Author: ஜோசப் பால்ராஜ்
•10:22 PM
அன்புள்ள கோவி.அண்ணா,
இனி நீங்கள் சமூகப் பொறுப்புள்ள எந்தப் பதிவுகளையும் எழுத வேண்டாம். இனிமேல் நீங்கள் இந்த வார ஃபிகர், இந்த நாள் ஃபிகர், காலை பத்துமணி ஃபிகர், மாலை 4 மணி ஃபிகர் என நடிகைகளின் ஆபாசப் படங்களை வைத்து மட்டும் பதிவிடுங்கள்.

Britney - My Sweet Heart , Madona - My Sweet Lungs, Jenifer Lopez - My Sweet Kidney இப்படி ஏதாவது தலைப்புல நாலு வீடியோ போட்டுருங்க.

அதுவும் இல்லன்னா டரியலு , பொரியலுன்னு எதையாச்சும் எழுதுங்க.

ஏன்னா நாம எல்லாம் என்ன எழுதுனாலும் குத்தம் சொல்ல நம்ம மாப்ளைங்க கிளம்பி வந்துருவாங்க. ஈழத்தமிழர்களப்பத்தி பதிவெழுதுனா அங்க வந்து ஈரவெங்காயம், இறையாண்மைன்னு பேசுவாங்க. இப்ப நம்ம தேசத்தோட வர்தகத் தலைநகர் மேல ஒரு மோசமான, ஈனத்தனமான ஒரு தாக்குதல் நடந்துருக்கு அதப் பத்தி பதிவெழுதுனா அங்க வந்து ஈழத்தப் பத்தி பேசுவாங்க. இவங்களுக்கு உண்மையிலயே தேசியம், இறையாமைக்கு எல்லாம் அர்த்தம் தெரியுமா தெரியாதா?

இதுல மாப்ள சஞ்செய் சொல்றாரு, நான் கீறல் விழுந்த இசைத்தட்டப் போல சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்கேனாம். நான் என் கொள்கையில உறுதியா இருக்கேன் மாப்ள. நான் என்ன அரசியல்வாதியா? அதுவும் காங்கிரஸ்காரனா என்ன? இந்த தேர்தல்ல திமுக கூட சேர்ந்து அதிமுகவ திட்டிட்டு அப்டியே அடுத்த தேர்தல்ல அதிமுக கூட சேர்ந்துகிட்டு திமுகவ திட்ற உங்க தேர்தல் கொள்கைகள் மாதிரி எனக்கு இன்னைக்கு ஒரு கொள்கை நாளைக்கு ஒரு கொள்கையெல்லாம் கிடையாதே. என்ன செய்யிறது? இதுக்கு உங்க அரசியல்ல பெயர் கீறல் விழுந்த இசைத்தட்டா? நல்லா வைக்கிறீங்களே பேரு. இதுவும் நல்லாத்தான் இருக்கு.

ஆனா எந்த ஒரு விவாதத்தையும் திசை திருப்பி பாழடிக்கிற தனித்திறமை உள்ள சஞ்செய் உனக்கு தமிழக காங்கிரஸ்ல வளமான எதிர்காலம் இருக்கு மாப்ள. சீக்கிரம் தமிழக காங்கிரஸ்ல சஞ்சய் கோஷ்டின்னு ஒரு கோஷ்டி இருக்கும். ஆனா மாப்ள கத்தி சண்டை, கராத்தேயெல்லாம் பழகிக்கங்க. அப்பத்தான் கட்சியில பொழைக்க முடியும். கத்தியும் கட்டையும் தான் சத்தியமூர்த்தி பவன் வரைக்கும் வந்துடுச்சே. காந்தி கண்டுபுடிச்ச அஹிம்சைக்கு காங்கிரஸ்ஸ தவிர வேற யாரும் இம்புட்டு மரியாதை குடுக்கலைய்யா.

ராஜிவப் பத்தி தான் பேசுவோம்னா, ஏன் இந்திராகாந்தி, மகாத்மா காந்தி இவங்கள விட்டுட்டீங்க? நாளைக்கே காந்தியோட பேரன் கோபலகிருஷ்ண காந்தி இப்ப மேற்கு வங்கத்துல ஆளுநரா இருக்காரே அவரு காங்கிரஸ்கு தலைவர் ஆயிட்டா அவருக்கு குல்லா போட கோட்சே சொந்தக்காரங்கள எதிர்த்து அரசியல் செய்வீங்களா?

இன்னும் நிறைய சொல்ல வேண்டியிருக்கு. ஆனாலும் எல்லாத்தையும் பொதுவில எல்லாத்தையும் எழுத முடியாது.

சஞ்செய், மீண்டும் மீண்டும் சொல்றேன் உமக்கு இருக்கிறது கட்சி பாசம்னா, எனக்கு இருக்கிறது இனப் பாசம். நான் அரசியல்வாதியில்லை. சக மனிதனின் துன்பம் கண்டு இறங்கும் மனிதாபிமானமுள்ள ஒருவன். இந்தியனுக்கு ஒன்று என்றால் எப்படி குரல் கொடுப்போமோ அதேப் போல் தமிழனுக்கு ஒன்று என்றாலும் குரல் கொடுக்க கூடியவன். இது சுய தம்பட்டம் அல்ல. என்னை புரியாமல் பல இடங்களில் பின்னூட்ட நையாண்டி செய்பவர்களுக்காக ஒரு சுய அறிமுகம். மனிதாபிமானம் இருந்தா மனுசனப் புரிஞ்சுக்கங்க. எனக்கு கட்சியும் இல்ல. ஆட்சியும் இல்ல. காங்கிரஸ் நல்லது செஞ்சா பாராட்டுவேன், தப்பு செஞ்சா திட்டுவேன். அது தான் என் அரசியல் நிலைபாடு.

என்னையும் அரசியல் செய்ய வைக்காதிங்க. ( உம்ம நல்லதுக்குத்தான் இதச் சொல்றேன், நானும் காங்கிரஸ்லயே சேர்ந்துட்டேன்னு வையிங்க, அப்றம் உமக்கு எதிரா இன்னொரு கோஷ்டி வந்துரும்). Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•5:05 PM
தேசியம் இப்போது மிகவும் பேசப்படும் பொருளாகிவிட்டது. தேசியம் என்ற பெயரில் கும்மியடிப்பவர்களும் அதிகமாகிவிட்டார்கள். இந்தப் பதிவி தொடக்கத்திலேயே டிஸ்கிக்களை சொல்லிவிடுவது, படிப்பவர்களுக்கு என் கருத்தை புரிந்து கொள்ள உதவும் என நம்புகிறேன்.

டிஸ்கி: நான் தனித் தமிழ்நாட்டை ஆதரிப்பவன் இல்லை. ஆனால் தேசியம் தேசியம் என்று கும்மியடிக்கும் போலிகளை வெறுப்பவன்.

எப்போது எந்த சூழ்நிலையில் தனித்தமிழ்நாடு கோரிக்கைகள் எழுகின்றன என்றுப்பாருங்கள். உங்க வீட்ல புகுந்து உங்க அம்மாவ, அக்காவ, தங்கச்சிய பக்கத்து வீட்டுக்காரன் அடிக்கும் சூழலில் என்ன செய்வீர்கள்? நீங்கள் சட்டத்தின் படிதான் நடவடிக்கை எடுப்பேன் என்று காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து, அவர்கள் வரும் வரை உங்கள் வீட்டில் இருப்பவர்கள் அடிவாங்கட்டும் என்று காத்திருப்பீர்களா? சொல்லுங்கள் தேசிய வாதிகளே, அப்படி நீங்கள் பொங்கியெழுந்து அவனை திருப்பி அடித்தால் உங்களை ரவுடி என்று யாரும் சொல்ல முடியுமா? ரவுடி என்பவன் யார்? தினமும் அடாவடி செய்துகொண்டு உருப்படியற்ற வேலையை செய்து பிறர் நிம்மதியை தொடர்ந்து குலைக்கும் வண்ணம் செய்பவன் தானே ரவுடி?

ஆக இந்த தேசியவாதிகள் ரவுடிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பலரை கொஞ்சம் கூட தட்டிக்கேட்டதில்லை. ஆனால் தன் இனம் அழியும் நிலையில் அதை தடுக்க குரல் கொடுப்பவர்களின் குரல்வளையை நெறிக்க கூட்டமாய் வந்து கும்மியடிப்பார்கள். தேசிய கும்மிகளே உங்களுக்கு தேசியத்தின் உண்மையாண அர்த்தம் தெரியுமா?

எது இந்திய ஒருமைப்பாடு? காவிரியில் நமக்கிருக்கும் உரிமையை நமக்குத் தராமல் வெள்ளப் பெருக்கின் போது வடிகாலாக மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் தரும் கர்நாடகவிடம் பேசவேண்டியது தானே உங்கள் தேசியத்தை?

ஒகேனக்கல் தமிழகத்தின் எல்லையில் தானே இருக்கு? ஓட்டுப் பொறுக்கும் அரசியலுக்காக முதலில் அந்தப் பிரச்சனையை கையில் எடுத்து ஒகேனக்கலுக்கும் சென்றி பிரச்சனையை ஆரம்பித்தது யார்? தேசியம் பேசும் பாரதிய ஜனதா கட்சியின் எடியூரப்பா தானே? அப்போது எங்க போனீர்கள் மாண்புமிகு தேசியவாதிகளே?

அதென்னா வெளிநாட்ல இருக்கிறவனுங்களுக்கு மட்டும் இந்திய தேசியம் கசக்குய்து
இந்திய பாஸ்போர்ட் தூக்கி போட வேண்டியது தானே?


இது காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேசியம் பேசும் எனது அன்பு நண்பர் என்னிடம் கூறியது. நாங்க எல்லாம் இந்திய குடியுரிமையை தூக்கி எறியனும்னு சொல்றாரு. ஏன் சொல்ல மாட்டீங்க? நாங்களும் போயிட்டா அப்றம் உங்கள கேள்வி கேட்க ஆளே இருக்காதுல்ல. தேசிய கும்மிய நல்லா சத்தமா அடிக்கலாம். போலி தேசியம் பேசாமா உண்மையிலயே தேசியம் பேசுனா கடவுச்சீட்ட கடாசுடான்னு சொல்வீங்களா தோழா? நீங்க பேசுறதும், நீங்க செய்யிறதும் தான் தேசியம்னு சொன்னா அந்த தேசியம் எங்களுக்கு வேண்டாம். அதற்காக எங்கள் கடவுச்சீட்டை தூக்கி எறியச் சொல்லும் உரிமை உங்களுக்கு மட்டும் அல்ல எவனுக்கும் கிடையாது. இந்தியனாய் பிறந்த நான் இந்தியனாகத்தான் சாவேன். அதை மாற்ற எவனுக்கும் உரிமையில்லை.

கர்நாடகாவில் இந்தியாவின் பழம்பெரும் தேசிய கட்சியான காங்கிரஸ் கூட அதேத் தவறைத்தானே செய்கிறது? எங்கள் பாஸ்போர்டை மாற்றிக்கொள்ளச் சொல்லும் அன்பு நண்பரே கர்நாடகா பிரச்சனையில நீங்க தேசியம் பேசலையே ஏன்? முல்லைப் பெரியாறு அணை விவகாரத்துல தமிழகத்துக் சாதகமா உச்ச நீதிமன்றம் தீர்பளிச்ச பின்னாடியும், அப்போ கேரளாவுல ஆட்சி நடத்துன காங்கிரஸ் அரசு முதல்வர் உம்மன் சாண்டி ஒரு சண்டி சட்டமியற்றி அதை தடுத்தப்ப உங்க தேசியம் எங்க போச்சு நண்பா? ஒரு வேளை காங்கிரஸ் எது செஞ்சாலும் சரி என்பது தான் உங்க தேசியமா?

ஏன் இப்பவும் நீங்க ஆட்சி செய்யிற மகாராஷ்டிராவுல ராஜ் தாக்கரேன்னு ஒருத்தர் வெறியாட்டம் ஆடுறாரே? அவர கைது செய்றீங்க, உடனே வெளில விடுறீங்க, ஏன் அவர தேசியப் பாதுகாப்புச் சட்டத்துல புடிச்சு உள்ள போடக்கூடாது? எங்கய போச்சு உங்க தேசியம்? சும்மா பேசுன கண்ணப்பண தூக்குல போடணும்னு கூவுறீங்களே, போடுங்க வேணாம்ணு சொல்லல. ஆனா அதுக்கு முன்னாடி கீழ்கண்டவர்களுக்கு எல்லாம் தண்டணை கொடுத்துட்டு கடைசியா கண்ணப்பண் கிட்ட வாங்க.

இந்திரா சுடப்பட்ட போது சுட்டவர்கள் சீக்கியர்கள் என்பதற்காக அப்பாவி சீக்கியர்கள் பலரை கொன்று குவித்து வெறியாட்டம் போட்ட உங்கள் காங்கிரஸ் தலைவர்களை முதலில் தூக்கிலிடுங்கள்

ஓட்டுக்காக, தன் கட்சி பிரபலமாக வேண்டும் என்பதற்காக பாபர் மசூதியை இடிக்க காரணமாயிருந்த அத்வானி கோஷ்டியையும், அதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அப்போதைய காங்கிரஸ் அரசையும் தூக்கில் இடவேண்டாமா? அது வரை காஷ்மீரில் மட்டுமே இருந்த தீவிரவாதத்தை நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் கொண்டுவந்தது யாரு? அத்வானியின் செயலும் அதை தடுக்காத நரசிம்மராவின் ஆட்சியும் தானே? தானா செத்த நரசிம்ம ராவா விடுங்க, எல்லாத் தப்பயும் செஞ்சுட்டு இன்னமும் சுத்திக்கிட்டும் கத்திக்கிட்டும் இருக்கவங்கள என்ன செய்யப் போறீங்க மாண்புமிகு தேசிய கும்மிகளே?

நாட்டின் இறையாண்மையை மதிக்காமல் உச்ச நீதிமன்றத்தின் தீர்புகளைக்கூட ஏற்றுக் கொள்ள மறுக்கும் கர்நாடக, கேரள அரசுகளை என்ன சொய்யப் போகின்றீர்கள் தேசிய கும்மிகளே? தூக்கில் இட வேண்டாமா?

பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களை தாக்கிய பால் தாக்கரேயையும், இப்போது வட இந்தியர்களை தாக்கிக் கொண்டிருக்கும் ராஜ் தாக்கரேயையும் தூக்கில் இட வேண்டாம், சிறையிலாவது அடைக்க இயலுமா உங்களால்?

மேலே சொன்ன எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டு கடைசியாக தன் இனம் ஈழத்தில் அழிகின்றதே என்ற வேதனையில் இப்படி இயலா நிலையில் இருக்கின்றோமே என்ற உணர்சியில் அப்படி பேசிய கண்ணப்பணை தூக்கிலிடுங்கள்.

யூதர்கள் சட்டப்படி விபச்சாரம் செய்பவர்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டும். யேசு கிறிஸ்துவை வம்பிழுக்க ஒரு விபச்சாரியை பிடித்து அவரிடம் கொண்டுவந்து இவளை என்ன செய்யலாம் என்று கேட்ட யூதர்களுக்கு அவர் சொன்னது இது தான், “ உங்களில் பாவமில்லாதவன் அவள் மேல் முதல் கல்லை எறியட்டும்”
அதைத் தான் தேசியம் பேசும் போலி கும்மிகளுக்கு சொல்ல விரும்புகிறேன். உங்களுள் எவனும் தேசியத்திற்கு எதிராக எந்த குற்றமும் செய்யாதவன், ஒருங்கிணைந்த இந்தியாவின் இறையாண்மையை கட்டிக்காத்தவன் வந்து கண்ணப்பணை தூக்கிலிடுங்கள்.
Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•10:13 PM
கேரளாவில் சமீபத்தில் நீதிமன்ற ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இருசக்கரவாகனக்களின் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள் சேலை அணிந்து செல்லக் கூடாதாம். சேலைத் தலைப்பு சக்கரத்தில் சிக்கி பல விபத்துகள் நிகழ்வதால் இந்த ஏற்பாடாம்!எனக்கொரு சந்தேகம். கேரளாவின் பெரும்பாலான கோயில்களில் சுடிதார் போன்ற உடைகளில் வர பெண்களுக்குத் தடையுண்டு. அப்ப, மனைவியை கூட்டிக்கொண்டு கோயிலுக்குப் போவதென்றால், சுடிதார் அணிந்து டூவிலரில் அழைத்துச் சென்று கோயிலுக்குள் செல்லும் முன் சேலை மாற்றி...

என்ன கொடுமை குருவாயூரப்பா இது?

மேற்கண்ட வரிகள் என் அன்புச் சகோதரர் பரிசல் அண்ணணின் பதிவில் இருந்தது.

ஆனால் இவர் என்னக் கொடுமை குருவாயூரப்பா எனக் கேட்பதைப் பார்த்தால் எங்கே கேரள அரசின் உத்தரவு தவறு என சொல்வாரோ எனச் சந்தேகமாக உள்ளது. முல்லைப் பெரியாறு, நெய்யாறு என தமிழகத்திற்கும் கேரளத்திற்குமிடையே உள்ள பல பிரச்சனைகளில் கேரளாவின் செயல்பாடுகளினால் எனக்கு அவர்கள் மீது கோபம் இருந்தாலும், இந்த உத்தரவை நான் மனமாற வரவேற்கிறேன். கோயில்களில் சுடிதாரை தடை செய்துள்ளார்கள் என்பதால் சேலை அணிந்துகொண்டு இரு சக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து செல்ல விதித்த தடையை மட்டும் நீக்க சொல்லாதீர்கள்.

நம்ம ஊர்ல ரொம்ப சவுகரியமா ஒரு பக்கமா உக்காந்துகிட்டு அதோட மடில ஒரு குழந்தை, இல்லன்னா நல்ல கனமான பை என இவங்க பயணம் செய்யிறத பார்த்தா ரொம்ப பயமா இருக்கும். அதுவும் நம்ம ஊர் சாலைகள் இருக்க அழகுல, நாம எல்லாம் சாலை விதிகள மதிக்குற அழகுல இப்படி எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாம பின்னாடி உக்காந்துகிட்டு போறது மிகவும் ஆபத்து.

சேலை அணிந்து இருசக்கரங்களின் வாகனங்களில் செல்லத் தடை விதித்தால் மட்டும் போதாது. சுடிதார் போன்ற உடைகளை அணிந்து கொண்டு, வாகனத்தின் இருப்புறமும் கால்களை இட்டு அமர்ந்துதான் செல்ல வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். இப்படி இவங்க பாதுகாப்பு இல்லாம இருசக்கர வாகனங்கள்ல பயணம் செய்ய கேரளாவில் மட்டும் தடை விதித்தா போதாது. இது நாடு முழுவதும் தடை செய்யப் படவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

சேலையை விட சுடிதார் மிகவும் அருமையானது, பாதுகாப்பானது, அணிவதற்கும் எளிதானது எனப் பல சிறப்புகளை கொண்டது. ஏன் கோயில்களில் சுடிதாரை அனுமதிக்க கூடாது? கவர்சியான உடைகளை அணிந்து கொண்டு கோயிலுக்கு வந்தால் அனுமதிக்க மாட்டோம் என்றால் அதில் நியாயம் உள்ளது. ஆனால் சேலையை விட நாகரீகமான உடையான சுடிதாரை அணிந்துகொண்டு கூட உள்ளே வரக்கூடாது என சொல்வது எந்த விதத்தில் நியாயம் இருக்க முடியும்?

கவர்சியான உடைகளை அணிந்து கொண்டு கோயிலுக்கு வந்தால் அனுமதிக்க மாட்டோம் என்றால் அதில் நியாயம் உள்ளது. ஆனால் சேலையை விட நாகரீகமான உடையான சுடிதாரை அணிந்துகொண்டு கூட உள்ளே வரக்கூடாது என சொல்வது எந்த விதத்தில் நியாயமாக‌ இருக்க முடியும்? உயிரோட பாதுகாப்பு முக்கியமா, சாமி முக்கியமா? எந்த சாமி சேலையிலத்தான் பொண்ணுங்க உள்ள வரணும்னு சொல்லியிருக்கு?
எல்லாரும் நல்லா இருக்கணும்னு தானே சாமியே கும்புட போறாங்க? அப்ப கட்டாயம் இந்த சட்டத்த எல்லா மாநிலங்களுக்கும் நீட்டிச்சு, கட்டாயமா கடைபிடிக்க செய்யிங்க.

சிங்கப்பூர்ல பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும் இருபுறமும் கால்களை இட்டு அமர்ந்து தான் இருசக்கர வாகனங்களில் பயணிக்க இயலும். குழந்தைகளை முன்புறம் மட்டும் அல்ல, பின்னால் அமர்ந்திருப்பவர்கள் மடியில் கூட வைத்துக் கொள்ள முடியாது. இருவரும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும். ஆனா நம்ம ஊர்ல ஒரு மொத்த குடும்பமும் ஒரு வண்டியில போறது எல்லாம் சர்வ சாதாரணம். இந்தியாவுல் ரொம்ப மலிவானது மனித உயிர்கள் தான். சில விசயங்களை மக்கள் தவறு எனத் தெரியாமலே செய்யும் போது அதை தடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இந்த சட்டமும் அதில் ஒன்றுதான்.

