Author: ஜோசப் பால்ராஜ்
•7:01 PM
உலகப் பிரபல கூகுள் நிறுவனம் தனது பத்தாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி மிக உன்னதமான சேவை ஒன்றை செய்ய முனைந்துள்ளது. அதுவும் நமது பங்களிப்போடு.

சமுதாய முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் பல்வேறு பிரிவுகளில் நமது யோசனைகளை தெரிவிக்க ஒரு இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. www.project10tothe100.com

சமுதாய கட்டமைப்பு, புதிய வாய்புகளை உருவாக்கும் யோசனைகள், ஆற்றல் மேம்பாடு, சுற்றுபுற மேம்பாடு, சுகாதாரம், கல்வி, எல்லோருக்கும் பாதுகாப்பான உறைவிடம் அமைய யோசனைகள், இந்த பிரிவுகள் எதையும் சாராத வேறு எந்த யோசனைகள் என பல பிரிவுகளில் நமது யோசனைகளை விரிவாக இந்த இணைய தளத்தில் உள்ளீடு செய்யும் வகையில் அமைத்துள்ளார்கள்.

வரும் அக்டோபர் மாதம் 20 தேதி வரை நமது யோசனைகளை இந்த இணையத்தில் பதிவு செய்யலாம். ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட திட்டங்களை பதியலாம். பதிவு செய்யப்பட்டுள்ள திட்டங்களில் சிறந்த 100 திட்டங்கள் 2009 ஜனவரி மாதம் 27 தேதி அறிவிக்கப்படும். அந்த 100 திட்டங்களில் பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி சிறந்த 20 திட்டங்களை அரையிறுதிச் சுற்றுக்கு தேர்தெடுக்க உள்ளார்கள்.

அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் 20 சிறந்த திட்ட யோசனைகளில் இருந்து 5 திட்டங்களை நடுவர் குழு தேர்தெடுத்து 10 மில்லியன் டாலர்களை ஒதுக்கி அந்த திட்டங்களை செயல்படுத்த உள்ளார்கள்.

சிறந்த திட்டங்களுக்கான யோசனைகளை கீழ்கண்ட அடிப்படையில் தேர்ந்தெடுக்க உள்ளார்கள்.

1) இது எவ்வளவு மக்களுக்கு பலனளிக்கும் ?

2) இத்திட்டம் அத்தியாவசியமான ஒன்றா? இது எந்த அளவு மக்கள் பிரச்சனைகளை களைய உதவும்?

3) இத் திட்டம் ஒரு வருடத்திற்குள்ளோ அல்லது இரண்டு வருடத்திற்குள்ளோ செயல்படுத்த முடியக்கூடிய ஒன்றா?

4) எளிதாகவும், அதிக செலவில்லாமலும் இதை செயல்படுத்த இயலுமா?

5) எத்தனை காலத்திற்கு இத்திட்டம் பலனளிக்கும் ?

இதையாச்சும் செய்வோம் பாஸ் - பெண்ணியவாதிகள் கவனிக்க... என்ற தலைப்பில் நான் ஏற்கனவே எழுதியிருந்த பதிவில் சொல்லியிருந்த ஆலோசனைகளை இந்த தளத்தில் என் பங்குக்கு யோசனையாக வெளிப்படுத்தியுள்ளேன். மாத விலக்கு காலத்தில் பயன்படுத்தும் சானிடரி நாப்கின்களை மிகக் குறைந்த விலையில் கிராமப்புற மகளிர் குழுக்களை கொண்டே உற்பத்தி செய்ய வைத்து, அவர்கள் மூலமாகவே இதை வீடு வீடாக விற்கும் யோசனை நம் நாட்டு கிராமங்களுக்கு மட்டுமல்ல, முன்னேறாத மூன்றாம் உலக நாடுகளின் கிராமப்புற பெண்களுக்கும் மிகவும் பயன்படும் ஒரு யோசனை எனக் கருதியதால் அதை கூகுள் தளத்தில் உள்ளீடு செய்துள்ளேன்.

ஒரு வேளை எனது யோசனை சிறந்த யோசனையாக தேர்தெடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டால் பல ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படலாம். அதன் மூலம் அங்குள்ள மகளிர் குழுக்களுக்கு ஒரு வருமானமளிக்கும் சுய தொழிலும், ஏழைப் பெண்களுக்கு குறைந்த விலையில் சுகாதார வசதிகளும் கிடைப்பதோடு, மிகக் குறைந்த விலையில் நாப்கின்களை உற்பத்தி செய்யும் இயந்திரங்களை கண்டுபிடித்த கோவையைச் சேர்ந்த திரு.முருகானந்தம் அவர்களுக்கும் நல்ல தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

சிறு சிறு குழுக்களாக மக்களுக்கு வேலை வாய்ப்பையும், சுகாதார வாய்ப்பையும் நீண்ட நாட்களுக்கு ஏழை நாடுகளில் உள்ள கிராமப்புற பெண்களுக்கு அளிக்கும் என்பதால் இதை நான் தேர்தெடுத்துள்ளேன்.

நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு யோசனை தோன்றலாம். நீங்களும் உங்களுக்கு தோன்றும் யோசனைகளை இதில் தெரியப்படுத்துங்கள்.

