Author: ஜோசப் பால்ராஜ்
•7:34 PM
படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி என்று தனது வலைக்கு தலைப்பு வைத்து எழுதும் அன்பர் ப்ளீச்சிங் பவுடர் அவர்கள் சமீபத்தில் ஒரு பதிவெழுதியிருந்தார் ,தமிழீழம் மலர்ந்தால் - நாளை தமிழகத்தின் கதி?? என்ற அந்தப் பதிவிற்கு ஒரு விளக்கம்.

காஷ்மீரையும், தமிழ் ஈழத்தையும் ஒரு போதும் ஒப்பிடவே முடியாது. இந்தியாவில் காஷ்மீர் மக்களுக்கு நாம் அளித்துள்ள உரிமைகளும், சுதந்திரமும் மற்ற மாநிலங்களில் இருக்கும் நமக்கு இல்லை. ஆனால் ஈழத்தில் கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்திலும் தமிழர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு இழிவுபடுத்தப்பட்டமையால் தான் போராட்டமே ஆரம்பித்தது. இன ஒழிப்பை ஒரு அரசாங்கமே முன்னெடுத்து செய்வதால் தான் தமிழர்கள் அறவழியில் ஆரம்பித்து பலன் ஏதுமில்லாதமையால் ஆயுத போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அஹிம்சை வழிப் போராட்டம் என்பது ஒரு போராட்டமே அல்ல. அஹிம்சையால் எந்த பலனும் இல்லை என்பதற்கு இந்தியாவை தவிர வேறெங்கும் சென்று நாம் உதாரணம் தேட வேண்டியதுமில்லை.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தமைக்கு காரணம் அஹிம்சை வழிப் போராட்டம் மட்டுமே என்று நினைத்தால் அது தவறு. 1947ஐ ஒட்டிய ஆண்டுகளில் இந்தியா மட்டுமா சுதந்திரம் அடைந்தது? இலங்கை, மலேசியா என ஆசியாவிலேயே பல நாடுகள் சுதந்திரம் அடைந்தனவே அந்த நாடுகளுக்கு ஏன் ஆங்கிலேயர்கள் சுதந்திரமளித்தார்கள்? அங்கெல்லாம் ஆயுதப் போராட்டத்தை எதிர்க்க முடியாமல் சுதந்திரமளித்தார்களா அல்லது அங்கும் அஹிம்சை போராட்டம் நடந்ததா?

உண்மையான காரணம் என்னவென்றால் 1945ல் நிறைவு பெற்ற இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயர்களின் அணி வெற்றியடைந்திருந்தாலும், போரினால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் மிக அதிகம். பெருமளவில் மனித வளத்தை அவர்கள் இழந்திருந்தமையால் அவர்களது காலணி நாடுகளை நிர்வகிக்க அவர்களுக்கு போதுமான மனித வளம் இல்லாமையால் அந்தக் காலகட்டத்தில் பல நாடுகளுக்கு விடுதலை அளித்தார்கள் என்பதே உண்மை. ஒரு வேளை ஆங்கிலேயர்கள் போரில் தோல்வியடைந்து ஜப்பான், ஜெர்மனி கூட்டணி வெற்றியடைந்திருந்தால் காந்தியடிகளுக்குப் பதிலாக சுபாஷ் சந்திர போஸ் அவர்கள்தான் நம் தேசத் தந்தையாகியிருப்பார்.

ஆங்கிலேயர்கள் அல்ல அஹிம்சையை உலகிற்கு அளித்த இந்தியாவும் சேர்த்து யாரும் அதற்கு மரியாதை அளித்ததுமில்லை, அளிக்கப் போவதுமில்லை. அஹிம்சைக்கு இந்தியா மரியாதை அளிப்பதாய் இருந்தால் ஈழத்தில் உண்ணா நோன்பிருந்த திலீபனும், பூபதி அண்ணையும் இறந்திருக்க மாட்டார்களே.

காஷ்மீரில் நடப்பது அயல்நாட்டு தீவிரவாதம், அங்கு நடப்பது அந்நிய சக்திகளாலும் அவர்களது உதவியால் இயங்கும் கைகூலிகளாலும் நடத்தப்படும் தீவிரவாதம் . ஆனால் தமிழ் ஈழத்தில் நடப்பது விடுதலைப் போராட்டம். தீவிரவாதத்திற்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்.

தமிழகத்தில் இருப்போர் ஈழத்தை ஆதரிக்க காரணம் சகத் தமிழன் ஈழத்தில் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இன்னல்களும், அவலங்களும் தான். மனிதனாய் இருப்பவர்களுக்கு இயல்பாய் இருக்கும் மனிதாபிமானத்தால் உந்தப்பட்டு எழும் உணர்வுதான் இந்த ஆதரவு. என்ன தான் இதை அரசியல்வாதிகள் காவிரி, முல்லைப் பெரியாறு போல அரசியலாக்கினாலும், மக்கள் மனதில் இருப்பது சக தமிழனின் மேல் உள்ள அன்புதான்.

