொளுத்தி எல்லாத்தையும் ஒரே நொடியில அழிக்கவும் செய்யலாம்,
சிகரெட்ட கொளுத்தி கொஞ்சம் கொஞ்சமா தன்னையே அழிச்சுக்கவும் செய்யலாம்.


காதல் நெருப்பு எல்லார் கைக்கும் வரும், அத வைச்சு என்ன செஞ்சோம், செய்யப்போறோம்கிறதுதான் விஷயமே.

குறிப்பு:காதல் நெருப்ப வைச்சு நீ என்னடா செஞ்சனு கேட்டு வரும் பின்னூட்டங்களுக்கு பதிலளிக்கப்படமாட்டாது.

இப்ப நான் யாரையாவது இந்த தொடர் விளையாட்டுல‌ மாட்டிவிடனும், நல்லா யொசிச்சு பார்த்ததுல, நீ வேண்டும், நீ வேண்டும் என்றென்றும் நீ வேண்டும் என்ற அழகான காதல் கதைய எழுதிகிட்டு இருக்க அருமை பதிவர் திவ்யாவை மாட்டிவிட்டா பொருத்தமா இருக்கும்னு தோணுது. இப்ப நான் தப்பிச்சுக்கிறேன். ( நாங்களும் தான்னு எல்லாம் குரல் கொடுக்க கூடாது அப்துல்லா அண்ணா)

டிஸ்கி: குசும்பணத்தான் மாட்டிவிடணும்ணு நினைச்சேன், மாட்டிவிட்டா இதவைச்சு கூட அவரு ஏதவது குசும்பு பண்ணுவாரு. அதுனாலத்தான் மிக அருமையா காதல் கதை எழுதிகிட்டு இருக்க திவ்யாவ மாட்டிவிட்டாச்சு.
Udanz
This entry was posted on 12:29 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

35 comments:

On Fri Jul 18, 12:20:00 PM GMT+8 , Sen22 said...

//நாம‌ வாழ்க்கையில‌ செய்யிற‌ ப‌ல‌ த‌வ‌றுக‌ளுக்கு கார‌ண‌ம் என்ன‌னு யோசிச்சா, ஒன்னு முடிவெடுக்க‌ வேண்டிய‌ நேர‌த்துல‌ முடிவெடுக்காம‌ இருப்பது, இல்ல‌ முடிவெடுக்க‌ கூடாத‌ நேர‌த்துல‌ முடிவு எடுப்பது.இது தான் காரணமா இருக்கும். //


Aurmaiyana Varigal.. 100% Unmai...

 
On Fri Jul 18, 12:51:00 PM GMT+8 , வழிப்போக்கன் said...

//இது இன்னமும் மனதளவில் குழந்தையாகவே இருக்கும் பால்ராஜ் எழுப்புவது//

:-))))

 
On Fri Jul 18, 12:53:00 PM GMT+8 , புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

பதிவு நல்லாருக்கு..முழுசா படிச்சிட்டு அப்புறமா வர்ரேன்

 
On Fri Jul 18, 01:22:00 PM GMT+8 , J J Reegan said...

// அர்த்தமே புரியாத காலத்தில் இந்த வார்த்தை எனக்கு கெட்டவார்த்தை, ( அப்போ நான் விசயகாந்த ரசிகரு பாருங்க, ஏன்னா அவரு படத்துலதான் நிறைய சண்டை இருக்கும்).//

அர்த்தமே புரியாத காலத்தில் இந்த வார்த்தை எனக்கு கெட்டவார்த்தை, ( அப்போ நான் விசயகாந்த ரசிகரு பாருங்க, ஏன்னா அவரு படத்துலதான் நிறைய சண்டை இருக்கும்).

 
On Fri Jul 18, 01:23:00 PM GMT+8 , J J Reegan said...

// அர்த்தமே புரியாத காலத்தில் இந்த வார்த்தை எனக்கு கெட்டவார்த்தை, ( அப்போ நான் விசயகாந்த ரசிகரு பாருங்க, ஏன்னா அவரு படத்துலதான் நிறைய சண்டை இருக்கும்).//


ஹோ... அப்போ உங்களுக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தை " காதல் "

 
On Fri Jul 18, 01:28:00 PM GMT+8 , தமிழினி..... said...

