Author: ஜோசப் பால்ராஜ்
•9:33 PM
இரண்டு நாளைக்கு முன்னாடி பிரபலப் பதிவர், எழுத்தாளர், சிறுகதை ஆசிரியர் அன்பு அண்ணண் பரிசல் சிறு விபத்துக்குள்ளானார் என்பது எல்லாருக்கும் தெரியும். இப்ப அண்ணண் நல்லாருக்கார்.

முன்னால் சென்ற வாகனம் திடீரென நிறுத்தியதால், இவரது காரை இவர் நிறுத்த, பின்னால் வந்தவர் மட்டும் நிறுத்தாம இவர் காருல மோதினதால இவர் தல கண்ணாடியில இடிச்சு காயமாயிருச்சு. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர்ல இதே போன்று கார் திடீரென நிறுத்தப்பட்ட போது காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த “அண்ணண்” அப்துல்லா காரின் முன் கண்ணாடியில் தலை மோதி காயமடைந்திருந்தார். கார்ல இருக்கை பட்டைய( Seat Belt) மாட்டிக்கிட்டு பயணிச்சுருந்தா இந்த விபத்துகளை கண்டிப்பா தவிர்த்திருக்கலாமே. ஏன் அத யாரும் செய்ய மாட்டேங்குறீங்க? ( இதுல வெளிநாட்டுல இருந்து வர்றவய்ங்க, பழக்க தோசத்துல அந்தப் பட்டைய எடுத்து மாட்டீட்டா நம்மாளுங்க அடிக்கிற கிண்டல் இருக்கே, பல தடவ அனுபவிச்சுருக்கேன் நானு).

உமா சங்கர் ஐ.ஏ.எஸ் ஒரு முறை குடும்பத்தோட சென்னையில இருந்து திருச்சிக்கு கார்ல வர்றப்ப, அந்த கார் திருச்சிக்கு அருகே தலைகுப்புற கவிழுந்து பல்டியெல்லாம் அடிச்சுதாம். ஆனா அவர் மொத்த குடும்பத்துக்கும் ஒன்னுமே ஆகல, பத்திரமா வெளில வந்துருக்காங்க. காரணம் வண்டியில ஏறுனதும் எல்லாரையும் பெல்ட் போட்டே ஆகணும்னு கட்டாயமா சொல்லியிருந்தாராம் உமாசங்கர் ஐயா. இனியாவது இதை படிக்கிறவங்க, கட்டாயமா சீட் பெல்ட உபயோகப்படுத்துங்க. குறைந்தபட்சம் வாகனங்களில் முன் இருக்கைகளில் அமர்பவர்களும், வாகனத்தை ஓட்டுபவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து செல்லுங்கள்.

முன்பெல்லாம் சாலை சரியில்லாம விபத்துகள் நடந்துச்சு. இப்ப நல்ல சாலைகள் இருக்கு, ஆனா அத எப்டி உபயோகிக்கிறதுன்னு நம்மாட்களுக்கு தெரியலை.
மெதுவாக செல்லும் கனரக வாகனங்கள் சாலையின் இடபுற தடத்தில் தான் செல்ல வேண்டும் என்பது சாலை விதி. ஆனால் இதை எவரும் கடைபிடிப்பது கிடையாது. மிக அதிகளவில் பாரமேற்றப்பட்டு செல்லும் லாரிகள், டாட் ஏஸ், மினிடோர் போன்ற வாகனங்கள் கூட சாலையின் வலது தடத்தில் தான் செல்கின்றன. இவர்களை இடதுபுறமாக மற்றவர்கள் முந்திச் செல்கின்றார்கள். அதோடு நன்றாக அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் திடீரென குறுக்கே ஓடுபவர்களும் இன்னமும் இருக்கின்றார்கள். சாலை நன்றாக இருப்பதால் வேகமாக வாகனங்கள் செல்வதால் இது போல் குறுக்கே ஓடுபவர்களால் விபத்து ஏற்படுவதை தவிர்க்கவே இயலாது.

முதலில் 4 தடமுள்ள சாலைகளில் எப்படி வாகனங்களை ஓட்டுவது, யார் யார் எந்த தடத்தில் செல்லலாம் , எப்படி முன் செல்லும் வாகனத்தை முந்துவது, எப்படி ஒளி சமிக்கைகள் குடுப்பது என்பது குறித்து கட்டாயம் பயிற்சியளிக்க வேண்டும்.

முன் செல்லும் வாகனம் வலதுபுறம் திரும்பும் சமிக்ஞை(Right Indicator) குடுத்தால் பின்செல்லும் வாகனம் முன்செல்லும் வாகனத்தை முந்திக்கொள்ளலாம் என அர்த்தம் என எங்கள் வாகனத்தை ஓட்டியவர் சொன்னார். கேட்டதும் அதிர்ந்து போயிட்டேன்.

ஒரு வேளை என் போன்றவர்கள் வலது சமிக்ஞை போட்டுவிட்டு வலது தடத்திற்கு மாற முயற்சிக்கும் போது, பின்னால் வருபவர் முந்திக்கொள்ள அவருக்கு சமிக்ஞை கொடுத்ததாக எண்ணி வேகமாக வந்தால் கட்டாயம் விபத்து ஏற்படுவதை தவிர்க்க இயலாது. இதை என்னவென்று சொல்வது?
மிக கடுமையான பயிற்சிகள் வாகன ஓட்டிகளுக்கு தரப்பட வேண்டும். பயிற்சியளிப்பதோடு , அதை ஒழுங்காக கடைபிடிக்கின்றார்களா என கண்காணிக்கவும் வேண்டும். இது போன்ற வசதிகளை மட்டும் செஞ்சுட்டு அத எப்படி ஒழுங்கா உபயோகிப்பதுன்னு தெரியாம இருக்கது, தீவிரவாதிகிட்ட இருக்க அணுகுண்டு மாதிரி மிக ஆபத்தானது.

அடுத்து இருச் சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிவோர் , சிலர் கட்டாயத்தின் பேரில் தலைகவசம் அணிந்தாலும், அதில் உள்ள வாரை ஒழுங்காக மாட்டாமல் , ரொம்ப அலட்சியமா விட்டுட்டு போயிட்டு இருக்காங்க. ஒரு வேளை கீழே விழுந்தால் அந்த அதிர்சியிலேயே தலைக்கவசம் தனியே கழண்டு விழுந்துவிடும். தலைக்கு எந்த பாதுகாப்பும் இருக்காது.

இதே போல் ஒரு விபத்து ஏற்பட்டு என்றென்றும் அன்புடன் பாலா அவர்களின் அக்கா மகன், 27 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தது இது தான்
இந்தப் பதிவுக்கான காரணம்: ஆனந்த் விபத்து நிகழ்ந்தபோது, ஹெல்மட் அணிந்திருந்தான். ஆனால், ஹெல்மட் ஸ்ட்ராப்பின் (strap) பக்கிளை (buckle) போடாததால், ஹெல்மட் கழண்டு விட்டதாக விபத்தை நேரில் பார்த்த ஒரு கடைக்காரர் கூறினார்.

ஆகவே, பைக்கில் செல்பவர் ஹெல்மட் போட்டால் மட்டும் போதாது. ஹெல்மட் strap buckle ஐயும் சரியாக போட்டுக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். இவ்விடுகையை வாசிக்கும் (டூ வீலரில் பயணிக்கும்) நண்பர்களுக்கு இதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்.
இது போல் பலர் அலட்சியமாக இருப்பதையும் காண நேரிடுகிறது. இதெல்லாம் தானா வரணும், வரலைன்னு சட்டம் போட்டாலும் இப்டி செய்யிறாங்க, உயிரோட மதிப்பு அரசாங்கத்துக்கு மட்டுமில்ல, தனி மனிதர்களுக்கும் தெரியலை. இதப் படிக்கிற பிரபலங்கள், பெரியாட்கள் யாராச்சும் தயவு செஞ்சு இதை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நடைமுறைப்படுத்த உதவுங்கள்.

சாலைப் பாதுகாப்பு குறித்து இயற்கை மகளின் அழைப்பின் பேரில் சஞ்செய் எழுதிய பதிவில் மேலே குறிப்பிட்டிருந்ததை பின்னூட்டமாக சொல்லியிருந்தேன். சஞ்செய் கூட படிச்சாரான்னு தெரியல.

கேபிள் சங்கர் அண்ணண் கேட்டிருந்தபடி கதிர் என்ற
சிறுவனுக்கு காது கேட்கும் கருவி வாங்க உதவிய அத்தனை உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. ஊர் கூடி தேர் இழுப்பது போன்றது இந்த நல்ல காரியங்கள் எல்லாம். மூன்றே நாட்களில் மொத்த தொகையையும் திரட்ட உதவிய அத்தனை நல் உள்ளங்களுக்கும், முக்கியமா எங்க சிங்கை அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி .

தம்பி கதிர் நல்லவற்றை கேட்டு, நன்கு படித்து, நல்லவனாய் வளர்ந்து, பலருக்கும் உதவ வாழ்த்துவோம்.


