Author: ஜோசப் பால்ராஜ்
•10:29 PM
ஆபரேஷன் கமலா ( பெயரெல்லாம் நல்லாத்தான் வைக்கிறாய்ங்க). இந்த பெயர படிச்சுட்டு ஏதோ தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கோ, அல்லது ஏதாவது ஒரு முக்கிய நடவடிக்கைக்கோ இப்டி ஒரு பெயர வைச்சு ஏதோ நம்ம ராணுவம் சாதிச்சுருக்கும்னு நினைச்சா நம்மள விட கேணயன் வேற எவனும் இருக்க மாட்டான்.

தேவகவுடா செஞ்ச கூட்டணித் துரோகத்துனால முதல்வர் நாற்காலியில ஏறுன வேகத்துல இறங்குன எடியூரப்பா, சம்பந்தமேயில்லாம தமிழக எல்லையில இருக்க ஹோகேனக்கல்ல வந்து பிரச்சனைய எல்லாம் கிளப்பி ஓட்டுக்காக அரசியல் செஞ்சு தேர்தல சந்திச்சும், தனி பெரும்பான்மைக்கு 3 இடங்கள் குறைவாகத்தான் அவங்களால ஜெயிக்க முடிஞ்சது எல்லாருக்கும் தெரியும். அத சரி பண்ண அடிச்சாங்க பாருங்க ஜனநாயகத்து மேல ஓங்கி ஒரு அடி, அதுக்குப் பெயர் தான் ஆபரேஷன் கமலா.

அதன்படி இவங்க மொத்தம் 8 எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள விலைக்கு வாங்கிட்டாங்க. ஆனா கட்சித் தாவல் தடை சட்டம் பாய்ஞ்சுரும்ல? இதனால கட்சி தாவுன பாசக்காரங்கள எல்லாம் அவங்க சட்டமன்ற உறுப்பினர் பதவியில இருந்து விலகச் சொல்லி, அவங்கள தங்களோட கட்சியில உறுப்பினராக்கி, இடைத்தேர்தல்ல திரும்பவும் அவங்களையே நிக்க வைச்சு 8ல 5 சீட்டுல பாரதிய சனதா கட்சிகாரங்க வெற்றியடைஞ்சு சட்ட சபையில தனிப் பெரும்பான்மைய வாங்கிட்டாங்க. அதுக்கு தான் ஆபரேஷன் கமலா.

நாட்டுல நாங்க மட்டும்தான் யோக்கியம், மத்தவங்க எல்லாம் அயோக்கியர்கள்னு சொன்ன கட்சி, நாடாளுமன்றத்துலயே கோடிக்கணக்குல பணத்த கொட்டி எங்கள விலைக்கு வாங்கப் பார்த்தாங்கன்னு எல்லாம் அழுகாச்சி ஆட்டம் ஆடுன கட்சி தன் ஆட்சிய காப்பாத்திக்க என்னமா ஜனநாயகத்துக்கு மரியாதை கொடுத்துருக்காங்க பாருங்க மக்களே. ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாய்ங்க நாட்டாமை வர்றாரு சொம்பத் தூக்கி உள்ள வையின்னு. இவங்களுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்க இவங்க கட்சியில இருந்து எங்க எங்கயோ கொள்ளையடிச்ச பணத்த எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்குறது எல்லாம் சரி, ஆனா இந்த இடைத்தேர்தல் என்ன இவங்க கட்சி செலவுலயா நடந்துச்சு? அது யாரு ஊட்டு பணம்? நம்ம வரியா குடுக்குற பணம் தானே?

இன்னைக்கு ஒரு சாதாரன குடிமகன் கையில கூட அலைபேசி இருக்கு. அதுக்கு அவன் செலுத்துற காசுல 12% வரி, ஒரு லிட்டர் பெட்ரோலோட அடக்க விலை 11 ரூபாய்தானாம். ஆனா விக்கிற விலை 48 முதல் 55 ரூபாய் வரை. மிச்ச காசு எல்லாம் என்ன? நாம மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் கொடுக்குற வரி தானே? அதுல இருந்து தானே இந்த இடைத் தேர்தல் முதுகுத் தேர்தல் எல்லாம் நடக்குது? ஆக முனுசாமி டிவிஸ் 50க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டா அதுல தர்ற வரி, குப்புசாமி 300 ரூபாய்க்கு தன்னோட அலைபேசிக்கு கட்டணம் செலுத்துனா அதுல வர்ற 36 ரூபாய் வரி இதெல்லாம் எங்க போவுது பாருங்க. இவுங்களோட ஆபரேஷன் கமலாவுக்கு நாம தெண்டம் அழுவ வேண்டியிருக்கு.

ஏற்கனவே தரம்சிங் தலைமையில அமைந்திருந்த காங்கிரஸ் - மத சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசை கலைத்து குமாரசாமி தலைமையில ஆட்சி அமைக்க வைச்ச பாஜகவுக்கு கூட்டணி தர்மத்தை பத்தி பேச அருகதையே இல்லையில்லைன்னு தெரிஞ்சதுனாலத்தான் எடையூரப்பா ஹோகேனக்கல் பிரச்சனைய ஆரம்பிச்சு ஓட்டுப் பொறுக்கும் அரசியல ஆரம்பிச்சாரோ?

இம்புட்டு நல்ல பாரதிய சனதா கட்சியோட டெல்லி தலைமை அலுவலகத்துல அவங்க பாதுகாப்பு பெட்டகத்துல வைச்சுருந்த 2.6 கோடிய அவுங்க ஆளுங்கள்லயே யாரோ ஆட்டையப் போட்டுட்டாங்களாம். யோக்கியவானுங்க காவல்துறையில கூட புகார் குடுக்காம தனியார் துப்பறியும் நிறுவனங்க வைச்சும், ஜோசியம், வாஸ்து எல்லாம் பார்த்து அந்த சொம்ப தூக்குன நாட்டமைய கண்டுபிடிக்கப் போறாங்களாம். என்னக் கொடுமை சார் இது?

இலங்கை அரசாங்கம் செய்யிறது எல்லாம் அநியாயம்னாலும், அங்க எனக்கு புடிச்ச ஒரே ஒரு விசயம் அங்க இடைத்தேர்தல்னு ஒன்னு கிடையவே கிடையாது. எத்தன தடவ எதிர்கட்சி ஆளுங்கள கொன்னாலும், அந்த காலி ஆகிற இடத்துக்கு பொதுத் தேர்தல்ல எந்த கட்சி வெற்றி பெற்றுச்சோ அதே கட்சிதான் வேற ஒரு உறுப்பினர நியமிக்குமேத் தவிர இடைத் தேர்தல், முதுகுத் தேர்தல் எல்லாம் அங்க கிடையாது. இடைத் தேர்தல்னு ஒன்ன வைச்சுக்கிட்டு நாம படுற பாடு இருக்கே, அதப் பத்தி நான் வேற சொல்லணுமா? முடிஞ்சா திருமங்கலம் தொகுதிகாரங்கள கேட்டுத் தெரிஞ்சுகங்க.

இப்டியெல்லாம் ஜனநாயகப் படுகொலைகள் நடக்கிறத தடுக்க இடைத்தேர்தல முதல்ல ஒழிக்கணும். மதிமுக வெற்றி பெற்ற திருமங்கலம் தொகுதியில இடைத்தேர்தல்ல தன்மான சிங்கம் வைகோகிட்ட கேட்காமலேயே புரட்சித் தலைவி தன் கட்சி வேட்பாளரை நிறுத்துறது, தமிழகத்து ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் இவுங்க இங்க பணம் கொடுத்தாங்க, அவுங்க அங்க பணம் கொடுத்தாங்கன்னு புகார் கொடுக்குறது, இருக்க வேலையெல்லாம் பத்தாதுன்னு இந்த இடைத் தேர்தலுக்கு பாதுகாப்பு வேலையின்னு நம்ம துணை ராணுவம் வர்றது, இருக்க அமைச்சர் எல்லாம் தன்னோட வேலையெல்லாம் விட்டுட்டு பிரச்சாரம் செய்யிறது, முதல்வர் வரைக்கும் போயி பிரச்சாரம் செய்யிறது இப்டி ஆயிரத்தெட்டு தொல்லைகளையும், அநாவசியச் செலவுகளையும் தடுக்க முதலில் இந்த இடைத் தேர்தல்களை ஒழிக்க வேண்டும்.

ஆனா ஒன்னு நாங்க மட்டும் தான் யோக்கியமானவனுங்கன்னு சொல்லிக்க இங்க எந்த கட்சிக்கும் அருகதையில்ல. எல்லாரும் ஒரே குட்டையில ஊறுன மட்டைங்கந்தான். அப்ப தேர்தல்ல நாமெல்லாம் ஓட்டுப் போடணுமா, போடாம விட்டா தப்புன்னு சொல்றாங்களேன்னு கேட்குறீங்களா? கட்டாயம் ஓட்டுரிமை இருக்கவங்க எல்லாம் ஓட்டு போடணும். உங்க உரிமைய விட்டுக் கொடுக்க கூடாது. 49 ஓ இருந்தா அதுல போடுங்க. இல்லன்னா இருக்கதுல நல்லவரு யாருன்னு பார்த்து ஓட்டுப் போடுங்க. ஏன்னா இன்னையத் தேர்தல் “ Choosing the best among the worst".

பின் குறிப்பு: எங்க அநியாயம் நடந்தாலும் தாண்டிக் குதிச்சு தட்டிக்கேட்கின்ற பத்திரிக்கையாளர் சோ இந்த ஆபரேஷன் கமலா பத்தி ஏதாச்சும் எழுதுனாரான்னு துக்ளக் படிக்கிறவங்க முடிஞ்சா பின்னூட்டமிடுங்க. அப்டி அவரு வேலைப்பளுவால எழுதாம விட்ருந்தா அவருக்குப் பதிலா டோண்டு சார் ஆச்சும் பதில் சொல்லுவார் என நம்புவோம். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•10:22 PM
அன்புள்ள கோவி.அண்ணா,
இனி நீங்கள் சமூகப் பொறுப்புள்ள எந்தப் பதிவுகளையும் எழுத வேண்டாம். இனிமேல் நீங்கள் இந்த வார ஃபிகர், இந்த நாள் ஃபிகர், காலை பத்துமணி ஃபிகர், மாலை 4 மணி ஃபிகர் என நடிகைகளின் ஆபாசப் படங்களை வைத்து மட்டும் பதிவிடுங்கள்.

