Author: ஜோசப் பால்ராஜ்
•9:59 PM
இந்தத் தொடர் விளையாட்டில் என்னையும் அழைத்த அண்ணண் நர்சிம் அவர்களுக்கு என் அன்பான நன்றிகள்.

ஆறு, குளம், குட்டை, வாய்கால் என எல்லாப் பெயர்களையும் எனக்கு முன்னரே தம் வரலாறு கூறிய பெருமக்கள் எடுத்தாண்டுவிட்டமையாலும், அந்தப் பெயர்களை உபயோகிக்குமளவுக்கு நான் பெரியவன் இல்லையென்பதாலும் சிறுதுளி என்று தலைப்பிட்டுள்ளேன். ( தலைப்புக்கு விளக்கம் குடுக்கனும்ல?)

2006ல் சிங்கை வந்த போது தான் எனக்கு கூகுள் நிறுவனம் அளிக்கும் வலை சேவையே தெரியவந்தது. உடனே நிறைய எழுதனும்னு முடிவெடுத்து ஒரு வலைப்பூ துவங்கினேன். எனக்கு தெரிஞ்ச ஓட்டை ஆங்கிலத்தில எழுதுனேன். சிங்கையில் வேலையில் சேர்ந்ததும் மெயில் அனுப்ப கூட நேரமில்லாம போனதால தொடர்ந்து எழுத முடியல. நல்ல வேளை இப்ப அந்த வலைப்பூ முகவரி கூட எனக்கு தெரியாது. ( எல்லாரும் தப்பிச்சுட்டிங்க) .

2007ல தமிழ் தட்டச்சுக்கு ஈ-கலப்பை அப்டின்னு ஒரு மென்பொருள் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு அத வைச்சு ஆரம்பிச்சதுதான் இப்ப இருக்க இந்த வலைப்பூ. 2007ல ஆரம்பிச்சு ரொம்ப பொறுப்பா 5 பதிவு எழுதுனாலும் அப்ப எனக்கு தமிழ்மணம் போன்ற திரட்டிகளப் பத்தி தெரியாது. அதுனால மறுபடியும் ஒரு இடைவெளி விட்டாச்சு.

2008ல ஆனந்த விகடன்ல வரவேற்பரையில் ஆசிப் அண்ணாச்சியோட வலை குறித்து எழுதியிருந்தது பார்த்து, அவரோட வலைப்பூவுக்கு போயி அவரோட பதிவுகளப் படிச்சேன். அவரு பதிவுல பல இடங்கள்ல தமிழ்மணம் அப்டிங்கிற பெயர் இருந்துச்சு. அது என்னத் தமிழ்மணம் அப்டின்னு பார்க்க போயி , அப்டியே புடிச்சு வந்துட்டேன் உள்ளற. ( ஒரு வழியா நாமளும் ரவுடி தான்னு ஜீப்ல ஏறியாச்சு)

அந்த காலகட்டத்தில சிங்கையில் நடந்த பதிவர் சந்திப்புக் குறித்து கோவியார் எழுதியிருந்தார். அதப் பார்த்துட்டு ரொம்ப மகிழ்சியாயிருச்சு. தனிமையில போரடிச்சுக் கிடக்கோமே, நமக்கு இங்க ஒரு கூட்டம் இருக்குடான்னு முடிவு பண்ணிட்டு ஒட்டகம் கூடாரதுக்குள்ள நுழைஞ்ச மாதிரி கூட்டத்துல இணைஞ்சுட்டேன். ( இப்ப கூடாரத்துல நடுவுல இருக்கோம்னு நான் சொல்லித் தான் தெரியனுமா என்ன? )

இங்க ஒரு முக்கியமான விசயத்த சொல்லனும். சிங்கையில எந்தப் புதிய பதிவர் எழுத ஆரம்பிச்சாலும், அவங்கள தொடர்பு கொண்டு, ஊக்கப்படுத்தி, சந்திச்சு, அவங்களையும் அடுத்த பதிவர் சந்திப்புக்கு கூட்டிவந்து எல்லோருடனும் இணைத்து மகிழச் செய்யும் சீரியப் பணியை கோவி.கண்ணண் மிகச் சிறப்பா செஞ்சுகிட்டு இருக்கார். சந்திப்புகளுக்கெல்லாம் செல்லும் முன்னரே ஒரு முறை நான் அவரோட தொலை பேசியில் உரையாடினேன். அடுத்த வார இறுதியிலேயே என் இல்லம் வந்து சந்தித்து சென்றார். சிங்கைப் பதிவர்களப் பத்தி சொல்லனும்னா அதையே ஒரு தொடரா எழுதணும். இங்க இருக்கது பதிவர் குழுமம் இல்ல, இது பதிவர் குடும்பம். (இதுக்கு மேல என்னத்த சொல்ல? )

பெருசா ஒன்னும் எழுதி கிழிக்கலைன்னாலும், பதிவுலகத்துக்கு வந்தமையால் பல அன்பு உள்ளங்களின் நட்பு கிடைத்தது நான் அடைந்த பெறும் பேறு. என் கூட முதுகலையில் ஒன்றாகப் படித்தவரும், தற்போதைய பிரபலப் பதிவருமாகிய குசும்பன் அவர்களைக் கூட மீண்டும் தொடர்பு கொள்ள உதவியது பதிவுகள் தான்.
சுருக்கமா சொல்லனும்னா, நமக்கு உலகம் பூர சொந்தக் காரங்க இருக்காங்கன்னு சொல்லிக்க வைச்சுருக்கு இந்தப் பதிவுலகம்.

தொடர்ந்து எழுதாமலேயே பதிவர்னு சொல்லிக்கிட்டு திரியிறேன். பார்ப்போம், இந்த சிறு துளி பல துளிகளா பல்கிப் பெருகுதா, இல்ல அப்டியே ஒரு துளியாவே நிக்குதான்னு.

இந்த தொடர் விளையாட்டுக்கு நான் அழைக்கும் சொந்தங்கள்


Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•8:41 PM
ரொம்ப நாளவே இந்த விளையாட்டு நடந்துக்கிட்டேத்தான் இருக்கு. ஆனா நம்மல யாரும் கூப்பிடல. ஏன் என்னைய யாரும் கூப்பிடலன்னு ஒரு சிலர கேட்டேன். ஒருத்தரு சொன்னாரு நீங்கள்லாம் பெரிய ஆளு, உங்களையெல்லாம் முன்னாடியே வேற யாராச்சும் கூப்பிட்டுருப்பாங்கன்னு நினைச்சுத்தான் கூப்புடாம விட்டுட்டோம்னாங்க. ஆகா, இந்த உலகம் இன்னமும் நம்மல நம்புதேன்னு விட்டுட்டேன். ஒருவழியா நம்மளையும் ரெண்டு பேரு கூப்புட்டுட்டாங்க. களத்துல இறங்கிட்டேன்.

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

அ.ஜோசப் பெனடிக்ட் பால்ராஜ் இதுதான் என்னோட முழுப் பெயர். ஜோசப் என்பது எங்கள் குடும்பத்துல எங்க தலைமுறையில இருந்து எல்லாருக்கு வைச்சுருக்க பொது பெயர், வீட்ல மொத்தம் 8 ஜோசப் இருக்கோம்.

