Author: ஜோசப் பால்ராஜ்
•7:34 PM
படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி என்று தனது வலைக்கு தலைப்பு வைத்து எழுதும் அன்பர் ப்ளீச்சிங் பவுடர் அவர்கள் சமீபத்தில் ஒரு பதிவெழுதியிருந்தார் ,தமிழீழம் மலர்ந்தால் - நாளை தமிழகத்தின் கதி?? என்ற அந்தப் பதிவிற்கு ஒரு விளக்கம்.

காஷ்மீரையும், தமிழ் ஈழத்தையும் ஒரு போதும் ஒப்பிடவே முடியாது. இந்தியாவில் காஷ்மீர் மக்களுக்கு நாம் அளித்துள்ள உரிமைகளும், சுதந்திரமும் மற்ற மாநிலங்களில் இருக்கும் நமக்கு இல்லை. ஆனால் ஈழத்தில் கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்திலும் தமிழர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு இழிவுபடுத்தப்பட்டமையால் தான் போராட்டமே ஆரம்பித்தது. இன ஒழிப்பை ஒரு அரசாங்கமே முன்னெடுத்து செய்வதால் தான் தமிழர்கள் அறவழியில் ஆரம்பித்து பலன் ஏதுமில்லாதமையால் ஆயுத போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அஹிம்சை வழிப் போராட்டம் என்பது ஒரு போராட்டமே அல்ல. அஹிம்சையால் எந்த பலனும் இல்லை என்பதற்கு இந்தியாவை தவிர வேறெங்கும் சென்று நாம் உதாரணம் தேட வேண்டியதுமில்லை.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தமைக்கு காரணம் அஹிம்சை வழிப் போராட்டம் மட்டுமே என்று நினைத்தால் அது தவறு. 1947ஐ ஒட்டிய ஆண்டுகளில் இந்தியா மட்டுமா சுதந்திரம் அடைந்தது? இலங்கை, மலேசியா என ஆசியாவிலேயே பல நாடுகள் சுதந்திரம் அடைந்தனவே அந்த நாடுகளுக்கு ஏன் ஆங்கிலேயர்கள் சுதந்திரமளித்தார்கள்? அங்கெல்லாம் ஆயுதப் போராட்டத்தை எதிர்க்க முடியாமல் சுதந்திரமளித்தார்களா அல்லது அங்கும் அஹிம்சை போராட்டம் நடந்ததா?

உண்மையான காரணம் என்னவென்றால் 1945ல் நிறைவு பெற்ற இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயர்களின் அணி வெற்றியடைந்திருந்தாலும், போரினால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் மிக அதிகம். பெருமளவில் மனித வளத்தை அவர்கள் இழந்திருந்தமையால் அவர்களது காலணி நாடுகளை நிர்வகிக்க அவர்களுக்கு போதுமான மனித வளம் இல்லாமையால் அந்தக் காலகட்டத்தில் பல நாடுகளுக்கு விடுதலை அளித்தார்கள் என்பதே உண்மை. ஒரு வேளை ஆங்கிலேயர்கள் போரில் தோல்வியடைந்து ஜப்பான், ஜெர்மனி கூட்டணி வெற்றியடைந்திருந்தால் காந்தியடிகளுக்குப் பதிலாக சுபாஷ் சந்திர போஸ் அவர்கள்தான் நம் தேசத் தந்தையாகியிருப்பார்.

ஆங்கிலேயர்கள் அல்ல அஹிம்சையை உலகிற்கு அளித்த இந்தியாவும் சேர்த்து யாரும் அதற்கு மரியாதை அளித்ததுமில்லை, அளிக்கப் போவதுமில்லை. அஹிம்சைக்கு இந்தியா மரியாதை அளிப்பதாய் இருந்தால் ஈழத்தில் உண்ணா நோன்பிருந்த திலீபனும், பூபதி அண்ணையும் இறந்திருக்க மாட்டார்களே.

காஷ்மீரில் நடப்பது அயல்நாட்டு தீவிரவாதம், அங்கு நடப்பது அந்நிய சக்திகளாலும் அவர்களது உதவியால் இயங்கும் கைகூலிகளாலும் நடத்தப்படும் தீவிரவாதம் . ஆனால் தமிழ் ஈழத்தில் நடப்பது விடுதலைப் போராட்டம். தீவிரவாதத்திற்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்.

தமிழகத்தில் இருப்போர் ஈழத்தை ஆதரிக்க காரணம் சகத் தமிழன் ஈழத்தில் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இன்னல்களும், அவலங்களும் தான். மனிதனாய் இருப்பவர்களுக்கு இயல்பாய் இருக்கும் மனிதாபிமானத்தால் உந்தப்பட்டு எழும் உணர்வுதான் இந்த ஆதரவு. என்ன தான் இதை அரசியல்வாதிகள் காவிரி, முல்லைப் பெரியாறு போல அரசியலாக்கினாலும், மக்கள் மனதில் இருப்பது சக தமிழனின் மேல் உள்ள அன்புதான்.

எந்த தமிழனும் நாளை தமிழ் ஈழம் மலர்ந்தால் தமிழ் நாட்டைப் பிரித்து தமிழ் ஈழத்துடன் இணைய வேண்டும் என்று சொல்ல மாட்டான். உங்கள் மனதில் இப்படி ஒரு எண்ணம் வந்திருப்பது உங்கள் வலைப்பூவின் தலைப்பைத் தான் நினைவு படுத்துகின்றது.

ராஜிவ் கொலையையும், ஈழத் தமிழர்கள் பிரச்சனையையும் ஒப்பிட்டுக் கொண்டே இருப்பது மிகப் பெரிய மடத்தனம் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. அதுகுறித்து விவாதிக்க ஆரம்பித்தால் அது ஒரு வட்டம் போல தொடக்கமும் முடிவும் இன்றி சுத்திக் கொண்டே தான் இருக்கும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி , தங்களுக்கு மனிதாபிமானமே இல்லை என்பதை மறைக்க வேண்டுமாணால் அந்த வாதம் உதவும்.

தமிழ் ஈழம் மலர வேண்டியது காலத்தின் கட்டாயம். இங்கும் சில அறிவு ஜீவிகள் தங்கள் திறமையை காட்ட விழைவார்கள், தமிழ் ஈழம் மலர வேண்டும் ஆனால் புலிகள் கையில் அது இருக்க கூடாது என்பார்கள். ஈழத்தின் வரலாற்றை சற்று ஆழமாகப் படித்துப் பார்தீர்களேயானால் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் தோன்றின. ஆனால் புலிகளைத் தவிர மற்றக் குழுக்கள் எல்லாம் ஒன்று மறைந்துவிட்டன, அல்லது சிங்களர்களின் கைக் கூலிகள் ஆகிவிட்டன. ( உதாரணம்: டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான்). புலிகளைத் தவிர வேறு எந்தக் குழுவும் இன்று வரை தமிழர்களின் நலனுக்காக போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. எனவே ஈழமக்களும் புலிகளைத் தவிர வேறு யாரையும் ஆதரிப்பதில்லை. இது தான் உண்மை.

//இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே புலிகளைக்கு ஆதரவாக மக்களும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் புலிகள் என்றால் அது ராஜீவை கொலை செய்த இயக்கம் என்ற அளவிலே மட்டும் மக்கள் அவர்களை அறிந்து வைத்திருக்கிறார்கள்.//

மற்ற மாநிலங்களில் இருப்பவர்களுக்கு தமிழர்களைக் குறித்து என்ன அக்கறை இருக்கும்? அவர்கள் ஏன் ஈழத்தமிழர்களைக் குறித்துக் கவலை கொள்ள வேண்டும்? தமிழகத்தில் இருப்பவர்கள் அனைவரும் முதலில் கவலைப்பட்டு, போராட்டத்தை முன்னெடுத்து இதை தேசிய அளவில் பிரச்சனையாக்கியிருந்தால் என்ன தான் இந்த பிரச்சனையென்று மற்றவர்கள் அறிந்து கொள்ள ஆசைப்படுவார்கள். ஆனால் இங்கு நடப்பதென்ன?
நடிகர்கள் போராட போனால் அதிலும் இரண்டு கட்சி, அங்கும் அரசியல். அரசியல் கட்சிகள் போராடினாலும் எதிர்கட்சித் தனியாக போராடும், ஆளும் கட்சி தனியாக போராடும். இவர்கள் போராட்டத்திற்கிடையே ஒருவரை ஒருவர் தாக்குவார்கள். ஆகா இந்த போராட்டங்களைக் கூட அரசியலாக்கத்தான் முயல்கிறார்களே தவிர உண்மையாண போராட்டம் எங்கு நடக்கின்றது?

