Author: ஜோசப் பால்ராஜ்
•10:16 PM
வசூல்ராஜா MBBS திரைப்படத்தில் பல ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் ஒருவரை வைத்து மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு பாடம் நடத்துவார்கள். அப்போது பாடம் எடுக்கும் மருத்துவ ஆசிரியர் சொல்வார், இது போன்ற கேஸ்கள் எல்லாம் நாட்டுக்கு வேஸ்ட் அப்டின்னு.

அதே கதாப்பாத்திரத்தைப் போலவே ஒரு நபர் உண்மையாகவே இருந்தால், அதுவும் 36 ஆண்டுகளாக மும்பை King Edward Memorial Hospital (KEM)ல் உள்ள ஒரு அறையிலேயே கண்கள் தெரியாது, சுய உணர்வின்றி, ஒரு கட்டிலில் படுக்கையிலேயே காலம் கடத்தி வருகிறார் என்பதை நீங்கள் அறிந்தால் உங்கள் மன உணர்சிகள் எப்படி இருக்கும்?

எந்த மருத்துவமனையில் தற்போது காலத்தை கடத்திவருகிறாரோ அதே மருத்துவமனையில் செவிலியராக பணிக்கு சேர்ந்து மிகத் துடிப்பாக தனது பணியை செய்த Aruna Shanbaug எனும் பெண்மணி தான் அந்த கோமா நோயாளி. அவரது இந்த நிலைக்கு காரணம் என்ன தெரியுமா? நேர்மை

1973 ஆம் ஆண்டு அருணா பணியிலிருந்த வார்டில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றிய சோகன்லால் வால்மிகி என்பவன், வார்டில் செய்த திருட்டு வேலைகளை கண்டித்ததாலும், அவரைப் பற்றி மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்தமையாலும் வெறி கொண்ட அந்த பொறுக்கி, அருணாவை பாலியல் பலாத்காரப்படுத்தி, நாய் கட்டும் சங்கிலியால் அவரது கழுத்தை நெரித்தமையால் அவரது மூளைக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் குழல்கள் நெரிக்கப்பட்டு அவரது கண் பார்வை பறிபோய், நரம்புகளில் ஏற்பட்ட கோளாறுகளால் கை, கால்கள் இழுத்து, சுய நினைவை இழந்து , தான் விரும்பிப் பணியாற்றிய மருத்துவமனையிலேயே 36 ஆண்டுகளாய், ஓரே அறைக்குள் மிக மோசமான நிலையில் வாடிக்கொண்டிருக்கிறார். அவர் இருக்கும் அறை ஒரு நாளைக்கு 5 முறை திறக்கப்படுமாம். கூழாக்கப்பட்ட உணவுகளை அவருக்கு கொடுத்து வருகின்றார்கள். மருத்துவர்கள் இனி எதுவும் செய்ய இயலாது என கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

அவரை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த பொறுக்கியின் மேல் திருட்டு, கொலை முயற்சி வழக்குகள் மட்டுமே தொடுக்கப்பட்டு அதிலும் 6 ஆண்டுகள் சிறை தண்டணை மட்டுமே பெற்று தற்போது விடுதலையாகி வெளியில் இருக்கிறான். பாலியல் பலாத்காரத்திற்கு வழக்கு தொடுக்கப்படவில்லை. ( அப்படியே வழக்கு தொடர்ந்திருந்தாலும் 10 ஆண்டுகள் தான் தண்டணையாம்). ஒரு திருட்டு பொறுக்கிக்கு 6 ஆண்டு தான் தண்டணை. ஆனால் நேர்மையாய் இருந்த ஒரே காரணத்திற்காக அருணாவிற்கு கிடைத்தது 36 ஆண்டுகள் நரக வாழ்க்கை.

பிங்கி எனும் ஒரு எழுத்தாளர் ஒரு புத்தகம் எழுதிய பின்னர் தான் அருணாவைப் பற்றியே வெளியில் தெரிந்தது. இப்போதும் அந்த எழுத்தாளர் தான் உச்ச நீதிமன்றத்தில் அருணாவை கருணை கொலை செய்ய அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

சமீபத்தில் வலை உலகில் பல விவாதங்கள் சூடுபறக்கின்றன. இப்போது இங்கே விவாதிப்போம் .