கிறிஸ்தவர்களில் புனிதர்கள் என்று ஒரு சிலர் இருப்பார்கள்.அவர்களது பிறந்த தினங்களை அவர்களது Feast என கொண்டாடுவது வழக்கம், நான் பிறந்த ஜூலை 11 ஆம் நாள் புனித பெனடிக்ட் அவர்களின் Feast. இதனால் என் பெயருடன் பெனடிக்ட் சேர்ந்து கொண்டது.

நான் பிறந்த வருடம் தான் முந்தைய போப் 2 ஆம் ஜான் பால் அவர்கள் போப் ஆக தேர்வு செய்யப்பட்டார். எனவே பால் என்பதும் என் பெயரில் சேர்ந்துவிட்டது. ஜோசப் பெனடிக்ட் பால் அப்டின்னு இருந்தா நல்லாருக்காதுன்னு ராஜ் அப்டிங்கிற பெயர் எச்ச விகுதிய சேர்த்து முழுப் பெயரையும் உருவாக்கிட்டாங்க.

இவ்ளோ நீளமான பெயரா இருக்கதால விண்ணப்ப படிவங்கள்ல எல்லாம் எழுத சிரமப்பட்டாலும், எல்லாத்துக்கும் பொருத்தமான விளக்கமிருப்பதால் என் பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

30.4.2009 நள்ளிரவுல இருந்து இன்று வரை , தினமும் என் தந்தையின் மறைவை நினைத்து நினைத்து அழுது கொண்டிருக்கிறேன் .

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும். காரணம் என்னான்னா வேற யாருக்கும் என் கையெழுத்து புடிக்காது. புரியிற மாதிரி எழுதுனாத்தானே புடிக்கிறதுக்கு.

4).பிடித்த மதிய உணவு என்ன?

நான் ஆச்சாரமான அசைவ குடும்பத்துல பொறந்தவன். கொஞ்சமாச்சும் அசைவம் இருந்தா நல்லாருக்கும். ரொம்ப புடிச்சது ஆட்டிறைச்சி, ஆனா சிங்கப்பூர்ல கிடைக்கிறது ஆஸ்த்ரேலியால இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆட்டிறைச்சி, அது அவ்ளோ நல்லா இருக்காது. அதுனால அதிகமா சாப்புடுறதில்ல. கோழி, மீன் இதெல்லாம் ரொம்ப புடிக்கும்.
தயிர் சாதம் ரொம்ப புடிக்கும்.

இதே காலை உணவுன்னு கேட்ருந்தா என்னோட பதில் மொதல் நாள் வடிச்ச சோறுல தண்ணி ஊத்தி அடுத்த நாள் காலையில அதுல தயிர் ஊத்தி, சின்ன வெங்காயம் வெட்டிப் போட்டு , சுண்ட வைச்ச பழைய குழம்போட , மோர் மிளகா வத்தல் வறுவல் வைச்சுக்கிட்டு, வயகாட்டு வரப்புல தண்ணி ஓடிக்கிட்டு இருக்க வாய்கல்ல கால வைச்சுக்கிட்டு உக்காந்து சாப்புடுறதத் தான் சொல்லுவேன். இந்த உலகத்துல எங்க போய் என்ன சாப்புட்டாலும் இதுக்கு ஈடா ஒன்னு வராது. அனுபவிச்சவங்களுக்குத்தான் அதோட அருமை தெரியும்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

எல்லாருகிட்டயும் உடனே நல்லா பேசிருவேன், ஆனா எதிராளி எப்டி பழகுறாங்கன்னு பார்த்துக்கிட்டுத்தான் அவங்களோட நட்பா இல்லையான்னு முடிவு செய்வேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவி, கடல் , பாத்ரூம் என எங்கயா இருந்தாலும் குளிக்க புடிக்கும். ரொம்ப புடிச்சது எங்க ஊர்ல ஆத்துல எதிர் நீச்சல் போட்டு குளிக்கிறது தான்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

இதத்தான் பார்கணும், இதத் தான் பார்ப்பேன்னு இதுவரைக்கும் எந்த வரைமுறையும் வைச்சுக்கிட்டதில்ல. பெரும்பாலும் கண்களப் பார்த்து பேசுவது உண்டு.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்தது : தெரியலை, எனக்கு என்னைய ரொம்ப புடிக்கும், எத சொல்றதுன்னு தெரியல.
பிடிக்காதது: சோம்பேறித்தனம், எல்லாரையும் நல்லவங்கன்னு நம்பி ஏமாறுறது, ஏமாத்துறான்னு தெரிஞ்சும் சிலருக்கு உதவி இ.வான்னு பேர் எடுக்கிறது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

தெரியலைன்னு சொல்றது சரியா இருக்கும். இந்த கேள்விய நான் சாய்ஸ்ல விடுறேன்.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

என்னைய வளர்த்த என் வாத்தியார் தாத்தா நான் நல்லபடியா வேலையில இருக்கத பார்க்க கூட இல்லையேன்னு வருத்தம் இருக்கு & அப்பா....

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வீட்டில் இருப்பதால் வெண்நிற அரை கால்சட்டையும், சாம்பல் நிற பனியனும்.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

என் மடிக்கணிணியின் திரையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ( திரையப் பார்க்காம என்னால தட்டச்சு செய்ய முடியாதுங்க)
அண்ணண் மகள் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நான் இப்டியே இருந்துட்டுப் போயிடுறேனுங்க, எதுக்கு என்னைய போயி பேனாவா மாத்துறீங்க, அப்டியெல்லாம் மாத்துனா எழுதுறவங்க கட்டுப்பாட்ட மீறி நானு எழுதிக்கிட்டேயிருப்பேனாக்கும். சரி மாத்துறதுனா சிவப்பு நிற பேனாவா மாத்துங்க.

14.பிடித்த மணம்?

மழை பெய்ய ஆரம்பிக்கும் போது வரும் மண் வாசனை, நெற்பயிர் கதிர்விடும் போது வயல்வெளியெங்கும் உள்ள வாசனை, சேற்று உழவு செய்யும் போது வரும் மணம், கடலைய சட்டியில போட்டு தீயாம வறுக்கும் போது வரும் வாசம் , இப்டி சொல்லிக்கிட்டே போகலாம், அது ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

திவ்யா - சிறந்த கதாசிரியர் , அருமையான நண்பர்
சென் - என் வகுப்புத் தோழன், ஆருயிர் நண்பண்
ஜெகதீசன் - சிங்கை பதிவர், அன்புத் தோழர்

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?


லதானந்த் மாமா அவர்களின் அனைத்துப் பதிவுகளிலும் உள்ள நகைச்சுவையும்,கொங்கு தமிழும் , துறைசார்ந்த பதிவுகளில் பல நல்ல விசயங்களை எல்லோருக்கும் புரியும் படி எளிமையாக சொல்லுதலும்.

ரெங்காவின் கவிதைகளும், பட்டாம்பூச்சி சொல்லித்தந்ததும்

17. பிடித்த விளையாட்டு?

