Author: ஜோசப் பால்ராஜ்
•9:33 PM
இரண்டு நாளைக்கு முன்னாடி பிரபலப் பதிவர், எழுத்தாளர், சிறுகதை ஆசிரியர் அன்பு அண்ணண் பரிசல் சிறு விபத்துக்குள்ளானார் என்பது எல்லாருக்கும் தெரியும். இப்ப அண்ணண் நல்லாருக்கார்.

முன்னால் சென்ற வாகனம் திடீரென நிறுத்தியதால், இவரது காரை இவர் நிறுத்த, பின்னால் வந்தவர் மட்டும் நிறுத்தாம இவர் காருல மோதினதால இவர் தல கண்ணாடியில இடிச்சு காயமாயிருச்சு. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர்ல இதே போன்று கார் திடீரென நிறுத்தப்பட்ட போது காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த “அண்ணண்” அப்துல்லா காரின் முன் கண்ணாடியில் தலை மோதி காயமடைந்திருந்தார். கார்ல இருக்கை பட்டைய( Seat Belt) மாட்டிக்கிட்டு பயணிச்சுருந்தா இந்த விபத்துகளை கண்டிப்பா தவிர்த்திருக்கலாமே. ஏன் அத யாரும் செய்ய மாட்டேங்குறீங்க? ( இதுல வெளிநாட்டுல இருந்து வர்றவய்ங்க, பழக்க தோசத்துல அந்தப் பட்டைய எடுத்து மாட்டீட்டா நம்மாளுங்க அடிக்கிற கிண்டல் இருக்கே, பல தடவ அனுபவிச்சுருக்கேன் நானு).

உமா சங்கர் ஐ.ஏ.எஸ் ஒரு முறை குடும்பத்தோட சென்னையில இருந்து திருச்சிக்கு கார்ல வர்றப்ப, அந்த கார் திருச்சிக்கு அருகே தலைகுப்புற கவிழுந்து பல்டியெல்லாம் அடிச்சுதாம். ஆனா அவர் மொத்த குடும்பத்துக்கும் ஒன்னுமே ஆகல, பத்திரமா வெளில வந்துருக்காங்க. காரணம் வண்டியில ஏறுனதும் எல்லாரையும் பெல்ட் போட்டே ஆகணும்னு கட்டாயமா சொல்லியிருந்தாராம் உமாசங்கர் ஐயா. இனியாவது இதை படிக்கிறவங்க, கட்டாயமா சீட் பெல்ட உபயோகப்படுத்துங்க. குறைந்தபட்சம் வாகனங்களில் முன் இருக்கைகளில் அமர்பவர்களும், வாகனத்தை ஓட்டுபவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து செல்லுங்கள்.

முன்பெல்லாம் சாலை சரியில்லாம விபத்துகள் நடந்துச்சு. இப்ப நல்ல சாலைகள் இருக்கு, ஆனா அத எப்டி உபயோகிக்கிறதுன்னு நம்மாட்களுக்கு தெரியலை.
மெதுவாக செல்லும் கனரக வாகனங்கள் சாலையின் இடபுற தடத்தில் தான் செல்ல வேண்டும் என்பது சாலை விதி. ஆனால் இதை எவரும் கடைபிடிப்பது கிடையாது. மிக அதிகளவில் பாரமேற்றப்பட்டு செல்லும் லாரிகள், டாட் ஏஸ், மினிடோர் போன்ற வாகனங்கள் கூட சாலையின் வலது தடத்தில் தான் செல்கின்றன. இவர்களை இடதுபுறமாக மற்றவர்கள் முந்திச் செல்கின்றார்கள். அதோடு நன்றாக அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் திடீரென குறுக்கே ஓடுபவர்களும் இன்னமும் இருக்கின்றார்கள். சாலை நன்றாக இருப்பதால் வேகமாக வாகனங்கள் செல்வதால் இது போல் குறுக்கே ஓடுபவர்களால் விபத்து ஏற்படுவதை தவிர்க்கவே இயலாது.

முதலில் 4 தடமுள்ள சாலைகளில் எப்படி வாகனங்களை ஓட்டுவது, யார் யார் எந்த தடத்தில் செல்லலாம் , எப்படி முன் செல்லும் வாகனத்தை முந்துவது, எப்படி ஒளி சமிக்கைகள் குடுப்பது என்பது குறித்து கட்டாயம் பயிற்சியளிக்க வேண்டும்.

முன் செல்லும் வாகனம் வலதுபுறம் திரும்பும் சமிக்ஞை(Right Indicator) குடுத்தால் பின்செல்லும் வாகனம் முன்செல்லும் வாகனத்தை முந்திக்கொள்ளலாம் என அர்த்தம் என எங்கள் வாகனத்தை ஓட்டியவர் சொன்னார். கேட்டதும் அதிர்ந்து போயிட்டேன்.

