Author: ஜோசப் பால்ராஜ்
•12:28 AM
இறை நம்பிக்கை என்ற ஒன்றை எந்த விஞ்ஞானப்பூர்வ ஆராய்சிகளுக்கும் உட்படுத்தாது வேதங்களில் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழும் ஆத்திகர்களின் எதிரி யார், இவர்கள் முதலில் களையெடுக்க வேண்டியது யாரை? மதத்தை காக்க நினைப்பவர்கள், மதத்தை வளர்க்க நினைப்பவர்கள் செய்ய வேண்டியது என்ன?

எல்லா வேதங்களையும் அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து, கேள்விகளைக் கேட்டு , அலசி ஆராய்ந்து உங்கள் வேதங்கள் எல்லாம் பொய் என்று சொல்லும் நாத்திகர்கள் தான் மிகப்பெரிய எதிரிகள் என்றா நினைக்கின்றீர்கள் ?

இன்றும் ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்றும் போலிச் சாமியார்கள் தான், நாத்திகத்தை வளர்க்க உதவுகிறார்கள். வாயிலிருந்து லிங்கம் எடுப்பது ஒரு மிகப் பெரிய மகானால் மட்டும் தான் முடியும் என்று கூறப்பட்டபோதுதான் நாத்திகவாதிகள் அதை பொய் என்று தாங்களே அதை செய்து காட்டினார்கள். முதலில் நம்மீது உள்ள குற்றங்களை களைந்து விட்டோம் என்றால் நாத்திகர்களுக்கு வேலையே இல்லாமல் செய்து விடலாம் தானே?

இன்றைக்கு கடவுளுக்கு எதிராக கருணாநிதி எதையாவது கூறினால் தலையை எடுக்க வேண்டும் என்று குதிக்கும் மதவாதிகள், கோயில் கட்டி , ஆசிரமம் அமைத்து கடவுளை வியாபாரப்பொருளாக்கி காசு பார்க்கும் போலி மதவாதிகளை ஏன் எதிர்க்க முன்வருவதில்லை?
நாத்திகர்கள் ஆத்திகர்களுக்கு எதிரிகள் என்றால் இந்த போலிகள் எல்லாம் அவர்களுக்கு துரோகிகள் அல்லவா?

எதிரியைக் கூட நம்பலாம் ஆனால் துரோகியை நம்பக்கூடாது என்று சொல்வார்கள். ஆகவே முதலில் ஒழிக்கப்பட வேண்டியது இந்த துரோகிகளைத்தானே?
வித விதமாக மக்களை ஏமாற்றும் இந்த போலிகளை ஏன் எந்த வேதாந்தியும் எதிர்பதில்லை? ஏன் எந்த இராம கோபலனும் கண்டுகொள்வதில்லை? கருணாநிதி ஏதாவது சொல்லிவிட்டால் மட்டும் உடனே எதிர்க்க ஓடோடி வருகின்றார்களே ஏன் ? கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகர்கள் இதுவரை எந்த மசூதியையும் இடிக்கவில்லை, எந்த கோயிலையும் உடைத்ததில்லை, யாரையும் தீயிலிட்டு கொளுத்தவில்லை. கர்பிணி என்று கூட பாராமல் வெட்டி கொன்றதில்லை, எந்த நகரிலும் கலவரத்தில் ஈடுபடவில்லை, எங்கும் வெடுகுண்டு வைத்ததும் இல்லை. சக உயிர்களை துன்புறுத்தியதில்லை. ஆனால் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துங்கள் என்பதைத் தான் எல்லா மதங்களும் போதித்த போதிலும், கடவுளின் பெயரைச் சொல்லித்தான் பல கலவரங்களும், குண்டுவெடிப்புகளும், கொலைகளும், கற்பழிப்புகளும் நடக்கின்றன. கடவுளின் பெயரைச் சொல்லிக்கொண்டு கலவரத்தில் ஈடுபடுவதைவிட கடவுளை மறுப்பவர்கள் ஒன்றும் கடவுளை இழிவுபடுத்திவிடவில்லை.
எந்த மதம் கொலையையும், கலவரத்தையும், கற்பழிப்பையும் செய்ய சொல்லியிருக்கின்றது? உண்மையான கடவுள் பக்தன் எவனும் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

போலி சாமியார்கள் எப்படி ஆத்திகத்தின் துரோகிகளோ, அதேப் போல் ஆத்திகத்தின் சில குறைபாடுகளும் நாத்திகத்தை வளர்க்க உதவுகின்றன.
சாதி வேறுபாடு, பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் போன்றவை இதில் அடங்கும். பயிரோடு வளரும் களையை விட்டு விட்டு எங்கோ பக்கத்து வயலுடன் ஏன் சண்டையிட வேண்டும்?

