Author: ஜோசப் பால்ராஜ்
•2:06 PM
காவிரி படுகை மாவட்ட விவசாயிகளின் வாழ்வுக்கு ஆதாரமாய் விளங்கும் எங்கள் அன்புக்குறிய மேட்டூர் அணைக்கு இன்று பிறந்த நாள். இன்று 74 வயதை நிறைவு செய்து பவள விழா ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது எங்கள் மேட்டூர் அணை.

இஸ்லாமியர் எப்படி புனித மெக்கா இருக்கும் திசை நோக்கி தொழுகை செய்வார்களோ அதுபோல் எங்கள் விவசாயமும் மேட்டூர் இருக்கும் திசை பார்த்து தான் இருக்கும்.

1925 ஜீலை 20 ஆம் தேதி அணைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1934 ஆகஸ்ட் 21 ஆம் தேதி அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஸ்டான்லியால் திறந்து வைக்கப்பட்ட இந்த அணைக்கு ஸ்டான்லி நீர்தேக்கம் என்றுதான் முதலில் பெயரிடப்பட்டது. இன்றும் அந்த பெயர் அணையில் எழுதப்பட்டிருந்தாலும் மேட்டூர் அணை என்றுதான் எல்லோராலும் அறியப்படுகின்றது.

இந்த அணைக்கு சொந்தமான நீர்பிடிப்பு பகுதிகள் இருந்தாலும், பெருமளவிலான நீர் ஆதரம் கர்நாடகாவை நம்பியே உள்ளது. சொந்தமாய் ஒளி இல்லா சந்திரனுக்கு வளர்பிறை, முழுநிலவு, தேய்பிறை , அம்மாவாசை என்றிருப்பதுபோல் கர்நாடகாவை நம்பியே இருப்பதால் இதன் நீர்மட்டமும் எப்போதும் சீராய இல்லாமல் வளர்வதும், தேய்வதுமாய் இருக்கின்றது.

எங்கள் வாழ்வுக்கு ஆதாரமாய் விளங்கும் இந்த அணை எந்நாளும் நீடித்து நிலைத்து,எப்போதும் நிரம்ப நீரோடு எமக்கு சேவை புரிய வேண்டும் என்று இந்த தஞ்சை மாவட்டத்து உழவன் மகனோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்துங்கள். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•7:15 PM
இரவார் இரப்பார்க்குஒன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.

உழவும் உழவர்களும் - 1
உழவும் உழவர்களும் - 2
உழவும் உழவர்களும் - 3
உழவும் உழவர்களும் - 4

இயற்கை சீற்றங்களின் போது அரசாங்கம் விவசாயிகளுக்கு எப்படி உதவி செய்கின்றது என்றும் அதை பெறுவதில் எம்மவர்கள் படும் பாடு இருக்கின்றதே, அது உலகின் மிக உயர்ந்த குலமான உழவர் குலத்தை மிக கேவலமாக இழிவுபடுத்தும் செயல்கள் , அவற்றைப் பார்க்கும் முன்பு, இப்பதிவின் ஆரம்பத்தில் கொடுத்திருக்கும் திருக்குறளின் பொருளை சொல்லிவிட்டால் உங்களுக்கே புரியும்.

உழவுத்தொழிலைச் செய்து வாழ்பவர்கள் தாங்கள் பிறரிடம் சென்று யாசிக்கமாட்டார்கள். வறியவர்க்கு ஒரு பொருளை வஞ்சனை இல்லாமல் கொடுத்து உதவுவார்கள்.

இத்தனை பெருமை மிக்க உழவர்கள் இன்று இருக்கும் நிலை என்ன ?
இயற்கையின் சீற்றங்களை அவர்கள் எதிர் கொள்ளும் போது அரசாங்கம் கொடுக்கும் நிவாரணம் எவ்வளவு? ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமாக செலவு செய்யும் விவசாயிக்கு ஏக்கருக்கு சில ஆயிரங்களை தருவார்கள். கடைசியாக கொடுத்த நிவாரணம் வெறும் மூவாயிரம் ரூபாய்.

இதுவே சொற்பத் தொகை என்றால் அதை வாங்க நாங்கள் படும்பாடு இருக்கின்றதே அது சொல்ல முடியாத சோகம்.

எரிகின்ற வீட்டிலும் பிடுங்கும் செயலை செய்ய வருவார்கள் நம் அரசு அதிகாரிகள். கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று உங்களுக்கு எவ்வளவு விவசாய நிலம் இருக்கின்றது என்று சிட்டா அடங்கல் எல்லாம் வாங்கனும்.