ஒரு வேளை என் போன்றவர்கள் வலது சமிக்ஞை போட்டுவிட்டு வலது தடத்திற்கு மாற முயற்சிக்கும் போது, பின்னால் வருபவர் முந்திக்கொள்ள அவருக்கு சமிக்ஞை கொடுத்ததாக எண்ணி வேகமாக வந்தால் கட்டாயம் விபத்து ஏற்படுவதை தவிர்க்க இயலாது. இதை என்னவென்று சொல்வது?
மிக கடுமையான பயிற்சிகள் வாகன ஓட்டிகளுக்கு தரப்பட வேண்டும். பயிற்சியளிப்பதோடு , அதை ஒழுங்காக கடைபிடிக்கின்றார்களா என கண்காணிக்கவும் வேண்டும். இது போன்ற வசதிகளை மட்டும் செஞ்சுட்டு அத எப்படி ஒழுங்கா உபயோகிப்பதுன்னு தெரியாம இருக்கது, தீவிரவாதிகிட்ட இருக்க அணுகுண்டு மாதிரி மிக ஆபத்தானது.

அடுத்து இருச் சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிவோர் , சிலர் கட்டாயத்தின் பேரில் தலைகவசம் அணிந்தாலும், அதில் உள்ள வாரை ஒழுங்காக மாட்டாமல் , ரொம்ப அலட்சியமா விட்டுட்டு போயிட்டு இருக்காங்க. ஒரு வேளை கீழே விழுந்தால் அந்த அதிர்சியிலேயே தலைக்கவசம் தனியே கழண்டு விழுந்துவிடும். தலைக்கு எந்த பாதுகாப்பும் இருக்காது.

இதே போல் ஒரு விபத்து ஏற்பட்டு என்றென்றும் அன்புடன் பாலா அவர்களின் அக்கா மகன், 27 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தது இது தான்
இந்தப் பதிவுக்கான காரணம்: ஆனந்த் விபத்து நிகழ்ந்தபோது, ஹெல்மட் அணிந்திருந்தான். ஆனால், ஹெல்மட் ஸ்ட்ராப்பின் (strap) பக்கிளை (buckle) போடாததால், ஹெல்மட் கழண்டு விட்டதாக விபத்தை நேரில் பார்த்த ஒரு கடைக்காரர் கூறினார்.

ஆகவே, பைக்கில் செல்பவர் ஹெல்மட் போட்டால் மட்டும் போதாது. ஹெல்மட் strap buckle ஐயும் சரியாக போட்டுக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். இவ்விடுகையை வாசிக்கும் (டூ வீலரில் பயணிக்கும்) நண்பர்களுக்கு இதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்.
இது போல் பலர் அலட்சியமாக இருப்பதையும் காண நேரிடுகிறது. இதெல்லாம் தானா வரணும், வரலைன்னு சட்டம் போட்டாலும் இப்டி செய்யிறாங்க, உயிரோட மதிப்பு அரசாங்கத்துக்கு மட்டுமில்ல, தனி மனிதர்களுக்கும் தெரியலை. இதப் படிக்கிற பிரபலங்கள், பெரியாட்கள் யாராச்சும் தயவு செஞ்சு இதை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நடைமுறைப்படுத்த உதவுங்கள்.

சாலைப் பாதுகாப்பு குறித்து இயற்கை மகளின் அழைப்பின் பேரில் சஞ்செய் எழுதிய பதிவில் மேலே குறிப்பிட்டிருந்ததை பின்னூட்டமாக சொல்லியிருந்தேன். சஞ்செய் கூட படிச்சாரான்னு தெரியல.

கேபிள் சங்கர் அண்ணண் கேட்டிருந்தபடி கதிர் என்ற
சிறுவனுக்கு காது கேட்கும் கருவி வாங்க உதவிய அத்தனை உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. ஊர் கூடி தேர் இழுப்பது போன்றது இந்த நல்ல காரியங்கள் எல்லாம். மூன்றே நாட்களில் மொத்த தொகையையும் திரட்ட உதவிய அத்தனை நல் உள்ளங்களுக்கும், முக்கியமா எங்க சிங்கை அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி .

தம்பி கதிர் நல்லவற்றை கேட்டு, நன்கு படித்து, நல்லவனாய் வளர்ந்து, பலருக்கும் உதவ வாழ்த்துவோம்.


என்னைப் போலவே பதிவெழுதாப் பதிவராய் திறம்பட செயலாற்றி எனக்கு உற்ற துணையாய் இருந்த அண்ணண் வெண்பூ இன்னைக்கு திடீர்னு நானும் பதிவர்தாண்டான்னு சொல்லிட்டு ஜீப்ல ஏறிட்டாரு. வேற வழியே இல்லைல, அதான் இன்னைக்கு நானும் பதிவெழுதி ஜோதியில கலந்துட்டேன். மிஸ்டர். சஞ்செய், ப்ளீஸ் நோட் திஸ்.

