தஞ்சை மேம்பாலம் அருகே உள்ள செல்வராஜ் உயர்நிலைபள்ளியில் படிக்கும் மாணவியர் சிலர் அரசு பேருந்தில் வந்த போது, அவர்களது பள்ளி இருக்கும் நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார் ஓட்டுநர். மாணவிகள் பேருந்தை நிறுத்தக்கோரி சத்தமிட்டதால் எரிச்சலடைந்த நடத்துநர் அவர்களை ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளியுள்ளார்.
இலவசம் என்றால் இவர்களுக்கு இளக்காரமா? இவர்களின் ஊதியத்தில் இருந்தா அரசு பள்ளி மாணவர்களுக்கு சலுகை அளிக்கின்றது? என்ன கொடுமை இது? ஓடும் பேருந்தில் இருந்து ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவிகளை கீழே தள்ளுகிறார் என்றால் அவருக்கெல்லாம் மனம் என்று ஒன்று இருக்கின்றதா? உண்மையிலேயே நல்ல மனநிலை உடையவர்தானா அந்த நடத்துநர் அல்லது மனநிலை சரியில்லாதவரா?
கீழே விழுந்த குழந்தைகள் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்கள், ஒரு வேளை பலத்த அடிபட்டிருந்தாலோ அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தாலோ இவர்களால் அதை ஈடு செய்ய முடியுமா? ஆனால் இவர்களையெல்லாம் கடுமையாக தண்டிக்க நம்மிடம் சரியான சட்டங்கள் இல்லாததுதான் மிகப்பெரிய கொடுமை.
போக்குவரத்துகழகம் அந்த ஓட்டுநரையும், நடத்துநரையும் இடைக்கால பணிநீக்கம் செய்திருக்கிறதாம். மற்றவர்களுக்கு இது போல் நடக்க கூடாது என்று எச்சரிக்கை செய்திருக்கின்றதாம். என்ன ஒரு கடுமையான தண்டணை கொடுத்துள்ளார்கள் பார்த்தீர்களா?
உடனடியாக அவர்களை கைது செய்து ,குறைந்தபட்சம் கொலை முயற்சி வழக்காவது பதிவு செய்திருக்க வேண்டும், உடனடியாக அவர்களை நிரந்தர பணிநீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்ததாகக்கூட செய்தியில் இல்லை.
நான் எப்போதும் என் நாட்டைப் பிற நாட்டோடு ஒப்பிட்டுவது கிடையாது. நான் இருக்கும் நாட்டில் இருக்கும் வசதிகள் என் நாட்டிலும் சீக்கிரம் வரவேண்டும் என்ற ஆதங்கம்தான் அடைவேன். சிங்கப்பூரில் நடந்த ஒரு சம்பவம் இந்த செய்தியோடு நினைவுக்கு வந்து அந்த ஆதங்கத்தை இன்னும் அதிகமாக்குகின்றது.
ஒரு முறை இங்குள்ள பேருந்தில் இருந்து தனது நிறுத்தத்தில் இறங்கிய ஒரு பெண்மணி, இறங்கும் போது நிலைதடுமாறி பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஒரு தூணில் மோதி தலையில் காயம் ஏற்பட்டுவிட்டது. அவர் நிலை தடுமாறியதற்கோ, அல்லது காயம் அடைந்ததற்கோ அந்த பேருந்தின் ஓட்டுநர் எள்ளளவும் காரணமில்லை. நிறுத்தத்தில் நன்றாக பேருந்தை நிறுத்தி, Hand Brake lock செய்துவிட்டு, பின்னர் தானே இங்கு பேருந்தின் கதவையே திறப்பார்கள், அதனால் ஓடும் பேருந்தில் இருந்து இறங்க வாய்ப்பேயில்லை. ஆனாலும் அந்த ஓட்டுநரின் வேலை உடனடியாக பறிக்கப்பட்டு,வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
அந்த பெண் நிலை தடுமாறியதையோ, காயமடைந்ததையோ, உதவி கேட்டு அவர் கையை ஆட்டியதையோ அவர் கவனிக்காமல் அங்கிருந்து பேருந்தை எடுத்து சென்றுவிட்டார். இதுதான் அவர் செய்த தவறு. பேருந்து ஓட்டுநர் தன் பேருந்தில் இருந்து இறங்கியவர் கீழே விழுந்ததை எப்படி கவனிக்காமல் சென்றார்? அந்தப் பெண் உதவிக்கு ஆள் இல்லாமல் தவித்தாரே என்று இப்படிக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது என நிர்வாகம் விளக்கமளித்தது.
ஆனால் நம்மவர்கள் சர்வ சாதாரணமாக பணியிடை நீக்கம் மட்டும் செய்துள்ளார்கள்.
இலவச சலுகையைப் பயன்படுத்தி பயணம் செய்யும் மாணவர்கள் எல்லா இடங்களிலும் இப்படி இழிவுபடுத்தப்படுவது தொடர்கதையாகத்தான் இருக்கின்றது. இந்த ஓட்டுநர், நடத்துநரின் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் வகையில் தண்டணை இருக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்றும் கொஞ்சம் சொல்லுங்கள்.