இறகு பந்து, கூடைப் பந்து, கால்பந்து, டென்னிஸ், கிரிக்கெட்( ஓரளவுக்கு)

நீச்சல் ( இதையும் விளையாட்டுல சேர்கலாம்ல??)

18.கண்ணாடி அணிபவரா?

அது ஆச்சு 10 வருசம். பொட்டித் தட்டுற வேலையில இருக்கதுனால கண்ணாடி அணிய வேண்டியது மிக அவசியமாயிருச்சு.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

நகைசுவையானப் படங்கள் குறிப்பாக கமல் நடித்த நகைச்சுவைப் படங்கள் ( வசூல் ராஜா, பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்மந்தம், நள தமயந்தி போன்றவை)

மனசுக்கு கஷ்டம் தராத சுபமான முடிவுகள் கொண்ட படங்கள் புடிக்கும்

20.கடைசியாகப் பார்த்த படம்?

அயன் படம் திரையரங்கில் பாதி பார்த்துக்கிட்டு இருக்கப்ப தான் அப்பா இறந்த செய்தி வந்தது
கடைசியா முழுசாப் பார்த்த தமிழ் படம் : ஜெயங்கொண்டான்

அப்பறம் இடையில வாண்டட் அப்டின்னு ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன், வளைச்சு வ்ளைச்சு சுடுறது, ஒரு குண்ட வளைச்சு அடிச்சா வட்டமா நிக்கிற எல்லாரையும் ஒரே குண்டு கொன்னுட்டு , சுட்டவங்களையும் சாய்க்கிது. இந்தமாதிரி படம் எல்லாம் MLA விசயகாந்த இல்லன்னா MP தானை தலைவன், அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் தவிர வேறு யாராலும் தமிழில் எடுக்க இயலாது.

21.பிடித்த பருவ காலம் எது?

எல்லாக் காலமும் பிடிக்கும். இதுல எல்லாம் எந்த சிறப்பு விருப்பமும் இல்லீங்க.

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

மதன் எழுதிய கி.மு கி.பி

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

இரு அண்ணண்களின் பிள்ளைகளையும் நான் வைத்திருக்கும் படம் தான் என் கணிணியில் இருக்கும் , அதை மாற்றுவதில்லை. இரண்டு பேரும் மறுபடியும் ஒன்னா பார்குறப்ப புதுசா படமெடுத்த பின்னாடிதான் மாத்தனும்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது : குழந்தைங்க பேச்சுல ஆரம்பிச்சு நிறையா இருக்கு
பிடிக்காதது: தேவையில்லாத கோபத்தின் போது வந்து விழும் எந்த வார்த்தைகளின் ஓசையும்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

Air Distance - 2881.5 KM ( தஞ்சாவூர் - சிங்கப்பூர்).

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

நிதி மேலாண்மை & ஆலோசனையளித்தல்
ஒருங்கிணைத்தல்
மனச் சோர்வுள்ளவர்களுக்கு கவுன்சிலிங் செய்வது

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
கடவுள் பார்த்துக்குவாரு விடுன்னு சொல்றத என்னால ஏத்துக்கவே முடியாது.
கடவுள் மேலயே எல்லாத்துக்கும் பாரத்த போட கூடாது. நாம செய்யவேண்டியத நாம தான் செய்யனும்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

பொசுக்கென்று வரும் கோபம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மலைப் பிரதேசங்கள் எதுவாயிருப்பினும் பிடிக்கும்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

முடிஞ்சளவு உழைக்கணும், உழைப்புக்கேற்ற வளர்சி இருக்கனும், என் மறைவிற்கு பிறர் வருந்தும் அளவுக்கு சிறப்பா வாழணும்.

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

தெரியல, இதையும் சாய்ஸ்ல விடுறேன்.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

"Nothing is Impossible, Nothing Is Difficult, Everything is a challenge" Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•8:54 PM
இந்த சினிமா தொடர் விளையாட்டு எல்லாரும் எழுதித் தள்ளிக்கிட்டு இருக்காங்க. அதுலபாருங்க எனக்கு ரெண்டு பேரு கொக்கிய போட்டுருக்காங்க.
இள‌ங்க‌லை அறிவிய‌ல் ப‌டிக்கிற‌ப்ப‌ என் கூட‌வே ஒன்னா கல்லூரிக்கு க‌ட் அடிச்சுட்டு ப‌ட‌த்துக்கு எல்லாம் வ‌ந்த‌ செந்தில் ஒருத்த‌ரு. முதுக‌லைப் ப‌டிப்புல‌ (இங்க‌ க‌ட் அடிக்க‌லாம் இல்ல‌) என் கூட‌ ப‌டிச்ச‌ குசும்ப‌ன் ஒருத்த‌ரு. ஏதோ என‌க்குத் தெரிஞ்ச‌த‌ சொல்லிடுறேன்பா.
நெம்ப யோசிச்சு பதில் எழுதிக்கிட்டு இருக்கேன்.

1) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எங்க கிராமத்துல சினிமா தியேட்டர் எல்லா இல்லாததுனால சின்ன வயசுல நான் நிறைய படம் எல்லாம் பார்த்தது இல்ல. நினைவில் இருக்கும் முதல் படம் பயணங்கள் முடிவதில்லை. அதற்கு அடுத்து நன்கு நினைவில் உள்ளப் படம் பூவே பூச்சூடவா. அப்போ எல்லாம் சினிமால நமக்கு புடிச்சது சண்டைகள் தான். என்னா உண‌ர்ந்தேன்னு எல்லாம் தெரிய‌ல‌. த‌ஞ்சாவூர்ல‌ ப‌ட‌ம் பார்த்துட்டு மார‌னேரில‌ போயி ப‌ச‌ங்க‌ளுக்கு எல்லாம் க‌தை சொல்லுவோம். அதுதான் நினைப்பு இருக்கு.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

"த‌சாவ‌த‌ராம்" சிங்கை வ‌ந்த‌துக்கு அப்ற‌ம் அடிக்க‌டி திரை அர‌ங்குக்கு போயி ப‌ட‌ம் பார்க்க‌ முடிவ‌தில்லை. வேட்டையாடு விளையாடு, சிவாஜி, த‌சாவ‌த‌ராம் இந்த‌ 3 ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டுமே நான் சிங்கையில் திரை அரங்கில் பார்த்த‌ப் ப‌ட‌ங்க‌ள்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

போன வாரம் பார்த்த ஜெயம் கொண்டாண். வீட்டில் டிவிடியில் பார்த்தது ( ஒரிஜினல் தானுங்க). படம் எனக்கு புடிச்சிருந்தது. லேகா நடிப்பு நல்லா இருந்துச்சு. ஆனா கடைசியில அந்த சண்டை தான் வெறுப்பேத்துனது. அம்புட்டு அடியையும் சத்தம் போடாம வாங்குற அந்த கதாநாயகரு, தன் தங்கச்சி மேல ஒரு அடி விழுந்ததும் என்னமா துடிச்சு , வில்லன அடிச்சு தள்ளுறாரு. இத எத்தனப் படத்துலத்தான் பார்குறது?

