எனது சொந்த வாழ்வில் நிகழ்ந்த ஒன்று. எனது 17 வருட தேடல் இது.
மாரநேரி என்ற ஒரு சின்ன கிராமத்தில் பிறந்த நான், அதே கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில்தான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். தமிழ் வழிக்கல்வியில் ஆங்கிலம் என்பது அறிமுகமாவதே மூன்றாம் வகுப்பில் தானே. எனக்கு அது வரை ஏ பி சி டி கூட தெரியாது. மூன்றாம் வகுப்பு வந்த போதும் ஏபிசிடி சொல்லச் சொன்னால் 26 எழுத்துக்களையும் சொல்லத்தெரியாது. ஆனால் எழுதச் சொன்னால் அதுவும் எனது சிலேட்டில் எழுதச் சொன்னால் எழுதிவிடுவேன். அது எப்படியென்றால் எனது சிலேட்டின் இரு பக்க சட்டங்களிலும் ஏபிசிடி இருக்கும். அதைப் பார்த்து எழுதி சாமாளித்தேன்.
நான் நான்காம் வகுப்பு படித்த போது எங்கள் ஊர் பள்ளியில் வேலை பார்த்த ஒரு கன்னியாஸ்த்ரி மருத்துவ விடுப்பு எடுத்த போது அந்த விடுப்பு பணிக்காக வந்தவர் தான்
சுந்தரி டீச்சர். சுந்தரி டீச்சர் B.Sc வேதியியல் பட்டமும், B.Ed பட்டமும் பெற்றவர்.
நான்கவது படிக்கும் எங்களுக்கு சுந்தரி டீச்சர் வகுப்பெடுக்க வந்த முதல் நாள் இன்னும் எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது. மதிய நேரம் முதல் பிரிவு அறிவியல் பாடம். எனக்கு ஆங்கிலம் தான் தெரியாதே தவிர மற்ற பாடங்கள் எல்லாம் நன்றாகப் படிப்பேன். முதலில் நடந்த அறிவியல் வகுப்பில் முதல் வரிசையில் உட்கார்ந்து மிக ஆர்வமாக பாடங்களை கவனித்துக் கொண்டிருந்தேன். கேட்க்கும் கேள்விகளுக்கு எல்லாம் சரியாக பதில் சொல்லி டீச்சரின் பாராட்டுகளையும் பெற்றேன்.
அடுத்த பிரிவுக்கு மணி அடித்தது. அறிவியல் வகுப்பு முடிந்து ஆங்கில வகுப்பு தொடங்கியது. விடுறா ஆளை என்று முதல் வரிசையிலிருந்து கடைசி வரிசைக்கு ஓடிவிட்டேன். சுந்தரி டீச்சர் ஆங்கிலப் பாடத்தை எடுக்க ஆரம்பித்தார்கள். அந்த பாடம் கூட சாலமன் மன்னரின் அறிவை சோதிக்க ஒரே மாதிரியாக இருக்கும் இரண்டு பூக்களை கொடுத்து அதில் எந்த பூ நிஜப்பூ என தொட்டுப்பார்க்காமலேயே கண்டுபிடிக்க சொல்லும் கதை. இந்தப் பாடத்தை நடத்த ஆரம்பித்த டீச்சர், பாடத்திற்கு நடுவே கேள்வி கேட்ட போதுதான் என்னை தேடி, நான் கடைசி வரிசையில் அமர்ந்திருப்பதை பார்த்தார்கள். எங்கடா இந்த பால், அறிவியல் பாடத்துக்கு முன்னாடி உக்காந்திருந்தவன ஆளையே காணோமேன்னு கேட்டாங்க. அதுக்கு என் தோழன் ஒருத்தன் டீச்சர் அவன் எல்லா பாடமும் நல்ல படிப்பான், ஆனா இங்கிலீஷ் அவனுக்கு வராது அதுனால இங்கிலீஷ் பாடத்துக்கு மட்டும் கடைசி வரிசையிலத்தான் உக்காருவான்னு சொன்னான். டீச்சருக்கு கோவம் வந்துருச்சு. முதல்ல நீ முதல் வரிசைக்கு வான்னு கூப்பிட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமா ஆங்கிலத்தின் மேல எனக்கு இருந்த பயத்தை போக்கி, எல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க.
