Author: ஜோசப் பால்ராஜ்
•9:33 PM
இரண்டு நாளைக்கு முன்னாடி பிரபலப் பதிவர், எழுத்தாளர், சிறுகதை ஆசிரியர் அன்பு அண்ணண் பரிசல் சிறு விபத்துக்குள்ளானார் என்பது எல்லாருக்கும் தெரியும். இப்ப அண்ணண் நல்லாருக்கார்.

முன்னால் சென்ற வாகனம் திடீரென நிறுத்தியதால், இவரது காரை இவர் நிறுத்த, பின்னால் வந்தவர் மட்டும் நிறுத்தாம இவர் காருல மோதினதால இவர் தல கண்ணாடியில இடிச்சு காயமாயிருச்சு. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர்ல இதே போன்று கார் திடீரென நிறுத்தப்பட்ட போது காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த “அண்ணண்” அப்துல்லா காரின் முன் கண்ணாடியில் தலை மோதி காயமடைந்திருந்தார். கார்ல இருக்கை பட்டைய( Seat Belt) மாட்டிக்கிட்டு பயணிச்சுருந்தா இந்த விபத்துகளை கண்டிப்பா தவிர்த்திருக்கலாமே. ஏன் அத யாரும் செய்ய மாட்டேங்குறீங்க? ( இதுல வெளிநாட்டுல இருந்து வர்றவய்ங்க, பழக்க தோசத்துல அந்தப் பட்டைய எடுத்து மாட்டீட்டா நம்மாளுங்க அடிக்கிற கிண்டல் இருக்கே, பல தடவ அனுபவிச்சுருக்கேன் நானு).

உமா சங்கர் ஐ.ஏ.எஸ் ஒரு முறை குடும்பத்தோட சென்னையில இருந்து திருச்சிக்கு கார்ல வர்றப்ப, அந்த கார் திருச்சிக்கு அருகே தலைகுப்புற கவிழுந்து பல்டியெல்லாம் அடிச்சுதாம். ஆனா அவர் மொத்த குடும்பத்துக்கும் ஒன்னுமே ஆகல, பத்திரமா வெளில வந்துருக்காங்க. காரணம் வண்டியில ஏறுனதும் எல்லாரையும் பெல்ட் போட்டே ஆகணும்னு கட்டாயமா சொல்லியிருந்தாராம் உமாசங்கர் ஐயா. இனியாவது இதை படிக்கிறவங்க, கட்டாயமா சீட் பெல்ட உபயோகப்படுத்துங்க. குறைந்தபட்சம் வாகனங்களில் முன் இருக்கைகளில் அமர்பவர்களும், வாகனத்தை ஓட்டுபவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து செல்லுங்கள்.

முன்பெல்லாம் சாலை சரியில்லாம விபத்துகள் நடந்துச்சு. இப்ப நல்ல சாலைகள் இருக்கு, ஆனா அத எப்டி உபயோகிக்கிறதுன்னு நம்மாட்களுக்கு தெரியலை.
மெதுவாக செல்லும் கனரக வாகனங்கள் சாலையின் இடபுற தடத்தில் தான் செல்ல வேண்டும் என்பது சாலை விதி. ஆனால் இதை எவரும் கடைபிடிப்பது கிடையாது. மிக அதிகளவில் பாரமேற்றப்பட்டு செல்லும் லாரிகள், டாட் ஏஸ், மினிடோர் போன்ற வாகனங்கள் கூட சாலையின் வலது தடத்தில் தான் செல்கின்றன. இவர்களை இடதுபுறமாக மற்றவர்கள் முந்திச் செல்கின்றார்கள். அதோடு நன்றாக அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் திடீரென குறுக்கே ஓடுபவர்களும் இன்னமும் இருக்கின்றார்கள். சாலை நன்றாக இருப்பதால் வேகமாக வாகனங்கள் செல்வதால் இது போல் குறுக்கே ஓடுபவர்களால் விபத்து ஏற்படுவதை தவிர்க்கவே இயலாது.

முதலில் 4 தடமுள்ள சாலைகளில் எப்படி வாகனங்களை ஓட்டுவது, யார் யார் எந்த தடத்தில் செல்லலாம் , எப்படி முன் செல்லும் வாகனத்தை முந்துவது, எப்படி ஒளி சமிக்கைகள் குடுப்பது என்பது குறித்து கட்டாயம் பயிற்சியளிக்க வேண்டும்.

முன் செல்லும் வாகனம் வலதுபுறம் திரும்பும் சமிக்ஞை(Right Indicator) குடுத்தால் பின்செல்லும் வாகனம் முன்செல்லும் வாகனத்தை முந்திக்கொள்ளலாம் என அர்த்தம் என எங்கள் வாகனத்தை ஓட்டியவர் சொன்னார். கேட்டதும் அதிர்ந்து போயிட்டேன்.