இன்னும் ஒருத்தர் இருக்காரு, எல்லாரையும் அண்ணண் அண்ணணு கூப்புடுறதால தம்பியின் டைரிக்குறிப்புன்னு எழுதிக்கிட்டு இருந்தாரு, அவரு சீக்கிரம் டைரிக்குறிப்பு எழுதலைன்னா மேலும் பல பதிவுகளை நான் எழுதுவேன்னும் எச்சரிக்கிறேன். Udanz
Author: Anonymous
•11:56 AM
ஜோண்ணா,
ஒழுங்கு மரியாதையா பதிவ போடுற வேலைய பாருங்க. அதென்ன பதிவே போடாமல் பதிவர் ஒன்று கூடலுக்கு மட்டும் நேரத்துக்கு போறிங்க?! இதில சிங்கை பதிவர்கள் தலைவர் பதவி வேறு!! ம்ம்கும்

ஏதோ உங்களுக்கு மட்டும் தான் வேலை அதிகம் போலவும், நாங்கெல்லாம் வேலை இல்லாமல் இருப்பது போலவும் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றீர்கள். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

உடனே பதிவு போடுங்கள், அது சஞ்சயை கலாய்க்கும் பதிவாக இருந்தால் கூட மகிழ்ச்சியே!

உங்கள் பதிவு வரவில்லை எனில்:

தூயா சமையல்கட்டில் தினமும் 3 தடவைகள் மட்டுமல்லாது 6 தடவைகள் சமைப்பார்.
லீ 1 நாள் சாப்பிட்டு கொண்டே உண்ணாவிரதம் இருப்பார்.
ராம் அதிசயபறவைகளை கண் கொண்டும் பார்க்க மாட்டார்.
ஜோதி அண்ணா வீட்டு இட்லி உங்க பக்கம் வரும்.
ஜமால் உங்களுக்காக டீ குளிப்பார்

இவ்வண்ணம்,
தூயா
வாழ்நாள் தலைவர்
ஜோண்ணாவை மிரட்டுவோர் சங்கம்
'தல'மை செயலகம்
ஒஸ்திரேலியா Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•3:59 PM
எனது சொந்த வாழ்வில் நிகழ்ந்த ஒன்று. எனது 17 வருட தேடல் இது.

மாரநேரி என்ற ஒரு சின்ன கிராமத்தில் பிறந்த நான், அதே கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில்தான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். தமிழ் வழிக்கல்வியில் ஆங்கிலம் என்பது அறிமுகமாவதே மூன்றாம் வகுப்பில் தானே. எனக்கு அது வரை ஏ பி சி டி கூட தெரியாது. மூன்றாம் வகுப்பு வந்த போதும் ஏபிசிடி சொல்லச் சொன்னால் 26 எழுத்துக்களையும் சொல்லத்தெரியாது. ஆனால் எழுதச் சொன்னால் அதுவும் எனது சிலேட்டில் எழுதச் சொன்னால் எழுதிவிடுவேன். அது எப்படியென்றால் எனது சிலேட்டின் இரு பக்க சட்டங்களிலும் ஏபிசிடி இருக்கும். அதைப் பார்த்து எழுதி சாமாளித்தேன்.

நான் நான்காம் வகுப்பு படித்த போது எங்கள் ஊர் பள்ளியில் வேலை பார்த்த ஒரு கன்னியாஸ்த்ரி மருத்துவ விடுப்பு எடுத்த போது அந்த விடுப்பு பணிக்காக வந்தவர் தான் சுந்தரி டீச்சர். சுந்தரி டீச்சர் B.Sc வேதியியல் பட்டமும், B.Ed பட்டமும் பெற்றவர்.

நான்கவது படிக்கும் எங்களுக்கு சுந்தரி டீச்சர் வகுப்பெடுக்க வந்த முதல் நாள் இன்னும் எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது. மதிய நேரம் முதல் பிரிவு அறிவியல் பாடம். எனக்கு ஆங்கிலம் தான் தெரியாதே தவிர மற்ற பாடங்கள் எல்லாம் நன்றாகப் படிப்பேன். முதலில் நடந்த அறிவியல் வகுப்பில் முதல் வரிசையில் உட்கார்ந்து மிக ஆர்வமாக பாடங்களை கவனித்துக் கொண்டிருந்தேன். கேட்க்கும் கேள்விகளுக்கு எல்லாம் சரியாக பதில் சொல்லி டீச்சரின் பாராட்டுகளையும் பெற்றேன்.