எந்த தமிழனும் நாளை தமிழ் ஈழம் மலர்ந்தால் தமிழ் நாட்டைப் பிரித்து தமிழ் ஈழத்துடன் இணைய வேண்டும் என்று சொல்ல மாட்டான். உங்கள் மனதில் இப்படி ஒரு எண்ணம் வந்திருப்பது உங்கள் வலைப்பூவின் தலைப்பைத் தான் நினைவு படுத்துகின்றது.

ராஜிவ் கொலையையும், ஈழத் தமிழர்கள் பிரச்சனையையும் ஒப்பிட்டுக் கொண்டே இருப்பது மிகப் பெரிய மடத்தனம் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. அதுகுறித்து விவாதிக்க ஆரம்பித்தால் அது ஒரு வட்டம் போல தொடக்கமும் முடிவும் இன்றி சுத்திக் கொண்டே தான் இருக்கும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி , தங்களுக்கு மனிதாபிமானமே இல்லை என்பதை மறைக்க வேண்டுமாணால் அந்த வாதம் உதவும்.

தமிழ் ஈழம் மலர வேண்டியது காலத்தின் கட்டாயம். இங்கும் சில அறிவு ஜீவிகள் தங்கள் திறமையை காட்ட விழைவார்கள், தமிழ் ஈழம் மலர வேண்டும் ஆனால் புலிகள் கையில் அது இருக்க கூடாது என்பார்கள். ஈழத்தின் வரலாற்றை சற்று ஆழமாகப் படித்துப் பார்தீர்களேயானால் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் தோன்றின. ஆனால் புலிகளைத் தவிர மற்றக் குழுக்கள் எல்லாம் ஒன்று மறைந்துவிட்டன, அல்லது சிங்களர்களின் கைக் கூலிகள் ஆகிவிட்டன. ( உதாரணம்: டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான்). புலிகளைத் தவிர வேறு எந்தக் குழுவும் இன்று வரை தமிழர்களின் நலனுக்காக போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. எனவே ஈழமக்களும் புலிகளைத் தவிர வேறு யாரையும் ஆதரிப்பதில்லை. இது தான் உண்மை.

//இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே புலிகளைக்கு ஆதரவாக மக்களும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் புலிகள் என்றால் அது ராஜீவை கொலை செய்த இயக்கம் என்ற அளவிலே மட்டும் மக்கள் அவர்களை அறிந்து வைத்திருக்கிறார்கள்.//

மற்ற மாநிலங்களில் இருப்பவர்களுக்கு தமிழர்களைக் குறித்து என்ன அக்கறை இருக்கும்? அவர்கள் ஏன் ஈழத்தமிழர்களைக் குறித்துக் கவலை கொள்ள வேண்டும்? தமிழகத்தில் இருப்பவர்கள் அனைவரும் முதலில் கவலைப்பட்டு, போராட்டத்தை முன்னெடுத்து இதை தேசிய அளவில் பிரச்சனையாக்கியிருந்தால் என்ன தான் இந்த பிரச்சனையென்று மற்றவர்கள் அறிந்து கொள்ள ஆசைப்படுவார்கள். ஆனால் இங்கு நடப்பதென்ன?
நடிகர்கள் போராட போனால் அதிலும் இரண்டு கட்சி, அங்கும் அரசியல். அரசியல் கட்சிகள் போராடினாலும் எதிர்கட்சித் தனியாக போராடும், ஆளும் கட்சி தனியாக போராடும். இவர்கள் போராட்டத்திற்கிடையே ஒருவரை ஒருவர் தாக்குவார்கள். ஆகா இந்த போராட்டங்களைக் கூட அரசியலாக்கத்தான் முயல்கிறார்களே தவிர உண்மையாண போராட்டம் எங்கு நடக்கின்றது?

ஈழத்தில் இருப்பவர்கள் எல்லோரும் கன்னடர்களாய் இருந்திருந்தால் இன்னேரம் தனி ஈழம் என்றோ மலர்ந்திருக்கும். எந்த பிரச்சனையிலும் அவர்கள் பக்கம் நியாயம் இருக்கின்றதோ இல்லையோ ஆனால் மொத்த மாநிலமும் ஒற்றுமையாய் போராடுவார்கள். ஆளும்கட்சி, எதிர்கட்சியெல்லாம் ஒன்றாய் சேர்ந்து ஓரணியாய் நின்று போராடுவார்கள். அந்த ஒற்றுமை நம்மிடையே இல்லை. இங்கு எந்த அனைத்துக் கட்சி கூட்டத்திலாவது எல்லா கட்சிகளும் ஒருமித்த குரலில் ஒரு கருத்தை பேசியிருக்கின்றார்களா?