Britney - My Sweet Heart , Madona - My Sweet Lungs, Jenifer Lopez - My Sweet Kidney இப்படி ஏதாவது தலைப்புல நாலு வீடியோ போட்டுருங்க.

அதுவும் இல்லன்னா டரியலு , பொரியலுன்னு எதையாச்சும் எழுதுங்க.

ஏன்னா நாம எல்லாம் என்ன எழுதுனாலும் குத்தம் சொல்ல நம்ம மாப்ளைங்க கிளம்பி வந்துருவாங்க. ஈழத்தமிழர்களப்பத்தி பதிவெழுதுனா அங்க வந்து ஈரவெங்காயம், இறையாண்மைன்னு பேசுவாங்க. இப்ப நம்ம தேசத்தோட வர்தகத் தலைநகர் மேல ஒரு மோசமான, ஈனத்தனமான ஒரு தாக்குதல் நடந்துருக்கு அதப் பத்தி பதிவெழுதுனா அங்க வந்து ஈழத்தப் பத்தி பேசுவாங்க. இவங்களுக்கு உண்மையிலயே தேசியம், இறையாமைக்கு எல்லாம் அர்த்தம் தெரியுமா தெரியாதா?

இதுல மாப்ள சஞ்செய் சொல்றாரு, நான் கீறல் விழுந்த இசைத்தட்டப் போல சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்கேனாம். நான் என் கொள்கையில உறுதியா இருக்கேன் மாப்ள. நான் என்ன அரசியல்வாதியா? அதுவும் காங்கிரஸ்காரனா என்ன? இந்த தேர்தல்ல திமுக கூட சேர்ந்து அதிமுகவ திட்டிட்டு அப்டியே அடுத்த தேர்தல்ல அதிமுக கூட சேர்ந்துகிட்டு திமுகவ திட்ற உங்க தேர்தல் கொள்கைகள் மாதிரி எனக்கு இன்னைக்கு ஒரு கொள்கை நாளைக்கு ஒரு கொள்கையெல்லாம் கிடையாதே. என்ன செய்யிறது? இதுக்கு உங்க அரசியல்ல பெயர் கீறல் விழுந்த இசைத்தட்டா? நல்லா வைக்கிறீங்களே பேரு. இதுவும் நல்லாத்தான் இருக்கு.

ஆனா எந்த ஒரு விவாதத்தையும் திசை திருப்பி பாழடிக்கிற தனித்திறமை உள்ள சஞ்செய் உனக்கு தமிழக காங்கிரஸ்ல வளமான எதிர்காலம் இருக்கு மாப்ள. சீக்கிரம் தமிழக காங்கிரஸ்ல சஞ்சய் கோஷ்டின்னு ஒரு கோஷ்டி இருக்கும். ஆனா மாப்ள கத்தி சண்டை, கராத்தேயெல்லாம் பழகிக்கங்க. அப்பத்தான் கட்சியில பொழைக்க முடியும். கத்தியும் கட்டையும் தான் சத்தியமூர்த்தி பவன் வரைக்கும் வந்துடுச்சே. காந்தி கண்டுபுடிச்ச அஹிம்சைக்கு காங்கிரஸ்ஸ தவிர வேற யாரும் இம்புட்டு மரியாதை குடுக்கலைய்யா.

ராஜிவப் பத்தி தான் பேசுவோம்னா, ஏன் இந்திராகாந்தி, மகாத்மா காந்தி இவங்கள விட்டுட்டீங்க? நாளைக்கே காந்தியோட பேரன் கோபலகிருஷ்ண காந்தி இப்ப மேற்கு வங்கத்துல ஆளுநரா இருக்காரே அவரு காங்கிரஸ்கு தலைவர் ஆயிட்டா அவருக்கு குல்லா போட கோட்சே சொந்தக்காரங்கள எதிர்த்து அரசியல் செய்வீங்களா?

இன்னும் நிறைய சொல்ல வேண்டியிருக்கு. ஆனாலும் எல்லாத்தையும் பொதுவில எல்லாத்தையும் எழுத முடியாது.

சஞ்செய், மீண்டும் மீண்டும் சொல்றேன் உமக்கு இருக்கிறது கட்சி பாசம்னா, எனக்கு இருக்கிறது இனப் பாசம். நான் அரசியல்வாதியில்லை. சக மனிதனின் துன்பம் கண்டு இறங்கும் மனிதாபிமானமுள்ள ஒருவன். இந்தியனுக்கு ஒன்று என்றால் எப்படி குரல் கொடுப்போமோ அதேப் போல் தமிழனுக்கு ஒன்று என்றாலும் குரல் கொடுக்க கூடியவன். இது சுய தம்பட்டம் அல்ல. என்னை புரியாமல் பல இடங்களில் பின்னூட்ட நையாண்டி செய்பவர்களுக்காக ஒரு சுய அறிமுகம். மனிதாபிமானம் இருந்தா மனுசனப் புரிஞ்சுக்கங்க. எனக்கு கட்சியும் இல்ல. ஆட்சியும் இல்ல. காங்கிரஸ் நல்லது செஞ்சா பாராட்டுவேன், தப்பு செஞ்சா திட்டுவேன். அது தான் என் அரசியல் நிலைபாடு.

என்னையும் அரசியல் செய்ய வைக்காதிங்க. ( உம்ம நல்லதுக்குத்தான் இதச் சொல்றேன், நானும் காங்கிரஸ்லயே சேர்ந்துட்டேன்னு வையிங்க, அப்றம் உமக்கு எதிரா இன்னொரு கோஷ்டி வந்துரும்). Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•11:10 AM
பாட்டாளி மக்கள் கட்சி தீவிர மதுவிலக்கு கோரி அரசு மதுபானக்கடைகளின் முன் போராடுவது நாம் அறிந்ததே.

கீழே உள்ள படத்தை பாருங்கள். இப்படி ஒரு நூதன போராட்டத்தை நாம் யாரும் இதுவரை கேள்விப்பட்டிருக்கவே முடியாது.


போராட்டத்தில் எல்லோரிடமும் உடைப்பதற்காக கொடுக்கப்பட்ட பாட்டிலில் ஒன்றை ஒரு பெண்மணி வீணாக்காமல் குடித்துக்கொண்டிருக்கின்றார்.

எல்லாப் போரிலும் வெற்றி பெற ஒரே வழி போரிடாமலே இருப்பது தான் என்று ஒரு முதுமொழி உண்டு. எல்லா மதுவையும் குடித்தே மதுவிலக்கை கொண்டுவரலாம் என நினைத்துவிட்டனரோ ?

மதுவை எதிர்த்து போராட இப்படி பாட்டிலை உடைத்துத் தான் ஆக வேண்டுமா? இவர்கள் கண்ணாடி பாட்டில்களை சாலை நடுவே போட்டு உடைத்துவிட்டு போய்விடுவார்கள், அது எத்தனை பேர் கால்களையும், எத்தனை வாகனங்களையும் பதம் பார்க்கும்? பாட்டில்களை உடைத்துதான் போராட வேண்டுமா?

கண்ணாடி சிதறல்களையும் விட மதுவின் நாற்றம் சாலையில் போகும் எல்லோருக்குமே மிக பெரும் இடைஞ்சலாக இருக்காதா? இது என்ன ஒரு முட்டாள்தனமான போராட்டம்? போராட்டம் என்பது மக்களுக்கு நல்லது செய்வதற்காக இருக்க வேண்டுமே தவிர, மக்களை துன்புறுத்துவதாக இருக்க கூடாது. இப்படித்தான் இவர்களது அரசியல் இருப்பை நிறுவ வேண்டுமா?

தந்தையே,இவர்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்கின்றார்கள், இவர்களை மன்னியும். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•6:26 PM
முழு அடைப்பு நடத்துவது, அதுவும் அரசாங்கமே அதை நடத்துவது, அதுவும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க அதன் கூட்டணிகட்சியே நடத்துவது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் , 2007 அக்டோபர் 1 அன்று தமிழக அரசு சேதுசமுத்திர திட்டத்திற்கு ஆதரவாக நடத்த முனைந்த முழுஅடைப்பை நீதிமன்றத்தின் அச்சுறுத்தலால் உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றி நடத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் கையாண்ட விதம் மிக மோசம் என்பதை சொல்லவே இந்த‌ப்ப‌திவு.

சக பதிவர் எழுதியுள்ள வரட்டும் கலைஞருக்கு கைது ஆணை! என்ற பதிவை படித்தவுடன் ஏற்பட்ட கோபத்திற்கு அளவே இல்லை.

ஏன் இந்த வழக்கில் காட்டிய, காட்டும் தீவிரத்தை மற்ற வழக்குகளில் காட்டவில்லை? கேரளாவுக்கும் தமிழ்நாட்டிற்குமிடையே நடக்கும் முல்லைப்பெரியார் அணை விவகாரத்தில் கேரள அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்பளித்தபின்னரும், இன்னும் அதை கேரள அரசு செயல்படுத்தவில்லை. அது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பை வழங்கியபோதும் சரி, இறுதி தீர்ப்பை வழங்கியபோதும் அதை காலில் போட்டு மிதித்து விட்டு, வெள்ளம் வரும்போது மட்டும் திறந்துவிடும் வடிகால் வாய்காலாக காவிரியை பாவித்து நீர் விடும் கர்நாடக அரசு செய்வது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா ?

காவிரியும், முல்லைப்பெரியாரும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனைகள். அதை தீர்க்க விடுமுறை நாளில் கூடிடுமா நமது மாண்புமிகு உச்சநீதிமன்றம்? கேரள அரசையும், கர்நாடக அரசையும் கலைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைப்போம் என்று சொல்லிடுமா ? அச்சுதான‌ந்த‌னுக்கும், எடியூர‌ப்பாவுக்கும் கைது செய்வோம் என‌ மிர‌ட்ட‌ல் விடுக்குமா?

தீர்க்க வேண்டிய முக்கியமான வழக்குகள் எத்தனையோ இருக்கும் போது அவற்றை தீர்க்க வழிகாண வக்கில்லாத உச்சநீதிமன்றம்,
கடலுக்குள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரே மூழ்கிவிட்ட ஒரு மணல்திட்டுக்காக இத்தனை ஆர்ப்பாட்டம் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அது இராமரால் கட்டப்பட்டதா அல்லது இயற்கையாக உருவானதா , இராமர் என்பவர் உண்மையிலேயே இருந்தவரா அல்லது கற்பனையா என்ற ஆராய்சியில் எல்லாம் நான் இறங்க போவதில்லை. ஆனால் இவர்களுக்கெல்லாம் ஒன்றே ஒன்று சொல்லுவேன், அது அன்றே வள்ளுவன் இவர்களுக்காய் சொன்னது.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க‌
செய்யாமை யானும் கெடும்.

