Author: ஜோசப் பால்ராஜ்
•8:53 PM
இலங்கை அரசால் திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகளை தயவு செய்து நம்பவோ பரப்பவோ செய்யாதீர்கள்.

இந்திய அமைதிப்படை காலத்தில் இருந்து இதுபோல ஆயிரம் முறை அவரை இது போல் கொன்றுள்ளார்கள் வெறும் செய்தியில் மட்டும். இது சர்வதேச சமுதாயத்தை திசை திருப்பும் ஒரு செயல் என்றே படுகின்றது.

இத்துனை நாள் போராடியவர் இப்போதா தப்பிச் செல்லப் போகின்றார்? யோசிக்க வேண்டிய நேரமிது. அஞ்சலிப்பதிவு எழுதும் நேரமல்ல.

எனவே அனைவரும் அமைதி காப்போம். நல்லதே நடக்க நம்மால் இயன்றவற்றை செய்வோம். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•9:37 PM
சில காலங்களுக்கு முன்பு வரை கிராமப்புறங்களுக்கு ஏதாவது அவசர செய்திகளை அதிலும் குறிப்பாக மரண செய்திகளை சொல்ல மட்டுமே பயன்பட்டு வந்த தகவல் தொடர்பு முறைதான் தந்தி. சமீபகாலத்தில் செல்லுலார் தொலைபேசிகளின் பயன்பாடு அதிகரித்த பின்னர் தந்தி சேவையின் தேவை மிக மிக குறைந்து போயிருந்தது.

ஆனால் சமீபத்தில் ஈழப் போரை நிறுத்தக் கோரி பல முறை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்(???), வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி என பலருக்கும் அடிக்கடி தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் அடிக்கடி தந்தி அனுப்பி வந்தது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்றே. தான் மட்டுமின்றி கட்சிக்காரர்கள், தமிழக மக்கள் அனைவரையும் வேறு தந்தி அனுப்பி போராட்டம் நடத்தி அழிந்து வரும் தந்தி சேவையை காப்பாற்றவும் செய்தார் என்பதும் நாம் அறிந்த ஒன்று.

மின்னஞ்சல் சேவை மற்றும் தொலைத் தொடர்பு வசதிகள் பெருகிய பின்னர் கடிதம் எழுதுவதும் மிக அரிதாகி கொண்டே இருந்த நிலையில் உயிர் போகும் பிரச்சனையாக இருந்தாலும் மத்திய அரசுக்கு கடிதம் மட்டுமே எழுதுவேன் என்ற தனது உறுதியான கொள்கையால் பல கடிதங்களும் எழுதி கடித சேவையையும் காப்பாற்றியுள்ளார்.

தபால் மற்றும் தந்தி சேவை ஆகியவை மத்திய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் வரும் அமைப்புகள் என்பதால் தொலை தொடர்பு அமைச்சகம், அழிந்து வரும் தபால் தந்தி சேவைகளை காப்பாற்ற கருணாநிதி அவர்கள் செய்துவரும் மாபெரும் சேவைகளைப் பாராட்டி ஒரு பெரிய பாராட்டு விழா நடத்த தீர்மானித்துள்ளது.

தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் தற்போது இவ்விழாவை நடத்த இயலாது என்பதால் தேதி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

அழிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களை நீங்கள் காப்பாற்றுகிறேன் என எடுத்த முயற்சிகள் அவர்களை காப்பாற்றியதோ இல்லையோ, அழிந்து வரும் தபால் மற்றும் தந்தி முறைகளை காப்பாற்றியுள்ளது மிகவும் பாராட்டத் தக்கதே.

வாருங்கள் முதல்வரை பாராட்டுவோம். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•7:34 PM
படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி என்று தனது வலைக்கு தலைப்பு வைத்து எழுதும் அன்பர் ப்ளீச்சிங் பவுடர் அவர்கள் சமீபத்தில் ஒரு பதிவெழுதியிருந்தார் ,தமிழீழம் மலர்ந்தால் - நாளை தமிழகத்தின் கதி?? என்ற அந்தப் பதிவிற்கு ஒரு விளக்கம்.