என்னைப் போலவே பதிவெழுதாப் பதிவராய் திறம்பட செயலாற்றி எனக்கு உற்ற துணையாய் இருந்த அண்ணண் வெண்பூ இன்னைக்கு திடீர்னு நானும் பதிவர்தாண்டான்னு சொல்லிட்டு ஜீப்ல ஏறிட்டாரு. வேற வழியே இல்லைல, அதான் இன்னைக்கு நானும் பதிவெழுதி ஜோதியில கலந்துட்டேன். மிஸ்டர். சஞ்செய், ப்ளீஸ் நோட் திஸ்.

இன்னும் ஒருத்தர் இருக்காரு, எல்லாரையும் அண்ணண் அண்ணணு கூப்புடுறதால தம்பியின் டைரிக்குறிப்புன்னு எழுதிக்கிட்டு இருந்தாரு, அவரு சீக்கிரம் டைரிக்குறிப்பு எழுதலைன்னா மேலும் பல பதிவுகளை நான் எழுதுவேன்னும் எச்சரிக்கிறேன். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•5:51 PM
அண்ணண் சிங்கை நாதனுக்காக நாளை 27.08.2009 அர்ச்சனை செய்ய வசதியாக பலர் அவரது பெயர் மற்றும் நட்சத்திர விவரங்களை தொடர்ந்து கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
அனைவரின் கவனதிற்க்காகவும் இதை பதிவாக வெளியிடுகிறேன்.

முழுப் பெயர் : செந்தில் நாதன்
நட்சத்திரம் : பூராடம்
இராசி : தனுசு.


27.08.2009 வியாழன் அன்று காலை சிங்கப்பூர் நேரம் 8 மணிக்கு சிங்கை நாதனுக்கு அறுவை சிகிச்சைக்கான ஆயத்தங்கள் தொடங்கி, 10 மணியளவில் அறுவை சிகிச்சை ஆரம்பமாகும். இந்த அறுவைசிகிச்சை குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது நடைபெறும்.

உங்களுக்கு விருப்பமான முறைகளில் தொடர்ந்து உங்கள் ப்ரார்தனைகளை செந்தில் நாதன் அண்ணணுக்காக செய்யுமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறோம். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•9:32 PM
அன்பு நண்பர்களே, உலகெங்கும் இருக்கும் நல்ல உள்ளங்களின் தொடர் முயற்சியாலும், உதவியாலும் நமது இலக்கில் 75 சதவீதத்தை தற்போது அடைந்துள்ளோம். இத்தனை பெரிய தொகையை எப்படி அடைவது என்று அஞ்சியவர்களை பதிவிட்ட 10 நாட்களில் உலகெங்குமிருந்தும் உதவிகளை குவித்து சாத்தியமாக்கிய அன்பு உள்ளங்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

VAD எனும் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை தேதி 26ல் இருந்து 27க்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் 27.08.2009 வியாழன் அன்று காலை சிங்கப்பூர் நேரம் 8 மணிக்கு சிங்கை நாதனுக்கு அறுவை சிகிச்சைக்கான ஆயத்தங்கள் தொடங்கி, 10 மணியளவில் அறுவை சிகிச்சை ஆரம்பமாகும். இந்த அறுவைசிகிச்சை குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது நடைபெறும்.

எங்களைப் பார்க்கும் போதெல்லாம் சிங்கை நாதன் அண்ணன் கேட்பது கூட்டுப் பிரார்தனை செய்யுங்கள் என்பது தான். இந்த பெரிய அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்து , செந்தில் அண்ணா நல்லமுறையில் தேறி வர உங்கள் பிரார்தனைகளை தாருங்கள்.

வியாழன் அன்று செந்தில் நாதன் அவர்களுக்காக சிறப்பாக வேண்டிக்கொள்ளுங்கள். முடிந்தவர்கள் உங்க மத முறைகளில் வழிபாடுகள் ஏற்பாடு செய்யுங்கள். இத்தனை நல்ல உள்ளங்களும் ஒருங்கிணைந்து வேண்டும் போது அது நிச்சயம் நடக்கும்.

உதவிக் கொண்டுள்ள அத்தனை அன்புள்ளங்களுக்கும் மீண்டும் நன்றிகள். தொடர்ந்து சிறப்பாக உங்கள் ப்ரார்தனைகளையும், உதவிகளையும் வேண்டுகிறோம்.
Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•7:58 PM
சிங்கை நாதன் அவர்களுக்கு தற்காலிக ஏற்பாடாக Ventricular Assist Device (VAD) எனப்படும் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை ஆகஸ்ட் 26 புதன் அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. VAD கருவி இதய மாற்று அறுவை சிகிச்சை வரை தற்காலிக தீர்வாக செய்யப்படுகிறது.


அன்று நம் அனைவரையும் கூட்டுப் பிரார்தனை செய்யுமாறு செந்தில் நாதன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அறுவை சிகிச்சை முடிந்து அடுத்து மாற்று இதயம் கிடைத்ததும் அடுத்த அறுவை சிகிச்சை என இரண்டு பெரிய சிகிச்சைகளை கடக்க வேண்டியுள்ளது. எனவே அனைவரும் அவரது உடல் நலனுக்காக சிறப்பாக பிரார்தனை செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.




வலையுலகம் வெறும் மாய உலகமல்ல என நிருபிக்கும் இந்த மாபெரும் செயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள். தொடர்ந்து போராடுவோம். நம் உதவிகளாலும் , ப்ரார்தனைகளாலும் செந்தில் நாதன் அண்ணணை மீட்டெடுப்போம். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•8:41 PM
ரொம்ப நாளவே இந்த விளையாட்டு நடந்துக்கிட்டேத்தான் இருக்கு. ஆனா நம்மல யாரும் கூப்பிடல. ஏன் என்னைய யாரும் கூப்பிடலன்னு ஒரு சிலர கேட்டேன். ஒருத்தரு சொன்னாரு நீங்கள்லாம் பெரிய ஆளு, உங்களையெல்லாம் முன்னாடியே வேற யாராச்சும் கூப்பிட்டுருப்பாங்கன்னு நினைச்சுத்தான் கூப்புடாம விட்டுட்டோம்னாங்க. ஆகா, இந்த உலகம் இன்னமும் நம்மல நம்புதேன்னு விட்டுட்டேன். ஒருவழியா நம்மளையும் ரெண்டு பேரு கூப்புட்டுட்டாங்க. களத்துல இறங்கிட்டேன்.

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

அ.ஜோசப் பெனடிக்ட் பால்ராஜ் இதுதான் என்னோட முழுப் பெயர். ஜோசப் என்பது எங்கள் குடும்பத்துல எங்க தலைமுறையில இருந்து எல்லாருக்கு வைச்சுருக்க பொது பெயர், வீட்ல மொத்தம் 8 ஜோசப் இருக்கோம்.

கிறிஸ்தவர்களில் புனிதர்கள் என்று ஒரு சிலர் இருப்பார்கள்.அவர்களது பிறந்த தினங்களை அவர்களது Feast என கொண்டாடுவது வழக்கம், நான் பிறந்த ஜூலை 11 ஆம் நாள் புனித பெனடிக்ட் அவர்களின் Feast. இதனால் என் பெயருடன் பெனடிக்ட் சேர்ந்து கொண்டது.

நான் பிறந்த வருடம் தான் முந்தைய போப் 2 ஆம் ஜான் பால் அவர்கள் போப் ஆக தேர்வு செய்யப்பட்டார். எனவே பால் என்பதும் என் பெயரில் சேர்ந்துவிட்டது. ஜோசப் பெனடிக்ட் பால் அப்டின்னு இருந்தா நல்லாருக்காதுன்னு ராஜ் அப்டிங்கிற பெயர் எச்ச விகுதிய சேர்த்து முழுப் பெயரையும் உருவாக்கிட்டாங்க.

இவ்ளோ நீளமான பெயரா இருக்கதால விண்ணப்ப படிவங்கள்ல எல்லாம் எழுத சிரமப்பட்டாலும், எல்லாத்துக்கும் பொருத்தமான விளக்கமிருப்பதால் என் பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

30.4.2009 நள்ளிரவுல இருந்து இன்று வரை , தினமும் என் தந்தையின் மறைவை நினைத்து நினைத்து அழுது கொண்டிருக்கிறேன் .

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும். காரணம் என்னான்னா வேற யாருக்கும் என் கையெழுத்து புடிக்காது. புரியிற மாதிரி எழுதுனாத்தானே புடிக்கிறதுக்கு.

4).பிடித்த மதிய உணவு என்ன?

நான் ஆச்சாரமான அசைவ குடும்பத்துல பொறந்தவன். கொஞ்சமாச்சும் அசைவம் இருந்தா நல்லாருக்கும். ரொம்ப புடிச்சது ஆட்டிறைச்சி, ஆனா சிங்கப்பூர்ல கிடைக்கிறது ஆஸ்த்ரேலியால இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆட்டிறைச்சி, அது அவ்ளோ நல்லா இருக்காது. அதுனால அதிகமா சாப்புடுறதில்ல. கோழி, மீன் இதெல்லாம் ரொம்ப புடிக்கும்.
தயிர் சாதம் ரொம்ப புடிக்கும்.