இதற்காக கடவுள்களை இழிவாக பேசும் செயலை நான் ஆதரிக்கவில்லை. கடவும் நம்பிக்கை என்பது ஒருவரின் தனிபட்ட உரிமை. எல்லா மதங்களும் இறைவனை நோக்கி செல்லும் வெவ்வேறு வழிகளே, இறைவன் ஒருவனே, எல்லா மதங்களும் அந்த ஒரே இறைவனுக்கு வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றார்கள் என்பது தான் மதம் குறித்த எனது பார்வை. இப்படி ஒரு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் எந்த மத வழிபாட்டுதலங்களுக்கு சென்றாலும், உங்களால் ஆழ்ந்து வழிபட முடியும். கடவுளை மறுப்பதும் ஒரு நம்பிக்கையே, அது அவர்களின் உரிமை.
எனது உரிமையில் நீ தலையிடாமல் உன் உரிமையை அனுபவித்துக்கொண்டு இரு என்று எல்லோரும் நினைத்தால் மகிழ்ச்சி எல்லோருக்கும் என்றும் நிலைத்திருக்கும். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•6:18 PM
சமீபத்தில் ஜல்லிகட்டு நடத்த அனுமதிக்கனும்னு கேட்டு ஒரு பிரிவும் , அனுமதிக்க கூடாதுனு சொல்லி பிராணிகள் நலச்சங்கமும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள்.தலைப்புக்கு போவதற்கு முன்னாடி இந்த பிராணிகள் நல சங்கத்தாரின் மகத்தான சேவையை பற்றி கொஞ்சம் சொல்லியே ஆக வேண்டும். (இதற்காக தனிப்பதிவே போடலாம் என்றாலும், இங்கு சொல்வது தான் அவர்களின் சேவையை எடுத்துறைக்க உதவும்).

சில காலங்களுக்கு முன்பு வரை எல்லா ஊர்களிலும் தெருவில் திரியும் தெரு நாய்களை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் பிடித்து கொன்று விடுவார்கள். நாய்களை கொல்வது கூட அவற்றை மிகவும் துன்புறுத்தாமல் விஷ ஊசி போட்டு தான். இதன் மூலம் தெரு நாய்களின் எண்ணிக்கை மட்டுபடுத்தப்பட்டு, மக்கள் பயமில்லாமல் தெருக்களில் நடமாட முடிந்தது. ஆனால் இப்படி நாய்கள் கொல்லப்படுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றனர் நம் மாண்பு மிகு பிராணிகள் நல சங்கத்தினர். வாழ்க இவர்களின் பிராணிகள் மீதான பாசம், ஆனால் இதனால் நடந்தது என்ன? கட்டுபடுத்த முடியாத அளவுக்கு பெருகிபோன தெருநாய்களால் கடித்து குதறப்பட்டு உயிர் விட்டவர்கள், படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொல்லப்படும் பிராணிகளுக்காக குரல்கொடுக்கவும் போராட்டம் நடத்தவும் இவர்கள் உள்ளார்கள், ஆனால் வெறிநாய்களால் பாதிக்கப்பட்ட அப்பிராணி மனிதர்களுக்கு குரல் கொடுக்க ???????

பொது நல வழக்குகள், போராட்டங்கள் எல்லாம் சமூக நன்மைக்காகவும் , மக்களின் சவுகரியத்திற்காகவும் பாடுபட வேண்டுமே தவிர, மக்களை துன்பத்தில் தள்ளவும், மக்கள் பணத்தை வீணாக்கவும் உதவக்கூடாது. ஆனால் இந்த வெறிநாய் விஷயம் என்ன செய்தது? நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்கிறார்களாம், கண்ணு முன்னாடி தெரியிற சாலைகளிலேயே, புதிதாய் சாலை அமைத்து விட்டதாக கூறிவிட்டு , எந்த வேலையும் செய்யாமலேயே மக்கள் பணத்தை அமுக்கிவிடும் நமது அரசியல்வாதிகளுக்கு நாய்களுக்கு கு.க. திட்டம் எல்லாம் பணம் காய்க்கும் மரங்களத்தானே தோன்றும்? இதுவரைக்கும் எத்தனை கோடி வீணா போச்சோ தெரியல.

