Author: ஜோசப் பால்ராஜ்
•7:15 PM
இரவார் இரப்பார்க்குஒன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.

உழவும் உழவர்களும் - 1
உழவும் உழவர்களும் - 2
உழவும் உழவர்களும் - 3
உழவும் உழவர்களும் - 4

இயற்கை சீற்றங்களின் போது அரசாங்கம் விவசாயிகளுக்கு எப்படி உதவி செய்கின்றது என்றும் அதை பெறுவதில் எம்மவர்கள் படும் பாடு இருக்கின்றதே, அது உலகின் மிக உயர்ந்த குலமான உழவர் குலத்தை மிக கேவலமாக இழிவுபடுத்தும் செயல்கள் , அவற்றைப் பார்க்கும் முன்பு, இப்பதிவின் ஆரம்பத்தில் கொடுத்திருக்கும் திருக்குறளின் பொருளை சொல்லிவிட்டால் உங்களுக்கே புரியும்.

உழவுத்தொழிலைச் செய்து வாழ்பவர்கள் தாங்கள் பிறரிடம் சென்று யாசிக்கமாட்டார்கள். வறியவர்க்கு ஒரு பொருளை வஞ்சனை இல்லாமல் கொடுத்து உதவுவார்கள்.

இத்தனை பெருமை மிக்க உழவர்கள் இன்று இருக்கும் நிலை என்ன ?
இயற்கையின் சீற்றங்களை அவர்கள் எதிர் கொள்ளும் போது அரசாங்கம் கொடுக்கும் நிவாரணம் எவ்வளவு? ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமாக செலவு செய்யும் விவசாயிக்கு ஏக்கருக்கு சில ஆயிரங்களை தருவார்கள். கடைசியாக கொடுத்த நிவாரணம் வெறும் மூவாயிரம் ரூபாய்.

இதுவே சொற்பத் தொகை என்றால் அதை வாங்க நாங்கள் படும்பாடு இருக்கின்றதே அது சொல்ல முடியாத சோகம்.

எரிகின்ற வீட்டிலும் பிடுங்கும் செயலை செய்ய வருவார்கள் நம் அரசு அதிகாரிகள். கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று உங்களுக்கு எவ்வளவு விவசாய நிலம் இருக்கின்றது என்று சிட்டா அடங்கல் எல்லாம் வாங்கனும்.


இதுக்கு ஒரு ஏக்கருக்கு 100 ரூபாயாவது வாங்காம கொடுக்கமாட்டாரு அந்த கி.நி.அ, இவ்வளவையும் வாங்கி யாருகிட்ட கொடுக்கனும், அதே கிராம நிர்வாக அலுவலர் கிட்ட தான் கொடுக்கனும், அவருதான் அரசாங்கம் தரும் நிதியை கொண்டுவந்து எங்களுக்கு கொடுப்பாரு. அப்போ ஒரு ஏக்கருக்கு ஒரு 200 முதல் 300 வரை அடிச்சுட்டு மீதியத்தான் கொடுப்பாரு. இப்படி எல்லாரும் சாப்பிட்டது போக மிச்சம் ஒரு 2500 வரும். இது எங்களோட இழப்பில் 4ல் ஒரு பங்கு. இப்படியே 2 வருடம் தொடர்ந்து நடந்தால் எந்த விவசாயியால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியும் ? இப்போது தெரிகின்றதா ஏன் இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றார்கள் என்று ?

விவசாயம் பற்றி எதுவுமே தெரியாத சில நண்பர்கள் உங்கள் தொழிலில் ஏற்படும் இழப்புகளுக்கு ஏன் அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும்? மற்ற தொழில் செய்வோர்களுக்கு எல்லாம் அவர்கள் தொழிலில் இழப்பு ஏற்பட்டால் அரசா இழப்பீடு வழங்குகின்றது என்று கேட்பார்கள்.

எல்லா தொழில்களும், விவசாயமும் ஒன்று இல்லை. மற்ற தொழில்களில் எல்லாம் தயாரிப்பாளர்தான் விலை நிர்ணயம் செய்வார். ஆனால் உணவுப் பொருட்கள் மக்களின் அத்தியாவசியத் தேவையென்பதால் அரசுதான் அதன் விலையை நிர்ணயிக்கும். எங்கள் உற்பத்தி மிக அதிகமானாலும் எங்களால் அதிக லாபம் அடைய முடியாது. எங்களது லாபம் எவ்வாறு அரசால் கட்டுபடுத்தப்படுகின்றதோ, அதே போல் எங்கள் இழப்பும் அரசால்தான் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அது தானே நியாயம்?