இதையாச்சும் செய்யலாமே பாஸ்...

புதிதாக ஒரு வேலைக்காக விண்ணப்பித்து, நேர்முகத் தேர்வுக்கு சென்று அதில் தேர்வானதாலும், வேலை மாற்றம் தொடர்பான பணிகளாலும், மேலும் சில சொந்த பிரச்சனைகளாலும் இரண்டு வாரமாக பதிவுகள் எதுவும் எழுதவில்லை. என் மேல் உண்மையிலேயே அக்கறையோடு ஏன் பதிவெதுவும் எழுதவில்லை என தொலைபேசி, வலையுரையாடல், மற்றும் மின் மடல்கள் வாயிலாக விசாரித்த அத்தனை சொந்தங்களுக்கும் எனது நன்றிகள். Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•4:21 PM
சிங்கையில் நேற்று நல்ல மழை, அந்த மழை நேரத்தில் தன் நண்பர் ஒருவருடன் இரு சக்கரவாகனத்தில் அமர்ந்து, வழக்கம் போல‌ அடுத்து என்ன பதிவு எழுதலாம் என்ற தீவிர யோசனையுடன் அண்ணண் கோவி.க அவர்கள் பயணிக்கையில் திடீரென்று வந்த ஒரு லாரியின் மீது மோதுவதை தவிர்க்க இருசக்கர வாகன ஓட்டி முயற்சித்த போது, தடுமாறியதால் இருவரும் கீழே விழுந்துவிட்டனர்.

அதில் கோவி.க அண்ணண் சிறுகாயங்களுக்குள்ளானார். இன்று மருத்துவ விடுப்பில் இருக்கிறார். ( இந்த காயத்துக்கு எல்லாம் ஒரு நாளைக்கு மேல மருத்துவ விடுப்பு கிடையாது, ஒழுங்கா நாளைக்கு வேலைக்கு போயிடணும்னு , மருத்துவர் சொல்லிட்டாராம்). கவலைப்படும் படி இல்லையென்றாலும், விபத்திற்குள்ளான நம் மூத்த பதிவர் சிங்கை சிங்கம் கோவி.கண்ணண் அவர்கள் விரைவில் குணமடைய உலகெங்கும் இருக்கும் தமிழ் பதிவர்கள் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ பிரார்தனை செய்யவும்.

மேலும் உலகெங்கும் இருக்கும் அன்பர்கள் எனக்கோ, தம்பி விஜய் ஆனந்துக்கோ PAYPAL ல் பணம் அனுப்பினால் பழம், ஹார்லிக்ஸ் போன்றவை உங்கள் பெயரில் வாங்கி அண்ணணுக்கு அனுப்பப்படும். PAYPAL சேவை இல்லாதவர்கள் பின்னூட்டத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை தெரியப்படுத்துங்கள், எங்கள் வங்கிக்கணக்கு விவரங்களை அனுப்புகிறோம்.
குறிப்பு ஜெகதீசனுக்கு யாரும் பணம் அனுப்பிவிட வேண்டாம். அவரு ஹார்லிக்ஸ் வாங்குவாரு, ஆனா கோவி.க அண்ணணுக்கு குடுக்காம அப்டியே சாப்பிட்டுருவாரு.

ஆனால் இந்த சிறு விபத்தால் அண்ணண் பதிவெழுதும் வேகத்திற்கு எள் அளவுகூட சேதாரம் ஏற்படவில்லை என்பதால் ஒரு சில நாட்களுக்காவது அண்ணணின் பதிவுகளை பார்க்காமல் இருக்கலாம் என்று யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம். வழக்கம் போல பதிவுகள் வரிசை கட்டி வந்துகிட்டேத்தான் இருக்கும்.

பின் குறிப்பு: என்னடா அவருக்கு அடிபட்டுருக்கு, இவன் அதை வெச்சு மொக்கை போடுறானேன்னு யாரும் திட்டாதீங்க. இந்த பதிவு அவரோட சம்மதத்தோடத்தான் வருது.

அடியின் அளவு ரொம்ப கம்மியா இருக்கதால யாரையும் கலவரப் படுத்திரவேண்டாம் என்ற எண்ணத்தால் தான் மொக்கையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் சிறு விபத்தில் சிறு காயமடைந்தது உண்மை.

அண்ணண் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•11:19 AM
சிங்கையில் உள்ள பதிவர்கள் எல்லாம் சந்தித்து மிக நீண்ண்ண்ண்டடடடட நாட்கள் ஆகி விட்டன என்றும்(கடைசியா ஆகஸ்ட் 30 சந்திச்சோம்), மீண்டும் எல்லோரையும் சந்திக்க வேண்டும் என்றும் பல பதிவர்களும், எங்கள் பின்னூட்ட புயல் தம்பி விஜய் ஆனந்தும் ரொம்ப ஆசைப்படுவதால் அடுத்த சந்திப்பு நடத்த சங்கம் தீர்மானித்துள்ளது.

நாள் : செப்டம்பர் 20 சனிக்கிழமை.

நேரம் : மாலை 3 மணி முதல் ........