வாழ்வு ஒரு தண்டணையாகும் போது மரணம் தான் விடுதலை என கருணை கொலை செய்ய அனுமதிக்கலாமா? அல்லது ஆண்டவன் கொடுத்த உயிரை எடுக்கும் உரிமை நமக்கில்லை என்று அவரை விட்டுவிடலாமா?

என்ன தீர்ப்பு வழங்க இருக்கிறது நமது மாண்புமிகு உச்ச நீதிமன்றம் என தெரியவில்லை. நீங்கள் என்ன தீர்ப்பு வழங்குவீர்கள் என சொல்லுங்கள்.

ருச்சிகா - இவரும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்மணி தான். ஆனால் இவரது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஹரியான மாநிலத்தின் காவல் துறை தலைவராக (DGP) இருந்த S.P.S. ரத்தோர்.

1990 ஆம் ஆண்டு 14 வயதே ஆனா டென்னிஸ் வீராங்கனையான ருச்சிக்காவை பாலியல் கொடுமைக்கு உட்படுத்திய இந்த காவல்துறை அதிகாரியின் மீது ருச்சிகா புகார் அளித்தமையால் அவரும் அவர் குடும்பமும் அடைந்த வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவரும் அவரது சகோதரரும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார்கள், அவரது சகோதரர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டார். குடும்பமே கடுமையான வேதனைகளை அனுபவித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக 3 ஆண்டுகள் போரடி அலுத்துப் போன அந்தச் சின்னப் பெண், நமது சட்டங்களினால் எந்தப் பாதுகாப்பையும் அடைய இயலாது, எந்த பரிகாரத்தையும் பெற இயலாது, அதிகாரவர்கத்தை எதிர்த்து போரடும் வலுவிழந்து, தற்கொலை செய்து கொண்டார் என்பது உச்சகட்ட சோகம்.

1990 ஆண்டு நடந்த பாலியல் கொடுமை, 1993ல் அதிகாரவர்கத்தின் ஆணவத்தால் தற்கொலை என இந்த சம்பவங்கள் நடந்து 19 ஆண்டுகள் கழித்து ஒரு வழியாக நமது கண்ணியமிக்க சட்டம் தனது கடமையை செய்து முடித்து எந்த தண்டணையுமின்றி பதவியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட ரத்தோருக்கு ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டணை அளித்து தீர்பளித்துள்ளது. ( அன்றே ஜாமீன் வாங்கிக்கொண்டு வெளியில் வந்துவிட்டார் அந்த புண்ணியவான்). இத்தனைக்கும் ருச்சிக்காவின் தோழி ஒருவரது குடும்பத்தினர் தான் இந்த வழக்கை தொடர்ந்து நடத்தப் போராடி இந்த நீதியைக் கூட பெற செய்தவர்கள். தங்கள் மகளை இழந்து, தற்போது ஊரை காலி செய்துவிட்டு வேறிடம் சென்றுவிட்டார்கள்.

தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்றெல்லாம் வாய்கிழிய வக்கணையாக பேசிட்டு போறது தானே நம்ம ஊரு நீதி. 1990 ஆண்டு நடந்த கொடுமைக்கு 1993க்குள் சரியான முறையில் விசாரனை நடத்தி கடுமையான தண்டணை வழங்கப்பட்டிருந்தால் அந்த அப்பாவி பெண் தன் உயிரை மாய்த்துக்கொண்ட்ருக்க வேண்டியதில்லை. தயவு செய்து கோழைத்தனமாக அந்தப் பெண் தற்கொலை செய்து விட்டார் என யாரும் சொல்லிவிடாதீர்கள். கோழையாய் இருந்திருந்தால் 1990 ஆம் ஆண்டே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம், மூன்றாண்டுகள் போராடி பல சோகங்களை அனுபவித்து இனி செய்ய எதுவுமில்லை என்ற நிலையில் தான் தன் உயிரை மாய்த்துக்கொண்டிருந்திருக்கின்றார் அந்தப் பெண்.