நன்கு விளைந்து நெல்லை அரசின் கொள்முதல் நிலையங்களில் விற்றாலும் சரி, வெள்ளத்தாலோ அல்லது வறட்சியாலோ ஒன்றும் விளையாமல் உதவி தொகை பெறுவதானாலும் சரி, எங்களுக்கு சேர வேண்டிய முழுத் தொகையையும் நாங்கள் வாங்கவே முடியாது. அவர்கள் எடுக்க வேண்டியதை எடுத்துக் கொண்டு மிச்சம் மீதியைத் தான் எங்களிடம் கொடுக்கின்றார்கள்.

பாருங்கள் அய்யா, யாரிடமும் யாசிக்காத உழவனுக்கு அவனுக்கு சேரவேண்டிய தொகையை கூட அவனால் முழுதுமாய் பெற இயலாது, தனக்கு உரியப் பொருளை கூட இரந்து வாங்க வேண்டிய நிலை. வறியவர்க்கு ஒரு பொருளை வஞ்சனை செய்யாது கொடுப்பவர்களுக்கு , அவர்கள் பொருளையே வஞ்சனை செய்யும் கொடுமை. இது தானே இன்று உழவர்களின் நிலை ?

நெல் விவசாயிகள் மட்டும்தான் இத்தணை சோகங்களையும் அனுபவிக்கின்றார்கள் என்று நினைக்க வேண்டாம். 11 மாத பயிரான கரும்பு விவசாயிகள் இருக்கின்றார்களே, அவர்கள் பாடு மிக மோசமானது. அதை கட்டாயம் தனி பாகமாகத்தான் எழுத வேண்டும், அடுத்த பாகத்தில் கரும்பு விவசாயிகளின் சோகங்களை பார்ப்போம். Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•1:22 AM
நீயும் நானும்,
நிலவும் வானும் என்றிருந்தேன்,

என்னோடு தான் உன் வாழ்வு
என்று நான் இறுமாந்திருந்தேன்.
காத‌ல் தான் என்று க‌ண்க‌ள் மூடியிருந்தேன்.

வெறும் காரிய‌ம் சாதிக்க‌த்தான் என்று
சொல்ல‌வில்லை நீ ச‌கியே..

உந்த‌ன் தேவைக‌ள் அனைத்தும்
என‌க்கே நீ உரைத்தாய்,
காலால் இட்ட‌த‌னைத்தும்
என் த‌லையால் நான் முடித்தேன்,

காத‌லால் தான் நீ என்னிட‌ம் கூறுகிறாயென்று
த‌வறாய் நினைத்திருந்தேன் - இளிச்ச‌வாய‌ன் இவ‌னே,
இவனை விட்டால் வேறு யார் செய்வார்
என்று நீ எண்ணிய‌து, என‌க்கெப்படி தெரியும் ?

பேருந்து ப‌ய‌ண‌த்தில் ச‌ன்னலோர‌த்தில்
முழுநில‌வு பார்த்தால் என் ம‌ன‌து நினைத்த‌து
உந்த‌ன் முக‌ம் தானே? முழுநில‌வு ஒளியில்
ப‌ய‌ணித்த‌து என் குற்ற‌ம் தானோ ?
எத்த‌னை ப‌ய‌ண‌ங்க‌ள் அதில் எத்த‌னை முழு நில‌வுக‌ள்?
முழு நிலவை உன் முகமாய்
எண்ணியது என் பிழையா?
இல்லை முழு நிலவே பிழையா ?

எத்த‌னை த‌வ‌ம் செய்தும்
என் காத‌ல் உன‌க்கு புரிய‌வில்லையெனில்
பிழை எந்த‌ன் காத‌லிலா?
அல்ல‌து உந்த‌ன் ம‌ன‌திலா?

உண்மை காதலை நீ உணர மறுத்தாய்,
இன்று இருவருமே இருளில் ‍- யாருக்கும் ஒளியில்லை.
ஒளியில்லா வாழ்வதனை வாழ்வதற்கா காதல் ???

நீயும் நானும்,
நிலவும் வானும் என்றிருந்தேன்,
என்னோடு தான் உன் வாழ்வு

என்று நான் இறுமாந்திருந்தேன்.

அம்மாவாசை அன்று நில‌வில்லை
என்ற‌து நிதர்சனம், இன்று - என் வாழ்வு
அம்மாவாசையான‌து அறிவாயோ பெண்ணே?

மாதம் ஒருமுறைதான்
நிலவுக்கு அம்மாவாசை,
உன் அம்மாவின் ஆசையையும் மீறி
இன்று நம் வாழ்வில் தினமும் அம்மாவாசை.

நீயாவது வாழ்வில் மகிழ்ந்திரு,
நம் சோகத்தை நான் மட்டும் தாங்க விடு.
மகிழ்சி என்றும் உனதாகட்டும்,
உன் சோகம் கூட எனதாகட்டும்.