ஏற்கனவே கட்டாய தலைகவச சட்டத்த வீணாக்குனது மாதிரியில்லாம கொஞ்சம் மக்கள் மேல அக்கறையோட இந்த சட்டத்த கட்டாயம் கடைபிடிக்கச் செய்யணும் என வேண்டுகிறேன். Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•7:34 PM
படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி என்று தனது வலைக்கு தலைப்பு வைத்து எழுதும் அன்பர் ப்ளீச்சிங் பவுடர் அவர்கள் சமீபத்தில் ஒரு பதிவெழுதியிருந்தார் ,தமிழீழம் மலர்ந்தால் - நாளை தமிழகத்தின் கதி?? என்ற அந்தப் பதிவிற்கு ஒரு விளக்கம்.

காஷ்மீரையும், தமிழ் ஈழத்தையும் ஒரு போதும் ஒப்பிடவே முடியாது. இந்தியாவில் காஷ்மீர் மக்களுக்கு நாம் அளித்துள்ள உரிமைகளும், சுதந்திரமும் மற்ற மாநிலங்களில் இருக்கும் நமக்கு இல்லை. ஆனால் ஈழத்தில் கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்திலும் தமிழர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு இழிவுபடுத்தப்பட்டமையால் தான் போராட்டமே ஆரம்பித்தது. இன ஒழிப்பை ஒரு அரசாங்கமே முன்னெடுத்து செய்வதால் தான் தமிழர்கள் அறவழியில் ஆரம்பித்து பலன் ஏதுமில்லாதமையால் ஆயுத போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அஹிம்சை வழிப் போராட்டம் என்பது ஒரு போராட்டமே அல்ல. அஹிம்சையால் எந்த பலனும் இல்லை என்பதற்கு இந்தியாவை தவிர வேறெங்கும் சென்று நாம் உதாரணம் தேட வேண்டியதுமில்லை.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தமைக்கு காரணம் அஹிம்சை வழிப் போராட்டம் மட்டுமே என்று நினைத்தால் அது தவறு. 1947ஐ ஒட்டிய ஆண்டுகளில் இந்தியா மட்டுமா சுதந்திரம் அடைந்தது? இலங்கை, மலேசியா என ஆசியாவிலேயே பல நாடுகள் சுதந்திரம் அடைந்தனவே அந்த நாடுகளுக்கு ஏன் ஆங்கிலேயர்கள் சுதந்திரமளித்தார்கள்? அங்கெல்லாம் ஆயுதப் போராட்டத்தை எதிர்க்க முடியாமல் சுதந்திரமளித்தார்களா அல்லது அங்கும் அஹிம்சை போராட்டம் நடந்ததா?

உண்மையான காரணம் என்னவென்றால் 1945ல் நிறைவு பெற்ற இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயர்களின் அணி வெற்றியடைந்திருந்தாலும், போரினால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் மிக அதிகம். பெருமளவில் மனித வளத்தை அவர்கள் இழந்திருந்தமையால் அவர்களது காலணி நாடுகளை நிர்வகிக்க அவர்களுக்கு போதுமான மனித வளம் இல்லாமையால் அந்தக் காலகட்டத்தில் பல நாடுகளுக்கு விடுதலை அளித்தார்கள் என்பதே உண்மை. ஒரு வேளை ஆங்கிலேயர்கள் போரில் தோல்வியடைந்து ஜப்பான், ஜெர்மனி கூட்டணி வெற்றியடைந்திருந்தால் காந்தியடிகளுக்குப் பதிலாக சுபாஷ் சந்திர போஸ் அவர்கள்தான் நம் தேசத் தந்தையாகியிருப்பார்.

ஆங்கிலேயர்கள் அல்ல அஹிம்சையை உலகிற்கு அளித்த இந்தியாவும் சேர்த்து யாரும் அதற்கு மரியாதை அளித்ததுமில்லை, அளிக்கப் போவதுமில்லை. அஹிம்சைக்கு இந்தியா மரியாதை அளிப்பதாய் இருந்தால் ஈழத்தில் உண்ணா நோன்பிருந்த திலீபனும், பூபதி அண்ணையும் இறந்திருக்க மாட்டார்களே.

காஷ்மீரில் நடப்பது அயல்நாட்டு தீவிரவாதம், அங்கு நடப்பது அந்நிய சக்திகளாலும் அவர்களது உதவியால் இயங்கும் கைகூலிகளாலும் நடத்தப்படும் தீவிரவாதம் . ஆனால் தமிழ் ஈழத்தில் நடப்பது விடுதலைப் போராட்டம். தீவிரவாதத்திற்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்.

தமிழகத்தில் இருப்போர் ஈழத்தை ஆதரிக்க காரணம் சகத் தமிழன் ஈழத்தில் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இன்னல்களும், அவலங்களும் தான். மனிதனாய் இருப்பவர்களுக்கு இயல்பாய் இருக்கும் மனிதாபிமானத்தால் உந்தப்பட்டு எழும் உணர்வுதான் இந்த ஆதரவு. என்ன தான் இதை அரசியல்வாதிகள் காவிரி, முல்லைப் பெரியாறு போல அரசியலாக்கினாலும், மக்கள் மனதில் இருப்பது சக தமிழனின் மேல் உள்ள அன்புதான்.

எந்த தமிழனும் நாளை தமிழ் ஈழம் மலர்ந்தால் தமிழ் நாட்டைப் பிரித்து தமிழ் ஈழத்துடன் இணைய வேண்டும் என்று சொல்ல மாட்டான். உங்கள் மனதில் இப்படி ஒரு எண்ணம் வந்திருப்பது உங்கள் வலைப்பூவின் தலைப்பைத் தான் நினைவு படுத்துகின்றது.

ராஜிவ் கொலையையும், ஈழத் தமிழர்கள் பிரச்சனையையும் ஒப்பிட்டுக் கொண்டே இருப்பது மிகப் பெரிய மடத்தனம் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. அதுகுறித்து விவாதிக்க ஆரம்பித்தால் அது ஒரு வட்டம் போல தொடக்கமும் முடிவும் இன்றி சுத்திக் கொண்டே தான் இருக்கும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி , தங்களுக்கு மனிதாபிமானமே இல்லை என்பதை மறைக்க வேண்டுமாணால் அந்த வாதம் உதவும்.

தமிழ் ஈழம் மலர வேண்டியது காலத்தின் கட்டாயம். இங்கும் சில அறிவு ஜீவிகள் தங்கள் திறமையை காட்ட விழைவார்கள், தமிழ் ஈழம் மலர வேண்டும் ஆனால் புலிகள் கையில் அது இருக்க கூடாது என்பார்கள். ஈழத்தின் வரலாற்றை சற்று ஆழமாகப் படித்துப் பார்தீர்களேயானால் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் தோன்றின. ஆனால் புலிகளைத் தவிர மற்றக் குழுக்கள் எல்லாம் ஒன்று மறைந்துவிட்டன, அல்லது சிங்களர்களின் கைக் கூலிகள் ஆகிவிட்டன. ( உதாரணம்: டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான்). புலிகளைத் தவிர வேறு எந்தக் குழுவும் இன்று வரை தமிழர்களின் நலனுக்காக போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. எனவே ஈழமக்களும் புலிகளைத் தவிர வேறு யாரையும் ஆதரிப்பதில்லை. இது தான் உண்மை.

//இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே புலிகளைக்கு ஆதரவாக மக்களும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் புலிகள் என்றால் அது ராஜீவை கொலை செய்த இயக்கம் என்ற அளவிலே மட்டும் மக்கள் அவர்களை அறிந்து வைத்திருக்கிறார்கள்.//

மற்ற மாநிலங்களில் இருப்பவர்களுக்கு தமிழர்களைக் குறித்து என்ன அக்கறை இருக்கும்? அவர்கள் ஏன் ஈழத்தமிழர்களைக் குறித்துக் கவலை கொள்ள வேண்டும்? தமிழகத்தில் இருப்பவர்கள் அனைவரும் முதலில் கவலைப்பட்டு, போராட்டத்தை முன்னெடுத்து இதை தேசிய அளவில் பிரச்சனையாக்கியிருந்தால் என்ன தான் இந்த பிரச்சனையென்று மற்றவர்கள் அறிந்து கொள்ள ஆசைப்படுவார்கள். ஆனால் இங்கு நடப்பதென்ன?
நடிகர்கள் போராட போனால் அதிலும் இரண்டு கட்சி, அங்கும் அரசியல். அரசியல் கட்சிகள் போராடினாலும் எதிர்கட்சித் தனியாக போராடும், ஆளும் கட்சி தனியாக போராடும். இவர்கள் போராட்டத்திற்கிடையே ஒருவரை ஒருவர் தாக்குவார்கள். ஆகா இந்த போராட்டங்களைக் கூட அரசியலாக்கத்தான் முயல்கிறார்களே தவிர உண்மையாண போராட்டம் எங்கு நடக்கின்றது?

ஈழத்தில் இருப்பவர்கள் எல்லோரும் கன்னடர்களாய் இருந்திருந்தால் இன்னேரம் தனி ஈழம் என்றோ மலர்ந்திருக்கும். எந்த பிரச்சனையிலும் அவர்கள் பக்கம் நியாயம் இருக்கின்றதோ இல்லையோ ஆனால் மொத்த மாநிலமும் ஒற்றுமையாய் போராடுவார்கள். ஆளும்கட்சி, எதிர்கட்சியெல்லாம் ஒன்றாய் சேர்ந்து ஓரணியாய் நின்று போராடுவார்கள். அந்த ஒற்றுமை நம்மிடையே இல்லை. இங்கு எந்த அனைத்துக் கட்சி கூட்டத்திலாவது எல்லா கட்சிகளும் ஒருமித்த குரலில் ஒரு கருத்தை பேசியிருக்கின்றார்களா?

இந்தப் பிரச்சனையில் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்றால் முதலில் ஒரு தேசிய அளவில் ஒரு அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்து அவர்களை ஈழத்துக்கு அனுப்பி அங்குள்ள நிலையை நேரில் கண்டறிந்து வரச் செய்ய வேண்டும். அவர்களுடன் இந்தியப் பத்திரிக்கையாளர்கள் குழுவையும் அனுப்ப வேண்டும். இவர்கள் மூலம் உண்மை உலகுக்கு தெரியவரும். தமிழர்கள் படும் அவலங்கள் வெளிவரும். அவ‌ர்க‌ள் நேரில் க‌ண்டுவ‌ரும் அவ‌ல‌ங்க‌ளை பாராளும‌ன்ற‌த்தை கூட்டி விவாதிக்க‌ வேண்டும். இது தான் பிராந்திய‌ வ‌ல்ல‌ர‌சான‌ இந்தியா செய்ய‌ வேண்டியது.

இதுக்கு மேல அவதிப்பட ஒன்னுமேயில்லங்கிற நிலையில இருக்க மனுசனுங்களுக்கு உதவுங்கன்னு சொன்னா, இன்னைக்கு இவனுக்கு உதவுனா நாளைக்கு நமக்கு பிரச்சனைவரும் அது இதுன்னு போகாத ஊருக்கு வழி தேடிகிட்டு நிக்கிறவங்களுக்கு எல்லாம் என்ன பதில் சொல்ல முடியும்?
இல்ல‌ இல்ல‌ என்ன‌ தான் இருந்தாலும் ராஜீவ் காந்திய‌ கொன்ன‌வ‌ங்க‌ளுக்கு உத‌வ‌ கூடாதுன்னு சொன்னா உங்க‌ளையெல்லாம் ஒன்னும் செய்ய‌ முடியாது. ஆசிப் அண்ணாச்சி பாணியில சொல்ல‌ணும்னா, நீங்க‌ ம‌ட்டும் ந‌ல்லா இருங்க‌டே...
Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•8:54 PM
இந்த சினிமா தொடர் விளையாட்டு எல்லாரும் எழுதித் தள்ளிக்கிட்டு இருக்காங்க. அதுலபாருங்க எனக்கு ரெண்டு பேரு கொக்கிய போட்டுருக்காங்க.
இள‌ங்க‌லை அறிவிய‌ல் ப‌டிக்கிற‌ப்ப‌ என் கூட‌வே ஒன்னா கல்லூரிக்கு க‌ட் அடிச்சுட்டு ப‌ட‌த்துக்கு எல்லாம் வ‌ந்த‌ செந்தில் ஒருத்த‌ரு. முதுக‌லைப் ப‌டிப்புல‌ (இங்க‌ க‌ட் அடிக்க‌லாம் இல்ல‌) என் கூட‌ ப‌டிச்ச‌ குசும்ப‌ன் ஒருத்த‌ரு. ஏதோ என‌க்குத் தெரிஞ்ச‌த‌ சொல்லிடுறேன்பா.
நெம்ப யோசிச்சு பதில் எழுதிக்கிட்டு இருக்கேன்.

1) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எங்க கிராமத்துல சினிமா தியேட்டர் எல்லா இல்லாததுனால சின்ன வயசுல நான் நிறைய படம் எல்லாம் பார்த்தது இல்ல. நினைவில் இருக்கும் முதல் படம் பயணங்கள் முடிவதில்லை. அதற்கு அடுத்து நன்கு நினைவில் உள்ளப் படம் பூவே பூச்சூடவா. அப்போ எல்லாம் சினிமால நமக்கு புடிச்சது சண்டைகள் தான். என்னா உண‌ர்ந்தேன்னு எல்லாம் தெரிய‌ல‌. த‌ஞ்சாவூர்ல‌ ப‌ட‌ம் பார்த்துட்டு மார‌னேரில‌ போயி ப‌ச‌ங்க‌ளுக்கு எல்லாம் க‌தை சொல்லுவோம். அதுதான் நினைப்பு இருக்கு.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

"த‌சாவ‌த‌ராம்" சிங்கை வ‌ந்த‌துக்கு அப்ற‌ம் அடிக்க‌டி திரை அர‌ங்குக்கு போயி ப‌ட‌ம் பார்க்க‌ முடிவ‌தில்லை. வேட்டையாடு விளையாடு, சிவாஜி, த‌சாவ‌த‌ராம் இந்த‌ 3 ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டுமே நான் சிங்கையில் திரை அரங்கில் பார்த்த‌ப் ப‌ட‌ங்க‌ள்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

போன வாரம் பார்த்த ஜெயம் கொண்டாண். வீட்டில் டிவிடியில் பார்த்தது ( ஒரிஜினல் தானுங்க). படம் எனக்கு புடிச்சிருந்தது. லேகா நடிப்பு நல்லா இருந்துச்சு. ஆனா கடைசியில அந்த சண்டை தான் வெறுப்பேத்துனது. அம்புட்டு அடியையும் சத்தம் போடாம வாங்குற அந்த கதாநாயகரு, தன் தங்கச்சி மேல ஒரு அடி விழுந்ததும் என்னமா துடிச்சு , வில்லன அடிச்சு தள்ளுறாரு. இத எத்தனப் படத்துலத்தான் பார்குறது?

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

"நந்தா", தன் அப்பா , அம்மாவ அடிக்கிறப்ப தன் அம்மா மேல உள்ள பாசத்துலத்தான் அப்பாவ புடிச்சுத் தள்ளுவான் அந்த சிறுவன் நந்தா. அது கொலையாகி தண்டணைய அனுபவிப்பான். ஆனாலும் அந்த அம்மா சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில அவன் யாரோ ஒரு பையன் கூட சண்டப் போடுறத பார்த்துட்டு இவன் சண்டக்காரன்னு ஒதுக்குறது என்ன ரொம்ப பாதிச்சுது.

5.அ உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

மக்களோட முக்கியமான பிரச்சனைகளுக்கு போராடுறோம்னு கிளம்பிட்டு அதுல நம்ம சினிமாகாரங்க செய்யிற அரசியல்தான் கோவத்தை கிளப்பும். உதாரணமா சில ஆண்டுகளுக்கு முன்னால் நெய்வேலியில் நடத்திய போராட்டம், இப்போ ராமேஸ்வரத்தில் நடத்திய போராட்டம் போன்றவை. இதுல கூடவா ஒற்றுமைய காட்ட முடியாது இவங்களால? அவர்களது போராட்டங்கள் பிரச்சனைகளை கொச்சைப்படுத்தும் விதமாய் அமைந்துவிடக்கூடாது என்பதே என் ஆசை. இவர்கள் ஒருவர் மீது ஒருவர் புழுதி வாரி இறைக்கும் போது எதற்காக போராடினார்களோ அந்த பிரச்சனையிலிருந்து அனைவரின் கவனமும் இவர்களது சண்டைகளுக்கு திசைதிருப்பப் படுகின்றது. இப்போதும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாய் போராட்டம் நடத்திவிட்டு பாரதிராஜா விசயகாந்தை திட்டியது தான் தற்போதைய ஜீனியர் விகடனில் முக்கிய செய்தியாக வந்துள்ளது. பத்திரிக்கைகளும் இந்த குழாயடி சண்டைகளுக்குத் தான் முக்கியத்துவம் தருகின்றன.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

இந்த தொழில் நுட்பம் குறித்த பார்வையெல்லாம் எனக்கு கிடையாதுங்க. ஆன இன்னும் ஆச்சரியப்படுற விசயம் தவசி படத்துல மகன் வயசு விசயகாந்த், அப்பா விசயகாந்த் ரெண்டு பேரையும் வித்தியாசப்படுத்த உபயோகிச்ச தொழில்நுட்பம் இருக்கே,அது தானுங்க ரொம்ப ஆச்சரியப்படுத்துச்சு.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

தேடிப்போய் படிப்பதில்லை, நேரம் கிடைக்கும் போது படிப்பதுண்டு.

7.தமிழ்ச்சினிமா இசை?

இளைய ராஜா, யுவன் சங்கர் ராஜா.

முன்பெல்லாம் வேலை செய்யும் போதும் இசை கேட்டுக்கொண்டே வேலை செய்வதுண்டு, தற்போது இசை கேட்க முடிவதில்லை. வீட்டில் எப்போதும் பாட்டு கேட்கும் பழக்கம் உண்டு.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

எனக்கு தமிழ் மொழியத் தவிர வேறெந்த மொழியும் புரியாதுங்கிறதால தமிழ்படத்த தவிர வேறெந்த படங்களையும் பார்கிறதில்ல. Baby's Day Out போல சில நல்ல ஆங்கிலப்படங்கள் பார்பதுண்டு.
நகைச்சுவை படங்கள் எந்த மொழியானாலும் பார்கலாம். அப்படிப் பட்ட படங்களைப் பார்பதுண்டு.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இருந்தது, இப்போது இல்லை. மீண்டும் எதுவும் செய்யும் எண்ணமில்லை. தமிழ் சினிமாவோட முன்னேற்றத்துக்கும் அதுக்கும் சம்பந்தமேயில்ல.

ஆனா எங்க அண்ணணுங்க மேலயும், அப்பா மேலயும் வருத்தம் மட்டும் உண்டு. பின்ன என்னங்க, என்னைய கதாநாயகனா வைச்சு ஒரு படத்த எங்க அப்பா தயாரிச்சு, எங்க அண்ணண் இயக்கியிருந்தா நாங்களும் பெரிய ஹீரோ ஆகியிருப்போம்ல. அநியாயமா ஒரு நல்ல ஹீரோவ தமிழ் சினிமா இழந்துருச்சு.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

புதுசா சில நல்ல இயக்குநர்கள் நல்லா படம் எடுக்கிறாங்க. சினிமாவுக்கு என்ன, அதுபாட்டுக்கு நல்லா வளரத்தான் செய்யிம், ( அதான் நான் ஹீரோ ஆகலையே, அப்றம் என்ன கவலை , தமிழ் சினிமா நல்லாத்தான் இருக்கும்.)

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

பாவம் தமிழன், பாதி பேருக்கு பைத்தியம் புடிச்சுரும். பத்திரிக்கைகளெல்லாம் சின்னதாயிரும். பக்கத்த நிரப்ப என்ன செய்யிறதுன்னு பத்திரிக்கைகாரங்க யோசிக்க வேண்டியிருக்கும்.

ஆனால் ஒரு ஆண்டுக்கு தடை செய்யப் பட வேண்டியது சினிமா அல்ல. தொலைக்காட்சியத் தான் தடை செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. என் சின்ன வயசுல எங்க கிராமத்துல சின்னப்பசங்க எல்லாம் நல்லா விளையாடுவோம். ஆனா இந்த தொலைகாட்சிகள் பெருகி இன்னைக்கு எந்த கிராமத்துலயும் பசங்க விளையாட்டுங்கிறத நினைக்கிறதேயில்ல. தடை செய்யப் பட வேண்டியது தொலைக் காட்சிகள் தான் சினிமா அல்ல.