இதுக்கு ஒரு ஏக்கருக்கு 100 ரூபாயாவது வாங்காம கொடுக்கமாட்டாரு அந்த கி.நி.அ, இவ்வளவையும் வாங்கி யாருகிட்ட கொடுக்கனும், அதே கிராம நிர்வாக அலுவலர் கிட்ட தான் கொடுக்கனும், அவருதான் அரசாங்கம் தரும் நிதியை கொண்டுவந்து எங்களுக்கு கொடுப்பாரு. அப்போ ஒரு ஏக்கருக்கு ஒரு 200 முதல் 300 வரை அடிச்சுட்டு மீதியத்தான் கொடுப்பாரு. இப்படி எல்லாரும் சாப்பிட்டது போக மிச்சம் ஒரு 2500 வரும். இது எங்களோட இழப்பில் 4ல் ஒரு பங்கு. இப்படியே 2 வருடம் தொடர்ந்து நடந்தால் எந்த விவசாயியால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியும் ? இப்போது தெரிகின்றதா ஏன் இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றார்கள் என்று ?

விவசாயம் பற்றி எதுவுமே தெரியாத சில நண்பர்கள் உங்கள் தொழிலில் ஏற்படும் இழப்புகளுக்கு ஏன் அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும்? மற்ற தொழில் செய்வோர்களுக்கு எல்லாம் அவர்கள் தொழிலில் இழப்பு ஏற்பட்டால் அரசா இழப்பீடு வழங்குகின்றது என்று கேட்பார்கள்.

எல்லா தொழில்களும், விவசாயமும் ஒன்று இல்லை. மற்ற தொழில்களில் எல்லாம் தயாரிப்பாளர்தான் விலை நிர்ணயம் செய்வார். ஆனால் உணவுப் பொருட்கள் மக்களின் அத்தியாவசியத் தேவையென்பதால் அரசுதான் அதன் விலையை நிர்ணயிக்கும். எங்கள் உற்பத்தி மிக அதிகமானாலும் எங்களால் அதிக லாபம் அடைய முடியாது. எங்களது லாபம் எவ்வாறு அரசால் கட்டுபடுத்தப்படுகின்றதோ, அதே போல் எங்கள் இழப்பும் அரசால்தான் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அது தானே நியாயம்?

நன்கு விளைந்து நெல்லை அரசின் கொள்முதல் நிலையங்களில் விற்றாலும் சரி, வெள்ளத்தாலோ அல்லது வறட்சியாலோ ஒன்றும் விளையாமல் உதவி தொகை பெறுவதானாலும் சரி, எங்களுக்கு சேர வேண்டிய முழுத் தொகையையும் நாங்கள் வாங்கவே முடியாது. அவர்கள் எடுக்க வேண்டியதை எடுத்துக் கொண்டு மிச்சம் மீதியைத் தான் எங்களிடம் கொடுக்கின்றார்கள்.

பாருங்கள் அய்யா, யாரிடமும் யாசிக்காத உழவனுக்கு அவனுக்கு சேரவேண்டிய தொகையை கூட அவனால் முழுதுமாய் பெற இயலாது, தனக்கு உரியப் பொருளை கூட இரந்து வாங்க வேண்டிய நிலை. வறியவர்க்கு ஒரு பொருளை வஞ்சனை செய்யாது கொடுப்பவர்களுக்கு , அவர்கள் பொருளையே வஞ்சனை செய்யும் கொடுமை. இது தானே இன்று உழவர்களின் நிலை ?

நெல் விவசாயிகள் மட்டும்தான் இத்தணை சோகங்களையும் அனுபவிக்கின்றார்கள் என்று நினைக்க வேண்டாம். 11 மாத பயிரான கரும்பு விவசாயிகள் இருக்கின்றார்களே, அவர்கள் பாடு மிக மோசமானது. அதை கட்டாயம் தனி பாகமாகத்தான் எழுத வேண்டும், அடுத்த பாகத்தில் கரும்பு விவசாயிகளின் சோகங்களை பார்ப்போம். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•8:53 PM
இலம்என்று அசைஇ இருப்பாரக் காணின்
நிலம்என்னும் நல்லாள் நகும்.


உழவும் உழவர்களும் - 1
உழவும் உழவர்களும் - 2
உழவும் உழவர்களும் - 3

விவசாயம் இயற்கையோடு பின்னிப்பிணைந்த ஒரு தொழில்.
இயற்கை பல நேரங்களில் எம்மை வாழ வைப்பதும் உண்டு, வீழ வைப்பதும் உண்டு.