ஈழத்தில் இருப்பவர்கள் எல்லோரும் கன்னடர்களாய் இருந்திருந்தால் இன்னேரம் தனி ஈழம் என்றோ மலர்ந்திருக்கும். எந்த பிரச்சனையிலும் அவர்கள் பக்கம் நியாயம் இருக்கின்றதோ இல்லையோ ஆனால் மொத்த மாநிலமும் ஒற்றுமையாய் போராடுவார்கள். ஆளும்கட்சி, எதிர்கட்சியெல்லாம் ஒன்றாய் சேர்ந்து ஓரணியாய் நின்று போராடுவார்கள். அந்த ஒற்றுமை நம்மிடையே இல்லை. இங்கு எந்த அனைத்துக் கட்சி கூட்டத்திலாவது எல்லா கட்சிகளும் ஒருமித்த குரலில் ஒரு கருத்தை பேசியிருக்கின்றார்களா?

இந்தப் பிரச்சனையில் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்றால் முதலில் ஒரு தேசிய அளவில் ஒரு அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்து அவர்களை ஈழத்துக்கு அனுப்பி அங்குள்ள நிலையை நேரில் கண்டறிந்து வரச் செய்ய வேண்டும். அவர்களுடன் இந்தியப் பத்திரிக்கையாளர்கள் குழுவையும் அனுப்ப வேண்டும். இவர்கள் மூலம் உண்மை உலகுக்கு தெரியவரும். தமிழர்கள் படும் அவலங்கள் வெளிவரும். அவ‌ர்க‌ள் நேரில் க‌ண்டுவ‌ரும் அவ‌ல‌ங்க‌ளை பாராளும‌ன்ற‌த்தை கூட்டி விவாதிக்க‌ வேண்டும். இது தான் பிராந்திய‌ வ‌ல்ல‌ர‌சான‌ இந்தியா செய்ய‌ வேண்டியது.

இதுக்கு மேல அவதிப்பட ஒன்னுமேயில்லங்கிற நிலையில இருக்க மனுசனுங்களுக்கு உதவுங்கன்னு சொன்னா, இன்னைக்கு இவனுக்கு உதவுனா நாளைக்கு நமக்கு பிரச்சனைவரும் அது இதுன்னு போகாத ஊருக்கு வழி தேடிகிட்டு நிக்கிறவங்களுக்கு எல்லாம் என்ன பதில் சொல்ல முடியும்?
இல்ல‌ இல்ல‌ என்ன‌ தான் இருந்தாலும் ராஜீவ் காந்திய‌ கொன்ன‌வ‌ங்க‌ளுக்கு உத‌வ‌ கூடாதுன்னு சொன்னா உங்க‌ளையெல்லாம் ஒன்னும் செய்ய‌ முடியாது. ஆசிப் அண்ணாச்சி பாணியில சொல்ல‌ணும்னா, நீங்க‌ ம‌ட்டும் ந‌ல்லா இருங்க‌டே...
Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•6:46 PM
அன்பு நண்பர் கிரி எழுதிய சைக்கிள் கேப்பில் லாரி ஒட்டிய சத்யராஜ் என்ற பதிவிற்கு பதிலை பதிவாக வெளியிடுகின்றேன் என்ற எனது வாக்கை இதன் மூலம் காப்பாற்றுகிறேன்.

முதன் முதலில் சில விசயங்களை சொல்லிவிட்டுத்தான் நான் இதை ஆரம்பிக்க வேண்டும்.
1) திரைத்துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் சத்தியராஜ் கூறிய கருத்துகள் மிக சரி என்றாலும், அதை அவர் வெளிக்காட்டிய விதம் அநாகரீகமானது என்பதில் எனக்கு எந்த மாற்றுகருத்தும் இல்லை.

2) நான் சத்தியராஜின் ரசிகரோ அல்லது ரஜினியை வெறுப்பவனோ அல்ல.

சந்தை மதிப்பில் ரஜினி அளவுக்கு சத்தியராஜ் இல்லைதான். தனது மதிப்பு என்னவென்று தெரியாதவர் இல்லை சத்தியராஜ்.

ரஜினி படம் குவிக்கும் அளவுக்கு வசூலை சத்தியராஜ் படம் குவிக்காதுதான். ஆனால் ரஜினியும், சத்தியராஜும் ஒரே அளவுதான் ஊதியம் வாங்குகின்றார்களா?

ரஜினியின் படம் 100 கோடி வசூலை குவிக்கின்றது, ரஜினி 10 கோடிக்கு மேல் ஊதியம் பெறுகின்றார். ஆனால் சத்தியராஜின் படங்கள் அந்த அளவுக்கு வசூல் ஆவதும் இல்லை, அவர் கோடிகளில் ஊதியம் வாங்குவதும் இல்லை. எனவே இதில் இருவர் படத்தின் வசூலையும் ஒப்பிட்டு பேசுவது சரியில்லை. அப்படி வசூலை ஒப்பிட்டால் அவரது ஊதியத்தையும் ஒப்பிடுங்கள்.

சத்தியராஜ் திரையுலகில் நுழைந்ததன் வெள்ளி விழாவை கொண்டாடிய போது அவரிடம் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்ற எல்லா நடிகரையும் பார்த்தும் கேட்கப்படும் கேள்வி கேட்க்கப்பட்டது. அப்போது அவர் சொன்ன பதில் நான் அரசியலுக்கு வரமாட்டேன். அரசியல் என்பது சினிமா துறை போல இயக்குநர் சொன்னதை செய்துவிட்டு செல்லும் வேலை அல்ல என்று தெளிவான பதிலை சொன்னார்.

தனது படங்களில் குத்து வசனங்கள் ( பஞ்ச் டயலாக்) எல்லாம் அவர் வைத்துக் கொள்ளவில்லை. வருவேன், இப்ப வருவேன், இதோ வந்துகிட்டே இருக்கேன்னு எல்லாம் சொல்லிகிட்டு இல்ல.

வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால் நாங்கள் பேவதெங்கே ( தெக்க போங்க)
அப்படின்னு எல்லாம் பாட்டு போட்டுகிட்டு அலப்பரய பண்ணல. அவருபாட்டுக்கு தகடு தகடு, என் கேரக்டரயே புரிஞ்சுக்க மாட்டேங்குகிறீங்களே இதுமாதிரி எதாவது பகடி பண்ணிக்கிட்டு தான் உண்டு தன் நடிப்பு உண்டுனு இருந்தாரு.

இதுவரை அவர் எந்த அரசுக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ குரல் கொடுத்ததில்லையே. இப்போதும் பிரச்சனை தமிழனுக்கு எதிரானது என்பதால் தானே அவ்வளவு ஆவேசமாக பேசினார்?

உலகின் பெரும் பணக்காரான பில்கேட்ஸ் தனது மனைவியுடன் இணைந்து லிண்டா கேட்ஸ் பவுண்டேசன் மூலம் பல கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து உதவி செய்து வருகின்றார்.

குஜராத் பூகம்பத்தின் போது, ஆதரவற்ற முதியவர் ஒருவர் தனது உணவுத் தேவைகளையே பிச்சையெடுத்து பூர்த்திசெய்துகொண்டிருந்தவர், பிச்சையெடுத்து தான் வைத்திருந்த மொத்த தொகையையும் பூகம்ப நிவாரண நிதியாக கொடுத்தார்.