இதே காலை உணவுன்னு கேட்ருந்தா என்னோட பதில் மொதல் நாள் வடிச்ச சோறுல தண்ணி ஊத்தி அடுத்த நாள் காலையில அதுல தயிர் ஊத்தி, சின்ன வெங்காயம் வெட்டிப் போட்டு , சுண்ட வைச்ச பழைய குழம்போட , மோர் மிளகா வத்தல் வறுவல் வைச்சுக்கிட்டு, வயகாட்டு வரப்புல தண்ணி ஓடிக்கிட்டு இருக்க வாய்கல்ல கால வைச்சுக்கிட்டு உக்காந்து சாப்புடுறதத் தான் சொல்லுவேன். இந்த உலகத்துல எங்க போய் என்ன சாப்புட்டாலும் இதுக்கு ஈடா ஒன்னு வராது. அனுபவிச்சவங்களுக்குத்தான் அதோட அருமை தெரியும்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

எல்லாருகிட்டயும் உடனே நல்லா பேசிருவேன், ஆனா எதிராளி எப்டி பழகுறாங்கன்னு பார்த்துக்கிட்டுத்தான் அவங்களோட நட்பா இல்லையான்னு முடிவு செய்வேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவி, கடல் , பாத்ரூம் என எங்கயா இருந்தாலும் குளிக்க புடிக்கும். ரொம்ப புடிச்சது எங்க ஊர்ல ஆத்துல எதிர் நீச்சல் போட்டு குளிக்கிறது தான்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

இதத்தான் பார்கணும், இதத் தான் பார்ப்பேன்னு இதுவரைக்கும் எந்த வரைமுறையும் வைச்சுக்கிட்டதில்ல. பெரும்பாலும் கண்களப் பார்த்து பேசுவது உண்டு.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்தது : தெரியலை, எனக்கு என்னைய ரொம்ப புடிக்கும், எத சொல்றதுன்னு தெரியல.
பிடிக்காதது: சோம்பேறித்தனம், எல்லாரையும் நல்லவங்கன்னு நம்பி ஏமாறுறது, ஏமாத்துறான்னு தெரிஞ்சும் சிலருக்கு உதவி இ.வான்னு பேர் எடுக்கிறது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

தெரியலைன்னு சொல்றது சரியா இருக்கும். இந்த கேள்விய நான் சாய்ஸ்ல விடுறேன்.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

என்னைய வளர்த்த என் வாத்தியார் தாத்தா நான் நல்லபடியா வேலையில இருக்கத பார்க்க கூட இல்லையேன்னு வருத்தம் இருக்கு & அப்பா....

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வீட்டில் இருப்பதால் வெண்நிற அரை கால்சட்டையும், சாம்பல் நிற பனியனும்.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

என் மடிக்கணிணியின் திரையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ( திரையப் பார்க்காம என்னால தட்டச்சு செய்ய முடியாதுங்க)
அண்ணண் மகள் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நான் இப்டியே இருந்துட்டுப் போயிடுறேனுங்க, எதுக்கு என்னைய போயி பேனாவா மாத்துறீங்க, அப்டியெல்லாம் மாத்துனா எழுதுறவங்க கட்டுப்பாட்ட மீறி நானு எழுதிக்கிட்டேயிருப்பேனாக்கும். சரி மாத்துறதுனா சிவப்பு நிற பேனாவா மாத்துங்க.

14.பிடித்த மணம்?

மழை பெய்ய ஆரம்பிக்கும் போது வரும் மண் வாசனை, நெற்பயிர் கதிர்விடும் போது வயல்வெளியெங்கும் உள்ள வாசனை, சேற்று உழவு செய்யும் போது வரும் மணம், கடலைய சட்டியில போட்டு தீயாம வறுக்கும் போது வரும் வாசம் , இப்டி சொல்லிக்கிட்டே போகலாம், அது ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

திவ்யா - சிறந்த கதாசிரியர் , அருமையான நண்பர்
சென் - என் வகுப்புத் தோழன், ஆருயிர் நண்பண்
ஜெகதீசன் - சிங்கை பதிவர், அன்புத் தோழர்

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?


லதானந்த் மாமா அவர்களின் அனைத்துப் பதிவுகளிலும் உள்ள நகைச்சுவையும்,கொங்கு தமிழும் , துறைசார்ந்த பதிவுகளில் பல நல்ல விசயங்களை எல்லோருக்கும் புரியும் படி எளிமையாக சொல்லுதலும்.

ரெங்காவின் கவிதைகளும், பட்டாம்பூச்சி சொல்லித்தந்ததும்

17. பிடித்த விளையாட்டு?

இறகு பந்து, கூடைப் பந்து, கால்பந்து, டென்னிஸ், கிரிக்கெட்( ஓரளவுக்கு)

நீச்சல் ( இதையும் விளையாட்டுல சேர்கலாம்ல??)

18.கண்ணாடி அணிபவரா?

அது ஆச்சு 10 வருசம். பொட்டித் தட்டுற வேலையில இருக்கதுனால கண்ணாடி அணிய வேண்டியது மிக அவசியமாயிருச்சு.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

நகைசுவையானப் படங்கள் குறிப்பாக கமல் நடித்த நகைச்சுவைப் படங்கள் ( வசூல் ராஜா, பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்மந்தம், நள தமயந்தி போன்றவை)

மனசுக்கு கஷ்டம் தராத சுபமான முடிவுகள் கொண்ட படங்கள் புடிக்கும்

20.கடைசியாகப் பார்த்த படம்?

அயன் படம் திரையரங்கில் பாதி பார்த்துக்கிட்டு இருக்கப்ப தான் அப்பா இறந்த செய்தி வந்தது
கடைசியா முழுசாப் பார்த்த தமிழ் படம் : ஜெயங்கொண்டான்

அப்பறம் இடையில வாண்டட் அப்டின்னு ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன், வளைச்சு வ்ளைச்சு சுடுறது, ஒரு குண்ட வளைச்சு அடிச்சா வட்டமா நிக்கிற எல்லாரையும் ஒரே குண்டு கொன்னுட்டு , சுட்டவங்களையும் சாய்க்கிது. இந்தமாதிரி படம் எல்லாம் MLA விசயகாந்த இல்லன்னா MP தானை தலைவன், அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் தவிர வேறு யாராலும் தமிழில் எடுக்க இயலாது.

21.பிடித்த பருவ காலம் எது?

எல்லாக் காலமும் பிடிக்கும். இதுல எல்லாம் எந்த சிறப்பு விருப்பமும் இல்லீங்க.

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

மதன் எழுதிய கி.மு கி.பி

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

இரு அண்ணண்களின் பிள்ளைகளையும் நான் வைத்திருக்கும் படம் தான் என் கணிணியில் இருக்கும் , அதை மாற்றுவதில்லை. இரண்டு பேரும் மறுபடியும் ஒன்னா பார்குறப்ப புதுசா படமெடுத்த பின்னாடிதான் மாத்தனும்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது : குழந்தைங்க பேச்சுல ஆரம்பிச்சு நிறையா இருக்கு
பிடிக்காதது: தேவையில்லாத கோபத்தின் போது வந்து விழும் எந்த வார்த்தைகளின் ஓசையும்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

Air Distance - 2881.5 KM ( தஞ்சாவூர் - சிங்கப்பூர்).

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

நிதி மேலாண்மை & ஆலோசனையளித்தல்
ஒருங்கிணைத்தல்
மனச் சோர்வுள்ளவர்களுக்கு கவுன்சிலிங் செய்வது

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
கடவுள் பார்த்துக்குவாரு விடுன்னு சொல்றத என்னால ஏத்துக்கவே முடியாது.
கடவுள் மேலயே எல்லாத்துக்கும் பாரத்த போட கூடாது. நாம செய்யவேண்டியத நாம தான் செய்யனும்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

பொசுக்கென்று வரும் கோபம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மலைப் பிரதேசங்கள் எதுவாயிருப்பினும் பிடிக்கும்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

முடிஞ்சளவு உழைக்கணும், உழைப்புக்கேற்ற வளர்சி இருக்கனும், என் மறைவிற்கு பிறர் வருந்தும் அளவுக்கு சிறப்பா வாழணும்.

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

தெரியல, இதையும் சாய்ஸ்ல விடுறேன்.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

"Nothing is Impossible, Nothing Is Difficult, Everything is a challenge" Udanz
Author: Anonymous
•11:56 AM
ஜோண்ணா,
ஒழுங்கு மரியாதையா பதிவ போடுற வேலைய பாருங்க. அதென்ன பதிவே போடாமல் பதிவர் ஒன்று கூடலுக்கு மட்டும் நேரத்துக்கு போறிங்க?! இதில சிங்கை பதிவர்கள் தலைவர் பதவி வேறு!! ம்ம்கும்

ஏதோ உங்களுக்கு மட்டும் தான் வேலை அதிகம் போலவும், நாங்கெல்லாம் வேலை இல்லாமல் இருப்பது போலவும் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றீர்கள். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

உடனே பதிவு போடுங்கள், அது சஞ்சயை கலாய்க்கும் பதிவாக இருந்தால் கூட மகிழ்ச்சியே!