காஷ்மீரையும், தமிழ் ஈழத்தையும் ஒரு போதும் ஒப்பிடவே முடியாது. இந்தியாவில் காஷ்மீர் மக்களுக்கு நாம் அளித்துள்ள உரிமைகளும், சுதந்திரமும் மற்ற மாநிலங்களில் இருக்கும் நமக்கு இல்லை. ஆனால் ஈழத்தில் கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்திலும் தமிழர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு இழிவுபடுத்தப்பட்டமையால் தான் போராட்டமே ஆரம்பித்தது. இன ஒழிப்பை ஒரு அரசாங்கமே முன்னெடுத்து செய்வதால் தான் தமிழர்கள் அறவழியில் ஆரம்பித்து பலன் ஏதுமில்லாதமையால் ஆயுத போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அஹிம்சை வழிப் போராட்டம் என்பது ஒரு போராட்டமே அல்ல. அஹிம்சையால் எந்த பலனும் இல்லை என்பதற்கு இந்தியாவை தவிர வேறெங்கும் சென்று நாம் உதாரணம் தேட வேண்டியதுமில்லை.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தமைக்கு காரணம் அஹிம்சை வழிப் போராட்டம் மட்டுமே என்று நினைத்தால் அது தவறு. 1947ஐ ஒட்டிய ஆண்டுகளில் இந்தியா மட்டுமா சுதந்திரம் அடைந்தது? இலங்கை, மலேசியா என ஆசியாவிலேயே பல நாடுகள் சுதந்திரம் அடைந்தனவே அந்த நாடுகளுக்கு ஏன் ஆங்கிலேயர்கள் சுதந்திரமளித்தார்கள்? அங்கெல்லாம் ஆயுதப் போராட்டத்தை எதிர்க்க முடியாமல் சுதந்திரமளித்தார்களா அல்லது அங்கும் அஹிம்சை போராட்டம் நடந்ததா?

உண்மையான காரணம் என்னவென்றால் 1945ல் நிறைவு பெற்ற இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயர்களின் அணி வெற்றியடைந்திருந்தாலும், போரினால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் மிக அதிகம். பெருமளவில் மனித வளத்தை அவர்கள் இழந்திருந்தமையால் அவர்களது காலணி நாடுகளை நிர்வகிக்க அவர்களுக்கு போதுமான மனித வளம் இல்லாமையால் அந்தக் காலகட்டத்தில் பல நாடுகளுக்கு விடுதலை அளித்தார்கள் என்பதே உண்மை. ஒரு வேளை ஆங்கிலேயர்கள் போரில் தோல்வியடைந்து ஜப்பான், ஜெர்மனி கூட்டணி வெற்றியடைந்திருந்தால் காந்தியடிகளுக்குப் பதிலாக சுபாஷ் சந்திர போஸ் அவர்கள்தான் நம் தேசத் தந்தையாகியிருப்பார்.

ஆங்கிலேயர்கள் அல்ல அஹிம்சையை உலகிற்கு அளித்த இந்தியாவும் சேர்த்து யாரும் அதற்கு மரியாதை அளித்ததுமில்லை, அளிக்கப் போவதுமில்லை. அஹிம்சைக்கு இந்தியா மரியாதை அளிப்பதாய் இருந்தால் ஈழத்தில் உண்ணா நோன்பிருந்த திலீபனும், பூபதி அண்ணையும் இறந்திருக்க மாட்டார்களே.

காஷ்மீரில் நடப்பது அயல்நாட்டு தீவிரவாதம், அங்கு நடப்பது அந்நிய சக்திகளாலும் அவர்களது உதவியால் இயங்கும் கைகூலிகளாலும் நடத்தப்படும் தீவிரவாதம் . ஆனால் தமிழ் ஈழத்தில் நடப்பது விடுதலைப் போராட்டம். தீவிரவாதத்திற்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்.

தமிழகத்தில் இருப்போர் ஈழத்தை ஆதரிக்க காரணம் சகத் தமிழன் ஈழத்தில் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இன்னல்களும், அவலங்களும் தான். மனிதனாய் இருப்பவர்களுக்கு இயல்பாய் இருக்கும் மனிதாபிமானத்தால் உந்தப்பட்டு எழும் உணர்வுதான் இந்த ஆதரவு. என்ன தான் இதை அரசியல்வாதிகள் காவிரி, முல்லைப் பெரியாறு போல அரசியலாக்கினாலும், மக்கள் மனதில் இருப்பது சக தமிழனின் மேல் உள்ள அன்புதான்.