இந்தப் பிரச்சனையில் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்றால் முதலில் ஒரு தேசிய அளவில் ஒரு அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்து அவர்களை ஈழத்துக்கு அனுப்பி அங்குள்ள நிலையை நேரில் கண்டறிந்து வரச் செய்ய வேண்டும். அவர்களுடன் இந்தியப் பத்திரிக்கையாளர்கள் குழுவையும் அனுப்ப வேண்டும். இவர்கள் மூலம் உண்மை உலகுக்கு தெரியவரும். தமிழர்கள் படும் அவலங்கள் வெளிவரும். அவ‌ர்க‌ள் நேரில் க‌ண்டுவ‌ரும் அவ‌ல‌ங்க‌ளை பாராளும‌ன்ற‌த்தை கூட்டி விவாதிக்க‌ வேண்டும். இது தான் பிராந்திய‌ வ‌ல்ல‌ர‌சான‌ இந்தியா செய்ய‌ வேண்டியது.

இதுக்கு மேல அவதிப்பட ஒன்னுமேயில்லங்கிற நிலையில இருக்க மனுசனுங்களுக்கு உதவுங்கன்னு சொன்னா, இன்னைக்கு இவனுக்கு உதவுனா நாளைக்கு நமக்கு பிரச்சனைவரும் அது இதுன்னு போகாத ஊருக்கு வழி தேடிகிட்டு நிக்கிறவங்களுக்கு எல்லாம் என்ன பதில் சொல்ல முடியும்?
இல்ல‌ இல்ல‌ என்ன‌ தான் இருந்தாலும் ராஜீவ் காந்திய‌ கொன்ன‌வ‌ங்க‌ளுக்கு உத‌வ‌ கூடாதுன்னு சொன்னா உங்க‌ளையெல்லாம் ஒன்னும் செய்ய‌ முடியாது. ஆசிப் அண்ணாச்சி பாணியில சொல்ல‌ணும்னா, நீங்க‌ ம‌ட்டும் ந‌ல்லா இருங்க‌டே...
Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•8:54 PM
இந்த சினிமா தொடர் விளையாட்டு எல்லாரும் எழுதித் தள்ளிக்கிட்டு இருக்காங்க. அதுலபாருங்க எனக்கு ரெண்டு பேரு கொக்கிய போட்டுருக்காங்க.
இள‌ங்க‌லை அறிவிய‌ல் ப‌டிக்கிற‌ப்ப‌ என் கூட‌வே ஒன்னா கல்லூரிக்கு க‌ட் அடிச்சுட்டு ப‌ட‌த்துக்கு எல்லாம் வ‌ந்த‌ செந்தில் ஒருத்த‌ரு. முதுக‌லைப் ப‌டிப்புல‌ (இங்க‌ க‌ட் அடிக்க‌லாம் இல்ல‌) என் கூட‌ ப‌டிச்ச‌ குசும்ப‌ன் ஒருத்த‌ரு. ஏதோ என‌க்குத் தெரிஞ்ச‌த‌ சொல்லிடுறேன்பா.
நெம்ப யோசிச்சு பதில் எழுதிக்கிட்டு இருக்கேன்.

1) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எங்க கிராமத்துல சினிமா தியேட்டர் எல்லா இல்லாததுனால சின்ன வயசுல நான் நிறைய படம் எல்லாம் பார்த்தது இல்ல. நினைவில் இருக்கும் முதல் படம் பயணங்கள் முடிவதில்லை. அதற்கு அடுத்து நன்கு நினைவில் உள்ளப் படம் பூவே பூச்சூடவா. அப்போ எல்லாம் சினிமால நமக்கு புடிச்சது சண்டைகள் தான். என்னா உண‌ர்ந்தேன்னு எல்லாம் தெரிய‌ல‌. த‌ஞ்சாவூர்ல‌ ப‌ட‌ம் பார்த்துட்டு மார‌னேரில‌ போயி ப‌ச‌ங்க‌ளுக்கு எல்லாம் க‌தை சொல்லுவோம். அதுதான் நினைப்பு இருக்கு.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

"த‌சாவ‌த‌ராம்" சிங்கை வ‌ந்த‌துக்கு அப்ற‌ம் அடிக்க‌டி திரை அர‌ங்குக்கு போயி ப‌ட‌ம் பார்க்க‌ முடிவ‌தில்லை. வேட்டையாடு விளையாடு, சிவாஜி, த‌சாவ‌த‌ராம் இந்த‌ 3 ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டுமே நான் சிங்கையில் திரை அரங்கில் பார்த்த‌ப் ப‌ட‌ங்க‌ள்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

போன வாரம் பார்த்த ஜெயம் கொண்டாண். வீட்டில் டிவிடியில் பார்த்தது ( ஒரிஜினல் தானுங்க). படம் எனக்கு புடிச்சிருந்தது. லேகா நடிப்பு நல்லா இருந்துச்சு. ஆனா கடைசியில அந்த சண்டை தான் வெறுப்பேத்துனது. அம்புட்டு அடியையும் சத்தம் போடாம வாங்குற அந்த கதாநாயகரு, தன் தங்கச்சி மேல ஒரு அடி விழுந்ததும் என்னமா துடிச்சு , வில்லன அடிச்சு தள்ளுறாரு. இத எத்தனப் படத்துலத்தான் பார்குறது?