இதற்கு விளக்கம், ஒருவன் தனது நிலைமைக்குத் தகாத செயல்களை செய்வதாலும் செய்யத்தக்க செயல்களை செய்யாது விட்டாலும் கேடு அடைவான் என்பதே.

இந்த குறள் வேகம் காட்டவேண்டிய வழக்குகளில் வேகம் காட்டாது, சம்பந்தமில்லாத வழக்குகளில் காட்டும் உச்ச நீதிமன்றத்துக்கும், இடிக்க கூடாத மசூதியை இடித்து, இடிக்க வேண்டிய பாலத்தை இடிக்க விடாது இராமர் பெயரை சொல்லி அரசியல் பிழைப்பு நடத்துபவர்களுக்கும் பொருந்தும். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•10:52 AM
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ஆதரவாக தமிழ் திரைத்துறையினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர் சத்தியராஜ் பேசிய பேச்சு பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானது அனைவருக்கும் நினைவில் இருக்கும்.

அவர் பேசியது நல்ல கருத்துக்களே ஆனாலும், அவர் பேசிய விதம் தவறு என்றுதான் நான் அன்று நினைத்தேன். ஆனால் இன்று நம் மானங்கெட்ட தமிழனுக்கு மனதில் படும்படி சொல்ல‌ அவ‌ர் அதைவிட‌ க‌டுமையாக‌ பேசியிருக்க‌ வேண்டும் என்று தோன்றுகிற‌து.

நான் இதுல ரஜினி என்ற ஒரு நடிகரை குறை சொல்லவே விரும்பவில்லை. அவர் ஒரு நடிகர், அதற்கு மேல் அவரைப்பற்றி சொல்லிக்கொள்ள எதுவுமேயில்லை. தமிழகத்திற்கே தலமை தாங்க பல வாய்ப்புகள் வந்த போதும் மாற்றி மாற்றி குரல் மட்டும் கொடுத்துவிட்டு, தலைமை பொறுப்பு எல்லாம் எனக்கு வேண்டாம் என சென்றவர் அவர். அப்படி அவர் முடிவெடுத்தது அவரது உரிமை. மக்கள் அழைக்கின்றார்கள் என்பதற்காக அவருக்கு விருப்பமில்லாத ஒரு துறையில் அவர் நுழைய வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் அவருக்கில்லை.


அவர் நடிப்பது சம்பாதிக்கத்தானே ஒழிய வேறு எதற்கும் இல்லை. தனது தொழிலை எந்த சிக்கலும் இல்லாமல் நடத்திக்கொள்ள அவர் செய்வதுதான் அவ்வப்போது அவர் கொடுக்கும் குரல்கள்.

தமிழகத்தில் நடந்த உண்ணாவிரதத்தில் கன்னடர்களை உதைக்க வேண்டும் என்று பேசியது, தமிழகத்தில் இருந்துகொண்டு, தமிழ் நடிகராக எல்லோராலும் அறியப்பட்டாலும் தமிழர் - கன்னடர் பிரச்சனைகளில் இதுவரை ஒரு உறுதியான நிலைப்பாடு ஏதும் எடுக்காமல் சொதப்பி ஏற்கனவே அவர் வாங்கியிருந்த அவப்பெயர்களை துடைத்து, நான் தமிழ்நாட்டு பக்கம்தான் என்று சொல்லிக் கொள்ள அவர் செய்த ஒரு சிறிய வியாபார உத்தி.

இப்போது கன்னடர்களிடம் மன்னிப்பு கோரியிருப்பது, தனது புதிய திரைப்படம் கர்நாடகாவில் எந்த விதமான சிக்கல்களுக்கும் ஆளாகாமல் நன்கு ஓடி பணம் குவிக்க எடுத்த நடவடிக்கை. இதுவும் முழுக்க முழுக்க வியாபார நோக்கம் உடையதே. அவர் எப்பவுமே தெளிவாத்தான் இருக்காரு. ஆனா நம்ம தமிழர்கள் ?????

அவர வெறும் நடிகனா பாருங்க, அவர் படம் புடிச்சிருக்கா இல்லையானு விமர்சனம் செய்யுங்க. அதவிட்டுட்டு அவர கடவுள் அளவுக்கு உயர்த்திகிட்டு, அவரப்பத்தி விமர்சனம் செஞ்சாலே அடிக்க போற அளவுக்கு வெறிபிடிச்சு அலையுறது எல்லாம் எதுக்கு ? அவரை மட்டுமல்ல எந்த நடிகனையுமே தலைவருன்னு சொல்றவன் எல்லாம் மனுசனே இல்ல. தலைவா தலைவான்னு உருகுறது எல்லாம் காட்டுமிராண்டித்தனம் தான். திரையில் நாம் பார்க்கும் நடிப்பை மட்டும் நம்பி எப்படி ஒருவரை நாம் தலைவனாக ஏற்றுக்கொள்ள முடியும்?

நேற்று தமிழகத்திற்காக ஒரு பேச்சு, இன்று கர்நாடகாவுக்காக ஒரு மன்னிப்பு. இவரைப்போயா நீங்கள் உங்களுக்கு தலைவராக அழைக்கின்றீர்கள் ?

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

ரஜினிக்கு யாராவது இந்த குறளின் அர்தத்தை சொல்லட்டும். அவரை அத்தோடு விடுங்கள். அவர் விரும்பியபடி அவரை இமயமலைக்கே போகவிடுங்கள்.

ஒரு தலைவனாக வேண்டியவணுக்கு இருக்க வேண்டிய முக்கிய குணங்கள் இந்த குறளில் சொல்லப்பட்டுள்ளது.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.


இதில் அறிவூக்கமும் இல்லை, அஞ்சாமையும் இல்லாதவரை எதற்கு தலைவர் எனச் சொல்லவேண்டும்?

இனியும் தமிழன் ரஜினி மாயையில் இருந்து விடுபடாது போனால், சத்தியராஜ் பேசியதை விட இன்னும் கேவலமாகத்தான் நம்மை நாமே திட்டிக்கொள்ள வேண்டும். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•3:34 PM
நம்ம அரசியல்வாதிகளோட நக்கலுக்கு அளவே இல்லாம போச்சுங்க..

இன்னைக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் தங்கபாலு, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க திமுக நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தை வரவேற்பதாக அறிவித்துள்ளார். என்ன கொடுமை இது???
உங்க கட்சியின் தலைமையிலான மத்திய அரசு ஊசலாடிகிட்டு இருக்கு, அதுக்கு கூட்டணி கட்சிகளோட ஆதரவு அவசியம்தான். அதுக்காக இப்டியாங்க ??? உங்க கட்சித்தலமையிலான மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க உங்க கூட்டணியில இருக்க ஒரு கட்சி உண்ணாவிரத போராட்டம் நடத்துமாம், அதை நீங்களே வரவேற்று அறிக்கை விடுவிங்களாம், பார்த்துகிட்டு நாங்க சும்ம இருகணும். என்ன கொடுமை சாமி இது?

ஊர்ல ஒரு கதை சொல்லுவாங்க‌, வீட்டுக்கு வந்த வேண்டாத விருந்தாளிய விரட்ட அந்த வீட்டுல இருக்க கணவன் , மனைவி இரண்டு பேரும் விருந்தாளி வீட்டுக்கு வந்துருக்க நேரத்துல சண்டை போட்டுகிட்டு, அந்த ஐயா , தன் வீட்டம்மாவ போட்டு அடிக்கிறமாதிரி நடிப்பாங்க. என்னடா நாம இவங்க வீட்டுக்கு வந்த நேரத்துல வீட்ல ஒரே கலவரமா இருக்கேன்னு பயந்துபோயி சொல்லிக்காம கிளம்பி போய்டுவாரு. அவரு போயிட்டாருனு நினைச்சுகிட்டு நம்ம ஐயாவும், அம்மாவும் வெளியில வந்து பேசிக்குவாங்க.

ஐயா : நான் நோகாமல் அடித்தேனே !!!.
அம்மா: நானும் வலிக்காமல் அழுதேனே !!!.



இந்த சண்டைய பார்த்துட்டு வெளில போன நம்ம வேண்டாத விருந்தாளி ரொம்ப‌ விவரமான ஆளு, சரியா இந்த நேரத்துல மறுபடியும் உள்ளார வந்து
சொல்லுவாரு பாருங்க ஒரு வசனம்

விருந்தாளி : நானும் போகாம‌ல் இருந்தேனே !!!!

இப்ப‌ இந்த‌ க‌தைய‌ அப்டியே ந‌ம்ம‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளோடும் , பிர‌ச்ச‌னைக‌ளோடும் ஒப்பிட்டால்

க‌ண‌வ‌ர் : திமுக‌ அர‌சு.
ம‌னைவி : காங்கிர‌ஸ் அர‌சு.
விருந்தாளி : ஒருத்த‌ரா ரெண்டு பேரா, அது ஒரு பெரிய‌ கூட்ட‌முங்கோ .
இப்போதைக்கு விருந்தாளி மீன‌வ‌ர்க‌ள் பிர‌ச்ச‌னை.


சற்றுமுன் சன் தொலைகாட்சியின் செய்தியில் கடலூரில் மத்திய அமைச்சர் திரு. வேங்கடபதியும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளாராம்.
இவங்க நக்கலுக்கு அளவே இல்லாம போச்சு போங்க... Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•6:11 PM
மீனவர்களின் உயிரைக்காக்குமாறு மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதப்போராட்டம்.

என்ன ஒரு அருமையான யோசனை???
எப்படி அய்யா இப்படி ஒரு அருமையான தீர்வை கண்டுபிடித்தீர்கள்? இந்த முடிவை எடுப்பதற்கு ஒரு உயர்மட்ட குழு கூட்டம் வேறு. மிக கேவலமாக இருக்கின்றது இந்த அரசியல்.

ம‌த்தியில் ஆளும் அர‌சில் நீங்க‌ளும் ஒரு அங்க‌ம் தானே? உங்க‌ள் கூட்ட‌ணிக்க‌ட்சி ஆளும் அர‌சின் க‌வ‌ன‌த்தை திருப்ப‌க் கூட‌ உண்ணாவிர‌த‌ம் இருந்தால்தான் முடியுமா?