உங்கள் பதிவு வரவில்லை எனில்:

தூயா சமையல்கட்டில் தினமும் 3 தடவைகள் மட்டுமல்லாது 6 தடவைகள் சமைப்பார்.
லீ 1 நாள் சாப்பிட்டு கொண்டே உண்ணாவிரதம் இருப்பார்.
ராம் அதிசயபறவைகளை கண் கொண்டும் பார்க்க மாட்டார்.
ஜோதி அண்ணா வீட்டு இட்லி உங்க பக்கம் வரும்.
ஜமால் உங்களுக்காக டீ குளிப்பார்

இவ்வண்ணம்,
தூயா
வாழ்நாள் தலைவர்
ஜோண்ணாவை மிரட்டுவோர் சங்கம்
'தல'மை செயலகம்
ஒஸ்திரேலியா Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•4:21 PM
சிங்கையில் நேற்று நல்ல மழை, அந்த மழை நேரத்தில் தன் நண்பர் ஒருவருடன் இரு சக்கரவாகனத்தில் அமர்ந்து, வழக்கம் போல‌ அடுத்து என்ன பதிவு எழுதலாம் என்ற தீவிர யோசனையுடன் அண்ணண் கோவி.க அவர்கள் பயணிக்கையில் திடீரென்று வந்த ஒரு லாரியின் மீது மோதுவதை தவிர்க்க இருசக்கர வாகன ஓட்டி முயற்சித்த போது, தடுமாறியதால் இருவரும் கீழே விழுந்துவிட்டனர்.

அதில் கோவி.க அண்ணண் சிறுகாயங்களுக்குள்ளானார். இன்று மருத்துவ விடுப்பில் இருக்கிறார். ( இந்த காயத்துக்கு எல்லாம் ஒரு நாளைக்கு மேல மருத்துவ விடுப்பு கிடையாது, ஒழுங்கா நாளைக்கு வேலைக்கு போயிடணும்னு , மருத்துவர் சொல்லிட்டாராம்). கவலைப்படும் படி இல்லையென்றாலும், விபத்திற்குள்ளான நம் மூத்த பதிவர் சிங்கை சிங்கம் கோவி.கண்ணண் அவர்கள் விரைவில் குணமடைய உலகெங்கும் இருக்கும் தமிழ் பதிவர்கள் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ பிரார்தனை செய்யவும்.

மேலும் உலகெங்கும் இருக்கும் அன்பர்கள் எனக்கோ, தம்பி விஜய் ஆனந்துக்கோ PAYPAL ல் பணம் அனுப்பினால் பழம், ஹார்லிக்ஸ் போன்றவை உங்கள் பெயரில் வாங்கி அண்ணணுக்கு அனுப்பப்படும். PAYPAL சேவை இல்லாதவர்கள் பின்னூட்டத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை தெரியப்படுத்துங்கள், எங்கள் வங்கிக்கணக்கு விவரங்களை அனுப்புகிறோம்.
குறிப்பு ஜெகதீசனுக்கு யாரும் பணம் அனுப்பிவிட வேண்டாம். அவரு ஹார்லிக்ஸ் வாங்குவாரு, ஆனா கோவி.க அண்ணணுக்கு குடுக்காம அப்டியே சாப்பிட்டுருவாரு.

ஆனால் இந்த சிறு விபத்தால் அண்ணண் பதிவெழுதும் வேகத்திற்கு எள் அளவுகூட சேதாரம் ஏற்படவில்லை என்பதால் ஒரு சில நாட்களுக்காவது அண்ணணின் பதிவுகளை பார்க்காமல் இருக்கலாம் என்று யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம். வழக்கம் போல பதிவுகள் வரிசை கட்டி வந்துகிட்டேத்தான் இருக்கும்.

பின் குறிப்பு: என்னடா அவருக்கு அடிபட்டுருக்கு, இவன் அதை வெச்சு மொக்கை போடுறானேன்னு யாரும் திட்டாதீங்க. இந்த பதிவு அவரோட சம்மதத்தோடத்தான் வருது.

அடியின் அளவு ரொம்ப கம்மியா இருக்கதால யாரையும் கலவரப் படுத்திரவேண்டாம் என்ற எண்ணத்தால் தான் மொக்கையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் சிறு விபத்தில் சிறு காயமடைந்தது உண்மை.

அண்ணண் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•11:19 AM
சிங்கையில் உள்ள பதிவர்கள் எல்லாம் சந்தித்து மிக நீண்ண்ண்ண்டடடடட நாட்கள் ஆகி விட்டன என்றும்(கடைசியா ஆகஸ்ட் 30 சந்திச்சோம்), மீண்டும் எல்லோரையும் சந்திக்க வேண்டும் என்றும் பல பதிவர்களும், எங்கள் பின்னூட்ட புயல் தம்பி விஜய் ஆனந்தும் ரொம்ப ஆசைப்படுவதால் அடுத்த சந்திப்பு நடத்த சங்கம் தீர்மானித்துள்ளது.

நாள் : செப்டம்பர் 20 சனிக்கிழமை.

நேரம் : மாலை 3 மணி முதல் ........

இடம் : புக்கிட் கொம்பாக்


புக்கிட் கொம்பாக் மின் தொடர் வண்டி நிலையத்தின் அருகில் பதிவர்கள் அனைவரும் 3 மணிக்கு கூடவும். அங்கிருந்து விழா நடை பெறும் இடத்திற்கு ஊர்வலமாலக செல்ல இருக்கிறோம். இவ் ஊர்வலத்தை சிங்கை நாதன் அவர்கள் தலைமையேற்று நடத்துவார்.

இம்முறை பல முக்கிய விவாதங்களுடன் சில சந்தோஷ கொண்டாட்டங்களும் இடம் பெற உள்ளன. வழக்கம் போல் சிங்கை நாதன் அவர்கள் எல்லோருக்கும் அல்வா கொண்டுவருவார், கோவி.க அண்ணண் கொஞ்சம் பஜ்ஜியும், நிறைய சட்னியும் கொண்டுவருவார். ( வழக்கம் போல நாங்கல்லாம் சாப்பிட்டுட்டு வருவோம்.)

சிங்கையில் உங்களுக்கு தெரிந்த மற்ற பதிவர்களையும் அழைத்து வாருங்கள். இது பதிவர்களுக்கு மட்டுமான சந்திப்பு அல்ல. விருப்பம் உடைய வாசகப் பெருமக்களும் இச் சந்திப்பில் கலந்து கொண்டு, உங்கள் அபிமான(???) பதிவர்களை நேரில் சந்தித்து, உரையாடி மகிழலாம்.

நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள அலைபேசி எண்கள்:

ஜோசப் பால்ராஜ் : +65 - 93372775
கோவி.கண்ணண் : +65 - 98767586
ஜெகதீசன் : +65 - 90026527
Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•10:35 PM
முன் கூட்டியே என்னிடம் தெரிவித்து என்னை இந்த விளையாட்டிற்கு அழைத்த திவ்யாவிற்கு எனது நன்றிகள். காதல் எனப்படுவது யாதெனில்... தொடர் பதிவில் அவரை நான் மாட்டிவிட்டதற்கு பதில் மரியாதை இது.

A - AOL TAMIL
www.aol.in/tamil

தமிழ் செய்திகளுக்காக இதை பார்ப்பது உண்டு.

B - BSNL Customer Care
http://portal.bsnl.in/bsnlcca/login.aspx

பி எஸ் என் எல் வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் இணைய தளம் இது. நீங்களும் இணையம் வழியாக புகார் அளிக்கும் சேவையை பயன்படுத்த இதை உபயோகிக்கலாம். நல்ல பலன் இருக்கின்றது.

C - Changi Airport
www.changiairport.com

சிங்கப்பூர் விமான நிலையத்தின் இணைய தளம் இது. விமான வருகை, புறப்பாடு போன்ற தகவல்களுக்காக இதை அடிக்கடி பார்பது உண்டு. எனக்கு நண்பர்கள் அதிகம் எனவே வழியனுப்புவதும், வரவேற்பதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள்.

D - Dinamalar
www.dinamalar.com
காலையில் தினமும் தமிழ் செய்திகளுக்காக இதை தான் படிப்பேன்.

DBS Bank Singapore
www.dbsbank.com.sg
Development Bak of Singapore. வங்கிச் சேவைகளுக்காக மிக அதிகமாய் உபயோகிக்கும் இணையதளம்.

E- E Grocy Online Store
www.egrocy.com

என்னைப் போன்ற சோம்பேறிகளுக்காக உள்ள இணைய கடை. மளிகைச் சாமன்களை மாதமாதம் வாங்க உபயோகிக்கும் தளம். நாங்க எல்லாம் வீட்லயே உக்காந்துகிட்டு இணையத்துல எல்லாப் பொருளையும் வாங்கிருவோம்ல.