இடம் : புக்கிட் கொம்பாக்


புக்கிட் கொம்பாக் மின் தொடர் வண்டி நிலையத்தின் அருகில் பதிவர்கள் அனைவரும் 3 மணிக்கு கூடவும். அங்கிருந்து விழா நடை பெறும் இடத்திற்கு ஊர்வலமாலக செல்ல இருக்கிறோம். இவ் ஊர்வலத்தை சிங்கை நாதன் அவர்கள் தலைமையேற்று நடத்துவார்.

இம்முறை பல முக்கிய விவாதங்களுடன் சில சந்தோஷ கொண்டாட்டங்களும் இடம் பெற உள்ளன. வழக்கம் போல் சிங்கை நாதன் அவர்கள் எல்லோருக்கும் அல்வா கொண்டுவருவார், கோவி.க அண்ணண் கொஞ்சம் பஜ்ஜியும், நிறைய சட்னியும் கொண்டுவருவார். ( வழக்கம் போல நாங்கல்லாம் சாப்பிட்டுட்டு வருவோம்.)

சிங்கையில் உங்களுக்கு தெரிந்த மற்ற பதிவர்களையும் அழைத்து வாருங்கள். இது பதிவர்களுக்கு மட்டுமான சந்திப்பு அல்ல. விருப்பம் உடைய வாசகப் பெருமக்களும் இச் சந்திப்பில் கலந்து கொண்டு, உங்கள் அபிமான(???) பதிவர்களை நேரில் சந்தித்து, உரையாடி மகிழலாம்.

நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள அலைபேசி எண்கள்:

ஜோசப் பால்ராஜ் : +65 - 93372775
கோவி.கண்ணண் : +65 - 98767586
ஜெகதீசன் : +65 - 90026527
Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•1:25 PM
மின் வெட்டால் தமிழகம் மட்டுமின்றி, நாடே தத்தளிக்கும் இவ்வேளையில் ஒரு கிராமம் தன் மின் தேவைக்கு பிறரை சார்ந்திருக்காமல் சாதனை படைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் உள்ள ஒரு பஞ்சாயத்துதான் ஓடந்துறை. இந்த பஞ்சாயத்துக்குட்பட்டு மொத்தம் 11 கிராமங்கள். அத்தனை ஊர்களுக்கும் குடிநீர் எந்த வித பிரச்சனையுமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.

மரத்துண்டுகளை எரிச்சு, அந்தப் புகையை தண்ணீருடன் கலந்து வடிகட்டி கியாஸ் தயா ரிக்கும் 'பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ்' (Biomass Gasifier Gas) யூனிட்டை அமைச்சு, அதுல கிடைக்கிற கியாஸ் மூலமா 9 ஹெச்.பி. மோட்டார் ஒண்ணு கரன்ட் இல்லாம இயக்கப்படுகிறது. அதை கொண்டு ஓடந்துறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட எல்லா கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் தடையில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.

அதோடு மட்டுமில்லாமல், தெருவிளக்குகள் அனைத்தையும் சூரிய ஒளி விளக்காக அமைத்துள்ளார்கள். இதனால் இரவுகளில் தடையில்லாமல் தெரு விளக்குகள் ஒளிர்ந்து கொண்டுள்ளன.

இந்த‌ கிராம‌ம் காற்றாலை மின் உற்ப‌த்திக்கு ஏதுவான‌ இட‌த்தில் அமைந்திருப்ப‌தால் காற்றாலை ஒன்றையும் சொந்த‌மாக‌ நிறுவியுள்ளார்க‌ள். இத‌ன் மூல‌ம் வ‌ருட‌த்திற்கு ஏழே முக்கால் லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. தங்கள் பஞ்சாயத்தின் தேவை போக மீதமுள்ள மின்சாரத்தை மின் வாரியத்திற்கு விற்று சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு காற்றாலைக்காக வாங்கிய வங்கிக் கடனை அடைக்கிறார்கள். கடன் முழுவதும் அடைக்கப்பட்டுவிட்டால் அந்த ஊராட்சி சுய வருமானமுள்ள ஊராட்சியாகிவிடும்.

அதோடு மட்டுமின்றி எல்லா வீடுகளிலும் சூரிய ஓளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் அமைப்பையும், சிறிய காற்றாலை ஒன்றையும் அமைத்து ( Solar and Wind hybrid system )அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து வீடுகளின் உபயோகத்திற்கு பயன்படுத்தும் திட்டம் ஒன்றையும் செயல்படுத்த இருக்கின்றார்களாம்.

இந்த திட்டத்தை செயல்படுத்த ஆரம்பச் செலவு அதிகம் என்பதும், இது ஜெர்மன் போன்ற நாடுகளில் வெற்றிகரமாக செயல்படும் திட்டம் என்பதும், ஜெர்மனியில் இருந்து மிக குறைந்த விலையில் சோலார் பிளேட்டுகளை வாங்க முடியும் என்பதும் அந்த ஊராட்சித் தலைவி லிங்கம்மாளுக்கு நன்கு தெரிந்து இருக்கின்றது. ஆனால் நம் மின்சார துறை அதிகாரிகளுக்கோ, அமைச்சருக்கோ இது தெரியவில்லை.