பில்கேட்ஸ் மற்றும் அந்த முதியவர் இவர்களில் யார் செய்த தர்மம் பெரியது? சொல்லுங்கள். தன்னிடம் உள்ளதனைத்தையும் கொடுத்த அந்த முதியவரா அல்லது தனது தேவைகள் போக மிச்சம் இருப்பதை கொடுக்கும் பில்கேட்ஸ்ஸா?


தான் வாங்கும் குறைந்த ஊதியத்திலேயே, தன்னால் தயாரிப்பாளருக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டால் அதை ஈடுசெய்வேன் என்று சொல்லும் சத்தியராஜ் சைக்கிள் கேப்பில் லாரி ஓட்டுகின்றார் என்றால் பல கோடிகளை ஊதியமாக பெறும் ரஜினியால் அப்படி செய்ய முடியவில்லை ? சத்தியராஜ்க்காவது சைக்கிள் இடைவெளிதான் இருக்கிறது, அதிலேயே அவர் கஷ்டப்பட்டு லாரி ஓட்டும்போது, தமிழகம் தான் ரஜினிக்கு தனி ராஜபாட்டையே போட்டுக்கொடுத்திருக்கின்றதே , அதில் ஏன் அவர் சைக்கிள் கூட ஓட்ட முயற்சிக்காமல் ஒரேடியாக காலில் விழவேண்டும் ?


கிரி said...
//வெங்கட்ராமன் said...
அதான அப்பாவும் பையனும் நமீதா பின்னாடி சுத்தி சுத்தி லவ் பண்றதெல்லாம் புரட்சி இல்லையா. . . ?//

காதல் புரட்சி :-))) அப்பாவும் பய்யனும் இப்படி இருக்க வேண்டும் என்று புரட்சி கர கருத்துக்கள் கூறுகிறாங்க..அப்ப கண்டிப்பா புரட்சி தமிழன் தான்..



அப்போ திருவிளையாடல் ஆரம்பத்துல தனுஷ் கூட நடிச்ச ஸ்ரேயவே சிவாஜியில ரஜினி கூட நடிச்சாங்களே, அது என்னா ?

அப்பாவும் பையனும் ஒரே நடிகையோட நடிக்க கூடாது, ஆனா மாமானாரும், மருமகனும் ஒரே நடிகையோட நடிக்கலாம்னு ஏதாவது விதி இருக்கா?

மத்தவங்க மேல ஒரு விரல நீட்டுறப்ப கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க கிரி, ஏன்னா உங்க 4 விரல்களும் உங்கள நோக்கி இருக்கும்.

மேலும் சத்தியராஜை, டி.ராஜேந்தருடன் வேறு ஒப்பிட்டுள்ளீர்கள். ராஜேந்தர் ஒரு அரசியல் கட்சியின் நடத்துபவர், எப்போது என்ன நிலை எடுப்பார், யாரை ஆதரிப்பார் என்று யாருக்கும் தெரியாது. இப்படியிருக்க தான் சொன்ன கருத்தில் இருந்து மாறமாட்டேன் என்று சொல்லும் சத்தியராஜை அவர்டன் ஏன் ஒப்பிட்டுகின்றீர்கள்?

ஆனால் ரஜினி, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அந்த ஆண்டவணால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்றவர், அதே ஜெயலலிதாவை தைரியலட்சுமி, வீரலட்சுமி என்றார், தேர்தலில் அவர்களுத்தான் ஓட்டு போட்டேன் என்று அரசியல் சட்டத்தை மீறி சொல்லக்கூடாததை கூட வெளியில் சொன்னார். இப்படி ஒரு தேர்தலுக்கு ஒரு நிலை எடுத்ததால் வேண்டுமாணால் ரஜினியை நாம் டி.ராஜேந்தருடன் ஒப்பிடலாம். அதுதான் சரியாக இருக்கும். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•6:43 PM
அபி அப்பா பதில்களை இரண்டு பாகங்களாகத் தந்திருக்கின்றார் ( பாகம் 1, பாகம் 2) மிக்க நன்றி அபி அப்பா.
ஆனால் பல இடங்களில் கலைஞருக்கே உரிய வார்த்தை விளையாட்டுக்களை காணமுடிகின்றது.

மீண்டும் மீண்டும் நான் மிட்டாய், உணவு உதாரணத்தை உபயோகிக்க வேண்டியிருக்கின்றது. மிட்டாய் கொடுப்பதை தவறு என்று கூறவில்லை.ஆனால் உணவு அளித்துவிட்டு அதை கொடுங்கள் என்றுதானே சொல்கின்றோம்.
இலவச தொலைகாட்சி வழங்குவதால் எந்த வளர்சிப் பணி பாதிக்கின்றது என்று கேட்டுள்ளீர்கள். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் தீட்டப்பட்ட ஒன்று?
10 ஆண்டுகளுக்கு மேலாக திட்டம் கிடப்பில் போடப்பட்டு இன்று 10 மடங்கு அதிகமான செலவில் நிறைவேற்றப்படுகின்றது. அதுவும் ஜப்பான் நாட்டு வங்கியின் நிதியுதவியுடன். இத்தனை நாட்கள் தள்ளிப்போனதற்கு காரணம் நிதியில்லை என்பது தான்.
குடிநீர் திட்டத்திற்கு தேவை 1334 கோடி ரூபாய், இதற்கு அந்நிய நாட்டு நிதியுதவி தேவை. ஆனால் இலவச தொலைகாட்சி திட்டத்திற்கு எந்த நாட்டு வங்கியின் நிதியுதவியும் பெறாமல் 2000 கோடி ரூபாய் செலவழிக்கின்றோம் , இது நியாயமா சொல்லுங்கள்?

இலவசம் என்று கூறி மக்களை வீணாக்க வேண்டாம் என்றுதானே எல்லோரும் வேண்டுகின்றோம். நம் வரிப் பணம் தானே அய்யா இந்த இலவச திட்டங்களில் வீணாய் போகின்றது?
இன்னும் சாலைகள் இல்லாத, மின்வசதியில்லாத,பள்ளியில்லாத கிராமங்கள் எத்தனை உள்ளன தமிழகத்தில்? மின்வசதியே இல்லாத கிராமங்களுக்கு கூட இலவச தொலைகாட்சி கொடுத்த செய்தியும் நாம் படித்தோமே. ஆக அடிப்படை தேவைகளையே பூர்த்தி செய்யாமல் ஏன் ஆடம்பர பொருளை இலவசமாக கொடுக்க வேண்டும்?

ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் 30 ரூபாய் தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை வரவேற்கின்றேன், இதனால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு 100 கோடி. ஆனால் சினிமா கேளிக்கை வரி ரத்தால் ஏற்படும் இழப்பு எவ்வளவு ?
வரிவிலக்கு அளிப்பதனால் பலனடைவது யார்? திரைத்துறையில் இருக்கும் சாதாரண தொழிலாளர்களா? கோடிகளில் புரளும் தயாரிப்பாளர்கள் தானே? இதனால் ஏற்பட்ட நன்மைகள் என்று ஏதாவது உண்டா? குறைந்த பட்சம் திரையரங்குகளிலாவது கட்டணம் குறைந்ததா? ஏன் உள்ளவர்களுக்கே கொடுக்க வேண்டும் ?
ஒரு நிறுவனத்தில் வேலை பார்பவர்கள் அதன் முதலாளிக்கு லாபம் ஈட்டி தருபவர்கள், ஊழியர்கள் அதிக நேரம் வேலை பார்க்க அதிக சம்பளம் கொடுக்கலாம். ஆனால் ஒரு அரசாங்கம் அப்படி செய்வதை எப்படி சரி என்று சொல்வது ? லாபம் வரும் என்றால் ஊக்கத் தொகை அளிக்கலாம். திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு எதற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்? அவர்களால் அரசுக்கு ஏதேனும் லாபம் வருகின்றதா என்ன?
கேளிக்கை வரி விதித்தால் திரைப்படத்தொழில் நசிந்துவிடுமா? இப்போது கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டிருப்பதால் மட்டும் சாமன்ய தொழிலாளர்கள் எல்லாம் மாடி வீட்டு மகாதேவர்களாகவா இருக்கின்றார்கள்? கேளிக்கை வரி ரத்து திரைப்படத்துறையில் வேலை பார்க்கும் சாமன்யர்கள் ஆகட்டும், மற்ற சாமன்யர்களாகட்டும், யாருக்கும் உபயோகம் இல்லாத ஒன்று என்பதே உண்மை.
//" துபாயில் கடந்த 2 மாதங்களாக விஷம் போல விலைவாசிகள் ஏறி வந்துவிட்டன. 2 மாதம் முன்னதாக ஒரு கிலோ அரிசி 27 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு 102 ரூபாய். நம்புங்கள் உண்மை. ஆனால் உலகத்திலேயே 2 ரூபாய்க்கு அரிசி தமிழகத்தில் மட்டுமே கிடைக்கின்றது. துபாய் காசு 20 காசுக்கு 1 கிலோ அரிசி. இது சாதனையா இல்லை வேதனையா? முன்னே போனா கடிக்கிறீங்க பின்னே போனா உதைக்கிறீங்கப்பா. இப்படி ஒரு கேள்வி கேட்டு உங்கள் பதிவை நகைச்சுவை என வகைப்படுத்தி இருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும்."//

துபாயில் அல்ல அய்யா, இங்கு சிங்கப்பூரிலும் அரிசி விலை 4 மடங்கு உயர்ந்துவிட்டது. அதற்கு காரணம் என்னவென்றால், இந்தியாவில் அதிகரித்துவரும் அரிசி விலை உயர்வைத்தடுக்க மத்திய அரசு, அரிசு ஏற்றுமதியை தடை செய்துவிட்டது.
வெளிநாடுகளில் அரிசி இருப்பு குறைந்துவிட்டதாலும், நெருக்கடியை பயன்படுத்தி லாபம் பார்க்கும் வியாபரிகளாலும் தான் இப்படி விலை உயர்ந்துவிட்டது.
2 ரூபாய் அரிசி திட்டத்தில் நான் கடிக்கவும் இல்லை, உதைக்கவும் இல்லை. போலி குடும்ப அட்டைகளை ஒழியுங்கள். மக்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்தி அவர்கள் எல்லோரையும் போல் உண்மையான விலையை கொடுத்து வாங்கும் நிலைக்கு உயர்த்துங்கள். இப்படி சலுகைகளையும், இலவசங்களையும் கொடுத்து சோம்பேறிகள் ஆக்காதீர்கள் என்றுதான் சொல்கின்றேன்.
இதில் நகைச்சுவை என்ன இருக்கின்றது என்று தெரியவில்லை.
//" கலைஞருக்கும் கடலோர காவல் படைக்கும் என்ன சம்மந்தம். கலைஞருக்கும் கடலுக்கும் உள்ள ஒரே தொடர்பு அவரை கடலில் தூக்கி போட்டால் கட்டுமரமாக மிதப்பார். நீங்கள் அதில் ஏறி பயணம் செய்யலாம் அவ்வளவே!! தமிழ் நாட்டின் புலிமலைப்பட்டியில் ஊர்காவல் படையில் வேலை பார்த்து கொண்டு ராவல்பிண்டி ரகீம்கானை பிடித்து வந்து லாக்கப்புல வச்சி எட்டு பக்க "தமில்" வசனத்தை பேசி பேசி அவன் டவுசரை உருவும் விசயகாந்து இல்லைப்பா கலைஞர்!! "//

அண்ணண் லக்கிலுக் அவர்களின் பதிவுக்கு நான் எழுதிய பதிலை நீங்கள் படிக்கவில்லை என்பது, கடற்படை குறித்து நீங்கள் எழுதியுள்ளதில் இருந்தே தெரிகின்றது. விசயகாந் செய்வது திரைபடத்தில், அதுபோல் ஒருவேளை அவரே முதல்வரானாலும் செய்ய முடியாது.

அதே போல் கலைஞர் அல்ல, எவரை தூக்கி கடலில் போட்டாலும் யாரும் கட்டுமரமாக முடியாது.
கலைஞரால் கட்டுமரமாக முடிந்தால் , விசயகாந்தும் ராவல்பிண்டி ரகீம்கானை கைது செய்யமுடியலாம். (இதனால் நான் விசயகாந்தின் ரசிகன் என்றோ, அவரது கட்சிக்காரன் என்றோ நினைத்து விடாதீர்கள்)
ஈழத்தமிழர்களை கொன்று குவிப்பதை தான் தடுக்க முடியவில்லை, குறைந்த பட்சம் நம் இந்திய தமிழர்களை சிங்களப்படைகள் கொல்வதைக் கூடவா பார்த்துக்கொண்டு சும்மாயிருப்பது?
மத்திய கூட்டணி ஆட்சியில் முக்கியத்துவம் வய்ந்த தலைவரும், பாதிக்கப்படும் தமிழர்களின் முதல்வரும் ஆன நம் கலைஞர் ஏன் இதற்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்ககூடாது?

போராடி பெற்ற அமைச்சகங்கள் மக்களுக்கு நன்மை செய்யத்தான் என்று சொன்னீர்கள் உண்மைதான், ஆனால் திறமையாக செயல்பட்ட தயாநிதிமாறனின் பதவியை குடும்ப சண்டையில் பறித்தபின் அதே துறைக்கு நியமிக்கப்பட்ட ராசா என்ன செய்கின்றார்? தயாநிதி அளவுக்கு திட்டங்கள் இல்லையே ? இப்போது மக்கள் நலன் எங்கு சென்றது ? மகனின் நலன் தானே முன் நின்றது?

மற்றபடி செயலலிதா வீட்டில் கோழி திருடிய கதையெல்லாம் உங்கள் வார்த்தைசித்து , அதற்கு நான் என்ன சொல்வது, படித்து ரசிக்கின்றேன்.
//"திமுகவில் இருக்கும் 2 கோடி உருப்பினர்களின் வீட்டு திருமணத்துக்கும், துக்க நிகழ்வுகளுக்கும் கலைஞர் போய் வந்தது போல தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் மட்டுமல்ல அகில உலகத்திலும் ஏதாவது ஒரு தலைவனை காட்டமுடியுமா தங்களால்??? அவர் நடத்தி வைத்த திருமணங்கள் எத்தனை? போய் வந்த துக்க நிகழ்ச்சிகள் எத்தனை? இண்டர்காம் தலைவரா அவர். கொஞ்சமாவது மனசாட்சியோடு கேள்வி கேட்க வேண்டாமா? தமிழகமே அவருக்கு உடன்பிறப்பு தான்! சந்தேகமே இல்லை!"//
ஆகா என்ன அருமையாக என்கேள்வியை திசை திருப்பி விட்டீர்கள்? கலைஞரை நான் என்ன எல்லா தொண்டன் வீட்டு நல்ல, கெட்ட காரியங்களில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றா கேட்டேன்? பதவியை ஏன் குடும்பத்தினருக்கே தருகின்றார் என்று தானே கேட்டேன்?
தகுதி வாய்ந்த எத்தனையோ கட்சிக்காரர்கள் இருந்த போதும் ஏன் கனிமொழிக்கும், கயல்விழிக்கும் வாய்பளிக்க வேண்டும்? இதற்கு பதிலையே காணோம்?
அரசு கேபிள் கழகத்தை செயலலிதா ஆரம்பிக்க முயன்ற போது அதை தடுக்க மாநில ஆளுநரிடம் புகார் கொடுத்த அதே கலைஞர் இன்று ஏன் அரசு கேபிள் கழகம் ஆரம்பிப்பதில் இத்தனை தீவிரம் காட்ட வேண்டும் ? அரசு கேபிள் கழகம் குறித்த கேள்விக்கு உங்களிடம் இருந்து பதில் ஒன்றும் இல்லையே ?