அருமையான பதிவு.......என் வலைபூவிற்கு வந்து பினூட்டம் போட்டதுக்கு ரொம்ப நன்றி ஜோசெப்..

 
On Fri Jul 18, 01:49:00 PM GMT+8 , J J Reegan said...

// நாம‌ வாழ்க்கையில‌ செய்யிற‌ ப‌ல‌ த‌வ‌றுக‌ளுக்கு கார‌ண‌ம் என்ன‌னு யோசிச்சா, ஒன்னு முடிவெடுக்க‌ வேண்டிய‌ நேர‌த்துல‌ முடிவெடுக்காம‌ இருப்பது, இல்ல‌ முடிவெடுக்க‌ கூடாத‌ நேர‌த்துல‌ முடிவு எடுப்பது.இது தான் காரணமா இருக்கும்.
சரியான நேரத்துல சரியானத செய்யிறவங்களுக்கு காதல் மட்டும் இல்ல, எல்லாமே நல்லாத்தான் நடக்கும் .//

சரியான நேரத்தில் வர்றதே இல்லையே....

 
On Fri Jul 18, 02:09:00 PM GMT+8 , J J Reegan said...

// காதல்ங்கிறது ஒரு நெருப்பு மாதிரி, இத வச்சு விளக்கு ஏத்தி இருளையெல்லாம் அகற்றவும் செய்யலாம்,
வீட்டை கொளுத்தி எல்லாத்தையும் ஒரே நொடியில அழிக்கவும் செய்யலாம்,
சிகரெட்ட கொளுத்தி கொஞ்சம் கொஞ்சமா தன்னையே அழிச்சுக்கவும் செய்யலாம். //

கடைசியாதான் டச் பண்ணிடீங்க....

ரொம்ப நல்லா இந்த பதிவ எழுதியுள்ளீர்கள்...

 
On Fri Jul 18, 05:52:00 PM GMT+8 , புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

இந்த தொடர் விளையாட்டில் மாட்டிவிட்ட அன்பு அண்ணண் அப்துல்லா வாழ்க.
//

நன்றி!நன்றி!நன்றி!

 
On Fri Jul 18, 05:54:00 PM GMT+8 , புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அண்ணண் அப்துல்லாவின் பதிவை படித்தவுடன் பதறி அடித்துக்கொண்டு//

பதிவுதான போட்டேன்? ஏதோ தந்தி வநத ரேஞ்சுக்கு ஏன் பதறுனீங்க?

 
On Fri Jul 18, 05:55:00 PM GMT+8 , புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

( நல்ல வேளை இவனுக்கு ஜோசப் பெனடிக்ட் பால்ராஜ்னு மட்டும் பேரு வைச்சாங்க, இல்ல இவன் பாட்டுக்கு இந்த குரல் அந்த குரல்னு பதிவ நிரப்பிட்டு போயிருப்பான்னு நம்ம குசும்பன் குரல் கொடுப்பாரு,//

குசும்பன் மட்டும் இல்ல ஊரே குரல் குடுத்து இருக்கும்

 
On Fri Jul 18, 05:56:00 PM GMT+8 , புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

நம்ம காதல் கதைய எல்லாம் எழுத ஆரம்பிச்ச அது உழவும் உழவர்களும் தொடர விட பெருசா போகுமே, எத எழுதுறது, எத விடுறது ?? -
//

ஹா!ஹா!ஹா!

 
On Fri Jul 18, 05:58:00 PM GMT+8 , புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

( அப்போ நான் விசயகாந்த ரசிகரு
//

நாங்கள்லாம் எப்பவுமே அண்ணன் ஜெ.கே.ரித்தீஷ் இரசிகர்கள்தான் :))

 
On Fri Jul 18, 05:59:00 PM GMT+8 , புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

உன் பெற்றோரையோ, உடன்பிறப்புகளையோ, உறவினர்களையோ நீ தேர்ந்தெடுக்க முடியாது, இவையெல்லாம் உன்னை மீறியவை.
ஆனால் நண்பர்களையும், காதலியையும் மட்டும் நீயே தேர்ந்தெடுக்கலாம் .
//

ஆஹா!ஆஹா!கவித...கவித..