மரபு சாரா எரிசக்தி உற்பத்திக்கு மத்திய அரசு மானியங்கள் மட்டும் வழங்குகின்றது. ஆனால் அதில் உள்ள வாய்ப்புகளை பெரிய அளவில் விளம்பரம் செய்வதில்லை. இது போல் ஆர்வமாக பல நல்ல திட்டங்களை செய்யும் ஓடந்துறை ஊராட்சிக்கு கட்டாயம் அரசு உதவிகளைத் தாராளமாகச் செய்து கொடுத்தால் அவர்கள் கட்டாயம் அவர்கள் முழு சுயசார்பு ஊராட்சியாக முன்னேறிவிடுவார்கள்.

சூரிய ஒளி விளக்குகளை அமைக்க அரசு தாராளமாய் மானியங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஏன் எல்லா கிராமங்களிலும், நகர்புறங்களிலும் உள்ள தெரு விளக்குகளை சூரிய சக்தியில் செயல்படும் விளக்குகளாக மாற்றக் கூடாது? இதை ஏன் அரசே முன் நின்று செய்யக் கூடாது ? இதனால் பெருமளவில் மின் உபயோகம் குறைவதோடு, உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பெருமளவில் மின் கட்டணம் குறையும். அதேப் போல் 'பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ்' நுட்பத்தையும் எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் பயன்படுத்தலாமே ? எல்லா ஊராட்சிகளுக்கும் இதை பரிந்துரைக்கலாம் அல்லவா?

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ் முறையில் அவர்களே அவர்களது மின் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு உதவிகள் செய்து கொடுத்தால் விவசாயிகளும் மின்வெட்டால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தப்பித்து விடுவார்கள், அதோடு அரசுக்கும் மின் செலவு குறையும். பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ் முறையில் நீர் மூழ்கி மோட்டார்களை இயக்க முடியுமா எனத் தெரியவில்லை. அப்படி முடியாத பட்சத்தில் நீர் மூழ்கியல்லாத அனைத்து மோட்டார்களுக்கும் இம் முறையை பயன்படுத்தச் செய்யலாம்.

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெறும் விளக்குகள் கோடை காலங்களில் 100 சதவீதம் சூரிய ஒளியிலிருந்தே மின்சாரம் பெற்றுவிடும். ஆனால் மழைக்காலங்களிலும் வெயில் குறைவாக இருக்கும் காலங்களிலும் மின் உற்பத்திக் குறைவாகவே இருக்கும் என்பதால், தற்போது இருக்கும் மின்சாரத்தை அச்சமயங்களில் பயன் படுத்திக்கொள்ளும் வகையில் கவனமாக திட்டமிட்டு செயல்படுத்தினால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தெரு விளக்குகளை இயக்க முடியும். கோடை காலங்களில் நீர் மின் உற்பத்தி குறைவால் ஏற்படும் பற்றாகுறையை சூரிய ஒளி மின்சாரத்தைக் கொண்டு சமாளிக்கலாம். அதே போல் மழைக்காலங்களில் நீர் மின் உற்பத்தி நன்றாக இருக்கும் என்பதால் சூரிய ஒளி மின்சாரத்தில் ஏற்படும் பற்றாகுறையை சரி செய்யலாம்.

அதோட இதெல்லாம் சுற்றுப்புறச் சூழலை கெடுக்காத நல்லத் திட்டங்களா வேற இருக்கு. ஓடந்துறையின் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் திரு.சண்முகம், தற்போதைய பஞ்சாயத்துத் தலைவரான அவரது மனைவி திருமதி. லிங்கமாள் ஆகியோரிடமாவது போய் நம் மின் துறை அமைச்சர் ஆற்காட்டார் பாடம் கற்றுக் கொண்டுவந்தால் மிக நல்லது.

எல்லா ஊர்களும் காற்றாலை மின் உற்பத்தியில் இறங்க இயலாது. ஆனால் சூரிய ஒளி மற்றும் பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ் முறைகளை எல்லோரும் உபயோகிக்க முடியும். இவை எல்லாமே மிக எளிதாக செயல்படுத்த முடிகின்ற திட்டங்கள் தான். அதை நாம் செய்து ஒரு ஊரில் குறைந்தது 100 யூனிட் மின்சாரத்தை சேமித்தாலும் ஒரு மாவட்டத்தில் எவ்வளவு மின்சாரத்தை சேமிக்க இயலும்? அது எவ்வளவு உபயோகமாக இருக்கும் ? சும்மா அணு ஒப்பந்தம் நிறைவேறியவுடன் எல்லாம் சரியாயிடும்னு கதை சொல்லிக்கிட்டு இருக்காம சின்ன சின்னதா இது மாதிரி திட்டங்கள நிறைவேத்துனா பலன் பெரிய அளவுல இருக்கும்ல?

இது போன்ற‌ திட்டங்களில் எல்லா ஊர்களிலும் உள்ள ஊராட்சித் தலைவர்கள் சற்று கவனம் செலுத்தினாலாவது நாம் ஆற்காட்டாரை திட்டாமல் நம்ம வேலைய நாமலே பார்த்துக்கிட்டு போகலாம். கிராமங்கள் முன்னேறினால் தான் நாடு முன்னேறும் என்று காந்தியும் சொன்னாரு. அப்துல் கலாமும் சொல்லிக்கிட்டு இருக்காரு. எல்லா கிராமங்களும் இப்படி தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் நிலைக்கு வந்துட்டா எப்டியிருக்கும் ? நல்ல கற்பனையா இப்போதைக்கு இருக்கிறது, நாலு பேரு மனசு வைச்சா சீக்கிரமே நடக்கும். நடக்கணும்.