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

"நந்தா", தன் அப்பா , அம்மாவ அடிக்கிறப்ப தன் அம்மா மேல உள்ள பாசத்துலத்தான் அப்பாவ புடிச்சுத் தள்ளுவான் அந்த சிறுவன் நந்தா. அது கொலையாகி தண்டணைய அனுபவிப்பான். ஆனாலும் அந்த அம்மா சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில அவன் யாரோ ஒரு பையன் கூட சண்டப் போடுறத பார்த்துட்டு இவன் சண்டக்காரன்னு ஒதுக்குறது என்ன ரொம்ப பாதிச்சுது.

5.அ உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

மக்களோட முக்கியமான பிரச்சனைகளுக்கு போராடுறோம்னு கிளம்பிட்டு அதுல நம்ம சினிமாகாரங்க செய்யிற அரசியல்தான் கோவத்தை கிளப்பும். உதாரணமா சில ஆண்டுகளுக்கு முன்னால் நெய்வேலியில் நடத்திய போராட்டம், இப்போ ராமேஸ்வரத்தில் நடத்திய போராட்டம் போன்றவை. இதுல கூடவா ஒற்றுமைய காட்ட முடியாது இவங்களால? அவர்களது போராட்டங்கள் பிரச்சனைகளை கொச்சைப்படுத்தும் விதமாய் அமைந்துவிடக்கூடாது என்பதே என் ஆசை. இவர்கள் ஒருவர் மீது ஒருவர் புழுதி வாரி இறைக்கும் போது எதற்காக போராடினார்களோ அந்த பிரச்சனையிலிருந்து அனைவரின் கவனமும் இவர்களது சண்டைகளுக்கு திசைதிருப்பப் படுகின்றது. இப்போதும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாய் போராட்டம் நடத்திவிட்டு பாரதிராஜா விசயகாந்தை திட்டியது தான் தற்போதைய ஜீனியர் விகடனில் முக்கிய செய்தியாக வந்துள்ளது. பத்திரிக்கைகளும் இந்த குழாயடி சண்டைகளுக்குத் தான் முக்கியத்துவம் தருகின்றன.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

இந்த தொழில் நுட்பம் குறித்த பார்வையெல்லாம் எனக்கு கிடையாதுங்க. ஆன இன்னும் ஆச்சரியப்படுற விசயம் தவசி படத்துல மகன் வயசு விசயகாந்த், அப்பா விசயகாந்த் ரெண்டு பேரையும் வித்தியாசப்படுத்த உபயோகிச்ச தொழில்நுட்பம் இருக்கே,அது தானுங்க ரொம்ப ஆச்சரியப்படுத்துச்சு.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

தேடிப்போய் படிப்பதில்லை, நேரம் கிடைக்கும் போது படிப்பதுண்டு.

7.தமிழ்ச்சினிமா இசை?

இளைய ராஜா, யுவன் சங்கர் ராஜா.

முன்பெல்லாம் வேலை செய்யும் போதும் இசை கேட்டுக்கொண்டே வேலை செய்வதுண்டு, தற்போது இசை கேட்க முடிவதில்லை. வீட்டில் எப்போதும் பாட்டு கேட்கும் பழக்கம் உண்டு.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

எனக்கு தமிழ் மொழியத் தவிர வேறெந்த மொழியும் புரியாதுங்கிறதால தமிழ்படத்த தவிர வேறெந்த படங்களையும் பார்கிறதில்ல. Baby's Day Out போல சில நல்ல ஆங்கிலப்படங்கள் பார்பதுண்டு.
நகைச்சுவை படங்கள் எந்த மொழியானாலும் பார்கலாம். அப்படிப் பட்ட படங்களைப் பார்பதுண்டு.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இருந்தது, இப்போது இல்லை. மீண்டும் எதுவும் செய்யும் எண்ணமில்லை. தமிழ் சினிமாவோட முன்னேற்றத்துக்கும் அதுக்கும் சம்பந்தமேயில்ல.

ஆனா எங்க அண்ணணுங்க மேலயும், அப்பா மேலயும் வருத்தம் மட்டும் உண்டு. பின்ன என்னங்க, என்னைய கதாநாயகனா வைச்சு ஒரு படத்த எங்க அப்பா தயாரிச்சு, எங்க அண்ணண் இயக்கியிருந்தா நாங்களும் பெரிய ஹீரோ ஆகியிருப்போம்ல. அநியாயமா ஒரு நல்ல ஹீரோவ தமிழ் சினிமா இழந்துருச்சு.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

புதுசா சில நல்ல இயக்குநர்கள் நல்லா படம் எடுக்கிறாங்க. சினிமாவுக்கு என்ன, அதுபாட்டுக்கு நல்லா வளரத்தான் செய்யிம், ( அதான் நான் ஹீரோ ஆகலையே, அப்றம் என்ன கவலை , தமிழ் சினிமா நல்லாத்தான் இருக்கும்.)

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

பாவம் தமிழன், பாதி பேருக்கு பைத்தியம் புடிச்சுரும். பத்திரிக்கைகளெல்லாம் சின்னதாயிரும். பக்கத்த நிரப்ப என்ன செய்யிறதுன்னு பத்திரிக்கைகாரங்க யோசிக்க வேண்டியிருக்கும்.