எந்த தமிழனும் நாளை தமிழ் ஈழம் மலர்ந்தால் தமிழ் நாட்டைப் பிரித்து தமிழ் ஈழத்துடன் இணைய வேண்டும் என்று சொல்ல மாட்டான். உங்கள் மனதில் இப்படி ஒரு எண்ணம் வந்திருப்பது உங்கள் வலைப்பூவின் தலைப்பைத் தான் நினைவு படுத்துகின்றது.

ராஜிவ் கொலையையும், ஈழத் தமிழர்கள் பிரச்சனையையும் ஒப்பிட்டுக் கொண்டே இருப்பது மிகப் பெரிய மடத்தனம் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. அதுகுறித்து விவாதிக்க ஆரம்பித்தால் அது ஒரு வட்டம் போல தொடக்கமும் முடிவும் இன்றி சுத்திக் கொண்டே தான் இருக்கும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி , தங்களுக்கு மனிதாபிமானமே இல்லை என்பதை மறைக்க வேண்டுமாணால் அந்த வாதம் உதவும்.

தமிழ் ஈழம் மலர வேண்டியது காலத்தின் கட்டாயம். இங்கும் சில அறிவு ஜீவிகள் தங்கள் திறமையை காட்ட விழைவார்கள், தமிழ் ஈழம் மலர வேண்டும் ஆனால் புலிகள் கையில் அது இருக்க கூடாது என்பார்கள். ஈழத்தின் வரலாற்றை சற்று ஆழமாகப் படித்துப் பார்தீர்களேயானால் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் தோன்றின. ஆனால் புலிகளைத் தவிர மற்றக் குழுக்கள் எல்லாம் ஒன்று மறைந்துவிட்டன, அல்லது சிங்களர்களின் கைக் கூலிகள் ஆகிவிட்டன. ( உதாரணம்: டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான்). புலிகளைத் தவிர வேறு எந்தக் குழுவும் இன்று வரை தமிழர்களின் நலனுக்காக போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. எனவே ஈழமக்களும் புலிகளைத் தவிர வேறு யாரையும் ஆதரிப்பதில்லை. இது தான் உண்மை.

//இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே புலிகளைக்கு ஆதரவாக மக்களும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் புலிகள் என்றால் அது ராஜீவை கொலை செய்த இயக்கம் என்ற அளவிலே மட்டும் மக்கள் அவர்களை அறிந்து வைத்திருக்கிறார்கள்.//

மற்ற மாநிலங்களில் இருப்பவர்களுக்கு தமிழர்களைக் குறித்து என்ன அக்கறை இருக்கும்? அவர்கள் ஏன் ஈழத்தமிழர்களைக் குறித்துக் கவலை கொள்ள வேண்டும்? தமிழகத்தில் இருப்பவர்கள் அனைவரும் முதலில் கவலைப்பட்டு, போராட்டத்தை முன்னெடுத்து இதை தேசிய அளவில் பிரச்சனையாக்கியிருந்தால் என்ன தான் இந்த பிரச்சனையென்று மற்றவர்கள் அறிந்து கொள்ள ஆசைப்படுவார்கள். ஆனால் இங்கு நடப்பதென்ன?
நடிகர்கள் போராட போனால் அதிலும் இரண்டு கட்சி, அங்கும் அரசியல். அரசியல் கட்சிகள் போராடினாலும் எதிர்கட்சித் தனியாக போராடும், ஆளும் கட்சி தனியாக போராடும். இவர்கள் போராட்டத்திற்கிடையே ஒருவரை ஒருவர் தாக்குவார்கள். ஆகா இந்த போராட்டங்களைக் கூட அரசியலாக்கத்தான் முயல்கிறார்களே தவிர உண்மையாண போராட்டம் எங்கு நடக்கின்றது?