பின் குறிப்பு: 14.09.2008 தேதியிட்ட ஜீனியர் விகடனில் வெளிவந்த செய்தியிலிருந்து தெரிந்து கொண்டதை வைத்து தான் நான் இப்பதிவை எழுதியுள்ளேன். செய்தி மூலத்திற்கு ஜீ.வி க்கு எனது நன்றிகள். Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•10:44 AM
சாதி ஒழியணும் ஆனால்... என்ற தலைப்பில் கோவி.க அண்ணண் எழுதிய பதிவிற்கு பின்னூட்டமிட்டிருந்த அது சரி என்பவர் பொருளாதரத்தில் முன்னேறியவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். எனது கேள்வியும் இதுவே.

க்ரீமி லேயர் என்று சொல்லும் இவர்கள் இட ஒதுக்கீட்டின் சலுகைகளை அனுபவித்துக்கொண்டே சென்றால் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள் அதே நிலையிலேயே தொடர்ந்து இருந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் எப்படி முன்னேற முடியும்?

இடஒதுக்கீட்டில் தற்போது இருக்கும் நடை முறை மாற வேண்டும். பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் ஒரு பிரிவாகக் கருதப்பட வேண்டும். அதாவது ஒரு குடும்பத்தில் இட ஒதுக்கீட்டில் கல்வி பயின்று, வேலை வாய்ப்பும் பெற்று நல்ல நிலைக்கு வந்தவர் இட ஒதுக்கீட்டின் பலனை அடைந்த முதல் தலைமுறை, இவரது மகன்/மகள் அந்த குடும்பத்தின் இரண்டாம் தலைமுறைக்கும் இட ஒதுக்கீடு அளிக்கலாம். ஆனால் அதற்கு பின்னர் மூன்றாம் தலைமுறை பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவாக அறிவிக்கப்பட வேண்டும்.அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன் போகக் கூடாது. இரண்டு தலைமுறையை தூக்கிவிட அரசு உதவலாம். அதற்கு மேல அவனே ஏற வேண்டியதுதான். தான் விலகிக்கொண்டு பிறருக்கு வழிவிட வேண்டும். சரியானத் திட்டமிடுதலின் மூலம் இதை அருமையாக நடைமுறைப் படுத்தலாம்.

இதை செயல்படுத்த முதல் தேவை ஒருங்கிணைந்த அடையாள அட்டை. ஒரு தனிப்பட்ட அடையாள எண் ( Unique Identification Number) கொண்ட ஒருங்கிணைந்த அடையாள அட்டை எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும். அரசின் சலுகைகள் மூலமாக அவர்கள் அனுபவித்த பலன் எல்லாம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு மாணவண் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் போது, அவனது அடையாள எண்ணைக் கொண்டு அவன் குடும்பத்தில் மொத்தமாக எத்தனை பேர் சலுகைகளை அனுபவித்துள்ளார்கள்,எத்தனை தலைமுறையாக அந்த குடும்பத்தினர் சலுகை அடைந்துள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, அதன் மூலம் அவர்களுக்கு இட ஒதுக்கிட்டின் பலனை அளிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம்.

மேலும் ஒருவர் எந்த முதலீடு செய்தாலும் அதில் அடையாள அட்டை எண் குறிப்பிடப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஒருவருக்கு உள்ள சொத்து மதிப்பின் அளவு தெரியும். அவரது குடும்பத்தாருக்கு உள்ள மொத்த சொத்து மதிப்பும் தெரியும். எனவே பொருளாதார அடிப்படையில் அவர்களால் கட்டண இடங்களில் படிக்க முடியுமா இல்லையா என்பதை தீர்மானிக்கலாம். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சொத்து உள்ளவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் கீழ் சலுகை காட்டக் கூடாது.

பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் என தற்போது இருக்கும் பிரிவுகளுள் பொருளாதாரத்தில் பின் தங்கியோர் என ஒரு பிரிவையும் சேர்க்க வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மொத்த‌ மாணவர்களில் மேம்பட்ட பொருளாதார வசதிகள் கொண்டவர்களை பொதுப்பிரிவாக கருதி, மீதம் உள்ள மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலனை அளிக்கலாம். தற்போது இட ஒதுக்கீட்டின் மூலம் எந்த சலுகையையும் அடைய முடியாத மேல்வகுப்பை சேர்ந்தவர்களாய் இருந்தாலும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாய் இருந்தால் அவர்களுக்கு பொருளாதாரத்தில் பின் தங்கியோர் பிரிவின் கீழ் சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்.

எந்த ஒரு அரசு ஊழியராவது லஞ்சம், ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டணை அடைந்திருந்தால் அந்த வழக்குகளின் விவரங்களும் அவரது அடையாள எண்ணை கொண்டு தெரிந்து கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட வேண்டும். இப்படி தண்டணை அடைந்தவர்களின் குடும்பத்தார்க்கு இடஒதுக்கீட்டின் பலன்கள் மறுக்கப்பட வேண்டும்.