சாதார‌ண‌நாட்க‌ளிலேயே ந‌ம்ம‌வ‌ர்க‌ள் இது போன்ற‌ ஒரு நாள் உண்ணாவிர‌த‌த்தையெல்லாம் க‌ண்டுகொள்ள‌ மாட்டார்க‌ள். அதிலும் ந‌ம்பிக்கை வாக்கெடுப்பில் அர‌சு த‌ப்புமா, க‌விழுமா என்ற‌ க‌ல‌க்க‌த்தில் காங்கிர‌ஸ்கார‌ர்க‌ள் இருக்கும் உதிரிக‌ட்சிக‌ளின் ஓட்டுக்க‌ளையெல்லாம் பெறுவ‌த‌ற்காக‌ ப‌கீர‌த‌ பிர‌ய‌த்த‌ன‌ம் செய்துகொண்டிருக்கும் இந்த‌ சூழ‌லில் உங்க‌ள் உண்ணாவிர‌த‌த்தையா க‌ண்டுகொள்ள‌ போகின்றார்க‌ள் ? இந்த‌ உண்ணாவிர‌த‌த்தால் ஏதாவ‌து ப‌ல‌ன் இருக்கும் என்று யாராவ‌து ஒருவ‌ராவ‌து ந‌ம்புகின்றீர்க‌ளா?
ஈழத்தமிழர் பிரச்சனையில் இலங்கையோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரிக்கை விடுத்து சாகும் வரை நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்த திலீபன், மற்றும் பூபதி அம்மாள் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்தது நம் காங்கிரஸ் தலைமையில் இருந்த மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கத்தான்.

அவர்கள் செத்தாலும் பரவாயில்லை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம் என்று இருந்து உண்ணாவிரதத்தால் திலீபனும், பூபதி அம்மாளும் உயிரை விடச்செய்தது இதே காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில்தான்.

சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கே அந்த நிலை என்றால், நீங்கள் காலையில் ஆரம்பித்து மாலை முடிக்கப்போகும் இந்த உண்ணாவிரதத்திற்கு மதிப்பளித்து உங்கள் கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ன ?

மீனவர்களின் உயிர்களும், அவர்களின் நலனும் முதல்வருக்கு முக்கியமேயில்லையா என்ன ? இதுவரை கடிதம் மட்டும் எழுதிக்கொண்டிருந்தார். இப்போது ஒப்புக்கு ஒரு உண்ணாவிரதம். வேறு எந்த உருப்படியான யோசனையும் தோன்றாத அளவுக்கு அறிவு பஞ்சமா ஆள்வோரிடம்?

ஏன் அனைத்துக்கட்சியையும் கூட்டி ஆலோசிக்க கூடாது?

நாளை ஏதாவது ஒரு பிரச்சனைக்கு, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதம் நீங்கள் அறிவித்தாலும், அதையும் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர எங்களால் வேறு என்ன செய்யமுடியும்? Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•10:34 AM
இன்றைய செய்தித்தாள்களில் கண்ட இரண்டு செய்திகள் ஒரு நல்ல செயலை முதல்வர் தொடங்கியிருப்பதை தெரிவித்தன.

முத‌ல் செய்தி: தூத்துக்குடி துறைமுக‌த்தின் ஒன்ப‌தாவ‌து ச‌ர‌க்கு த‌ள‌த்தை முத‌ல்வ‌ர் க‌ருணாநிதி சென்னை த‌லைமை செயல‌க‌த்தில் இருந்து "வீடியோ கான்ப‌ர‌ன்ஸிங்" முறையில் தொட‌ங்கிவைத்துள்ளார்.

2 வ‌து செய்தி: த‌ஞ்சையில் அர‌சு கேபிள் க‌ழ‌க‌த்தின் செய‌ல்பாட்டை முத‌ல்வ‌ர் க‌ருணாநிதி சென்னை த‌லைமை செயல‌க‌த்தில் இருந்து "வீடியோ கான்ப‌ர‌ன்ஸிங்" முறையில் தொட‌ங்கிவைக்கின்றார்.

இப்பதிவின் நோக்கம் தூத்துக்குடி துறைமுகத்தின் சரக்கு தளத்தை பற்றியோ, அல்லது அரசு கேபிள் கழகத்தை பற்றியோ அல்ல.

இந்த இரண்டு திட்டங்களையும் தொடங்கி வைத்த வழி இன்றையக் காலகட்டத்தில் மிகச் சிறந்த வழி. அதற்கு பாராட்டத்தான் இந்த பதிவு.

ஒரு முதலமைச்சர், பிரதமர், அமைச்சர்கள் போன்றோர் வெளியூர் பயணம் செய்ய அரசின் வழிகாட்டும் விதிமுறைகள் பல உள்ளன.

முதல்வர் வெளியூர் பயணம் செய்கின்றார் என்றால் அதற்கான ஏற்பாடுகள் குறைந்தபட்சம் ஒரு 15 நாட்களுக்கு முன்னால் இருந்தே தொடங்கிவிடும். காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் முதற்கொண்டு எல்லா அரசு அதிகாரிகளும் இதே வேலையாகத்தான் இருப்பார்கள். அரசு பணம் எல்லாவற்றிற்கும் செலவாகும்.

இது அரசுக்கு ஏற்படும் செலவு. அதைவிட முதல்வர் பயணத்தால் போக்குவரத்து நிறுத்தம் போன்றவை பொது மக்களுக்கு இடைஞ்சல்.

இங்கு நான் முதல்வர் கருணாநிதியின் பயண எளிமையைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். முடிந்த அளவுக்கு இவர் இரயில் பயணங்களைத்தான் மேற்கொள்வார். மிக குறைந்த அளவே விமானங்களில் செல்வார். அதுவும் பயணிகள் விமானத்தில்தான் செல்வார். அப்படி செல்லும் போதும் கூட பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. தனிவிமானத்தில் இவர் சென்றதாக இதுவரை நான் அறிந்ததில்லை. மேலும் இவர் பயணிக்கும் பாதையில் போக்குவரத்து மிக குறைந்த நேரமே நிறுத்தப்படும்.

சென்னையில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கே ஹெலிகாப்டரிலும், சாலை வழிப்பயணம் என்றால் பயணிகள் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தியும் சாதனைகள் புரிந்த முன்னாள் முதல்வரைக்குறித்து நான் தனியாக எழுத வேண்டியதில்லை.

மேலும் சாதரணமாக முதல்வர் ஒரு ஊருக்கு வருகின்றார் என்றால் அவர் சார்ந்த கட்சிக்காரர்கள் செய்யும் ரகளை இருக்கின்றதே அது சொல்லி மாளாது.
இது எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தும்.

ஒரு ஊருக்கு அரசு விழாவாக சென்றாலும், கட்டாயம் கட்சி பொதுக்கூட்டம் ஒன்றிலும் முதல்வர் கலந்துகொள்வார். கட்சி பொதுக்கூட்டத்திற்காக இவர்கள் வசூல் செய்வதும், ஊரெல்லாம் கட்சிகொடியை கட்டுவதும், தோரணங்கள், கட் அவுட்கள் என்று சாலைகளை பெயர்பது இவையெல்லாம் தவிர்க்க முடியாத நிகழ்வுகள்.

ஆக அரசு பணத்திற்கும் வீண் செலவு, அரசு அதிகாரிகளுக்கும் அதிக வேலைப்பளு, செலவு, மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு நன்கொடை செலவு, சாலைகளுக்கு பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கும் வீண்சிரமம் என எல்லாவற்றையும் தவிர்த்து, அதுவும் எரிபொருட்களின் விலை தாறுமாறாக ஏறியுள்ள இந்த நிலையில் முதல்வர் தூத்துக்குடிக்கும், தஞ்சைக்கும் பயணித்து இத்திட்டங்களை தொடங்கிவைக்காமல் , சென்னை தலைமை செயலகத்தில் இருந்தே வீடியோ கான்பரன்ஸிங் முறையில் தொடங்கி வைத்தது மிக நல்லது.

நேரில் சென்றே ஆக வேண்டிய நிகழ்ச்சிகளைத்தவிர்த்து மற்ற நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் இதே முறையில் அமைத்தால் அரசுப்பண செலவு, கால விரயம், மக்கள் சிரம் எல்லாம் தவிர்த்துவிடலாம்.

அமைச்சர்கள் செல்வதற்கு இவ்வளவு கெடுபிடிகள் இல்லையென்பதால், அமைச்சர்கள் எல்லோரும் பயணங்கள் செய்து மக்கள் பணியாற்றலாம்.

இந்த வாரம் ஞாநியும் தனது ஓ பக்கத்தில் இதற்காக முதல்வருக்கு பூச்செண்டு கொடுப்பார் என நம்புகின்றேன். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•6:43 PM
அபி அப்பா பதில்களை இரண்டு பாகங்களாகத் தந்திருக்கின்றார் ( பாகம் 1, பாகம் 2) மிக்க நன்றி அபி அப்பா.
ஆனால் பல இடங்களில் கலைஞருக்கே உரிய வார்த்தை விளையாட்டுக்களை காணமுடிகின்றது.

மீண்டும் மீண்டும் நான் மிட்டாய், உணவு உதாரணத்தை உபயோகிக்க வேண்டியிருக்கின்றது. மிட்டாய் கொடுப்பதை தவறு என்று கூறவில்லை.ஆனால் உணவு அளித்துவிட்டு அதை கொடுங்கள் என்றுதானே சொல்கின்றோம்.
இலவச தொலைகாட்சி வழங்குவதால் எந்த வளர்சிப் பணி பாதிக்கின்றது என்று கேட்டுள்ளீர்கள். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் தீட்டப்பட்ட ஒன்று?
10 ஆண்டுகளுக்கு மேலாக திட்டம் கிடப்பில் போடப்பட்டு இன்று 10 மடங்கு அதிகமான செலவில் நிறைவேற்றப்படுகின்றது. அதுவும் ஜப்பான் நாட்டு வங்கியின் நிதியுதவியுடன். இத்தனை நாட்கள் தள்ளிப்போனதற்கு காரணம் நிதியில்லை என்பது தான்.
குடிநீர் திட்டத்திற்கு தேவை 1334 கோடி ரூபாய், இதற்கு அந்நிய நாட்டு நிதியுதவி தேவை. ஆனால் இலவச தொலைகாட்சி திட்டத்திற்கு எந்த நாட்டு வங்கியின் நிதியுதவியும் பெறாமல் 2000 கோடி ரூபாய் செலவழிக்கின்றோம் , இது நியாயமா சொல்லுங்கள்?