 
On Fri Jul 18, 06:04:00 PM GMT+8 , புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

ஒரு வருடத்திற்கு 32000 ரூபாய் கட்டி படிக்கும் பிரிவில்( Government Payment Quota) பொறியியல் படிப்பிற்கு இடம் கிடைத்ததால், ஒழுங்கா படிச்சு அரசு ஒதுக்கீட்டுல (Merit Seat) இடம் வாங்க முடியாத உனக்கு பொறியியல் படிப்பு ஒரு கேடானு கேட்டு//

பசங்க மட்டும் படிக்கிற ஸ்கூல்ல படிச்சே ஒழுங்கா படிக்கலயாம். இதுல கோஎட்ல படிக்கலனு கவலை வேற..

 
On Fri Jul 18, 06:06:00 PM GMT+8 , புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

என்னை விரும்பிய‌வ‌ர்க‌ளுட‌னும், நான் விரும்பிய‌ பெண்ணுட‌னும் இன்ற‌ள‌வும் ந‌ல்ல‌ ந‌ட்போடு இருப்ப‌தால் இத‌ற்கு மேல் என்னால் தெளிவாக‌ எழுத‌முடிய‌வில்லை . ( அவ‌ர்க‌ளோடு ந‌ல்ல‌ ந‌ட்பு இல்லாவிட்டாலும் அவ‌ர்க‌ளை ப‌ற்றி விரிவாக‌ எழுதுவ‌து நாகரீக‌மாக‌ இருக்காது என்ப‌துதான் என‌து நிலை). //

நான் எழுதயிலயும் இதே பிரச்சனைதாண்ணே எனக்கும்

 
On Fri Jul 18, 06:07:00 PM GMT+8 , புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

முடிவெடுக்க‌ வேண்டிய‌ நேர‌த்துல‌ முடிவெடுக்காம‌ இருப்பது, இல்ல‌ முடிவெடுக்க‌ கூடாத‌ நேர‌த்துல‌ முடிவு எடுப்பது.//

பார்த்து..குசேலன்ல இத பஞ்ச் டயலாக்கா காப்பி அடுச்சுறப் போறாய்ங்க

 
On Fri Jul 18, 06:11:00 PM GMT+8 , புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

இப்ப நான் தப்பிச்சுக்கிறேன். ( நாங்களும் தான்னு எல்லாம் குரல் கொடுக்க கூடாது அப்துல்லா அண்ணா)
//


ச்சேசே!நான் அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன்.உண்மையில் நான் மிகவும் இரசித்து படித்தேன்.கேணத்தனமா எழுத என்னைய மாதிரி நிறைய பேரு இருக்கோம்.நீங்க உண்மையிலேயே மிகவும் நன்றாக எழுதுகின்றீர்கள்.தொடரட்டும் உங்க அற்புதமான எழுத்து நடை.வாழ்த்துகள்!

அப்புறம் உங்க வீட்ல எல்லாரையும் கேட்டதாக சொல்லுங்க குறிப்பா உங்க அண்ணன் டைட்டஸ் அவர்களை..

 
On Fri Jul 18, 07:23:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வருகை தந்து, பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

காதலை பற்றி ஏதுமறியா பச்சிளம் பாலகன் இவண் எழுதியதில் ஏதேனும் குறைகள் இருப்பின் மன்னியுங்கள்.

என்னை வகையாய் இந்த விளையாட்டில் மாட்டிவிட்டாலும், எனது பதிவை படித்துவிட்டு, வரிக்கு வரி பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப்படுத்திய என் அன்பு அண்ணண் அப்துல்லா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


ஆனால் உங்கள் கடைசி பின்னூட்டத்தில் எனதருமை அண்ணணைப்பற்றி கேட்டுள்ளீர்கள், உங்களுக்கு என் அண்ணணைத் தெரியுமா? எப்படி திடீரென்று கண்டுபிடித்தீர்கள்?