இந்தத் தொடர் விளையாட்ட தொடர நான் யாரையும் அழைக்க விரும்பவில்லை. சினிமா தொடருக்குப் பதிலாக என் அருமைத் தங்கை தூயா அழைப்பு விடுத்துள்ள ஈழம் குறித்த தொடரை அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது அனைவரும் எழுத முயற்சிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். நாம் அனைவரும் நமது எண்ணங்களை பதிவு செய்ய வேண்டியது நம் சக தமிழ் சகோதரர்களுக்கு நாம் செய்யும் பெரும் உதவியாக இருக்கும். தயவு செய்து ஈழம் குறித்து அனைவரும் எழுதுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•8:00 PM
கோடைக்காலம் வந்தாலே எங்க ஊரு வயலுக்கு எல்லாம் ஆட்டுக்கிடை ( ஆட்டு உரம்) வைப்பதற்காக இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கீதாரிங்க ஆட்டு மந்தைய ஓட்டிக்கிட்டு வந்துருவாங்க.ஒரே சமயத்துல நிறைய கீதாரிங்க குடும்பத்தோட ஆடுகள் ஓட்டிக்கிட்டு வந்துருவாங்க. செம்மறியாடுங்க எல்லாம் கூட்டம் கூட்டமா போறத பாக்குறதே அழகா இருக்கும். வெளி ஆளுங்கள பார்த்தா இதுங்க வெறிச்சுக்கும், தாண்டி ஓடிடும். சின்ன பசங்க இருக்க வீடுகள்ல எல்லாம் கீதரிங்ககிட்ட போய் ஒரு குட்டி ஆடு வாங்கிட்டு வந்து வளர்ப்பாங்க. வருசா வருசம் நாங்களும் ஒன்னு வாங்கிடுவோம்.

வீட்டில் இருக்கும் வெள்ளாடுக‌ளுட‌ன் சேர்த்து வ‌ள‌ர்காம‌ல் இதை த‌னியாக‌த்தான் க‌ட்டி வைப்போம். வெள்ளாடுக‌ள் இவ‌ற்றை முட்டிவிடும். இவை கோடைகால‌ங்க‌ளில் ம‌ட்டும் எங்க‌ள் ஊர்க‌ளுக்கு வ‌ருவ‌த‌ற்கு கார‌ண‌ம், ம‌ற்ற‌ கால‌ங்க‌ளில் எங்க‌ள் ஊர்க‌ளில் எல்லாம் விவ‌சாய‌ம் ந‌டைபெறும், இவை வ‌ய‌ல்க‌ளில் உள்ள‌ ப‌யிர்க‌ளை மேய்ந்துவிடும் என்ப‌தால் கோடைகால‌ங்க‌ளில் ம‌ட்டுமே கொண்டுவ‌ருவார்க‌ள்.

செம்ம‌றியாடுக‌ள் இலைக‌ள், த‌ழைக‌ள், க‌ட‌லை புண்ணாக்கு போன்ற‌வ‌ற்றை சாப்பிட்டாலும் விரும்பி உண்ப‌து க‌ருவ‌க்காய் என‌ப்ப‌டும் வேலிக்க‌ருவை ம‌ர‌த்தின் முற்றிய‌ காய்க‌ளைத்தான். நீள‌மான‌ குச்சியின் நுணியில் அருவாளை க‌ட்டி ( இதை அல‌க்கு என்பார்க‌ள்) அதை கையில் எடுத்துக் கொண்டு ஆட்டை அழைத்துக் கொண்டு வ‌ய‌ல் வெளிக‌ளில் பாதையோர‌மாக‌ இருக்கும் க‌ருவை ம‌ர‌ங்க‌ளிலிருந்து காய்க‌ளை உலுக்கி கொடுப்போம், ஆடுக‌ள் பிரிய‌மாக‌ சாப்பிடும். அப்ப‌டி க‌ருவ‌க்காய் ப‌றிக்க‌ எடுத்துப் போகும் அல‌க்கை வைத்து அப்ப‌டியே மாங்காய், புளியம்ப‌ழ‌ம் எல்லாம் அடிச்சு நாங்க‌ சாப்பிடுற‌தும் உண்டு.இப்போது நினைத்தால் கொடூர‌மாக‌ இருக்கிற‌து. ஒரு ஆட்டுக்கு சாப்பாடு கொடுக்க‌ போய் நாம‌ எத்த‌னை மாங்காய் சாப்பிட்ருக்கோம்.

காலையில பொறுமையா எழுந்திருச்சு, நாங்க‌ ஆட்டுக்குட்டியை கூட்டிக்கிட்டு கிள‌ம்பிருவோம். வீட்டுக்கு வ‌ந்த‌ ரெண்டு நாள்ல‌யே ந‌ம்ம‌ளோட‌ ந‌ல்லா ப‌ழ‌கிடும், எங்க‌ போனாலும் பின்னாடியே வ‌ரும். ஊர்ல‌ இருக்க‌ ஆத்துல‌ போயி குளிய‌லுங்கிறப்பேருல‌ ஒரு ஆட்ட‌ம் ஆடிட்டு வருவோம். எங்க‌ளோட‌ சேர்ந்து ஆடும் குளிக்கும். அப்ப‌ற‌ம் வீட்டுல‌ப் போயி சாப்பிட்டுட்டு அப்ப‌டியே ஆட்ட‌ கூட்டிக்கிட்டு தோட்ட‌த்துக்குப் போயி அதுக்கு இலை வெட்டிப்போட்டுட்டு நாங்க‌ளும் விளையாண்டுட்டு வ‌ருவோம்.

ம‌த்தியான‌ம் சாப்பிட‌ வீட்டுக்கு வ‌ரும்போது வீட்டுக்கு பின்னாடி இருக்க‌ தொழுவ‌த்துல‌ எங்க‌ ஆட்டுக்குட்டியை க‌ட்டிருவோம். எங்க‌ ஊர்ல‌ இருக்க‌ எல்லா வீட்ல‌யும் சாதார‌ண‌மா வீட்டுக்குப் பின்னாடி மாடு, ஆடு எல்லாம் க‌ட்டி வைக்க‌ தொழுவ‌ம் இருக்கும். அங்க‌ ஆட்டுக்குன்னு த‌னியா இட‌ம் ஒதுக்கி அங்க‌ க‌ட்டிருவோம். ஆட்டுக்குட்டிக்கு பெய‌ர் எல்லாம் வைச்சு கூப்டுவோம். அதுக‌ளும் த‌ன்னைதான் கூப்பிடுறான்னு தெரிஞ்சு உட‌னே ஓடியாந்துரும். ப‌ச்ச‌ப்புள்ளைங்க‌ங்க‌ மாதிரி ப‌ழ‌கும், விளையாடும்.

மாலை நேர‌த்துல‌ ப‌ச‌ங்க‌ கூட‌ விளையாடிட்டு அப்டியே ஆத்துல‌ போயி இன்னொருக்கா குளிச்சுட்டு வ‌ருவோம். அப்ப‌ எல்லாம் எல்லாருக்கும் ஆட்டுக்குட்டியை ப‌ற்றிய‌ நினைப்புதான் மூளையில‌ நிறைஞ்சுருக்கும். எல்லாரும் அவ‌ன் அவ‌ன் ஆட்டுக்குட்டியப்ப‌த்தி பெருமை பேசிக்குவோம்.

“ நான் என்ன சொல்றனோ அதத் தாண்டா என் ஆடு கேக்கும்.. நான் கூப்டா வரும்.. எங்க அப்பா கூப்ட்டா கூட‌ வரவே வராது..” என்பான் ஒருவன்.

“ டே... அதாவது பரவால்லடா.. எங்க ஆடு கருவக்காய பறிச்சு கீழ போட்டா தின்னாதுடா.. என் கைல வச்சா தான் நல்லா தின்னும்.. அதுக்கு என்னா கொழுப்பு பாத்தியாடா” என்பான் இன்னொருவன் பெருமையாக..

இப்படி ஏராளமான பேச்சுகள் அந்த செம்மறி ஆட்டுக்குட்டிகளை வைத்து பேசப் படும். பின் குளித்து முடிந்தவுடன் ஆடுகளை அழைத்துக் கொண்டு கிளம்பி விடுவோம். மாலை நேரத்தில் அவ்வளவாக கருவக்காய்கள் கிடைக்காது. காலையிலேயே பறித்துவிட்டது அல்லது இருள் காரணமாக இருக்கலாம்.. ஆனாலும் எங்கள் ஆடுகளுடன் வெளியே சுத்துவது எங்களுக்கு பெருமை... இதில் வேடிக்கை என்னன்னா.. யாருமே ஆடுகளின் முழு ஆயுளுக்கு அவற்றை வளர்த்ததில்லை.. திருவிழாக்களில் வெட்டப்படுவதில் இருந்து காப்பது அவ்வளவு சிரமம். அதில் தப்பினாலும் இருக்கவே இருக்கு அரிசிப்பானை. எப்படி தான் கண்டுபிடிக்குமோ.. நாம் கொஞ்சம் அசந்தாலும் போதும்.. ஆட்டுக்குட்டி வீட்டினுள் நுழைந்து அரிசியை தின்றுவிடும், அரிசியை தின்னுடுச்சுன்னா அவ்ளோதான் ஆடு காலி, அதுக்கு முன்னாடியே அறுத்துருவாங்க. அப்படியே அவைகளிடம் தப்பி வளர்த்தாலும் கொஞ்ச்ம பெரிசானவுடன் குழம்பாக‌வும், உப்புக‌ண்ட‌மாக‌வும் ஆகிவிடும்.

உப்புக்க‌ண்ட‌ம் என்ப‌து ஆட்டின் க‌றியுட‌ன் ம‌சாலா எல்லாம் சேர்த்து, வெயிலில் க‌ருவாடு போல் காய‌வைத்து எடுத்து வைத்துக் கொள்வ‌து. இதை வ‌றுத்து அல்ல‌து குழ‌ம்பில் போட்டு சாப்பிட‌லாம்.

இப்படி ஏடாகூடமா ஏதாச்சும் ஆகி ஆடு குழம்பாகிடுச்சுன்னா எங்களால பெருமையா எல்லாம் பேசிக்கிட்டு திரிய முடியாது. மனசு ரொம்ப சோகமாகிடும். இவன் தான் அந்த ஆட்டுக்குட்டிய கஷ்டப்பட்டு வளர்த்தான் இவனுக்கு கொஞ்சம் அதிகமா கறிய வைன்னு சொல்லி குடுத்தாலும் நமக்கு சாப்பிடவே மனசு வராது. நாங்க என்ன எங்க ஆட்டுல எலும்பே இல்லன்னா சொல்லிக்க முடியும்? நாங்க சோகமா திரியிறதப் பார்த்துட்டு முதல்ல பெரியவங்க எல்லாம் சரிடா விடுங்க, அடுத்த வருசம் நல்ல ஆட்டுக்குட்டியா வாங்கிக்கலாம்னு சமாதானப்படுத்துவாங்க. அதையும் மீறி சோகமா இருந்தா அப்புறம் இனிமே எனக்கு ஆட்டுக்குட்டி வேணும்னு கேளு, அப்பறம் இருக்கு பூசன்னு மிரட்டிருவாங்க.

அவங்க சொல்ற சமதானத்த ஏத்துக்கிட்டோ அல்லது மிரட்டலுக்கு பயந்தோ நாங்களும் எல்லாத்தையும் மறந்துட்டு அடுத்தவருசத்து ஆட்டுக்குட்டிக்காக காத்திருப்போம்.

டிஸ்கி: இது என் பால்ய கால நினைவுகளின் பதிவு தான். இதுக்கும் எதிர்பதிவு ஏகம்பரம் பொடியன் சஞ்சயோட கலர் கோழிக்குஞ்சு பதிவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•12:23 AM
தமிழ் இன‌ தானைத் தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி அவர்கள் ஈழத்தில் நடக்கும் இன ஒழிப்புப் போரில் அநியாயமாய் கொல்லப்படும் தமிழர்களின் உயிர்களைக் காக்க மிக நீண்ட காலமாக யோசித்து சமீபத்தில் அறிவித்த அருமையான திட்டமான பிரதமருக்கு தந்தி திட்டம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று ஒரு நாளில் மட்டும் கோடிக்கணக்கான தந்திகள் பிரதமருக்கு குவிந்துள்ளன. தமிழகமெங்கும் அனைத்து தந்தி அலுவலகங்களிலும் வேறு எந்த தந்தியும் அனுப்ப இயலாத அளவுக்கு இன்று முழுவதும் பெருமளவில் மக்கள் வரிசையாக நின்று தந்தி அனுப்பியுள்ளனர். மேலும் பல தந்தி அலுவலகங்களுக்கு அருகில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு கடுமையான கூட்டம் கூடி பல மணி நேரம் வரிசையில் நின்று அனைவரும் தந்தியடித்துள்ளனர்.

பிரதமர் அலுவலகத்தில் தமிழர்களிடம் இருந்து வரும் தந்திகளை குவிக்க என மாபெரும் கிடங்கு ஒன்றை வாடகைக்கு எடுக்க முடிவு செய்துள்ளார்கள். அந்த அளவுக்கு வந்து குவிந்த தந்திகளைப் பார்த்து பிரதமர் பதறிபோய் உடனடியாக என்ன செய்வது என்றுத் தெரியாமல் சோனியாவை சந்தித்துவிட்டு அவரது ஆலோசனையின் பேரில் உடனடியாக மத்திய அமைச்சரவை கூடி ஒரு கடுமையான முடிவை எடுத்துள்ளது. அந்த கடுமையான முடிவை உடனடியாக செயல்படுத்தியும் விட்டார்கள்.

அதன்படி, உடனடியாக இந்தியாவில் உள்ள இலங்கை தூதரை வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அழைத்து அவரிடம் இந்தியா தனது கடுமையானக் கண்டணங்களை தெரிவித்துள்ளது. இந்தக் கடும் கண்டணத்தை நேரில் வாங்கிய இலங்கைத் தூதர் தற்போது டெல்லியில் நிலவும் கடுமையான குளிரிலும் பயங்கரமாய் வேர்த்து கொட்டி, மிக அதிகளவில் நீர் கேட்டு வாங்கி குடித்துள்ளார். இந்த கடும் கண்டணத்தை வெளியுறவு அமைச்சரது அனுமதியுடன் வெளியுறவு அமைச்சகத்தில் இருந்தே தொலைபேசி வாயிலாக இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவிடம் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி வாயிலாக இந்த கடும் கண்டணத்தை கேள்வியுற்ற இலங்கை அதிபரும் பேரதிர்ச்சிக்குள்ளாகி அலரி மாளிகையில் இருந்த அவ்வளவு நீரையும் குடித்தப் பின்னரும் மேலும் நீர் கேட்டமையால் உடனடியாக இரு லாரிகளில் குடிநீர் கொண்டுச் செல்லப்பட்டதாக கொழும்பில் இருந்து வந்த நம்பத்தகுந்த செய்திகள் அறிவிக்கின்றன.

போதுமான அளவு நீர் அருந்தி முடித்த‌ இலங்கை அதிபர் உடனடியாக ராணுவத் தளபதி சரத் பொன் சேகாவை அழைத்து அனைத்து படை நடவடிக்கைகளையும் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டுள்ளார். மேலும் இனி இலங்கைக் கடற்படையினர் கடலுக்குள்ளேயே செல்லக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். எனவே இனி இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட மாட்டார்கள் எனவும், தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது இலங்கைக் கடற்படையினரின் தொல்லை இனி இருக்காது என்றும் தெரியவருகிறது.

இது கலைஞர் கருணாநிதியின் அறிவுப்பூர்வமான போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.

இப்போராட்டத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்து தமிழகத்தில் மின்வெட்டை கண்டித்து ஆற்காடு வீராச்சாமிக்கு தந்தி அடிப்பது அல்லது தபால் கார்டு எழுதுவது போன்ற போராட்டங்களை கலைஞர் அறிவிப்பார் எனவும் தெரிகிறது.

பின்ன என்னங்க, எங்க ஊருல ஒரு கதை சொல்லுவாய்ங்க. ஒரு சரியான கஞ்சன், சாப்பிட்டுக்கிட்டு இருக்கப்ப எச்சக்கையால காக்கா கூட விரட்டாத ஒருத்தன் வீட்டுக்கு, ஒரு நாள் ஒரு விருந்தாளி வந்தாராம். என்னடா இது நம்ம ஊட்டுல சாப்புட இவன் வந்துட்டானே, எப்படி துரத்துறதுனு திரு.கஞ்சனும், அவரது மனைவியும் திட்டமிட்டு கணவண் மனைவி இடையே கடுமையான சண்டை என்பது போல நடித்தார்களாம். திரு.கஞ்சன் தன் திருமதியை அடி அடி என அடிப்பது போல் நடித்தாராம். அதப் பார்த்த விருந்தாளி, இது என்னடா நாம வந்த நேரம் சரியில்லைப் போலன்னு நினைச்சுக்கிட்டு அப்படியே திரும்பி போயிட்டாராம். அவர் போயிட்டாருன்னு நினைச்சுக்கிட்டு கஞ்சனும், அவரு மனைவியும் தங்கள் சாதனையை பெருசா பேசிக்கிட்டாங்களாம்.

திரு.கஞ்சன்: நான் வலிக்காமல் அடித்தேனே!!.

திருமதி.கஞ்சன்: நானும் நோகாமல் அழுதேனே!!.

இவ‌ங்க‌ ரெண்டு பேரும் போயிட்ட‌தா நினைச்ச‌ விருந்தாளி உள்ள‌ குதிச்சு..

நானும் போகாம‌ல் இருந்தேனே!!!! அப்டினு சொன்னாராம்.

வ‌லிக்காம‌ல் அடித்த‌ க‌ருணாநிதியும், நோகாம‌ல் அழுத‌ ம‌த்திய‌ அர‌சையும், போகாம‌ல் இருக்கும் இல‌ங்கைய‌ர‌சின் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தையும் வேற‌ என்ன‌ச் சொல்லுவ‌து.

தன்னால் முடியும் என்ற நிலையில் இருந்த போதும், எதிர்கட்சிகள் எல்லாரும் உண்ணாவிரதம் இருக்கின்றார்களே, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரு காரணத்தால் மட்டும் இப்படித் தனது கட்சியும் அங்கம் வகிக்கும் மத்தியரசின் கவனத்தை ஈர்க்க, தந்தி போராட்டம் அறிவிக்கும் கலைஞரை என்ன சொல்லி வாழ்த்துவது?

இதனால் யார் மகிழ்ச்சியடைந்தார்களோ, கட்டாயம் மத்தியமைச்சர் இராசா மகிழ்ந்திருப்பார். பின்ன அவருதானே தபால் தந்தி துறைக்கும் அமைச்சர். அவங்களுக்கு இன்னைக்கு நல்ல வசூல் ஆகியிருக்கும்ல? Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•7:01 PM
உலகப் பிரபல கூகுள் நிறுவனம் தனது பத்தாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி மிக உன்னதமான சேவை ஒன்றை செய்ய முனைந்துள்ளது. அதுவும் நமது பங்களிப்போடு.

சமுதாய முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் பல்வேறு பிரிவுகளில் நமது யோசனைகளை தெரிவிக்க ஒரு இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. www.project10tothe100.com

சமுதாய கட்டமைப்பு, புதிய வாய்புகளை உருவாக்கும் யோசனைகள், ஆற்றல் மேம்பாடு, சுற்றுபுற மேம்பாடு, சுகாதாரம், கல்வி, எல்லோருக்கும் பாதுகாப்பான உறைவிடம் அமைய யோசனைகள், இந்த பிரிவுகள் எதையும் சாராத வேறு எந்த யோசனைகள் என பல பிரிவுகளில் நமது யோசனைகளை விரிவாக இந்த இணைய தளத்தில் உள்ளீடு செய்யும் வகையில் அமைத்துள்ளார்கள்.

வரும் அக்டோபர் மாதம் 20 தேதி வரை நமது யோசனைகளை இந்த இணையத்தில் பதிவு செய்யலாம். ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட திட்டங்களை பதியலாம். பதிவு செய்யப்பட்டுள்ள திட்டங்களில் சிறந்த 100 திட்டங்கள் 2009 ஜனவரி மாதம் 27 தேதி அறிவிக்கப்படும். அந்த 100 திட்டங்களில் பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி சிறந்த 20 திட்டங்களை அரையிறுதிச் சுற்றுக்கு தேர்தெடுக்க உள்ளார்கள்.

அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் 20 சிறந்த திட்ட யோசனைகளில் இருந்து 5 திட்டங்களை நடுவர் குழு தேர்தெடுத்து 10 மில்லியன் டாலர்களை ஒதுக்கி அந்த திட்டங்களை செயல்படுத்த உள்ளார்கள்.

சிறந்த திட்டங்களுக்கான யோசனைகளை கீழ்கண்ட அடிப்படையில் தேர்ந்தெடுக்க உள்ளார்கள்.

1) இது எவ்வளவு மக்களுக்கு பலனளிக்கும் ?

2) இத்திட்டம் அத்தியாவசியமான ஒன்றா? இது எந்த அளவு மக்கள் பிரச்சனைகளை களைய உதவும்?

3) இத் திட்டம் ஒரு வருடத்திற்குள்ளோ அல்லது இரண்டு வருடத்திற்குள்ளோ செயல்படுத்த முடியக்கூடிய ஒன்றா?