இலவசம் என்று கூறி மக்களை வீணாக்க வேண்டாம் என்றுதானே எல்லோரும் வேண்டுகின்றோம். நம் வரிப் பணம் தானே அய்யா இந்த இலவச திட்டங்களில் வீணாய் போகின்றது?
இன்னும் சாலைகள் இல்லாத, மின்வசதியில்லாத,பள்ளியில்லாத கிராமங்கள் எத்தனை உள்ளன தமிழகத்தில்? மின்வசதியே இல்லாத கிராமங்களுக்கு கூட இலவச தொலைகாட்சி கொடுத்த செய்தியும் நாம் படித்தோமே. ஆக அடிப்படை தேவைகளையே பூர்த்தி செய்யாமல் ஏன் ஆடம்பர பொருளை இலவசமாக கொடுக்க வேண்டும்?

ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் 30 ரூபாய் தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை வரவேற்கின்றேன், இதனால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு 100 கோடி. ஆனால் சினிமா கேளிக்கை வரி ரத்தால் ஏற்படும் இழப்பு எவ்வளவு ?
வரிவிலக்கு அளிப்பதனால் பலனடைவது யார்? திரைத்துறையில் இருக்கும் சாதாரண தொழிலாளர்களா? கோடிகளில் புரளும் தயாரிப்பாளர்கள் தானே? இதனால் ஏற்பட்ட நன்மைகள் என்று ஏதாவது உண்டா? குறைந்த பட்சம் திரையரங்குகளிலாவது கட்டணம் குறைந்ததா? ஏன் உள்ளவர்களுக்கே கொடுக்க வேண்டும் ?
ஒரு நிறுவனத்தில் வேலை பார்பவர்கள் அதன் முதலாளிக்கு லாபம் ஈட்டி தருபவர்கள், ஊழியர்கள் அதிக நேரம் வேலை பார்க்க அதிக சம்பளம் கொடுக்கலாம். ஆனால் ஒரு அரசாங்கம் அப்படி செய்வதை எப்படி சரி என்று சொல்வது ? லாபம் வரும் என்றால் ஊக்கத் தொகை அளிக்கலாம். திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு எதற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்? அவர்களால் அரசுக்கு ஏதேனும் லாபம் வருகின்றதா என்ன?
கேளிக்கை வரி விதித்தால் திரைப்படத்தொழில் நசிந்துவிடுமா? இப்போது கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டிருப்பதால் மட்டும் சாமன்ய தொழிலாளர்கள் எல்லாம் மாடி வீட்டு மகாதேவர்களாகவா இருக்கின்றார்கள்? கேளிக்கை வரி ரத்து திரைப்படத்துறையில் வேலை பார்க்கும் சாமன்யர்கள் ஆகட்டும், மற்ற சாமன்யர்களாகட்டும், யாருக்கும் உபயோகம் இல்லாத ஒன்று என்பதே உண்மை.
//" துபாயில் கடந்த 2 மாதங்களாக விஷம் போல விலைவாசிகள் ஏறி வந்துவிட்டன. 2 மாதம் முன்னதாக ஒரு கிலோ அரிசி 27 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு 102 ரூபாய். நம்புங்கள் உண்மை. ஆனால் உலகத்திலேயே 2 ரூபாய்க்கு அரிசி தமிழகத்தில் மட்டுமே கிடைக்கின்றது. துபாய் காசு 20 காசுக்கு 1 கிலோ அரிசி. இது சாதனையா இல்லை வேதனையா? முன்னே போனா கடிக்கிறீங்க பின்னே போனா உதைக்கிறீங்கப்பா. இப்படி ஒரு கேள்வி கேட்டு உங்கள் பதிவை நகைச்சுவை என வகைப்படுத்தி இருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும்."//

துபாயில் அல்ல அய்யா, இங்கு சிங்கப்பூரிலும் அரிசி விலை 4 மடங்கு உயர்ந்துவிட்டது. அதற்கு காரணம் என்னவென்றால், இந்தியாவில் அதிகரித்துவரும் அரிசி விலை உயர்வைத்தடுக்க மத்திய அரசு, அரிசு ஏற்றுமதியை தடை செய்துவிட்டது.
வெளிநாடுகளில் அரிசி இருப்பு குறைந்துவிட்டதாலும், நெருக்கடியை பயன்படுத்தி லாபம் பார்க்கும் வியாபரிகளாலும் தான் இப்படி விலை உயர்ந்துவிட்டது.
2 ரூபாய் அரிசி திட்டத்தில் நான் கடிக்கவும் இல்லை, உதைக்கவும் இல்லை. போலி குடும்ப அட்டைகளை ஒழியுங்கள். மக்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்தி அவர்கள் எல்லோரையும் போல் உண்மையான விலையை கொடுத்து வாங்கும் நிலைக்கு உயர்த்துங்கள். இப்படி சலுகைகளையும், இலவசங்களையும் கொடுத்து சோம்பேறிகள் ஆக்காதீர்கள் என்றுதான் சொல்கின்றேன்.
இதில் நகைச்சுவை என்ன இருக்கின்றது என்று தெரியவில்லை.
//" கலைஞருக்கும் கடலோர காவல் படைக்கும் என்ன சம்மந்தம். கலைஞருக்கும் கடலுக்கும் உள்ள ஒரே தொடர்பு அவரை கடலில் தூக்கி போட்டால் கட்டுமரமாக மிதப்பார். நீங்கள் அதில் ஏறி பயணம் செய்யலாம் அவ்வளவே!! தமிழ் நாட்டின் புலிமலைப்பட்டியில் ஊர்காவல் படையில் வேலை பார்த்து கொண்டு ராவல்பிண்டி ரகீம்கானை பிடித்து வந்து லாக்கப்புல வச்சி எட்டு பக்க "தமில்" வசனத்தை பேசி பேசி அவன் டவுசரை உருவும் விசயகாந்து இல்லைப்பா கலைஞர்!! "//

அண்ணண் லக்கிலுக் அவர்களின் பதிவுக்கு நான் எழுதிய பதிலை நீங்கள் படிக்கவில்லை என்பது, கடற்படை குறித்து நீங்கள் எழுதியுள்ளதில் இருந்தே தெரிகின்றது. விசயகாந் செய்வது திரைபடத்தில், அதுபோல் ஒருவேளை அவரே முதல்வரானாலும் செய்ய முடியாது.

அதே போல் கலைஞர் அல்ல, எவரை தூக்கி கடலில் போட்டாலும் யாரும் கட்டுமரமாக முடியாது.
கலைஞரால் கட்டுமரமாக முடிந்தால் , விசயகாந்தும் ராவல்பிண்டி ரகீம்கானை கைது செய்யமுடியலாம். (இதனால் நான் விசயகாந்தின் ரசிகன் என்றோ, அவரது கட்சிக்காரன் என்றோ நினைத்து விடாதீர்கள்)
ஈழத்தமிழர்களை கொன்று குவிப்பதை தான் தடுக்க முடியவில்லை, குறைந்த பட்சம் நம் இந்திய தமிழர்களை சிங்களப்படைகள் கொல்வதைக் கூடவா பார்த்துக்கொண்டு சும்மாயிருப்பது?
மத்திய கூட்டணி ஆட்சியில் முக்கியத்துவம் வய்ந்த தலைவரும், பாதிக்கப்படும் தமிழர்களின் முதல்வரும் ஆன நம் கலைஞர் ஏன் இதற்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்ககூடாது?

போராடி பெற்ற அமைச்சகங்கள் மக்களுக்கு நன்மை செய்யத்தான் என்று சொன்னீர்கள் உண்மைதான், ஆனால் திறமையாக செயல்பட்ட தயாநிதிமாறனின் பதவியை குடும்ப சண்டையில் பறித்தபின் அதே துறைக்கு நியமிக்கப்பட்ட ராசா என்ன செய்கின்றார்? தயாநிதி அளவுக்கு திட்டங்கள் இல்லையே ? இப்போது மக்கள் நலன் எங்கு சென்றது ? மகனின் நலன் தானே முன் நின்றது?

மற்றபடி செயலலிதா வீட்டில் கோழி திருடிய கதையெல்லாம் உங்கள் வார்த்தைசித்து , அதற்கு நான் என்ன சொல்வது, படித்து ரசிக்கின்றேன்.
//"திமுகவில் இருக்கும் 2 கோடி உருப்பினர்களின் வீட்டு திருமணத்துக்கும், துக்க நிகழ்வுகளுக்கும் கலைஞர் போய் வந்தது போல தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் மட்டுமல்ல அகில உலகத்திலும் ஏதாவது ஒரு தலைவனை காட்டமுடியுமா தங்களால்??? அவர் நடத்தி வைத்த திருமணங்கள் எத்தனை? போய் வந்த துக்க நிகழ்ச்சிகள் எத்தனை? இண்டர்காம் தலைவரா அவர். கொஞ்சமாவது மனசாட்சியோடு கேள்வி கேட்க வேண்டாமா? தமிழகமே அவருக்கு உடன்பிறப்பு தான்! சந்தேகமே இல்லை!"//
ஆகா என்ன அருமையாக என்கேள்வியை திசை திருப்பி விட்டீர்கள்? கலைஞரை நான் என்ன எல்லா தொண்டன் வீட்டு நல்ல, கெட்ட காரியங்களில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றா கேட்டேன்? பதவியை ஏன் குடும்பத்தினருக்கே தருகின்றார் என்று தானே கேட்டேன்?
தகுதி வாய்ந்த எத்தனையோ கட்சிக்காரர்கள் இருந்த போதும் ஏன் கனிமொழிக்கும், கயல்விழிக்கும் வாய்பளிக்க வேண்டும்? இதற்கு பதிலையே காணோம்?
அரசு கேபிள் கழகத்தை செயலலிதா ஆரம்பிக்க முயன்ற போது அதை தடுக்க மாநில ஆளுநரிடம் புகார் கொடுத்த அதே கலைஞர் இன்று ஏன் அரசு கேபிள் கழகம் ஆரம்பிப்பதில் இத்தனை தீவிரம் காட்ட வேண்டும் ? அரசு கேபிள் கழகம் குறித்த கேள்விக்கு உங்களிடம் இருந்து பதில் ஒன்றும் இல்லையே ?