டீச்சர் ஊரு நாகப்பட்டினம், அதுனால எங்க ஊர் கன்னியர் மடத்துலயே தங்கி, எங்க பள்ளியில வேலை செஞ்சாங்க. பள்ளியும், மடமும் ஒரே வளாகத்தில்தான் இருந்துச்சு. பள்ளிக்கூடம் விட்ட பின்னர் இரவு உணவு வரையிலும், விடுமுறை நாட்களிலும் நாங்கள் டீச்சர் உடன் தான் இருப்போம். விளையாட்டுகளோடு எங்களுக்கு ஆங்கிலம், பொது அறிவு போன்றவற்றையும் சொல்லிக் கொடுத்தார்கள். அவர்களிடமிருந்து தான் பல அடிப்படை விசயங்களை கற்றுக்கொண்டேன். நான் மட்டுமல்ல என் அண்ணன் டைட்டஸ், என் வகுப்புத் தோழன் ஒருவன் தோழியர் இருவர் என நாங்கள் 5 பேர் எப்போதும் டீச்சருடனே இருந்து நிறையக் கற்றுக்கொண்டோம்.
நாங்கள் 5 ஆம் வகுப்பு முடித்துவிட்டு ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை எங்கள் கிராமத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள மேகளத்தூர் என்ற ஊரில் இருந்த நடுநிலைப் பள்ளியில் படித்தோம். அப்போதும் எங்கள் ஊரில் டீச்சர் இருக்கும் வரை நாங்கள் அவர்கள் கூடத்தான் இருந்தோம். ஆனால் சில ஆண்டுகளில் டீச்சர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்கள். தற்போது எங்கே உள்ளார்கள் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.
அவர்களைப் பற்றி எனக்கு தெரிந்தது எல்லாம் கீழே உள்ளவை தான்.
1)
பத்மாவதி இல்லம், கிணத்தடி சந்து, வெளிப் பாளையம், நாகப்பட்டினம் என்ற இந்த முகவரி.
2) அவரது தந்தையார் பெயர்
காளிமுத்து என்பதும்,அவர்
PA to the CEO ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
3) அவரது மூத்த சகோதரியின் கணவர் சோழன் போக்குவரத்து கழகத்தில் மேலாளராக பணிபுரிந்தார், அவர்களது மகன் பெயர் பிரபு.
4) அவருக்கு ஒரு தங்கை உண்டு.
நாங்கள் அவர்களோடு இருக்கும் போதே எங்களுக்கு அரசியல் குறித்த சரியான பார்வை என்னவாக இருக்க வேண்டும், சினிமாவில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பங்கள், புதுப் புது கண்டுபிடிப்புகள் குறித்த செய்திகள் எனப் பலவற்றையும் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்து ஒரு கிராமத்தில் பிறந்த எங்கள் முன்னேற்றத்தில் சுந்தரி டீச்சரின் பங்கு மிக முக்கியமானது.
என் அண்ணண் ஜோசப் டைட்டஸ் Neuro Physiology யில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்சியை முடித்துவிட்டு முனைவர் பட்டம் பெற இருக்கிறார், தற்போது அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் மேடிசன் என்ற ஊரில் உள்ள விஸ்கான்ஸின் பல்கலை கழகத்தில் ஆராய்சியாளராக வேலைக்கு சேரும் அளவுக்கு உயர்ந்ததிலும் சுந்தரி டீச்சரின் பங்கு பெருமளவில் இருக்கின்றது. நானும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, மென்பொருள் துறையில் ஒரு நல்ல வேலையிலும் சேர்ந்து வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்து, இன்று வலைப் பதிவு எழுதும் அளவுக்கு என்னை உயர்த்தியதிலும் சுந்தரி டீச்சரின் பங்கு முக்கியமானது.
வலையுலகில் நான் எழுதும் எனது 50வது பதிவு இது.
என்னை இந்தளவுக்கு உயர்த்திய என் பாசமிகு சுந்தரி டீச்சருக்கு இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.
நாகையை சேர்ந்தவரான கோவி.கண்ணண் அண்ணணிடம் நேற்றைய சந்திப்பில் சுந்தரி டீச்சரை குறித்து கூறினேன். அவரது தம்பியிடம் கூறி தகவல் சேகரிப்பதாக கூறியுள்ளார். நாகையை சேர்ந்த வேறுயாரும் இந்த பதிவை படித்தீர்களானால் சுந்தரி டீச்சரை நான் கண்டுபிடிக்க உதவுங்கள். 17 வருடமாக தேடிக் கொண்டிருக்கும் எனக்கு யாராவது உதவுங்கள்.
ஐம்பதாவது பதிவை வெளியிடும் இவ் வேளையில் என்னை ஆதரித்து ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் எனது நன்றிகள்.