அடுத்த பிரிவுக்கு மணி அடித்தது. அறிவியல் வகுப்பு முடிந்து ஆங்கில வகுப்பு தொடங்கியது. விடுறா ஆளை என்று முதல் வரிசையிலிருந்து கடைசி வரிசைக்கு ஓடிவிட்டேன். சுந்தரி டீச்சர் ஆங்கிலப் பாடத்தை எடுக்க ஆரம்பித்தார்கள். அந்த பாடம் கூட சாலமன் மன்னரின் அறிவை சோதிக்க ஒரே மாதிரியாக இருக்கும் இரண்டு பூக்களை கொடுத்து அதில் எந்த பூ நிஜப்பூ என தொட்டுப்பார்க்காமலேயே கண்டுபிடிக்க சொல்லும் கதை. இந்தப் பாடத்தை நடத்த ஆரம்பித்த டீச்சர், பாடத்திற்கு நடுவே கேள்வி கேட்ட போதுதான் என்னை தேடி, நான் கடைசி வரிசையில் அமர்ந்திருப்பதை பார்த்தார்கள். எங்கடா இந்த பால், அறிவியல் பாடத்துக்கு முன்னாடி உக்காந்திருந்தவன ஆளையே காணோமேன்னு கேட்டாங்க. அதுக்கு என் தோழன் ஒருத்தன் டீச்சர் அவன் எல்லா பாடமும் நல்ல படிப்பான், ஆனா இங்கிலீஷ் அவனுக்கு வராது அதுனால இங்கிலீஷ் பாடத்துக்கு மட்டும் கடைசி வரிசையிலத்தான் உக்காருவான்னு சொன்னான். டீச்சருக்கு கோவம் வந்துருச்சு. முதல்ல நீ முதல் வரிசைக்கு வான்னு கூப்பிட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமா ஆங்கிலத்தின் மேல எனக்கு இருந்த பயத்தை போக்கி, எல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க.

டீச்சர் ஊரு நாகப்பட்டினம், அதுனால எங்க ஊர் கன்னியர் மடத்துலயே தங்கி, எங்க பள்ளியில வேலை செஞ்சாங்க. பள்ளியும், மடமும் ஒரே வளாகத்தில்தான் இருந்துச்சு. பள்ளிக்கூடம் விட்ட பின்னர் இரவு உணவு வரையிலும், விடுமுறை நாட்களிலும் நாங்கள் டீச்சர் உடன் தான் இருப்போம். விளையாட்டுகளோடு எங்களுக்கு ஆங்கிலம், பொது அறிவு போன்றவற்றையும் சொல்லிக் கொடுத்தார்கள். அவர்களிடமிருந்து தான் பல அடிப்படை விசயங்களை கற்றுக்கொண்டேன். நான் மட்டுமல்ல என் அண்ணன் டைட்டஸ், என் வகுப்புத் தோழன் ஒருவன் தோழியர் இருவர் என நாங்கள் 5 பேர் எப்போதும் டீச்சருடனே இருந்து நிறையக் கற்றுக்கொண்டோம்.

நாங்கள் 5 ஆம் வகுப்பு முடித்துவிட்டு ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை எங்கள் கிராமத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள மேகளத்தூர் என்ற ஊரில் இருந்த நடுநிலைப் பள்ளியில் படித்தோம். அப்போதும் எங்கள் ஊரில் டீச்சர் இருக்கும் வரை நாங்கள் அவர்கள் கூடத்தான் இருந்தோம். ஆனால் சில ஆண்டுகளில் டீச்சர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்கள். தற்போது எங்கே உள்ளார்கள் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.

அவர்களைப் பற்றி எனக்கு தெரிந்தது எல்லாம் கீழே உள்ளவை தான்.

1) பத்மாவதி இல்லம், கிணத்தடி சந்து, வெளிப் பாளையம், நாகப்பட்டினம் என்ற இந்த முகவரி.

2) அவரது தந்தையார் பெயர் காளிமுத்து என்பதும்,அவர் PA to the CEO ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

3) அவரது மூத்த சகோதரியின் கணவர் சோழன் போக்குவரத்து கழகத்தில் மேலாளராக பணிபுரிந்தார், அவர்களது மகன் பெயர் பிரபு.

4) அவருக்கு ஒரு தங்கை உண்டு.

நாங்கள் அவர்களோடு இருக்கும் போதே எங்களுக்கு அரசியல் குறித்த சரியான பார்வை என்னவாக இருக்க வேண்டும், சினிமாவில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பங்கள், புதுப் புது கண்டுபிடிப்புகள் குறித்த செய்திகள் எனப் பலவற்றையும் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்து ஒரு கிராமத்தில் பிறந்த எங்கள் முன்னேற்றத்தில் சுந்தரி டீச்சரின் பங்கு மிக முக்கியமானது.

என் அண்ணண் ஜோசப் டைட்டஸ் Neuro Physiology யில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்சியை முடித்துவிட்டு முனைவர் பட்டம் பெற இருக்கிறார், தற்போது அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் மேடிசன் என்ற ஊரில் உள்ள விஸ்கான்ஸின் பல்கலை கழகத்தில் ஆராய்சியாளராக வேலைக்கு சேரும் அளவுக்கு உயர்ந்ததிலும் சுந்தரி டீச்சரின் பங்கு பெருமளவில் இருக்கின்றது. நானும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, மென்பொருள் துறையில் ஒரு நல்ல வேலையிலும் சேர்ந்து வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்து, இன்று வலைப் பதிவு எழுதும் அளவுக்கு என்னை உயர்த்தியதிலும் சுந்தரி டீச்சரின் பங்கு முக்கியமானது.