சேது சமுத்திர திட்டம் மிக அருமையானத் திட்டம்தான் அதை நான் குறை சொல்லவில்லை.
ஏழைகளுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டம் மிக நல்லத் திட்டம். இது தான் தூண்டிலை கையில் கொடுப்பது. அவனுக்கு தேவையான் மீனை அவனே பிடித்துக்கொள்வான் அல்லவா? அதை நான் வரவேற்கின்றேன்.

என் கேள்விகள் சாதாரணமாக எல்லோர் மனதிலும் தோன்றும் சந்தேகங்கள். எல்லாத் திட்டங்களையும் எதிர்பதோ, அல்லது விதண்டாவாதம் செய்வதோ என் நோக்கம் அல்ல. நானும் ஒரு திமுக அபிமான குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் , உரிமையுடன் தான் இந்த கேள்விகளை கேட்கின்றேன். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•8:23 PM
கலைஞருக்கு நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் சார்பாக பதிலளித்த லக்கி லுக் அண்ணண் அவர்களுக்கு எனது நன்றிகள்.

இது அவருடைய பதிலுக்கு பதில் பதிவு. ஆனால் இதிலும் சில கேள்விகள் இருக்கலாம். ஆனால் லக்கிலுக் அண்ணா, இதை விதண்டாவாதமாகவோ அல்லது எதிர்கட்சிகளின் பாணியிலோ கேட்கவில்லை. இந்த கேள்விகள் பெரும்பான்மையானவர்களின் மனதில் இருக்கின்றது. ஒரு ஆரோக்கியமான விவாதமாக இதை பாருங்கள். விவாதம் தானே ஒழிய விதண்டாவாதம் அல்ல.

//"தொலைக்காட்சி போன்றவை ஆடம்பரப் பொருட்களாக பார்க்கப்பட்டது சென்ற நூற்றாண்டில், இப்போது அவை அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. முன்பெல்லாம் ஏழைகளுக்கு இலவச பல்பொடி, இலவச செருப்பு வழங்கியது போல இப்போது இலவச டிவி வழங்கப் போகிறோம் என்று தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்தோம். இத்திட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் நாம் ஆட்சிக்கே வந்திருக்க முடியாது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. ஏழைகள் இருக்கும் வரை இலவசத் திட்டங்கள் அவசியமே."//

தொலைகாட்சி என்ப‌து ஒரு ஆட‌ம்ப‌ர‌பொருளாக‌ அல்லாம‌ல் அத்தியாவ‌சிய‌ பொருளாக‌ மாறிவிட்ட‌து என்கின்றீர்க‌ள். ஆனால் நான் என் கேள்வியில் குறிபிட்டிருந்த‌ப‌டி, ப‌சித்த‌வ‌னுக்கு தேவை மிட்டாயா, உணவா?

ம‌க்க‌ள் தீர்ப்பே ம‌கேச‌ன் தீர்ப்பு என்றால் இப்ப‌டி கூட்ட‌ணிக‌ளின் ப‌ல‌த்தில் இல்லாம‌ல் த‌னித்தே ஆட்சியை பிடிக்கும் அள‌வு த‌னிப்பெரும்பான்மை பெற்றிருக்க‌லாமே? அப்போ இந்த இலவசத் திட்டங்களை பிடிக்காதவர்களும் இருக்கின்றார்கள் என்றுதானே அர்த்தம் ?
ஏழைக‌ள் இருக்கும் வ‌ரை இல‌வ‌ச‌த்திட்ட‌ங்க‌ள் அவ‌சிய‌ம் என்கின்றீர்க‌ள். ஆனால் ஏழைக‌ள் முன்னேற்ற‌த்திற்கு என்று என்ன‌ திட்ட‌ம் இருக்கின்ற‌து? ஏழைக‌ள் ஏழைக‌ளாக‌வே இருந்து கொண்டிருந்தால், எத்த‌னை கால‌ம்தான் இல‌வ‌ச‌ங்க‌ளாக‌வே கொடுத்துக்கொண்டிருப்ப‌து?
எத்த‌னைகால‌ம் தான் மீனை கொடுப்ப‌து? தூண்டிலை கொடுங்க‌ள் என்றுதானே சொல்கின்றோம்.

//"அய்யா நேற்று கூட ஒரு 300 கோடி ரூபாய் அளவுக்கு திருநெல்வேலியில் டயர் தொழிற்சாலைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கலைஞரின் முந்தைய 96 ஆட்சியை விட இந்த ஆட்சியில் கல்வித்துறையில் புரட்சி நிகழ்ந்துவருகிறது. அன்றாடம் செய்தித்தாளை வாசிக்கவும். பொங்கிவரும் புனலென புதுப்புது திட்டங்கள் கலைஞரின் ஆட்சியில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தீட்டப்பட்டு, செயலாக்கப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டரை ஆண்டுகளில் இந்த ஆட்சி முழுமை பெறும்போதுதான் இதுவரை வந்த கலைஞரின் ஆட்சிகளிலேயே இது தலைசிறந்த ஆட்சிக்காலம் என்பதை உணர்வீர்கள்."//

கல்வித்துறையில் ஏற்பட்டிருக்கும் புரட்சியை நானும் ஒத்துக்கொள்கின்றேன். கல்வித்துறையை இரண்டாக பிரித்து இரு அமைச்சர்களை நியமித்தது வரவேற்கதக்கது. குறிப்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களின் பணி மிகக்குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. அதை நான் மறுக்கவில்லை. குறிப்பாக‌ ச‌மீப‌த்தில் அவ‌ர‌து தொகுதியில் அவ‌ர் ஏற்பாடு செய்த வேலை வாய்ப்பு முகாம் மிக‌ அதிக‌ள‌வில் ப‌ல‌ருக்கு வேலை வாங்கிகொடுத்தது . அதை எல்லாம் நான் ம‌றுக்க‌வில்லை.

//"துணைநகரத் திட்டம் வேறுவழியில் கண்டிப்பாக நிறைவேறும். அனேகமாக திருப்பெரும்புதூருக்கு அருகில் துணைநகரம் அமையலாம். அதுபோலவே விமானநிலைய விரிவாக்கத்துக்கும் மாநில அரசு கண்டிப்பாக நிலம் ஒதுக்கித்தரும். புதியதாக உருவாகப்போகும் துணைநகரத்தை ஒட்டி அந்த விரிவாக்கம் இருக்கும்."//
சீக்கிரம் நடக்கும் என்று சொல்கின்றீர்கள், நம்புவோம். ஆனால் இது போன்ற நல்ல திட்டங்களில் ஆர்வம் காட்டாமல் ஏன் அரசு கேபிள் கழகம் மற்றும் கலைஞர் டிவியிலேயே கவனத்தைக் காட்ட வேண்டும்?இந்த திட்டங்கள் எல்லாம் கிணற்றில் போட்ட கல்லாக அல்லவா இருக்கின்றன?

//"சினிமா என்ற தொழில் கிட்டத்தட்ட சிதையும் நிலையில் உள்ளது. சினிமாவில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கானோரை சினிமாவில் இருக்கும் பெரிய மனிதர்கள் காப்பார்களோ இல்லையோ, அவர்களுக்காக கலைஞர் எப்போதும் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவர்களது உரிமைகளுக்கு குரல் கொடுப்பார். சினிமாத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதியே அவர்களுக்க் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. கேளிக்கைவரி சலுகை வழங்கினாலும் கூட சினிமாத்துறை மூலமாக மற்ற வகைகளில் அரசுக்கு கணிசமான வருவாய் வந்துகொண்டு தானிருக்கிறது."//
சினிமா துறையிலும் அடித்தட்டு மக்கள் இருக்கின்றார்கள். ஆனால் உண்மையாக சொல்லுங்கள், கேளிக்கை வரிச்சலுகைகளால் அவர்கள் தான் பலனடைகின்றார்களா? பலனடைவது தயாரிப்பாளர், விநியோகிப்பவர், மற்றும் திரையர‌ங்கு உரிமையாளர்கள் தானே? எல்லாத் தயாரிப்பாளரும் நேர்மையாய் எல்லா கணக்கு வழக்கையும் தயாரித்து வரி கட்டி கொண்டா உள்ளார்கள்? அங்கு கறுப்பு பணம் அதிகம் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? இப்படி கறுப்பு பணம் மூலம் ஏற்கனவே வரி ஏய்பவர்களுக்கு ஏன் மேலும் வரிச்சலுகை ? மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரியை எடுத்துக்கொண்டுதானே சம்பளமே கிடைக்கின்றது. இவர்கள் நினைத்தால் கூட வரி ஏய்ப்பு செய்ய முடியாது. ஆனால் திரைப்படத்துறை அப்படியா?

//"மகத்தான திட்டம் என்று சொல்கிறீர்கள். ஒரு மகத்தான திட்டம் எப்படி சோம்பேறிகளையும், கடத்தல்காரர்களையும் உருவாக்க முடியும்? 2 ரூபாய் அரிசித்திட்டம் மிகச்சிறப்பாகவே நடக்கிறது. இதுவரை தினமலர் கூட சொல்லாத ஒரு புகாரை நீங்கள் கற்பனையாக சொல்லுவதாகவே நினைக்க வேண்டியிருக்கிறது."//
ம‌க‌த்தான‌ திட்ட‌ம்தான் ஆனால் அது த‌வ‌றாக‌ உப‌யோகிக்க‌ப்ப‌டுவ‌துதான் பிர‌ச்ச‌னையே. ஒரு மாத‌த்திற்கு 30கிலோ அரிசி 2ரூபாய் விலையில் வெறும் 60 ரூபாயில் வாங்கிவிட‌லாம்.இது ஒரு கூலி தொழிலாளியின் ஒரு நாள் ச‌ம்ப‌ள‌த்தை விட‌ குறைவு. ஆக‌ ஒரு மாத‌ தேவையை ச‌மாளிக்க‌ 10 நாட்க‌ள் வேலை பார்த்தால் போதும் என்று தொழிலாள‌ர்க‌ள் நினைக்கின்றார்க‌ள். இது எங்க‌ள் கிராம‌த்தில் கூட‌ ந‌ட‌க்கின்ற‌து. வ‌ய‌ல்க‌ளில் விவ‌சாய‌ வேலைக்கு வ‌ரும் கூலித்தொழிலாள‌ர்க‌ள், ஒழுங்காக‌ வ‌ருவ‌தில்லை. ஒரு சில‌ர் இதை ந‌ன்றாக‌ உப‌யோகித்து முன்னேறுகின்ற‌ன‌ர். ஆனால் பெரும்பான்மையின‌ர் இத‌னால் சோம்பேறிக‌ளாகின்ற‌ன‌ர். ச‌ரி, க‌ட‌த்த‌ல் எப்ப‌டி ந‌ட‌க்கின்ற‌து ? அடிக்க‌டி நியாய‌ விலைக்க‌டை அரிசி க‌ட‌த்தப்ப‌டுவ‌துகுறித்து நீங்க‌ள் செய்திதாள்க‌ளில் ப‌டித்திருப்பீர்க‌ள். த‌மிழ்நாட்டில் மொத்த‌ம் 60 ல‌ட்ச‌ம் போலி குடும்ப‌ அட்டைக‌ள் இருப்ப‌தாக‌ உண‌வுத்துறை அமைச்ச‌ர் திரு.வேலு ச‌ட்ட‌ச‌பையில் கூறியுள்ளார். ஒரு அட்டைக்கு ஒரு மாத‌த்திற்கு 30கிலோ வீத‌ம் 60 ல‌ட்ச‌ம் அட்டைக‌ளுக்கு எவ்வ‌ள‌வு அரிசி இந்த‌ குறைந்த‌ விலையில் செல்கின்ற‌து ? அது எல்லாம் க‌ட‌த்த‌ல்கார‌ர்க‌ளின் கைக‌ளுக்குத்தானே செல்கின்ற‌து? போலி குடும்ப‌ அட்டைக‌ளை க‌ளைய‌ இன்னும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வில்லையே ? போலி அட்டைக‌ள் அனைத்தும் இந்த‌ ஆட்சியில் கொடுக்க‌ப்ப‌ட்ட‌வை என‌ நான் சொல்ல‌வில்லை. ஆனால் க‌ளைய‌ தீவிர‌மான‌ ந‌ட‌வ‌டிக்கை தேவை என்றுதான் சொல்கின்றேன்.