ஈழத்தில் இருப்பவர்கள் எல்லோரும் கன்னடர்களாய் இருந்திருந்தால் இன்னேரம் தனி ஈழம் என்றோ மலர்ந்திருக்கும். எந்த பிரச்சனையிலும் அவர்கள் பக்கம் நியாயம் இருக்கின்றதோ இல்லையோ ஆனால் மொத்த மாநிலமும் ஒற்றுமையாய் போராடுவார்கள். ஆளும்கட்சி, எதிர்கட்சியெல்லாம் ஒன்றாய் சேர்ந்து ஓரணியாய் நின்று போராடுவார்கள். அந்த ஒற்றுமை நம்மிடையே இல்லை. இங்கு எந்த அனைத்துக் கட்சி கூட்டத்திலாவது எல்லா கட்சிகளும் ஒருமித்த குரலில் ஒரு கருத்தை பேசியிருக்கின்றார்களா?

இந்தப் பிரச்சனையில் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்றால் முதலில் ஒரு தேசிய அளவில் ஒரு அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்து அவர்களை ஈழத்துக்கு அனுப்பி அங்குள்ள நிலையை நேரில் கண்டறிந்து வரச் செய்ய வேண்டும். அவர்களுடன் இந்தியப் பத்திரிக்கையாளர்கள் குழுவையும் அனுப்ப வேண்டும். இவர்கள் மூலம் உண்மை உலகுக்கு தெரியவரும். தமிழர்கள் படும் அவலங்கள் வெளிவரும். அவ‌ர்க‌ள் நேரில் க‌ண்டுவ‌ரும் அவ‌ல‌ங்க‌ளை பாராளும‌ன்ற‌த்தை கூட்டி விவாதிக்க‌ வேண்டும். இது தான் பிராந்திய‌ வ‌ல்ல‌ர‌சான‌ இந்தியா செய்ய‌ வேண்டியது.

இதுக்கு மேல அவதிப்பட ஒன்னுமேயில்லங்கிற நிலையில இருக்க மனுசனுங்களுக்கு உதவுங்கன்னு சொன்னா, இன்னைக்கு இவனுக்கு உதவுனா நாளைக்கு நமக்கு பிரச்சனைவரும் அது இதுன்னு போகாத ஊருக்கு வழி தேடிகிட்டு நிக்கிறவங்களுக்கு எல்லாம் என்ன பதில் சொல்ல முடியும்?
இல்ல‌ இல்ல‌ என்ன‌ தான் இருந்தாலும் ராஜீவ் காந்திய‌ கொன்ன‌வ‌ங்க‌ளுக்கு உத‌வ‌ கூடாதுன்னு சொன்னா உங்க‌ளையெல்லாம் ஒன்னும் செய்ய‌ முடியாது. ஆசிப் அண்ணாச்சி பாணியில சொல்ல‌ணும்னா, நீங்க‌ ம‌ட்டும் ந‌ல்லா இருங்க‌டே...
Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•12:23 AM
தமிழ் இன‌ தானைத் தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி அவர்கள் ஈழத்தில் நடக்கும் இன ஒழிப்புப் போரில் அநியாயமாய் கொல்லப்படும் தமிழர்களின் உயிர்களைக் காக்க மிக நீண்ட காலமாக யோசித்து சமீபத்தில் அறிவித்த அருமையான திட்டமான பிரதமருக்கு தந்தி திட்டம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று ஒரு நாளில் மட்டும் கோடிக்கணக்கான தந்திகள் பிரதமருக்கு குவிந்துள்ளன. தமிழகமெங்கும் அனைத்து தந்தி அலுவலகங்களிலும் வேறு எந்த தந்தியும் அனுப்ப இயலாத அளவுக்கு இன்று முழுவதும் பெருமளவில் மக்கள் வரிசையாக நின்று தந்தி அனுப்பியுள்ளனர். மேலும் பல தந்தி அலுவலகங்களுக்கு அருகில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு கடுமையான கூட்டம் கூடி பல மணி நேரம் வரிசையில் நின்று அனைவரும் தந்தியடித்துள்ளனர்.