ஒரு வேளை என் போன்றவர்கள் வலது சமிக்ஞை போட்டுவிட்டு வலது தடத்திற்கு மாற முயற்சிக்கும் போது, பின்னால் வருபவர் முந்திக்கொள்ள அவருக்கு சமிக்ஞை கொடுத்ததாக எண்ணி வேகமாக வந்தால் கட்டாயம் விபத்து ஏற்படுவதை தவிர்க்க இயலாது. இதை என்னவென்று சொல்வது?
மிக கடுமையான பயிற்சிகள் வாகன ஓட்டிகளுக்கு தரப்பட வேண்டும். பயிற்சியளிப்பதோடு , அதை ஒழுங்காக கடைபிடிக்கின்றார்களா என கண்காணிக்கவும் வேண்டும். இது போன்ற வசதிகளை மட்டும் செஞ்சுட்டு அத எப்படி ஒழுங்கா உபயோகிப்பதுன்னு தெரியாம இருக்கது, தீவிரவாதிகிட்ட இருக்க அணுகுண்டு மாதிரி மிக ஆபத்தானது.

அடுத்து இருச் சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிவோர் , சிலர் கட்டாயத்தின் பேரில் தலைகவசம் அணிந்தாலும், அதில் உள்ள வாரை ஒழுங்காக மாட்டாமல் , ரொம்ப அலட்சியமா விட்டுட்டு போயிட்டு இருக்காங்க. ஒரு வேளை கீழே விழுந்தால் அந்த அதிர்சியிலேயே தலைக்கவசம் தனியே கழண்டு விழுந்துவிடும். தலைக்கு எந்த பாதுகாப்பும் இருக்காது.

இதே போல் ஒரு விபத்து ஏற்பட்டு என்றென்றும் அன்புடன் பாலா அவர்களின் அக்கா மகன், 27 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தது இது தான்
இந்தப் பதிவுக்கான காரணம்: ஆனந்த் விபத்து நிகழ்ந்தபோது, ஹெல்மட் அணிந்திருந்தான். ஆனால், ஹெல்மட் ஸ்ட்ராப்பின் (strap) பக்கிளை (buckle) போடாததால், ஹெல்மட் கழண்டு விட்டதாக விபத்தை நேரில் பார்த்த ஒரு கடைக்காரர் கூறினார்.

ஆகவே, பைக்கில் செல்பவர் ஹெல்மட் போட்டால் மட்டும் போதாது. ஹெல்மட் strap buckle ஐயும் சரியாக போட்டுக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். இவ்விடுகையை வாசிக்கும் (டூ வீலரில் பயணிக்கும்) நண்பர்களுக்கு இதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்.
இது போல் பலர் அலட்சியமாக இருப்பதையும் காண நேரிடுகிறது. இதெல்லாம் தானா வரணும், வரலைன்னு சட்டம் போட்டாலும் இப்டி செய்யிறாங்க, உயிரோட மதிப்பு அரசாங்கத்துக்கு மட்டுமில்ல, தனி மனிதர்களுக்கும் தெரியலை. இதப் படிக்கிற பிரபலங்கள், பெரியாட்கள் யாராச்சும் தயவு செஞ்சு இதை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நடைமுறைப்படுத்த உதவுங்கள்.

சாலைப் பாதுகாப்பு குறித்து இயற்கை மகளின் அழைப்பின் பேரில் சஞ்செய் எழுதிய பதிவில் மேலே குறிப்பிட்டிருந்ததை பின்னூட்டமாக சொல்லியிருந்தேன். சஞ்செய் கூட படிச்சாரான்னு தெரியல.

கேபிள் சங்கர் அண்ணண் கேட்டிருந்தபடி கதிர் என்ற
சிறுவனுக்கு காது கேட்கும் கருவி வாங்க உதவிய அத்தனை உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. ஊர் கூடி தேர் இழுப்பது போன்றது இந்த நல்ல காரியங்கள் எல்லாம். மூன்றே நாட்களில் மொத்த தொகையையும் திரட்ட உதவிய அத்தனை நல் உள்ளங்களுக்கும், முக்கியமா எங்க சிங்கை அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி .

தம்பி கதிர் நல்லவற்றை கேட்டு, நன்கு படித்து, நல்லவனாய் வளர்ந்து, பலருக்கும் உதவ வாழ்த்துவோம்.


என்னைப் போலவே பதிவெழுதாப் பதிவராய் திறம்பட செயலாற்றி எனக்கு உற்ற துணையாய் இருந்த அண்ணண் வெண்பூ இன்னைக்கு திடீர்னு நானும் பதிவர்தாண்டான்னு சொல்லிட்டு ஜீப்ல ஏறிட்டாரு. வேற வழியே இல்லைல, அதான் இன்னைக்கு நானும் பதிவெழுதி ஜோதியில கலந்துட்டேன். மிஸ்டர். சஞ்செய், ப்ளீஸ் நோட் திஸ்.

இன்னும் ஒருத்தர் இருக்காரு, எல்லாரையும் அண்ணண் அண்ணணு கூப்புடுறதால தம்பியின் டைரிக்குறிப்புன்னு எழுதிக்கிட்டு இருந்தாரு, அவரு சீக்கிரம் டைரிக்குறிப்பு எழுதலைன்னா மேலும் பல பதிவுகளை நான் எழுதுவேன்னும் எச்சரிக்கிறேன். Udanz
Links to this post
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க