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

"நந்தா", தன் அப்பா , அம்மாவ அடிக்கிறப்ப தன் அம்மா மேல உள்ள பாசத்துலத்தான் அப்பாவ புடிச்சுத் தள்ளுவான் அந்த சிறுவன் நந்தா. அது கொலையாகி தண்டணைய அனுபவிப்பான். ஆனாலும் அந்த அம்மா சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில அவன் யாரோ ஒரு பையன் கூட சண்டப் போடுறத பார்த்துட்டு இவன் சண்டக்காரன்னு ஒதுக்குறது என்ன ரொம்ப பாதிச்சுது.

5.அ உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

மக்களோட முக்கியமான பிரச்சனைகளுக்கு போராடுறோம்னு கிளம்பிட்டு அதுல நம்ம சினிமாகாரங்க செய்யிற அரசியல்தான் கோவத்தை கிளப்பும். உதாரணமா சில ஆண்டுகளுக்கு முன்னால் நெய்வேலியில் நடத்திய போராட்டம், இப்போ ராமேஸ்வரத்தில் நடத்திய போராட்டம் போன்றவை. இதுல கூடவா ஒற்றுமைய காட்ட முடியாது இவங்களால? அவர்களது போராட்டங்கள் பிரச்சனைகளை கொச்சைப்படுத்தும் விதமாய் அமைந்துவிடக்கூடாது என்பதே என் ஆசை. இவர்கள் ஒருவர் மீது ஒருவர் புழுதி வாரி இறைக்கும் போது எதற்காக போராடினார்களோ அந்த பிரச்சனையிலிருந்து அனைவரின் கவனமும் இவர்களது சண்டைகளுக்கு திசைதிருப்பப் படுகின்றது. இப்போதும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாய் போராட்டம் நடத்திவிட்டு பாரதிராஜா விசயகாந்தை திட்டியது தான் தற்போதைய ஜீனியர் விகடனில் முக்கிய செய்தியாக வந்துள்ளது. பத்திரிக்கைகளும் இந்த குழாயடி சண்டைகளுக்குத் தான் முக்கியத்துவம் தருகின்றன.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

இந்த தொழில் நுட்பம் குறித்த பார்வையெல்லாம் எனக்கு கிடையாதுங்க. ஆன இன்னும் ஆச்சரியப்படுற விசயம் தவசி படத்துல மகன் வயசு விசயகாந்த், அப்பா விசயகாந்த் ரெண்டு பேரையும் வித்தியாசப்படுத்த உபயோகிச்ச தொழில்நுட்பம் இருக்கே,அது தானுங்க ரொம்ப ஆச்சரியப்படுத்துச்சு.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

தேடிப்போய் படிப்பதில்லை, நேரம் கிடைக்கும் போது படிப்பதுண்டு.

7.தமிழ்ச்சினிமா இசை?

இளைய ராஜா, யுவன் சங்கர் ராஜா.

முன்பெல்லாம் வேலை செய்யும் போதும் இசை கேட்டுக்கொண்டே வேலை செய்வதுண்டு, தற்போது இசை கேட்க முடிவதில்லை. வீட்டில் எப்போதும் பாட்டு கேட்கும் பழக்கம் உண்டு.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

எனக்கு தமிழ் மொழியத் தவிர வேறெந்த மொழியும் புரியாதுங்கிறதால தமிழ்படத்த தவிர வேறெந்த படங்களையும் பார்கிறதில்ல. Baby's Day Out போல சில நல்ல ஆங்கிலப்படங்கள் பார்பதுண்டு.
நகைச்சுவை படங்கள் எந்த மொழியானாலும் பார்கலாம். அப்படிப் பட்ட படங்களைப் பார்பதுண்டு.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இருந்தது, இப்போது இல்லை. மீண்டும் எதுவும் செய்யும் எண்ணமில்லை. தமிழ் சினிமாவோட முன்னேற்றத்துக்கும் அதுக்கும் சம்பந்தமேயில்ல.

ஆனா எங்க அண்ணணுங்க மேலயும், அப்பா மேலயும் வருத்தம் மட்டும் உண்டு. பின்ன என்னங்க, என்னைய கதாநாயகனா வைச்சு ஒரு படத்த எங்க அப்பா தயாரிச்சு, எங்க அண்ணண் இயக்கியிருந்தா நாங்களும் பெரிய ஹீரோ ஆகியிருப்போம்ல. அநியாயமா ஒரு நல்ல ஹீரோவ தமிழ் சினிமா இழந்துருச்சு.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

புதுசா சில நல்ல இயக்குநர்கள் நல்லா படம் எடுக்கிறாங்க. சினிமாவுக்கு என்ன, அதுபாட்டுக்கு நல்லா வளரத்தான் செய்யிம், ( அதான் நான் ஹீரோ ஆகலையே, அப்றம் என்ன கவலை , தமிழ் சினிமா நல்லாத்தான் இருக்கும்.)

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

பாவம் தமிழன், பாதி பேருக்கு பைத்தியம் புடிச்சுரும். பத்திரிக்கைகளெல்லாம் சின்னதாயிரும். பக்கத்த நிரப்ப என்ன செய்யிறதுன்னு பத்திரிக்கைகாரங்க யோசிக்க வேண்டியிருக்கும்.

ஆனால் ஒரு ஆண்டுக்கு தடை செய்யப் பட வேண்டியது சினிமா அல்ல. தொலைக்காட்சியத் தான் தடை செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. என் சின்ன வயசுல எங்க கிராமத்துல சின்னப்பசங்க எல்லாம் நல்லா விளையாடுவோம். ஆனா இந்த தொலைகாட்சிகள் பெருகி இன்னைக்கு எந்த கிராமத்துலயும் பசங்க விளையாட்டுங்கிறத நினைக்கிறதேயில்ல. தடை செய்யப் பட வேண்டியது தொலைக் காட்சிகள் தான் சினிமா அல்ல.


இந்தத் தொடர் விளையாட்ட தொடர நான் யாரையும் அழைக்க விரும்பவில்லை. சினிமா தொடருக்குப் பதிலாக என் அருமைத் தங்கை தூயா அழைப்பு விடுத்துள்ள ஈழம் குறித்த தொடரை அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது அனைவரும் எழுத முயற்சிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். நாம் அனைவரும் நமது எண்ணங்களை பதிவு செய்ய வேண்டியது நம் சக தமிழ் சகோதரர்களுக்கு நாம் செய்யும் பெரும் உதவியாக இருக்கும். தயவு செய்து ஈழம் குறித்து அனைவரும் எழுதுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•10:35 PM
முன் கூட்டியே என்னிடம் தெரிவித்து என்னை இந்த விளையாட்டிற்கு அழைத்த திவ்யாவிற்கு எனது நன்றிகள். காதல் எனப்படுவது யாதெனில்... தொடர் பதிவில் அவரை நான் மாட்டிவிட்டதற்கு பதில் மரியாதை இது.

A - AOL TAMIL
www.aol.in/tamil

தமிழ் செய்திகளுக்காக இதை பார்ப்பது உண்டு.

B - BSNL Customer Care
http://portal.bsnl.in/bsnlcca/login.aspx

பி எஸ் என் எல் வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் இணைய தளம் இது. நீங்களும் இணையம் வழியாக புகார் அளிக்கும் சேவையை பயன்படுத்த இதை உபயோகிக்கலாம். நல்ல பலன் இருக்கின்றது.