வலையுலகில் நான் எழுதும் எனது 50வது பதிவு இது. என்னை இந்தளவுக்கு உயர்த்திய என் பாசமிகு சுந்தரி டீச்சருக்கு இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

நாகையை சேர்ந்தவரான‌ கோவி.கண்ணண் அண்ணணிடம் நேற்றைய சந்திப்பில் சுந்தரி டீச்சரை குறித்து கூறினேன். அவரது தம்பியிடம் கூறி தகவல் சேகரிப்பதாக கூறியுள்ளார். நாகையை சேர்ந்த வேறுயாரும் இந்த பதிவை படித்தீர்களானால் சுந்தரி டீச்சரை நான் கண்டுபிடிக்க உதவுங்கள். 17 வருடமாக தேடிக் கொண்டிருக்கும் எனக்கு யாராவது உதவுங்கள்.

ஐம்பதாவது பதிவை வெளியிடும் இவ் வேளையில் என்னை ஆதரித்து ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் எனது நன்றிகள். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•10:00 PM
சமீபத்தில் இலவசம் என்றால் இளக்காரமா ? என்ற தலைப்பில் இலவச பேருந்து சலுகையை பயன்படுத்தி பயணம் செய்த சில சிறுமிகளை தஞ்சையில் ஒரு நடத்துநர் பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட செய்தியை அறிந்து நான் எழுதிய பதிவிற்கு பின்னூட்டமிட்ட பலரும், தங்களது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

அதிலும் என‌க்கு ப‌ல‌ நேர‌ங்க‌ளில் மிக‌ சரியான‌ ஆலோச‌னைகளை சொல்லும் என் ந‌ண்ப‌ர்
3rdeye த‌ன‌து பின்னூட்ட‌த்தில் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை கேட்ப‌தோடு நிறுத்தாதே இதை அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு எடுத்துச்செல் என்று பின்னூட்ட‌மிட்டிருந்தார்.

நானும் இதை வெறும் பதிவிடுவதோடு நிறுத்தக்கூடாது, கட்டாயம் அந்த மனிதாபிமானமற்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ன செய்யலாம் என்று எண்ணிய போது, தற்செயலாக இணையத்தின் மூலமாக பொதுமக்களின் புகார்களை தெரிவிக்க வசதி இருப்பது தெரியவந்தது. http://pgportal.gov.in.

இந்த இணையத்தின் வாயிலாக இந்தியாவில் மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் மற்றும் அரசின் அனைத்து துறைகளுக்கும் நாம் நமது புகாரை தெரிவிக்க முடியும்.

முதலில் நமது பயனாளர் பெயர் (User Name) மற்றும் கடவு சொல் (Password) ஆகியவற்றை தெரிவு செய்து விட்டு, நமது முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களை பதிவு செய்துவிட்டு, எந்த துறைக்கு நமது புகாரை அனுப்ப வேண்டும் என்பதை தெரிவு செய்துவிட்டு, அதற்கு கீழேயுள்ள பெட்டியில் 4000 வார்த்தைகளுக்குள் நமது புகாரை பதிவு செய்ய வேண்டும்.

மேலும் நமது புகாரை வெற்றிகரமாக‌ பதிவு செய்த உடன் நமக்கு ஒரு பதிவெண் தரப்படுகின்றது. இந்த பதிவெண் (உதாரணமாக எனது புகாரின் பதிவெண்: DARPG/E/2008/08229)மூலமாக நாம் பின்னர் நமது புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியலாம்.

இப்படி ஒரு அமைப்பும், வசதியும் இருப்பது நம்மில் எத்தனைபேருக்கு தெரியும் எனத்தெரியவில்லை. இதில் இன்றுதான் எனது புகாரை பதிவு செய்துள்ளேன். இதன் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதை தொடர்ந்து பார்த்து உங்களுக்கு கட்டாயம் தெரிவிப்பேன்.

நீங்களும் உங்கள் கண்ணில்படும் குற்றங்களை சும்மா பார்பதோடு நின்றுவிடாமல், உடனே இந்த இணையத்தின் மூலமாக உங்கள் புகாரை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்புங்கள். புகார் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களும் தரப்பட வேண்டும் என்பதால் நடவடிக்கைகள் கட்டாயம் எடுக்கப்படும் என நம்பலாம்.

ஒரு குறிப்பிட்ட நிகழ்வு குறித்த ஒன்றுக்கும் மேற்பட்ட புகார்கள் குவியும்போது, அந்த பிரச்சனையின் தாக்கம் கட்டாயம் இந்த புகார்களை கையாள்பவர்களுக்கு புரியலாம். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எண்ணி, நடவடிக்கை எடுக்க முற்படலாம். வாய்ப்பு கிடைக்கும் போது ஏன் நாம் சும்மாயிருக்க வேண்டும்?