சோகம் எனக்கு புதிதில்லை
ஆனாலும்உன் சோகம் - அதை
எந்நாளும் நான் விரும்பவில்லை .

நீயாவது வாழ்வில் மகிழ்ந்திரு,
நம் சோகத்தை நான் மட்டும் தாங்க விடு. Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•5:21 PM
விகடன் இணையத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் குறித்த கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்படுகின்றது.


ஞாயிற்றுக்கிழமை (27.07.2008) இந்திய நேரம் மதியம் 12 மணிக்குள் வாக்களிக்க வேண்டும்.

12 கேள்விகளை கொண்ட இக்கருத்துக்கணிப்பில் எல்லோரும் பெருமளவில் கலந்துகொண்டு உங்களது நிலைப்பாட்டைத் தெரிவியுங்கள்.

விகடனின் இந்த முயற்சி கட்டாயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இன்னும் கொஞ்சம் விரிவான கேள்விகளை கொண்டு இந்த கருத்துக்கணிப்பை செய்திருக்கலாம் என்றாலும், ஒன்றுமே செய்யாதவர்களுக்கு மத்தியில் இதையாவது செய்தார்களே என்று மகிழ வேண்டியிருக்கின்றது.

விகடன் இணையத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளவர்களில் பலர் ராஜிவ் கொலையோடு மட்டும் விடுதலைபுலிகளை தொடர்பு படுத்தி பார்க்கின்றார்கள்.
சீக்கியர்களின் புனித தலத்தினுள் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த போது, ராணுவத்தை அனுப்பி கொன்றதற்காக, இந்திரகாந்தி அம்மையாரை அவரது மெய்பாதுகாவலர் பணியில் இருந்த சீக்கியர்களே சுட்டுக்கொன்ற போது காங்கிரஸ் கட்சியின் சார்பாகவே பல வன்முறைகள் சீக்கியர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டன. தனது தாயாரின் மறைவை ஒட்டி நடந்த வன்முறைகளை குறித்து ராஜிவ் கூறிய கருத்து என்ன தெரியுமா? ஒரு பெரிய மரம் சாயும் போது ஒரு சில அதிர்வுகள் நிகழ்வதை தவிர்க்க இயலாது என்பதுதான் அது.

ஆனால் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பிரதமராக பதவியேற்றதும் இந்திராவின் மறைவிற்கு பின்னர் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளுக்காக சீக்கிய மக்களிடம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் மன்னிப்பு கேட்டார்.

ஆனால் ஈழத் தமிழர்களின் போராட்டத்தில் போராடும் தமிழர்களை கலந்து ஆலோசிக்காமலேயே தமிழர்கள் சார்பாக தானே சென்று ஒரு ஒப்பந்தத்தை இலங்கை அரசுடன் செய்தது, தமிழ் மக்களை காக்க என சென்ற அமைதிப்படையே தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசின் படையாக மாறி செய்த கொடூரங்களுக்கெல்லாம் இதுவரை ஒரு மன்னிப்புக்கூட யாராலும் கேட்கப்படவில்லையே ? மன்னிப்பு கேட்க தமிழன் பிரதமாராக வேண்டுமா? அப்படியே தமிழன் பிரதமரானாலும் மன்னிப்பு கேட்பானா?

ராஜிவ் கொலை என்ற ஒரே கண்ணோட்டத்தில் மட்டும் ஈழப்பிரச்சனையை அணுகுவது தவறு. அல்லல்படும் ஈழ மக்களின் பிரச்ச‌னைகளை தீர்க்க என்ன செய்வது என்று பார்க்க வேண்டும்.