அதே போல் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், நகராட்சி, மாகநகராட்சி மன்ற உறுப்பினர்கள் குழந்தைகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட கூடாது. இது ஏன் என தனியாக நான் சொல்ல வேண்டியதில்லை என நம்புகிறேன்.

இந்த முறையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தினால், வருடா வருடம் ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு மாணவர்கள் விண்ணப்பிக்கின்றார்கள் என்பதை கணக்கிட்டு இட ஒதுக்கீட்டின் சதவீதத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் படிப்படியாக பொதுப் பிரிவின் சதவீதம் கூடி , மற்றப் பிரிவுகளில் சதவீதம் குறைந்து கொண்டே வரும். 100 ஆண்டுகள் கழித்து சுத்தமாக சாதி ரீதியிலான‌ இட ஒதுக்கீடு மறைந்தாலும் மறைந்து விடும். அதன் பின் பொருளாதார வசதிகளின் அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு இருக்குமாறு செய்யலாம்.

இந்த இட ஒதுக்கீடு முறைக்கு முக்கிய தேவையாக நான் கூறும் ஒருங்கிணைந்த அடையாள அட்டை முறையை நடை முறைப்படுத்த மிக அதிக அளவில் செலவாகும், மிக அதிக நாட்கள் ஆகும் என்று தட்டிக்கழிக்க முற்படுவார்கள். 2 ஆண்டுகளாவது இதை நடைமுறைப்படுத்த ஆகும். மேலும் பொருட் செலவும் அதிகம்தான். ஆனால் இது ஒரு அடிப்படை வசதி, இது இட ஒதுக்கீட்டிற்கு மட்டும் பயன்படக்கூடிய ஒன்றல்ல. 110 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இன்னும் ரேஷன் அட்டையை அடையாள அட்டையாக உபயோகிக்கும் நிலையில்தான் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கின்றார்கள். இப்படி ஒரு அடையாள அட்டையை முதலில் கொடுத்து முழுமையான கணிணி நிர்வாகத்தை கொண்டுவருவது தகவல் தொழில்நுட்பத்தில் முண்ணணியில் இருக்கும் நாடான நமக்கு ஒரு பெரிய விசயமே அல்ல.

இட ஒதுக்கீட்டையும் ஓட்டு வாங்கும் துருப்புச் சீட்டாக பயன்படுத்தி, சாதி வித்தியாசங்களை ஒழிக்க முன்வராமல் அதைத் தூண்டிவிட்டு குளிர்காயும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை இந்தப் பிரச்சனைக்கு தீர்வு என்பதே இருக்காது. யாராவது ஒரு நல்ல தலைவர் இப்படிச் சிந்தித்தால்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். மாற்றம் வருமா ??? Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•6:05 PM
விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாலத்தான் தீ விபத்து நடந்தது - முதலமைச்சர் அறிக்கை

தீயணைப்பு சான்றிதழே பெறாமல் ஐந்து மாடிக் கடை - தீயணைப்புத் துறை இயக்குநர்

அந்த இடத்துல திடீர்னா ஐந்து மாடிக்கட்டிடம் கட்டுனாங்க? பல வருசங்களா அந்த பல மாடிக்கட்டிடம் இருந்துகிட்டேத்தானே இருக்கு ?

இத்தனை நாளு முதல்வருக்கு இது தெரியவே தெரியாதா? தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு அந்த கட்டிடத்துக்கு சான்றிதழ் வாங்கிருக்காங்களா இல்லையான்னு கூடத் தெரியாதா?

தமிழ்நாட்டுலயே மொத்தம் 968 பெரியக் கட்டிடங்கள் தான் இருக்கு, அதுல 661 கட்டிடங்களுக்கு சென்னையில இருக்குன்னு சொல்லிருக்காரு அந்த அதிகாரி. மொத்த‌ த‌மிழ்நாட்டுல‌யும் 968 பெரிய‌ க‌ட்டிட‌ங்க‌ள் தான் இருக்குன்னா, அந்த‌ 968ல‌யும் எல்லா விதிமுறைக‌ளும் பின்ப‌ற்ற‌ப்ப‌ட்டிருக்கா, முறைப்ப‌டி தீய‌ணைப்பு வ‌ச‌திக‌ள் செய்ய‌ப்ப‌ட்டிருக்கா, அவ‌ச‌ர‌க்கால‌ங்க‌ளிலும், விப‌த்து நேர‌ங்க‌ளிலும் பொதும‌க்கள் பாதுகாப்பா வெளியேறும் வ‌ழிக‌ள் அமைக்க‌ப்ப‌ட்டிருக்கான்னு கூட‌ ந‌ம்ம‌ தீய‌ணைப்புத்துறையால‌ சோத‌னை செய்ய‌ முடியாதா?

தீயணைப்புத் துறையின் அனுமதியே இல்லாமல் இருந்ததாம், தீயணைப்புத்துறை அதிகாரி இப்பத்தான் சொல்றாரு. இவ்ளோ நாளு என்ன செஞ்சுக்கிட்டு இருந்தாரு? சரிங்க, என் கேள்வி, இந்த 900+ கட்டிடங்களும் முறைப்படி தீயணைப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கா, அவசரக் காலத்துல வெளியேற வசதிகள் இருக்கான்னு எல்லாம் யாருமே சோதிக்க மாட்டாங்களா?