சேது சமுத்திர திட்டம் மிக அருமையானத் திட்டம்தான் அதை நான் குறை சொல்லவில்லை.
ஏழைகளுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டம் மிக நல்லத் திட்டம். இது தான் தூண்டிலை கையில் கொடுப்பது. அவனுக்கு தேவையான் மீனை அவனே பிடித்துக்கொள்வான் அல்லவா? அதை நான் வரவேற்கின்றேன்.

என் கேள்விகள் சாதாரணமாக எல்லோர் மனதிலும் தோன்றும் சந்தேகங்கள். எல்லாத் திட்டங்களையும் எதிர்பதோ, அல்லது விதண்டாவாதம் செய்வதோ என் நோக்கம் அல்ல. நானும் ஒரு திமுக அபிமான குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் , உரிமையுடன் தான் இந்த கேள்விகளை கேட்கின்றேன். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•8:23 PM
கலைஞருக்கு நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் சார்பாக பதிலளித்த லக்கி லுக் அண்ணண் அவர்களுக்கு எனது நன்றிகள்.

இது அவருடைய பதிலுக்கு பதில் பதிவு. ஆனால் இதிலும் சில கேள்விகள் இருக்கலாம். ஆனால் லக்கிலுக் அண்ணா, இதை விதண்டாவாதமாகவோ அல்லது எதிர்கட்சிகளின் பாணியிலோ கேட்கவில்லை. இந்த கேள்விகள் பெரும்பான்மையானவர்களின் மனதில் இருக்கின்றது. ஒரு ஆரோக்கியமான விவாதமாக இதை பாருங்கள். விவாதம் தானே ஒழிய விதண்டாவாதம் அல்ல.

//"தொலைக்காட்சி போன்றவை ஆடம்பரப் பொருட்களாக பார்க்கப்பட்டது சென்ற நூற்றாண்டில், இப்போது அவை அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. முன்பெல்லாம் ஏழைகளுக்கு இலவச பல்பொடி, இலவச செருப்பு வழங்கியது போல இப்போது இலவச டிவி வழங்கப் போகிறோம் என்று தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்தோம். இத்திட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் நாம் ஆட்சிக்கே வந்திருக்க முடியாது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. ஏழைகள் இருக்கும் வரை இலவசத் திட்டங்கள் அவசியமே."//

தொலைகாட்சி என்ப‌து ஒரு ஆட‌ம்ப‌ர‌பொருளாக‌ அல்லாம‌ல் அத்தியாவ‌சிய‌ பொருளாக‌ மாறிவிட்ட‌து என்கின்றீர்க‌ள். ஆனால் நான் என் கேள்வியில் குறிபிட்டிருந்த‌ப‌டி, ப‌சித்த‌வ‌னுக்கு தேவை மிட்டாயா, உணவா?

ம‌க்க‌ள் தீர்ப்பே ம‌கேச‌ன் தீர்ப்பு என்றால் இப்ப‌டி கூட்ட‌ணிக‌ளின் ப‌ல‌த்தில் இல்லாம‌ல் த‌னித்தே ஆட்சியை பிடிக்கும் அள‌வு த‌னிப்பெரும்பான்மை பெற்றிருக்க‌லாமே? அப்போ இந்த இலவசத் திட்டங்களை பிடிக்காதவர்களும் இருக்கின்றார்கள் என்றுதானே அர்த்தம் ?
ஏழைக‌ள் இருக்கும் வ‌ரை இல‌வ‌ச‌த்திட்ட‌ங்க‌ள் அவ‌சிய‌ம் என்கின்றீர்க‌ள். ஆனால் ஏழைக‌ள் முன்னேற்ற‌த்திற்கு என்று என்ன‌ திட்ட‌ம் இருக்கின்ற‌து? ஏழைக‌ள் ஏழைக‌ளாக‌வே இருந்து கொண்டிருந்தால், எத்த‌னை கால‌ம்தான் இல‌வ‌ச‌ங்க‌ளாக‌வே கொடுத்துக்கொண்டிருப்ப‌து?
எத்த‌னைகால‌ம் தான் மீனை கொடுப்ப‌து? தூண்டிலை கொடுங்க‌ள் என்றுதானே சொல்கின்றோம்.

//"அய்யா நேற்று கூட ஒரு 300 கோடி ரூபாய் அளவுக்கு திருநெல்வேலியில் டயர் தொழிற்சாலைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கலைஞரின் முந்தைய 96 ஆட்சியை விட இந்த ஆட்சியில் கல்வித்துறையில் புரட்சி நிகழ்ந்துவருகிறது. அன்றாடம் செய்தித்தாளை வாசிக்கவும். பொங்கிவரும் புனலென புதுப்புது திட்டங்கள் கலைஞரின் ஆட்சியில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தீட்டப்பட்டு, செயலாக்கப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டரை ஆண்டுகளில் இந்த ஆட்சி முழுமை பெறும்போதுதான் இதுவரை வந்த கலைஞரின் ஆட்சிகளிலேயே இது தலைசிறந்த ஆட்சிக்காலம் என்பதை உணர்வீர்கள்."//

கல்வித்துறையில் ஏற்பட்டிருக்கும் புரட்சியை நானும் ஒத்துக்கொள்கின்றேன். கல்வித்துறையை இரண்டாக பிரித்து இரு அமைச்சர்களை நியமித்தது வரவேற்கதக்கது. குறிப்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களின் பணி மிகக்குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. அதை நான் மறுக்கவில்லை. குறிப்பாக‌ ச‌மீப‌த்தில் அவ‌ர‌து தொகுதியில் அவ‌ர் ஏற்பாடு செய்த வேலை வாய்ப்பு முகாம் மிக‌ அதிக‌ள‌வில் ப‌ல‌ருக்கு வேலை வாங்கிகொடுத்தது . அதை எல்லாம் நான் ம‌றுக்க‌வில்லை.

//"துணைநகரத் திட்டம் வேறுவழியில் கண்டிப்பாக நிறைவேறும். அனேகமாக திருப்பெரும்புதூருக்கு அருகில் துணைநகரம் அமையலாம். அதுபோலவே விமானநிலைய விரிவாக்கத்துக்கும் மாநில அரசு கண்டிப்பாக நிலம் ஒதுக்கித்தரும். புதியதாக உருவாகப்போகும் துணைநகரத்தை ஒட்டி அந்த விரிவாக்கம் இருக்கும்."//
சீக்கிரம் நடக்கும் என்று சொல்கின்றீர்கள், நம்புவோம். ஆனால் இது போன்ற நல்ல திட்டங்களில் ஆர்வம் காட்டாமல் ஏன் அரசு கேபிள் கழகம் மற்றும் கலைஞர் டிவியிலேயே கவனத்தைக் காட்ட வேண்டும்?இந்த திட்டங்கள் எல்லாம் கிணற்றில் போட்ட கல்லாக அல்லவா இருக்கின்றன?