இன்னும் சிலர் கூறியிருந்த கருத்து , ஒருங்கிணைந்த இலங்கைக்குள்ளேயே தீர்வு காண்பதைத் தான் நாம் ஆதரிக்க வேண்டும். தனி ஈழம் அமைவதை ஆதரித்தால் நம் நாடு சிதறிவிடும் என்கின்றார்கள். காஷ்மீர் பிரிவினை வாதம் என்பது காஷ்மீர் மக்களால் நடத்தப்படுவதில்லை. அது அந்நிய நாட்டின் தூண்டுதலால் நடத்தப்படும் தீவிரவாதம், இந்திய அரசோ அல்லது இந்திய மக்களோ காஷ்மீர் மக்களை இழிவுபடுத்தவில்லை. சொல்லப் போனால் பிற பகுதி மக்களுக்கு இல்லாத பல சலுகைகள் காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட்டு, நல்ல விதமாகத்தான் நடத்தப்படுகின்றார்கள். இது முழுக்க முழுக்க அந்நிய நாட்டு சதி.
ஆனால் ஈழத்தில் நடப்பது என்ன ? அங்கு போராடும் தமிழர்கள் மொழியால் நம்மோடு ஒன்றுபட்டிருந்தாலும், அவர்களும் இலங்கை தேசத்தவர்களே. பல்வேறு வகையிலும் சிங்களவர்களால் துன்புறுத்தப்பட்டு, அமைதியான வழியில் போராடி, எந்த பலனும் இன்றி கடைசியாக அவர்கள் கையிலெடுத்தது தான் ஆயுதப் போராட்டம். ஒருங்கிணைந்த‌ இல‌ங்கைக்குள் எந்த‌ தீர்வும் காண‌ முடியாது என்ப‌தால்தான் தானே த‌னிநாட்டு போராட்ட‌ம் ந‌ட‌த்துகின்றார்க‌ள்?
எல்லோரும் ச‌ற்று யோசித்து பார்த்தால் ச‌க‌ த‌மிழ‌ர்க‌ளின் போராட்ட‌த்தில் உள்ள‌ நியாய‌ம் தெரியும். ஆனால் ந‌ம் த‌மிழ‌க மீன‌வ‌ர்க‌ள் சிங்க‌ள‌ப்ப‌டைக‌ளால் கொல்ல‌ப்ப‌டுவ‌த‌ற்கே, வெறும் க‌டித‌மும் உண்ணாவிர‌த‌மும் தான் என்ற‌ நிலையில் இருக்கும் நம் அரசியல்வாதிகள்,ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் போராட்ட‌த்தையா க‌ண்டுகொள்வார்க‌ள் ?
ம‌க்க‌ளின் ம‌ன‌தில் முத‌லில் மாற்ற‌ம் ஏற்ப‌ட‌ வேண்டும்.
உங்க‌ள் க‌ருத்துக்க‌ளை பின்னூட்ட‌மிடுங்க‌ள். அது என் நிலைக்கு எதிரான‌ நிலையாக‌ இருந்தாலும் , உங்க‌ள் க‌ருத்துரிமையை நான் க‌ட்டாய‌ம் ம‌திப்பேன். ஆரேக்கிய‌மான‌ விவாத‌ம் வ‌ர‌வேற்க‌ப்ப‌டுகின்ற‌து.

Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•12:25 AM
இன்று நம் மத்திய அரசின் நிலை நமக்கு நன்கு தெரிந்ததே.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தமா, மத்திய அரசுக்கான இடதுசாரிகளின் ஆதரவா? எது முக்கியம் எனும் கேள்வி எழுந்த போது தற்போதைய மத்திய அரசு அணுசக்தி ஒப்பந்தம்தான் மிக முக்கியம் என்றுகருதி இன்றைய மத்திய அரசு ஆட்சியையே இழந்தாலும் பராவாயில்லை, ஆனால் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறினால் போதும் என்ற முடிவை எடுத்து, இடதுசாரிகளின் ஆதரவை இழந்து நம்பிக்கை தீர்மானத்தை சந்திக்கும் நிலையிலுள்ளது.

சிறு சிறு கட்சிகளின் ஆதரவையும் வேண்டி பல கோடிகளை கொடுத்தாவது ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளும் நிலையில் உள்ளதாக செய்திகளில் வாசிக்க முடிகின்றது. ஒருமுறை கூட தொகுதிக்கே போகாமல் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கு கூட 25 கோடியாம்.
( மென்போருள் வல்லுநர்கள் தான் விலைவாசி உயர்வுக்கு காரணம் என்று சொல்பவர்கள் யோசிக்கவும். நாங்கள் எல்லாம் வாழ்க்கை முழுவதும் சம்பாதித்தாலும் இதுபோன்று சம்பாதிக்க முடியாதைய்யா.)

இந்நிலையில் என்னைப்போன்று அணுசக்தி குறித்த எந்த அறிவும் இல்லாத பல கோடிக்கணக்கான பாமர மக்களின் உள்ளத்தில் சில கேள்விகள் எழுகின்றன.

1) இன்றைக்கு அஸ்ஸாம் மாநிலத்தின் சில பகுதிகளில் யுரேனியம் இருக்கின்றது என்று செய்தி படித்தேன். மேலும் நம் நாட்டிலேயே போதுமான அளவு தேரியம் இருக்கின்றது, அதை பயன்படுத்தி அணு மின்சக்தி செய்யவும், அணு ஆயுதம் செய்யவும் நம் தேசத்து அறிவியல் ஆய்வாளர்களிடம் சொந்த தொழில்நுட்பம் இருக்கின்றது என்றும் யாம் செய்தித்தாள்களில் வாசிக்கின்றோம். பின் ஏன் பல நிபந்தனைகளுடன் கூடிய இந்த அமெரிக்க ஒப்பந்தம்? தன் பலம் தனக்கு தெரியாத அனுமன் போன்றவர்களா இந்த இந்தியர்கள் ?

