Author: ஜோசப் பால்ராஜ்
•1:22 AM
நீயும் நானும்,
நிலவும் வானும் என்றிருந்தேன்,

என்னோடு தான் உன் வாழ்வு
என்று நான் இறுமாந்திருந்தேன்.
காத‌ல் தான் என்று க‌ண்க‌ள் மூடியிருந்தேன்.

வெறும் காரிய‌ம் சாதிக்க‌த்தான் என்று
சொல்ல‌வில்லை நீ ச‌கியே..

உந்த‌ன் தேவைக‌ள் அனைத்தும்
என‌க்கே நீ உரைத்தாய்,
காலால் இட்ட‌த‌னைத்தும்
என் த‌லையால் நான் முடித்தேன்,

காத‌லால் தான் நீ என்னிட‌ம் கூறுகிறாயென்று
த‌வறாய் நினைத்திருந்தேன் - இளிச்ச‌வாய‌ன் இவ‌னே,
இவனை விட்டால் வேறு யார் செய்வார்
என்று நீ எண்ணிய‌து, என‌க்கெப்படி தெரியும் ?

பேருந்து ப‌ய‌ண‌த்தில் ச‌ன்னலோர‌த்தில்
முழுநில‌வு பார்த்தால் என் ம‌ன‌து நினைத்த‌து
உந்த‌ன் முக‌ம் தானே? முழுநில‌வு ஒளியில்
ப‌ய‌ணித்த‌து என் குற்ற‌ம் தானோ ?
எத்த‌னை ப‌ய‌ண‌ங்க‌ள் அதில் எத்த‌னை முழு நில‌வுக‌ள்?
முழு நிலவை உன் முகமாய்
எண்ணியது என் பிழையா?
இல்லை முழு நிலவே பிழையா ?

எத்த‌னை த‌வ‌ம் செய்தும்
என் காத‌ல் உன‌க்கு புரிய‌வில்லையெனில்
பிழை எந்த‌ன் காத‌லிலா?
அல்ல‌து உந்த‌ன் ம‌ன‌திலா?

உண்மை காதலை நீ உணர மறுத்தாய்,
இன்று இருவருமே இருளில் ‍- யாருக்கும் ஒளியில்லை.
ஒளியில்லா வாழ்வதனை வாழ்வதற்கா காதல் ???

நீயும் நானும்,
நிலவும் வானும் என்றிருந்தேன்,
என்னோடு தான் உன் வாழ்வு

என்று நான் இறுமாந்திருந்தேன்.

அம்மாவாசை அன்று நில‌வில்லை
என்ற‌து நிதர்சனம், இன்று - என் வாழ்வு
அம்மாவாசையான‌து அறிவாயோ பெண்ணே?

மாதம் ஒருமுறைதான்
நிலவுக்கு அம்மாவாசை,
உன் அம்மாவின் ஆசையையும் மீறி
இன்று நம் வாழ்வில் தினமும் அம்மாவாசை.

நீயாவது வாழ்வில் மகிழ்ந்திரு,
நம் சோகத்தை நான் மட்டும் தாங்க விடு.
மகிழ்சி என்றும் உனதாகட்டும்,
உன் சோகம் கூட எனதாகட்டும்.

சோகம் எனக்கு புதிதில்லை
ஆனாலும்உன் சோகம் - அதை
எந்நாளும் நான் விரும்பவில்லை .

நீயாவது வாழ்வில் மகிழ்ந்திரு,
நம் சோகத்தை நான் மட்டும் தாங்க விடு. Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•12:29 AM
காதல் என்ற வார்த்தையை கூட எழுத்துக்கூட்டி சில பல பிழைகளுடன் படிக்கும் ஒரு பச்சிள‌ம் பாலகன் ஆகிய பால்ராஜ்ஜை இந்த தொடர் விளையாட்டில் மாட்டிவிட்ட அன்பு அண்ணண் அப்துல்லா வாழ்க.