F - FlyProxy
https://flyproxy.com

எங்க அலுவலகத்துல அடிக்கடி நம்ம ரொம்ப உபயோகிக்கிற இணைய தளங்களை தடை பண்ணிருவாங்க. நாங்க எல்லாம் யாரு, இதுல பூந்து எல்லா இணையத்தையும் கொண்டாந்துருவோம்ல. இப்டிதான் ஜிமெயில தடை பண்ணாய்ங்க. நமக்கு ஜிமெயில் இல்லன்னா உசுரே போயிடும்ல. அணையா விளக்கா ஜிமெயில்ல என் பெயருக்கு பக்கத்துல இருக்க பச்சைவிளக்கு நான் தூங்குறப்ப மட்டும்தான் அணைஞ்சு இருக்கும். அத போயி இவிங்க தடை செஞ்சா விட்ருவோமா? அதுக்குத்தான் இதெல்லாம். உங்க அலுவலகத்துலயும் யாராவது இப்டி தொல்லை குடுத்தா ஒரு பின்னூட்டத்த போட்டுட்டு இதை பயன்படுததுங்க.

G - Google
www.google.com.

கூகிள் நம்ம பெரியண்ணண். இவரு இல்லன்ன நான் இல்ல. இவர கேட்கிற விதமா கேட்டா எல்லாத்தையும் நமக்கு தர்றவரு. எனக்கு மட்டும் இல்ல, பொட்டி தட்றவங்க எல்லாருக்கும் பெரியண்ணண் இவரு தான். இவருகிட்ட இல்லாததே இல்லன்னு சொல்ற அளவுக்கு எல்லா தகவல்களையும் அள்ளித்தருவாரு. பாசக்கார அண்ணண்.

H - The Hindu
www.Hindu.com

நமக்கு ஆங்கில அறிவும் முக்கியம்ல, அதான் ஹிண்டு செய்திதாளையும் காலையில வாசிக்கிறது நம்ம வழக்கம்.

How Stuff Works
http://www.howstuffworks.com

சாதாரண கருவி முதற்கொண்டு, மிக நவீன கருவி வரை எல்லாம் எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ள இந்த தளம் மிக உதவியாய் இருக்கும். நான் இதுக்கு அடிக்கடி போகிறதில்லை. ஆனா என் அண்ணண் ஜோசப் செல்வன் இத பொறுமையா படிச்சுட்டு நான் கேட்கிறத நல்ல புரியிறமாதிரி சொல்லிக்கொடுப்பாரு. அப்பப்ப எட்டிப் பார்கிறதோட சரி.

I - ICICI Exchange Rate Calculator
http://icicibank.com/pfsuser/icicibank/ibank-nri/nrinewversion/calculators.htm

நம்மள மாதிரி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கெல்லாம் உபயோகமான தளம் இது. மத்த வங்கிகள விட ஐசிஐசிஐ வங்கிதான் அதிகமான நாணய மாற்று மதிப்பு கொண்ட வங்கி. நமக்கு யாரு அதிகமா தர்றாங்களோ அவங்கத் தானே முக்கியம். இவங்க தான் நமக்கு பாதுகாப்பா நாம சம்பாதிக்கிறத தாய்நாட்டுக்கு அனுப்ப உதவுறவங்க. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் தேவையான ஒரு தளம் இது. நீங்க ஐசிஐசிஐ வங்கியில கணக்கு வைச்சிருக்கணும்கிற அவசியம் கூட கிடையாது. இவங்களோட Money2India சேவையின் மூலமா சுலபமா பல வங்கிக் கணக்குகளுக்கும் நீங்க பணம் அனுப்ப முடியும். உங்க பணம் ஒழுங்கா போய் சேர்ந்துச்சான்னு நீங்க பார்த்துக்கலாம்.

J - Jobs DB Singapore
http://www.jobsdb.com.sg

சிங்கப்பூர்ல இருக்க வேலை வாய்ப்புகளை குறித்த இணையத்தளம் இது. சுய விளம்பரமா நினைச்சுக்காதீங்க. என் வீட்ல எப்பவுமே ஒரு 2 வேலை தேடுறவங்க இருப்பாங்க. ஏதோ நம்மால முடிஞ்ச சேவைன்னு செஞ்சுகிட்டு இருக்கேன். அவங்களுக்காக அடிகடி போகுற இணையம் இது.

K - Khel Stocks
http://www.khelostocks.com

கல்லூரியில படிகிறப்ப என்னோட பாடம் இயற்பியல், இருந்தாலும் நமக்கு பங்கு வணிகத்தில நான் ஒரு பட்டயப் படிப்பு படிசேன்ல ( Diploma in Share Investment &
Management) , அதான் பங்கு வணிகத்துக்காக இந்த இணையத்துக்கு அடிக்கடி போவேன்.


M - ம்யூஜிக் இதுல நான் பல இணையங்களுக்கு போவேன் குறிப்பா சொல்லனும்னா
www.raga.com, www.smashits.com போன்றவை.

O - Oru Paper
www.orupaper.com

நம் ஈழத்து சொந்தங்களின் தளம் இது. அடிக்கடி போவது உண்டு.

P - Public Grievances
http://pgportal.gov.in/aboutus.html

பொதுமக்கள் தங்களது குறைகளை அரசின் அனைத்து துறைகளுக்கும் தெரிவிக்க உள்ள இணையதளம். சமீபத்தில்தான் இதை கண்டறிந்தேன். இதுகுறித்து ஒரு பதிவும் இட்டுள்ளேன்.

Personal Finance
http://www.personalfn.com/calc/hlv.html

இது நம்முடைய நிதி மேலாண்மைக்கு உதவும் ஒரு நல்ல தளம். பல கணக்கீடுக்களுக்காக நான் இதற்கு செல்வது உண்டு. இங்கும் ஒரு சுய விளம்பரம் அவசியமாகிறது. நான் பல நண்பர்களுக்கு நிதி ஆலோசகராக தொண்டாற்றி வருகின்றேன். இந்தியாவில் இருந்த காலம் தொட்டு இதை செய்து கொண்டுள்ளேன். ஆனால் சிங்கை வந்த பின் முன்போல் என்னால் அந்த சேவையை திறம்பட செய்ய இயலவில்லை. எனினும் இது போன்ற இணைய தளங்கள் எனக்கு அப் பணியில் பேருதவி புரிகின்றன.

Q - Quick Remit

இது HDFC வங்கியின் சேவை. இதன் மூலம் இந்தியாவில் உள்ள எல்லா கணிணி மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் பணம் அனுப்ப முடியும். இதற்கு HDFC வங்கியில் நாம் வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

S - SDN SAP
www.sdn.sap.com.

இது நம்ம பொழப்பு சம்பந்தப்பட்ட இணையதளம்.SAPல இருக்கவங்க எல்லாருக்கும் எந்த சந்தேகம்னாலும் இங்க வந்தா நல்ல உதவி கிடைக்கும். SAP ஒரு கடல் மாதிரி, அதுல Technical & Functional னு ரெண்டு பிரிவு இருக்கு. Technical ல வேலை பார்க்க ஆரம்பிச்ச நான் இப்ப Techno Functional அ இருக்க முக்கிய உதவி இந்த இணையம் தான். புதுசா கத்துக்கிறவங்களுக்கு பல உதவிகள் இங்க கிடைக்கும்.

SBI Singapore
http://www.sbising.com

இது பாரத ஸ்டேட் வங்கியின் சிங்கப்பூர் இணையதளம். நம்ம ஊரு ரூபாய் மதிப்ப பார்க்குறதுக்காக இந்த தளத்துக்கு அடிக்கடி போவேன்.

T - Tamil Editor
www.tamileditor.org

என் மடிக்கணிணியில் நான் ஈ கலப்பை போன்ற எதையும் நிறுவாமையால் இந்த தளத்தின் மூலமாகத் தான் தமிழ் தட்டச்சு செய்கிறேன். என் மடிக்கணிணியில் எப்போதும் மூடாமல் இருக்கும் பக்கங்களில் இதுவும் ஒன்று.

Thirukural
http://www.tamilnation.org/literature/kural/index.htm

திருக்குறள் இருக்கும் இணையத்தளம். திருக்குறளுக்கு தனியாக நான் விளக்கம் தரவேண்டுமா என்ன?

Team Viewer
http://teamviewer.com/index.aspx

நாம பல பேருக்கு பல நேரங்கள்ல உதவுறதுக்கு இந்த இணைய தளம் உதவுது.

http://tamilpeek.com http://www.tubetamil.com

வேற எதுக்கு தமிழ் படம் பார்க்கத்தான்.

W - WIKI
http://en.wikipedia.org/wiki/Wiki

கூகிள் நமக்கு பெரியண்ணண், விக்கி நமக்கு தம்பியண்ணண். நமக்கு தெரியாதத இவருகிட்டயும் கேட்டுக்கலாம். பெரியண்ணண் பல நேரங்கள்ல தம்பியண்ணகிட்டத்தான் அனுப்புவாரு. நமக்கு செம தோஸ்த்.

What is
http://whatis.techtarget.com

என்ன? அப்டிங்கிற கேள்விய கேட்க இது ஒரு நல்ல இணையதளம். சிறப்பான பதில்கள் கிடைக்கும். இந்த காலத்து குழந்தைங்க எல்லாம் நிறைய கேள்வி கேட்குதுங்க. அவங்களுக்கு பதில் சொல்ல விக்கி , இந்த தளம் எல்லாம் பெற்றோர்களுக்கு மிகவும் உதவும். பொறுமையா சொல்லிக்குடுக்கலாம்.


Y - Yarl.com
http://www.yarl.com/forum3/index.php?showforum=40

யாழ் இணையம், ஈழத்துச் சொந்தங்களின் இணையதளம் இது. ஈழத்து செய்திகளுக்காக அடிக்கடி செல்வது உண்டு.