நாற்று நட்டு வேர்விட நடவு செய்ததில் இருந்து ஒரு 10 நாட்கள் ஆகும். அதன் பின் அறுவடைக்கு 20 நாட்களுக்கு முன் வரை மழை பெய்தால் பயிர்களுக்கு எந்த சேதமும் இருக்காது. சொல்லப் போனால் இந்த நாட்களில் மழை பெய்வது பயிரை நன்கு வளர உதவி புரியும். இப்படி பெய்ய வேண்டிய நாட்களில் பெய்து காக்காமல், பயிர் அறுவடைக்கு தயாராக இருக்கும் நேரத்தில் மழை பெய்தால் மொத்த விளைச்சலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிவிடும்.

அடுத்து எங்கள் உழவர்களின் உழைப்பை பதம் பார்ப்பது பூச்சிகள். மிகக் கடுமையான விலை கொடுத்து வாங்கி பூச்சி கொல்லி மருந்தடித்தால் அடித்த ஒரு வாரத்திற்காவது வெயில் அடித்தால்தான் நல்லது. மருந்தடித்த உடன் மழை பெய்தால் எல்லாம் போச்சு.

இயற்கை நம் கைகளில் இல்லாத ஒன்று. மனித சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கையை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் காவிரி???

உணவு சம்பந்தப்பட்ட காவிரியை இருமாநிலங்களின் உணர்வு சம்பந்தப்பட்ட ஒன்றாக மாற்றி, ஓட்டுக்காக பயன்படுத்தும் அரசியல்வாதிகளால் பாதிக்கப்படுவது தமிழகத்தின் விவசாயி தானே?

இப்போதுகூட மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகு வேகமாக குறைந்து கொண்டே வருகின்றது, அணைக்கு வரும் நீரின் அளவு மிக குறைவாக இருக்கின்றது, கர்நாடகா எந்த தீர்ப்புக்கும் கட்டுப்படாமல், நமக்கு தரவேண்டிய நீரை தரவில்லை என செய்தித்தாள்களில் வாசிக்கும் போது இந்த ஆண்டு என்ன நேருமோ என உள்ளம் பதைபதைக்கின்றது.

பசியால் அழும் குழந்தைக்கு உணவு தர வழியில்லாத நிலையில் இருக்கும் தாயின் மனநிலை என்ன நிலையில் இருக்குமோ அதைவிட மோசமான நிலையில்தான் நீரின்றி வாடும் பயிறுக்கு நீர் தர வழியின்றி தவிக்கும் உழவனின் நிலையும் இருக்கும்.

தான் பெற்று, வளர்த்து ஆளாக்கிய மகன், அகால மரணமடைந்தபோது கூட அழாமல் இருந்த ஒரு முரட்டு மனிதர், தன் வயலில் நீரின்றி காய்ந்த பயிருக்கு நீர் தர எந்த வழியும் இல்லாத கையறு நிலையில் இருந்தபோது கதறி அழுததை கண்களால் கண்டவன் நான்.

நதி நீரை தேசியமயமாக்கிட துணிச்சல் இல்லாத மத்திய அரசுகளும், நதி நீர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண நினைக்காமல் அதை அரசியலாக்கி பிழைக்கப் பார்க்கும் மாநில அரசுகளும் இருந்து என்ன பிரயோசனம்?

2007 அக்டோபர் 1ம் நாள் ஏதோ ஒரு பிரச்சனைக்காக தமிழகத்தில் முழு அடைப்புக்கு மாநில அரசு அழைப்பு விடுத்தபோது, விடுமுறை நாள் என்ற போதிலும் இதுவரை இல்லாத வழக்கமாக நீதிமன்றம் கூடி அந்த முழு அடைப்பை சட்டவிரோதம் என்று தீர்பளிப்பதில் அக்கறைகாட்டிய வானளாவிய அதிகாரம் படைத்த உச்ச நீதிமன்றம், அதன் தொடர்சியாக தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசையே கலைக்க பரிந்துரை செய்வோம் என்றெல்லாம் தமிழக அரசின் மீது அத்தனை கடுமை காட்டிய மாண்புமிகுந்த உச்சநீதிமன்றம்,மக்களின் வாழ்வாதார நதி நீர் பிரச்சனைகளில் தனது தீர்ப்பை மதிக்க தவறி, நீதிமன்ற அவமதிப்பை செய்யும் கேரள, கர்நாடக மாநில அரசுகளை கண்டிக்க வழியில்லமல் இருப்பதும், தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளில் இரு மாநிலங்களும் பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும் என கூறும் போது, எப்படி பிழைக்க முடியும் எங்கள் உழவர்கள்?

நண்பர் ஸ்ரீராம் அவர்கள் எனது முந்தைய பதிவில் எல்லா வேலைகளிலும் தான் சிரமங்கள் உள்ளன, இதை எப்படி ஒரு விஷயமாக சொல்லலாம் என்ற அர்தத்தில் கேட்டிருந்தார்.