//"வேறு என்ன செய்யமுடியும்? கலைஞரா துப்பாக்கி எடுத்துக்கொண்டு போய் அவர்களை காக்க முடியும்? இந்திய மீனவர்கள் கொல்லப்படும் போதெல்லாம் கலைஞர் அதற்கான வருத்தங்களை தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார், நடவடிக்கை கோருகிறார். கடற்பாதுகாப்பு மத்திய அரசின் கையில்தானே இருக்கிறது?"//
க‌லைஞ‌ரை துப்பாக்கி தூக்க சொல்ல‌வில்லை. ஒரு முத‌ல‌மைச்ச‌ர், அதுவும் ம‌த்தியில் ஆளும் கூட்ட‌ணியில் மிக‌ செல்வாக்குள்ள‌ த‌லைவ‌ர், வெறும் வ‌ருத்த‌ம் தெரிவிப்ப‌தும், க‌டித‌ம் எழுதுவ‌தும் ம‌ட்டும்போதுமா? ஒரு நிர‌ந்த‌ர‌ தீர்வுகாண‌ வலியுறுத்த‌ வேண்டாமா? கூறிய‌ப‌டி இலாக்கா ஒதுக்காமையால் ப‌த‌வியேற்ற‌ திமுக‌ அமைச்ச‌ர்க‌ள் த‌ங்க‌ள் பொறுப்புக‌ளை ஏற்காமால் போராட‌வில்லை? அதுபோல் த‌மிழ‌ர்க‌ளின் உயிர்காக்க‌ ஒரு அழுத்த‌மான‌ போராட்ட‌ம் வேண்டாமா? இவ‌ர் அழுத்த‌ம் கொடுத்தால் ம‌த்திய‌ அர‌சு கேட்காம‌லா போகும்?

//" கலைஞரின் வாழ்வே போராட்டங்களால் நிறைந்தது. இதுகூட தெரியாமல் நீங்கள் எப்படித்தான் தமிழனாக இருக்கிறீர்களோ தெரியவில்லை. 1938 இந்தியெதிர்ப்பு போராட்டத்தில் தொடங்கி கல்லக்குடி போராட்டம், 1965 இந்தியெதிர்ப்பு போராட்டம், 1976 மிசா சட்டத்தை எதிர்த்துப் போராட்டம், 1980களில் ஈழத்தமிழருக்கான போராட்டம், எப்போதுமே இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் என்று போராளியாகவே கலைஞர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்."//
க‌லைஞ‌ரின் போராட்ட‌ங்க‌ள் தெரியாத‌ த‌மிழ‌ன் இல்லை நான். அவ‌ர் ஏற்க‌ன‌வே பல‌ போராட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்திய‌வ‌ர் என்ப‌தால் தான் த‌ற்போதும் அவ‌ரிட‌ம் இருந்து எதிர்பார்கின்றோம். 1980 க‌ளில் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ போராடினார். ஆனால் இன்ற‌ள‌வும் ஈழ‌ப்பிர‌ச்ச‌னை தீராம‌ல் தானே இருக்கின்ற‌து? இப்போது ஏன் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வ‌ளிக்க‌வில்லை? ச‌ட்ட‌ம‌ன்ற‌த்தில் தீர்மான‌மிய‌ற்றிய‌து ம‌ட்டும் போதாதே, அந்த‌ தீர்மானாத்தால் எந்த‌ உப‌யோக‌மும் இல்லை என்பது உங்க‌ளுக்கே ந‌ன்றாக‌ தெரியும். அது ம‌ட்டும் போதும் என்று நினைக்கின்றீர்க‌ளா?

//"இந்த கேள்வி மூலமாக என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்? கள்ளச்சாராயத்தை சட்டப்பூர்வமாக அனுமதிக்கச் சொல்கிறீர்களா? பூரணமதுவிலக்கை கடுமையாக வற்புறுத்திய காந்தி பிறந்த குஜராத்தில் கூட கள்ளச்சாராயச் சாவுகள் நடந்து வருகிறது."//

பூர‌ண‌ ம‌துவில‌க்கு வேண்டும் என்று சொல்ல‌வில்லை. க‌ள்ள‌ சாராய‌த்தை ஒழியுங்க‌ள் என்றுதான் சொல்கின்றேன். டாஸ்மாக்கில் இந்தியாவில் த‌யாரிக்கும் அய‌ல்நாட்டு ம‌துவ‌கைக‌ளை (IMFL) விற்கும் போது ஏன் க‌ள் இற‌க்க‌ அனும‌திக்க‌ கூடாது ? குடிப்ப‌வ‌ர்க‌ள் குடிக்க‌த்தான் செய்வார்க‌ள், அவ‌ர் அவ‌ர்களாகப் பார்த்து திருந்தினால்தான் உண்டு. ம‌ற்ற‌ ம‌துவ‌கைக‌ளோடு ஒப்பிடும்போது க‌ள் ஒன்றும் கொடிய‌து அல்ல‌வே? அதை ஏன் அனும‌திக்க‌ கூடாது?

//"தமிழை செம்மொழியாக ஆக்காமல் இருந்திருந்தால் எல்லாத் தமிழன் வீட்டிலும் அடுப்பு எரிந்துவிட்டிருக்குமா? - சும்மா ஏதாவது வார்த்தைஜாலத்தோடு கேட்கவேண்டுமே என்று கேட்காமல் கொஞ்சமாவது சிந்தித்து கேள்விகள் கேட்கவும்."//
நீங்க‌ள் தான் என‌து கேள்வியை புரிந்து கொள்ள‌வில்லை. த‌மிழை செம்மொழியாக்கிய‌து ம‌ட்டும் போதாது, த‌மிழ‌னின் வாழ்வும் செம்மையாக‌ வ‌ழிசெய்ய‌ வேண்டும் என்று தான் கேட்டுள்ளேன். இதில் வார்த்தை ஜால‌ம் ஏதுமில்லை. க‌லைஞ‌ரிட‌மே வார்த்தை ஜால‌ம் காட்டும் அள‌வுக்கு நான் பெரிய‌வ‌ன் இல்லை.

//" உங்களுக்கு அப்படி ஒரு ஐயம் ஏற்பட்டதற்காக வருந்துகிறோம். திமுகவில் கலைஞர் குடும்பத்தை தவிர வேறு எவருமே இல்லையா? தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் இரண்டு கோடி திமுகவினர் இருக்கிறார்கள். அந்த இரண்டு கோடி பேரும் கலைஞர் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்கிறீர்களா? "//
திமுக‌ வில் 2 கேடிக்கும் மேல் உறுப்பின‌ர்க‌ள் இருக்கின்றார்க‌ள்,ஆனால் க‌ட்சியில் எந்த‌ பொறுப்பிலுமே இதுவ‌ரை இருந்திராத‌, க‌ட்சி ப‌ணி எதுவும் செய்யாத‌வ‌ர்க‌ளுக்கு எல்லாம் எப்ப‌டி ப‌த‌வி கிடைக்கின்ற‌து?
ஸ்டாலின் த‌விர‌ க‌லைஞ‌ர் குடும்ப‌த்தில் யார் தீவிர‌ க‌ட்சிப்ப‌ணியாற்றிய‌து? முர‌சொலி மாற‌னின் ம‌க‌ன் என்ப‌தை த‌விர‌ வேறு எந்த‌ த‌குதியும் இல்லாத‌ போதும் த‌யாநிதி மாற‌ன் பார‌ளும‌ன்ற‌ உறுப்பின‌ராகி, ம‌த்தியில் கேபின‌ட் அமைச்ச‌ராக‌வும் முடிந்த‌து. வேறு யாருக்காவ‌து இப்ப‌டி வாய்ப்பு கிடைக்குமா?
திற‌மையாக‌ ப‌ணியாற்றிய‌ போதும் சொந்த‌ குடும்ப‌ மோத‌லால் அவ‌ர‌து ப‌தவியும் ப‌றிபோய்விட்ட‌து.
இன்று க‌னிமொழிக்கு வாய்ப‌ளிக்க‌ப்ப‌ட்ட‌து எப்ப‌டி? 2 கோடி பேருக்கு மேல் உறுப்பின‌ர்க‌ளை கொண்ட‌ திமுக‌ வில் க‌னிமொழியை விட‌ அனுப‌வ‌ம் வாய்ந்த‌ க‌ட்சி ப‌ணியாற்றிய‌வ‌ர்க‌ள் இல்லையா என்ன‌?
எத்த‌னையோ த‌குதிவாய்ந்த‌, ப‌ல‌ மேடைக‌ளில் பேசிய‌ அனுப‌வமிக்க‌ க‌ழ‌க‌ பேச்சாள‌ர்க‌ளுக்கு கிடைக்காத‌ வாய்ப்பு க‌ய‌ல்விழிக்கு எப்ப‌டி கிடைத்த‌து? இதையெல்லாம் பார்க்கும் எவ‌ருக்கும் ஐய‌ம் ஏற்ப‌டத்தானே செய்யும்?