எத்தனையோ மின்னஞ்சல்களை நாம் அனைவருக்கும் அனுப்பி மகிழ்கிறோம். இந்த இணையதளத்தை குறித்த விழிப்புணர்வையும் நாம் எல்லோருக்கும் ஏற்படுத்த வேண்டும். உங்கள் நண்பர்களுக்கு இச்செய்தியை தயவுசெய்து அனுப்புங்கள். சிறு துளிகள் தான் பெருவெள்ளமாகும். ஜெய் ஹிந்த். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•12:48 AM
என்ன பண்றது, இந்த வாரம் பதிவர் உலகத்துல ஒன்னு பகிரங்க கடிதம் எழுதனும் இல்லன்னா மெஸ்ஸ பத்தி எழுதணும் ...

நான் யாருக்காவது அந்தரங்க கடிதம் எழுதுனாலே அடிதடி வந்துடும், இதுல பகிரங்க கடிதம் எதையாவது எழுதுனா பிரச்சனை பெரிய அளவுல வந்துடாது? அதான் மெஸ் பக்கம் போயிடுவோம்னு முடிவுபண்ணிட்டேன்.

நான் பெருசா எந்த மெஸ்லயும் போயி தொடர்ந்து சாப்பிட்டதெல்லாம் இல்லை. ஆனால் இந்த மதுரை பக்கம் போனா மறக்காம செய்யிறது இதுதான்.
தலைப்புல இருக்க எல்லாத்தையும் முழுசா அனுபவிக்க மதுரையில ஒரு முழுநாள் தேவைப்படும்.

காலையில ஒரு 10 மணிக்கெல்லாம் மதுரைக்குள்ள நுழைஞ்சிடணும். அப்பத்தான் சரியா ஜிகர்தண்டால இருந்து ஆரம்பிக்கலாம். மதுரை ஜிகர்தண்டா இருக்கே, அந்த பெயரை கேட்டாலே ஜிவ்வுனு இருக்கும். இது ஒரு ஹிந்தி பெயராம்.ஜிகர்ன்னா இதயம், தண்டான்னா குளிர்ச்சி, இதயத்தை குளிர்விக்கும் பானம் இதுன்னு பெயர் குறிப்பு சொல்றாங்க.


மதுரையில பல கடைகளில் ஜிகர்தண்டா கிடைச்சாலும், மஞ்சணக்காரவீதியில இருக்க பழைய கடையிலத்தான் ரொம்ப நல்லா இருக்கும். அந்த வீதியில போய் யாரைக்கேட்டாலும் கடைய காட்டுவாங்க. (திருநெல்வேலில எல்லா இடத்துலயும் அல்வா கிடைச்சாலும், இருட்டுகடை அல்வா மாதிரி வராதுல, அப்டிதான் இதுவும்).

பாதம் பிசின், சுண்டக்காய்சுன பால், ஐஸ்க்ரீம் மற்றும் சில எசன்ஸ் ஊத்தி செய்யிற இத காலையில சாப்புட்டுட்டு ஒரு 2 மணிநேரம் வேற எதுவும் சாப்புடக்கூடாது. அப்பத்தானே அம்மா மெஸ்ல போயி ஒரு கட்டு கட்ட முடியும்?

மதியான சாப்பாட்டுக்கு மதுரையில ஒரு சிறந்த இடம் அழகர் கோயில் சாலையில, தல்லாக்குளம் பகுதியில இருக்க அம்மா மெஸ்.

அம்மா மெஸ் அயிர மீன் குழம்பு தமிழ்நாடு முழுக்க புகழ்வாய்ந்த ஒன்று. நாங்க எல்லாம் எங்க கிராமத்துல ஆறு, வாய்கால்கள்ல தண்ணி கொஞ்சமா ஓடுற காலத்துல அயிரமீன் பிடிச்சுருக்கோம். ஆனா இந்த அம்மா மெஸ் காரங்களுக்கு மட்டும் எப்டி வருசம் முழுசும் அயிரமீன் கிடைக்குதுன்னு தெரியலை. எப்ப போனாலும் அயிரமீன் குழம்பு கிடைக்குது.
அயிரமீன் கடல்ல இருக்க நெத்திலி மீன் மாதிரி ரொம்ப பொடிசா இருக்க நன்னீர் மீன். இதை புடிக்கிறது ரொம்ப சுலபம். தண்ணி கொஞ்சமா ஓடுற ஆறு, வாய்க்கால்கள்ல கூட்டமா ஓடிக்கிட்டு இருக்கும். ஒரு பழைய கொசுவலை இல்லன்ன லுங்கி இதுல ஒருபக்கம் முடிச்சு போட்டுகிட்டு, ரெண்டு பேரு சேர்ந்து தண்ணியில போட்டு இழுத்து தூக்குனா செமையா மாட்டிக்கும். இந்த மீன்ல குடல் எல்லாம் இருக்காதுங்கிறதால சுத்தம் பண்றது ரொம்ப சுலபம். ஒரு மண் சட்டியில கொஞ்சம் கல் உப்ப போட்டு நல்லா உரசி இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் தேய்ச்சா போதும் எடுத்து கழுவிட்டு சமைக்கலாம். எங்க கிராமத்துக்கு போகிறப்ப நான், எங்க அண்ணண்கள் எல்லாம் சேர்ந்து இந்த மீன் புடிப்போம். எப்ப அயிரமீன் சாப்பிட்டாலும் எனக்கு எங்க அண்ணண்களோட சேர்ந்து மீன் புடிச்சதுதான் நினைவுக்கு வரும்.