C - Changi Airport
www.changiairport.com

சிங்கப்பூர் விமான நிலையத்தின் இணைய தளம் இது. விமான வருகை, புறப்பாடு போன்ற தகவல்களுக்காக இதை அடிக்கடி பார்பது உண்டு. எனக்கு நண்பர்கள் அதிகம் எனவே வழியனுப்புவதும், வரவேற்பதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள்.

D - Dinamalar
www.dinamalar.com
காலையில் தினமும் தமிழ் செய்திகளுக்காக இதை தான் படிப்பேன்.

DBS Bank Singapore
www.dbsbank.com.sg
Development Bak of Singapore. வங்கிச் சேவைகளுக்காக மிக அதிகமாய் உபயோகிக்கும் இணையதளம்.

E- E Grocy Online Store
www.egrocy.com

என்னைப் போன்ற சோம்பேறிகளுக்காக உள்ள இணைய கடை. மளிகைச் சாமன்களை மாதமாதம் வாங்க உபயோகிக்கும் தளம். நாங்க எல்லாம் வீட்லயே உக்காந்துகிட்டு இணையத்துல எல்லாப் பொருளையும் வாங்கிருவோம்ல.

F - FlyProxy
https://flyproxy.com

எங்க அலுவலகத்துல அடிக்கடி நம்ம ரொம்ப உபயோகிக்கிற இணைய தளங்களை தடை பண்ணிருவாங்க. நாங்க எல்லாம் யாரு, இதுல பூந்து எல்லா இணையத்தையும் கொண்டாந்துருவோம்ல. இப்டிதான் ஜிமெயில தடை பண்ணாய்ங்க. நமக்கு ஜிமெயில் இல்லன்னா உசுரே போயிடும்ல. அணையா விளக்கா ஜிமெயில்ல என் பெயருக்கு பக்கத்துல இருக்க பச்சைவிளக்கு நான் தூங்குறப்ப மட்டும்தான் அணைஞ்சு இருக்கும். அத போயி இவிங்க தடை செஞ்சா விட்ருவோமா? அதுக்குத்தான் இதெல்லாம். உங்க அலுவலகத்துலயும் யாராவது இப்டி தொல்லை குடுத்தா ஒரு பின்னூட்டத்த போட்டுட்டு இதை பயன்படுததுங்க.

G - Google
www.google.com.

கூகிள் நம்ம பெரியண்ணண். இவரு இல்லன்ன நான் இல்ல. இவர கேட்கிற விதமா கேட்டா எல்லாத்தையும் நமக்கு தர்றவரு. எனக்கு மட்டும் இல்ல, பொட்டி தட்றவங்க எல்லாருக்கும் பெரியண்ணண் இவரு தான். இவருகிட்ட இல்லாததே இல்லன்னு சொல்ற அளவுக்கு எல்லா தகவல்களையும் அள்ளித்தருவாரு. பாசக்கார அண்ணண்.

H - The Hindu
www.Hindu.com

நமக்கு ஆங்கில அறிவும் முக்கியம்ல, அதான் ஹிண்டு செய்திதாளையும் காலையில வாசிக்கிறது நம்ம வழக்கம்.

How Stuff Works
http://www.howstuffworks.com

சாதாரண கருவி முதற்கொண்டு, மிக நவீன கருவி வரை எல்லாம் எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ள இந்த தளம் மிக உதவியாய் இருக்கும். நான் இதுக்கு அடிக்கடி போகிறதில்லை. ஆனா என் அண்ணண் ஜோசப் செல்வன் இத பொறுமையா படிச்சுட்டு நான் கேட்கிறத நல்ல புரியிறமாதிரி சொல்லிக்கொடுப்பாரு. அப்பப்ப எட்டிப் பார்கிறதோட சரி.

I - ICICI Exchange Rate Calculator
http://icicibank.com/pfsuser/icicibank/ibank-nri/nrinewversion/calculators.htm

நம்மள மாதிரி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கெல்லாம் உபயோகமான தளம் இது. மத்த வங்கிகள விட ஐசிஐசிஐ வங்கிதான் அதிகமான நாணய மாற்று மதிப்பு கொண்ட வங்கி. நமக்கு யாரு அதிகமா தர்றாங்களோ அவங்கத் தானே முக்கியம். இவங்க தான் நமக்கு பாதுகாப்பா நாம சம்பாதிக்கிறத தாய்நாட்டுக்கு அனுப்ப உதவுறவங்க. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் தேவையான ஒரு தளம் இது. நீங்க ஐசிஐசிஐ வங்கியில கணக்கு வைச்சிருக்கணும்கிற அவசியம் கூட கிடையாது. இவங்களோட Money2India சேவையின் மூலமா சுலபமா பல வங்கிக் கணக்குகளுக்கும் நீங்க பணம் அனுப்ப முடியும். உங்க பணம் ஒழுங்கா போய் சேர்ந்துச்சான்னு நீங்க பார்த்துக்கலாம்.

J - Jobs DB Singapore
http://www.jobsdb.com.sg

சிங்கப்பூர்ல இருக்க வேலை வாய்ப்புகளை குறித்த இணையத்தளம் இது. சுய விளம்பரமா நினைச்சுக்காதீங்க. என் வீட்ல எப்பவுமே ஒரு 2 வேலை தேடுறவங்க இருப்பாங்க. ஏதோ நம்மால முடிஞ்ச சேவைன்னு செஞ்சுகிட்டு இருக்கேன். அவங்களுக்காக அடிகடி போகுற இணையம் இது.

K - Khel Stocks
http://www.khelostocks.com

கல்லூரியில படிகிறப்ப என்னோட பாடம் இயற்பியல், இருந்தாலும் நமக்கு பங்கு வணிகத்தில நான் ஒரு பட்டயப் படிப்பு படிசேன்ல ( Diploma in Share Investment &
Management) , அதான் பங்கு வணிகத்துக்காக இந்த இணையத்துக்கு அடிக்கடி போவேன்.


M - ம்யூஜிக் இதுல நான் பல இணையங்களுக்கு போவேன் குறிப்பா சொல்லனும்னா
www.raga.com, www.smashits.com போன்றவை.

O - Oru Paper
www.orupaper.com

நம் ஈழத்து சொந்தங்களின் தளம் இது. அடிக்கடி போவது உண்டு.

P - Public Grievances
http://pgportal.gov.in/aboutus.html

பொதுமக்கள் தங்களது குறைகளை அரசின் அனைத்து துறைகளுக்கும் தெரிவிக்க உள்ள இணையதளம். சமீபத்தில்தான் இதை கண்டறிந்தேன். இதுகுறித்து ஒரு பதிவும் இட்டுள்ளேன்.