2) இந்த அணு ஒப்பந்தம் வெறும் 5% மின் தேவையைத்தான் பூர்த்தி செய்யப்போகின்றது என்றும் சொல்கின்றார்கள். வெறும் 5% மின் உற்பத்திக்காக இவ்வளவு தியாகங்கள் நாம் செய்துதான் ஆக வேண்டுமா?

3) நிலக்கரியில் இருந்து தயாரிக்கப்படும் அனல்மின்சக்தி இன்னும் சில ஆண்டுகளில் நிலக்கரி கிடைக்காமல் தடைப்படலாம், தற்போது ஏற்படும் பருவ மழை கோளாறுகளால் புனல் மின்சார உற்பத்தியும் தடைபடலாம் என்று சொல்கின்றீர்கள். தற்போது இருக்கும் அணுமின்சக்தி உற்பத்தி வசதிகளின் மூலம் மொத்த நாட்டின் மின் தேவையில் வெறும் 5 சதவீதத்தைத்தான் பூர்த்தி செய்ய முடியும் என்றால், ஒரு வேளை நீங்கள் சொல்வது போல் அனல் மற்றும் புனல் மின் சக்திகள் இல்லாதுபொனால் என்ன ஆகும் ? அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் சமாளிக்க என்ன மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன‌ ?

4) அணு சக்தியை கொண்டு மின் உற்பத்தி செய்யும் பிரான்சு போன்ற நாடுகள் தற்போது புதிய‌ திட்ட‌ங்க‌ள் எதையும் செய‌ல்ப‌டுத்துவ‌தில்லையே அது ஏன்?

5) பொல்லாத உங்கள் வெளியுறவு கொள்கைக்காக பல நூறு தமிழ் மீனவர்களின் உயிர்களையும், உயிர்களிடம் பேரன்பு கொண்ட பிராணிகள் நலச்சங்கத்தாரின் வழக்கிற்காக வெறிநாய்களின் கடிக்கு பல உயிர்களையும் பலி கொடுக்கும் உங்கள் ஆட்சிகளில் ( எல்லா கட்சி ஆட்சிகளும்தான்) இந்திய நாட்டில் மனித உயிர்களுக்கு எந்த மதிப்புமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கணி.

பல வருடங்களுக்கு முன்னரே வல்லரசாக விளங்கிய சோவியத் ரஷ்யாவிலேயே செர்னோபில் விபத்து நேர்ந்த போது, போபால் விஷவாயு விபத்திற்கே ஒழுங்கான தீர்வு காணாத நீங்கள், இப்போது அணு உலைகளை அதிகமாக்கிக்கொண்டே போனால், ஒரு வேளை செர்னோபில் விபத்து போன்ற விபத்துக்கள் நிகழாது தடுக்க நீங்கள் எடுக்கப்போகும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ?

அப்படி ஒரு விபத்து நேர்ந்தால் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து பாதிக்கப்பட்டோர்க்கு உதவிகள் வழங்கிவிட்டு, அமெரிக்க அரசின் கவனத்தை ஈர்க்க பிரதமர் தலைமையில் உண்ணாவிரதம் இருப்பீர்களா ? ( இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி காட்டிய பாதை இதுதானே).

என்னுள் இருக்கும் உழவன் கேட்கின்றான், இந்த அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி, அணுமின்சக்தியும் உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிட்டால், எங்களுக்கு விவசாயத்திற்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைத்துவிடுமா?

ஏனென்றால் தற்போது ராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எல்லோரும், அயல்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க வந்தால், அவர்களை சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து, வரிவிலக்கு, தடை இல்லாத மின்சாரம் என பல சலுகைகளை கொடுக்கின்றீர்கள், ஆனால் இங்குள்ள உழவர்களையல்லவா பழிவாங்குகின்றீர்கள் , விவசாய நிலங்களை சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு கையகப்படுத்துகின்றீர்கள். ஆனால் உழவர்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கவில்லை.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோமே என நமது இன்றைய மத்திய அரசின நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம் சொல்லுவார். ஆனால் அவருக்கே தெரியும், அந்த கடன் தள்ளுபடியால் பயனடைந்தது உண்மை விவசாயிகளை விட உங்கள் கட்சியை சேர்ந்தவர்களும், உங்கள் கூட்டணி மட்டுமல்லாது எல்லா கட்சிகளையும் சேர்ந்தவர்களும் தானே பலன் அடைந்தார்கள்? உண்மையான உழவர்கள் பயனடைய அதற்கும் பல ஆயிரம் கையூட்டு கொடுக்க வேண்டியுள்ளதே?