ஆனால் ஒரு ஆண்டுக்கு தடை செய்யப் பட வேண்டியது சினிமா அல்ல. தொலைக்காட்சியத் தான் தடை செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. என் சின்ன வயசுல எங்க கிராமத்துல சின்னப்பசங்க எல்லாம் நல்லா விளையாடுவோம். ஆனா இந்த தொலைகாட்சிகள் பெருகி இன்னைக்கு எந்த கிராமத்துலயும் பசங்க விளையாட்டுங்கிறத நினைக்கிறதேயில்ல. தடை செய்யப் பட வேண்டியது தொலைக் காட்சிகள் தான் சினிமா அல்ல.


இந்தத் தொடர் விளையாட்ட தொடர நான் யாரையும் அழைக்க விரும்பவில்லை. சினிமா தொடருக்குப் பதிலாக என் அருமைத் தங்கை தூயா அழைப்பு விடுத்துள்ள ஈழம் குறித்த தொடரை அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது அனைவரும் எழுத முயற்சிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். நாம் அனைவரும் நமது எண்ணங்களை பதிவு செய்ய வேண்டியது நம் சக தமிழ் சகோதரர்களுக்கு நாம் செய்யும் பெரும் உதவியாக இருக்கும். தயவு செய்து ஈழம் குறித்து அனைவரும் எழுதுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•8:00 PM
கோடைக்காலம் வந்தாலே எங்க ஊரு வயலுக்கு எல்லாம் ஆட்டுக்கிடை ( ஆட்டு உரம்) வைப்பதற்காக இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கீதாரிங்க ஆட்டு மந்தைய ஓட்டிக்கிட்டு வந்துருவாங்க.ஒரே சமயத்துல நிறைய கீதாரிங்க குடும்பத்தோட ஆடுகள் ஓட்டிக்கிட்டு வந்துருவாங்க. செம்மறியாடுங்க எல்லாம் கூட்டம் கூட்டமா போறத பாக்குறதே அழகா இருக்கும். வெளி ஆளுங்கள பார்த்தா இதுங்க வெறிச்சுக்கும், தாண்டி ஓடிடும். சின்ன பசங்க இருக்க வீடுகள்ல எல்லாம் கீதரிங்ககிட்ட போய் ஒரு குட்டி ஆடு வாங்கிட்டு வந்து வளர்ப்பாங்க. வருசா வருசம் நாங்களும் ஒன்னு வாங்கிடுவோம்.

வீட்டில் இருக்கும் வெள்ளாடுக‌ளுட‌ன் சேர்த்து வ‌ள‌ர்காம‌ல் இதை த‌னியாக‌த்தான் க‌ட்டி வைப்போம். வெள்ளாடுக‌ள் இவ‌ற்றை முட்டிவிடும். இவை கோடைகால‌ங்க‌ளில் ம‌ட்டும் எங்க‌ள் ஊர்க‌ளுக்கு வ‌ருவ‌த‌ற்கு கார‌ண‌ம், ம‌ற்ற‌ கால‌ங்க‌ளில் எங்க‌ள் ஊர்க‌ளில் எல்லாம் விவ‌சாய‌ம் ந‌டைபெறும், இவை வ‌ய‌ல்க‌ளில் உள்ள‌ ப‌யிர்க‌ளை மேய்ந்துவிடும் என்ப‌தால் கோடைகால‌ங்க‌ளில் ம‌ட்டுமே கொண்டுவ‌ருவார்க‌ள்.

செம்ம‌றியாடுக‌ள் இலைக‌ள், த‌ழைக‌ள், க‌ட‌லை புண்ணாக்கு போன்ற‌வ‌ற்றை சாப்பிட்டாலும் விரும்பி உண்ப‌து க‌ருவ‌க்காய் என‌ப்ப‌டும் வேலிக்க‌ருவை ம‌ர‌த்தின் முற்றிய‌ காய்க‌ளைத்தான். நீள‌மான‌ குச்சியின் நுணியில் அருவாளை க‌ட்டி ( இதை அல‌க்கு என்பார்க‌ள்) அதை கையில் எடுத்துக் கொண்டு ஆட்டை அழைத்துக் கொண்டு வ‌ய‌ல் வெளிக‌ளில் பாதையோர‌மாக‌ இருக்கும் க‌ருவை ம‌ர‌ங்க‌ளிலிருந்து காய்க‌ளை உலுக்கி கொடுப்போம், ஆடுக‌ள் பிரிய‌மாக‌ சாப்பிடும். அப்ப‌டி க‌ருவ‌க்காய் ப‌றிக்க‌ எடுத்துப் போகும் அல‌க்கை வைத்து அப்ப‌டியே மாங்காய், புளியம்ப‌ழ‌ம் எல்லாம் அடிச்சு நாங்க‌ சாப்பிடுற‌தும் உண்டு.இப்போது நினைத்தால் கொடூர‌மாக‌ இருக்கிற‌து. ஒரு ஆட்டுக்கு சாப்பாடு கொடுக்க‌ போய் நாம‌ எத்த‌னை மாங்காய் சாப்பிட்ருக்கோம்.