Personal Finance
http://www.personalfn.com/calc/hlv.html

இது நம்முடைய நிதி மேலாண்மைக்கு உதவும் ஒரு நல்ல தளம். பல கணக்கீடுக்களுக்காக நான் இதற்கு செல்வது உண்டு. இங்கும் ஒரு சுய விளம்பரம் அவசியமாகிறது. நான் பல நண்பர்களுக்கு நிதி ஆலோசகராக தொண்டாற்றி வருகின்றேன். இந்தியாவில் இருந்த காலம் தொட்டு இதை செய்து கொண்டுள்ளேன். ஆனால் சிங்கை வந்த பின் முன்போல் என்னால் அந்த சேவையை திறம்பட செய்ய இயலவில்லை. எனினும் இது போன்ற இணைய தளங்கள் எனக்கு அப் பணியில் பேருதவி புரிகின்றன.

Q - Quick Remit

இது HDFC வங்கியின் சேவை. இதன் மூலம் இந்தியாவில் உள்ள எல்லா கணிணி மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் பணம் அனுப்ப முடியும். இதற்கு HDFC வங்கியில் நாம் வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

S - SDN SAP
www.sdn.sap.com.

இது நம்ம பொழப்பு சம்பந்தப்பட்ட இணையதளம்.SAPல இருக்கவங்க எல்லாருக்கும் எந்த சந்தேகம்னாலும் இங்க வந்தா நல்ல உதவி கிடைக்கும். SAP ஒரு கடல் மாதிரி, அதுல Technical & Functional னு ரெண்டு பிரிவு இருக்கு. Technical ல வேலை பார்க்க ஆரம்பிச்ச நான் இப்ப Techno Functional அ இருக்க முக்கிய உதவி இந்த இணையம் தான். புதுசா கத்துக்கிறவங்களுக்கு பல உதவிகள் இங்க கிடைக்கும்.

SBI Singapore
http://www.sbising.com

இது பாரத ஸ்டேட் வங்கியின் சிங்கப்பூர் இணையதளம். நம்ம ஊரு ரூபாய் மதிப்ப பார்க்குறதுக்காக இந்த தளத்துக்கு அடிக்கடி போவேன்.

T - Tamil Editor
www.tamileditor.org

என் மடிக்கணிணியில் நான் ஈ கலப்பை போன்ற எதையும் நிறுவாமையால் இந்த தளத்தின் மூலமாகத் தான் தமிழ் தட்டச்சு செய்கிறேன். என் மடிக்கணிணியில் எப்போதும் மூடாமல் இருக்கும் பக்கங்களில் இதுவும் ஒன்று.

Thirukural
http://www.tamilnation.org/literature/kural/index.htm

திருக்குறள் இருக்கும் இணையத்தளம். திருக்குறளுக்கு தனியாக நான் விளக்கம் தரவேண்டுமா என்ன?

Team Viewer
http://teamviewer.com/index.aspx

நாம பல பேருக்கு பல நேரங்கள்ல உதவுறதுக்கு இந்த இணைய தளம் உதவுது.

http://tamilpeek.com http://www.tubetamil.com

வேற எதுக்கு தமிழ் படம் பார்க்கத்தான்.

W - WIKI
http://en.wikipedia.org/wiki/Wiki

கூகிள் நமக்கு பெரியண்ணண், விக்கி நமக்கு தம்பியண்ணண். நமக்கு தெரியாதத இவருகிட்டயும் கேட்டுக்கலாம். பெரியண்ணண் பல நேரங்கள்ல தம்பியண்ணகிட்டத்தான் அனுப்புவாரு. நமக்கு செம தோஸ்த்.

What is
http://whatis.techtarget.com

என்ன? அப்டிங்கிற கேள்விய கேட்க இது ஒரு நல்ல இணையதளம். சிறப்பான பதில்கள் கிடைக்கும். இந்த காலத்து குழந்தைங்க எல்லாம் நிறைய கேள்வி கேட்குதுங்க. அவங்களுக்கு பதில் சொல்ல விக்கி , இந்த தளம் எல்லாம் பெற்றோர்களுக்கு மிகவும் உதவும். பொறுமையா சொல்லிக்குடுக்கலாம்.


Y - Yarl.com
http://www.yarl.com/forum3/index.php?showforum=40

யாழ் இணையம், ஈழத்துச் சொந்தங்களின் இணையதளம் இது. ஈழத்து செய்திகளுக்காக அடிக்கடி செல்வது உண்டு.

You Tube
http://www.youtube.com

ரொம்ப போரடிக்கிற நேரங்கள்ல இந்த தளத்துல போயி வகை வகையா தேடிப்புடிச்சு விடியோ பார்ப்பேன். ரொம்ப புடிச்சது நம்ம தமிழ் நகைச்சுவை வீடியோக்கள் தான்.

நான் ஒரு மூணு பேர மாட்டிவிடணுமாம், யார மாட்டிவிடலாம்னு ஞாயித்துகிழமை காலையில சீக்கிரமா 11 மணிக்கே எழுந்துருச்சு யோசிச்சதுல மாட்டுனது இந்த மூணு பேருதான்.

1. அன்பு தம்பி விக்கி என்கிற விக்னேஸ்வரன்.

2. அன்பு தோழன் ஜெகு என்கிற ஜெகதீசன்

3. நீண்ட நாட்களாய் பதிவுகளை வாசித்து அனுபவம் பெற்று சமீப காலமாய் பதிவெழுத ஆரம்பித்து கலக்கிக் கொண்டிருக்கும் அன்பு தோழர் மகேஷ்.

Rule:

The Tag name is A for Apple

Give preference for regular sites

Ignore your own blogs, sites.

Tag 3 People.
Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•12:29 AM
காதல் என்ற வார்த்தையை கூட எழுத்துக்கூட்டி சில பல பிழைகளுடன் படிக்கும் ஒரு பச்சிள‌ம் பாலகன் ஆகிய பால்ராஜ்ஜை இந்த தொடர் விளையாட்டில் மாட்டிவிட்ட அன்பு அண்ணண் அப்துல்லா வாழ்க.

அண்ணண் அப்துல்லாவின் பதிவை படித்தவுடன் பதறி அடித்துக்கொண்டு எழும் குரல் -‍ இது இன்னமும் மனதளவில் குழந்தையாகவே இருக்கும் பால்ராஜ் எழுப்புவது.

காதல் எனப்படுவது யாதெனில்னு ஒரு தலைப்பை குடுத்து வேற ஒன்னும் விவரமா சொல்லாம நம்மள எழுத சொல்லிட்டு போயிட்டாரே இந்த அப்துல்லா, நம்ம காதல் கதைய எல்லாம் எழுத ஆரம்பிச்ச அது உழவும் உழவர்களும் தொடர விட பெருசா போகுமே, எத எழுதுறது, எத விடுறது ?? - இது நம்ம ஜொசப் குரல்.

அடப்பாவி உன் மனைவி ஊர்ல இல்லங்குறதுனால நீ எல்லாத்தயும் சொல்லிடுவியா, அவங்க வந்தபின்னாடி உன் பதிவ எல்லாம் படிச்சா உனக்கு டின் கட்டிருவாங்கடினு ஒருத்தன் நடுவால இருந்து குரல் கொடுக்குறான், உத்து கேட்டாதான் தெரியுது அது நம்ம பெனடிக்ட்டோட குரல்.