You Tube
http://www.youtube.com

ரொம்ப போரடிக்கிற நேரங்கள்ல இந்த தளத்துல போயி வகை வகையா தேடிப்புடிச்சு விடியோ பார்ப்பேன். ரொம்ப புடிச்சது நம்ம தமிழ் நகைச்சுவை வீடியோக்கள் தான்.

நான் ஒரு மூணு பேர மாட்டிவிடணுமாம், யார மாட்டிவிடலாம்னு ஞாயித்துகிழமை காலையில சீக்கிரமா 11 மணிக்கே எழுந்துருச்சு யோசிச்சதுல மாட்டுனது இந்த மூணு பேருதான்.

1. அன்பு தம்பி விக்கி என்கிற விக்னேஸ்வரன்.

2. அன்பு தோழன் ஜெகு என்கிற ஜெகதீசன்

3. நீண்ட நாட்களாய் பதிவுகளை வாசித்து அனுபவம் பெற்று சமீப காலமாய் பதிவெழுத ஆரம்பித்து கலக்கிக் கொண்டிருக்கும் அன்பு தோழர் மகேஷ்.

Rule:

The Tag name is A for Apple

Give preference for regular sites

Ignore your own blogs, sites.

Tag 3 People.
Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•12:29 PM
இதுவரை 74 பதிவுகளை எழுதியுள்ள நிஜமா நல்லவன் அவர்கள் நேற்று தீடீரென விடை பெறுகிறேன், இனிமேல் எழுத மாட்டேன் என்று அறிவித்துள்ளார். அவரது விடை பெறுகிறேன் பதிவை கீழே கொடுத்துள்ளேன்.


விடை பெறுகிறேன்!

ஆனந்த விகடன் வரவேற்பறை மூலமாக அறிமுகமானது தமிழ் பதிவுலகம். ஏதோ பெயருக்கு பதிவுகள் எழுதி வந்தாலும் இதுவரையில் உருப்படியாக எதுவும் எழுதியதில்லை. இனிமேலும் எழுத என்னிடம் எதுவும் இல்லை. நான் எழுதிய மொக்கை பதிவுகளையும் படித்து எனக்கு பின்னூட்டங்கள் அளித்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி!


வர வர இது ஒரு வாடிக்கையான வழக்கமாகி கொண்டே போகின்றது. நன்றாக எழுதிக்கொண்டிருக்கையிலேயே திடீர் என விடை பெறுகிறேன் என அறிவிப்பது. உடனே அவரது நண்பர்கள் அனைவரும் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள், நீங்கள் எல்லாம் எழுதாவிட்டால் எப்படி என்பது போன்ற பின்னூட்ட கொஞ்சல்கள், கெஞ்சல்கள் செய்வது, பின்பு நீங்கள் எல்லாம் மிகவும் வேண்டிக்கொண்டதால் நான் மீண்டும் பதிவெழுத வருகிறேன் என்பது. ஏன் இதெல்லாம் ? நிஜமா நல்லவனின் விடை பெறுகிறேன் பதிவுக்கு நான் எழுதிய பின்னூட்டம் இதுதான்.

ஜோசப் பால்ராஜ் said...

இப்டியே எல்லாரும் போறேன்னு சொல்றதும், மத்தவங்க அவங்க இல்லீங்க நீங்க எல்லாம் தொடர்ந்து எழுதணும்னு கூப்பிடுறதும் தொடர் கதையா போயிடுச்சு. நீங்க உண்மையிலேயே இனிமே எழுத எதுவும் இல்லைன்னு நினைச்சா நீங்க இனிமே கண்ண மூடிகிட்டு இருக்கப் போறீங்கன்னு அர்த்தம். எதையும் பார்க்க மாட்டீங்க, படிக்க மாட்டீங்கன்னு அர்த்தம். ஏன்னா நாம பார்கிறது, படிக்கிறதுல இருந்துதான் பாதிவுகள் வருது. அப்டித்தான் இருக்கப் போறீங்கன்னா ரொம்ப சந்தோசம் , போயிட்டு வாங்க, இனிமே எழுதாதீங்க.

உங்களையெல்லாம் வாங்க வாங்கன்னு கூப்பிடவே கூடாதுங்கிறதுதான் என் கொள்கை. மத்தவங்க கூப்பிடுறாங்கன்னு எல்லாம் வந்துடாதீங்க. உங்க கொள்கை இனிமே எழுத கூடாதுங்கிறது தானே? அதுல உறுதியா இருங்க. வாழ்த்துக்கள். நாம நல்ல நண்பர்களா இருப்போம் என் மின்னஞ்சல் முகவரி தர்றேன். தொடர்புல இருங்க. ஆனா இனிமே நீங்க எழுதவே வேண்டாம். நாடு ஒன்னும் கெட்டுப் போயிறாது. போயிட்டு வாங்க. நன்றி. இதுவரை நீங்க பதிவுலகத்துக்குச் செஞ்ச சேவைக்கு ரொம்ப நன்றிங்க. வணக்கம்.
என் மின்னஞ்சல் முகவரி: joseph.paulraj@gmail.com.



எழுத ஒன்னுமே இல்லைன்னு சொல்லிட்டு போறவரை எதுக்கு இத்தனை பேரு திரும்ப வாங்கன்னு கூப்பிடனும் ? மாரத்தான் ஓட்டப் போட்டி நடக்குது, பல வீரர்கள் ஓடிக்கிட்டு இருக்காங்க. அதுல ஒருத்தரு இனிமே என்னால ஓட முடியாது, ஒடுறதுக்கு என் உடம்புல வலு இல்லன்னு உக்காந்துட்டாருன்னா என்ன செய்ய முடியும்? சரிங்க அப்டி ஓரமா உக்காந்துக்கங்கன்னு தானே சொல்ல முடியும்? இல்ல இல்ல நீங்க கட்டாயம் ஓடியே ஆகணும்னு சொல்லி ஓட முடியாதவர இழுத்துக்கிட்டு வர முடியுமா? எனக்கு என்னமோ நிஜமா நல்லவன் நிஜமான காரணம் எதையும் சொல்லாம வெறுமனே இனிமே எழுத ஒன்னும் இல்லன்னு சொல்லியிருக்காருன்னுதான் தோணுது. எப்டியிருந்தாலும் எழுத முடியாதுன்னு சொல்றவரப்போய் எதுக்கு மல்லுகட்டனும் ? காரணமே தெளிவா சொல்லாதவருகிட்ட எதுக்கு போயி எல்லாரும் கெஞ்சணும் ?

நேற்று இரவு இந்த பதிவை படித்துவிட்டு நானும் தம்பி விஜய் ஆனந்தும் வலையுரையாடலில் பேசிக் கொண்டிருந்தோம். இப்படி அறிவிப்பதும், கெஞ்சுவதும், திரும்ப வருவதுமான போக்கு அதிகரித்துக் கொண்டே போகின்றது. இது கட்டாயம் தமிழ்மணத்தின் சூடான இடுகைகளில் இடம்பிடிக்கும் என்றும் சொன்னார். அதே போல் இன்று சூடாண இடுகைகளில் இடம்பிடித்து விட்டது. இப்படி காரணமில்லாமல் நானே போய் வருகிறேன், இனி எழுத மாட்டேன் என்று சொன்னால் யாரும் கெஞ்சக் கூடாது என்பதுதான் என் கருத்து.

தமிழ் மணத்திற்கு :

சூடாண இடுகைகளுக்கான பதிவுகள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன ?

பதிவுகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை வைத்தா? பதிவுக்கு இடப்படும் பின்ன்னூட்டங்களின் எண்ணிக்கையை வைத்தா?

ஏன் பெரும்பாலும் மொக்கை பதிவுகளே சூடாண இடுகைகளில் இடம்பிடிக்கின்றன?

இப்படி மொக்கை பதிவுகளே பெரும்பாலும் சூடாண இடுகைகளில் இடம்பிடித்துக்கொண்டிருந்தால் அது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடாதா? Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•8:49 PM
கடந்த ஞாயிறன்று சிங்கையில் நடந்த பதிவர் சந்திப்பில் சிங்கை மூத்த பதிவரும், கட்டுமானத்துறையில் பணியாற்றுபவருமான வடுவூர் குமார் அவர்கள் தற்போது துபாயில் வேலையில் சேர இருப்பதாக கூறினார்.

அவர் துபாய் வேலைக்காக முயற்சி செய்ய ஆரம்பித்த பொழுது துபாய் விசா குறித்த நடைமுறைகள் எதுவும் தெரியாமல் மிகச் சிரமப்பட்டதாகவும், அதுகுறித்து யாராவது ஒரு பதிவு எழுதினால் மிக நன்றாக இருக்கும் என்று கூறினார். வளைகுடா நாடுகளில் உள்ள தமிழ் பதிவர்கள் அந்த பகுதி நாடுகளில் உள்ள வேலை தேடி வருபவர்களுக்கு உதவும் நோக்கில் அங்குள்ள நாடுகளின் விசா நடைமுறைகளையும், வேலைக்கு வருபவர்கள் செய்ய வேண்டியவைகளையும் விரிவாக எழுதுமாறு சிங்கை பதிவர்கள் சார்பாக கேட்டுகொள்கிறோம்.