அயல்நாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க தடையில்லா மின்சாரம் வழங்கத்தான் நீங்கள் இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைத்து இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற போகின்றீர்கள் என்றால் இதை எப்படி இந்தியாவின் 70% உள்ள உழவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் ?

என‌க்கு அணு ஆயுத‌ங்க‌ள் செய்வ‌தை அமெரிக்க‌ ஒப‌ந்த‌ம் த‌டை செய்யும் என்ப‌தில் எல்லாம் எந்த‌ கேள்வியும் இல்லை. ஏனெனில் நாம் இது வ‌ரை செய்துள்ள‌ அணுகுண்டு சோத‌னைக‌ளில் இருந்தே, ந‌ம்மை பாதுகாத்துக்கொள்ளும் அள‌வுக்கு ந‌ம்மிட‌ம் அணுச‌க்தி உள்ள‌து என்ப‌து என‌து ந‌ம்பிக்கைமட்டுமல்ல, இந்திரா காந்தி காலத்து அணுகுண்டு சோதனையையும், புத்தர் சிரித்ததையும் நம்பும் கோடானுகோடி உழவர்களின் நம்பிக்கையும் கூட‌.

மாற்று எரிசக்திக்கு பல வழிகள் இருந்தும், அதையெல்லாம் சிந்திக்க கூட மறுத்த இத்தனை காலம் ஆண்டவர்கள் இந்த அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்குமட்டும் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கும் காரணம் என்ன?

நான் எந்த கட்சியையும் சாராத பாமரன், நாங்கள் தற்போதிருக்கும் மனநிலையில் எங்கள் மனதில் தோன்றியவையே இக்கேள்விகளும், சந்தேகங்களும்.இதற்கு வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் தான் பதிலளிக்க வேண்டும் என்று கேட்கவில்லை. அணுசக்தி ஒப்பந்தத்தின் அருமை பெருமை தெரிந்தவர்கள் யாராவது பதிலளித்தாலும் சரி.

இப்போது இருக்கும் நிலையில் ஏதேனும் அற்புதங்கள் நிகழ்ந்தால் ஒழிய மத்திய அரசு பிழைக்க வழியில்லை. சீக்கிரம் எங்கள் கேள்விகளுக்கு பதிலளியுங்கள், பதில் தெரிந்தால்தான் இந்த ஆட்சி கவிழும்போது மகிழ்வதா அல்லது கவலை கொள்வதா என்று எங்களால் முடிவு செய்யமுடியும். Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•7:53 PM
இன்று மாலை சிங்கை மூத்தப்பதிவர் திரு.கோவி.கண்ணண் அவர்கள் இளம் பதிவராகிய என்னை சந்திக்க வந்தார்.

எனது இல்லத்தில் சுமார் 1 மணிநேரம் நடந்த இச்சந்திப்பில் சிங்கை பதிவர்களை குறித்தும், தமிழ் வலைப்பூ உலகம் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், இந்த சிக்கல்களில் எல்லாம் சிக்காமல் எப்படி எழுதுவது என்பது குறித்தெல்லாம் பல ஆலோசனைகளை எனக்கு வழங்கி உதவினார்.

மேலும் சிங்கையில் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் நாள் அன்று ந‌டைபெற‌ உள்ள‌ மாபெரும் சிங்கை ப‌திவ‌ர் ச‌ந்திப்பைக் குறித்தும் நாங்க‌ள் பேசினோம். மிக‌ உப‌யோக‌மான‌ ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளை குறித்து பேசிய‌ அந்த‌ ச‌ந்திப்பு சிற்றுண்டியுட‌னும், தேநீருட‌னும் முடிந்த‌து.

என்ன‌டா குசும்ப‌ண‌ க‌ண்டிக்கிறேன்னு த‌லைப்பு வைச்சிட்டு அண்ண‌ண் கோவி.க‌ண்ண‌ணுட‌ன் ந‌ட‌ந்த‌ ச‌ந்திப்பை ப‌ற்றி எழுதுறானேனு நினைக்கலாம்.

நானும், ந‌ண்ப‌ர் குசும்ப‌ணும் த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌ முதுக‌லை ப‌டிப்பில் ஒரே வ‌குப்பில் ப‌டித்த‌வ‌ர்க‌ள், நீண்ட‌ நாள் ந‌ண்ப‌ர்க‌ள் என்பதால் கோவி.க‌ அண்ண‌ணுட‌ன் ச‌ந்திப்பு குறித்து வ‌லையுரையாட‌லில் தெரிவித்த‌ போது, நீங்க‌ என்ன‌ பேசிக்கிட்டீங்க‌ன்னு கேட்ட‌தால‌ சில‌ விவ‌ர‌ங்க‌ள‌ அவ‌ருகிட்ட‌ சொல்லிகிட்டு இருந்தேன்.