விதிமுறைக‌ளை மீறிக்க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ க‌ட்டிட‌ங்க‌ளை இடிக்க‌ச் சொல்லி தொட‌ர‌ப்ப‌ட்ட‌ பொதுந‌ல‌ வ‌ழ‌க்கில் நீதிம‌ன்ற‌ம் இடிக்க‌ச்சொல்லி உத்த‌ர‌விட்டு அதே தியாக‌ராய‌ந‌க‌ரில் உள்ள‌ சென்னை சில்க்ஸ் க‌ட்டிட‌த்தின் சில‌ த‌ள‌ங்க‌ள் இடிக்க‌ப்ப‌ட்ட‌ போது, இந்த‌ க‌ட்டிட‌ங்க‌ள் எப்ப‌டி த‌ப்பின‌? அப்போது கூட‌ தெரிய‌வில்லையா இவையும் விதிமுறையை மீறித்தான் க‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ என்ப‌து?

இந்தியாவில் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று எல்லோரும் புலம்புகின்றார்கள். இன்னும் மனித உயிர்களுக்கு மதிப்பு மட்டும் உயரவே இல்லை. ஏதாவது விபத்து ஏற்பட்டால் இரண்டு நாட்களுக்கு மட்டும் எல்லோரும் பேசிட்டு போயிகிட்டே இருக்காங்க. அரசாங்கம் முதல்வர் நிவாரண நிதியில கொஞ்சம் பணம் கொடுக்கும், விளம்பரத்துக்கு எல்லா அரசியல்கட்சிகளும் கொஞ்சம் உதவி செய்வாங்க, அவ்ளோதான் எல்லாரும் மறந்துடுவாங்க.

90 பச்சிளம் குழந்தைகள் உயிரோடு கருகியப்பின்னர் தான் பள்ளிகளில் பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என ஆரய அரசு உத்தரவிட்டது. தற்போது 2 உயிர்கள் பலியாகியுள்ளன. இனியாவது அரசு முழிக்குமா? அதிகாலையிலயே சரவாணா கடை எரிஞ்சதால 2 உயிர்களோட போச்சு, ஆனா அதே விபத்து காலை 11 மணிக்கு மேலயோ அல்லது மாலை நேரத்துலயோ நடந்துருந்தா ??? யோசிக்கவே பயமா இருக்குங்க.

இவ்வளவு மோசமாக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால் கட்டாயம் இந்த விபத்திற்கு இழப்பீடு எதுவும் கொடுக்க கூடாது. மேலும் இந்த விதிமீறல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும். மேலும் அதே ரெங்கநாதன் தெரு மட்டுமல்ல, இன்னும் இது போல நெருக்கடி நிறைந்த பல இடங்களில் உள்ள பொதுமக்கள் கூடும் வியாபார நிறுவனங்களில் எல்லாம் முறையாக சோதனை செய்து, அதில் ஏதாவது விதி மீறல்கள் இருந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது ரம்ஜான் மற்றும் தீபாவளிப் பண்டிகை காலம், மக்கள் பெருமளவில் புத்தாடைகள் வாங்க இந்த கடைகளுக்குத்தான் செல்வார்கள். இப்போதே உடனே அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தயவு தாட்சண்யமே இல்லாமல் விதிமுறைகளை மீறிய நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முன்வந்தாளாவது பண்டிகை கால லாபங்களை இழக்க விரும்பாத நிறுவனங்கள் உடனே விதிமுறைகளை நடைமுறைபடுத்த முன்வருவார்கள். இனியாவது முழிக்குமா அரசு ? Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•2:33 PM
இது பொம்பளைங்க சமாச்சாரம்..பெண்ணியவாதிகள் கவனிக்க.. என்ற தலைப்பில் என் அருமை நண்பர் சஞ்சய் ஒரு பதிவிட்டிருந்தார். எதிர்காலத்தில் மகளிர் முன்னேற்றத்திற்காக பாடுபட விரும்பும் அவரது தோழி கூறிய திட்டமாக பெண்களின் மாதாந்திர தேவையான சானிடரி நாப்கினை ஒரு ரூபாய்க்கு விநியோகிக்கும் திட்டத்தை எழுதியிருந்தார். முதலில் சஞ்சய்யின் தோழி இப்படி ஒரு சிந்தனை கொண்டவராய் இருப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மிகப்பெரும் நிறுவனங்கள் சானிடரி நாப்கினை தயாரிக்க உபயோகிக்கும் இயந்திரங்களின் விலை 75 லட்சங்களில் இருந்து 2.5கோடிகள் வரை இருக்கும். பெரும் நிறுவனங்கள் தங்களது விளம்பர செலவு முதல், விநியோக செலவு வரை எல்லாவற்றையும் பொருளின் விலையில் சேர்ப்பதால் மிக அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை. இந்த விலை கிராமப்புற ஏழை பெண்களுக்கு இன்னும் எட்டாத அளவில் இருப்பதால் அவர்கள் இதை வாங்கிப் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றார்கள். அப்படியிருக்க 1 ரூபாய்க்கு விற்பது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி எழலாம்.