( நல்ல வேளை இவனுக்கு ஜோசப் பெனடிக்ட் பால்ராஜ்னு மட்டும் பேரு வைச்சாங்க, இல்ல இவன் பாட்டுக்கு இந்த குரல் அந்த குரல்னு பதிவ நிரப்பிட்டு போயிருப்பான்னு நம்ம குசும்பன் குரல் கொடுப்பாரு, இருடி, அடுத்த ஆப்பு உனக்குத்தான்.)

ஆளாளுக்கு ஒரு குரல் கொடுத்துகிட்டு இருந்தா நம்ம அண்ணண் அப்துல்லாவுக்கு என்னா பதில் சொல்றதுனு நாங்க கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்து எழுதுவது யாதெனில்....

கவலைப்படாதிங்க, தொடரும் எல்லாம் போட மாட்டேன்.

காதல்...

அர்த்தமே புரியாத காலத்தில் இந்த வார்த்தை எனக்கு கெட்டவார்த்தை, ( அப்போ நான் விசயகாந்த ரசிகரு பாருங்க, ஏன்னா அவரு படத்துலதான் நிறைய சண்டை இருக்கும்).

10 ஆம் வகுப்பு படிச்சு முடிச்ச காலத்துலதான் நமக்கு காதலோட அர்த்தம் கொஞ்சம் கொஞ்சமா விளங்க ஆரம்பிச்சுது, ஆனா பாருங்க, அப்ப பார்த்த எல்லா பெண்ணையுமே பிடிச்சதே தவிர காதல்னு சொல்லிக்கிறமாதிரி எதுவும் வரலை.

அது இதுனு நிறைய படிச்சதுல , இதெல்லாம் இனக்கவர்ச்சினு புரிஞ்சுச்சு.
ஆனா பத்தாம்பு படிகிறப்பவே கல்யாணம்ணா அது காதலிச்சுத்தான்னு மனசுல ஒரு உறுதி வந்துருச்சு.

உன் பெற்றோரையோ, உடன்பிறப்புகளையோ, உறவினர்களையோ நீ தேர்ந்தெடுக்க முடியாது, இவையெல்லாம் உன்னை மீறியவை.
ஆனால் நண்பர்களையும், காதலியையும் மட்டும் நீயே தேர்ந்தெடுக்கலாம் .

இந்த தத்துவம்தான் காதல் திருமணம்தான் செஞ்சுக்கனும்னு என்னைய ரொம்ப தூண்டிய ஒன்று.

ஆன, படிச்சது எல்லாம் ஆண்கள் மட்டுமே படிக்கிற பள்ளிக்கூடத்துல, சரி கல்லூரிகாலத்துலயாவது பார்த்துக்கலாம்னு இருந்தா அங்கயும் நமக்கு வாய்ப்பு கிடைக்கல.

ஒரு வருடத்திற்கு 32000 ரூபாய் கட்டி படிக்கும் பிரிவில்( Government Payment Quota) பொறியியல் படிப்பிற்கு இடம் கிடைத்ததால், ஒழுங்கா படிச்சு அரசு ஒதுக்கீட்டுல (Merit Seat) இடம் வாங்க முடியாத உனக்கு பொறியியல் படிப்பு ஒரு கேடானு கேட்டு பி.எஸ்.ஸி இயற்பியல் பாடத்துல, அதுவும் ஆண்கள் மட்டுமே படிக்கும் பூண்டி புஷ்பம் கல்லூரியில படினு சொல்லி என் அண்ணண் சேர்த்துவிட்டதால என்னடா செய்யிறதுனு ஒரே சோகமா அந்த கல்லூரியில சேர்ந்த எனக்கு இருந்த ஒரே ஆறுதல் தஞ்சாவூர்ல இருந்து எங்க கல்லூரி வழியா திருவாரூர் போற புகை வண்டிதான்.

நாங்க போற அதே புகைவண்டியிலத்தான் எங்க கல்லூரியில இருந்து இரண்டு நிறுத்தம் தள்ளி இருக்க ஒரு பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளும் போவாங்க.

சாதரண கலைக்கல்லூரியில படிக்கிற நாம, ஒரு பொறியியல் கல்லூரி மாணவிய காதலிக்கனும்னா, நமக்குனு சில தனித்தகுதிகள் இருக்கனும்ல..
இதுனால பல பல தனித்தகுதிகள வளர்த்துகிட்டோம் பாருங்க..

எல்லாம் செஞ்சு என்ன உபயோகம், திடீர்னு இரயில்வே துறையினர் புகைவண்டியின் நேரத்தை மாத்தி சோதனை செஞ்சுட்டாங்க, இதனால ஒரே ரயில்ல போற அந்த ஒத்தை சந்தோஷமும் ஒன்றரை வருடங்களில் போயே போச்சு..

இந்த‌ ஒன்ற‌ரை வ‌ருட‌ங்க‌ளில் செந்தில் , ச‌ர‌வ‌ண‌ண் என்ற‌ என் இரு ஆருயிர் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து சென்சார்பால் என்ற‌ பெய‌ரில் ஒரு கையெழுத்து வார‌ இத‌ழை ஆர‌ம்பித்து வெற்றிக‌ர‌மாக‌ ந‌ட‌த்தினோம் என்ப‌து ஒரு த‌னிப்ப‌திவாக‌ போடும‌ள‌வுக்கு பெரிய‌ செய்தி. ( நாங்க‌ ஒன்னும் புதுசா எழுத‌ வ‌ர‌லை, அப்ப‌வே ஆர‌ம்பிச்சுட்டோம்!!).

இப்ப‌டியே க‌ழிந்த‌ என் க‌ல்லூரிக்கால‌ம் ஒரு முடிவுக்கு வ‌ந்து
சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவ‌ன‌த்தில் வேலைக்கு சேர்ந்தேன்.வேலைக்கு சேர்ந்து ச‌ம்பாதிக்க‌ ஆர‌ம்பித்துவிட்டாலும், வாழ்வின் ப‌ல‌ உண்மைக‌ள் தெரியாத‌,புரியாத‌ ப‌ருவ‌ம் அது.

என‌க்கு பிடித்த‌ பெண்ணிற்கு என்னை பிடிக்க‌வில்லை, என்னை விரும்பிய‌ பெண்களில் எவரையும் என‌க்கு பிடிக்க‌வில்லை .

வ‌ள்ளி ப‌ட‌த்துல‌ ர‌ஜினி சொல்ற‌ மாதிரி நாம‌க்கு பிடிச்சவங்களவிட , ந‌ம்ம‌ள‌ பிடிச்சவங்கள‌ ஏத்துகிட்டு இருந்துருக்க‌ணுமோ??????

என்னை விரும்பிய‌வ‌ர்க‌ளுட‌னும், நான் விரும்பிய‌ பெண்ணுட‌னும் இன்ற‌ள‌வும் ந‌ல்ல‌ ந‌ட்போடு இருப்ப‌தால் இத‌ற்கு மேல் என்னால் தெளிவாக‌ எழுத‌முடிய‌வில்லை . ( அவ‌ர்க‌ளோடு ந‌ல்ல‌ ந‌ட்பு இல்லாவிட்டாலும் அவ‌ர்க‌ளை ப‌ற்றி விரிவாக‌ எழுதுவ‌து நாகரீக‌மாக‌ இருக்காது என்ப‌துதான் என‌து நிலை).