காலையில பொறுமையா எழுந்திருச்சு, நாங்க‌ ஆட்டுக்குட்டியை கூட்டிக்கிட்டு கிள‌ம்பிருவோம். வீட்டுக்கு வ‌ந்த‌ ரெண்டு நாள்ல‌யே ந‌ம்ம‌ளோட‌ ந‌ல்லா ப‌ழ‌கிடும், எங்க‌ போனாலும் பின்னாடியே வ‌ரும். ஊர்ல‌ இருக்க‌ ஆத்துல‌ போயி குளிய‌லுங்கிறப்பேருல‌ ஒரு ஆட்ட‌ம் ஆடிட்டு வருவோம். எங்க‌ளோட‌ சேர்ந்து ஆடும் குளிக்கும். அப்ப‌ற‌ம் வீட்டுல‌ப் போயி சாப்பிட்டுட்டு அப்ப‌டியே ஆட்ட‌ கூட்டிக்கிட்டு தோட்ட‌த்துக்குப் போயி அதுக்கு இலை வெட்டிப்போட்டுட்டு நாங்க‌ளும் விளையாண்டுட்டு வ‌ருவோம்.

ம‌த்தியான‌ம் சாப்பிட‌ வீட்டுக்கு வ‌ரும்போது வீட்டுக்கு பின்னாடி இருக்க‌ தொழுவ‌த்துல‌ எங்க‌ ஆட்டுக்குட்டியை க‌ட்டிருவோம். எங்க‌ ஊர்ல‌ இருக்க‌ எல்லா வீட்ல‌யும் சாதார‌ண‌மா வீட்டுக்குப் பின்னாடி மாடு, ஆடு எல்லாம் க‌ட்டி வைக்க‌ தொழுவ‌ம் இருக்கும். அங்க‌ ஆட்டுக்குன்னு த‌னியா இட‌ம் ஒதுக்கி அங்க‌ க‌ட்டிருவோம். ஆட்டுக்குட்டிக்கு பெய‌ர் எல்லாம் வைச்சு கூப்டுவோம். அதுக‌ளும் த‌ன்னைதான் கூப்பிடுறான்னு தெரிஞ்சு உட‌னே ஓடியாந்துரும். ப‌ச்ச‌ப்புள்ளைங்க‌ங்க‌ மாதிரி ப‌ழ‌கும், விளையாடும்.

மாலை நேர‌த்துல‌ ப‌ச‌ங்க‌ கூட‌ விளையாடிட்டு அப்டியே ஆத்துல‌ போயி இன்னொருக்கா குளிச்சுட்டு வ‌ருவோம். அப்ப‌ எல்லாம் எல்லாருக்கும் ஆட்டுக்குட்டியை ப‌ற்றிய‌ நினைப்புதான் மூளையில‌ நிறைஞ்சுருக்கும். எல்லாரும் அவ‌ன் அவ‌ன் ஆட்டுக்குட்டியப்ப‌த்தி பெருமை பேசிக்குவோம்.

“ நான் என்ன சொல்றனோ அதத் தாண்டா என் ஆடு கேக்கும்.. நான் கூப்டா வரும்.. எங்க அப்பா கூப்ட்டா கூட‌ வரவே வராது..” என்பான் ஒருவன்.

“ டே... அதாவது பரவால்லடா.. எங்க ஆடு கருவக்காய பறிச்சு கீழ போட்டா தின்னாதுடா.. என் கைல வச்சா தான் நல்லா தின்னும்.. அதுக்கு என்னா கொழுப்பு பாத்தியாடா” என்பான் இன்னொருவன் பெருமையாக..

இப்படி ஏராளமான பேச்சுகள் அந்த செம்மறி ஆட்டுக்குட்டிகளை வைத்து பேசப் படும். பின் குளித்து முடிந்தவுடன் ஆடுகளை அழைத்துக் கொண்டு கிளம்பி விடுவோம். மாலை நேரத்தில் அவ்வளவாக கருவக்காய்கள் கிடைக்காது. காலையிலேயே பறித்துவிட்டது அல்லது இருள் காரணமாக இருக்கலாம்.. ஆனாலும் எங்கள் ஆடுகளுடன் வெளியே சுத்துவது எங்களுக்கு பெருமை... இதில் வேடிக்கை என்னன்னா.. யாருமே ஆடுகளின் முழு ஆயுளுக்கு அவற்றை வளர்த்ததில்லை.. திருவிழாக்களில் வெட்டப்படுவதில் இருந்து காப்பது அவ்வளவு சிரமம். அதில் தப்பினாலும் இருக்கவே இருக்கு அரிசிப்பானை. எப்படி தான் கண்டுபிடிக்குமோ.. நாம் கொஞ்சம் அசந்தாலும் போதும்.. ஆட்டுக்குட்டி வீட்டினுள் நுழைந்து அரிசியை தின்றுவிடும், அரிசியை தின்னுடுச்சுன்னா அவ்ளோதான் ஆடு காலி, அதுக்கு முன்னாடியே அறுத்துருவாங்க. அப்படியே அவைகளிடம் தப்பி வளர்த்தாலும் கொஞ்ச்ம பெரிசானவுடன் குழம்பாக‌வும், உப்புக‌ண்ட‌மாக‌வும் ஆகிவிடும்.