4) எளிதாகவும், அதிக செலவில்லாமலும் இதை செயல்படுத்த இயலுமா?

5) எத்தனை காலத்திற்கு இத்திட்டம் பலனளிக்கும் ?

இதையாச்சும் செய்வோம் பாஸ் - பெண்ணியவாதிகள் கவனிக்க... என்ற தலைப்பில் நான் ஏற்கனவே எழுதியிருந்த பதிவில் சொல்லியிருந்த ஆலோசனைகளை இந்த தளத்தில் என் பங்குக்கு யோசனையாக வெளிப்படுத்தியுள்ளேன். மாத விலக்கு காலத்தில் பயன்படுத்தும் சானிடரி நாப்கின்களை மிகக் குறைந்த விலையில் கிராமப்புற மகளிர் குழுக்களை கொண்டே உற்பத்தி செய்ய வைத்து, அவர்கள் மூலமாகவே இதை வீடு வீடாக விற்கும் யோசனை நம் நாட்டு கிராமங்களுக்கு மட்டுமல்ல, முன்னேறாத மூன்றாம் உலக நாடுகளின் கிராமப்புற பெண்களுக்கும் மிகவும் பயன்படும் ஒரு யோசனை எனக் கருதியதால் அதை கூகுள் தளத்தில் உள்ளீடு செய்துள்ளேன்.

ஒரு வேளை எனது யோசனை சிறந்த யோசனையாக தேர்தெடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டால் பல ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படலாம். அதன் மூலம் அங்குள்ள மகளிர் குழுக்களுக்கு ஒரு வருமானமளிக்கும் சுய தொழிலும், ஏழைப் பெண்களுக்கு குறைந்த விலையில் சுகாதார வசதிகளும் கிடைப்பதோடு, மிகக் குறைந்த விலையில் நாப்கின்களை உற்பத்தி செய்யும் இயந்திரங்களை கண்டுபிடித்த கோவையைச் சேர்ந்த திரு.முருகானந்தம் அவர்களுக்கும் நல்ல தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

சிறு சிறு குழுக்களாக மக்களுக்கு வேலை வாய்ப்பையும், சுகாதார வாய்ப்பையும் நீண்ட நாட்களுக்கு ஏழை நாடுகளில் உள்ள கிராமப்புற பெண்களுக்கு அளிக்கும் என்பதால் இதை நான் தேர்தெடுத்துள்ளேன்.

நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு யோசனை தோன்றலாம். நீங்களும் உங்களுக்கு தோன்றும் யோசனைகளை இதில் தெரியப்படுத்துங்கள்.

இதையாச்சும் செய்யலாமே பாஸ்...

புதிதாக ஒரு வேலைக்காக விண்ணப்பித்து, நேர்முகத் தேர்வுக்கு சென்று அதில் தேர்வானதாலும், வேலை மாற்றம் தொடர்பான பணிகளாலும், மேலும் சில சொந்த பிரச்சனைகளாலும் இரண்டு வாரமாக பதிவுகள் எதுவும் எழுதவில்லை. என் மேல் உண்மையிலேயே அக்கறையோடு ஏன் பதிவெதுவும் எழுதவில்லை என தொலைபேசி, வலையுரையாடல், மற்றும் மின் மடல்கள் வாயிலாக விசாரித்த அத்தனை சொந்தங்களுக்கும் எனது நன்றிகள். Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•4:21 PM
சிங்கையில் நேற்று நல்ல மழை, அந்த மழை நேரத்தில் தன் நண்பர் ஒருவருடன் இரு சக்கரவாகனத்தில் அமர்ந்து, வழக்கம் போல‌ அடுத்து என்ன பதிவு எழுதலாம் என்ற தீவிர யோசனையுடன் அண்ணண் கோவி.க அவர்கள் பயணிக்கையில் திடீரென்று வந்த ஒரு லாரியின் மீது மோதுவதை தவிர்க்க இருசக்கர வாகன ஓட்டி முயற்சித்த போது, தடுமாறியதால் இருவரும் கீழே விழுந்துவிட்டனர்.

அதில் கோவி.க அண்ணண் சிறுகாயங்களுக்குள்ளானார். இன்று மருத்துவ விடுப்பில் இருக்கிறார். ( இந்த காயத்துக்கு எல்லாம் ஒரு நாளைக்கு மேல மருத்துவ விடுப்பு கிடையாது, ஒழுங்கா நாளைக்கு வேலைக்கு போயிடணும்னு , மருத்துவர் சொல்லிட்டாராம்). கவலைப்படும் படி இல்லையென்றாலும், விபத்திற்குள்ளான நம் மூத்த பதிவர் சிங்கை சிங்கம் கோவி.கண்ணண் அவர்கள் விரைவில் குணமடைய உலகெங்கும் இருக்கும் தமிழ் பதிவர்கள் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ பிரார்தனை செய்யவும்.

மேலும் உலகெங்கும் இருக்கும் அன்பர்கள் எனக்கோ, தம்பி விஜய் ஆனந்துக்கோ PAYPAL ல் பணம் அனுப்பினால் பழம், ஹார்லிக்ஸ் போன்றவை உங்கள் பெயரில் வாங்கி அண்ணணுக்கு அனுப்பப்படும். PAYPAL சேவை இல்லாதவர்கள் பின்னூட்டத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை தெரியப்படுத்துங்கள், எங்கள் வங்கிக்கணக்கு விவரங்களை அனுப்புகிறோம்.
குறிப்பு ஜெகதீசனுக்கு யாரும் பணம் அனுப்பிவிட வேண்டாம். அவரு ஹார்லிக்ஸ் வாங்குவாரு, ஆனா கோவி.க அண்ணணுக்கு குடுக்காம அப்டியே சாப்பிட்டுருவாரு.

ஆனால் இந்த சிறு விபத்தால் அண்ணண் பதிவெழுதும் வேகத்திற்கு எள் அளவுகூட சேதாரம் ஏற்படவில்லை என்பதால் ஒரு சில நாட்களுக்காவது அண்ணணின் பதிவுகளை பார்க்காமல் இருக்கலாம் என்று யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம். வழக்கம் போல பதிவுகள் வரிசை கட்டி வந்துகிட்டேத்தான் இருக்கும்.

பின் குறிப்பு: என்னடா அவருக்கு அடிபட்டுருக்கு, இவன் அதை வெச்சு மொக்கை போடுறானேன்னு யாரும் திட்டாதீங்க. இந்த பதிவு அவரோட சம்மதத்தோடத்தான் வருது.

அடியின் அளவு ரொம்ப கம்மியா இருக்கதால யாரையும் கலவரப் படுத்திரவேண்டாம் என்ற எண்ணத்தால் தான் மொக்கையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் சிறு விபத்தில் சிறு காயமடைந்தது உண்மை.

அண்ணண் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•11:19 AM
சிங்கையில் உள்ள பதிவர்கள் எல்லாம் சந்தித்து மிக நீண்ண்ண்ண்டடடடட நாட்கள் ஆகி விட்டன என்றும்(கடைசியா ஆகஸ்ட் 30 சந்திச்சோம்), மீண்டும் எல்லோரையும் சந்திக்க வேண்டும் என்றும் பல பதிவர்களும், எங்கள் பின்னூட்ட புயல் தம்பி விஜய் ஆனந்தும் ரொம்ப ஆசைப்படுவதால் அடுத்த சந்திப்பு நடத்த சங்கம் தீர்மானித்துள்ளது.

நாள் : செப்டம்பர் 20 சனிக்கிழமை.

நேரம் : மாலை 3 மணி முதல் ........

இடம் : புக்கிட் கொம்பாக்


புக்கிட் கொம்பாக் மின் தொடர் வண்டி நிலையத்தின் அருகில் பதிவர்கள் அனைவரும் 3 மணிக்கு கூடவும். அங்கிருந்து விழா நடை பெறும் இடத்திற்கு ஊர்வலமாலக செல்ல இருக்கிறோம். இவ் ஊர்வலத்தை சிங்கை நாதன் அவர்கள் தலைமையேற்று நடத்துவார்.

இம்முறை பல முக்கிய விவாதங்களுடன் சில சந்தோஷ கொண்டாட்டங்களும் இடம் பெற உள்ளன. வழக்கம் போல் சிங்கை நாதன் அவர்கள் எல்லோருக்கும் அல்வா கொண்டுவருவார், கோவி.க அண்ணண் கொஞ்சம் பஜ்ஜியும், நிறைய சட்னியும் கொண்டுவருவார். ( வழக்கம் போல நாங்கல்லாம் சாப்பிட்டுட்டு வருவோம்.)

சிங்கையில் உங்களுக்கு தெரிந்த மற்ற பதிவர்களையும் அழைத்து வாருங்கள். இது பதிவர்களுக்கு மட்டுமான சந்திப்பு அல்ல. விருப்பம் உடைய வாசகப் பெருமக்களும் இச் சந்திப்பில் கலந்து கொண்டு, உங்கள் அபிமான(???) பதிவர்களை நேரில் சந்தித்து, உரையாடி மகிழலாம்.

நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள அலைபேசி எண்கள்:

ஜோசப் பால்ராஜ் : +65 - 93372775
கோவி.கண்ணண் : +65 - 98767586
ஜெகதீசன் : +65 - 90026527
Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•1:25 PM
மின் வெட்டால் தமிழகம் மட்டுமின்றி, நாடே தத்தளிக்கும் இவ்வேளையில் ஒரு கிராமம் தன் மின் தேவைக்கு பிறரை சார்ந்திருக்காமல் சாதனை படைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் உள்ள ஒரு பஞ்சாயத்துதான் ஓடந்துறை. இந்த பஞ்சாயத்துக்குட்பட்டு மொத்தம் 11 கிராமங்கள். அத்தனை ஊர்களுக்கும் குடிநீர் எந்த வித பிரச்சனையுமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.

மரத்துண்டுகளை எரிச்சு, அந்தப் புகையை தண்ணீருடன் கலந்து வடிகட்டி கியாஸ் தயா ரிக்கும் 'பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ்' (Biomass Gasifier Gas) யூனிட்டை அமைச்சு, அதுல கிடைக்கிற கியாஸ் மூலமா 9 ஹெச்.பி. மோட்டார் ஒண்ணு கரன்ட் இல்லாம இயக்கப்படுகிறது. அதை கொண்டு ஓடந்துறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட எல்லா கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் தடையில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.

அதோடு மட்டுமில்லாமல், தெருவிளக்குகள் அனைத்தையும் சூரிய ஒளி விளக்காக அமைத்துள்ளார்கள். இதனால் இரவுகளில் தடையில்லாமல் தெரு விளக்குகள் ஒளிர்ந்து கொண்டுள்ளன.

இந்த‌ கிராம‌ம் காற்றாலை மின் உற்ப‌த்திக்கு ஏதுவான‌ இட‌த்தில் அமைந்திருப்ப‌தால் காற்றாலை ஒன்றையும் சொந்த‌மாக‌ நிறுவியுள்ளார்க‌ள். இத‌ன் மூல‌ம் வ‌ருட‌த்திற்கு ஏழே முக்கால் லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. தங்கள் பஞ்சாயத்தின் தேவை போக மீதமுள்ள மின்சாரத்தை மின் வாரியத்திற்கு விற்று சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு காற்றாலைக்காக வாங்கிய வங்கிக் கடனை அடைக்கிறார்கள். கடன் முழுவதும் அடைக்கப்பட்டுவிட்டால் அந்த ஊராட்சி சுய வருமானமுள்ள ஊராட்சியாகிவிடும்.

அதோடு மட்டுமின்றி எல்லா வீடுகளிலும் சூரிய ஓளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் அமைப்பையும், சிறிய காற்றாலை ஒன்றையும் அமைத்து ( Solar and Wind hybrid system )அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து வீடுகளின் உபயோகத்திற்கு பயன்படுத்தும் திட்டம் ஒன்றையும் செயல்படுத்த இருக்கின்றார்களாம்.

இந்த திட்டத்தை செயல்படுத்த ஆரம்பச் செலவு அதிகம் என்பதும், இது ஜெர்மன் போன்ற நாடுகளில் வெற்றிகரமாக செயல்படும் திட்டம் என்பதும், ஜெர்மனியில் இருந்து மிக குறைந்த விலையில் சோலார் பிளேட்டுகளை வாங்க முடியும் என்பதும் அந்த ஊராட்சித் தலைவி லிங்கம்மாளுக்கு நன்கு தெரிந்து இருக்கின்றது. ஆனால் நம் மின்சார துறை அதிகாரிகளுக்கோ, அமைச்சருக்கோ இது தெரியவில்லை.

மரபு சாரா எரிசக்தி உற்பத்திக்கு மத்திய அரசு மானியங்கள் மட்டும் வழங்குகின்றது. ஆனால் அதில் உள்ள வாய்ப்புகளை பெரிய அளவில் விளம்பரம் செய்வதில்லை. இது போல் ஆர்வமாக பல நல்ல திட்டங்களை செய்யும் ஓடந்துறை ஊராட்சிக்கு கட்டாயம் அரசு உதவிகளைத் தாராளமாகச் செய்து கொடுத்தால் அவர்கள் கட்டாயம் அவர்கள் முழு சுயசார்பு ஊராட்சியாக முன்னேறிவிடுவார்கள்.

சூரிய ஒளி விளக்குகளை அமைக்க அரசு தாராளமாய் மானியங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஏன் எல்லா கிராமங்களிலும், நகர்புறங்களிலும் உள்ள தெரு விளக்குகளை சூரிய சக்தியில் செயல்படும் விளக்குகளாக மாற்றக் கூடாது? இதை ஏன் அரசே முன் நின்று செய்யக் கூடாது ? இதனால் பெருமளவில் மின் உபயோகம் குறைவதோடு, உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பெருமளவில் மின் கட்டணம் குறையும். அதேப் போல் 'பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ்' நுட்பத்தையும் எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் பயன்படுத்தலாமே ? எல்லா ஊராட்சிகளுக்கும் இதை பரிந்துரைக்கலாம் அல்லவா?

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ் முறையில் அவர்களே அவர்களது மின் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு உதவிகள் செய்து கொடுத்தால் விவசாயிகளும் மின்வெட்டால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தப்பித்து விடுவார்கள், அதோடு அரசுக்கும் மின் செலவு குறையும். பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ் முறையில் நீர் மூழ்கி மோட்டார்களை இயக்க முடியுமா எனத் தெரியவில்லை. அப்படி முடியாத பட்சத்தில் நீர் மூழ்கியல்லாத அனைத்து மோட்டார்களுக்கும் இம் முறையை பயன்படுத்தச் செய்யலாம்.

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெறும் விளக்குகள் கோடை காலங்களில் 100 சதவீதம் சூரிய ஒளியிலிருந்தே மின்சாரம் பெற்றுவிடும். ஆனால் மழைக்காலங்களிலும் வெயில் குறைவாக இருக்கும் காலங்களிலும் மின் உற்பத்திக் குறைவாகவே இருக்கும் என்பதால், தற்போது இருக்கும் மின்சாரத்தை அச்சமயங்களில் பயன் படுத்திக்கொள்ளும் வகையில் கவனமாக திட்டமிட்டு செயல்படுத்தினால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தெரு விளக்குகளை இயக்க முடியும். கோடை காலங்களில் நீர் மின் உற்பத்தி குறைவால் ஏற்படும் பற்றாகுறையை சூரிய ஒளி மின்சாரத்தைக் கொண்டு சமாளிக்கலாம். அதே போல் மழைக்காலங்களில் நீர் மின் உற்பத்தி நன்றாக இருக்கும் என்பதால் சூரிய ஒளி மின்சாரத்தில் ஏற்படும் பற்றாகுறையை சரி செய்யலாம்.

அதோட இதெல்லாம் சுற்றுப்புறச் சூழலை கெடுக்காத நல்லத் திட்டங்களா வேற இருக்கு. ஓடந்துறையின் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் திரு.சண்முகம், தற்போதைய பஞ்சாயத்துத் தலைவரான அவரது மனைவி திருமதி. லிங்கமாள் ஆகியோரிடமாவது போய் நம் மின் துறை அமைச்சர் ஆற்காட்டார் பாடம் கற்றுக் கொண்டுவந்தால் மிக நல்லது.

எல்லா ஊர்களும் காற்றாலை மின் உற்பத்தியில் இறங்க இயலாது. ஆனால் சூரிய ஒளி மற்றும் பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ் முறைகளை எல்லோரும் உபயோகிக்க முடியும். இவை எல்லாமே மிக எளிதாக செயல்படுத்த முடிகின்ற திட்டங்கள் தான். அதை நாம் செய்து ஒரு ஊரில் குறைந்தது 100 யூனிட் மின்சாரத்தை சேமித்தாலும் ஒரு மாவட்டத்தில் எவ்வளவு மின்சாரத்தை சேமிக்க இயலும்? அது எவ்வளவு உபயோகமாக இருக்கும் ? சும்மா அணு ஒப்பந்தம் நிறைவேறியவுடன் எல்லாம் சரியாயிடும்னு கதை சொல்லிக்கிட்டு இருக்காம சின்ன சின்னதா இது மாதிரி திட்டங்கள நிறைவேத்துனா பலன் பெரிய அளவுல இருக்கும்ல?

இது போன்ற‌ திட்டங்களில் எல்லா ஊர்களிலும் உள்ள ஊராட்சித் தலைவர்கள் சற்று கவனம் செலுத்தினாலாவது நாம் ஆற்காட்டாரை திட்டாமல் நம்ம வேலைய நாமலே பார்த்துக்கிட்டு போகலாம். கிராமங்கள் முன்னேறினால் தான் நாடு முன்னேறும் என்று காந்தியும் சொன்னாரு. அப்துல் கலாமும் சொல்லிக்கிட்டு இருக்காரு. எல்லா கிராமங்களும் இப்படி தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் நிலைக்கு வந்துட்டா எப்டியிருக்கும் ? நல்ல கற்பனையா இப்போதைக்கு இருக்கிறது, நாலு பேரு மனசு வைச்சா சீக்கிரமே நடக்கும். நடக்கணும்.

பின் குறிப்பு: 14.09.2008 தேதியிட்ட ஜீனியர் விகடனில் வெளிவந்த செய்தியிலிருந்து தெரிந்து கொண்டதை வைத்து தான் நான் இப்பதிவை எழுதியுள்ளேன். செய்தி மூலத்திற்கு ஜீ.வி க்கு எனது நன்றிகள். Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•10:44 AM
சாதி ஒழியணும் ஆனால்... என்ற தலைப்பில் கோவி.க அண்ணண் எழுதிய பதிவிற்கு பின்னூட்டமிட்டிருந்த அது சரி என்பவர் பொருளாதரத்தில் முன்னேறியவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். எனது கேள்வியும் இதுவே.

க்ரீமி லேயர் என்று சொல்லும் இவர்கள் இட ஒதுக்கீட்டின் சலுகைகளை அனுபவித்துக்கொண்டே சென்றால் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள் அதே நிலையிலேயே தொடர்ந்து இருந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் எப்படி முன்னேற முடியும்?

இடஒதுக்கீட்டில் தற்போது இருக்கும் நடை முறை மாற வேண்டும். பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் ஒரு பிரிவாகக் கருதப்பட வேண்டும். அதாவது ஒரு குடும்பத்தில் இட ஒதுக்கீட்டில் கல்வி பயின்று, வேலை வாய்ப்பும் பெற்று நல்ல நிலைக்கு வந்தவர் இட ஒதுக்கீட்டின் பலனை அடைந்த முதல் தலைமுறை, இவரது மகன்/மகள் அந்த குடும்பத்தின் இரண்டாம் தலைமுறைக்கும் இட ஒதுக்கீடு அளிக்கலாம். ஆனால் அதற்கு பின்னர் மூன்றாம் தலைமுறை பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவாக அறிவிக்கப்பட வேண்டும்.அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன் போகக் கூடாது. இரண்டு தலைமுறையை தூக்கிவிட அரசு உதவலாம். அதற்கு மேல அவனே ஏற வேண்டியதுதான். தான் விலகிக்கொண்டு பிறருக்கு வழிவிட வேண்டும். சரியானத் திட்டமிடுதலின் மூலம் இதை அருமையாக நடைமுறைப் படுத்தலாம்.

இதை செயல்படுத்த முதல் தேவை ஒருங்கிணைந்த அடையாள அட்டை. ஒரு தனிப்பட்ட அடையாள எண் ( Unique Identification Number) கொண்ட ஒருங்கிணைந்த அடையாள அட்டை எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும். அரசின் சலுகைகள் மூலமாக அவர்கள் அனுபவித்த பலன் எல்லாம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு மாணவண் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் போது, அவனது அடையாள எண்ணைக் கொண்டு அவன் குடும்பத்தில் மொத்தமாக எத்தனை பேர் சலுகைகளை அனுபவித்துள்ளார்கள்,எத்தனை தலைமுறையாக அந்த குடும்பத்தினர் சலுகை அடைந்துள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, அதன் மூலம் அவர்களுக்கு இட ஒதுக்கிட்டின் பலனை அளிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம்.