எல்லாத்துக்கும் மேல தமிழகத்தில் சங்க இலக்கிய காலத்தில் இருந்தே இருப்பதாக சொல்லப்பட்டாலும், இன்று காதல் திருமணங்களை எல்லாப் பெற்றோரும் முழுமனதுடன் ஆதரிக்கின்றார்களா?

அன்றும், இன்றும் காலத்தால் அழியாத காதல் பாடல்களை பல திரைப்படங்களுக்கு எழுதியவரும், தன் கவிதை தொகுப்புகளில் எல்லாம் காதலை மிக உயர்வாக எழுதியவரும் கவிப்பேரரசு என்று அழைக்கப்படுபவருமான வைரமுத்துவின் மகன் கூட தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ள முதலமைச்சர் வீட்டிலிருந்து உதவியை எதிர்பார்க்க நேர்ந்தது என்றால், மற்றவர்கள் எல்லாம் ???

என்னை பொருத்தவரை காதல் என்பது எல்லோரையும் ஒரு குறிபிட்ட வயதில் தேடிவந்து கதவை தட்டும் ஒரு காற்று. அது க‌த‌வை த‌ட்டுவ‌து ஒரு இய‌ற்கை நிக‌ழ்வு. ( அறிவிய‌ல்ப‌டி இதை ஹார்மோன்க‌ளின் செயல்பாடு என்கிறார்க‌ள்.)

வெகுபலர் இந்த‌ க‌த‌வு த‌ட்டல் ஓசை கேட்டு வெகுண்டெழுந்து க‌த‌வை திற‌ந்து , காத‌லை வ‌ர‌வேற்று எல்லாவ‌ற்றிலும் காத‌லையே நிர‌ப்பி,ம‌ற்ற‌வையெல்லாம் இர‌ண்டாம்ப‌ட்ச‌ம் என்று க‌ருதி அந்நாளில் செய்ய‌வேண்டிய‌ ப‌ல‌வ‌ற்றை செய்ய‌ த‌வ‌றுகின்றார்க‌ள். ஒரு சில‌ர் இந்த‌ க‌த‌வு த‌ட்ட‌லை கேட்டாலும் கேட்காத‌துபோல் தாங்க‌ள் செய்ய‌ வேண்டிய‌ வேலையில் ஆழ்ந்து, சாதிக்க‌ வேண்டிய‌தை சாதிக்கின்றார்க‌ள்.

ஒன்று ம‌ட்டும் உண்மை. இப்ப‌டி முத‌ல் த‌ட்ட‌லின் போது காத‌ல் காற்றுக்கு க‌த‌வை திற‌க்காத‌வ‌ர்க‌ள், க‌த‌வை திற‌ந்த‌வ‌ர்க‌ளைவிட‌ ச‌ற்று அதிக‌மாக‌த்தான் சாதிக்கின்றார்க‌ள். காத‌ல் காற்று ஒரு முறை ம‌ட்டும் க‌த‌வை த‌ட்டுவ‌தில்லை. இவ‌ர்க‌ள் சாதித்த‌ப்பின் ச‌ற்று ப‌ல‌மாக‌வே இவ‌ர்க‌ளின் க‌த‌வை காத‌ல் த‌ட்டுகின்ற‌து.

என்னதான் பலமாக காதல் காற்று கதவை தட்டினாலும் , தாங்களே போய் கதவை திறக்காமல் பெற்றோரிடம் அந்த உரிமையை வேறு வழியின்றோ, அல்லது தாங்களாக விரும்பியோ ஒப்படைப்பவர்களும் உண்டு.

நாம‌ வாழ்க்கையில‌ செய்யிற‌ ப‌ல‌ த‌வ‌றுக‌ளுக்கு கார‌ண‌ம் என்ன‌னு யோசிச்சா, ஒன்னு முடிவெடுக்க‌ வேண்டிய‌ நேர‌த்துல‌ முடிவெடுக்காம‌ இருப்பது, இல்ல‌ முடிவெடுக்க‌ கூடாத‌ நேர‌த்துல‌ முடிவு எடுப்பது.இது தான் காரணமா இருக்கும்.
சரியான நேரத்துல சரியானத செய்யிறவங்களுக்கு காதல் மட்டும் இல்ல, எல்லாமே நல்லாத்தான் நடக்கும் .

"சீரியசான விஷயங்களைத் தவிர வேறு எதுவும் எழுதுவது இல்லை என சர்ச்சில் சத்தியம் செய்து வலைப்பூவைத் துவங்கி இருக்கும் "இன்டர்நெட் இங்கர்சால்'', வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும்''வலைத்தளத்தின் வள்ளலார்" அருமை அண்ணன் ஜோசப் பால்ராஜ் " என்றெல்லாம் எனக்கு அண்ணண் அப்துல்லா அடைமொழி கொடுத்ததை மெய்யாக்கும் வண்ணம் நானும் ரொம்ப சீரியசாத்தான் காதலைபத்தியும் எழுதிகிட்டு இருக்கேன்னு எனக்கெ தெரியுறதால ரொம்ப சுருக்கமா காதலை பத்தி நச்சுனு சொல்லிடுறேன்.

காதல்ங்கிறது ஒரு நெருப்பு மாதிரி, இத வச்சு விளக்கு ஏத்தி இருளையெல்லாம் அகற்றவும் செய்யலாம்,
வீட்டை கொளுத்தி எல்லாத்தையும் ஒரே நொடியில அழிக்கவும் செய்யலாம்,
சிகரெட்ட கொளுத்தி கொஞ்சம் கொஞ்சமா தன்னையே அழிச்சுக்கவும் செய்யலாம்.


காதல் நெருப்பு எல்லார் கைக்கும் வரும், அத வைச்சு என்ன செஞ்சோம், செய்யப்போறோம்கிறதுதான் விஷயமே.

குறிப்பு:காதல் நெருப்ப வைச்சு நீ என்னடா செஞ்சனு கேட்டு வரும் பின்னூட்டங்களுக்கு பதிலளிக்கப்படமாட்டாது.

இப்ப நான் யாரையாவது இந்த தொடர் விளையாட்டுல‌ மாட்டிவிடனும், நல்லா யொசிச்சு பார்த்ததுல, நீ வேண்டும், நீ வேண்டும் என்றென்றும் நீ வேண்டும் என்ற அழகான காதல் கதைய எழுதிகிட்டு இருக்க அருமை பதிவர் திவ்யாவை மாட்டிவிட்டா பொருத்தமா இருக்கும்னு தோணுது. இப்ப நான் தப்பிச்சுக்கிறேன். ( நாங்களும் தான்னு எல்லாம் குரல் கொடுக்க கூடாது அப்துல்லா அண்ணா)

டிஸ்கி: குசும்பணத்தான் மாட்டிவிடணும்ணு நினைச்சேன், மாட்டிவிட்டா இதவைச்சு கூட அவரு ஏதவது குசும்பு பண்ணுவாரு. அதுனாலத்தான் மிக அருமையா காதல் கதை எழுதிகிட்டு இருக்க திவ்யாவ மாட்டிவிட்டாச்சு.
Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க