கோவையை சேர்ந்த முருகானந்தம் என்பவர் மிகக் குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரங்களைத் தயாரித்து, அதை கொண்டு நாப்கின் தயாரிக்கும் செய்முறைகளை கற்றுத்தந்து விற்பனை செய்து வருகிறார். இதற்கு மூன்று சிறு இயந்திரங்கள் தேவை. இயந்திரங்களின் விலை, அவற்றை நிறுவுதல் மற்றும் பயிற்சி ஆக மொத்தம் 60 ஆயிரம் ரூபாய் மட்டுமே. இவ்வியந்திரங்களை நிறுவி தயாரிப்பு வேலைகளில் ஈடுபட தேவையான இடம் கூட ரொம்ப அதிகமில்லை. 16 அடி நீளம் 16 அடி அகலம் கொண்ட ஒரு கூடம் போதும். 4 வேலையாட்கள் போதும். ஒரு நாளில் 8 நாப்கின்கள் கொண்ட 180 பாக்கெட்டுகள் தயாரிக்க முடியும்.

இந்த இயந்திரங்களை பயன்படுத்தி 8 நாப்கின்கள் கொண்ட ஒரு பாக்கெட் தயாரிக்க 8 ரூபாய் மட்டுமே செலவாகின்றது. ஒரு பாக்கெட் 12.50 க்கு விற்றால் சுயஉதவிக்குழுவினர் லாபகரமாக இத்தொழிலைச் செய்யலாம். மேலும் ஒரு நாப்கின் 1.50க்கு கிடைக்கும்.

இதை கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு வாங்கிக் கொடுத்து, அவர்களுக்கு பயிற்சியும் அளித்தால் அவர்கள் சுலபமாக தயாரித்து தங்கள் பகுதி கிராமங்களில் நேரடியாக விற்றுவிடுவார்கள். இதனால் விளம்பர செலவு,விநியோக செலவு, சில்லரை வர்த்தக லாபம் போன்றவை தவிர்க்கப்படும்.

நண்பர் சஞ்சய் தனது பதிவில் இலவசமாக அரசே பெண்களுக்கு நாப்கின் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த இலவசக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏன் எல்லாவற்றுக்கும் அரசையே எதிர்பார்க்க வேண்டும்? ஏன் எல்லாவற்றையும் இலவசமாகவே பெற வேண்டும்?

தற்போது ஏறத்தாழ எல்லா கிராமங்களிலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் எல்லா இடங்களிலும் அவர்கள் வெற்றிகரமாக செயல்படுவதில்லை. 5 கிராமத்துக்கு ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து அங்குள்ள சுய உதவிக்குழுவுக்கு பயிற்சியளித்து இவ்வியந்திரங்களை வாங்க வங்கிக்கடன் ஏற்பாடு செய்து கொடுத்தால் அவர்களே வெற்றிகரமாக இதை செய்ய மாட்டார்களா? அவர்கள் தயாரிக்கும் நாப்கின்களை அடுத்த ஊர்களில் உள்ள குழுக்களின் மூலமாக விற்கலாம். நேரடியாக விற்கும் போது ஒரு பாக்கெட் 12.50 க்கு விற்றால் பிற ஊர்களில் உள்ள குழுக்களுக்கு விற்கும் போது 11 ரூபாய்க்கு விற்றால் அவர்கள் 1.50 லாபம் சம்பாதித்துக்கொள்ளலாம்.

வேண்டுமானால் அரசாங்கம் இந்த இயந்திரங்கள் வாங்க அளிக்கும் கடன் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மானியமாக அளிக்கலாம். இதனால் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் சுமை குறையும், அதன் மூலம் அவர்கள் இன்னும் குறைந்த விலையில் விற்பனை செய்ய இயலும்.

இந்த இயந்திரங்களின் பயன்பாடு , இதைக் கொண்டு ஒரு தொழிலை ஆரம்பிக்கத் தேவையான திட்ட அறிக்கை(Project Report) எல்லாம் கீழேயுள்ள இணையதளத்தில் மிகத் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

திட்ட விளக்கம்

திட்ட அறிக்கை

இந்த இயந்திரங்களை கண்டுபிடித்த திரு. முருகானந்தம் அவர்களை தொடர்பு கொள்ள.

Jayaashree Industries
SF No. 577 KNG Pudur Road
Somayampalaym (Po)
Coimbatore - 641 108.
Mobile; - 92831 55128, 98422 15984


அவரது மின்னஞ்சல் முகவரி: muruganantham_in@yahoo.com

சஞ்சயின் தோழி போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களும், எதையாச்சும் செய்யனும் என்ற எண்ணம் கொண்டவர்களும் இதையாச்சும் செய்யலாம். இதில் நாம் ஒன்றும் நம் கை காசை செலவழிக்க வேண்டியதில்லை. நமக்கு தெரிந்த கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு இதை எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு வங்கிக்கடன் ஏற்பாடு செய்து கொடுத்து தொழிலை ஆரம்பிக்கச் செய்யலாம்.

மிகக் குறைந்த விலையில் கிராப்புறப் பெண்களுக்கு சுகாதாரமான நாப்கின்கள் கிடைப்பது, கிராப்புற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் ஒரு நல்ல தொழில் வாய்ப்பு கிடைப்பது என பல நன்மைகளை கொண்ட இத்திட்டத்தை கட்டாயம் செயல்படுத்த முன்வரவேண்டும். Udanz
Links to this post
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க