உழவர்கள் சந்திக்கும் எல்லா சவால்களையும் நீங்கள் சந்திக்கின்றீர்களா? மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்க்கும் நீங்கள் உங்களது ஊதியத்தை நீங்கள் நிர்ணயிப்பீர்களா, அல்லது நிறுவனத்தார் உங்கள் வேலைக்கு என்ன ஊதியம் கொடுக்கின்றார்களோ அதை மட்டும் வாங்கிக்கொண்டு சந்தோஷமாக இருப்பீர்களா?

உங்களுக்கு உங்கள் வேலையை செய்வதற்கு தேவையான கணிணியை மட்டும் கொடுத்துவிட்டு, அதை இயக்கத் தேவையான மின் இணைப்பை கொடுக்காமல் விட்டால் உங்களால் வேலை செய்ய முடியுமா? மென்பொருளை உருவாக்கத்தான் முடியுமா? கணிணியை இயக்க மின் இணைப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உழவுத் தொழிலுக்கு நீர். அது இல்லாமல் என்ன செய்வான் எங்கள் உழவன்?

ஒரு மென்பொருளாளரின் வேலையில் உள்ள சிரமங்கள் என்ன? அந்த சிரமங்களை எதிர்கொள்ள அவனுக்குள்ள வசதிகள் என்னென்ன? அப்படி சிரமங்களை எதிர்கொள்ளும் வசதி உழவனுக்கு இருக்கின்றதா?

20 பைசா உற்பத்தி செலவு செய்து ஒரு தீப்பெட்டியை தயார் செய்யும் தயாரிப்பாளர் கூட 30 பைசா லாபம் வைத்து 50 பைசாவுக்கு தனது பொருளை விற்க முடியும் எனும் போது, ஏராளமான சிரமங்களை தாண்டி , இயற்கையோடு போராடி உழைத்து விளை பொருளை கொண்டுவரும் உழவனுக்கு தனது பொருளின் விலையை நிர்ணயிக்கும் உரிமை உள்ளதா?

யூரியா போன்ற உரத்தட்டுபாடு, விதை தட்டுபாடு எல்லாம் செயற்கையானது. இதையெல்லாம் கூட எங்களவர்கள் எதிர்கொண்டு விடுவார்கள். உழைப்பிற்குறிய ஊதியம் கிடைக்காத போதுதான் துவண்டுவிடுவார்கள்.

ந‌ண்ப‌ர் ஸ்ரீராம் ஒரு த‌வ‌றான‌ த‌க‌வ‌லை குறிப்பிட்டிருந்தார். எந்த‌ உழ‌வ‌ரும் அரிசி விலை கிலோ 2 ரூபாய்க்கு விற்க‌ வேண்டும் என்று விரும்ப‌வில்லை. எந்த‌ விவ‌சாயியும் த‌ன‌து விளை பொருள் இந்த‌ அள‌வு குறைவான‌ விலையில் விற்க‌ப்ப‌டுவ‌தை வ‌ர‌வேற்க‌ மாட்டான். வேண்டுமானால் விவ‌சாய‌ கூலித் தொழிலை செய்ப‌வ‌ர்க‌ள் அதை வ‌ர‌வேற்க‌லாம். நான் ஏற்க‌ன‌வே என் ப‌ழைய‌ ப‌திவுக‌ளில் குறிப்பிட்டிருந்த‌ப்டி கிலோ 2 ரூபாய்கு அரிசி திட்ட‌ம் ப‌ல‌ரையும் சோம்பேறிக‌ள் ஆக்கி, விவ‌சாய வேலைக்கு ஆள் ப‌ற்றாகுறையைத்தான் ஏற்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தை அனைத்து உழ‌வ‌ர்க‌ளும் உண‌ர்ந்துள்ள‌ன‌ர்.

இப்படி இயற்கை சீற்றங்களாலும், செயற்கையான காரணங்களாலும் பாதிக்கப்படும் உழவர்கள் இழப்பது தங்களது லாபத்தை தான்.

2007 ஆன் ஆண்டு அறுவடை நேரத்தில் பெய்த மழையால் எங்களுக்கு ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 5000 முதல் 7500 வரை நட்டம்.இப்படி நஷ்டம் அடைந்தால் எங்களால் எப்படி தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட முடியும் ?

இயற்கை சீற்றங்களின் போதெல்லாம் அரசாங்கம் தான் உழவர்களுக்கு நிவாரண நிதி வழங்குகின்றதே என கூறுகின்றீர்களா?

அந்த கொடுமையைப் பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போமா? Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•5:29 PM
உழவும் உழவர்களும் - 1
உழவும் உழவர்களும் - 2

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டோம்என் பார்க்கும் நிலை.