உப்புக்க‌ண்ட‌ம் என்ப‌து ஆட்டின் க‌றியுட‌ன் ம‌சாலா எல்லாம் சேர்த்து, வெயிலில் க‌ருவாடு போல் காய‌வைத்து எடுத்து வைத்துக் கொள்வ‌து. இதை வ‌றுத்து அல்ல‌து குழ‌ம்பில் போட்டு சாப்பிட‌லாம்.

இப்படி ஏடாகூடமா ஏதாச்சும் ஆகி ஆடு குழம்பாகிடுச்சுன்னா எங்களால பெருமையா எல்லாம் பேசிக்கிட்டு திரிய முடியாது. மனசு ரொம்ப சோகமாகிடும். இவன் தான் அந்த ஆட்டுக்குட்டிய கஷ்டப்பட்டு வளர்த்தான் இவனுக்கு கொஞ்சம் அதிகமா கறிய வைன்னு சொல்லி குடுத்தாலும் நமக்கு சாப்பிடவே மனசு வராது. நாங்க என்ன எங்க ஆட்டுல எலும்பே இல்லன்னா சொல்லிக்க முடியும்? நாங்க சோகமா திரியிறதப் பார்த்துட்டு முதல்ல பெரியவங்க எல்லாம் சரிடா விடுங்க, அடுத்த வருசம் நல்ல ஆட்டுக்குட்டியா வாங்கிக்கலாம்னு சமாதானப்படுத்துவாங்க. அதையும் மீறி சோகமா இருந்தா அப்புறம் இனிமே எனக்கு ஆட்டுக்குட்டி வேணும்னு கேளு, அப்பறம் இருக்கு பூசன்னு மிரட்டிருவாங்க.

அவங்க சொல்ற சமதானத்த ஏத்துக்கிட்டோ அல்லது மிரட்டலுக்கு பயந்தோ நாங்களும் எல்லாத்தையும் மறந்துட்டு அடுத்தவருசத்து ஆட்டுக்குட்டிக்காக காத்திருப்போம்.

டிஸ்கி: இது என் பால்ய கால நினைவுகளின் பதிவு தான். இதுக்கும் எதிர்பதிவு ஏகம்பரம் பொடியன் சஞ்சயோட கலர் கோழிக்குஞ்சு பதிவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•12:23 AM
தமிழ் இன‌ தானைத் தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி அவர்கள் ஈழத்தில் நடக்கும் இன ஒழிப்புப் போரில் அநியாயமாய் கொல்லப்படும் தமிழர்களின் உயிர்களைக் காக்க மிக நீண்ட காலமாக யோசித்து சமீபத்தில் அறிவித்த அருமையான திட்டமான பிரதமருக்கு தந்தி திட்டம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று ஒரு நாளில் மட்டும் கோடிக்கணக்கான தந்திகள் பிரதமருக்கு குவிந்துள்ளன. தமிழகமெங்கும் அனைத்து தந்தி அலுவலகங்களிலும் வேறு எந்த தந்தியும் அனுப்ப இயலாத அளவுக்கு இன்று முழுவதும் பெருமளவில் மக்கள் வரிசையாக நின்று தந்தி அனுப்பியுள்ளனர். மேலும் பல தந்தி அலுவலகங்களுக்கு அருகில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு கடுமையான கூட்டம் கூடி பல மணி நேரம் வரிசையில் நின்று அனைவரும் தந்தியடித்துள்ளனர்.

பிரதமர் அலுவலகத்தில் தமிழர்களிடம் இருந்து வரும் தந்திகளை குவிக்க என மாபெரும் கிடங்கு ஒன்றை வாடகைக்கு எடுக்க முடிவு செய்துள்ளார்கள். அந்த அளவுக்கு வந்து குவிந்த தந்திகளைப் பார்த்து பிரதமர் பதறிபோய் உடனடியாக என்ன செய்வது என்றுத் தெரியாமல் சோனியாவை சந்தித்துவிட்டு அவரது ஆலோசனையின் பேரில் உடனடியாக மத்திய அமைச்சரவை கூடி ஒரு கடுமையான முடிவை எடுத்துள்ளது. அந்த கடுமையான முடிவை உடனடியாக செயல்படுத்தியும் விட்டார்கள்.