//"சினிமா என்ற தொழில் கிட்டத்தட்ட சிதையும் நிலையில் உள்ளது. சினிமாவில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கானோரை சினிமாவில் இருக்கும் பெரிய மனிதர்கள் காப்பார்களோ இல்லையோ, அவர்களுக்காக கலைஞர் எப்போதும் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவர்களது உரிமைகளுக்கு குரல் கொடுப்பார். சினிமாத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதியே அவர்களுக்க் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. கேளிக்கைவரி சலுகை வழங்கினாலும் கூட சினிமாத்துறை மூலமாக மற்ற வகைகளில் அரசுக்கு கணிசமான வருவாய் வந்துகொண்டு தானிருக்கிறது."//
சினிமா துறையிலும் அடித்தட்டு மக்கள் இருக்கின்றார்கள். ஆனால் உண்மையாக சொல்லுங்கள், கேளிக்கை வரிச்சலுகைகளால் அவர்கள் தான் பலனடைகின்றார்களா? பலனடைவது தயாரிப்பாளர், விநியோகிப்பவர், மற்றும் திரையர‌ங்கு உரிமையாளர்கள் தானே? எல்லாத் தயாரிப்பாளரும் நேர்மையாய் எல்லா கணக்கு வழக்கையும் தயாரித்து வரி கட்டி கொண்டா உள்ளார்கள்? அங்கு கறுப்பு பணம் அதிகம் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? இப்படி கறுப்பு பணம் மூலம் ஏற்கனவே வரி ஏய்பவர்களுக்கு ஏன் மேலும் வரிச்சலுகை ? மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரியை எடுத்துக்கொண்டுதானே சம்பளமே கிடைக்கின்றது. இவர்கள் நினைத்தால் கூட வரி ஏய்ப்பு செய்ய முடியாது. ஆனால் திரைப்படத்துறை அப்படியா?

//"மகத்தான திட்டம் என்று சொல்கிறீர்கள். ஒரு மகத்தான திட்டம் எப்படி சோம்பேறிகளையும், கடத்தல்காரர்களையும் உருவாக்க முடியும்? 2 ரூபாய் அரிசித்திட்டம் மிகச்சிறப்பாகவே நடக்கிறது. இதுவரை தினமலர் கூட சொல்லாத ஒரு புகாரை நீங்கள் கற்பனையாக சொல்லுவதாகவே நினைக்க வேண்டியிருக்கிறது."//
ம‌க‌த்தான‌ திட்ட‌ம்தான் ஆனால் அது த‌வ‌றாக‌ உப‌யோகிக்க‌ப்ப‌டுவ‌துதான் பிர‌ச்ச‌னையே. ஒரு மாத‌த்திற்கு 30கிலோ அரிசி 2ரூபாய் விலையில் வெறும் 60 ரூபாயில் வாங்கிவிட‌லாம்.இது ஒரு கூலி தொழிலாளியின் ஒரு நாள் ச‌ம்ப‌ள‌த்தை விட‌ குறைவு. ஆக‌ ஒரு மாத‌ தேவையை ச‌மாளிக்க‌ 10 நாட்க‌ள் வேலை பார்த்தால் போதும் என்று தொழிலாள‌ர்க‌ள் நினைக்கின்றார்க‌ள். இது எங்க‌ள் கிராம‌த்தில் கூட‌ ந‌ட‌க்கின்ற‌து. வ‌ய‌ல்க‌ளில் விவ‌சாய‌ வேலைக்கு வ‌ரும் கூலித்தொழிலாள‌ர்க‌ள், ஒழுங்காக‌ வ‌ருவ‌தில்லை. ஒரு சில‌ர் இதை ந‌ன்றாக‌ உப‌யோகித்து முன்னேறுகின்ற‌ன‌ர். ஆனால் பெரும்பான்மையின‌ர் இத‌னால் சோம்பேறிக‌ளாகின்ற‌ன‌ர். ச‌ரி, க‌ட‌த்த‌ல் எப்ப‌டி ந‌ட‌க்கின்ற‌து ? அடிக்க‌டி நியாய‌ விலைக்க‌டை அரிசி க‌ட‌த்தப்ப‌டுவ‌துகுறித்து நீங்க‌ள் செய்திதாள்க‌ளில் ப‌டித்திருப்பீர்க‌ள். த‌மிழ்நாட்டில் மொத்த‌ம் 60 ல‌ட்ச‌ம் போலி குடும்ப‌ அட்டைக‌ள் இருப்ப‌தாக‌ உண‌வுத்துறை அமைச்ச‌ர் திரு.வேலு ச‌ட்ட‌ச‌பையில் கூறியுள்ளார். ஒரு அட்டைக்கு ஒரு மாத‌த்திற்கு 30கிலோ வீத‌ம் 60 ல‌ட்ச‌ம் அட்டைக‌ளுக்கு எவ்வ‌ள‌வு அரிசி இந்த‌ குறைந்த‌ விலையில் செல்கின்ற‌து ? அது எல்லாம் க‌ட‌த்த‌ல்கார‌ர்க‌ளின் கைக‌ளுக்குத்தானே செல்கின்ற‌து? போலி குடும்ப‌ அட்டைக‌ளை க‌ளைய‌ இன்னும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வில்லையே ? போலி அட்டைக‌ள் அனைத்தும் இந்த‌ ஆட்சியில் கொடுக்க‌ப்ப‌ட்ட‌வை என‌ நான் சொல்ல‌வில்லை. ஆனால் க‌ளைய‌ தீவிர‌மான‌ ந‌ட‌வ‌டிக்கை தேவை என்றுதான் சொல்கின்றேன்.

//"வேறு என்ன செய்யமுடியும்? கலைஞரா துப்பாக்கி எடுத்துக்கொண்டு போய் அவர்களை காக்க முடியும்? இந்திய மீனவர்கள் கொல்லப்படும் போதெல்லாம் கலைஞர் அதற்கான வருத்தங்களை தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார், நடவடிக்கை கோருகிறார். கடற்பாதுகாப்பு மத்திய அரசின் கையில்தானே இருக்கிறது?"//
க‌லைஞ‌ரை துப்பாக்கி தூக்க சொல்ல‌வில்லை. ஒரு முத‌ல‌மைச்ச‌ர், அதுவும் ம‌த்தியில் ஆளும் கூட்ட‌ணியில் மிக‌ செல்வாக்குள்ள‌ த‌லைவ‌ர், வெறும் வ‌ருத்த‌ம் தெரிவிப்ப‌தும், க‌டித‌ம் எழுதுவ‌தும் ம‌ட்டும்போதுமா? ஒரு நிர‌ந்த‌ர‌ தீர்வுகாண‌ வலியுறுத்த‌ வேண்டாமா? கூறிய‌ப‌டி இலாக்கா ஒதுக்காமையால் ப‌த‌வியேற்ற‌ திமுக‌ அமைச்ச‌ர்க‌ள் த‌ங்க‌ள் பொறுப்புக‌ளை ஏற்காமால் போராட‌வில்லை? அதுபோல் த‌மிழ‌ர்க‌ளின் உயிர்காக்க‌ ஒரு அழுத்த‌மான‌ போராட்ட‌ம் வேண்டாமா? இவ‌ர் அழுத்த‌ம் கொடுத்தால் ம‌த்திய‌ அர‌சு கேட்காம‌லா போகும்?

//" கலைஞரின் வாழ்வே போராட்டங்களால் நிறைந்தது. இதுகூட தெரியாமல் நீங்கள் எப்படித்தான் தமிழனாக இருக்கிறீர்களோ தெரியவில்லை. 1938 இந்தியெதிர்ப்பு போராட்டத்தில் தொடங்கி கல்லக்குடி போராட்டம், 1965 இந்தியெதிர்ப்பு போராட்டம், 1976 மிசா சட்டத்தை எதிர்த்துப் போராட்டம், 1980களில் ஈழத்தமிழருக்கான போராட்டம், எப்போதுமே இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் என்று போராளியாகவே கலைஞர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்."//
க‌லைஞ‌ரின் போராட்ட‌ங்க‌ள் தெரியாத‌ த‌மிழ‌ன் இல்லை நான். அவ‌ர் ஏற்க‌ன‌வே பல‌ போராட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்திய‌வ‌ர் என்ப‌தால் தான் த‌ற்போதும் அவ‌ரிட‌ம் இருந்து எதிர்பார்கின்றோம். 1980 க‌ளில் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ போராடினார். ஆனால் இன்ற‌ள‌வும் ஈழ‌ப்பிர‌ச்ச‌னை தீராம‌ல் தானே இருக்கின்ற‌து? இப்போது ஏன் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வ‌ளிக்க‌வில்லை? ச‌ட்ட‌ம‌ன்ற‌த்தில் தீர்மான‌மிய‌ற்றிய‌து ம‌ட்டும் போதாதே, அந்த‌ தீர்மானாத்தால் எந்த‌ உப‌யோக‌மும் இல்லை என்பது உங்க‌ளுக்கே ந‌ன்றாக‌ தெரியும். அது ம‌ட்டும் போதும் என்று நினைக்கின்றீர்க‌ளா?