முந்தைய இரு பாகங்களையும் படித்துவிட்டு கருத்துகளை எழுதிய அனைவருக்கும் நன்றிகள்.

சரி வாருங்கள், நாம் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகங்களினால் நடத்தப்படும் நேரடிக் கொள்முதல் நிலையங்களை பார்ப்போம்.

அறுவடை நேரங்களில் எல்லா ஊர்களிலும் தற்காலிகமாக நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பார்கள்.

நமது நெல் மூட்டைகளை எடுத்துக்கொண்டு இங்கு போய் காத்திருக்க வேண்டும்.
இங்கு நமது நெல்லை விற்க, நெல்லில் கட்டாயம் 18% க்கு மேல் ஈரப்பதம் இருக்க கூடாது. ஈரப்பதம் அதிகமாக இருந்தால் கட்டாயம் காயவைத்துக்கொண்டுதான் வரவேண்டும்.

ஈரப்பதம் எல்லாம் சரியாக இருந்து எடை போட வருகின்றாகள் அங்கு நடக்கும் ஒரு அநியாய கொள்ளை.இவர்களும் தங்கள் தராசில் தில்லுமுல்லு செய்து ஒரு மூட்டைக்கு 2 கிலோ வரை அதிகமாக வைத்து எடுப்பார்கள்.

இப்படி நம்மிடம் அதிகமாக எடுக்கும் நெல்லை எல்லாம் மூட்டையை தைக்கும் முன்னர் அளந்து எடுத்து, அங்கு வேலை செய்பவர்கள் எல்லாம் தங்களுக்குள் பிரித்துக் கொள்வார்கள். இது முதல் கொள்ளை.

இதை தடுக்க அரசு சென்ற ஆண்டு மின் தராசுகளை தந்தும்கூட பல இடங்களில் இன்னும் அதை உபயோகிக்க ஆரம்பிக்கவில்லை. சாதாரண தராசுகளில்தான் எடை போடுகின்றார்கள். மின் தராசுகளில் தில்லுமுல்லு செய்ய முடியாது என்பதால்தான் இப்படி.

அடுத்து, நெல்லை எடுத்துக்கொண்டபின் காசு கொடுக்கும் இடத்தில் முழுபணத்தையும் தராமல் கட்டாயமாக மூட்டைக்கு 15 ரூபாய் எடுத்துக்கொண்டுதான் தருவார்கள்.

இதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள், கிராமங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் இருந்து, கிடங்குகளுக்கு நெல்லை ஏற்றிச்செல்ல வரும் வாகனங்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும், சிந்தும் நெல்லுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும், அது இது என்று ஆயிரம் காரணம் சொல்லுவார்கள்.

முன்பு நெல்கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டையின் எடை 71கிலோ. ஒரு 71கிலோ மூட்டைக்கு 15ரூபாய் கொள்ளையடிப்பார்கள். தற்போது ஏற்றி இறக்கும் வசதிக்காக ஒரு மூட்டைக்கு 35 கிலோ என எடை வைத்து எடுக்கின்றார்கள். தற்போது ஒரு 35கிலோ மூட்டைக்கு 8ரூபாயில் இருந்து 10ரூபாய் வரை கொள்ளை.

ஒரு ஏக்கர் விவசாயம் செய்த ஒரு உழவருக்கு ஒரு ஏக்கருக்கு 45 மூட்டைகள் ( ஒரு மூட்டைக்கு 60 கிலோ) விளைகின்றது எனக்கொண்டால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இவர்கள் ஒரு மூட்டைக்கு நியாயமாக வைக்க வேண்டிய 36 கிலோ என்ற கணக்கில் வைத்தால் நம்மவருக்கு 75 மூட்டைகள் வரும். ஆனால் மூட்டைக்கு இரண்டு கிலோ கொள்ளையடிக்கப்படுவதால் நம்மவருக்கு கிடைப்பதோ 71 மூட்டைகள் தான்.



மேலும் இந்த 71 மூட்டைகளுக்கு ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் வீதம் எடுத்துக்கொண்டாலும் நம்மவர் இழப்பது 710 ரூபாய்.

தற்போது அரசு நெல்லுக்கு அறிவித்துள்ள விலை குவிண்டாலுக்கு 1000 ரூபாய். இந்த விலையையே நம் கணக்கீட்டிற்கு பயன்படுத்தினால் நேரடி கொள்முதல் நிலையத்தில் நம்மவருக்கு ஒரு மூட்டைக்கு 350ரூபாய் கிடைக்கும் .