//"விதண்டாவாதமாக கேட்டாலும் பதில் கொடுத்திருக்கிறோம். "//
உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி. இது விதண்டாவாதம் இல்லை, விவாதம் தான் என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லிக்கொள்கின்றேன். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•1:59 PM
அபி அப்பா எழுதிய பதிவுக்கு நான் அளித்த பின்னூட்டம்தான் இந்த பதிவு.

அபி அப்பா, நானும் கலைஞரின் ரசிகன் தான் ஆனால் இந்த ஆட்சியில் கலைஞரின் செயல்பாடுகள் எனக்கு பிடிக்கவில்லை.எனவே கலைஞருக்கு சில கேள்விகள் உங்கள் மூலமாக.
பதில் கலைஞர் சொன்னாலும் சரி அல்லது நீங்களே அவர் சார்பாக சொன்னாலும் சரி, கருத்து சரியாக இருப்பின் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.

இலவச டிவி என்பது, பசியால் அழும் குழந்தைக்கு இனிப்பு மிட்டாய் கொடுத்து சமாளிப்பது போன்றது. மிட்டாய் பசிக்கு உணவாகாது அல்லவா, அழும் குழந்தை மிட்டாயை பார்த்து சற்றே அழுகையை நிறுத்தி சிரிக்கலாம், ஆனால் அது நிரந்தரம் அல்ல. பசி தீரும் வரை அது அழத்தானே செய்யும். இன்னும் எத்தனை காலம் தான் இப்படி இலவசங்களின் பெயரால் மக்களை ஏமாற்ற முடியும்? 1996 - 2001 ஆட்சியில் செய்த அளவுக்கு கூட இந்த ஆட்சியில் நலத்திட்டங்கள் இல்லையே?

பா.ம.க வின் நிர்பந்தத்தால் தானே துணை நகரத்திட்டம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் போன்றவற்றை அறிவித்துவிட்டு நிறுத்தினீர்கள்? அதை இப்போது தீவிரமாக செயல்படுத்தலாமே? சென்னையில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்த பல வருடங்களுக்கு பிறகு பன்னாட்டு விமான நிலையங்கள் அமையப் பெற்ற பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் இன்று புதிய நவீன விமான நிலையங்கள் அமைந்துவிட்டன. ஆனால் சென்னை இன்னும் தூங்கி வழிகின்றது.

இலவச தொலைகாட்சியிலும், அரசு கேபிள் கழகத்திலும் காட்டும் ஆர்வம் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திலும், முல்லைப் பெரியார் அணை, பாலாறு, காவிரி பிரச்சனைகளிலும் ஏன் இல்லை ?
த‌மிழ்நாட்டில் த‌மிழில் தான் திரைப்ப‌ட‌ங்க‌ளுக்கு பெய‌ர் வைக்க‌ வேண்டும் என்று திரை குடும்ப‌த்தின் மூத்த‌ பிள்ளையாகிய‌ நீங்க‌ள் சொன்னால் உங்க‌ள் சினிமாக்கார‌ர்க‌ள் கேட்க‌ மாட்டார்களா ? அத‌ற்காக‌ த‌மிழில் பெய‌ர் வைத்தால் வ‌ரிவில‌க்கு என்று அர‌சாங்க‌த்திற்கு வ‌ரும் வ‌ருமான‌த்தை விட்டுக் கொடுக்க‌த்தான் வேண்டுமா?

க‌ட‌லூர் மாநாட்டில் பெண்க‌ளின் ந‌ல‌னுக்காக‌ எரிவாயு விலையில் 30 ரூபாயை அர‌சே ஏற்கும், அத‌னால் அர‌சுக்கு 100 கோடி ந‌ட்ட‌ம் என்று சொன்னீர்க‌ளே? கேளிக்கை வ‌ரி ர‌த்தால் அர‌சுக்கு ஏற்ப‌டும் வ‌ரி இழ‌ப்பு எவ்வ‌ள‌வு ? அதை ஒரு முறை கூட‌ நீங்க‌ள் சொன்ன‌தில்லையே ஏன்? கேளிக்கை வரியை வசூலித்தால் மொத்த விலையுவர்வான 50 ரூபாயையுமே ( ஒரு சிலிண்டருக்கு ) அரசே ஏற்கலாமே?

நீங்க‌ள் கேளிக்கை வ‌ரியை ர‌த்து செய்த‌தால் திரைய‌ர‌ங்குக‌ளில் க‌ட்ட‌ண‌ம் குறைந்துள்ள‌தா? அப்ப‌டியே குறைந்தாலும் இதுவும் ப‌சியால் அழும் பிள்ளைக்கு அளிக்க‌ப்ப‌டும் இன்னொரு மிட்டாய் தானே ஒழிய‌ , ப‌சி தீர்க்கும் உண‌வில்லை.

ஒருவ‌ன் மீனை கேட்டால் அவ‌னுக்கு தூண்டிலை கொடு என்று ஒரு ப‌ழ‌மொழி உண்டு. ஆனால் நீங்க‌ள் தூண்டிலை கேட்ப‌வ‌னுக்கு கூட‌ செத்துப்போன‌ மீனையோ அல்ல‌து மிட்டாயையோ கொடுத்து , உழைக்க‌ நினைப்ப‌வ‌னையும் சோம்பேறி ஆக்குகின்றீர்க‌ள்.
2 ரூபாய்கு ஒரு கிலோ அரிசி எனும் ஒரு ம‌க‌த்தான‌ திட்ட‌த்தின் மூல‌ம் ஒரு புற‌ம் சோம்பேறிக‌ளையும், ம‌றுபுற‌ம் அரிசி க‌ட‌த்த‌ல்கார‌ர்க‌ளையும் உருவாக்கிவிட்டீர்க‌ள்.

ந‌ம் பார‌த‌ நாட்டோடு மூன்று முறை நேரடியாக‌ போரிட்ட‌ இன்றளவும் மறைமுகமாக போரிடும் எதிரியாக‌ ந‌ட‌ந்து கொள்கின்ற‌ பாகிஸ்தான் நாட்டின் க‌ட‌ற்ப‌டை கூட‌ எல்லை தாண்டும் ந‌ம் நாட்டு மீன‌வ‌ர்க‌ளை சுட்டுக் கொன்ற‌தில்லை.

ஆனால் பார‌த‌த்தின் த‌ய‌வுட‌ன் இருப்பவர்களும், நண்பர்களாக தம்மை காட்டிக்கொண்டு ஆயுதமும் இன்ன பல உதவிகளும் பெற்றுக்கொண்டு, ந‌ம் தொப்புள் கொடி உற‌வுக‌ளான‌ ஈழத் த‌மிழ‌ர்க‌ளை கொன்று குவிக்கும் இல‌ங்கை நாட்டின் க‌ட‌ற்ப‌டை ந‌ம் மீன‌வ‌ர்க‌ளை சுட்டுக் கொல்லும் போது, உட‌னே பிர‌த‌ம‌ருக்கு ஒரு க‌டித‌ம் ம‌ட்டும் எழுதுவீர்க‌ள். ( ஒரு வேளை நீங்க‌ள் எழுதும் எந்த‌ க‌டித‌மும் பிர‌த‌மருக்கு போய் சேர‌வில்லையோ ? அஞ்ச‌ல் துறை அமைச்ச‌ர் எப்போதும் உங்க‌ளுக்கு தோள் கொடுத்து கொண்டே இருப்ப‌தால் அவ‌ரை கேட்டாலும் தெரியாது).

2004ல் மத்திய அமைச்சரவையில் திமுகா விற்கு கேட்ட‌ இலாக்காக்க‌ளை ஒதுக்க‌வில்லை என‌ போராடி பெற்ற‌ நீங்க‌ள், அது போன்ற‌ ஒரு போராட்ட‌த்தை ம‌க்க‌ளுக்காக‌ ஒரு போதும் செய்த‌தில்லையே ஏன்?

த‌மிழ‌க‌ மீன‌வ‌ர்க‌ள் சுட‌ப்ப‌டும் போது ம‌த்திய‌ அர‌சின் க‌வ‌ன‌த்தை ஈர்க்க‌ இப்ப‌டி ஒரு போராட்ட‌ம் ந‌ட‌த்தி இருக்க‌லாம், அல்லது நெல்லை விட‌ உற்ப‌த்தி செல‌வுகுறைவான‌ கோதுமைக்கு ஆதார‌ விலை குவின்டாலுக்கு 1000 ரூபாய் என்றும் நெல்லுக்கு அதை விட‌ குறைவாக‌வும் நிர்ண‌யித்த‌ போது போராடியிருக்க‌லாம், ஆனால் நீங்க‌ள் அதை செய்ய‌வில்லையே?

பூரண மதுவிலக்கு வேண்டும் என்று கேட்டால் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாமல் போய்விடும் என்பதால் பூரண மதுவிலக்கு ஏற்படுத்த முடியாது என்றீர்கள். ஆனால் இப்போது மட்டும் கள்ள சாராயம் முற்றிலுமாக ஒழிந்துவிட்டதா என்ன? அவ்வப்போது கள்ளச் சாராய சாவுகளும் நடந்துகொண்டுதானே இருக்கின்றன ?

த‌மிழை செம்மொழி என்று சொன்னால் ம‌ட்டும் எல்லாத் த‌மிழ‌ன் வீட்டிலும் அடுப்பு எரிந்துவிடுமா? தமிழும் வளரவேண்டும் தமிழனும் வளரவேண்டும் அல்லவா?

ஒட்டுமொத்த தமிழர்களையும் உடன்பிறப்பே என்று அழைக்கும் நீங்கள் மொத்த தமிழகத்தையும் உங்கள் குடும்பமாக நினைத்தீர்கள் என்று அக மகிழ்ந்த எங்களுக்கு, இன்று உங்கள் குடும்பம் மட்டும்தான் ஒட்டுமொத்த தமிழகம் என நினைக்கின்றீர்களோ என்ற ஐயம் ஏற்பட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. நடப்பவை எல்லாம் அதை உறுதிபடுத்தும் விதமாகத்தான் இருக்கின்றன.

இதற்கெல்லாம் பதில் கிடைக்குமா? Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க