அண்ணண் அப்துல்லாவின் பதிவை படித்தவுடன் பதறி அடித்துக்கொண்டு எழும் குரல் -‍ இது இன்னமும் மனதளவில் குழந்தையாகவே இருக்கும் பால்ராஜ் எழுப்புவது.

காதல் எனப்படுவது யாதெனில்னு ஒரு தலைப்பை குடுத்து வேற ஒன்னும் விவரமா சொல்லாம நம்மள எழுத சொல்லிட்டு போயிட்டாரே இந்த அப்துல்லா, நம்ம காதல் கதைய எல்லாம் எழுத ஆரம்பிச்ச அது உழவும் உழவர்களும் தொடர விட பெருசா போகுமே, எத எழுதுறது, எத விடுறது ?? - இது நம்ம ஜொசப் குரல்.

அடப்பாவி உன் மனைவி ஊர்ல இல்லங்குறதுனால நீ எல்லாத்தயும் சொல்லிடுவியா, அவங்க வந்தபின்னாடி உன் பதிவ எல்லாம் படிச்சா உனக்கு டின் கட்டிருவாங்கடினு ஒருத்தன் நடுவால இருந்து குரல் கொடுக்குறான், உத்து கேட்டாதான் தெரியுது அது நம்ம பெனடிக்ட்டோட குரல்.

( நல்ல வேளை இவனுக்கு ஜோசப் பெனடிக்ட் பால்ராஜ்னு மட்டும் பேரு வைச்சாங்க, இல்ல இவன் பாட்டுக்கு இந்த குரல் அந்த குரல்னு பதிவ நிரப்பிட்டு போயிருப்பான்னு நம்ம குசும்பன் குரல் கொடுப்பாரு, இருடி, அடுத்த ஆப்பு உனக்குத்தான்.)

ஆளாளுக்கு ஒரு குரல் கொடுத்துகிட்டு இருந்தா நம்ம அண்ணண் அப்துல்லாவுக்கு என்னா பதில் சொல்றதுனு நாங்க கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்து எழுதுவது யாதெனில்....

கவலைப்படாதிங்க, தொடரும் எல்லாம் போட மாட்டேன்.

காதல்...

அர்த்தமே புரியாத காலத்தில் இந்த வார்த்தை எனக்கு கெட்டவார்த்தை, ( அப்போ நான் விசயகாந்த ரசிகரு பாருங்க, ஏன்னா அவரு படத்துலதான் நிறைய சண்டை இருக்கும்).

10 ஆம் வகுப்பு படிச்சு முடிச்ச காலத்துலதான் நமக்கு காதலோட அர்த்தம் கொஞ்சம் கொஞ்சமா விளங்க ஆரம்பிச்சுது, ஆனா பாருங்க, அப்ப பார்த்த எல்லா பெண்ணையுமே பிடிச்சதே தவிர காதல்னு சொல்லிக்கிறமாதிரி எதுவும் வரலை.

அது இதுனு நிறைய படிச்சதுல , இதெல்லாம் இனக்கவர்ச்சினு புரிஞ்சுச்சு.
ஆனா பத்தாம்பு படிகிறப்பவே கல்யாணம்ணா அது காதலிச்சுத்தான்னு மனசுல ஒரு உறுதி வந்துருச்சு.

உன் பெற்றோரையோ, உடன்பிறப்புகளையோ, உறவினர்களையோ நீ தேர்ந்தெடுக்க முடியாது, இவையெல்லாம் உன்னை மீறியவை.
ஆனால் நண்பர்களையும், காதலியையும் மட்டும் நீயே தேர்ந்தெடுக்கலாம் .

இந்த தத்துவம்தான் காதல் திருமணம்தான் செஞ்சுக்கனும்னு என்னைய ரொம்ப தூண்டிய ஒன்று.

ஆன, படிச்சது எல்லாம் ஆண்கள் மட்டுமே படிக்கிற பள்ளிக்கூடத்துல, சரி கல்லூரிகாலத்துலயாவது பார்த்துக்கலாம்னு இருந்தா அங்கயும் நமக்கு வாய்ப்பு கிடைக்கல.