சரி நம்மவர் 4 மூட்டைகளை எடைபோடுவதில் நடந்த கொள்ளையில் இழந்தாரல்லவா? அதற்கு 4 X 350 = 1400.

ஆக ஒரு ஏக்கருக்கு நம்மவர் இழப்பது 2110.

இத்தொடரின் முதல் பாகத்தில் நாம் பார்த்தபடி ஒரு ஏக்கருக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய 10800 ரூபாய் லாபத்தில் இப்படி 2110 ரூபாயை இழந்துவிட்டால் இவர்களுக்கு மிஞ்சுவது 8690 மட்டுமே.

உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பார்கள், அது உண்மைதான் என்பது இப்போதாவது புரியும் என்று நினைக்கின்றேன்.

ஆக இது ஒழுங்காக தண்ணீரெல்லாம் கிடைத்து, இயற்கை சாதகமாக இருந்து, நன்கு விளைந்தால் மட்டும் கிடைக்கும் லாபம் இது.

இயற்கை சீற்றம், மற்றும் காவிரி நதி நீர் பிரச்சனை போன்றவை ஏற்படும் காலங்களில் ??????

அடுத்த பாகத்தில் தொடர்கின்றேன். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•1:17 AM
உழவும் உழவர்களும் - 1

பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ ல்அவர்.


அறுவடை முடிந்தது, விளைச்சல் கையில் இருக்கின்றது. இனி என்ன விற்று காசு பார்க்க வேண்டியது தானே என தான் எல்லோரும் நினைப்பார்க‌ள். ஆனால் உழைக்க‌த் தெரிந்த‌ எங்க‌ள் உழ‌வ‌ர்க‌ளுக்கு பிழைக்க‌ அவ்வ‌ள‌வாக‌த் தெரியாது. இனியும் ப‌ல‌ போராட்ட‌ங்க‌ளை ச‌ந்தித்துதான் காசு பார்க்க‌ வேண்டும். அவை என்ன‌வென்று பார்ப்போமா...

தற்காலங்களில் கூலியாட்களின் பற்றாகுறையால் அறுவடை பெரும்பாலும் இயந்திரங்களின் மூலமாகத்தான் நடைபெறுகின்றது.

ஆட்கள் மூலம் அறுவடை செய்தால் கையால் அறுத்து கதிர்களை கட்டாக கட்டி, வயலுக்கு வெளியே அமைக்கப்படும் களங்களுக்கு அவற்றை எடுத்து வந்து, பின் அடித்து நெல்லை பிரிப்பார்கள். இதில் நெல் களத்தில் இருப்பதால் நேரடியாக வண்டி வைத்து ஏற்றிக்கொண்டு சென்றுவிடலாம்.

ஆனால் இயந்திரங்கள் கொண்டு அறுவடை செய்யும் போது, அவை வயலிலேயே அறுத்து, அடித்து நெல்லை கொடுத்துவிடும். இவற்றை மூட்டைகட்டி அங்கிருந்து வண்டிகளுக்கு எடுத்துவந்து தர தனியாக கூலியாட்களை நியமிக்க வேண்டும்.
இப்படி கஷ்டப்பட்டு கொண்டுவரும் நெல்லை விற்க, இரண்டு வழிகள் தான் எங்களுக்கு. ஒன்று தனியார் நெல் வியாபாரிகளிடம் விற்பது, அல்லது அரசாங்கத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பது.

தனியார் வியாபாரிகள் என்றால் அவர்கள் எங்களது வீட்டிலேயே வந்து எடை போட்டு நெல்லை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். ஆனால் இவர்களிடமிருந்து உடனடியாக பணம் கிடைக்காது. ஒரே நேரத்தில் மொத்தப்பணமும் கிடைக்காது. கொஞ்சம் கொஞ்சமாக இழுக்கப்போட்டுத்தான் தருவார்கள்.

இதுமட்டுமா, கட்டாயம் இவர்கள் எடைபோட பயன்படுத்தும் தராசுகள் சரியான அளவை காட்டாது. எடையில் தில்லுமுல்லு செய்துதான் இவர்கள் நெல்லை வாங்குவார்கள். கேட்டால் நெல்லை ஓரிட‌த்தில் இருந்து ம‌ற்றொரு இட‌த்திற்கு கொண்டுசெல்லும் போது சிந்துவ‌து,சித‌றுவ‌து இவ‌ற்றால் ஏற்ப‌டும் இழ‌ப்பை ச‌ரிக‌ட்ட‌த்தான் இப்ப‌டி செய்வ‌தாக‌ நியாய‌ம் வேறு பேசுவார்க‌ள்.