 
On Fri Jul 18, 10:11:00 PM GMT+8 , புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

எனதருமை அண்ணணைப்பற்றி கேட்டுள்ளீர்கள், உங்களுக்கு என் அண்ணணைத் தெரியுமா? //

எனக்கும் அவரைத் தெரியாது,அவருக்குமென்னைத் தெரியாது.

//எப்படி திடீரென்று கண்டுபிடித்தீர்கள்?//

ஒருவர் நம்மிடத்திலே நண்பராகிவிட்டால் அவரைப் பற்றி அனைத்தும் யாம் அறிவோம் :))

 
On Fri Jul 18, 10:49:00 PM GMT+8 , Known Stranger said...

hmmm nann ennatha pinotam podarthu paul. Podanuma ? athuvum intha postuku ? especially intha postuku ... athuvum unoda intha postuku ...

etho enaku therinjathu - kadal enapaduvathu yathenin.. athu oru feelings ..

Love is like
the wetness
left over in palm
when you tried to hold
the water.

Some know the art of holding it many dont know the art of holding or many a times water dont stay in the hands of beholder but the wetness remains after it escape through like the way it remains in you as LOVE.

etho enaku therinjathu ...

oru kadal ponall matronru varum.. mendum kadal varum.. like khamal said once in mirji FM radio.

anna antha fire matter than enaku puriyalla.. ella ena mathiri alluku athu puriyatho ? :D :P

 
On Sat Jul 19, 01:15:00 AM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

"முடிவெடுக்க‌ வேண்டிய‌ நேர‌த்துல‌ முடிவெடுக்காம‌ இருப்பது, இல்ல‌ முடிவெடுக்க‌ கூடாத‌ நேர‌த்துல‌ முடிவு எடுப்பது"

இது என்னோட சொந்த வசனம் இல்ல.
இது எனது இனிய தோழி சொன்னது. எனவே அதை குசேலனில் இல்ல, யாரு எங்க பயன்படுத்துனாலும் அதன் பெருமை முழுவதும் என் தோழியைத்தான் சேரும்.

ஆனால் அந்த நெருப்பு என்னோட சொந்த தத்துவம்... ரொம்ப உணர்ந்து எழுதுனது.

 
On Sat Jul 19, 02:27:00 AM GMT+8 , rapp said...

//அது இதுனு நிறைய படிச்சதுல , இதெல்லாம் இனக்கவர்ச்சினு புரிஞ்சுச்சு//
என்ன புத்தகங்கள் படிச்சீங்கன்னு தெளிவுபடுத்தரீங்களா :):):)

 
On Sat Jul 19, 02:30:00 AM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

rapp said...
//அது இதுனு நிறைய படிச்சதுல , இதெல்லாம் இனக்கவர்ச்சினு புரிஞ்சுச்சு//
என்ன புத்தகங்கள் படிச்சீங்கன்னு தெளிவுபடுத்தரீங்களா :):):)எல்லாம் ப‌த்தாம்பு ப‌டிச்ச‌ கால‌த்துல‌ ப‌டிச்ச‌ புத்த‌க‌ங்க‌ள், ஞாப‌க‌த்துல‌ இல்லை.
ஒன்னு தெரியுமா ராப், இப்டி எல்லாம் கேள்வி கேட்க்குற‌து ரொம்ப‌ சுலப‌ம்,
ப‌தில் சொல்ற‌துதான் க‌ஷ்ட‌ம். :( :( :(

 
On Sat Jul 19, 02:34:00 AM GMT+8 , rapp said...

சூப்பர் :):):)

 
On Sun Jul 20, 01:54:00 AM GMT+8 , Sen said...

"அணு அணுவாக
சாக முடிவெடுத்தப் பின்
காதல்
சரியான வழி.."

எங்கேயோ எப்போதோ படித்தது...

என்ன தான் எங்க தலை..
"காதல் ஒண்ணும் கடவுள் இல்லயடா..
அந்த எளவு எல்லாம்
hormon செய்யும் கலகம் தானடா.."
சொல்லிருந்தாலும்,

"நான் அழுது, என் சோகம் உன்னைத் தாக்கிடுமோன்னு நிணைக்கும் போது வர்ர அழுகை கூட நிண்ணுடுது..."
அதாங்க காதல்..