ஒரு வருடத்திற்கு 32000 ரூபாய் கட்டி படிக்கும் பிரிவில்( Government Payment Quota) பொறியியல் படிப்பிற்கு இடம் கிடைத்ததால், ஒழுங்கா படிச்சு அரசு ஒதுக்கீட்டுல (Merit Seat) இடம் வாங்க முடியாத உனக்கு பொறியியல் படிப்பு ஒரு கேடானு கேட்டு பி.எஸ்.ஸி இயற்பியல் பாடத்துல, அதுவும் ஆண்கள் மட்டுமே படிக்கும் பூண்டி புஷ்பம் கல்லூரியில படினு சொல்லி என் அண்ணண் சேர்த்துவிட்டதால என்னடா செய்யிறதுனு ஒரே சோகமா அந்த கல்லூரியில சேர்ந்த எனக்கு இருந்த ஒரே ஆறுதல் தஞ்சாவூர்ல இருந்து எங்க கல்லூரி வழியா திருவாரூர் போற புகை வண்டிதான்.

நாங்க போற அதே புகைவண்டியிலத்தான் எங்க கல்லூரியில இருந்து இரண்டு நிறுத்தம் தள்ளி இருக்க ஒரு பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளும் போவாங்க.

சாதரண கலைக்கல்லூரியில படிக்கிற நாம, ஒரு பொறியியல் கல்லூரி மாணவிய காதலிக்கனும்னா, நமக்குனு சில தனித்தகுதிகள் இருக்கனும்ல..
இதுனால பல பல தனித்தகுதிகள வளர்த்துகிட்டோம் பாருங்க..

எல்லாம் செஞ்சு என்ன உபயோகம், திடீர்னு இரயில்வே துறையினர் புகைவண்டியின் நேரத்தை மாத்தி சோதனை செஞ்சுட்டாங்க, இதனால ஒரே ரயில்ல போற அந்த ஒத்தை சந்தோஷமும் ஒன்றரை வருடங்களில் போயே போச்சு..

இந்த‌ ஒன்ற‌ரை வ‌ருட‌ங்க‌ளில் செந்தில் , ச‌ர‌வ‌ண‌ண் என்ற‌ என் இரு ஆருயிர் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து சென்சார்பால் என்ற‌ பெய‌ரில் ஒரு கையெழுத்து வார‌ இத‌ழை ஆர‌ம்பித்து வெற்றிக‌ர‌மாக‌ ந‌ட‌த்தினோம் என்ப‌து ஒரு த‌னிப்ப‌திவாக‌ போடும‌ள‌வுக்கு பெரிய‌ செய்தி. ( நாங்க‌ ஒன்னும் புதுசா எழுத‌ வ‌ர‌லை, அப்ப‌வே ஆர‌ம்பிச்சுட்டோம்!!).

இப்ப‌டியே க‌ழிந்த‌ என் க‌ல்லூரிக்கால‌ம் ஒரு முடிவுக்கு வ‌ந்து
சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவ‌ன‌த்தில் வேலைக்கு சேர்ந்தேன்.வேலைக்கு சேர்ந்து ச‌ம்பாதிக்க‌ ஆர‌ம்பித்துவிட்டாலும், வாழ்வின் ப‌ல‌ உண்மைக‌ள் தெரியாத‌,புரியாத‌ ப‌ருவ‌ம் அது.

என‌க்கு பிடித்த‌ பெண்ணிற்கு என்னை பிடிக்க‌வில்லை, என்னை விரும்பிய‌ பெண்களில் எவரையும் என‌க்கு பிடிக்க‌வில்லை .

வ‌ள்ளி ப‌ட‌த்துல‌ ர‌ஜினி சொல்ற‌ மாதிரி நாம‌க்கு பிடிச்சவங்களவிட , ந‌ம்ம‌ள‌ பிடிச்சவங்கள‌ ஏத்துகிட்டு இருந்துருக்க‌ணுமோ??????