த‌னியார் வியாபாரிக‌ள் ஒரு மூட்டை 61கிலோ என்ற‌ அள‌வில் பிடிப்பார்க‌ள் ( நெல் எடை 60கிலோ + சாக்கு எடை 1கிலோ). ஆனால் அவ‌ர்க‌ள் த‌ராசில் 61கிலோ காட்டிய‌ மூட்டையை ஒரு ந‌ல்ல‌ த‌ராசில் வைத்துப்பார்த்தால் குறைந்த‌து 63 கிலோவாவது இருக்கும்.

குறுவை சாகுபடி அறுவடை சமயங்களில் பெரும்பாலும் மழை வந்துவிடும். மழை இல்லாவிட்டாலும் பனியால் குறுவை நெல்லில் சற்று ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இது போன்ற சமயங்களில் நெல்லில் ஈரம் அதிகமாக இருக்கின்றது என்று கூறி காயவைக்க சொல்வார்கள். அல்லது எடை அதிகமாக வைத்து வாங்கிக்கொள்கிறோம் என்று அதிலும் நல்ல லாபம் பார்ப்பார்கள் எங்கள் வியாபாரிகள்.

இப்ப‌டி எல்லாம் இவ‌ர்க‌ளிட‌ம் விற்க‌ வேண்டுமா? ஏன் அர‌சாங்க‌ நேர‌டி நெல் கொள்முத‌ல் நிலைய‌ங்க‌ளில் விற்க‌ கூடாது என‌ தோண‌லாம்.

அரசு கொள்முதல் நிலையங்களுக்கு எல்லாம் கொள்ளை நிலையங்கள் என்றுதான் பெயர் வைக்க வேண்டும்.
அங்கு நடக்கும் அநியாயங்கள் அத்தனை. அதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.. Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•10:20 PM
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்று எல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.


இது உழவனின் வாழ்க்கையை அலசும் தொடர்
வயலுக்குள்ளும், வெளியேயும் எங்கள் சொந்தங்கள் சந்திக்கும் சவால்களை உங்களுக்கு சொல்லவே இந்த தொடர்.

எனக்கு தெரிந்த பயிர்களான நெல், கரும்பு போன்ற பயிர்களை விவசாயம் செய்வது குறித்தும், அதில் ஆரம்பம் முதல், கடைசிவரை அதாவது விதைப்பில் இருந்து, அறுவடை செய்து பணமாக்குவது வரை விவசாயி என்ன பாடுபடுகின்றான் என்பது குறித்தும் விளக்கப்போவதுதான் இந்த தொடர்.

கரும்பு சாறும், இந்திய பொருளாதாரமும் என்ற எனது பதிவிற்கு பின்னூட்டமிட்ட என் நண்பர் அவர்களின் கேள்விகளுக்கு நான் அளித்த பதிலின்படி இத்தொடரை எழுதுகின்றேன்.

என்னைப்போல் விவசாயகுடும்பத்தை சேர்ந்த பல நண்பர்களும் பரந்துவிரிந்த இவ் வலையுலகில் இருப்பீர்கள். என் தொடரை படித்து உங்கள் ஆலோசனைகளை சொல்லுங்கள்.
விவசாயம் என்பதை வெளியில் இருந்து மட்டுமே பார்த்தவர்கள் என்னோடு வாருங்கள், எங்கள் வயல்வெளிகளை சற்று பார்த்துவிட்டு வருவோம்.

முதலில் தஞ்சை மாவட்ட விவசாயிகளின் நெல் சாகுபடியை குறித்து பார்ப்போம்.

வழக்கமாக ஜீன் மாதம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டால் அந்த வருடம் இரு போகம் நெல் விளையும். போதுமான அளவு நீர் இல்லாமல், அணை திறப்பு தள்ளிபோனால் ஒரு போகம் மட்டும்தான் நெல் விளைவிக்க முடியும்.

சரி, நடவு முதல் அறுவடை வரை ஆகும் செலவுகள் என்னவென்று பார்ப்போமா?

உழவு செய்ய உழவுஇயந்திர (Tractor) கூலி ஒரு ஏக்கருக்கு ஒரு உழவுக்கு 300 ரூபாய். கட்டாயம் 3 உழவு செய்துதான் நடவு செய்யமுடியும்,ஆக உழவு கூலி மட்டும் 900ரூபாய்.

நாற்றங்காலில் இருந்து நாற்று பறித்து நடவு வயலில் வைக்க ஒரு ஏக்கருக்கு 700 ரூபாய் கூலி. நாற்றங்காலில் இருந்து நடவு வயல் தூரமா இருந்தால் இது இன்னும் அதிகமாகும்.

நடவுக்கு ஒரு ஏக்கருக்கு கூலி 500 ரூபாய்.