அதற்கு மேல் எங்களிடையே நடந்த உரையாடலை அப்படியே கொடுத்துள்ளேன்.

நான் : வர இருக்கும் சிங்கை பதிவர்கள் சந்திப்பு பத்தி பேசுனோம்.
குசும்பண் : ஏதும் திட்டம் தீட்டி தமிழை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த போறீங்களா?
நான் : அது எல்லாம், ரகசிய திட்டங்கள். இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது.
குசும்பண் : அட இப்படி வேற இருக்கா?
நான் : ஹி, ஹி, ஹி
குசும்பண் : ஒரு வேளை குசும்பனை சிங்கபூர் வரவெச்சு விழா எடுக்கபோறீங்களோ?

தமிழை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த எதற்காக குசும்பணை சிங்கப்பூர் வரவழைத்து விழா எடுக்க வேண்டும்?

இப்படி ஒரு தப்பான நினைவில் இருக்கும் குசும்பணை , தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் இருக்கும் தமிழ் வலை பதிவர்களும், வாசகர்களும் தங்களது கடுமையான கண்டணங்களை தெரிவித்து அவரை கண்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த பதிவிற்கான காரணங்கள்:
1) ரொம்ப சீரியஸான பதிவர் என்று எனக்கு பட்டமளித்த அண்ணண் அப்துல்லாவின் கருத்தை உடைத்து, என்னால் மொக்கை பதிவும் எழுதமுடியும் எனக்காட்டுவது.

2) நானும், அண்ணண் கோவி.கண்ணணும் சந்திச்சதை வேற எப்படி எல்லார்கிட்டயும் சொல்லுறது ???

3) எல்லாரையும் குசும்பு பண்ணும் குசும்பணையே குசும்பு பண்ணுவது.

4) கடைசி முக்கிய காரணம் இன்னைய கணக்குக்கு ஒரு பதிவு எழுத ஒரு விசயமும் கிடைக்கல, அதான் இப்டி ஒரு மொக்கை.... Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•5:12 PM
இது காதல் குறித்த பதிவு இல்லை.

இன்றைய‌ச் செய்திதாளில் ப‌டித்த செய்தி ஒன்று ஈரோட்டில், தான் ஒரு த‌லையாக‌ காத‌லித்த‌ பெண், த‌ன்னை காத‌லிக்க‌வில்லை, திரும‌ண‌ம் செய்ய‌ ம‌றுத்துவிட்டார் என்ப‌த‌ற்காக‌ அவ‌ரை க‌த்தியால் குத்தி கொடூர‌மாக‌ கொலை செய்துள்ளார் ஒருவ‌ர்.

இதற்கு பெய‌ர் காத‌லா ?

நான் உன்னை காத‌லிக்கிறேன் என்று ஒரு பைய‌ன் ஒரு பொண்ண‌ பார்த்து சொல்லிட்டா, உட‌னே அந்த‌ பொண்ணு க‌ட்டாய‌ம் அந்த‌ பைய‌ன காத‌லிச்சே ஆக‌னுமா என்ன‌ ? உன‌க்கு உன் விருப்ப‌ம் எவ்வ‌ள‌வு முக்கிய‌மோ அதே போல் அந்த‌ பெண்ணிற்கு அவ‌ருடைய‌ விருப்ப‌ம் முக்கிய‌ம‌ல்ல‌வா? பாவ‌ம் அந்த‌ பெண், இப்போதுதான் ஈரோடு கொங்கு பொறியிய‌ல் க‌ல்லூரியில் முத‌லாமாண்டு சேர்ந்திருக்கின்றார். அந்த‌ பெண்ணை போய் திரும‌ண‌ம் செய்துகொள்ள‌ சொல்லி கொடுமை ப‌டுத்தி கொன்ற‌வ‌னை என்ன‌ செய்வ‌து?

அந்த நபருக்கு வந்தது காதல் என்று சொல்வது கூட அந்த வார்த்தையின் புனிதத்தை கேவலப்படுத்தும் ஒன்றாகத்தான் இருக்கும். இதற்கு பேர் வெறி, எப்படியாவது அடையவேண்டும் என்ற வெறிதானே தவிர, இதில் கொஞ்சமும் காதல் என்பது இல்லை.

உன்னையே நீ நேசிப்பது போல் உன் அயலாரையும் நேசி என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் தான் எனக்கு நினைவுக்குவருகின்றது. இந்த ஒரு வாக்கியத்தை மட்டும் எல்லோரும் கடைபிடித்துவிட்டால், உலகில் எங்கும் பிரச்சனைகள் இருக்காது. த‌ன் விருப்பத்திற்கு கொடுத்த‌ முக்கியத்துவத்தை அந்த பெண்ணின் விருப்பத்துக்கும் கொடுத்திருந்தால் இந்த கொலை நிகழ்ந்திருக்காது.