மேலும் ஒருவர் எந்த முதலீடு செய்தாலும் அதில் அடையாள அட்டை எண் குறிப்பிடப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஒருவருக்கு உள்ள சொத்து மதிப்பின் அளவு தெரியும். அவரது குடும்பத்தாருக்கு உள்ள மொத்த சொத்து மதிப்பும் தெரியும். எனவே பொருளாதார அடிப்படையில் அவர்களால் கட்டண இடங்களில் படிக்க முடியுமா இல்லையா என்பதை தீர்மானிக்கலாம். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சொத்து உள்ளவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் கீழ் சலுகை காட்டக் கூடாது.

பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் என தற்போது இருக்கும் பிரிவுகளுள் பொருளாதாரத்தில் பின் தங்கியோர் என ஒரு பிரிவையும் சேர்க்க வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மொத்த‌ மாணவர்களில் மேம்பட்ட பொருளாதார வசதிகள் கொண்டவர்களை பொதுப்பிரிவாக கருதி, மீதம் உள்ள மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலனை அளிக்கலாம். தற்போது இட ஒதுக்கீட்டின் மூலம் எந்த சலுகையையும் அடைய முடியாத மேல்வகுப்பை சேர்ந்தவர்களாய் இருந்தாலும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாய் இருந்தால் அவர்களுக்கு பொருளாதாரத்தில் பின் தங்கியோர் பிரிவின் கீழ் சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்.

எந்த ஒரு அரசு ஊழியராவது லஞ்சம், ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டணை அடைந்திருந்தால் அந்த வழக்குகளின் விவரங்களும் அவரது அடையாள எண்ணை கொண்டு தெரிந்து கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட வேண்டும். இப்படி தண்டணை அடைந்தவர்களின் குடும்பத்தார்க்கு இடஒதுக்கீட்டின் பலன்கள் மறுக்கப்பட வேண்டும்.

அதே போல் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், நகராட்சி, மாகநகராட்சி மன்ற உறுப்பினர்கள் குழந்தைகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட கூடாது. இது ஏன் என தனியாக நான் சொல்ல வேண்டியதில்லை என நம்புகிறேன்.

இந்த முறையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தினால், வருடா வருடம் ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு மாணவர்கள் விண்ணப்பிக்கின்றார்கள் என்பதை கணக்கிட்டு இட ஒதுக்கீட்டின் சதவீதத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் படிப்படியாக பொதுப் பிரிவின் சதவீதம் கூடி , மற்றப் பிரிவுகளில் சதவீதம் குறைந்து கொண்டே வரும். 100 ஆண்டுகள் கழித்து சுத்தமாக சாதி ரீதியிலான‌ இட ஒதுக்கீடு மறைந்தாலும் மறைந்து விடும். அதன் பின் பொருளாதார வசதிகளின் அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு இருக்குமாறு செய்யலாம்.

இந்த இட ஒதுக்கீடு முறைக்கு முக்கிய தேவையாக நான் கூறும் ஒருங்கிணைந்த அடையாள அட்டை முறையை நடை முறைப்படுத்த மிக அதிக அளவில் செலவாகும், மிக அதிக நாட்கள் ஆகும் என்று தட்டிக்கழிக்க முற்படுவார்கள். 2 ஆண்டுகளாவது இதை நடைமுறைப்படுத்த ஆகும். மேலும் பொருட் செலவும் அதிகம்தான். ஆனால் இது ஒரு அடிப்படை வசதி, இது இட ஒதுக்கீட்டிற்கு மட்டும் பயன்படக்கூடிய ஒன்றல்ல. 110 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இன்னும் ரேஷன் அட்டையை அடையாள அட்டையாக உபயோகிக்கும் நிலையில்தான் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கின்றார்கள். இப்படி ஒரு அடையாள அட்டையை முதலில் கொடுத்து முழுமையான கணிணி நிர்வாகத்தை கொண்டுவருவது தகவல் தொழில்நுட்பத்தில் முண்ணணியில் இருக்கும் நாடான நமக்கு ஒரு பெரிய விசயமே அல்ல.

இட ஒதுக்கீட்டையும் ஓட்டு வாங்கும் துருப்புச் சீட்டாக பயன்படுத்தி, சாதி வித்தியாசங்களை ஒழிக்க முன்வராமல் அதைத் தூண்டிவிட்டு குளிர்காயும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை இந்தப் பிரச்சனைக்கு தீர்வு என்பதே இருக்காது. யாராவது ஒரு நல்ல தலைவர் இப்படிச் சிந்தித்தால்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். மாற்றம் வருமா ??? Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•6:05 PM
விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாலத்தான் தீ விபத்து நடந்தது - முதலமைச்சர் அறிக்கை

தீயணைப்பு சான்றிதழே பெறாமல் ஐந்து மாடிக் கடை - தீயணைப்புத் துறை இயக்குநர்

அந்த இடத்துல திடீர்னா ஐந்து மாடிக்கட்டிடம் கட்டுனாங்க? பல வருசங்களா அந்த பல மாடிக்கட்டிடம் இருந்துகிட்டேத்தானே இருக்கு ?

இத்தனை நாளு முதல்வருக்கு இது தெரியவே தெரியாதா? தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு அந்த கட்டிடத்துக்கு சான்றிதழ் வாங்கிருக்காங்களா இல்லையான்னு கூடத் தெரியாதா?

தமிழ்நாட்டுலயே மொத்தம் 968 பெரியக் கட்டிடங்கள் தான் இருக்கு, அதுல 661 கட்டிடங்களுக்கு சென்னையில இருக்குன்னு சொல்லிருக்காரு அந்த அதிகாரி. மொத்த‌ த‌மிழ்நாட்டுல‌யும் 968 பெரிய‌ க‌ட்டிட‌ங்க‌ள் தான் இருக்குன்னா, அந்த‌ 968ல‌யும் எல்லா விதிமுறைக‌ளும் பின்ப‌ற்ற‌ப்ப‌ட்டிருக்கா, முறைப்ப‌டி தீய‌ணைப்பு வ‌ச‌திக‌ள் செய்ய‌ப்ப‌ட்டிருக்கா, அவ‌ச‌ர‌க்கால‌ங்க‌ளிலும், விப‌த்து நேர‌ங்க‌ளிலும் பொதும‌க்கள் பாதுகாப்பா வெளியேறும் வ‌ழிக‌ள் அமைக்க‌ப்ப‌ட்டிருக்கான்னு கூட‌ ந‌ம்ம‌ தீய‌ணைப்புத்துறையால‌ சோத‌னை செய்ய‌ முடியாதா?

தீயணைப்புத் துறையின் அனுமதியே இல்லாமல் இருந்ததாம், தீயணைப்புத்துறை அதிகாரி இப்பத்தான் சொல்றாரு. இவ்ளோ நாளு என்ன செஞ்சுக்கிட்டு இருந்தாரு? சரிங்க, என் கேள்வி, இந்த 900+ கட்டிடங்களும் முறைப்படி தீயணைப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கா, அவசரக் காலத்துல வெளியேற வசதிகள் இருக்கான்னு எல்லாம் யாருமே சோதிக்க மாட்டாங்களா?

விதிமுறைக‌ளை மீறிக்க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ க‌ட்டிட‌ங்க‌ளை இடிக்க‌ச் சொல்லி தொட‌ர‌ப்ப‌ட்ட‌ பொதுந‌ல‌ வ‌ழ‌க்கில் நீதிம‌ன்ற‌ம் இடிக்க‌ச்சொல்லி உத்த‌ர‌விட்டு அதே தியாக‌ராய‌ந‌க‌ரில் உள்ள‌ சென்னை சில்க்ஸ் க‌ட்டிட‌த்தின் சில‌ த‌ள‌ங்க‌ள் இடிக்க‌ப்ப‌ட்ட‌ போது, இந்த‌ க‌ட்டிட‌ங்க‌ள் எப்ப‌டி த‌ப்பின‌? அப்போது கூட‌ தெரிய‌வில்லையா இவையும் விதிமுறையை மீறித்தான் க‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ என்ப‌து?

இந்தியாவில் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று எல்லோரும் புலம்புகின்றார்கள். இன்னும் மனித உயிர்களுக்கு மதிப்பு மட்டும் உயரவே இல்லை. ஏதாவது விபத்து ஏற்பட்டால் இரண்டு நாட்களுக்கு மட்டும் எல்லோரும் பேசிட்டு போயிகிட்டே இருக்காங்க. அரசாங்கம் முதல்வர் நிவாரண நிதியில கொஞ்சம் பணம் கொடுக்கும், விளம்பரத்துக்கு எல்லா அரசியல்கட்சிகளும் கொஞ்சம் உதவி செய்வாங்க, அவ்ளோதான் எல்லாரும் மறந்துடுவாங்க.

90 பச்சிளம் குழந்தைகள் உயிரோடு கருகியப்பின்னர் தான் பள்ளிகளில் பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என ஆரய அரசு உத்தரவிட்டது. தற்போது 2 உயிர்கள் பலியாகியுள்ளன. இனியாவது அரசு முழிக்குமா? அதிகாலையிலயே சரவாணா கடை எரிஞ்சதால 2 உயிர்களோட போச்சு, ஆனா அதே விபத்து காலை 11 மணிக்கு மேலயோ அல்லது மாலை நேரத்துலயோ நடந்துருந்தா ??? யோசிக்கவே பயமா இருக்குங்க.

இவ்வளவு மோசமாக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால் கட்டாயம் இந்த விபத்திற்கு இழப்பீடு எதுவும் கொடுக்க கூடாது. மேலும் இந்த விதிமீறல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும். மேலும் அதே ரெங்கநாதன் தெரு மட்டுமல்ல, இன்னும் இது போல நெருக்கடி நிறைந்த பல இடங்களில் உள்ள பொதுமக்கள் கூடும் வியாபார நிறுவனங்களில் எல்லாம் முறையாக சோதனை செய்து, அதில் ஏதாவது விதி மீறல்கள் இருந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது ரம்ஜான் மற்றும் தீபாவளிப் பண்டிகை காலம், மக்கள் பெருமளவில் புத்தாடைகள் வாங்க இந்த கடைகளுக்குத்தான் செல்வார்கள். இப்போதே உடனே அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தயவு தாட்சண்யமே இல்லாமல் விதிமுறைகளை மீறிய நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முன்வந்தாளாவது பண்டிகை கால லாபங்களை இழக்க விரும்பாத நிறுவனங்கள் உடனே விதிமுறைகளை நடைமுறைபடுத்த முன்வருவார்கள். இனியாவது முழிக்குமா அரசு ? Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•2:33 PM
இது பொம்பளைங்க சமாச்சாரம்..பெண்ணியவாதிகள் கவனிக்க.. என்ற தலைப்பில் என் அருமை நண்பர் சஞ்சய் ஒரு பதிவிட்டிருந்தார். எதிர்காலத்தில் மகளிர் முன்னேற்றத்திற்காக பாடுபட விரும்பும் அவரது தோழி கூறிய திட்டமாக பெண்களின் மாதாந்திர தேவையான சானிடரி நாப்கினை ஒரு ரூபாய்க்கு விநியோகிக்கும் திட்டத்தை எழுதியிருந்தார். முதலில் சஞ்சய்யின் தோழி இப்படி ஒரு சிந்தனை கொண்டவராய் இருப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மிகப்பெரும் நிறுவனங்கள் சானிடரி நாப்கினை தயாரிக்க உபயோகிக்கும் இயந்திரங்களின் விலை 75 லட்சங்களில் இருந்து 2.5கோடிகள் வரை இருக்கும். பெரும் நிறுவனங்கள் தங்களது விளம்பர செலவு முதல், விநியோக செலவு வரை எல்லாவற்றையும் பொருளின் விலையில் சேர்ப்பதால் மிக அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை. இந்த விலை கிராமப்புற ஏழை பெண்களுக்கு இன்னும் எட்டாத அளவில் இருப்பதால் அவர்கள் இதை வாங்கிப் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றார்கள். அப்படியிருக்க 1 ரூபாய்க்கு விற்பது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி எழலாம்.

கோவையை சேர்ந்த முருகானந்தம் என்பவர் மிகக் குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரங்களைத் தயாரித்து, அதை கொண்டு நாப்கின் தயாரிக்கும் செய்முறைகளை கற்றுத்தந்து விற்பனை செய்து வருகிறார். இதற்கு மூன்று சிறு இயந்திரங்கள் தேவை. இயந்திரங்களின் விலை, அவற்றை நிறுவுதல் மற்றும் பயிற்சி ஆக மொத்தம் 60 ஆயிரம் ரூபாய் மட்டுமே. இவ்வியந்திரங்களை நிறுவி தயாரிப்பு வேலைகளில் ஈடுபட தேவையான இடம் கூட ரொம்ப அதிகமில்லை. 16 அடி நீளம் 16 அடி அகலம் கொண்ட ஒரு கூடம் போதும். 4 வேலையாட்கள் போதும். ஒரு நாளில் 8 நாப்கின்கள் கொண்ட 180 பாக்கெட்டுகள் தயாரிக்க முடியும்.

இந்த இயந்திரங்களை பயன்படுத்தி 8 நாப்கின்கள் கொண்ட ஒரு பாக்கெட் தயாரிக்க 8 ரூபாய் மட்டுமே செலவாகின்றது. ஒரு பாக்கெட் 12.50 க்கு விற்றால் சுயஉதவிக்குழுவினர் லாபகரமாக இத்தொழிலைச் செய்யலாம். மேலும் ஒரு நாப்கின் 1.50க்கு கிடைக்கும்.

இதை கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு வாங்கிக் கொடுத்து, அவர்களுக்கு பயிற்சியும் அளித்தால் அவர்கள் சுலபமாக தயாரித்து தங்கள் பகுதி கிராமங்களில் நேரடியாக விற்றுவிடுவார்கள். இதனால் விளம்பர செலவு,விநியோக செலவு, சில்லரை வர்த்தக லாபம் போன்றவை தவிர்க்கப்படும்.

நண்பர் சஞ்சய் தனது பதிவில் இலவசமாக அரசே பெண்களுக்கு நாப்கின் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த இலவசக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏன் எல்லாவற்றுக்கும் அரசையே எதிர்பார்க்க வேண்டும்? ஏன் எல்லாவற்றையும் இலவசமாகவே பெற வேண்டும்?

தற்போது ஏறத்தாழ எல்லா கிராமங்களிலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் எல்லா இடங்களிலும் அவர்கள் வெற்றிகரமாக செயல்படுவதில்லை. 5 கிராமத்துக்கு ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து அங்குள்ள சுய உதவிக்குழுவுக்கு பயிற்சியளித்து இவ்வியந்திரங்களை வாங்க வங்கிக்கடன் ஏற்பாடு செய்து கொடுத்தால் அவர்களே வெற்றிகரமாக இதை செய்ய மாட்டார்களா? அவர்கள் தயாரிக்கும் நாப்கின்களை அடுத்த ஊர்களில் உள்ள குழுக்களின் மூலமாக விற்கலாம். நேரடியாக விற்கும் போது ஒரு பாக்கெட் 12.50 க்கு விற்றால் பிற ஊர்களில் உள்ள குழுக்களுக்கு விற்கும் போது 11 ரூபாய்க்கு விற்றால் அவர்கள் 1.50 லாபம் சம்பாதித்துக்கொள்ளலாம்.

வேண்டுமானால் அரசாங்கம் இந்த இயந்திரங்கள் வாங்க அளிக்கும் கடன் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மானியமாக அளிக்கலாம். இதனால் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் சுமை குறையும், அதன் மூலம் அவர்கள் இன்னும் குறைந்த விலையில் விற்பனை செய்ய இயலும்.

இந்த இயந்திரங்களின் பயன்பாடு , இதைக் கொண்டு ஒரு தொழிலை ஆரம்பிக்கத் தேவையான திட்ட அறிக்கை(Project Report) எல்லாம் கீழேயுள்ள இணையதளத்தில் மிகத் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

திட்ட விளக்கம்

திட்ட அறிக்கை

இந்த இயந்திரங்களை கண்டுபிடித்த திரு. முருகானந்தம் அவர்களை தொடர்பு கொள்ள.

Jayaashree Industries
SF No. 577 KNG Pudur Road
Somayampalaym (Po)
Coimbatore - 641 108.
Mobile; - 92831 55128, 98422 15984


அவரது மின்னஞ்சல் முகவரி: muruganantham_in@yahoo.com

சஞ்சயின் தோழி போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களும், எதையாச்சும் செய்யனும் என்ற எண்ணம் கொண்டவர்களும் இதையாச்சும் செய்யலாம். இதில் நாம் ஒன்றும் நம் கை காசை செலவழிக்க வேண்டியதில்லை. நமக்கு தெரிந்த கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு இதை எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு வங்கிக்கடன் ஏற்பாடு செய்து கொடுத்து தொழிலை ஆரம்பிக்கச் செய்யலாம்.

மிகக் குறைந்த விலையில் கிராப்புறப் பெண்களுக்கு சுகாதாரமான நாப்கின்கள் கிடைப்பது, கிராப்புற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் ஒரு நல்ல தொழில் வாய்ப்பு கிடைப்பது என பல நன்மைகளை கொண்ட இத்திட்டத்தை கட்டாயம் செயல்படுத்த முன்வரவேண்டும். Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•10:35 PM
முன் கூட்டியே என்னிடம் தெரிவித்து என்னை இந்த விளையாட்டிற்கு அழைத்த திவ்யாவிற்கு எனது நன்றிகள். காதல் எனப்படுவது யாதெனில்... தொடர் பதிவில் அவரை நான் மாட்டிவிட்டதற்கு பதில் மரியாதை இது.

A - AOL TAMIL
www.aol.in/tamil

தமிழ் செய்திகளுக்காக இதை பார்ப்பது உண்டு.

B - BSNL Customer Care
http://portal.bsnl.in/bsnlcca/login.aspx

பி எஸ் என் எல் வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் இணைய தளம் இது. நீங்களும் இணையம் வழியாக புகார் அளிக்கும் சேவையை பயன்படுத்த இதை உபயோகிக்கலாம். நல்ல பலன் இருக்கின்றது.

C - Changi Airport
www.changiairport.com

சிங்கப்பூர் விமான நிலையத்தின் இணைய தளம் இது. விமான வருகை, புறப்பாடு போன்ற தகவல்களுக்காக இதை அடிக்கடி பார்பது உண்டு. எனக்கு நண்பர்கள் அதிகம் எனவே வழியனுப்புவதும், வரவேற்பதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள்.

D - Dinamalar
www.dinamalar.com
காலையில் தினமும் தமிழ் செய்திகளுக்காக இதை தான் படிப்பேன்.

DBS Bank Singapore
www.dbsbank.com.sg
Development Bak of Singapore. வங்கிச் சேவைகளுக்காக மிக அதிகமாய் உபயோகிக்கும் இணையதளம்.

E- E Grocy Online Store
www.egrocy.com

என்னைப் போன்ற சோம்பேறிகளுக்காக உள்ள இணைய கடை. மளிகைச் சாமன்களை மாதமாதம் வாங்க உபயோகிக்கும் தளம். நாங்க எல்லாம் வீட்லயே உக்காந்துகிட்டு இணையத்துல எல்லாப் பொருளையும் வாங்கிருவோம்ல.

F - FlyProxy
https://flyproxy.com

எங்க அலுவலகத்துல அடிக்கடி நம்ம ரொம்ப உபயோகிக்கிற இணைய தளங்களை தடை பண்ணிருவாங்க. நாங்க எல்லாம் யாரு, இதுல பூந்து எல்லா இணையத்தையும் கொண்டாந்துருவோம்ல. இப்டிதான் ஜிமெயில தடை பண்ணாய்ங்க. நமக்கு ஜிமெயில் இல்லன்னா உசுரே போயிடும்ல. அணையா விளக்கா ஜிமெயில்ல என் பெயருக்கு பக்கத்துல இருக்க பச்சைவிளக்கு நான் தூங்குறப்ப மட்டும்தான் அணைஞ்சு இருக்கும். அத போயி இவிங்க தடை செஞ்சா விட்ருவோமா? அதுக்குத்தான் இதெல்லாம். உங்க அலுவலகத்துலயும் யாராவது இப்டி தொல்லை குடுத்தா ஒரு பின்னூட்டத்த போட்டுட்டு இதை பயன்படுததுங்க.

G - Google
www.google.com.

கூகிள் நம்ம பெரியண்ணண். இவரு இல்லன்ன நான் இல்ல. இவர கேட்கிற விதமா கேட்டா எல்லாத்தையும் நமக்கு தர்றவரு. எனக்கு மட்டும் இல்ல, பொட்டி தட்றவங்க எல்லாருக்கும் பெரியண்ணண் இவரு தான். இவருகிட்ட இல்லாததே இல்லன்னு சொல்ற அளவுக்கு எல்லா தகவல்களையும் அள்ளித்தருவாரு. பாசக்கார அண்ணண்.

H - The Hindu
www.Hindu.com

நமக்கு ஆங்கில அறிவும் முக்கியம்ல, அதான் ஹிண்டு செய்திதாளையும் காலையில வாசிக்கிறது நம்ம வழக்கம்.