பிரதமர் அலுவலகத்தில் தமிழர்களிடம் இருந்து வரும் தந்திகளை குவிக்க என மாபெரும் கிடங்கு ஒன்றை வாடகைக்கு எடுக்க முடிவு செய்துள்ளார்கள். அந்த அளவுக்கு வந்து குவிந்த தந்திகளைப் பார்த்து பிரதமர் பதறிபோய் உடனடியாக என்ன செய்வது என்றுத் தெரியாமல் சோனியாவை சந்தித்துவிட்டு அவரது ஆலோசனையின் பேரில் உடனடியாக மத்திய அமைச்சரவை கூடி ஒரு கடுமையான முடிவை எடுத்துள்ளது. அந்த கடுமையான முடிவை உடனடியாக செயல்படுத்தியும் விட்டார்கள்.

அதன்படி, உடனடியாக இந்தியாவில் உள்ள இலங்கை தூதரை வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அழைத்து அவரிடம் இந்தியா தனது கடுமையானக் கண்டணங்களை தெரிவித்துள்ளது. இந்தக் கடும் கண்டணத்தை நேரில் வாங்கிய இலங்கைத் தூதர் தற்போது டெல்லியில் நிலவும் கடுமையான குளிரிலும் பயங்கரமாய் வேர்த்து கொட்டி, மிக அதிகளவில் நீர் கேட்டு வாங்கி குடித்துள்ளார். இந்த கடும் கண்டணத்தை வெளியுறவு அமைச்சரது அனுமதியுடன் வெளியுறவு அமைச்சகத்தில் இருந்தே தொலைபேசி வாயிலாக இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவிடம் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி வாயிலாக இந்த கடும் கண்டணத்தை கேள்வியுற்ற இலங்கை அதிபரும் பேரதிர்ச்சிக்குள்ளாகி அலரி மாளிகையில் இருந்த அவ்வளவு நீரையும் குடித்தப் பின்னரும் மேலும் நீர் கேட்டமையால் உடனடியாக இரு லாரிகளில் குடிநீர் கொண்டுச் செல்லப்பட்டதாக கொழும்பில் இருந்து வந்த நம்பத்தகுந்த செய்திகள் அறிவிக்கின்றன.

போதுமான அளவு நீர் அருந்தி முடித்த‌ இலங்கை அதிபர் உடனடியாக ராணுவத் தளபதி சரத் பொன் சேகாவை அழைத்து அனைத்து படை நடவடிக்கைகளையும் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டுள்ளார். மேலும் இனி இலங்கைக் கடற்படையினர் கடலுக்குள்ளேயே செல்லக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். எனவே இனி இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட மாட்டார்கள் எனவும், தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது இலங்கைக் கடற்படையினரின் தொல்லை இனி இருக்காது என்றும் தெரியவருகிறது.

இது கலைஞர் கருணாநிதியின் அறிவுப்பூர்வமான போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.

இப்போராட்டத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்து தமிழகத்தில் மின்வெட்டை கண்டித்து ஆற்காடு வீராச்சாமிக்கு தந்தி அடிப்பது அல்லது தபால் கார்டு எழுதுவது போன்ற போராட்டங்களை கலைஞர் அறிவிப்பார் எனவும் தெரிகிறது.

பின்ன என்னங்க, எங்க ஊருல ஒரு கதை சொல்லுவாய்ங்க. ஒரு சரியான கஞ்சன், சாப்பிட்டுக்கிட்டு இருக்கப்ப எச்சக்கையால காக்கா கூட விரட்டாத ஒருத்தன் வீட்டுக்கு, ஒரு நாள் ஒரு விருந்தாளி வந்தாராம். என்னடா இது நம்ம ஊட்டுல சாப்புட இவன் வந்துட்டானே, எப்படி துரத்துறதுனு திரு.கஞ்சனும், அவரது மனைவியும் திட்டமிட்டு கணவண் மனைவி இடையே கடுமையான சண்டை என்பது போல நடித்தார்களாம். திரு.கஞ்சன் தன் திருமதியை அடி அடி என அடிப்பது போல் நடித்தாராம். அதப் பார்த்த விருந்தாளி, இது என்னடா நாம வந்த நேரம் சரியில்லைப் போலன்னு நினைச்சுக்கிட்டு அப்படியே திரும்பி போயிட்டாராம். அவர் போயிட்டாருன்னு நினைச்சுக்கிட்டு கஞ்சனும், அவரு மனைவியும் தங்கள் சாதனையை பெருசா பேசிக்கிட்டாங்களாம்.