அடியுரம் மற்றும் நடவுசெய்த உடன் இடும் மேலுரம் ஒரு ஏக்கருக்கு 4000ரூபாய். பூச்சி மருந்து ஒரு 1500 லிருந்து 2000 வரை. (மீண்டும் மீண்டும் பூச்சித்தாக்குதல் இருந்தால் இது இன்னும் அதிகரிக்கும்). உர‌ம் ம‌ற்றும் பூச்சிம‌ருந்து அடிக்க‌ ஆண் ஆளுக்கு கூலி 100ரூபாய். (காலையிலிருந்து ம‌திய‌ம் வ‌ரை ம‌ட்டுமே வேலை).தெளிக்கும் கூலி 500 என்று வைத்துக்கொள்வோம்.

களை பறிக்க ஒரு ஏக்கருக்கு எப்படியும் 20 ஆட்கள் தேவைப்படும். ஒரு பெண் ஆள் கூலி 40ரூபாய். ஆக களைபறிக்க மட்டும் 800ரூபாய். ஆக‌ க‌ளைப‌றிப்பு வ‌ரை ஒரு ஏக்க‌ருக்கு ஆகும் செல‌வு ம‌ட்டும் 8900 ஆகும்.

இத‌ற்குப்பின் அறுவ‌டை, அறுவ‌டைக்கு கூலி எப்போதும் ப‌ண‌மாக‌ கொடுப்ப‌து கிடையாது. ஆட்க‌ள் அறுவ‌டை செய்தால் நெல்லாக‌த்தான் கூலி கொடுப்போம். த‌ற்போது இய‌ந்திர‌ங்க‌ளை கொண்டு அறுவ‌டை செய்ய‌வ‌தால் ஏக்க‌ருக்கு 1800 ( இது க‌ட‌ந்த‌ ஆண்டு நில‌வ‌ர‌ம், டீச‌ல் விலை உய‌ர்வால் இவ்வாண்டு 2300 முத‌ல் 2500 இருக்கும் என‌ எதிர்பார்க்க‌ப்ப‌டுகின்ற‌து.) .

ஆக இயந்திர அறுவடை என்று வைத்துக்கொண்டால் கூட 11700 ரூபாய் ஆகும்.

இது தவிர வயலை உழவு செய்யும் முன்னர் ஆகும் முன்னற்பாடுகளுக்கு ஆகும் செலவுகளையும், அறுவடைக்கு பின்னர் ஆகும் சில செலவுகளையும் இந்த செலவு கணக்கில் சேர்க்கவில்லை.

சரி இதுவரை செலவுகளை பார்த்தோம். இனி வரவு என்னவென்பதை பார்ப்போம்.

ஒரு வயல் நன்றாக விளைந்தால் ஏக்கருக்கு 45 மூட்டைகள் விளைச்சல் வரும். மிக நன்றாக விளைந்தால் 48 முதல் 50 மூட்டைகள் வரை கிடைக்கும்.
சராசரியாக 45 மூட்டைகள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு மூட்டை சாதாரண ரக நெல் 500ரூபாய் என்று வைத்துக்கொண்டால் ஒரு ஏக்கருக்கு 22500 ரூபாய் கிடைக்கும்.

நான் இங்கே கொடுத்துள்ளது குறுவை எனப்படும் குறைந்த கால பயிருக்கு ஆகும் செலவுகள். குறுவை பருவத்தில் பொன்னி போன்ற அதி சன்னரக நெல்கள் பயிரிடப்படுவதில்லை. அவை சம்பா சாகுபடியில்தான் பயிரிடப்படும்.
சம்பா குறித்தும் தொடரின் பின் பகுதியில் விவரிக்கின்றேன்.

ஆகா , ஒரு ஏக்கருக்கு 10800 ரூபாய் லாபம் கிடைக்கின்றதே என்று ஆச்சரியப்பட வேண்டாம்.

உல‌க‌த்திலேயே, த‌ங்க‌ள் உற்ப‌த்தி செய்யும் பொருளுக்கு தாங்க‌ளே விலை நிர்ண‌யிக்க‌ முடியாத‌ ஒரே உற்ப‌த்தியாள‌ர் எங்க‌ள் உழவர்கள் ம‌ட்டும்தான்.

நெல்லை விலைக்கு வாங்கும் வியாபாரிகள் ஆகட்டும் அல்லது அரசாங்கத்தின் நேரடி நெல் கொள்(ளை)முதல் நிலையங்களாகட்டும் எல்லாம் எங்களை எப்படி அடிக்கின்றன என்றும், நெல்லை விற்று காசாக்குவதில் நாங்கள் படும் சிரமங்கள் என்ன என்றும் அடுத்த பாகத்தில் பார்க்கலாம். Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க