How Stuff Works
http://www.howstuffworks.com

சாதாரண கருவி முதற்கொண்டு, மிக நவீன கருவி வரை எல்லாம் எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ள இந்த தளம் மிக உதவியாய் இருக்கும். நான் இதுக்கு அடிக்கடி போகிறதில்லை. ஆனா என் அண்ணண் ஜோசப் செல்வன் இத பொறுமையா படிச்சுட்டு நான் கேட்கிறத நல்ல புரியிறமாதிரி சொல்லிக்கொடுப்பாரு. அப்பப்ப எட்டிப் பார்கிறதோட சரி.

I - ICICI Exchange Rate Calculator
http://icicibank.com/pfsuser/icicibank/ibank-nri/nrinewversion/calculators.htm

நம்மள மாதிரி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கெல்லாம் உபயோகமான தளம் இது. மத்த வங்கிகள விட ஐசிஐசிஐ வங்கிதான் அதிகமான நாணய மாற்று மதிப்பு கொண்ட வங்கி. நமக்கு யாரு அதிகமா தர்றாங்களோ அவங்கத் தானே முக்கியம். இவங்க தான் நமக்கு பாதுகாப்பா நாம சம்பாதிக்கிறத தாய்நாட்டுக்கு அனுப்ப உதவுறவங்க. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் தேவையான ஒரு தளம் இது. நீங்க ஐசிஐசிஐ வங்கியில கணக்கு வைச்சிருக்கணும்கிற அவசியம் கூட கிடையாது. இவங்களோட Money2India சேவையின் மூலமா சுலபமா பல வங்கிக் கணக்குகளுக்கும் நீங்க பணம் அனுப்ப முடியும். உங்க பணம் ஒழுங்கா போய் சேர்ந்துச்சான்னு நீங்க பார்த்துக்கலாம்.

J - Jobs DB Singapore
http://www.jobsdb.com.sg

சிங்கப்பூர்ல இருக்க வேலை வாய்ப்புகளை குறித்த இணையத்தளம் இது. சுய விளம்பரமா நினைச்சுக்காதீங்க. என் வீட்ல எப்பவுமே ஒரு 2 வேலை தேடுறவங்க இருப்பாங்க. ஏதோ நம்மால முடிஞ்ச சேவைன்னு செஞ்சுகிட்டு இருக்கேன். அவங்களுக்காக அடிகடி போகுற இணையம் இது.

K - Khel Stocks
http://www.khelostocks.com

கல்லூரியில படிகிறப்ப என்னோட பாடம் இயற்பியல், இருந்தாலும் நமக்கு பங்கு வணிகத்தில நான் ஒரு பட்டயப் படிப்பு படிசேன்ல ( Diploma in Share Investment &
Management) , அதான் பங்கு வணிகத்துக்காக இந்த இணையத்துக்கு அடிக்கடி போவேன்.


M - ம்யூஜிக் இதுல நான் பல இணையங்களுக்கு போவேன் குறிப்பா சொல்லனும்னா
www.raga.com, www.smashits.com போன்றவை.

O - Oru Paper
www.orupaper.com

நம் ஈழத்து சொந்தங்களின் தளம் இது. அடிக்கடி போவது உண்டு.

P - Public Grievances
http://pgportal.gov.in/aboutus.html

பொதுமக்கள் தங்களது குறைகளை அரசின் அனைத்து துறைகளுக்கும் தெரிவிக்க உள்ள இணையதளம். சமீபத்தில்தான் இதை கண்டறிந்தேன். இதுகுறித்து ஒரு பதிவும் இட்டுள்ளேன்.

Personal Finance
http://www.personalfn.com/calc/hlv.html

இது நம்முடைய நிதி மேலாண்மைக்கு உதவும் ஒரு நல்ல தளம். பல கணக்கீடுக்களுக்காக நான் இதற்கு செல்வது உண்டு. இங்கும் ஒரு சுய விளம்பரம் அவசியமாகிறது. நான் பல நண்பர்களுக்கு நிதி ஆலோசகராக தொண்டாற்றி வருகின்றேன். இந்தியாவில் இருந்த காலம் தொட்டு இதை செய்து கொண்டுள்ளேன். ஆனால் சிங்கை வந்த பின் முன்போல் என்னால் அந்த சேவையை திறம்பட செய்ய இயலவில்லை. எனினும் இது போன்ற இணைய தளங்கள் எனக்கு அப் பணியில் பேருதவி புரிகின்றன.

Q - Quick Remit

இது HDFC வங்கியின் சேவை. இதன் மூலம் இந்தியாவில் உள்ள எல்லா கணிணி மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் பணம் அனுப்ப முடியும். இதற்கு HDFC வங்கியில் நாம் வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

S - SDN SAP
www.sdn.sap.com.

இது நம்ம பொழப்பு சம்பந்தப்பட்ட இணையதளம்.SAPல இருக்கவங்க எல்லாருக்கும் எந்த சந்தேகம்னாலும் இங்க வந்தா நல்ல உதவி கிடைக்கும். SAP ஒரு கடல் மாதிரி, அதுல Technical & Functional னு ரெண்டு பிரிவு இருக்கு. Technical ல வேலை பார்க்க ஆரம்பிச்ச நான் இப்ப Techno Functional அ இருக்க முக்கிய உதவி இந்த இணையம் தான். புதுசா கத்துக்கிறவங்களுக்கு பல உதவிகள் இங்க கிடைக்கும்.

SBI Singapore
http://www.sbising.com

இது பாரத ஸ்டேட் வங்கியின் சிங்கப்பூர் இணையதளம். நம்ம ஊரு ரூபாய் மதிப்ப பார்க்குறதுக்காக இந்த தளத்துக்கு அடிக்கடி போவேன்.

T - Tamil Editor
www.tamileditor.org

என் மடிக்கணிணியில் நான் ஈ கலப்பை போன்ற எதையும் நிறுவாமையால் இந்த தளத்தின் மூலமாகத் தான் தமிழ் தட்டச்சு செய்கிறேன். என் மடிக்கணிணியில் எப்போதும் மூடாமல் இருக்கும் பக்கங்களில் இதுவும் ஒன்று.

Thirukural
http://www.tamilnation.org/literature/kural/index.htm

திருக்குறள் இருக்கும் இணையத்தளம். திருக்குறளுக்கு தனியாக நான் விளக்கம் தரவேண்டுமா என்ன?

Team Viewer
http://teamviewer.com/index.aspx

நாம பல பேருக்கு பல நேரங்கள்ல உதவுறதுக்கு இந்த இணைய தளம் உதவுது.

http://tamilpeek.com http://www.tubetamil.com

வேற எதுக்கு தமிழ் படம் பார்க்கத்தான்.

W - WIKI
http://en.wikipedia.org/wiki/Wiki

கூகிள் நமக்கு பெரியண்ணண், விக்கி நமக்கு தம்பியண்ணண். நமக்கு தெரியாதத இவருகிட்டயும் கேட்டுக்கலாம். பெரியண்ணண் பல நேரங்கள்ல தம்பியண்ணகிட்டத்தான் அனுப்புவாரு. நமக்கு செம தோஸ்த்.

What is
http://whatis.techtarget.com

என்ன? அப்டிங்கிற கேள்விய கேட்க இது ஒரு நல்ல இணையதளம். சிறப்பான பதில்கள் கிடைக்கும். இந்த காலத்து குழந்தைங்க எல்லாம் நிறைய கேள்வி கேட்குதுங்க. அவங்களுக்கு பதில் சொல்ல விக்கி , இந்த தளம் எல்லாம் பெற்றோர்களுக்கு மிகவும் உதவும். பொறுமையா சொல்லிக்குடுக்கலாம்.


Y - Yarl.com
http://www.yarl.com/forum3/index.php?showforum=40

யாழ் இணையம், ஈழத்துச் சொந்தங்களின் இணையதளம் இது. ஈழத்து செய்திகளுக்காக அடிக்கடி செல்வது உண்டு.

You Tube
http://www.youtube.com

ரொம்ப போரடிக்கிற நேரங்கள்ல இந்த தளத்துல போயி வகை வகையா தேடிப்புடிச்சு விடியோ பார்ப்பேன். ரொம்ப புடிச்சது நம்ம தமிழ் நகைச்சுவை வீடியோக்கள் தான்.

நான் ஒரு மூணு பேர மாட்டிவிடணுமாம், யார மாட்டிவிடலாம்னு ஞாயித்துகிழமை காலையில சீக்கிரமா 11 மணிக்கே எழுந்துருச்சு யோசிச்சதுல மாட்டுனது இந்த மூணு பேருதான்.

1. அன்பு தம்பி விக்கி என்கிற விக்னேஸ்வரன்.

2. அன்பு தோழன் ஜெகு என்கிற ஜெகதீசன்

3. நீண்ட நாட்களாய் பதிவுகளை வாசித்து அனுபவம் பெற்று சமீப காலமாய் பதிவெழுத ஆரம்பித்து கலக்கிக் கொண்டிருக்கும் அன்பு தோழர் மகேஷ்.

Rule:

The Tag name is A for Apple

Give preference for regular sites

Ignore your own blogs, sites.

Tag 3 People.
Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•12:29 PM
இதுவரை 74 பதிவுகளை எழுதியுள்ள நிஜமா நல்லவன் அவர்கள் நேற்று தீடீரென விடை பெறுகிறேன், இனிமேல் எழுத மாட்டேன் என்று அறிவித்துள்ளார். அவரது விடை பெறுகிறேன் பதிவை கீழே கொடுத்துள்ளேன்.


விடை பெறுகிறேன்!

ஆனந்த விகடன் வரவேற்பறை மூலமாக அறிமுகமானது தமிழ் பதிவுலகம். ஏதோ பெயருக்கு பதிவுகள் எழுதி வந்தாலும் இதுவரையில் உருப்படியாக எதுவும் எழுதியதில்லை. இனிமேலும் எழுத என்னிடம் எதுவும் இல்லை. நான் எழுதிய மொக்கை பதிவுகளையும் படித்து எனக்கு பின்னூட்டங்கள் அளித்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி!


வர வர இது ஒரு வாடிக்கையான வழக்கமாகி கொண்டே போகின்றது. நன்றாக எழுதிக்கொண்டிருக்கையிலேயே திடீர் என விடை பெறுகிறேன் என அறிவிப்பது. உடனே அவரது நண்பர்கள் அனைவரும் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள், நீங்கள் எல்லாம் எழுதாவிட்டால் எப்படி என்பது போன்ற பின்னூட்ட கொஞ்சல்கள், கெஞ்சல்கள் செய்வது, பின்பு நீங்கள் எல்லாம் மிகவும் வேண்டிக்கொண்டதால் நான் மீண்டும் பதிவெழுத வருகிறேன் என்பது. ஏன் இதெல்லாம் ? நிஜமா நல்லவனின் விடை பெறுகிறேன் பதிவுக்கு நான் எழுதிய பின்னூட்டம் இதுதான்.

ஜோசப் பால்ராஜ் said...

இப்டியே எல்லாரும் போறேன்னு சொல்றதும், மத்தவங்க அவங்க இல்லீங்க நீங்க எல்லாம் தொடர்ந்து எழுதணும்னு கூப்பிடுறதும் தொடர் கதையா போயிடுச்சு. நீங்க உண்மையிலேயே இனிமே எழுத எதுவும் இல்லைன்னு நினைச்சா நீங்க இனிமே கண்ண மூடிகிட்டு இருக்கப் போறீங்கன்னு அர்த்தம். எதையும் பார்க்க மாட்டீங்க, படிக்க மாட்டீங்கன்னு அர்த்தம். ஏன்னா நாம பார்கிறது, படிக்கிறதுல இருந்துதான் பாதிவுகள் வருது. அப்டித்தான் இருக்கப் போறீங்கன்னா ரொம்ப சந்தோசம் , போயிட்டு வாங்க, இனிமே எழுதாதீங்க.

உங்களையெல்லாம் வாங்க வாங்கன்னு கூப்பிடவே கூடாதுங்கிறதுதான் என் கொள்கை. மத்தவங்க கூப்பிடுறாங்கன்னு எல்லாம் வந்துடாதீங்க. உங்க கொள்கை இனிமே எழுத கூடாதுங்கிறது தானே? அதுல உறுதியா இருங்க. வாழ்த்துக்கள். நாம நல்ல நண்பர்களா இருப்போம் என் மின்னஞ்சல் முகவரி தர்றேன். தொடர்புல இருங்க. ஆனா இனிமே நீங்க எழுதவே வேண்டாம். நாடு ஒன்னும் கெட்டுப் போயிறாது. போயிட்டு வாங்க. நன்றி. இதுவரை நீங்க பதிவுலகத்துக்குச் செஞ்ச சேவைக்கு ரொம்ப நன்றிங்க. வணக்கம்.
என் மின்னஞ்சல் முகவரி: joseph.paulraj@gmail.com.எழுத ஒன்னுமே இல்லைன்னு சொல்லிட்டு போறவரை எதுக்கு இத்தனை பேரு திரும்ப வாங்கன்னு கூப்பிடனும் ? மாரத்தான் ஓட்டப் போட்டி நடக்குது, பல வீரர்கள் ஓடிக்கிட்டு இருக்காங்க. அதுல ஒருத்தரு இனிமே என்னால ஓட முடியாது, ஒடுறதுக்கு என் உடம்புல வலு இல்லன்னு உக்காந்துட்டாருன்னா என்ன செய்ய முடியும்? சரிங்க அப்டி ஓரமா உக்காந்துக்கங்கன்னு தானே சொல்ல முடியும்? இல்ல இல்ல நீங்க கட்டாயம் ஓடியே ஆகணும்னு சொல்லி ஓட முடியாதவர இழுத்துக்கிட்டு வர முடியுமா? எனக்கு என்னமோ நிஜமா நல்லவன் நிஜமான காரணம் எதையும் சொல்லாம வெறுமனே இனிமே எழுத ஒன்னும் இல்லன்னு சொல்லியிருக்காருன்னுதான் தோணுது. எப்டியிருந்தாலும் எழுத முடியாதுன்னு சொல்றவரப்போய் எதுக்கு மல்லுகட்டனும் ? காரணமே தெளிவா சொல்லாதவருகிட்ட எதுக்கு போயி எல்லாரும் கெஞ்சணும் ?

நேற்று இரவு இந்த பதிவை படித்துவிட்டு நானும் தம்பி விஜய் ஆனந்தும் வலையுரையாடலில் பேசிக் கொண்டிருந்தோம். இப்படி அறிவிப்பதும், கெஞ்சுவதும், திரும்ப வருவதுமான போக்கு அதிகரித்துக் கொண்டே போகின்றது. இது கட்டாயம் தமிழ்மணத்தின் சூடான இடுகைகளில் இடம்பிடிக்கும் என்றும் சொன்னார். அதே போல் இன்று சூடாண இடுகைகளில் இடம்பிடித்து விட்டது. இப்படி காரணமில்லாமல் நானே போய் வருகிறேன், இனி எழுத மாட்டேன் என்று சொன்னால் யாரும் கெஞ்சக் கூடாது என்பதுதான் என் கருத்து.

தமிழ் மணத்திற்கு :

சூடாண இடுகைகளுக்கான பதிவுகள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன ?

பதிவுகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை வைத்தா? பதிவுக்கு இடப்படும் பின்ன்னூட்டங்களின் எண்ணிக்கையை வைத்தா?

ஏன் பெரும்பாலும் மொக்கை பதிவுகளே சூடாண இடுகைகளில் இடம்பிடிக்கின்றன?

இப்படி மொக்கை பதிவுகளே பெரும்பாலும் சூடாண இடுகைகளில் இடம்பிடித்துக்கொண்டிருந்தால் அது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடாதா? Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•3:59 PM
எனது சொந்த வாழ்வில் நிகழ்ந்த ஒன்று. எனது 17 வருட தேடல் இது.

மாரநேரி என்ற ஒரு சின்ன கிராமத்தில் பிறந்த நான், அதே கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில்தான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். தமிழ் வழிக்கல்வியில் ஆங்கிலம் என்பது அறிமுகமாவதே மூன்றாம் வகுப்பில் தானே. எனக்கு அது வரை ஏ பி சி டி கூட தெரியாது. மூன்றாம் வகுப்பு வந்த போதும் ஏபிசிடி சொல்லச் சொன்னால் 26 எழுத்துக்களையும் சொல்லத்தெரியாது. ஆனால் எழுதச் சொன்னால் அதுவும் எனது சிலேட்டில் எழுதச் சொன்னால் எழுதிவிடுவேன். அது எப்படியென்றால் எனது சிலேட்டின் இரு பக்க சட்டங்களிலும் ஏபிசிடி இருக்கும். அதைப் பார்த்து எழுதி சாமாளித்தேன்.

நான் நான்காம் வகுப்பு படித்த போது எங்கள் ஊர் பள்ளியில் வேலை பார்த்த ஒரு கன்னியாஸ்த்ரி மருத்துவ விடுப்பு எடுத்த போது அந்த விடுப்பு பணிக்காக வந்தவர் தான் சுந்தரி டீச்சர். சுந்தரி டீச்சர் B.Sc வேதியியல் பட்டமும், B.Ed பட்டமும் பெற்றவர்.

நான்கவது படிக்கும் எங்களுக்கு சுந்தரி டீச்சர் வகுப்பெடுக்க வந்த முதல் நாள் இன்னும் எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது. மதிய நேரம் முதல் பிரிவு அறிவியல் பாடம். எனக்கு ஆங்கிலம் தான் தெரியாதே தவிர மற்ற பாடங்கள் எல்லாம் நன்றாகப் படிப்பேன். முதலில் நடந்த அறிவியல் வகுப்பில் முதல் வரிசையில் உட்கார்ந்து மிக ஆர்வமாக பாடங்களை கவனித்துக் கொண்டிருந்தேன். கேட்க்கும் கேள்விகளுக்கு எல்லாம் சரியாக பதில் சொல்லி டீச்சரின் பாராட்டுகளையும் பெற்றேன்.

அடுத்த பிரிவுக்கு மணி அடித்தது. அறிவியல் வகுப்பு முடிந்து ஆங்கில வகுப்பு தொடங்கியது. விடுறா ஆளை என்று முதல் வரிசையிலிருந்து கடைசி வரிசைக்கு ஓடிவிட்டேன். சுந்தரி டீச்சர் ஆங்கிலப் பாடத்தை எடுக்க ஆரம்பித்தார்கள். அந்த பாடம் கூட சாலமன் மன்னரின் அறிவை சோதிக்க ஒரே மாதிரியாக இருக்கும் இரண்டு பூக்களை கொடுத்து அதில் எந்த பூ நிஜப்பூ என தொட்டுப்பார்க்காமலேயே கண்டுபிடிக்க சொல்லும் கதை. இந்தப் பாடத்தை நடத்த ஆரம்பித்த டீச்சர், பாடத்திற்கு நடுவே கேள்வி கேட்ட போதுதான் என்னை தேடி, நான் கடைசி வரிசையில் அமர்ந்திருப்பதை பார்த்தார்கள். எங்கடா இந்த பால், அறிவியல் பாடத்துக்கு முன்னாடி உக்காந்திருந்தவன ஆளையே காணோமேன்னு கேட்டாங்க. அதுக்கு என் தோழன் ஒருத்தன் டீச்சர் அவன் எல்லா பாடமும் நல்ல படிப்பான், ஆனா இங்கிலீஷ் அவனுக்கு வராது அதுனால இங்கிலீஷ் பாடத்துக்கு மட்டும் கடைசி வரிசையிலத்தான் உக்காருவான்னு சொன்னான். டீச்சருக்கு கோவம் வந்துருச்சு. முதல்ல நீ முதல் வரிசைக்கு வான்னு கூப்பிட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமா ஆங்கிலத்தின் மேல எனக்கு இருந்த பயத்தை போக்கி, எல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க.

டீச்சர் ஊரு நாகப்பட்டினம், அதுனால எங்க ஊர் கன்னியர் மடத்துலயே தங்கி, எங்க பள்ளியில வேலை செஞ்சாங்க. பள்ளியும், மடமும் ஒரே வளாகத்தில்தான் இருந்துச்சு. பள்ளிக்கூடம் விட்ட பின்னர் இரவு உணவு வரையிலும், விடுமுறை நாட்களிலும் நாங்கள் டீச்சர் உடன் தான் இருப்போம். விளையாட்டுகளோடு எங்களுக்கு ஆங்கிலம், பொது அறிவு போன்றவற்றையும் சொல்லிக் கொடுத்தார்கள். அவர்களிடமிருந்து தான் பல அடிப்படை விசயங்களை கற்றுக்கொண்டேன். நான் மட்டுமல்ல என் அண்ணன் டைட்டஸ், என் வகுப்புத் தோழன் ஒருவன் தோழியர் இருவர் என நாங்கள் 5 பேர் எப்போதும் டீச்சருடனே இருந்து நிறையக் கற்றுக்கொண்டோம்.