//"இந்த கேள்வி மூலமாக என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்? கள்ளச்சாராயத்தை சட்டப்பூர்வமாக அனுமதிக்கச் சொல்கிறீர்களா? பூரணமதுவிலக்கை கடுமையாக வற்புறுத்திய காந்தி பிறந்த குஜராத்தில் கூட கள்ளச்சாராயச் சாவுகள் நடந்து வருகிறது."//

பூர‌ண‌ ம‌துவில‌க்கு வேண்டும் என்று சொல்ல‌வில்லை. க‌ள்ள‌ சாராய‌த்தை ஒழியுங்க‌ள் என்றுதான் சொல்கின்றேன். டாஸ்மாக்கில் இந்தியாவில் த‌யாரிக்கும் அய‌ல்நாட்டு ம‌துவ‌கைக‌ளை (IMFL) விற்கும் போது ஏன் க‌ள் இற‌க்க‌ அனும‌திக்க‌ கூடாது ? குடிப்ப‌வ‌ர்க‌ள் குடிக்க‌த்தான் செய்வார்க‌ள், அவ‌ர் அவ‌ர்களாகப் பார்த்து திருந்தினால்தான் உண்டு. ம‌ற்ற‌ ம‌துவ‌கைக‌ளோடு ஒப்பிடும்போது க‌ள் ஒன்றும் கொடிய‌து அல்ல‌வே? அதை ஏன் அனும‌திக்க‌ கூடாது?

//"தமிழை செம்மொழியாக ஆக்காமல் இருந்திருந்தால் எல்லாத் தமிழன் வீட்டிலும் அடுப்பு எரிந்துவிட்டிருக்குமா? - சும்மா ஏதாவது வார்த்தைஜாலத்தோடு கேட்கவேண்டுமே என்று கேட்காமல் கொஞ்சமாவது சிந்தித்து கேள்விகள் கேட்கவும்."//
நீங்க‌ள் தான் என‌து கேள்வியை புரிந்து கொள்ள‌வில்லை. த‌மிழை செம்மொழியாக்கிய‌து ம‌ட்டும் போதாது, த‌மிழ‌னின் வாழ்வும் செம்மையாக‌ வ‌ழிசெய்ய‌ வேண்டும் என்று தான் கேட்டுள்ளேன். இதில் வார்த்தை ஜால‌ம் ஏதுமில்லை. க‌லைஞ‌ரிட‌மே வார்த்தை ஜால‌ம் காட்டும் அள‌வுக்கு நான் பெரிய‌வ‌ன் இல்லை.

//" உங்களுக்கு அப்படி ஒரு ஐயம் ஏற்பட்டதற்காக வருந்துகிறோம். திமுகவில் கலைஞர் குடும்பத்தை தவிர வேறு எவருமே இல்லையா? தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் இரண்டு கோடி திமுகவினர் இருக்கிறார்கள். அந்த இரண்டு கோடி பேரும் கலைஞர் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்கிறீர்களா? "//
திமுக‌ வில் 2 கேடிக்கும் மேல் உறுப்பின‌ர்க‌ள் இருக்கின்றார்க‌ள்,ஆனால் க‌ட்சியில் எந்த‌ பொறுப்பிலுமே இதுவ‌ரை இருந்திராத‌, க‌ட்சி ப‌ணி எதுவும் செய்யாத‌வ‌ர்க‌ளுக்கு எல்லாம் எப்ப‌டி ப‌த‌வி கிடைக்கின்ற‌து?
ஸ்டாலின் த‌விர‌ க‌லைஞ‌ர் குடும்ப‌த்தில் யார் தீவிர‌ க‌ட்சிப்ப‌ணியாற்றிய‌து? முர‌சொலி மாற‌னின் ம‌க‌ன் என்ப‌தை த‌விர‌ வேறு எந்த‌ த‌குதியும் இல்லாத‌ போதும் த‌யாநிதி மாற‌ன் பார‌ளும‌ன்ற‌ உறுப்பின‌ராகி, ம‌த்தியில் கேபின‌ட் அமைச்ச‌ராக‌வும் முடிந்த‌து. வேறு யாருக்காவ‌து இப்ப‌டி வாய்ப்பு கிடைக்குமா?
திற‌மையாக‌ ப‌ணியாற்றிய‌ போதும் சொந்த‌ குடும்ப‌ மோத‌லால் அவ‌ர‌து ப‌தவியும் ப‌றிபோய்விட்ட‌து.
இன்று க‌னிமொழிக்கு வாய்ப‌ளிக்க‌ப்ப‌ட்ட‌து எப்ப‌டி? 2 கோடி பேருக்கு மேல் உறுப்பின‌ர்க‌ளை கொண்ட‌ திமுக‌ வில் க‌னிமொழியை விட‌ அனுப‌வ‌ம் வாய்ந்த‌ க‌ட்சி ப‌ணியாற்றிய‌வ‌ர்க‌ள் இல்லையா என்ன‌?
எத்த‌னையோ த‌குதிவாய்ந்த‌, ப‌ல‌ மேடைக‌ளில் பேசிய‌ அனுப‌வமிக்க‌ க‌ழ‌க‌ பேச்சாள‌ர்க‌ளுக்கு கிடைக்காத‌ வாய்ப்பு க‌ய‌ல்விழிக்கு எப்ப‌டி கிடைத்த‌து? இதையெல்லாம் பார்க்கும் எவ‌ருக்கும் ஐய‌ம் ஏற்ப‌டத்தானே செய்யும்?

//"விதண்டாவாதமாக கேட்டாலும் பதில் கொடுத்திருக்கிறோம். "//
உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி. இது விதண்டாவாதம் இல்லை, விவாதம் தான் என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லிக்கொள்கின்றேன். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•1:59 PM
அபி அப்பா எழுதிய பதிவுக்கு நான் அளித்த பின்னூட்டம்தான் இந்த பதிவு.

அபி அப்பா, நானும் கலைஞரின் ரசிகன் தான் ஆனால் இந்த ஆட்சியில் கலைஞரின் செயல்பாடுகள் எனக்கு பிடிக்கவில்லை.எனவே கலைஞருக்கு சில கேள்விகள் உங்கள் மூலமாக.
பதில் கலைஞர் சொன்னாலும் சரி அல்லது நீங்களே அவர் சார்பாக சொன்னாலும் சரி, கருத்து சரியாக இருப்பின் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.

இலவச டிவி என்பது, பசியால் அழும் குழந்தைக்கு இனிப்பு மிட்டாய் கொடுத்து சமாளிப்பது போன்றது. மிட்டாய் பசிக்கு உணவாகாது அல்லவா, அழும் குழந்தை மிட்டாயை பார்த்து சற்றே அழுகையை நிறுத்தி சிரிக்கலாம், ஆனால் அது நிரந்தரம் அல்ல. பசி தீரும் வரை அது அழத்தானே செய்யும். இன்னும் எத்தனை காலம் தான் இப்படி இலவசங்களின் பெயரால் மக்களை ஏமாற்ற முடியும்? 1996 - 2001 ஆட்சியில் செய்த அளவுக்கு கூட இந்த ஆட்சியில் நலத்திட்டங்கள் இல்லையே?

பா.ம.க வின் நிர்பந்தத்தால் தானே துணை நகரத்திட்டம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் போன்றவற்றை அறிவித்துவிட்டு நிறுத்தினீர்கள்? அதை இப்போது தீவிரமாக செயல்படுத்தலாமே? சென்னையில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்த பல வருடங்களுக்கு பிறகு பன்னாட்டு விமான நிலையங்கள் அமையப் பெற்ற பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் இன்று புதிய நவீன விமான நிலையங்கள் அமைந்துவிட்டன. ஆனால் சென்னை இன்னும் தூங்கி வழிகின்றது.