சிபிஐ விசாரணை நடத்திதான் இந்த 6 மாத தண்டணையையே அவருக்கு வாங்கித்தர முடிந்திருக்கின்றது. இந்த வழக்கில் ஒரு மைனர் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய குற்றம் ரத்தோர் மீது சேர்க்கப்படவில்லை. அந்தக் குற்றச்சாட்டும் சேர்கப்பட வேண்டும் என கூறிய சிபிஐ அதிகாரி ரத்தோரால் மிரட்டப்பட்டு , அந்த வழக்கின் விசாரணையில் இருந்து நீக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

இப்ப 19 வருசம் இழுத்த இந்த வழக்கை மாடல் வழக்காக எடுத்துக்கொண்டு, மறு விசாரணை நடத்தி குற்றம் சாட்டப்பட்ட ரத்தோர், அவருக்கு உதவிய அதிகாரிகள், ருச்சிகா மற்றும் அவரது சகோதரரை பள்ளியில் இருந்து நீக்கியவர்கள், ருச்சிகாவின் சகோதரர் மீது பொய் வழக்கு போட்டு காவலில் வைத்தவர்கள் என அனைவரையும் தண்டிக்கப் போவதாக நமது மத்திய சட்ட அமைச்சர் திரு. வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். ( எனக்கு ஒரு பிள்ளை பிறந்தவுடன், அவன்/அவளிடம் சொல்லி இந்த மாடல் வழக்கின் விசாரணையை ஃபாலோ அப் செய்ய சொல்ல வேண்டும், இந்த வழக்கின் முடிவை அவர்கள் கட்டாயம் பதிவாக எழுதவும் சொல்ல வேண்டும்)

ஆந்திராவுல கவர்னரா இருந்த என்.டி. திவாரி அடுத்த ஹீரோ. இவரு மேல பல பாலியல் புகார்கள் இருந்த போதிலும் எப்படி இவருக்கு போயி கவர்னர் பதவியெல்லாம் குடுத்தாங்கன்னு தெரியலை.

அருணா ஷான்பேக், ருச்சிகா இவர்களின் வாழ்வை கெடுத்தவர்களுக்கு என்ன தண்டணை சரியா இருக்கும் ? Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•1:54 AM
தற்சமயம் பலரது பதிவுகளும் வைரஸ்களால் பாதிக்கப்பட்டு வலைப்பூக்களே முடக்கப்பட்டு வருவதாக தினமும் செய்திகள் வருகின்றன.

அதிலும் உண்மைத் தமிழன் அண்ணணது வலைப்பூவும், அன்புத் தங்கை தூயாவின் வலைப்பூவும் முடங்கியுள்ளதாக கேள்வியுற்று பெரிதும் அதிர்ந்தேன்.

என்னைய மாதிரி ஆளுங்கண்ணா பரவாயில்ல, பாவம் உ.த அண்ணண், அவரு எழுதுன பதிவுகளையெல்லாம் திரும்ப எழுதனும்னு நினைச்சா எவ்ளோ கஷ்டம்? அதான் என்னடா செய்யலாம்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன் . அப்ப நம்ம வால்பையன் அண்ணாச்சி ஒரு மெயில் அனுப்சாரு. பதிவுகள்ல இருக்கத பாதுகாப்பா ஒரு பிரதி எடுத்து(back up) வைச்சுக்க உதவும் மென்பொருள் பத்தி சொல்லியிருந்தாரு. அந்த மென்பொருள் exe கோப்பா இருப்பதால் மின்னஞ்சல் வாயிலாக அனுப்புவதில் சிரமம் உள்ளதென சொன்னார்.

தற்போது உங்களனைவரின் நலனுக்காக நான் அதை பொது சேமிப்பு தளமான esnips.com எனும் தளத்தில் அந்த கோப்புகளை சேமித்து வைத்துள்ளேன். தேவைப்படுவோர் அதை இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். தரவிறக்கம் செய்ய சிரமமிருப்பின் எனது மின்னஞ்சல் முகவரிக்கு (joseph.paulraj@gmail.com) தெரியப்படுத்துங்கள்.

Udanz
Links to this post
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க