Author: ஜோசப் பால்ராஜ்
•9:33 PM
இரண்டு நாளைக்கு முன்னாடி பிரபலப் பதிவர், எழுத்தாளர், சிறுகதை ஆசிரியர் அன்பு அண்ணண் பரிசல் சிறு விபத்துக்குள்ளானார் என்பது எல்லாருக்கும் தெரியும். இப்ப அண்ணண் நல்லாருக்கார்.

முன்னால் சென்ற வாகனம் திடீரென நிறுத்தியதால், இவரது காரை இவர் நிறுத்த, பின்னால் வந்தவர் மட்டும் நிறுத்தாம இவர் காருல மோதினதால இவர் தல கண்ணாடியில இடிச்சு காயமாயிருச்சு. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர்ல இதே போன்று கார் திடீரென நிறுத்தப்பட்ட போது காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த “அண்ணண்” அப்துல்லா காரின் முன் கண்ணாடியில் தலை மோதி காயமடைந்திருந்தார். கார்ல இருக்கை பட்டைய( Seat Belt) மாட்டிக்கிட்டு பயணிச்சுருந்தா இந்த விபத்துகளை கண்டிப்பா தவிர்த்திருக்கலாமே. ஏன் அத யாரும் செய்ய மாட்டேங்குறீங்க? ( இதுல வெளிநாட்டுல இருந்து வர்றவய்ங்க, பழக்க தோசத்துல அந்தப் பட்டைய எடுத்து மாட்டீட்டா நம்மாளுங்க அடிக்கிற கிண்டல் இருக்கே, பல தடவ அனுபவிச்சுருக்கேன் நானு).

உமா சங்கர் ஐ.ஏ.எஸ் ஒரு முறை குடும்பத்தோட சென்னையில இருந்து திருச்சிக்கு கார்ல வர்றப்ப, அந்த கார் திருச்சிக்கு அருகே தலைகுப்புற கவிழுந்து பல்டியெல்லாம் அடிச்சுதாம். ஆனா அவர் மொத்த குடும்பத்துக்கும் ஒன்னுமே ஆகல, பத்திரமா வெளில வந்துருக்காங்க. காரணம் வண்டியில ஏறுனதும் எல்லாரையும் பெல்ட் போட்டே ஆகணும்னு கட்டாயமா சொல்லியிருந்தாராம் உமாசங்கர் ஐயா. இனியாவது இதை படிக்கிறவங்க, கட்டாயமா சீட் பெல்ட உபயோகப்படுத்துங்க. குறைந்தபட்சம் வாகனங்களில் முன் இருக்கைகளில் அமர்பவர்களும், வாகனத்தை ஓட்டுபவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து செல்லுங்கள்.

முன்பெல்லாம் சாலை சரியில்லாம விபத்துகள் நடந்துச்சு. இப்ப நல்ல சாலைகள் இருக்கு, ஆனா அத எப்டி உபயோகிக்கிறதுன்னு நம்மாட்களுக்கு தெரியலை.
மெதுவாக செல்லும் கனரக வாகனங்கள் சாலையின் இடபுற தடத்தில் தான் செல்ல வேண்டும் என்பது சாலை விதி. ஆனால் இதை எவரும் கடைபிடிப்பது கிடையாது. மிக அதிகளவில் பாரமேற்றப்பட்டு செல்லும் லாரிகள், டாட் ஏஸ், மினிடோர் போன்ற வாகனங்கள் கூட சாலையின் வலது தடத்தில் தான் செல்கின்றன. இவர்களை இடதுபுறமாக மற்றவர்கள் முந்திச் செல்கின்றார்கள். அதோடு நன்றாக அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் திடீரென குறுக்கே ஓடுபவர்களும் இன்னமும் இருக்கின்றார்கள். சாலை நன்றாக இருப்பதால் வேகமாக வாகனங்கள் செல்வதால் இது போல் குறுக்கே ஓடுபவர்களால் விபத்து ஏற்படுவதை தவிர்க்கவே இயலாது.

முதலில் 4 தடமுள்ள சாலைகளில் எப்படி வாகனங்களை ஓட்டுவது, யார் யார் எந்த தடத்தில் செல்லலாம் , எப்படி முன் செல்லும் வாகனத்தை முந்துவது, எப்படி ஒளி சமிக்கைகள் குடுப்பது என்பது குறித்து கட்டாயம் பயிற்சியளிக்க வேண்டும்.