மேலும் துபாய் வரும் எங்கள் கண்ணின் மணி போல காத்துவந்த அன்புக்குரிய வடுவூர் குமார் அவர்களை நல்லபடியாக பார்த்துக்கொள்ளுமாறும் எங்கள் அனைவரின் சார்பாக வேண்டுகிறோம்.

மேலும் எங்கள் அனைவராலும் சிங்கைப் பதிவர்கள் சந்திப்பு குறித்து எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌திவுக‌ளில் விடுப‌ட்ட‌ ஒரு விச‌ய‌த்தையும் சொல்ல‌ விரும்புகிறேன்.

ச‌ந்திப்பு ந‌ட‌ந்த‌ புல்வெளியில் இருந்து கிள‌ம்பி காபி குடிக்க‌ போகும்முன் ந‌டைபாதையில் நிக‌ழ்ந்த‌ விவாத‌ம் வ‌லையுல‌கில் த‌ற்போது மிக‌ பிர‌ப‌ல‌மாகிக்கொண்டிருக்கும் பின் ந‌வீன‌த்துவ‌த்தை குறித்த‌து. பின் ந‌வீன‌த்துவ‌ம் என்றால் என்ன‌ என்ற‌ அடிப்ப‌டை கேள்விக்கே எங்க‌ளால் விடை காண‌ முடிய‌வில்லை. க‌டைசியாக‌ இரு ப‌தில்க‌ளை ப‌திவ‌ர்க‌ள் ச‌பை ஏற்றுக்கொண்ட‌து. இந்த‌ ப‌தில்க‌ள் குறித்து பின் ந‌வீன‌த்துவ‌ம் குறித்து அறிந்த‌ சென்ஷி போன்ற‌ ப‌திவ‌ர்க‌ள் த‌ய‌வு செய்து பின்னூட்ட‌த்தில் தெரிவிக்க‌வும்.

ப‌தில் 1. முற்றுப்புள்ளியே இல்லாம‌ல் எழுதிகொண்டே சென்றால் அது பின்ந‌வீன‌த்துவ‌ம்

ப‌தில் 2. யாருக்குமே புரியாம‌ல் எழுத‌ப்ப‌ட்டிருக்கும், அத‌ற்கு ஆகா, ஓகோ என‌ ப‌ல‌ பின்னூட்ட‌ங்க‌ள் இருக்கும். இதுவும் பின் ந‌வீன‌த்துவ‌ம்.

பி.கு:
மாற்ற‌ங்க‌ளை உள்வாங்கிக் கொள்வ‌துதான் பின் ந‌வீன‌த்துவ‌ம் என்று ப‌ல‌ புரியாத‌ ப‌தில்க‌ள் அங்கு விவ‌ரிக்க‌ப்ப‌ட்டாலும், எங்க‌ள் அனைவ‌ராலும் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட்ட‌ ப‌தில்க‌ள் மேலே குறிப்பிட‌ப்ப‌ட்ட‌ 2 ப‌தில்க‌ள் ம‌ட்டுமே. எனவே பின்நவீனத்துவ வாதிகள் தயவு செய்து எங்கள் மேல் பாய்ந்துவிடாமல் உண்மையான விளக்கத்தை சொல்லவும்.


Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•7:28 PM
பதிவர் உலகிற்கு புதுவரவான நான் முதன் முதலில் கலந்துகொண்ட முதல் பதிவர் சந்திப்பு.

கோவி.கண்ணண் அண்ணண் மிக வேகமாக நேற்று இரவே இச்சந்திப்பை குறித்து எழுதியிருந்தாலும், என்னையும் எழுத பணித்ததால் எனது பார்வையில் இச் சந்திப்பை விவரிக்கிறேன்.

ஏற்கனவே கோவை பதிவர் சந்திப்பில் நான் கலந்துகொள்ளாமலேயே என்னை பங்கெடுக்க வைத்த பெயர் குழப்பம் இங்கு நிகழ்ந்துவிடுமோ எனும் அஞ்சும் அளவுக்கு ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் மூன்று ஜோ.. அதிலும் L L DASS எனும் பெயரில் பதிவு எழுதிவரும் ஜோசப் பெனடிக்ட் என்பவர், எனது முழுபெயரான ஜோசப் பெனடிக்ட் பால்ராஜில் முக்கால்வாசியை வைத்துக்கொண்டுள்ளார்.

சந்திப்பின் முக்கிய நிகழ்வுகளை அண்ணண் கோவி.கண்ணண் ஏற்கனவே அவரது பதிவில் சொல்லியுள்ளதால் அவர் சொல்லாததை சொல்கிறேன்.

நான் வலை பதிவராகக் காரணம் என்ன என்ற கேள்வியை கோவி.க அண்ணண் கேட்டு உரையாடலை ஆரம்பித்துவைத்தார். அதுக்கு அப்றம் சிற்றுண்டி உண்ண மட்டுமே அவர் வாயை திறந்தார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஆசிப் மீரான் அண்ணாச்சியின் வலைப்பூவை விகடன் மூலம் அறிந்துகொண்டு, அவரது எழுத்தின் மேல் ஆர்வம் கொண்டு பதிவு எழுத ஆரம்பித்த நான் தமிழ்மணத்தில் இணைந்தது மிகச் சமீபத்தில்தான். குசும்பன் எனது வகுப்புத்தோழர். (என் தொந்தரவு தாங்கலன்ன நீங்க தாக்குறதுக்கு ரெண்டு முகவரி கொடுத்துட்டேன்).

நாகர்கோயில் வழக்கில் கேட்க மிக இனிமையானத் தமிழில் என்னிடம் விவசாயம் குறித்த செய்திகளை கேட்டு உரையாடலை ஆரம்பித்த ஜோவுக்கு பதிலளிக்க ஆரம்பித்தவுடன், விவசாய கடன் தள்ளுபடியால் யாருக்கு நன்மை, எல்லா விவசாயிகளும் இதனால் பலனடைகின்றார்களா என்ற அருமையான் வினாவோடு முகவை மைந்தன் எங்கள் உரையாடலில் இணைந்தார். ஆர்வமாய் சென்ற அந்த உரையாடல் எனது உழவும் உழவர்களும் தொடரில் ஒரு பாகமாய் எழுதப்பட வேண்டிய ஒன்று.

ஜோவின் அழகுத்தமிழ் உச்சரிப்பு எனக்கு யாழ்பாணத் தமிழை நினைவுக்கு கொண்டுவந்தது என்பதை அவரிடம் வினவிய போது கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளவர்களுக்கும், ஈழத்தில் உள்ளவர்களுக்கும் உள்ள வரலாறு பூர்வமான தொடர்பை அழகாய் விவரித்தார் ஜோ.

இதற்கிடையில் மலையேற இயலாதவர்களின் அழைப்பால் நாங்கள் இடமாற்றம் செய்த போது இறை நம்பிக்கை குறித்த ஒரு சிறு உரையாடல் எங்களுக்குள் நடந்தது.( இது கோவி.க அண்ணணுக்கு தெரியாது.)

சிரமம் வரும்போதுதான் நமக்கு இறை நம்பிக்கையே வருகின்றது, நமக்கு அடுத்துவரும் தலைமுறை நாம் சந்தித்த சிரமங்களை சந்திக்க வாய்பில்லை என்பதால் அவர்களுக்கு இறை நம்பிக்கை இருக்குமா இருக்காதா ? என்ற கேள்விக்கு நான் அடுத்த தலைமுறை இறைநம்பிக்கையில் பெற்றோர்களின் கட்டாயத்தால் ஈடுபாடு காட்டுமே தவிர மதம் குறித்த நம்பிக்கையில் சுதந்திர சிந்தனை உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள் என்று சொன்னேன். ஆனால் மற்றவர்கள் ஒரு அருமையான கருத்தை எடுத்துரைத்தார்கள், நன்கு வளர்ச்சியடைந்த அமெரிக்காவிலேயே, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் பலரும் தீவிர பக்தியுள்ளவர்களாய் மாறினார்கள் என்ற மேற்கோளுடன் அவர்கள் சொல்லியது எனது கருத்தை சிரமம் அல்லது பயம் ஏற்படும் போதுதான் கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும் என மாற்றிக்கொள்ளச் செய்தது.

ஒரு காலத்தில் கத்தோலிக்க மதத்தை சேர்ந்த பெண்ணோ, பையனே பிற மதத்தை சார்ந்தவரை திருமணம் செய்துகொள்ள விரும்பினால் கட்டாயம் பிற மதத்தை சேர்ந்தவர் மதம்மாறி கத்தோலிக்க மதத்தை தழுவ வேண்டும் என்று ஒரு கோட்பாடு இருந்ததாம். ஆனால் இப்போது அப்படியில்லை. மதம் மாற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதைத் தான் கத்தோலிக்க மதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என குறிப்பிட்டிருந்தோம்.