அதன்படி, உடனடியாக இந்தியாவில் உள்ள இலங்கை தூதரை வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அழைத்து அவரிடம் இந்தியா தனது கடுமையானக் கண்டணங்களை தெரிவித்துள்ளது. இந்தக் கடும் கண்டணத்தை நேரில் வாங்கிய இலங்கைத் தூதர் தற்போது டெல்லியில் நிலவும் கடுமையான குளிரிலும் பயங்கரமாய் வேர்த்து கொட்டி, மிக அதிகளவில் நீர் கேட்டு வாங்கி குடித்துள்ளார். இந்த கடும் கண்டணத்தை வெளியுறவு அமைச்சரது அனுமதியுடன் வெளியுறவு அமைச்சகத்தில் இருந்தே தொலைபேசி வாயிலாக இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவிடம் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி வாயிலாக இந்த கடும் கண்டணத்தை கேள்வியுற்ற இலங்கை அதிபரும் பேரதிர்ச்சிக்குள்ளாகி அலரி மாளிகையில் இருந்த அவ்வளவு நீரையும் குடித்தப் பின்னரும் மேலும் நீர் கேட்டமையால் உடனடியாக இரு லாரிகளில் குடிநீர் கொண்டுச் செல்லப்பட்டதாக கொழும்பில் இருந்து வந்த நம்பத்தகுந்த செய்திகள் அறிவிக்கின்றன.

போதுமான அளவு நீர் அருந்தி முடித்த‌ இலங்கை அதிபர் உடனடியாக ராணுவத் தளபதி சரத் பொன் சேகாவை அழைத்து அனைத்து படை நடவடிக்கைகளையும் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டுள்ளார். மேலும் இனி இலங்கைக் கடற்படையினர் கடலுக்குள்ளேயே செல்லக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். எனவே இனி இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட மாட்டார்கள் எனவும், தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது இலங்கைக் கடற்படையினரின் தொல்லை இனி இருக்காது என்றும் தெரியவருகிறது.

இது கலைஞர் கருணாநிதியின் அறிவுப்பூர்வமான போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.

இப்போராட்டத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்து தமிழகத்தில் மின்வெட்டை கண்டித்து ஆற்காடு வீராச்சாமிக்கு தந்தி அடிப்பது அல்லது தபால் கார்டு எழுதுவது போன்ற போராட்டங்களை கலைஞர் அறிவிப்பார் எனவும் தெரிகிறது.

பின்ன என்னங்க, எங்க ஊருல ஒரு கதை சொல்லுவாய்ங்க. ஒரு சரியான கஞ்சன், சாப்பிட்டுக்கிட்டு இருக்கப்ப எச்சக்கையால காக்கா கூட விரட்டாத ஒருத்தன் வீட்டுக்கு, ஒரு நாள் ஒரு விருந்தாளி வந்தாராம். என்னடா இது நம்ம ஊட்டுல சாப்புட இவன் வந்துட்டானே, எப்படி துரத்துறதுனு திரு.கஞ்சனும், அவரது மனைவியும் திட்டமிட்டு கணவண் மனைவி இடையே கடுமையான சண்டை என்பது போல நடித்தார்களாம். திரு.கஞ்சன் தன் திருமதியை அடி அடி என அடிப்பது போல் நடித்தாராம். அதப் பார்த்த விருந்தாளி, இது என்னடா நாம வந்த நேரம் சரியில்லைப் போலன்னு நினைச்சுக்கிட்டு அப்படியே திரும்பி போயிட்டாராம். அவர் போயிட்டாருன்னு நினைச்சுக்கிட்டு கஞ்சனும், அவரு மனைவியும் தங்கள் சாதனையை பெருசா பேசிக்கிட்டாங்களாம்.

திரு.கஞ்சன்: நான் வலிக்காமல் அடித்தேனே!!.

திருமதி.கஞ்சன்: நானும் நோகாமல் அழுதேனே!!.

இவ‌ங்க‌ ரெண்டு பேரும் போயிட்ட‌தா நினைச்ச‌ விருந்தாளி உள்ள‌ குதிச்சு..

நானும் போகாம‌ல் இருந்தேனே!!!! அப்டினு சொன்னாராம்.

வ‌லிக்காம‌ல் அடித்த‌ க‌ருணாநிதியும், நோகாம‌ல் அழுத‌ ம‌த்திய‌ அர‌சையும், போகாம‌ல் இருக்கும் இல‌ங்கைய‌ர‌சின் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தையும் வேற‌ என்ன‌ச் சொல்லுவ‌து.

தன்னால் முடியும் என்ற நிலையில் இருந்த போதும், எதிர்கட்சிகள் எல்லாரும் உண்ணாவிரதம் இருக்கின்றார்களே, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரு காரணத்தால் மட்டும் இப்படித் தனது கட்சியும் அங்கம் வகிக்கும் மத்தியரசின் கவனத்தை ஈர்க்க, தந்தி போராட்டம் அறிவிக்கும் கலைஞரை என்ன சொல்லி வாழ்த்துவது?

இதனால் யார் மகிழ்ச்சியடைந்தார்களோ, கட்டாயம் மத்தியமைச்சர் இராசா மகிழ்ந்திருப்பார். பின்ன அவருதானே தபால் தந்தி துறைக்கும் அமைச்சர். அவங்களுக்கு இன்னைக்கு நல்ல வசூல் ஆகியிருக்கும்ல? Udanz
Links to this post
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க