சுகமான அயிரமீன் சாப்பாட்டை சாப்பிட்டுட்டு நல்லா ஊர் சுத்தனும். மாலையில வெறும் காபி மட்டும் குடிச்சா போதும், ஏதாவது சிற்றுண்டி எல்லாம் சாப்பிட்டு வயிற நிரப்பியாச்சுனா அப்றம் கோனார் மெஸ்ல ஒழுங்கா சாப்பிட முடியாதுல‌.

கோனார் மெஸ் ஒரு சாலையோர கடை மாதிரித்தான் இருக்கும், மதுரை சிம்மக்கல் பக்கத்துல இருக்கு. இரவு நேரக் கையேந்தி பவன் கடைத்தான். ஆனா எல்லாம் மிக அருமையா இருக்கும். கோனார் மெஸ் போனா கறி தோசை சாப்பிடாம வரக்கூடாது. ஊத்தாப்பம் மாதிரி தோசைய ஊத்தி அது மேல ஆட்டுக்கறிய அழகா வைச்சி கொடுப்பாங்க. அங்க கோழி வருவல்,இடியாப்பம் எல்லாமும் கூட ரொம்ப சுவையா இருக்கும். கோனார் மெஸ் மாலை 7.30 மணிக்குத்தான் திறப்பாங்க. கார்ல போனா, கார்லயே உக்காந்து சாப்புடலாம். கொண்டுவந்து கொடுக்க நிறைய பணியாளர்கள் இருப்பாங்க. 8மணிக்கெல்லாம் நிறைய கூட்டம் வந்துரும். கார் நிறுத்த இடம் இருக்காது. 12 மணிவரைக்கும் கடை திறந்திருக்கும்.

ஆனா நாம ஒரு நாள் பயணமா போயிருந்தா 9மணிக்குள்ள கோனார் மெஸ்ல சாப்பிட்டு முடிச்சுரணும், அப்பதானே இரவு நேரக்காட்சிக்கு ஏதாவது ஒரு படம் பார்த்துட்டு, அப்டியே முருகன் இட்லிகடையில சாப்பிட்டுட்டு ஊரப் பார்க்க போக முடியும்? ( அடப்பாவி, இன்னும் சாப்பாடு முடியலியான்னு எல்லாம் கேட்க்கப்படாது, நிறைய இருக்கப்பு. ..)

கோனார் மெஸ்ல கறிதோசைய சாப்பிட்டுட்டு ஏதாச்சும் ஒரு படத்துக்கு போயிரனும், அங்க போய் எங்க தலைவர் ஜே.கே.ரித்தீஷ் நடிச்ச படத்துக்குத்தான் போவேன்னு எல்லாம் பச்சபுள்ளயாட்டம் அழுவகூடாது. அவரு நடிச்ச படம் எல்லாம் எப்ப திரையரங்குக்கு வந்துருக்கு?

படம் பார்த்து முடிச்சதும் முருகன் இட்லி கடைக்கு போயிடனும். மேல மாசிவீதியில இருக்கு இந்த கடை. இந்த கடைக்கு நான் ஒன்னும் பெருசா விளம்பரம் தரவேண்டியது இல்ல. ஏற்கனவே சுப்ரமண்யம் சாமிதான் எல்லாத்தையும் செஞ்சு முடிச்சுட்டாரே. இவங்க வைக்கிற இட்லியை விட அதுக்கு வைக்கிற சட்னிதான் விசேஷமே. குறைஞ்சது 4 சட்னி இருக்கும், சாம்பார், இட்லி பொடி, நல்லெண்ணய் எல்லாம் கிடைக்கும். இவங்க கடை சென்னையிலயும், இப்ப சமீபத்துல சிங்கப்பூர்லயும் திறந்துருக்காங்க. சென்னையிலயும், சிங்கப்பூர்லயும் இட்லிபொடி,எண்ணெய்க்கு தனியா காசு வாங்குறாங்க. (சிங்கப்பூர் கடை முஸ்தபா வணிகவளாகத்துக்கு அருகே இருக்கு, வெள்ளி,சனி, ஞாயிறுகிழமைகளில் வரிசையில நின்னு இடம் பிடிக்க வேண்டியிருக்கு).