திரு.கஞ்சன்: நான் வலிக்காமல் அடித்தேனே!!.

திருமதி.கஞ்சன்: நானும் நோகாமல் அழுதேனே!!.

இவ‌ங்க‌ ரெண்டு பேரும் போயிட்ட‌தா நினைச்ச‌ விருந்தாளி உள்ள‌ குதிச்சு..

நானும் போகாம‌ல் இருந்தேனே!!!! அப்டினு சொன்னாராம்.

வ‌லிக்காம‌ல் அடித்த‌ க‌ருணாநிதியும், நோகாம‌ல் அழுத‌ ம‌த்திய‌ அர‌சையும், போகாம‌ல் இருக்கும் இல‌ங்கைய‌ர‌சின் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தையும் வேற‌ என்ன‌ச் சொல்லுவ‌து.

தன்னால் முடியும் என்ற நிலையில் இருந்த போதும், எதிர்கட்சிகள் எல்லாரும் உண்ணாவிரதம் இருக்கின்றார்களே, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரு காரணத்தால் மட்டும் இப்படித் தனது கட்சியும் அங்கம் வகிக்கும் மத்தியரசின் கவனத்தை ஈர்க்க, தந்தி போராட்டம் அறிவிக்கும் கலைஞரை என்ன சொல்லி வாழ்த்துவது?

இதனால் யார் மகிழ்ச்சியடைந்தார்களோ, கட்டாயம் மத்தியமைச்சர் இராசா மகிழ்ந்திருப்பார். பின்ன அவருதானே தபால் தந்தி துறைக்கும் அமைச்சர். அவங்களுக்கு இன்னைக்கு நல்ல வசூல் ஆகியிருக்கும்ல? Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•5:21 PM
விகடன் இணையத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் குறித்த கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்படுகின்றது.


ஞாயிற்றுக்கிழமை (27.07.2008) இந்திய நேரம் மதியம் 12 மணிக்குள் வாக்களிக்க வேண்டும்.

12 கேள்விகளை கொண்ட இக்கருத்துக்கணிப்பில் எல்லோரும் பெருமளவில் கலந்துகொண்டு உங்களது நிலைப்பாட்டைத் தெரிவியுங்கள்.

விகடனின் இந்த முயற்சி கட்டாயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இன்னும் கொஞ்சம் விரிவான கேள்விகளை கொண்டு இந்த கருத்துக்கணிப்பை செய்திருக்கலாம் என்றாலும், ஒன்றுமே செய்யாதவர்களுக்கு மத்தியில் இதையாவது செய்தார்களே என்று மகிழ வேண்டியிருக்கின்றது.

விகடன் இணையத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளவர்களில் பலர் ராஜிவ் கொலையோடு மட்டும் விடுதலைபுலிகளை தொடர்பு படுத்தி பார்க்கின்றார்கள்.
சீக்கியர்களின் புனித தலத்தினுள் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த போது, ராணுவத்தை அனுப்பி கொன்றதற்காக, இந்திரகாந்தி அம்மையாரை அவரது மெய்பாதுகாவலர் பணியில் இருந்த சீக்கியர்களே சுட்டுக்கொன்ற போது காங்கிரஸ் கட்சியின் சார்பாகவே பல வன்முறைகள் சீக்கியர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டன. தனது தாயாரின் மறைவை ஒட்டி நடந்த வன்முறைகளை குறித்து ராஜிவ் கூறிய கருத்து என்ன தெரியுமா? ஒரு பெரிய மரம் சாயும் போது ஒரு சில அதிர்வுகள் நிகழ்வதை தவிர்க்க இயலாது என்பதுதான் அது.

ஆனால் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பிரதமராக பதவியேற்றதும் இந்திராவின் மறைவிற்கு பின்னர் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளுக்காக சீக்கிய மக்களிடம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் மன்னிப்பு கேட்டார்.