முன் செல்லும் வாகனம் வலதுபுறம் திரும்பும் சமிக்ஞை(Right Indicator) குடுத்தால் பின்செல்லும் வாகனம் முன்செல்லும் வாகனத்தை முந்திக்கொள்ளலாம் என அர்த்தம் என எங்கள் வாகனத்தை ஓட்டியவர் சொன்னார். கேட்டதும் அதிர்ந்து போயிட்டேன்.

ஒரு வேளை என் போன்றவர்கள் வலது சமிக்ஞை போட்டுவிட்டு வலது தடத்திற்கு மாற முயற்சிக்கும் போது, பின்னால் வருபவர் முந்திக்கொள்ள அவருக்கு சமிக்ஞை கொடுத்ததாக எண்ணி வேகமாக வந்தால் கட்டாயம் விபத்து ஏற்படுவதை தவிர்க்க இயலாது. இதை என்னவென்று சொல்வது?
மிக கடுமையான பயிற்சிகள் வாகன ஓட்டிகளுக்கு தரப்பட வேண்டும். பயிற்சியளிப்பதோடு , அதை ஒழுங்காக கடைபிடிக்கின்றார்களா என கண்காணிக்கவும் வேண்டும். இது போன்ற வசதிகளை மட்டும் செஞ்சுட்டு அத எப்படி ஒழுங்கா உபயோகிப்பதுன்னு தெரியாம இருக்கது, தீவிரவாதிகிட்ட இருக்க அணுகுண்டு மாதிரி மிக ஆபத்தானது.

அடுத்து இருச் சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிவோர் , சிலர் கட்டாயத்தின் பேரில் தலைகவசம் அணிந்தாலும், அதில் உள்ள வாரை ஒழுங்காக மாட்டாமல் , ரொம்ப அலட்சியமா விட்டுட்டு போயிட்டு இருக்காங்க. ஒரு வேளை கீழே விழுந்தால் அந்த அதிர்சியிலேயே தலைக்கவசம் தனியே கழண்டு விழுந்துவிடும். தலைக்கு எந்த பாதுகாப்பும் இருக்காது.

இதே போல் ஒரு விபத்து ஏற்பட்டு என்றென்றும் அன்புடன் பாலா அவர்களின் அக்கா மகன், 27 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தது இது தான்
இந்தப் பதிவுக்கான காரணம்: ஆனந்த் விபத்து நிகழ்ந்தபோது, ஹெல்மட் அணிந்திருந்தான். ஆனால், ஹெல்மட் ஸ்ட்ராப்பின் (strap) பக்கிளை (buckle) போடாததால், ஹெல்மட் கழண்டு விட்டதாக விபத்தை நேரில் பார்த்த ஒரு கடைக்காரர் கூறினார்.

ஆகவே, பைக்கில் செல்பவர் ஹெல்மட் போட்டால் மட்டும் போதாது. ஹெல்மட் strap buckle ஐயும் சரியாக போட்டுக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். இவ்விடுகையை வாசிக்கும் (டூ வீலரில் பயணிக்கும்) நண்பர்களுக்கு இதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்.
இது போல் பலர் அலட்சியமாக இருப்பதையும் காண நேரிடுகிறது. இதெல்லாம் தானா வரணும், வரலைன்னு சட்டம் போட்டாலும் இப்டி செய்யிறாங்க, உயிரோட மதிப்பு அரசாங்கத்துக்கு மட்டுமில்ல, தனி மனிதர்களுக்கும் தெரியலை. இதப் படிக்கிற பிரபலங்கள், பெரியாட்கள் யாராச்சும் தயவு செஞ்சு இதை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நடைமுறைப்படுத்த உதவுங்கள்.

சாலைப் பாதுகாப்பு குறித்து இயற்கை மகளின் அழைப்பின் பேரில் சஞ்செய் எழுதிய பதிவில் மேலே குறிப்பிட்டிருந்ததை பின்னூட்டமாக சொல்லியிருந்தேன். சஞ்செய் கூட படிச்சாரான்னு தெரியல.

கேபிள் சங்கர் அண்ணண் கேட்டிருந்தபடி கதிர் என்ற
சிறுவனுக்கு காது கேட்கும் கருவி வாங்க உதவிய அத்தனை உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. ஊர் கூடி தேர் இழுப்பது போன்றது இந்த நல்ல காரியங்கள் எல்லாம். மூன்றே நாட்களில் மொத்த தொகையையும் திரட்ட உதவிய அத்தனை நல் உள்ளங்களுக்கும், முக்கியமா எங்க சிங்கை அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி .

தம்பி கதிர் நல்லவற்றை கேட்டு, நன்கு படித்து, நல்லவனாய் வளர்ந்து, பலருக்கும் உதவ வாழ்த்துவோம்.


என்னைப் போலவே பதிவெழுதாப் பதிவராய் திறம்பட செயலாற்றி எனக்கு உற்ற துணையாய் இருந்த அண்ணண் வெண்பூ இன்னைக்கு திடீர்னு நானும் பதிவர்தாண்டான்னு சொல்லிட்டு ஜீப்ல ஏறிட்டாரு. வேற வழியே இல்லைல, அதான் இன்னைக்கு நானும் பதிவெழுதி ஜோதியில கலந்துட்டேன். மிஸ்டர். சஞ்செய், ப்ளீஸ் நோட் திஸ்.

இன்னும் ஒருத்தர் இருக்காரு, எல்லாரையும் அண்ணண் அண்ணணு கூப்புடுறதால தம்பியின் டைரிக்குறிப்புன்னு எழுதிக்கிட்டு இருந்தாரு, அவரு சீக்கிரம் டைரிக்குறிப்பு எழுதலைன்னா மேலும் பல பதிவுகளை நான் எழுதுவேன்னும் எச்சரிக்கிறேன். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•10:13 PM
கேரளாவில் சமீபத்தில் நீதிமன்ற ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இருசக்கரவாகனக்களின் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள் சேலை அணிந்து செல்லக் கூடாதாம். சேலைத் தலைப்பு சக்கரத்தில் சிக்கி பல விபத்துகள் நிகழ்வதால் இந்த ஏற்பாடாம்!எனக்கொரு சந்தேகம். கேரளாவின் பெரும்பாலான கோயில்களில் சுடிதார் போன்ற உடைகளில் வர பெண்களுக்குத் தடையுண்டு. அப்ப, மனைவியை கூட்டிக்கொண்டு கோயிலுக்குப் போவதென்றால், சுடிதார் அணிந்து டூவிலரில் அழைத்துச் சென்று கோயிலுக்குள் செல்லும் முன் சேலை மாற்றி...

என்ன கொடுமை குருவாயூரப்பா இது?

மேற்கண்ட வரிகள் என் அன்புச் சகோதரர் பரிசல் அண்ணணின் பதிவில் இருந்தது.

ஆனால் இவர் என்னக் கொடுமை குருவாயூரப்பா எனக் கேட்பதைப் பார்த்தால் எங்கே கேரள அரசின் உத்தரவு தவறு என சொல்வாரோ எனச் சந்தேகமாக உள்ளது. முல்லைப் பெரியாறு, நெய்யாறு என தமிழகத்திற்கும் கேரளத்திற்குமிடையே உள்ள பல பிரச்சனைகளில் கேரளாவின் செயல்பாடுகளினால் எனக்கு அவர்கள் மீது கோபம் இருந்தாலும், இந்த உத்தரவை நான் மனமாற வரவேற்கிறேன். கோயில்களில் சுடிதாரை தடை செய்துள்ளார்கள் என்பதால் சேலை அணிந்துகொண்டு இரு சக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து செல்ல விதித்த தடையை மட்டும் நீக்க சொல்லாதீர்கள்.

நம்ம ஊர்ல ரொம்ப சவுகரியமா ஒரு பக்கமா உக்காந்துகிட்டு அதோட மடில ஒரு குழந்தை, இல்லன்னா நல்ல கனமான பை என இவங்க பயணம் செய்யிறத பார்த்தா ரொம்ப பயமா இருக்கும். அதுவும் நம்ம ஊர் சாலைகள் இருக்க அழகுல, நாம எல்லாம் சாலை விதிகள மதிக்குற அழகுல இப்படி எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாம பின்னாடி உக்காந்துகிட்டு போறது மிகவும் ஆபத்து.