மதுரை ஒரு தூங்காத நகரம், ராத்திரி எல்லா நேரத்துலயும் சாலையோர கடை எல்லாம் திறந்துருக்கும். இந்த சாலையோர கடைகள் கூட மிக சுவையான உணவு தருவாங்க. அங்கயும் இட்லி, தோசைக்கு வரிசையா பல வண்ணங்கள்ல சட்னி தருவாங்க. பாசக்கார மக்க நிறைஞ்ச ஊரு, ஒரு குறும்போட எல்லாரும் பேசுனாலும் சாப்பாடு வஞ்சனையே இல்லாம போடுவாங்க.

இப்படி ஒரு நாள் உணவுமுறை பயணமாக மதுரைக்கு போகும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியவை.

1) உறவினர்கள், நண்பர்கள் யார் வீட்டுக்கும் போகாதீர்கள், அப்படி போனால் அவர்கள் வீட்டில் உணவருந்தவோ அல்லது சிற்றுண்டி, காபி போன்றவை உட்கொள்ளவோ நேரிடும். இது நமது பயணத்தின் நோக்கத்தை பாதித்துவிடும்.

2) ஒன்று அல்லது இரண்டு நண்பர்களுடன் மட்டும் இப்பயணத்தை அமைத்துக்கொள்வது நல்லது. ரொம்ப கூட்டமாயிட்டா ஆளாளுக்கு ஒரு யோசனை சொல்லி பயணத்தின் நோக்கத்தை கெடுக்க வாய்ப்புகள் இருக்கு.

3) காரில் சென்றால் ஓட்டுநர் ஒருவரை அமர்த்திக்கொள்வது நல்லது. நல்லா சாப்பிட்ட அப்றம் நமக்கு சுகமா தூக்கம்தான் வரும். வண்டி ஓட்டனுமேன்னு குறைச்சு சாப்பிடுறமாதிரி ஆயிடும்.

இப்டி நல்ல ஒரு நாள் முழுக்க மதுரைய சுத்தி சாப்பிட்டுட்டு மறக்காம ஊருக்கு போறப்ப தங்கமணிக்கு மதுரை புகழ் மல்லிகைபூ வாங்கிட்டு போயிடுங்க. கல்யாணமாகத கொடுத்துவைச்சவங்க‌, வீட்ல இருக்க பெண்களுக்கு வாங்கிட்டு போங்கப்பு, அதையும் மறந்துட கூடாது.

ஒருவழியா பதிவுலகக் கடமையை நிறைவேத்தியாச்சு, இனிமேத்தான் அலுவலகத்துல நிம்மதியா தூங்க முடியும்... Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•2:49 PM
நேற்று சிங்கப்பூரில் இருந்து டோக்கியோ சென்று அங்கிருந்து விமானம் மாறி சிக்காகோ சென்ற‌ என் அண்ணணை வழியனுப்ப சிங்கப்பூர் விமானநிலையத்திற்கு சென்றபோது வயதான தன் பெற்றோரை அமெரிக்கவிற்கு வழியனுப்ப வந்தவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல்..

அவர்: Is your friend travelling to US?
நான் : Yes,He is my brother.
அவர்: Which city in US he is going ?
நான் : Chicago.
அவர்: By Any Chance does he know Tamil ?
நான் : நாங்க தமிழ்நாடு தான்.
அவர்: ohh! ok. Can you ask your friend to help my parents in Tokoyo to change the flight to Washington ? They are going to Seattle.
நான் : அவர் என் அண்ணண் தான் நான் சொல்லுறேன், கட்டாயம் செய்வாரு. நீங்க கவலைப்படாதீங்க.
அவர்: Thank you sir, Actually I was bit tensed how they gonna manage in Tokyo, now I am happy.

மேலே குறிப்பிட்டிருக்க உரையாடலை நல்லா கவனிங்க. அவர் தமிழ் என்பது தெரிந்தவுடன் நான் தமிழில் பேச ஆரம்பித்துவிட்டேன். ஆனால் அவர் கடைசிவரை என்னிடமும், எனது அண்ணணிடமும் ஆங்கிலத்திலேயே தான் உரையாடினார்.

இது நான் எழுதிய கவிதை அல்ல. நேற்றைய சம்பவம் எனக்கு இந்த கவிதையை நினைவுபடுத்தியது.

தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
'Sorry ' தாத்தா என்று …!

தூங்கும் போது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
'Thanks ' ம்மா என்று …!

நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
'Happy Birthday da' என்று …!

காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
'Good Morning Uncle' என்று …!

கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முந்திக் கொள்வேன்
'Hai' என்று …!

மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
'I Love You' என்று …!

இரவில் …
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலில்
குத்தியது முள் …
'அம்மா' என்று அலறினேன்

குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்



இந்த கவிதையை எனக்கு அனுப்பிய நண்பர் செல்வாவிற்கு எனது நன்றிகள். Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க