நாய்களை கொல்லாமலும், அவற்றுக்கு கு.க. செய்கிறோம் என்று மக்கள் பணத்தை வீணாக்காமலும், தெரு நாய்களால் மக்களுக்கு தொந்தரவு ஏற்படாமலும் காக்க ஒரு நல்ல வழி என்னவென்றால், எல்லா ஊர்களிலும் சுற்றித்திரியும் தெரு நாய்களையும் பிடித்து அந்தந்த ஊர்களில் இருக்கும் பிராணிகள் நலச்சங்க உறுப்பினர்களின் பொறுப்பில் விட்டுவிடலாம். இவர்கள் அந்த நாய்களை பொதுவான ஓர் இடத்திலோ அல்லது அனைத்து உறுப்பினர்களும், ஒருவருக்கு இத்தனை நாய் என்று சமமாக பிரித்துகொண்டு தங்கள் வீட்டிலோ இவற்றை பராமரிக்கலாம். ஆனால் அவர்கள் பொறுப்பில் இருக்கும் நாய்கள் வெளியில் வந்தால் பொறுப்பாளர் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள பிராணிகள் நலச்சங்கத்தினர் தயாரா?

நாய் கடிச்சா உடனே ரேபிஸ் நோய் தடுப்பு ஊசி போடணும், இத தனியார் மருத்துவ மனைகளில் போடணும்னா அதுக்கு நிறைய செலவாகும், ஏழை மக்கள் அரசாங்க மருத்துவமனைகளுக்கு போனா, அங்க, கடிச்ச நாயோட லைசென்ஸ கொண்டு வா, ரேஷன் கார்டு கொண்டு வான்னு எல்லாம் சொல்றாங்களாம். கடிச்சது தெரு நாய்னா, அதோட லைசென்ஸ்கு எங்க போறது ? இருக்குற தொல்லைல ஏழைகளுக்கு இதெல்லாம் வேற தேவையா? இதப்பத்தியெல்லாம் பிராணிகள் நலசங்கம் யோசிக்காதா?

நாட்டில் ஆயிரமாயிரம்பேர் உண்ண உணவின்றி வறுமையில் வாடுகின்றனர். உறங்க இடமின்றி நடைபாதைகளில் தூங்குகின்றனர். ஓட்டுநரின் போதையாலே, அல்லது வாகனத்தின் கோளாறாலோ எத்தனை நடைபாதை வாசிகள் கொல்லப்பட்டுள்ளனர், சமீபத்தில் கூட ஒரு பணக்கார வீட்டு சிறுவன் கார் ஓட்டி பலரை சாகடித்தான் அல்லவா, இதையெல்லாம் கேட்க ஒரு அமைப்பும் இல்லையே, ஏன்? பிராணிகளைவிட கேவலமானவர்களா இவர்கள் ?

நடைபாதையில் இருக்கும் மக்களைப்பற்றியோ, அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது பற்றியோ எந்த அக்கரையும் காட்டாத நல சங்கங்கள் பிராணிகளுக்கு ஆதரவாக வழக்காடுவது பணத்தையும், நேரத்தையும் வீணடிக்கும் செயல்களாகத்தான் எனக்கு படுகிறது. ஜல்லிகட்டுக்காக நீதிமன்றத்தில் பொதுநல(???) வழக்கு தொடுப்போர், நீதிகிடைக்காமல் தவிக்கும் ஏழைகளுக்காக வழக்கு தொடுக்கலாமே, வசதிமிக்க ஒரு குடும்பத்தை சேர்ந்த சிறுவனின் செயலால் உயிர் இழந்த நடைபாதைவாசிகளின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க உதவலாமே?

பிராணிகளின் மீதான இவர்களின் பாசத்தையும், அதற்காக இவர்கள் நடத்தும் போராட்டங்களையும் பார்கையில், தமிழ் ஈழம் தந்த மாபெரும் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் ஒரு கவிதைதான் நினைவுக்கு வருகிறது.
"வேலைக்காரன்மேல் பாய்ந்தார்
நாயே பீட்டரை கவனித்தாயா?
இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய்
நாய் என்றால் மனிதன்."
சரி எப்பதான்டா நீ ஜல்லிகட்டுக்கு வரபோறனு கேட்குறவங்களுக்கு:
அட, போங்கப்பா, வேலை வெட்டி இல்லாதவங்க எல்லாம் தான் ஜல்லிகட்டு வேணுமா வேண்டாமானு அடிச்சுகிட்டு இருக்காங்கன்னா, நாமளும் அதையே செய்யணுமா என்ன?
Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க