நாங்கள் 5 ஆம் வகுப்பு முடித்துவிட்டு ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை எங்கள் கிராமத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள மேகளத்தூர் என்ற ஊரில் இருந்த நடுநிலைப் பள்ளியில் படித்தோம். அப்போதும் எங்கள் ஊரில் டீச்சர் இருக்கும் வரை நாங்கள் அவர்கள் கூடத்தான் இருந்தோம். ஆனால் சில ஆண்டுகளில் டீச்சர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்கள். தற்போது எங்கே உள்ளார்கள் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.

அவர்களைப் பற்றி எனக்கு தெரிந்தது எல்லாம் கீழே உள்ளவை தான்.

1) பத்மாவதி இல்லம், கிணத்தடி சந்து, வெளிப் பாளையம், நாகப்பட்டினம் என்ற இந்த முகவரி.

2) அவரது தந்தையார் பெயர் காளிமுத்து என்பதும்,அவர் PA to the CEO ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

3) அவரது மூத்த சகோதரியின் கணவர் சோழன் போக்குவரத்து கழகத்தில் மேலாளராக பணிபுரிந்தார், அவர்களது மகன் பெயர் பிரபு.

4) அவருக்கு ஒரு தங்கை உண்டு.

நாங்கள் அவர்களோடு இருக்கும் போதே எங்களுக்கு அரசியல் குறித்த சரியான பார்வை என்னவாக இருக்க வேண்டும், சினிமாவில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பங்கள், புதுப் புது கண்டுபிடிப்புகள் குறித்த செய்திகள் எனப் பலவற்றையும் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்து ஒரு கிராமத்தில் பிறந்த எங்கள் முன்னேற்றத்தில் சுந்தரி டீச்சரின் பங்கு மிக முக்கியமானது.

என் அண்ணண் ஜோசப் டைட்டஸ் Neuro Physiology யில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்சியை முடித்துவிட்டு முனைவர் பட்டம் பெற இருக்கிறார், தற்போது அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் மேடிசன் என்ற ஊரில் உள்ள விஸ்கான்ஸின் பல்கலை கழகத்தில் ஆராய்சியாளராக வேலைக்கு சேரும் அளவுக்கு உயர்ந்ததிலும் சுந்தரி டீச்சரின் பங்கு பெருமளவில் இருக்கின்றது. நானும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, மென்பொருள் துறையில் ஒரு நல்ல வேலையிலும் சேர்ந்து வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்து, இன்று வலைப் பதிவு எழுதும் அளவுக்கு என்னை உயர்த்தியதிலும் சுந்தரி டீச்சரின் பங்கு முக்கியமானது.

வலையுலகில் நான் எழுதும் எனது 50வது பதிவு இது. என்னை இந்தளவுக்கு உயர்த்திய என் பாசமிகு சுந்தரி டீச்சருக்கு இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

நாகையை சேர்ந்தவரான‌ கோவி.கண்ணண் அண்ணணிடம் நேற்றைய சந்திப்பில் சுந்தரி டீச்சரை குறித்து கூறினேன். அவரது தம்பியிடம் கூறி தகவல் சேகரிப்பதாக கூறியுள்ளார். நாகையை சேர்ந்த வேறுயாரும் இந்த பதிவை படித்தீர்களானால் சுந்தரி டீச்சரை நான் கண்டுபிடிக்க உதவுங்கள். 17 வருடமாக தேடிக் கொண்டிருக்கும் எனக்கு யாராவது உதவுங்கள்.

ஐம்பதாவது பதிவை வெளியிடும் இவ் வேளையில் என்னை ஆதரித்து ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் எனது நன்றிகள். Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•2:06 PM
காவிரி படுகை மாவட்ட விவசாயிகளின் வாழ்வுக்கு ஆதாரமாய் விளங்கும் எங்கள் அன்புக்குறிய மேட்டூர் அணைக்கு இன்று பிறந்த நாள். இன்று 74 வயதை நிறைவு செய்து பவள விழா ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது எங்கள் மேட்டூர் அணை.

இஸ்லாமியர் எப்படி புனித மெக்கா இருக்கும் திசை நோக்கி தொழுகை செய்வார்களோ அதுபோல் எங்கள் விவசாயமும் மேட்டூர் இருக்கும் திசை பார்த்து தான் இருக்கும்.

1925 ஜீலை 20 ஆம் தேதி அணைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1934 ஆகஸ்ட் 21 ஆம் தேதி அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஸ்டான்லியால் திறந்து வைக்கப்பட்ட இந்த அணைக்கு ஸ்டான்லி நீர்தேக்கம் என்றுதான் முதலில் பெயரிடப்பட்டது. இன்றும் அந்த பெயர் அணையில் எழுதப்பட்டிருந்தாலும் மேட்டூர் அணை என்றுதான் எல்லோராலும் அறியப்படுகின்றது.

இந்த அணைக்கு சொந்தமான நீர்பிடிப்பு பகுதிகள் இருந்தாலும், பெருமளவிலான நீர் ஆதரம் கர்நாடகாவை நம்பியே உள்ளது. சொந்தமாய் ஒளி இல்லா சந்திரனுக்கு வளர்பிறை, முழுநிலவு, தேய்பிறை , அம்மாவாசை என்றிருப்பதுபோல் கர்நாடகாவை நம்பியே இருப்பதால் இதன் நீர்மட்டமும் எப்போதும் சீராய இல்லாமல் வளர்வதும், தேய்வதுமாய் இருக்கின்றது.

எங்கள் வாழ்வுக்கு ஆதாரமாய் விளங்கும் இந்த அணை எந்நாளும் நீடித்து நிலைத்து,எப்போதும் நிரம்ப நீரோடு எமக்கு சேவை புரிய வேண்டும் என்று இந்த தஞ்சை மாவட்டத்து உழவன் மகனோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்துங்கள். Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•10:00 PM
சமீபத்தில் இலவசம் என்றால் இளக்காரமா ? என்ற தலைப்பில் இலவச பேருந்து சலுகையை பயன்படுத்தி பயணம் செய்த சில சிறுமிகளை தஞ்சையில் ஒரு நடத்துநர் பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட செய்தியை அறிந்து நான் எழுதிய பதிவிற்கு பின்னூட்டமிட்ட பலரும், தங்களது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

அதிலும் என‌க்கு ப‌ல‌ நேர‌ங்க‌ளில் மிக‌ சரியான‌ ஆலோச‌னைகளை சொல்லும் என் ந‌ண்ப‌ர்
3rdeye த‌ன‌து பின்னூட்ட‌த்தில் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை கேட்ப‌தோடு நிறுத்தாதே இதை அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு எடுத்துச்செல் என்று பின்னூட்ட‌மிட்டிருந்தார்.

நானும் இதை வெறும் பதிவிடுவதோடு நிறுத்தக்கூடாது, கட்டாயம் அந்த மனிதாபிமானமற்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ன செய்யலாம் என்று எண்ணிய போது, தற்செயலாக இணையத்தின் மூலமாக பொதுமக்களின் புகார்களை தெரிவிக்க வசதி இருப்பது தெரியவந்தது. http://pgportal.gov.in.

இந்த இணையத்தின் வாயிலாக இந்தியாவில் மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் மற்றும் அரசின் அனைத்து துறைகளுக்கும் நாம் நமது புகாரை தெரிவிக்க முடியும்.

முதலில் நமது பயனாளர் பெயர் (User Name) மற்றும் கடவு சொல் (Password) ஆகியவற்றை தெரிவு செய்து விட்டு, நமது முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களை பதிவு செய்துவிட்டு, எந்த துறைக்கு நமது புகாரை அனுப்ப வேண்டும் என்பதை தெரிவு செய்துவிட்டு, அதற்கு கீழேயுள்ள பெட்டியில் 4000 வார்த்தைகளுக்குள் நமது புகாரை பதிவு செய்ய வேண்டும்.

மேலும் நமது புகாரை வெற்றிகரமாக‌ பதிவு செய்த உடன் நமக்கு ஒரு பதிவெண் தரப்படுகின்றது. இந்த பதிவெண் (உதாரணமாக எனது புகாரின் பதிவெண்: DARPG/E/2008/08229)மூலமாக நாம் பின்னர் நமது புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியலாம்.

இப்படி ஒரு அமைப்பும், வசதியும் இருப்பது நம்மில் எத்தனைபேருக்கு தெரியும் எனத்தெரியவில்லை. இதில் இன்றுதான் எனது புகாரை பதிவு செய்துள்ளேன். இதன் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதை தொடர்ந்து பார்த்து உங்களுக்கு கட்டாயம் தெரிவிப்பேன்.

நீங்களும் உங்கள் கண்ணில்படும் குற்றங்களை சும்மா பார்பதோடு நின்றுவிடாமல், உடனே இந்த இணையத்தின் மூலமாக உங்கள் புகாரை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்புங்கள். புகார் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களும் தரப்பட வேண்டும் என்பதால் நடவடிக்கைகள் கட்டாயம் எடுக்கப்படும் என நம்பலாம்.

ஒரு குறிப்பிட்ட நிகழ்வு குறித்த ஒன்றுக்கும் மேற்பட்ட புகார்கள் குவியும்போது, அந்த பிரச்சனையின் தாக்கம் கட்டாயம் இந்த புகார்களை கையாள்பவர்களுக்கு புரியலாம். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எண்ணி, நடவடிக்கை எடுக்க முற்படலாம். வாய்ப்பு கிடைக்கும் போது ஏன் நாம் சும்மாயிருக்க வேண்டும்?

எத்தனையோ மின்னஞ்சல்களை நாம் அனைவருக்கும் அனுப்பி மகிழ்கிறோம். இந்த இணையதளத்தை குறித்த விழிப்புணர்வையும் நாம் எல்லோருக்கும் ஏற்படுத்த வேண்டும். உங்கள் நண்பர்களுக்கு இச்செய்தியை தயவுசெய்து அனுப்புங்கள். சிறு துளிகள் தான் பெருவெள்ளமாகும். ஜெய் ஹிந்த். Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•12:48 AM
என்ன பண்றது, இந்த வாரம் பதிவர் உலகத்துல ஒன்னு பகிரங்க கடிதம் எழுதனும் இல்லன்னா மெஸ்ஸ பத்தி எழுதணும் ...

நான் யாருக்காவது அந்தரங்க கடிதம் எழுதுனாலே அடிதடி வந்துடும், இதுல பகிரங்க கடிதம் எதையாவது எழுதுனா பிரச்சனை பெரிய அளவுல வந்துடாது? அதான் மெஸ் பக்கம் போயிடுவோம்னு முடிவுபண்ணிட்டேன்.

நான் பெருசா எந்த மெஸ்லயும் போயி தொடர்ந்து சாப்பிட்டதெல்லாம் இல்லை. ஆனால் இந்த மதுரை பக்கம் போனா மறக்காம செய்யிறது இதுதான்.
தலைப்புல இருக்க எல்லாத்தையும் முழுசா அனுபவிக்க மதுரையில ஒரு முழுநாள் தேவைப்படும்.

காலையில ஒரு 10 மணிக்கெல்லாம் மதுரைக்குள்ள நுழைஞ்சிடணும். அப்பத்தான் சரியா ஜிகர்தண்டால இருந்து ஆரம்பிக்கலாம். மதுரை ஜிகர்தண்டா இருக்கே, அந்த பெயரை கேட்டாலே ஜிவ்வுனு இருக்கும். இது ஒரு ஹிந்தி பெயராம்.ஜிகர்ன்னா இதயம், தண்டான்னா குளிர்ச்சி, இதயத்தை குளிர்விக்கும் பானம் இதுன்னு பெயர் குறிப்பு சொல்றாங்க.


மதுரையில பல கடைகளில் ஜிகர்தண்டா கிடைச்சாலும், மஞ்சணக்காரவீதியில இருக்க பழைய கடையிலத்தான் ரொம்ப நல்லா இருக்கும். அந்த வீதியில போய் யாரைக்கேட்டாலும் கடைய காட்டுவாங்க. (திருநெல்வேலில எல்லா இடத்துலயும் அல்வா கிடைச்சாலும், இருட்டுகடை அல்வா மாதிரி வராதுல, அப்டிதான் இதுவும்).

பாதம் பிசின், சுண்டக்காய்சுன பால், ஐஸ்க்ரீம் மற்றும் சில எசன்ஸ் ஊத்தி செய்யிற இத காலையில சாப்புட்டுட்டு ஒரு 2 மணிநேரம் வேற எதுவும் சாப்புடக்கூடாது. அப்பத்தானே அம்மா மெஸ்ல போயி ஒரு கட்டு கட்ட முடியும்?

மதியான சாப்பாட்டுக்கு மதுரையில ஒரு சிறந்த இடம் அழகர் கோயில் சாலையில, தல்லாக்குளம் பகுதியில இருக்க அம்மா மெஸ்.

அம்மா மெஸ் அயிர மீன் குழம்பு தமிழ்நாடு முழுக்க புகழ்வாய்ந்த ஒன்று. நாங்க எல்லாம் எங்க கிராமத்துல ஆறு, வாய்கால்கள்ல தண்ணி கொஞ்சமா ஓடுற காலத்துல அயிரமீன் பிடிச்சுருக்கோம். ஆனா இந்த அம்மா மெஸ் காரங்களுக்கு மட்டும் எப்டி வருசம் முழுசும் அயிரமீன் கிடைக்குதுன்னு தெரியலை. எப்ப போனாலும் அயிரமீன் குழம்பு கிடைக்குது.
அயிரமீன் கடல்ல இருக்க நெத்திலி மீன் மாதிரி ரொம்ப பொடிசா இருக்க நன்னீர் மீன். இதை புடிக்கிறது ரொம்ப சுலபம். தண்ணி கொஞ்சமா ஓடுற ஆறு, வாய்க்கால்கள்ல கூட்டமா ஓடிக்கிட்டு இருக்கும். ஒரு பழைய கொசுவலை இல்லன்ன லுங்கி இதுல ஒருபக்கம் முடிச்சு போட்டுகிட்டு, ரெண்டு பேரு சேர்ந்து தண்ணியில போட்டு இழுத்து தூக்குனா செமையா மாட்டிக்கும். இந்த மீன்ல குடல் எல்லாம் இருக்காதுங்கிறதால சுத்தம் பண்றது ரொம்ப சுலபம். ஒரு மண் சட்டியில கொஞ்சம் கல் உப்ப போட்டு நல்லா உரசி இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் தேய்ச்சா போதும் எடுத்து கழுவிட்டு சமைக்கலாம். எங்க கிராமத்துக்கு போகிறப்ப நான், எங்க அண்ணண்கள் எல்லாம் சேர்ந்து இந்த மீன் புடிப்போம். எப்ப அயிரமீன் சாப்பிட்டாலும் எனக்கு எங்க அண்ணண்களோட சேர்ந்து மீன் புடிச்சதுதான் நினைவுக்கு வரும்.

சுகமான அயிரமீன் சாப்பாட்டை சாப்பிட்டுட்டு நல்லா ஊர் சுத்தனும். மாலையில வெறும் காபி மட்டும் குடிச்சா போதும், ஏதாவது சிற்றுண்டி எல்லாம் சாப்பிட்டு வயிற நிரப்பியாச்சுனா அப்றம் கோனார் மெஸ்ல ஒழுங்கா சாப்பிட முடியாதுல‌.

கோனார் மெஸ் ஒரு சாலையோர கடை மாதிரித்தான் இருக்கும், மதுரை சிம்மக்கல் பக்கத்துல இருக்கு. இரவு நேரக் கையேந்தி பவன் கடைத்தான். ஆனா எல்லாம் மிக அருமையா இருக்கும். கோனார் மெஸ் போனா கறி தோசை சாப்பிடாம வரக்கூடாது. ஊத்தாப்பம் மாதிரி தோசைய ஊத்தி அது மேல ஆட்டுக்கறிய அழகா வைச்சி கொடுப்பாங்க. அங்க கோழி வருவல்,இடியாப்பம் எல்லாமும் கூட ரொம்ப சுவையா இருக்கும். கோனார் மெஸ் மாலை 7.30 மணிக்குத்தான் திறப்பாங்க. கார்ல போனா, கார்லயே உக்காந்து சாப்புடலாம். கொண்டுவந்து கொடுக்க நிறைய பணியாளர்கள் இருப்பாங்க. 8மணிக்கெல்லாம் நிறைய கூட்டம் வந்துரும். கார் நிறுத்த இடம் இருக்காது. 12 மணிவரைக்கும் கடை திறந்திருக்கும்.

ஆனா நாம ஒரு நாள் பயணமா போயிருந்தா 9மணிக்குள்ள கோனார் மெஸ்ல சாப்பிட்டு முடிச்சுரணும், அப்பதானே இரவு நேரக்காட்சிக்கு ஏதாவது ஒரு படம் பார்த்துட்டு, அப்டியே முருகன் இட்லிகடையில சாப்பிட்டுட்டு ஊரப் பார்க்க போக முடியும்? ( அடப்பாவி, இன்னும் சாப்பாடு முடியலியான்னு எல்லாம் கேட்க்கப்படாது, நிறைய இருக்கப்பு. ..)

கோனார் மெஸ்ல கறிதோசைய சாப்பிட்டுட்டு ஏதாச்சும் ஒரு படத்துக்கு போயிரனும், அங்க போய் எங்க தலைவர் ஜே.கே.ரித்தீஷ் நடிச்ச படத்துக்குத்தான் போவேன்னு எல்லாம் பச்சபுள்ளயாட்டம் அழுவகூடாது. அவரு நடிச்ச படம் எல்லாம் எப்ப திரையரங்குக்கு வந்துருக்கு?

படம் பார்த்து முடிச்சதும் முருகன் இட்லி கடைக்கு போயிடனும். மேல மாசிவீதியில இருக்கு இந்த கடை. இந்த கடைக்கு நான் ஒன்னும் பெருசா விளம்பரம் தரவேண்டியது இல்ல. ஏற்கனவே சுப்ரமண்யம் சாமிதான் எல்லாத்தையும் செஞ்சு முடிச்சுட்டாரே. இவங்க வைக்கிற இட்லியை விட அதுக்கு வைக்கிற சட்னிதான் விசேஷமே. குறைஞ்சது 4 சட்னி இருக்கும், சாம்பார், இட்லி பொடி, நல்லெண்ணய் எல்லாம் கிடைக்கும். இவங்க கடை சென்னையிலயும், இப்ப சமீபத்துல சிங்கப்பூர்லயும் திறந்துருக்காங்க. சென்னையிலயும், சிங்கப்பூர்லயும் இட்லிபொடி,எண்ணெய்க்கு தனியா காசு வாங்குறாங்க. (சிங்கப்பூர் கடை முஸ்தபா வணிகவளாகத்துக்கு அருகே இருக்கு, வெள்ளி,சனி, ஞாயிறுகிழமைகளில் வரிசையில நின்னு இடம் பிடிக்க வேண்டியிருக்கு).

மதுரை ஒரு தூங்காத நகரம், ராத்திரி எல்லா நேரத்துலயும் சாலையோர கடை எல்லாம் திறந்துருக்கும். இந்த சாலையோர கடைகள் கூட மிக சுவையான உணவு தருவாங்க. அங்கயும் இட்லி, தோசைக்கு வரிசையா பல வண்ணங்கள்ல சட்னி தருவாங்க. பாசக்கார மக்க நிறைஞ்ச ஊரு, ஒரு குறும்போட எல்லாரும் பேசுனாலும் சாப்பாடு வஞ்சனையே இல்லாம போடுவாங்க.

இப்படி ஒரு நாள் உணவுமுறை பயணமாக மதுரைக்கு போகும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியவை.

1) உறவினர்கள், நண்பர்கள் யார் வீட்டுக்கும் போகாதீர்கள், அப்படி போனால் அவர்கள் வீட்டில் உணவருந்தவோ அல்லது சிற்றுண்டி, காபி போன்றவை உட்கொள்ளவோ நேரிடும். இது நமது பயணத்தின் நோக்கத்தை பாதித்துவிடும்.

2) ஒன்று அல்லது இரண்டு நண்பர்களுடன் மட்டும் இப்பயணத்தை அமைத்துக்கொள்வது நல்லது. ரொம்ப கூட்டமாயிட்டா ஆளாளுக்கு ஒரு யோசனை சொல்லி பயணத்தின் நோக்கத்தை கெடுக்க வாய்ப்புகள் இருக்கு.

3) காரில் சென்றால் ஓட்டுநர் ஒருவரை அமர்த்திக்கொள்வது நல்லது. நல்லா சாப்பிட்ட அப்றம் நமக்கு சுகமா தூக்கம்தான் வரும். வண்டி ஓட்டனுமேன்னு குறைச்சு சாப்பிடுறமாதிரி ஆயிடும்.

இப்டி நல்ல ஒரு நாள் முழுக்க மதுரைய சுத்தி சாப்பிட்டுட்டு மறக்காம ஊருக்கு போறப்ப தங்கமணிக்கு மதுரை புகழ் மல்லிகைபூ வாங்கிட்டு போயிடுங்க. கல்யாணமாகத கொடுத்துவைச்சவங்க‌, வீட்ல இருக்க பெண்களுக்கு வாங்கிட்டு போங்கப்பு, அதையும் மறந்துட கூடாது.