என்னை விரும்பிய‌வ‌ர்க‌ளுட‌னும், நான் விரும்பிய‌ பெண்ணுட‌னும் இன்ற‌ள‌வும் ந‌ல்ல‌ ந‌ட்போடு இருப்ப‌தால் இத‌ற்கு மேல் என்னால் தெளிவாக‌ எழுத‌முடிய‌வில்லை . ( அவ‌ர்க‌ளோடு ந‌ல்ல‌ ந‌ட்பு இல்லாவிட்டாலும் அவ‌ர்க‌ளை ப‌ற்றி விரிவாக‌ எழுதுவ‌து நாகரீக‌மாக‌ இருக்காது என்ப‌துதான் என‌து நிலை).

எல்லாத்துக்கும் மேல தமிழகத்தில் சங்க இலக்கிய காலத்தில் இருந்தே இருப்பதாக சொல்லப்பட்டாலும், இன்று காதல் திருமணங்களை எல்லாப் பெற்றோரும் முழுமனதுடன் ஆதரிக்கின்றார்களா?

அன்றும், இன்றும் காலத்தால் அழியாத காதல் பாடல்களை பல திரைப்படங்களுக்கு எழுதியவரும், தன் கவிதை தொகுப்புகளில் எல்லாம் காதலை மிக உயர்வாக எழுதியவரும் கவிப்பேரரசு என்று அழைக்கப்படுபவருமான வைரமுத்துவின் மகன் கூட தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ள முதலமைச்சர் வீட்டிலிருந்து உதவியை எதிர்பார்க்க நேர்ந்தது என்றால், மற்றவர்கள் எல்லாம் ???

என்னை பொருத்தவரை காதல் என்பது எல்லோரையும் ஒரு குறிபிட்ட வயதில் தேடிவந்து கதவை தட்டும் ஒரு காற்று. அது க‌த‌வை த‌ட்டுவ‌து ஒரு இய‌ற்கை நிக‌ழ்வு. ( அறிவிய‌ல்ப‌டி இதை ஹார்மோன்க‌ளின் செயல்பாடு என்கிறார்க‌ள்.)

வெகுபலர் இந்த‌ க‌த‌வு த‌ட்டல் ஓசை கேட்டு வெகுண்டெழுந்து க‌த‌வை திற‌ந்து , காத‌லை வ‌ர‌வேற்று எல்லாவ‌ற்றிலும் காத‌லையே நிர‌ப்பி,ம‌ற்ற‌வையெல்லாம் இர‌ண்டாம்ப‌ட்ச‌ம் என்று க‌ருதி அந்நாளில் செய்ய‌வேண்டிய‌ ப‌ல‌வ‌ற்றை செய்ய‌ த‌வ‌றுகின்றார்க‌ள். ஒரு சில‌ர் இந்த‌ க‌த‌வு த‌ட்ட‌லை கேட்டாலும் கேட்காத‌துபோல் தாங்க‌ள் செய்ய‌ வேண்டிய‌ வேலையில் ஆழ்ந்து, சாதிக்க‌ வேண்டிய‌தை சாதிக்கின்றார்க‌ள்.

ஒன்று ம‌ட்டும் உண்மை. இப்ப‌டி முத‌ல் த‌ட்ட‌லின் போது காத‌ல் காற்றுக்கு க‌த‌வை திற‌க்காத‌வ‌ர்க‌ள், க‌த‌வை திற‌ந்த‌வ‌ர்க‌ளைவிட‌ ச‌ற்று அதிக‌மாக‌த்தான் சாதிக்கின்றார்க‌ள். காத‌ல் காற்று ஒரு முறை ம‌ட்டும் க‌த‌வை த‌ட்டுவ‌தில்லை. இவ‌ர்க‌ள் சாதித்த‌ப்பின் ச‌ற்று ப‌ல‌மாக‌வே இவ‌ர்க‌ளின் க‌த‌வை காத‌ல் த‌ட்டுகின்ற‌து.