ஆனால் ஈழத் தமிழர்களின் போராட்டத்தில் போராடும் தமிழர்களை கலந்து ஆலோசிக்காமலேயே தமிழர்கள் சார்பாக தானே சென்று ஒரு ஒப்பந்தத்தை இலங்கை அரசுடன் செய்தது, தமிழ் மக்களை காக்க என சென்ற அமைதிப்படையே தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசின் படையாக மாறி செய்த கொடூரங்களுக்கெல்லாம் இதுவரை ஒரு மன்னிப்புக்கூட யாராலும் கேட்கப்படவில்லையே ? மன்னிப்பு கேட்க தமிழன் பிரதமாராக வேண்டுமா? அப்படியே தமிழன் பிரதமரானாலும் மன்னிப்பு கேட்பானா?

ராஜிவ் கொலை என்ற ஒரே கண்ணோட்டத்தில் மட்டும் ஈழப்பிரச்சனையை அணுகுவது தவறு. அல்லல்படும் ஈழ மக்களின் பிரச்ச‌னைகளை தீர்க்க என்ன செய்வது என்று பார்க்க வேண்டும்.

இன்னும் சிலர் கூறியிருந்த கருத்து , ஒருங்கிணைந்த இலங்கைக்குள்ளேயே தீர்வு காண்பதைத் தான் நாம் ஆதரிக்க வேண்டும். தனி ஈழம் அமைவதை ஆதரித்தால் நம் நாடு சிதறிவிடும் என்கின்றார்கள். காஷ்மீர் பிரிவினை வாதம் என்பது காஷ்மீர் மக்களால் நடத்தப்படுவதில்லை. அது அந்நிய நாட்டின் தூண்டுதலால் நடத்தப்படும் தீவிரவாதம், இந்திய அரசோ அல்லது இந்திய மக்களோ காஷ்மீர் மக்களை இழிவுபடுத்தவில்லை. சொல்லப் போனால் பிற பகுதி மக்களுக்கு இல்லாத பல சலுகைகள் காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட்டு, நல்ல விதமாகத்தான் நடத்தப்படுகின்றார்கள். இது முழுக்க முழுக்க அந்நிய நாட்டு சதி.
ஆனால் ஈழத்தில் நடப்பது என்ன ? அங்கு போராடும் தமிழர்கள் மொழியால் நம்மோடு ஒன்றுபட்டிருந்தாலும், அவர்களும் இலங்கை தேசத்தவர்களே. பல்வேறு வகையிலும் சிங்களவர்களால் துன்புறுத்தப்பட்டு, அமைதியான வழியில் போராடி, எந்த பலனும் இன்றி கடைசியாக அவர்கள் கையிலெடுத்தது தான் ஆயுதப் போராட்டம். ஒருங்கிணைந்த‌ இல‌ங்கைக்குள் எந்த‌ தீர்வும் காண‌ முடியாது என்ப‌தால்தான் தானே த‌னிநாட்டு போராட்ட‌ம் ந‌ட‌த்துகின்றார்க‌ள்?
எல்லோரும் ச‌ற்று யோசித்து பார்த்தால் ச‌க‌ த‌மிழ‌ர்க‌ளின் போராட்ட‌த்தில் உள்ள‌ நியாய‌ம் தெரியும். ஆனால் ந‌ம் த‌மிழ‌க மீன‌வ‌ர்க‌ள் சிங்க‌ள‌ப்ப‌டைக‌ளால் கொல்ல‌ப்ப‌டுவ‌த‌ற்கே, வெறும் க‌டித‌மும் உண்ணாவிர‌த‌மும் தான் என்ற‌ நிலையில் இருக்கும் நம் அரசியல்வாதிகள்,ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் போராட்ட‌த்தையா க‌ண்டுகொள்வார்க‌ள் ?
ம‌க்க‌ளின் ம‌ன‌தில் முத‌லில் மாற்ற‌ம் ஏற்ப‌ட‌ வேண்டும்.
உங்க‌ள் க‌ருத்துக்க‌ளை பின்னூட்ட‌மிடுங்க‌ள். அது என் நிலைக்கு எதிரான‌ நிலையாக‌ இருந்தாலும் , உங்க‌ள் க‌ருத்துரிமையை நான் க‌ட்டாய‌ம் ம‌திப்பேன். ஆரேக்கிய‌மான‌ விவாத‌ம் வ‌ர‌வேற்க‌ப்ப‌டுகின்ற‌து.

Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க