Its a feeling..

 
On Sun Jul 20, 01:56:00 AM GMT+8 , Sen said...

SenSarPal..
ஆரம்பிச்சதே figurea cover பண்ணத்தானே மச்சி...

 
On Sun Jul 20, 12:43:00 PM GMT+8 , வரவனையான் said...

ஆகா இது வேறா ஜோ??

 
On Sun Jul 20, 12:45:00 PM GMT+8 , Anonymous said...

இது வேறா ஜோ???


[ஜோ முதல் போட்ட பதிலை அழித்துவிடவும். தவறுதலா சமையல் ஐடியில் இருந்து போட்டுவிட்டேன்]

 
On Tue Jul 22, 11:10:00 AM GMT+8 , Divya said...

ஆஹா.....இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே:((

விரைவில் தொடர் பதிவை பதிவிட முயற்சி பண்றேன்.

 
On Tue Jul 22, 11:12:00 AM GMT+8 , Divya said...

\\முடிவெடுக்க‌ வேண்டிய‌ நேர‌த்துல‌ முடிவெடுக்காம‌ இருப்பது, இல்ல‌ முடிவெடுக்க‌ கூடாத‌ நேர‌த்துல‌ முடிவு எடுப்பது.\\

மிக சரியாக சொல்லியிருக்கிறீங்க:)

அழகான எழுத்து நடையில் அருமையான பதிவு,

உங்க அளவிற்கு என்னால தொடரை தொடர முடியுமான்னு தெரில,ஆனாலும்....முயற்சி பண்றேன்!!

 
On Tue Jul 22, 01:26:00 PM GMT+8 , கிரி said...

//என‌க்கு பிடித்த‌ பெண்ணிற்கு என்னை பிடிக்க‌வில்லை, என்னை விரும்பிய‌ பெண்களில் எவரையும் என‌க்கு பிடிக்க‌வில்லை //

எனக்கு ஒரு பெண்ணை விடாம எல்லாமே ஓகே ஹி ஹி ஹி ஆனா அந்த பக்கம் தான் நிலைமை சரி இல்ல :-))))

//என்னை விரும்பிய‌வ‌ர்க‌ளுட‌னும், நான் விரும்பிய‌ பெண்ணுட‌னும் இன்ற‌ள‌வும் ந‌ல்ல‌ ந‌ட்போடு இருப்ப‌தால் இத‌ற்கு மேல் என்னால் தெளிவாக‌ எழுத‌முடிய‌வில்லை //

இப்படி சொல்லிட்டீங்களே :-)) பேரை மாற்றி போட்டு முயற்சி செய்து பாருங்க

 
On Tue Jul 22, 09:19:00 PM GMT+8 , Anonymous said...

அருமையான பதிவு.

உண்மை காதலுக்கு முடிவே இல்லை- க‌ல்யாண‌ம்
பண்ணா விட்டால் கூட‌.

 
On Fri Jul 25, 04:23:00 PM GMT+8 , Anonymous said...

/வ‌ள்ளி ப‌ட‌த்துல‌ ர‌ஜினி சொல்ற‌ மாதிரி நாம‌க்கு பிடிச்சவங்களவிட , ந‌ம்ம‌ள‌ பிடிச்சவங்கள‌ ஏத்துகிட்டு இருந்துருக்க‌ணுமோ/

இந்த வசனமெல்லான் நடைமுரைக்கு சரிப்படாது. இரண்டு பேருக்குள்ளயுமே பரஸ்பர காதல் இருக்கனும்.ஒருத்தர்க்கு பிடித்து இன்னொருவர்க்கு பிடிகலைனா விட்ரவேண்டியதுதான்

 
On Tue Aug 19, 05:55:00 PM GMT+8 , Karthik said...

ரொம்ப நல்ல பதிவு.

//குறிப்பு:காதல் நெருப்ப வைச்சு நீ என்னடா செஞ்சனு கேட்டு வரும் பின்னூட்டங்களுக்கு பதிலளிக்கப்படமாட்டாது.

இதைத் தான் கேட்கனும்னு நினைத்தேன்.
:)

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க