Author: ஜோசப் பால்ராஜ்
•5:29 PM
உழவும் உழவர்களும் - 1
உழவும் உழவர்களும் - 2

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டோம்என் பார்க்கும் நிலை.


முந்தைய இரு பாகங்களையும் படித்துவிட்டு கருத்துகளை எழுதிய அனைவருக்கும் நன்றிகள்.

சரி வாருங்கள், நாம் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகங்களினால் நடத்தப்படும் நேரடிக் கொள்முதல் நிலையங்களை பார்ப்போம்.

அறுவடை நேரங்களில் எல்லா ஊர்களிலும் தற்காலிகமாக நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பார்கள்.

நமது நெல் மூட்டைகளை எடுத்துக்கொண்டு இங்கு போய் காத்திருக்க வேண்டும்.
இங்கு நமது நெல்லை விற்க, நெல்லில் கட்டாயம் 18% க்கு மேல் ஈரப்பதம் இருக்க கூடாது. ஈரப்பதம் அதிகமாக இருந்தால் கட்டாயம் காயவைத்துக்கொண்டுதான் வரவேண்டும்.

ஈரப்பதம் எல்லாம் சரியாக இருந்து எடை போட வருகின்றாகள் அங்கு நடக்கும் ஒரு அநியாய கொள்ளை.இவர்களும் தங்கள் தராசில் தில்லுமுல்லு செய்து ஒரு மூட்டைக்கு 2 கிலோ வரை அதிகமாக வைத்து எடுப்பார்கள்.

இப்படி நம்மிடம் அதிகமாக எடுக்கும் நெல்லை எல்லாம் மூட்டையை தைக்கும் முன்னர் அளந்து எடுத்து, அங்கு வேலை செய்பவர்கள் எல்லாம் தங்களுக்குள் பிரித்துக் கொள்வார்கள். இது முதல் கொள்ளை.

இதை தடுக்க அரசு சென்ற ஆண்டு மின் தராசுகளை தந்தும்கூட பல இடங்களில் இன்னும் அதை உபயோகிக்க ஆரம்பிக்கவில்லை. சாதாரண தராசுகளில்தான் எடை போடுகின்றார்கள். மின் தராசுகளில் தில்லுமுல்லு செய்ய முடியாது என்பதால்தான் இப்படி.

அடுத்து, நெல்லை எடுத்துக்கொண்டபின் காசு கொடுக்கும் இடத்தில் முழுபணத்தையும் தராமல் கட்டாயமாக மூட்டைக்கு 15 ரூபாய் எடுத்துக்கொண்டுதான் தருவார்கள்.

இதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள், கிராமங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் இருந்து, கிடங்குகளுக்கு நெல்லை ஏற்றிச்செல்ல வரும் வாகனங்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும், சிந்தும் நெல்லுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும், அது இது என்று ஆயிரம் காரணம் சொல்லுவார்கள்.

முன்பு நெல்கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டையின் எடை 71கிலோ. ஒரு 71கிலோ மூட்டைக்கு 15ரூபாய் கொள்ளையடிப்பார்கள். தற்போது ஏற்றி இறக்கும் வசதிக்காக ஒரு மூட்டைக்கு 35 கிலோ என எடை வைத்து எடுக்கின்றார்கள். தற்போது ஒரு 35கிலோ மூட்டைக்கு 8ரூபாயில் இருந்து 10ரூபாய் வரை கொள்ளை.

ஒரு ஏக்கர் விவசாயம் செய்த ஒரு உழவருக்கு ஒரு ஏக்கருக்கு 45 மூட்டைகள் ( ஒரு மூட்டைக்கு 60 கிலோ) விளைகின்றது எனக்கொண்டால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இவர்கள் ஒரு மூட்டைக்கு நியாயமாக வைக்க வேண்டிய 36 கிலோ என்ற கணக்கில் வைத்தால் நம்மவருக்கு 75 மூட்டைகள் வரும். ஆனால் மூட்டைக்கு இரண்டு கிலோ கொள்ளையடிக்கப்படுவதால் நம்மவருக்கு கிடைப்பதோ 71 மூட்டைகள் தான்.



மேலும் இந்த 71 மூட்டைகளுக்கு ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் வீதம் எடுத்துக்கொண்டாலும் நம்மவர் இழப்பது 710 ரூபாய்.

தற்போது அரசு நெல்லுக்கு அறிவித்துள்ள விலை குவிண்டாலுக்கு 1000 ரூபாய். இந்த விலையையே நம் கணக்கீட்டிற்கு பயன்படுத்தினால் நேரடி கொள்முதல் நிலையத்தில் நம்மவருக்கு ஒரு மூட்டைக்கு 350ரூபாய் கிடைக்கும் .