ஒருவழியா பதிவுலகக் கடமையை நிறைவேத்தியாச்சு, இனிமேத்தான் அலுவலகத்துல நிம்மதியா தூங்க முடியும்... Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•7:40 PM
தமிழக அரசால் பள்ளிமாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பேருந்துப் பயணச் சலுகை எல்லா இடங்களிலும் எள்ளல்களுக்கு உள்ளாவது உண்டு. அவற்றின் உச்சமாக ஒரு சம்பவம் தஞ்சையில் நடந்துள்ளது.

தஞ்சை மேம்பாலம் அருகே உள்ள செல்வராஜ் உயர்நிலைபள்ளியில் படிக்கும் மாணவியர் சிலர் அரசு பேருந்தில் வந்த போது, அவர்களது பள்ளி இருக்கும் நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார் ஓட்டுநர். மாணவிகள் பேருந்தை நிறுத்தக்கோரி சத்தமிட்டதால் எரிச்சலடைந்த நடத்துநர் அவர்களை ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளியுள்ளார்.

இலவசம் என்றால் இவர்களுக்கு இளக்காரமா? இவர்களின் ஊதியத்தில் இருந்தா அரசு பள்ளி மாணவர்களுக்கு சலுகை அளிக்கின்றது? என்ன கொடுமை இது? ஓடும் பேருந்தில் இருந்து ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவிகளை கீழே தள்ளுகிறார் என்றால் அவருக்கெல்லாம் மனம் என்று ஒன்று இருக்கின்றதா? உண்மையிலேயே நல்ல மனநிலை உடையவர்தானா அந்த நடத்துநர் அல்லது மனநிலை சரியில்லாதவரா?

கீழே விழுந்த குழந்தைகள் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்கள், ஒரு வேளை பலத்த அடிபட்டிருந்தாலோ அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தாலோ இவர்களால் அதை ஈடு செய்ய முடியுமா? ஆனால் இவர்களையெல்லாம் கடுமையாக தண்டிக்க நம்மிடம் சரியான சட்டங்கள் இல்லாததுதான் மிகப்பெரிய கொடுமை.

போக்குவரத்துகழகம் அந்த ஓட்டுநரையும், நடத்துநரையும் இடைக்கால பணிநீக்கம் செய்திருக்கிறதாம். மற்றவர்களுக்கு இது போல் நடக்க கூடாது என்று எச்சரிக்கை செய்திருக்கின்றதாம். என்ன ஒரு கடுமையான தண்டணை கொடுத்துள்ளார்கள் பார்த்தீர்களா?

உடனடியாக அவர்களை கைது செய்து ,குறைந்தபட்சம் கொலை முயற்சி வழக்காவது பதிவு செய்திருக்க வேண்டும், உடனடியாக அவர்களை நிரந்தர பணிநீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்ததாகக்கூட செய்தியில் இல்லை.

நான் எப்போதும் என் நாட்டைப் பிற நாட்டோடு ஒப்பிட்டுவது கிடையாது. நான் இருக்கும் நாட்டில் இருக்கும் வசதிகள் என் நாட்டிலும் சீக்கிரம் வரவேண்டும் என்ற ஆதங்கம்தான் அடைவேன். சிங்கப்பூரில் நடந்த ஒரு சம்பவம் இந்த செய்தியோடு நினைவுக்கு வந்து அந்த ஆதங்கத்தை இன்னும் அதிகமாக்குகின்றது.

ஒரு முறை இங்குள்ள பேருந்தில் இருந்து தனது நிறுத்தத்தில் இறங்கிய ஒரு பெண்மணி, இறங்கும் போது நிலைதடுமாறி பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஒரு தூணில் மோதி தலையில் காயம் ஏற்பட்டுவிட்டது. அவர் நிலை தடுமாறியதற்கோ, அல்லது காயம் அடைந்ததற்கோ அந்த பேருந்தின் ஓட்டுநர் எள்ளளவும் காரணமில்லை. நிறுத்தத்தில் நன்றாக பேருந்தை நிறுத்தி, Hand Brake lock செய்துவிட்டு, பின்னர் தானே இங்கு பேருந்தின் கதவையே திறப்பார்கள், அதனால் ஓடும் பேருந்தில் இருந்து இறங்க வாய்ப்பேயில்லை. ஆனாலும் அந்த ஓட்டுநரின் வேலை உடனடியாக பறிக்கப்பட்டு,வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

அந்த பெண் நிலை தடுமாறியதையோ, காயமடைந்ததையோ, உதவி கேட்டு அவர் கையை ஆட்டியதையோ அவர் கவனிக்காமல் அங்கிருந்து பேருந்தை எடுத்து சென்றுவிட்டார். இதுதான் அவர் செய்த தவறு. பேருந்து ஓட்டுநர் தன் பேருந்தில் இருந்து இறங்கியவர் கீழே விழுந்ததை எப்படி கவனிக்காமல் சென்றார்? அந்தப் பெண் உதவிக்கு ஆள் இல்லாமல் தவித்தாரே என்று இப்படிக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது என நிர்வாகம் விளக்கமளித்தது.

ஆனால் நம்மவர்கள் சர்வ சாதாரணமாக பணியிடை நீக்கம் மட்டும் செய்துள்ளார்கள்.

இலவச சலுகையைப் பயன்படுத்தி பயணம் செய்யும் மாணவர்கள் எல்லா இடங்களிலும் இப்படி இழிவுபடுத்தப்படுவது தொடர்கதையாகத்தான் இருக்கின்றது. இந்த ஓட்டுநர், நடத்துநரின் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் வகையில் தண்டணை இருக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.

நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்றும் கொஞ்சம் சொல்லுங்கள். Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•5:29 PM
தமிழுக்காக பல பதிவுகளை நான் எழுதியிருந்தாலும், நேற்று நடந்த ஒரு வலையுரையாடல் என்னை இப்பதிவை எழுத தூண்டியது.

பலநாட்களாய் வலைப்பூ வைத்துக்கொண்டு ஆங்கிலத்தில் எழுதிவந்தாலும் தற்போது தமிழில் எழுத ஆரம்பித்திருக்கும் என் உயிர் நண்பண் ஒருவன் நேற்று ஒரு பதிவை எழுதிவிட்டு என்னை படிக்க சொன்னான். ஆங்கில வழியில் கல்வி பயின்ற அவன் தமிழில் பல எழுத்துப்பிழைகளுடன் எழுதியிருந்தான். ண, ன ,ர,ற ,ள,ல,ழ வித்தியாசங்கள் சுத்தமாக தெரியாமல் எழுதியிருந்தான். மிக கோபமாகவே கேட்டேன் என்னடா இப்படி தப்புத்தப்பா எழுதியிருக்க, தமிழ் கூடவா தெரியாதுன்னு கேட்டேன்.

ஆனால் என் நண்பணின் வாதம் என்னவென்றால், இது அவர்களது தவறில்லை, நமது கல்வி முறையின் தவறுதான் என்பதே. நம் கல்வி முறை எப்படி மாற்றியமைப்பது என்று யோசிக்க வேண்டும் என்று சொல்கிறான் அவன்.

இதில் நம் கல்வி முறையின் தவறு என்னவென்று எனக்கு தெரியவில்லை. கட்டாயம் ஆங்கிலத்தில்தான் மாணவர்கள் பேச வேண்டும் என சில பள்ளிகளில் விதிமுறை விதிப்பது குறித்தெல்லாம் பேச்சு வந்தது. தமிழ் நம் தாய்மொழி, ஆங்கிலம் ஒரு அந்நிய மொழி, இன்று வேலை வாய்ப்பை பெற ஆங்கில அறிவு மிக அதிகமாக தேவை என்பதால் ஆங்கில அறிவு அத்யாவசியமான ஒன்று. எனவே ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள, அதில் சரளமாக பேசவும், எழுதவும் பள்ளிகளில் பயிற்சி அளிக்கத்தான் வேண்டும். அதில் தவறே இல்லை. ஆனால் உங்கள் வீடுகளிலும், பள்ளிக்கு வெளியிலும் உங்களை அவ்வாறே பேசச் சொன்னது யார்?

இப்படித்தான் கடந்த மே மாதம் நான் ஊருக்கு சென்றிருந்த போது என் சகோதரியின் மகன், ஆங்கிலவழிக் கல்வியில் ஆறம் வகுப்பு முடித்திருந்தவனுக்கு தமிழை சரளமாக வாசிக்கவும், எழுதவும் தெரியவில்லை. மிக சாதாரணமாய் இல்லை மாமா,எனக்கு தமிழ் எல்லாம் படிக்கத்தெரியாதுனு சொன்னாரு என் அருமை மாப்பிள்ளை. எனக்கு கடுமையான சினம் வந்தது, அதே நேரம் இதை எப்படி சரிசெய்வது என்று சிந்தித்தேன், பள்ளிக்கல்வி வேண்டுமாணால் அவர்களுக்கு தமிழ் அறிவை அளிக்க தவறி இருக்கலாம். பிள்ளைகளும் அதையே பின்பற்றிக்கொண்டு செல்லலாம், ஆனால் நமக்கு எங்கே போனது புத்தி? என் புள்ளைக்கு தமிழ் படிக்ககூட தெரியாதுன்னு சொல்றதுல தானே நமக்கு பெருமை? பின்ன எங்க நமக்கு தாய்மொழி மேல அக்கறை வரப்போவுது?

கடைசியா என் மாப்பிள்ளைக்கு நான் சொன்ன தீர்வு, தமிழ் செய்திதாள்களை வாங்கி படிக்க சொன்னேன், தினமும் சத்தமாக படிக்க சொன்னேன், இப்போ மாப்பிள்ளை ஒழுங்கா தமிழ் படிக்கிறாரு. நான் இதை சுட்டிக்காட்டிய பின்னர்தான் என் சகோதரியும் இதை உணர்ந்தார். இனி கட்டாயம் என் சகோதரி தன் மகன் தமிழை மறக்க விடாமல் செய்வார். இதுதான் ஒவ்வொரு பெற்றோரும் செய்ய வேண்டியது.

பிள்ளைகள் ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளை கட்டாயம் கற்கவேண்டும். முடிந்தால் ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பான் மொழிகளையும் கற்றுக்கொள்ள சொல்லுங்கள். பிற மொழிகளை எத்தனை முடியுமோ அத்தனை கற்க சொல்லுங்கள். ஆனால் அதே நேரம் தாய் மொழியை மறக்காமல் இருக்க செய்யுங்கள். பள்ளிகளில் அவர்கள் வேற்று மொழியை கற்கட்டும். வீட்டில் தாய் மொழியை பழக்குங்கள்.

நம் மூத்த பதிவர் டோண்டு ராகவன் அய்யா கூட பிரெஞ்ச், ஜெர்மன் போன்ற மொழிகளை கற்றறிந்து, மொழிபெயர்பாளராக பணியாற்றிக்கொண்டுதானே இருக்கின்றார். இத்தனை மொழிகளையும் கற்றதால் அவர் தமிழை பிழையாகவா எழுதுகின்றார்? இல்லை எனக்கு தமிழே தெரியாது என்று சொல்கிறாரா என்ன ? நேற்று என்னோடு உரையாடிய நண்பண் சொன்னது, தற்போது எல்லாவற்றையுமே என்னால் ஆங்கிலத்தில்தான் சிந்திக்கவே முடிகின்றது என்று சொன்னதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சிந்திக்கக் கூட அந்நிய மொழிதான் என்ற அளவுக்கு தாய்மொழியை கண்டுகொள்ளாமல் விட்டது யார் தவறு?

சிங்கப்பூரில் தமிழ் மொழி ஒரு தேசிய மொழி, இங்கு எல்லா இடங்களிலும் தமிழ் மொழி உண்டு. ஆனால் இங்கு இருக்கும் எனது உறவினர் ஒருவரின் குழந்தைக்கு தமிழே தெரியாது. இந்தியாவில் இருக்கும் உறவினர்கள் கூட அவர்கள் இந்தியா வரும்போது அந்த குழந்தையுடன் ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். சிங்கப்பூரிலேயே இந்த நிலை என்றால் தமிழ் என்றால் என்னவென்றே தெரியாத நாட்டில் இருப்பவர்கள் நிலை ?

இந்த‌ விச‌ய‌த்தில் ந‌ம‌து ஈழ‌த்து ச‌கோத‌ர‌ர்க‌ள் ந‌ம்மைவிட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள். கால‌ சூழ்நிலையில் அவ‌ர்க‌ள் ப‌ல்வேறு நாடுக‌ளுக்கு புல‌ம்பெய‌ர்ந்தாலும், இளைய‌ த‌லைமுறையின‌ர் இன்னும் த‌மிழை விட்டுவிட‌வில்லை. நேற்றுகூட‌ ஆஸ்திரேலியாவுல‌ உள்ள‌ ஈழ‌த‌மிழ் ச‌கோத‌ரி ஒருவ‌ட‌ன் வ‌லை மூல‌ம் பேசிய‌போது, அந்த‌ ச‌கோத‌ரி முத‌லில் ஆங்கில‌த்தில் பேசினாலும், சுதாரித்துக்கொண்டு உட‌னே த‌மிழில் பேச‌ ஆர‌ம்பித்தார். இனிய‌ த‌மிழில்தான் எங்க‌ள் உரையாட‌ல் சென்ற‌து.

ஆஸ்திரேலியாவில் தமிழை ஒரு பாடமாக படிக்காத போதும், தனது சொந்த முயற்சியால் தமிழைக் கற்று, வலையுலகில் எனக்கு முன்னரே தொடங்கி பல பதிவுகளை அழகுத் தமிழில் வெளியிட்ட என் அன்பு சகோதரி தூயாவிற்கு இந்த பதிவு சமர்பணம். இப்படி உள்ளவர்கள் இருக்கும் வரை என் இனிய தாய்மொழி காப்பாற்றப்படும்.

இஸ்ரேல் என்ற நாடு உருவாவதற்கு முன்னர் பல்வேறு நாடுகளில் சிதறிக்கிடந்த யூத இனம், தங்களது மொழியை விட்டுக்கொடுக்காமல் காப்பாற்றியதால்தான் இன்று அவர்கள் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி மிக நன்றாக முன்னேறியுள்ளார்கள்.

வெறும் அந்நியமொழியால் மட்டும் நமக்கு முன்னேற்றம் கிட்டாது என்பதற்கு ஜப்பானையும், சீனாவையும் மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டாக கூறத்தேவையிருக்காது.

செம்மொழியாகிவிட்டால் போதாது, அது நம்மொழியாய் இருக்க வேண்டும். தயவுசெய்து தாய்மொழியே வீட்டில் நம் மொழியாய் இருக்கட்டும்.

வீட்டிலும் நாம் நம் மொழியை மறந்துவிட்டால், மெல்ல தமிழ் இனி சாகும்... Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•12:19 AM
என் அன்பு அண்ணண் புதுகை அப்துல்லா அவர்கள் கடந்த வாரம் ஞாயிறு அன்று ஒரு சிறு விபத்தை சந்தித்து, தற்போது உடல்நலம் பெற்று மீண்டும் தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பி விட்டார் என்பது தமிழ்மணம் கூறும் நல்லுலகில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அண்ணண் ஓய்வில் இருந்த போது, அண்ணணின் மேல் உள்ள பாசத்தால் எனக்கு ஜே.கே.ரித்தீஷை பிடிக்காது என்றாலும் கூட ஜே.கே.ரித்தீஷை வம்பிழுத்து எழுதப்பட்ட பதிவில் அண்ணண் சார்பாக எனது கடும் கண்டணங்களை தெரிவித்திருந்தேன்.
ஓய்வில் இருந்து திரும்பிய அப்துல்லா அண்ணண், அவர் வெளியிட்ட பதிவில் எனக்கு நன்றி கூறி இருதார். சகோதரர்களுக்குள் நன்றி என்பதே அதிகம். அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை,சங்கத்தின் சார்பாக அடுத்தமுறை நான் இந்தியா செல்லும் போது ஜே.கே.ரித்தீஷ் உடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தப் போவதாக வேறு மிரட்டினார்.

என் நிலை கைமீறி போவதை உணர்ந்த நான் நமீதாவை தவிர வேறு யாருக்கும் ரசிகராக இருக்கப்போவதில்லை என்ற எனது உறுதியான கொள்கையை சற்றே தளர்த்தி, அண்ணண் மேல் உள்ள பயம் கலந்த பாசத்தால் ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றத்தில் இணைந்துவிடுவதாக பின்னூட்டமிட்டிருந்தேன்.

ஜோசப் பால்ராஜ் said...
மீண்டும் வலையுலகை கலக்க வரும் அண்ணண் அப்துல்லாவை பிரபஞ்ச நட்சத்திரம் ஜே.கே.ரித்திஷ் பேரவை சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்.

இந்த அப்துல்லா அண்ணண் கூட பழகுன தோசம் நானும் ஜோ.கே.ஆர் பேரவையில இணைஞ்சுட்டேன். இதுவரைக்கும் நானும் என் சிங்கை நண்பர் வாசிமும் சேர்ந்து நடத்திய NDF - SG (Nameetha Development Force - Singapore தவிர வேறெதிலும் ஈடுபாடு காட்டாது இருந்த என்னை , பிரபஞ்ச நட்சத்திரத்த்தின் பேரவைக்கு கொண்டு சென்ற பெருமை என் அருமை அண்ணணையே சாரும்.

அண்ணண் விரைவில் குணமடைந்த வந்தமைக்கு, எங்கும் நிறைந்தவனும், எல்லோர்கும் பொதுவானவனுமான இறைவனுக்கு நன்றிகள்.

இந்த பின்னூட்டத்தை படித்துவிட்டு அதற்கு கீழே உள்ள பதிலை அண்ணண் அப்துல்லா எழுதியிருந்தார்.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
வாங்க ஜோசப் அண்ணே!
//
மீண்டும் வலையுலகை கலக்க வரும் அண்ணண் அப்துல்லாவை பிரபஞ்ச நட்சத்திரம் ஜே.கே.ரித்திஷ் பேரவை சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்.
//

தலையே வரவேற்ற சந்தோஷம் எனக்கு இப்போ :)


//இந்த அப்துல்லா அண்ணண் கூட பழகுன தோசம் நானும் ஜோ.கே.ஆர் பேரவையில இணைஞ்சுட்டேன்.
இதுவரைக்கும் நானும் என் சிங்கை நண்பர் வாசிமும் சேர்ந்து நடத்திய NDF - SG (Nameetha Development Force - Singapore தவிர வேறெதிலும் ஈடுபாடு காட்டாது இருந்த என்னை , பிரபஞ்ச நட்சத்திரத்த்தின் பேரவைக்கு கொண்டு சென்ற பெருமை என் அருமை அண்ணணையே சாரும்.
//


ஜொசப் அண்ணே நான் மிகவும் சீரியசாகவே சொல்கிறேன். எங்களுக்கெல்லாம் உங்களைப் போல ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதைப்பற்றிய தகவல்களை முழுமையாகத் திரட்டி சுயமாக மேலும் சிந்தித்து தெளிவாக எழுதுகின்ற அந்தக் கலை தெரியாது. உங்களுக்கு அந்த வரம் இயல்பாகவே வாய்த்துள்ளது. நாங்கள் எழுத வேண்டுமே என்ற மன உந்துதலின் காரணமாகவும் அதே நேரத்தில் என்ன,எப்படி எழுதுவது என்பதை அறியாததாலும் ரித்தீஷ் அவர்களை வாரியோ அல்லது போற்றியோ அப்போதைய சூல்நிலைக்கு கிறுக்கி வைக்கிறோம். நீங்கள் எங்களுக்கெல்லாம் சகோதரராக மட்டும் இருங்கள்.தயவு செய்து எங்களோடு சேர்ந்து கெட்டுப் போய்விடாதீர்கள்.நான் அறிந்தவரை உங்க பதிவிற்கென்று ஓரு தீவிர வாசகர் வட்டம் உள்ளது. உங்களைக் கெடுத்த பாவம் எனக்கோ,ச்சின்னப் பையனுக்கோ,வழிப்போக்கனுக்கோ,பரிசலுக்கோ,தமிராவுக்கோ,வெண்பூவுக்கோ வேண்டாம். எப்பவும் போல சீரியசான பதிவாவே எழுதி கலக்குங்க!

இவ‌ரு என்ன‌ திட்டுறாரா இல்ல‌ உண்மையிலேயே புக‌ழ்றாரானு என‌க்கு புரிய‌லை. என‌க்குனு ஒரு தீவிர‌ வாச‌க‌ர் வ‌ட்ட‌ம் உள்ள‌துன்னு எல்லாம் சொல்லி ஏத்திவிடுறாரு.

இன்னும் ந‌ம்ப‌ள‌ இந்த‌ ஊரு ந‌ம்பிகிட்டு இருக்கு , ஆன‌ இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உட‌ம்ப‌ ர‌ண‌க‌ள‌மாக்கிடுறாங்க‌ளே....


எனதருமை வலையுலக சொந்தங்களே, உண்மை என்னானு கொஞ்சம் பின்னூட்டத்துல சொல்லுங்க. Udanz
Links to this post
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க