இலவச தொலைகாட்சியிலும், அரசு கேபிள் கழகத்திலும் காட்டும் ஆர்வம் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திலும், முல்லைப் பெரியார் அணை, பாலாறு, காவிரி பிரச்சனைகளிலும் ஏன் இல்லை ?
த‌மிழ்நாட்டில் த‌மிழில் தான் திரைப்ப‌ட‌ங்க‌ளுக்கு பெய‌ர் வைக்க‌ வேண்டும் என்று திரை குடும்ப‌த்தின் மூத்த‌ பிள்ளையாகிய‌ நீங்க‌ள் சொன்னால் உங்க‌ள் சினிமாக்கார‌ர்க‌ள் கேட்க‌ மாட்டார்களா ? அத‌ற்காக‌ த‌மிழில் பெய‌ர் வைத்தால் வ‌ரிவில‌க்கு என்று அர‌சாங்க‌த்திற்கு வ‌ரும் வ‌ருமான‌த்தை விட்டுக் கொடுக்க‌த்தான் வேண்டுமா?

க‌ட‌லூர் மாநாட்டில் பெண்க‌ளின் ந‌ல‌னுக்காக‌ எரிவாயு விலையில் 30 ரூபாயை அர‌சே ஏற்கும், அத‌னால் அர‌சுக்கு 100 கோடி ந‌ட்ட‌ம் என்று சொன்னீர்க‌ளே? கேளிக்கை வ‌ரி ர‌த்தால் அர‌சுக்கு ஏற்ப‌டும் வ‌ரி இழ‌ப்பு எவ்வ‌ள‌வு ? அதை ஒரு முறை கூட‌ நீங்க‌ள் சொன்ன‌தில்லையே ஏன்? கேளிக்கை வரியை வசூலித்தால் மொத்த விலையுவர்வான 50 ரூபாயையுமே ( ஒரு சிலிண்டருக்கு ) அரசே ஏற்கலாமே?

நீங்க‌ள் கேளிக்கை வ‌ரியை ர‌த்து செய்த‌தால் திரைய‌ர‌ங்குக‌ளில் க‌ட்ட‌ண‌ம் குறைந்துள்ள‌தா? அப்ப‌டியே குறைந்தாலும் இதுவும் ப‌சியால் அழும் பிள்ளைக்கு அளிக்க‌ப்ப‌டும் இன்னொரு மிட்டாய் தானே ஒழிய‌ , ப‌சி தீர்க்கும் உண‌வில்லை.

ஒருவ‌ன் மீனை கேட்டால் அவ‌னுக்கு தூண்டிலை கொடு என்று ஒரு ப‌ழ‌மொழி உண்டு. ஆனால் நீங்க‌ள் தூண்டிலை கேட்ப‌வ‌னுக்கு கூட‌ செத்துப்போன‌ மீனையோ அல்ல‌து மிட்டாயையோ கொடுத்து , உழைக்க‌ நினைப்ப‌வ‌னையும் சோம்பேறி ஆக்குகின்றீர்க‌ள்.
2 ரூபாய்கு ஒரு கிலோ அரிசி எனும் ஒரு ம‌க‌த்தான‌ திட்ட‌த்தின் மூல‌ம் ஒரு புற‌ம் சோம்பேறிக‌ளையும், ம‌றுபுற‌ம் அரிசி க‌ட‌த்த‌ல்கார‌ர்க‌ளையும் உருவாக்கிவிட்டீர்க‌ள்.

ந‌ம் பார‌த‌ நாட்டோடு மூன்று முறை நேரடியாக‌ போரிட்ட‌ இன்றளவும் மறைமுகமாக போரிடும் எதிரியாக‌ ந‌ட‌ந்து கொள்கின்ற‌ பாகிஸ்தான் நாட்டின் க‌ட‌ற்ப‌டை கூட‌ எல்லை தாண்டும் ந‌ம் நாட்டு மீன‌வ‌ர்க‌ளை சுட்டுக் கொன்ற‌தில்லை.

ஆனால் பார‌த‌த்தின் த‌ய‌வுட‌ன் இருப்பவர்களும், நண்பர்களாக தம்மை காட்டிக்கொண்டு ஆயுதமும் இன்ன பல உதவிகளும் பெற்றுக்கொண்டு, ந‌ம் தொப்புள் கொடி உற‌வுக‌ளான‌ ஈழத் த‌மிழ‌ர்க‌ளை கொன்று குவிக்கும் இல‌ங்கை நாட்டின் க‌ட‌ற்ப‌டை ந‌ம் மீன‌வ‌ர்க‌ளை சுட்டுக் கொல்லும் போது, உட‌னே பிர‌த‌ம‌ருக்கு ஒரு க‌டித‌ம் ம‌ட்டும் எழுதுவீர்க‌ள். ( ஒரு வேளை நீங்க‌ள் எழுதும் எந்த‌ க‌டித‌மும் பிர‌த‌மருக்கு போய் சேர‌வில்லையோ ? அஞ்ச‌ல் துறை அமைச்ச‌ர் எப்போதும் உங்க‌ளுக்கு தோள் கொடுத்து கொண்டே இருப்ப‌தால் அவ‌ரை கேட்டாலும் தெரியாது).

2004ல் மத்திய அமைச்சரவையில் திமுகா விற்கு கேட்ட‌ இலாக்காக்க‌ளை ஒதுக்க‌வில்லை என‌ போராடி பெற்ற‌ நீங்க‌ள், அது போன்ற‌ ஒரு போராட்ட‌த்தை ம‌க்க‌ளுக்காக‌ ஒரு போதும் செய்த‌தில்லையே ஏன்?

த‌மிழ‌க‌ மீன‌வ‌ர்க‌ள் சுட‌ப்ப‌டும் போது ம‌த்திய‌ அர‌சின் க‌வ‌ன‌த்தை ஈர்க்க‌ இப்ப‌டி ஒரு போராட்ட‌ம் ந‌ட‌த்தி இருக்க‌லாம், அல்லது நெல்லை விட‌ உற்ப‌த்தி செல‌வுகுறைவான‌ கோதுமைக்கு ஆதார‌ விலை குவின்டாலுக்கு 1000 ரூபாய் என்றும் நெல்லுக்கு அதை விட‌ குறைவாக‌வும் நிர்ண‌யித்த‌ போது போராடியிருக்க‌லாம், ஆனால் நீங்க‌ள் அதை செய்ய‌வில்லையே?

பூரண மதுவிலக்கு வேண்டும் என்று கேட்டால் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாமல் போய்விடும் என்பதால் பூரண மதுவிலக்கு ஏற்படுத்த முடியாது என்றீர்கள். ஆனால் இப்போது மட்டும் கள்ள சாராயம் முற்றிலுமாக ஒழிந்துவிட்டதா என்ன? அவ்வப்போது கள்ளச் சாராய சாவுகளும் நடந்துகொண்டுதானே இருக்கின்றன ?

த‌மிழை செம்மொழி என்று சொன்னால் ம‌ட்டும் எல்லாத் த‌மிழ‌ன் வீட்டிலும் அடுப்பு எரிந்துவிடுமா? தமிழும் வளரவேண்டும் தமிழனும் வளரவேண்டும் அல்லவா?

ஒட்டுமொத்த தமிழர்களையும் உடன்பிறப்பே என்று அழைக்கும் நீங்கள் மொத்த தமிழகத்தையும் உங்கள் குடும்பமாக நினைத்தீர்கள் என்று அக மகிழ்ந்த எங்களுக்கு, இன்று உங்கள் குடும்பம் மட்டும்தான் ஒட்டுமொத்த தமிழகம் என நினைக்கின்றீர்களோ என்ற ஐயம் ஏற்பட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. நடப்பவை எல்லாம் அதை உறுதிபடுத்தும் விதமாகத்தான் இருக்கின்றன.

இதற்கெல்லாம் பதில் கிடைக்குமா? Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க