சரி நம்மவர் 4 மூட்டைகளை எடைபோடுவதில் நடந்த கொள்ளையில் இழந்தாரல்லவா? அதற்கு 4 X 350 = 1400.

ஆக ஒரு ஏக்கருக்கு நம்மவர் இழப்பது 2110.

இத்தொடரின் முதல் பாகத்தில் நாம் பார்த்தபடி ஒரு ஏக்கருக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய 10800 ரூபாய் லாபத்தில் இப்படி 2110 ரூபாயை இழந்துவிட்டால் இவர்களுக்கு மிஞ்சுவது 8690 மட்டுமே.

உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பார்கள், அது உண்மைதான் என்பது இப்போதாவது புரியும் என்று நினைக்கின்றேன்.

ஆக இது ஒழுங்காக தண்ணீரெல்லாம் கிடைத்து, இயற்கை சாதகமாக இருந்து, நன்கு விளைந்தால் மட்டும் கிடைக்கும் லாபம் இது.

இயற்கை சீற்றம், மற்றும் காவிரி நதி நீர் பிரச்சனை போன்றவை ஏற்படும் காலங்களில் ??????

அடுத்த பாகத்தில் தொடர்கின்றேன். Udanz
This entry was posted on 5:29 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments:

On Sun Jul 13, 02:27:00 AM GMT+8 , Anonymous said...

"உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பார்கள், "

உண்மையிலும் உண்மை. நானும் விவசாயக்குடும்பத்தில் இருந்து வந்தவன் தான். ஆனால் எனக்கு இப்படியெல்லாம் எழுதவேண்டும் எனத்தோணவில்லை. தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் எழுத்து எல்லோரையும் சென்றடைய வேண்டும்.

 
On Sun Jul 13, 02:30:00 AM GMT+8 , Anonymous said...

இவ்வளவு கொள்ளையா ? இதையெல்லாம் எந்த விவசாயியும் எதிர்பதில்லையா? கட்டாயம் கீழ இருக்கவன் வாங்குற லஞ்சம் மேல வரைக்கும் போகும், அரசாங்கம் இதையெல்லாம் ஒழிக்க நடவடிக்கை எடுக்காது. இதை தடுக்க வழியே இல்லையா?

 
On Sun Jul 13, 02:45:00 AM GMT+8 , Anonymous said...

paul, you are writing very nicely about farmers. I don't know anything about agriculture. But from your posts getting much informations about agriculture. keep writing. Government should take strict actions against those who take farmer's money, and should hang them to death.

 
On Sun Jul 13, 02:48:00 AM GMT+8 , Anonymous said...

சுமதி சொல்லியுள்ளபடி தூக்கில் எல்லாம் போடக்கூடதுங்க. இப்படி வெயில்லயும், மழையிலயும் உழைச்சு கொண்டுவர்ற விவசாயிகிட்டகூட கொள்ளையடிக்கிறவனுங்கள எல்லாம் ஓட ஓட விரட்டி, கல்லால அடிக்கனும்.

 
On Sun Jul 13, 02:54:00 AM GMT+8 , Anonymous said...

இவ்வளவு கொடுமைகளா? பாவம் விவசாயிகள். இதனாலத்தான் விவசாய நிலம் எல்லாம் பிளாட் போட்டு விக்கிறாங்க போல இருக்கு. பாவம் விவசாயிங்க, எவ்வளவு நாளுக்குத்தான் அவங்களும் இப்படியே கஸ்டப்படமுடியும்?

 
On Mon Jul 14, 08:17:00 PM GMT+8 , Ken said...

பதிவு செய்ய வேண்டிய கட்டாயங்க, நீங்க செய்து இருப்பதற்கு வாழ்த்துகள் தொடருங்கள்

 
On Mon Jul 14, 08:23:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

நன்றி கென்.,
நீங்கள் எந்த ஊர்? உங்கள் கருத்துக்களை கட்டாயம் சொல்லுங்கள்.
எனது தொடர் நம்மவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும்.
குறைந்த பட்சம் நம் நெல்லுக்கு கூடுதல் விலை கிடைக்க வேண்டும், இடையில் நமது உழைப்பை கொள்ளையடிக்கும் கும்பல்களை ஒழித்து நம்மவர்களுக்கு உழைப்பின் பலன் முழுதுமாய் போய் சேரவேண்டும்.

தொடர்ந்து படியுங்கள். நன்றி.

 
On Mon Jul 14, 08:52:00 PM GMT+8 , Syam said...

//உங்கள் எழுத்து எல்லோரையும் சென்றடைய வேண்டும்//

என்னுடைய எண்ணமும் அதேதான்

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க