சேலை அணிந்து இருசக்கரங்களின் வாகனங்களில் செல்லத் தடை விதித்தால் மட்டும் போதாது. சுடிதார் போன்ற உடைகளை அணிந்து கொண்டு, வாகனத்தின் இருப்புறமும் கால்களை இட்டு அமர்ந்துதான் செல்ல வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். இப்படி இவங்க பாதுகாப்பு இல்லாம இருசக்கர வாகனங்கள்ல பயணம் செய்ய கேரளாவில் மட்டும் தடை விதித்தா போதாது. இது நாடு முழுவதும் தடை செய்யப் படவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

சேலையை விட சுடிதார் மிகவும் அருமையானது, பாதுகாப்பானது, அணிவதற்கும் எளிதானது எனப் பல சிறப்புகளை கொண்டது. ஏன் கோயில்களில் சுடிதாரை அனுமதிக்க கூடாது? கவர்சியான உடைகளை அணிந்து கொண்டு கோயிலுக்கு வந்தால் அனுமதிக்க மாட்டோம் என்றால் அதில் நியாயம் உள்ளது. ஆனால் சேலையை விட நாகரீகமான உடையான சுடிதாரை அணிந்துகொண்டு கூட உள்ளே வரக்கூடாது என சொல்வது எந்த விதத்தில் நியாயம் இருக்க முடியும்?

கவர்சியான உடைகளை அணிந்து கொண்டு கோயிலுக்கு வந்தால் அனுமதிக்க மாட்டோம் என்றால் அதில் நியாயம் உள்ளது. ஆனால் சேலையை விட நாகரீகமான உடையான சுடிதாரை அணிந்துகொண்டு கூட உள்ளே வரக்கூடாது என சொல்வது எந்த விதத்தில் நியாயமாக‌ இருக்க முடியும்? உயிரோட பாதுகாப்பு முக்கியமா, சாமி முக்கியமா? எந்த சாமி சேலையிலத்தான் பொண்ணுங்க உள்ள வரணும்னு சொல்லியிருக்கு?
எல்லாரும் நல்லா இருக்கணும்னு தானே சாமியே கும்புட போறாங்க? அப்ப கட்டாயம் இந்த சட்டத்த எல்லா மாநிலங்களுக்கும் நீட்டிச்சு, கட்டாயமா கடைபிடிக்க செய்யிங்க.

சிங்கப்பூர்ல பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும் இருபுறமும் கால்களை இட்டு அமர்ந்து தான் இருசக்கர வாகனங்களில் பயணிக்க இயலும். குழந்தைகளை முன்புறம் மட்டும் அல்ல, பின்னால் அமர்ந்திருப்பவர்கள் மடியில் கூட வைத்துக் கொள்ள முடியாது. இருவரும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும். ஆனா நம்ம ஊர்ல ஒரு மொத்த குடும்பமும் ஒரு வண்டியில போறது எல்லாம் சர்வ சாதாரணம். இந்தியாவுல் ரொம்ப மலிவானது மனித உயிர்கள் தான். சில விசயங்களை மக்கள் தவறு எனத் தெரியாமலே செய்யும் போது அதை தடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இந்த சட்டமும் அதில் ஒன்றுதான்.

ஏற்கனவே கட்டாய தலைகவச சட்டத்த வீணாக்குனது மாதிரியில்லாம கொஞ்சம் மக்கள் மேல அக்கறையோட இந்த சட்டத்த கட்டாயம் கடைபிடிக்கச் செய்யணும் என வேண்டுகிறேன். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•7:01 PM
உலகப் பிரபல கூகுள் நிறுவனம் தனது பத்தாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி மிக உன்னதமான சேவை ஒன்றை செய்ய முனைந்துள்ளது. அதுவும் நமது பங்களிப்போடு.

சமுதாய முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் பல்வேறு பிரிவுகளில் நமது யோசனைகளை தெரிவிக்க ஒரு இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. www.project10tothe100.com

சமுதாய கட்டமைப்பு, புதிய வாய்புகளை உருவாக்கும் யோசனைகள், ஆற்றல் மேம்பாடு, சுற்றுபுற மேம்பாடு, சுகாதாரம், கல்வி, எல்லோருக்கும் பாதுகாப்பான உறைவிடம் அமைய யோசனைகள், இந்த பிரிவுகள் எதையும் சாராத வேறு எந்த யோசனைகள் என பல பிரிவுகளில் நமது யோசனைகளை விரிவாக இந்த இணைய தளத்தில் உள்ளீடு செய்யும் வகையில் அமைத்துள்ளார்கள்.

வரும் அக்டோபர் மாதம் 20 தேதி வரை நமது யோசனைகளை இந்த இணையத்தில் பதிவு செய்யலாம். ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட திட்டங்களை பதியலாம். பதிவு செய்யப்பட்டுள்ள திட்டங்களில் சிறந்த 100 திட்டங்கள் 2009 ஜனவரி மாதம் 27 தேதி அறிவிக்கப்படும். அந்த 100 திட்டங்களில் பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி சிறந்த 20 திட்டங்களை அரையிறுதிச் சுற்றுக்கு தேர்தெடுக்க உள்ளார்கள்.

அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் 20 சிறந்த திட்ட யோசனைகளில் இருந்து 5 திட்டங்களை நடுவர் குழு தேர்தெடுத்து 10 மில்லியன் டாலர்களை ஒதுக்கி அந்த திட்டங்களை செயல்படுத்த உள்ளார்கள்.

சிறந்த திட்டங்களுக்கான யோசனைகளை கீழ்கண்ட அடிப்படையில் தேர்ந்தெடுக்க உள்ளார்கள்.

1) இது எவ்வளவு மக்களுக்கு பலனளிக்கும் ?

2) இத்திட்டம் அத்தியாவசியமான ஒன்றா? இது எந்த அளவு மக்கள் பிரச்சனைகளை களைய உதவும்?

3) இத் திட்டம் ஒரு வருடத்திற்குள்ளோ அல்லது இரண்டு வருடத்திற்குள்ளோ செயல்படுத்த முடியக்கூடிய ஒன்றா?

4) எளிதாகவும், அதிக செலவில்லாமலும் இதை செயல்படுத்த இயலுமா?

5) எத்தனை காலத்திற்கு இத்திட்டம் பலனளிக்கும் ?

இதையாச்சும் செய்வோம் பாஸ் - பெண்ணியவாதிகள் கவனிக்க... என்ற தலைப்பில் நான் ஏற்கனவே எழுதியிருந்த பதிவில் சொல்லியிருந்த ஆலோசனைகளை இந்த தளத்தில் என் பங்குக்கு யோசனையாக வெளிப்படுத்தியுள்ளேன். மாத விலக்கு காலத்தில் பயன்படுத்தும் சானிடரி நாப்கின்களை மிகக் குறைந்த விலையில் கிராமப்புற மகளிர் குழுக்களை கொண்டே உற்பத்தி செய்ய வைத்து, அவர்கள் மூலமாகவே இதை வீடு வீடாக விற்கும் யோசனை நம் நாட்டு கிராமங்களுக்கு மட்டுமல்ல, முன்னேறாத மூன்றாம் உலக நாடுகளின் கிராமப்புற பெண்களுக்கும் மிகவும் பயன்படும் ஒரு யோசனை எனக் கருதியதால் அதை கூகுள் தளத்தில் உள்ளீடு செய்துள்ளேன்.

ஒரு வேளை எனது யோசனை சிறந்த யோசனையாக தேர்தெடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டால் பல ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படலாம். அதன் மூலம் அங்குள்ள மகளிர் குழுக்களுக்கு ஒரு வருமானமளிக்கும் சுய தொழிலும், ஏழைப் பெண்களுக்கு குறைந்த விலையில் சுகாதார வசதிகளும் கிடைப்பதோடு, மிகக் குறைந்த விலையில் நாப்கின்களை உற்பத்தி செய்யும் இயந்திரங்களை கண்டுபிடித்த கோவையைச் சேர்ந்த திரு.முருகானந்தம் அவர்களுக்கும் நல்ல தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

சிறு சிறு குழுக்களாக மக்களுக்கு வேலை வாய்ப்பையும், சுகாதார வாய்ப்பையும் நீண்ட நாட்களுக்கு ஏழை நாடுகளில் உள்ள கிராமப்புற பெண்களுக்கு அளிக்கும் என்பதால் இதை நான் தேர்தெடுத்துள்ளேன்.

நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு யோசனை தோன்றலாம். நீங்களும் உங்களுக்கு தோன்றும் யோசனைகளை இதில் தெரியப்படுத்துங்கள்.

இதையாச்சும் செய்யலாமே பாஸ்...

புதிதாக ஒரு வேலைக்காக விண்ணப்பித்து, நேர்முகத் தேர்வுக்கு சென்று அதில் தேர்வானதாலும், வேலை மாற்றம் தொடர்பான பணிகளாலும், மேலும் சில சொந்த பிரச்சனைகளாலும் இரண்டு வாரமாக பதிவுகள் எதுவும் எழுதவில்லை. என் மேல் உண்மையிலேயே அக்கறையோடு ஏன் பதிவெதுவும் எழுதவில்லை என தொலைபேசி, வலையுரையாடல், மற்றும் மின் மடல்கள் வாயிலாக விசாரித்த அத்தனை சொந்தங்களுக்கும் எனது நன்றிகள். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•8:49 PM
கடந்த ஞாயிறன்று சிங்கையில் நடந்த பதிவர் சந்திப்பில் சிங்கை மூத்த பதிவரும், கட்டுமானத்துறையில் பணியாற்றுபவருமான வடுவூர் குமார் அவர்கள் தற்போது துபாயில் வேலையில் சேர இருப்பதாக கூறினார்.