இடமாற்றம் செய்து எல்லோருடனும் அமர்ந்து விவாதிக்க ஆரம்பித்த பின்னர் பல சிறு சிறு விவாதங்கள் இடம்பெற்றன. அவற்றில் முக்கியமாய் நான் குறிப்பிட விரும்புவது பதிவராய் இல்லாமல் வாசகராய் மட்டும் இருந்தாலும் மிகுந்த ஆர்வமுடன் இச்சந்திப்பில் கலந்துகொண்ட ஆராய்ச்சியாளரான திரு.பாஸ்கரன் அவர்கள் கூறிய தகவல்கள்.

சிங்கப்பூரில் இந்திய மாணவர்களுக்கு உள்ள உயர் கல்வி வாய்ப்புகள், சிங்கப்பூரில் நம் மாணவர்களுக்கு கிடைக்கும் பல்வேறுவிதமான கல்வி உதவித்தொகைகள் தனி ஒரு பதிவு எழுதும் அளவுக்கு தகவல்களைத் தந்துள்ளார். அவர் கட்டாயம் பதிவெழுத வேண்டும், இது போன்ற உபயோகமானத் தகவல்களை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கூறினோம். அப்படி அவரால் எழுத முடியாதபட்சத்தில் அவரிடம் இருந்து விவரங்களை சேகரித்து நாங்கள் எழுதுவோம் என தீர்மானித்தோம்.விரைவில் அது வெளிவரும்.

சிற்றுண்டி பரிமாறிய போது, திருநெல்வேலிக்கு அருகே உள்ள நாகர்கோயிலை சேர்ந்த ஜோவுக்கு கோவி.க அண்ணண் அல்வா தர மறந்துவிட்டார். உடனே திருநெல்வேலிக்கு அல்வா இல்லையா என ஜோ கதற ஆரம்பித்துவிட்டார். உட‌னே அவருக்கு அல்வா கொடுத்து, திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்த‌ பெருமையை நான் பெற்றுக்கொண்டேன்.

அடுத்ததாக கோவி.கண்ணண் அண்ணண் தன் பதிவில் ஒரு சக பதிவர்க்கு உதவி செய்வது குறித்து எழுதியிருந்தார். நான் இது குறித்து விவரித்தபோது ஒருமித்த குரலில் எல்லோரும் உதவ முன்வந்தார்கள். நான் சீனா அய்யாவை இதுகுறித்து தொடர்பு கொண்ட போது தற்போதைய தேவைக்கு அதிகமாகவே நிதியை நல்ல உள்ளங்கள் அள்ளிக்கொடுத்துவிட்டதால் தற்போது நிதி தேவையில்லை என்று சொல்லி எங்களுக்கு சொல்லிவிட்டார். அந்த நல்ல காரியத்தில் எங்களால் பங்கு பெற முடியாமல் போய்விட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்கோ ஒரு விருந்துக்கு சென்றுவிட்டு கடைசி நேரத்தில் சந்திப்புக்கு எகிறி குதித்து வந்த பாரி.அரசு, வெண்பா புலவர் அகரம் அமுதாவுடன் ஆர்வமாய் இலக்கிய விவதத்தில் இறங்கினார்.

கோவி.கண்ணண் அவர்கள் தள்ளாத இந்த வயதில் தலைமை பெறுப்பை சுமந்துகொண்டு சிரமப்படுவதால் வேறு ஒருவரை தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது, தலைவர் தலைமை எனும் தலைப்பில் மிக அழகான விவாதம் ஆரம்பித்தது. உங்களுள் தலைவனாக விரும்புபவன் முதலில் ஊழியனாய் இருக்கட்டும் என்ற பைபிள் வசனத்தை மேற்கோள் காட்டி நான் பேச, அதை அனைவரும் ஆதரித்ததால் இனி ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிதான் உண்டு, எங்களுள் தலைவர், தலை போன்ற வார்த்தைகளை கூட பிரயோகிப்பதில்லை என்ற தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

ஆனால் முகவை மைந்தன் இந்த தீர்மானத்தை விடாபிடியாக பிடித்துக் கொண்டு சந்திப்பு முடிந்தவுடன் சாலமன் மீன் வாங்க சென்ற போது, மீனின் தலையைக்கூட தலை என்று சொல்ல மறுத்தது, எங்கள் தீர்மானங்களை நாங்கள் எந்த அளவுக்கு மதிக்கிறோம் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

சந்திப்பு நடந்த புல்வெளியில் இருந்து காபி குடிக்க செல்லும் வழியில் பாரி.அரசு தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி மிக இளம்வயதிலேயே மரணத்தை தழுவியவர்கள் குறித்து கூறினார். இதுபற்றி மேலதிக தகவல்களை அவர் திரட்டிக்கொண்டு இருப்பதாகவும்,விரைவில் முழுத் தகவல்களுடன் பதிவிட இருப்பதாகவும் தெரிவித்தார்.

சந்திப்புக்கு இடத்தை மலைமேல் தேர்ந்தெடுத்து பல படிகள் ஏறிவரச் செய்ததற்காக கோவி.கண்ணண் அண்ணண் மீது சிறு வருத்தம் முதலில் இருந்தாலும், பாரி.அரசு கூறிய இளம் வயதினரின் மாரடைப்பு மரணங்களை கேள்விப்பட்டவுடன் உடற்பயிற்சி செய்ய வேண்டியதின் அவசியம் புரிந்ததால் கோவி.க அண்ணாவுக்கு மனதுக்குள் நன்றி சொல்லிக்கொண்டேன்.

ஏ ஃபார் ஆப்பிள் தொடரில் நீங்கள் அதிகம் பார்க்கும் தளங்கள் (சைட்) குறித்த தகவல்களை கொடுக்கச் சொன்னால், தான் பார்த்த பெண்களின் பட்டியலை கொடுத்த அண்ணண் புதுகை அப்துல்லாவை கண்டித்து ஒரு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

மேலும் யூத்ஃபுல் விகடனில் கலக்கும் அண்ணண் லக்கி லுக், எங்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்திய பரிசல்காரர், எங்கள் மனம் கவர்ந்த லதானந் மாமா ஆகியோரை பாராட்டி தீர்மானம் நிறைவேறியது.

குசும்பனை கண்டித்த நிறைவேற வேண்டிய தீர்மானம் எனது தனிப்பட்ட வேண்டுகோளால் கைவிடப்பட்டது.

மலேசியத் தமிழ் பதிவர்கள் அவர்களுள் யார் பதிவிட்டாலும், மற்றவர்கள் கட்டாயம் பின்னூட்டமிட்டு ஆதரிப்பதால், நாமும் அதேபோல் ஒருவருக்கு ஒருவர் பின்னூட்ட ஆதரவு அளிப்பது என்ற தீர்மானமும் ஒரு மனதாக நிறைவேறியது.

இப்ப‌டி ப‌ல‌ உப‌யோக‌மான‌ அலுவ‌ல்க‌ளை த‌ன்ன‌க‌த்தே கொண்ட‌தாக‌ இச்ச‌ந்திப்பு நிக‌ழ்ந்த‌தால், குசும்பன் அமோதித்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ் பதிவர்கள் அவர்கள் எந்த துறையில் பணியாற்றுபவர்களாக இருந்தாலும் தமிழ் மேல் அவர்கள் காட்டும் ஆர்வம் கட்டாயம் தமிழை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்பது ஐயமில்லாத உண்மைதான்.

கேரட் அல்வாவும், பீட்ரூட் அல்வாவும் உண்டாதால் மட்டுமல்லாது சக பதிவர்களை சந்தித்தாலும் நெஞ்சு நிறைய இனிப்பு சுவை நிரம்பியிருந்தது என்றால் அது மிகையாகாது.
Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•11:02 PM
அன்பார்ந்த சிங்கப்பூர் வாழ் பதிவர்களே,
நேற்று கோவையில் நடந்து முடிந்த பதிவர் மாநாட்டில் சிங்கப்பூரில் இருந்துகொண்டே கலந்துகொண்ட நான், சிங்கப்பூரில் நேரடியாக கலந்துகொண்டு உங்களையெல்லாம் சந்திக்க மிக்க ஆவலாக உள்ளேன்.

பதிவர் சந்திப்பு குறித்து சிங்கப்பூரின் மூத்த பதிவரும், பதிவர் சந்திப்புகள் பல கண்டவருமாகிய அண்ணண் கோவி.கண்ணண் அவர்களுடன் நான் கடந்த சனிக்கிழமை தொலைபேசியில் உரையாடிய போது, 26.07.2008 சனிக்கிழமை மாலை சந்திப்பை வைத்துக்கொள்ளலாம், அறிவிப்பை வெளியிடுங்கள் என்று கூறினார்.

சிங்கை பதிவர்கள் அனைவரும் உங்களது விருப்பத்தை தெரிவியுங்கள்.

மாநாட்டு தேதியில் மாற்றம் செய்ய வேண்டுமெனில் குறிப்பிடுங்கள்.
மாநாட்டிற்கான இடம், நேரம் போன்றவை குறித்த உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
என்னை தொடர்புகொள்ள:
அலைபேசி எண் : +65 - 93372775.
மின்னஞ்சல் முகவரி : joseph.paulraj@gmail.com.

உங்கள் பேராதரவை வேண்டுகின்றேன்.

இப்படிக்கு ,
அ.ஜோசப் பால்ராஜ்.
சிங்க‌ப்பூர். Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க