என்னதான் பலமாக காதல் காற்று கதவை தட்டினாலும் , தாங்களே போய் கதவை திறக்காமல் பெற்றோரிடம் அந்த உரிமையை வேறு வழியின்றோ, அல்லது தாங்களாக விரும்பியோ ஒப்படைப்பவர்களும் உண்டு.

நாம‌ வாழ்க்கையில‌ செய்யிற‌ ப‌ல‌ த‌வ‌றுக‌ளுக்கு கார‌ண‌ம் என்ன‌னு யோசிச்சா, ஒன்னு முடிவெடுக்க‌ வேண்டிய‌ நேர‌த்துல‌ முடிவெடுக்காம‌ இருப்பது, இல்ல‌ முடிவெடுக்க‌ கூடாத‌ நேர‌த்துல‌ முடிவு எடுப்பது.இது தான் காரணமா இருக்கும்.
சரியான நேரத்துல சரியானத செய்யிறவங்களுக்கு காதல் மட்டும் இல்ல, எல்லாமே நல்லாத்தான் நடக்கும் .

"சீரியசான விஷயங்களைத் தவிர வேறு எதுவும் எழுதுவது இல்லை என சர்ச்சில் சத்தியம் செய்து வலைப்பூவைத் துவங்கி இருக்கும் "இன்டர்நெட் இங்கர்சால்'', வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும்''வலைத்தளத்தின் வள்ளலார்" அருமை அண்ணன் ஜோசப் பால்ராஜ் " என்றெல்லாம் எனக்கு அண்ணண் அப்துல்லா அடைமொழி கொடுத்ததை மெய்யாக்கும் வண்ணம் நானும் ரொம்ப சீரியசாத்தான் காதலைபத்தியும் எழுதிகிட்டு இருக்கேன்னு எனக்கெ தெரியுறதால ரொம்ப சுருக்கமா காதலை பத்தி நச்சுனு சொல்லிடுறேன்.

காதல்ங்கிறது ஒரு நெருப்பு மாதிரி, இத வச்சு விளக்கு ஏத்தி இருளையெல்லாம் அகற்றவும் செய்யலாம்,
வீட்டை கொளுத்தி எல்லாத்தையும் ஒரே நொடியில அழிக்கவும் செய்யலாம்,
சிகரெட்ட கொளுத்தி கொஞ்சம் கொஞ்சமா தன்னையே அழிச்சுக்கவும் செய்யலாம்.


காதல் நெருப்பு எல்லார் கைக்கும் வரும், அத வைச்சு என்ன செஞ்சோம், செய்யப்போறோம்கிறதுதான் விஷயமே.

குறிப்பு:காதல் நெருப்ப வைச்சு நீ என்னடா செஞ்சனு கேட்டு வரும் பின்னூட்டங்களுக்கு பதிலளிக்கப்படமாட்டாது.

இப்ப நான் யாரையாவது இந்த தொடர் விளையாட்டுல‌ மாட்டிவிடனும், நல்லா யொசிச்சு பார்த்ததுல, நீ வேண்டும், நீ வேண்டும் என்றென்றும் நீ வேண்டும் என்ற அழகான காதல் கதைய எழுதிகிட்டு இருக்க அருமை பதிவர் திவ்யாவை மாட்டிவிட்டா பொருத்தமா இருக்கும்னு தோணுது. இப்ப நான் தப்பிச்சுக்கிறேன். ( நாங்களும் தான்னு எல்லாம் குரல் கொடுக்க கூடாது அப்துல்லா அண்ணா)

டிஸ்கி: குசும்பணத்தான் மாட்டிவிடணும்ணு நினைச்சேன், மாட்டிவிட்டா இதவைச்சு கூட அவரு ஏதவது குசும்பு பண்ணுவாரு. அதுனாலத்தான் மிக அருமையா காதல் கதை எழுதிகிட்டு இருக்க திவ்யாவ மாட்டிவிட்டாச்சு.
Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க