அவர் துபாய் வேலைக்காக முயற்சி செய்ய ஆரம்பித்த பொழுது துபாய் விசா குறித்த நடைமுறைகள் எதுவும் தெரியாமல் மிகச் சிரமப்பட்டதாகவும், அதுகுறித்து யாராவது ஒரு பதிவு எழுதினால் மிக நன்றாக இருக்கும் என்று கூறினார். வளைகுடா நாடுகளில் உள்ள தமிழ் பதிவர்கள் அந்த பகுதி நாடுகளில் உள்ள வேலை தேடி வருபவர்களுக்கு உதவும் நோக்கில் அங்குள்ள நாடுகளின் விசா நடைமுறைகளையும், வேலைக்கு வருபவர்கள் செய்ய வேண்டியவைகளையும் விரிவாக எழுதுமாறு சிங்கை பதிவர்கள் சார்பாக கேட்டுகொள்கிறோம்.

மேலும் துபாய் வரும் எங்கள் கண்ணின் மணி போல காத்துவந்த அன்புக்குரிய வடுவூர் குமார் அவர்களை நல்லபடியாக பார்த்துக்கொள்ளுமாறும் எங்கள் அனைவரின் சார்பாக வேண்டுகிறோம்.

மேலும் எங்கள் அனைவராலும் சிங்கைப் பதிவர்கள் சந்திப்பு குறித்து எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌திவுக‌ளில் விடுப‌ட்ட‌ ஒரு விச‌ய‌த்தையும் சொல்ல‌ விரும்புகிறேன்.

ச‌ந்திப்பு ந‌ட‌ந்த‌ புல்வெளியில் இருந்து கிள‌ம்பி காபி குடிக்க‌ போகும்முன் ந‌டைபாதையில் நிக‌ழ்ந்த‌ விவாத‌ம் வ‌லையுல‌கில் த‌ற்போது மிக‌ பிர‌ப‌ல‌மாகிக்கொண்டிருக்கும் பின் ந‌வீன‌த்துவ‌த்தை குறித்த‌து. பின் ந‌வீன‌த்துவ‌ம் என்றால் என்ன‌ என்ற‌ அடிப்ப‌டை கேள்விக்கே எங்க‌ளால் விடை காண‌ முடிய‌வில்லை. க‌டைசியாக‌ இரு ப‌தில்க‌ளை ப‌திவ‌ர்க‌ள் ச‌பை ஏற்றுக்கொண்ட‌து. இந்த‌ ப‌தில்க‌ள் குறித்து பின் ந‌வீன‌த்துவ‌ம் குறித்து அறிந்த‌ சென்ஷி போன்ற‌ ப‌திவ‌ர்க‌ள் த‌ய‌வு செய்து பின்னூட்ட‌த்தில் தெரிவிக்க‌வும்.

ப‌தில் 1. முற்றுப்புள்ளியே இல்லாம‌ல் எழுதிகொண்டே சென்றால் அது பின்ந‌வீன‌த்துவ‌ம்

ப‌தில் 2. யாருக்குமே புரியாம‌ல் எழுத‌ப்ப‌ட்டிருக்கும், அத‌ற்கு ஆகா, ஓகோ என‌ ப‌ல‌ பின்னூட்ட‌ங்க‌ள் இருக்கும். இதுவும் பின் ந‌வீன‌த்துவ‌ம்.

பி.கு:
மாற்ற‌ங்க‌ளை உள்வாங்கிக் கொள்வ‌துதான் பின் ந‌வீன‌த்துவ‌ம் என்று ப‌ல‌ புரியாத‌ ப‌தில்க‌ள் அங்கு விவ‌ரிக்க‌ப்ப‌ட்டாலும், எங்க‌ள் அனைவ‌ராலும் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட்ட‌ ப‌தில்க‌ள் மேலே குறிப்பிட‌ப்ப‌ட்ட‌ 2 ப‌தில்க‌ள் ம‌ட்டுமே. எனவே பின்நவீனத்துவ வாதிகள் தயவு செய்து எங்கள் மேல் பாய்ந்துவிடாமல் உண்மையான விளக்கத்தை சொல்லவும்.


Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க