இதுபோன்றே ஒரு சம்பவம், ஏற்கனவே திருச்சியில் மண்டலப் பொரியியல் கல்லூரியில் படித்த ஒரு பெண்ணையும், இப்படி ஒரு வெறியன் காதலிக்க மறுத்தார் என்பதால் குத்திக்கொன்றான்.

இதை மனநிலைக் கோளாறு என்பதா அல்லது காதல் என்பதற்கு சரியான விளக்கமளிக்காமல் ஒரு மாய தோற்றத்தை உண்டுபண்ணிவிட்ட ஊடகங்களை குறை சொல்வதா? "காதல் கொண்டேன்" போன்ற படங்கள்தான் காரணமா? புரியவில்லை.இத்தனைக்கும் கொலை செய்தவர் ஒரு முதுகலை பட்டப்படிப்பு மாணவர், படிப்பு நமக்கெல்லாம் அறிவு முதிர்ச்சியை தரவில்லையா? இவரெல்லாம் Just Literate, But Not Educated.

நன்கு படித்து, பொறியியல் கல்லூரியில் சேர ஆவலாய் காத்திருந்த ஒரு மலர வேண்டிய மொட்டை அநியாயமாக கருக்கியவனுக்கு விரைவில் மிக உட்சபட்ச தண்டணையை அளிக்க வேண்டும்.

ஒரு கொடூரனின் வெறியால் அநியாயமாய் உயிரைவிட்ட அந்த பெண்ணின் ஆத்மா சாந்தியடைய பிரார்திப்போம். Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•3:34 PM
நம்ம அரசியல்வாதிகளோட நக்கலுக்கு அளவே இல்லாம போச்சுங்க..

இன்னைக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் தங்கபாலு, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க திமுக நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தை வரவேற்பதாக அறிவித்துள்ளார். என்ன கொடுமை இது???
உங்க கட்சியின் தலைமையிலான மத்திய அரசு ஊசலாடிகிட்டு இருக்கு, அதுக்கு கூட்டணி கட்சிகளோட ஆதரவு அவசியம்தான். அதுக்காக இப்டியாங்க ??? உங்க கட்சித்தலமையிலான மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க உங்க கூட்டணியில இருக்க ஒரு கட்சி உண்ணாவிரத போராட்டம் நடத்துமாம், அதை நீங்களே வரவேற்று அறிக்கை விடுவிங்களாம், பார்த்துகிட்டு நாங்க சும்ம இருகணும். என்ன கொடுமை சாமி இது?

ஊர்ல ஒரு கதை சொல்லுவாங்க‌, வீட்டுக்கு வந்த வேண்டாத விருந்தாளிய விரட்ட அந்த வீட்டுல இருக்க கணவன் , மனைவி இரண்டு பேரும் விருந்தாளி வீட்டுக்கு வந்துருக்க நேரத்துல சண்டை போட்டுகிட்டு, அந்த ஐயா , தன் வீட்டம்மாவ போட்டு அடிக்கிறமாதிரி நடிப்பாங்க. என்னடா நாம இவங்க வீட்டுக்கு வந்த நேரத்துல வீட்ல ஒரே கலவரமா இருக்கேன்னு பயந்துபோயி சொல்லிக்காம கிளம்பி போய்டுவாரு. அவரு போயிட்டாருனு நினைச்சுகிட்டு நம்ம ஐயாவும், அம்மாவும் வெளியில வந்து பேசிக்குவாங்க.

ஐயா : நான் நோகாமல் அடித்தேனே !!!.
அம்மா: நானும் வலிக்காமல் அழுதேனே !!!.இந்த சண்டைய பார்த்துட்டு வெளில போன நம்ம வேண்டாத விருந்தாளி ரொம்ப‌ விவரமான ஆளு, சரியா இந்த நேரத்துல மறுபடியும் உள்ளார வந்து
சொல்லுவாரு பாருங்க ஒரு வசனம்

விருந்தாளி : நானும் போகாம‌ல் இருந்தேனே !!!!

இப்ப‌ இந்த‌ க‌தைய‌ அப்டியே ந‌ம்ம‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளோடும் , பிர‌ச்ச‌னைக‌ளோடும் ஒப்பிட்டால்

க‌ண‌வ‌ர் : திமுக‌ அர‌சு.
ம‌னைவி : காங்கிர‌ஸ் அர‌சு.
விருந்தாளி : ஒருத்த‌ரா ரெண்டு பேரா, அது ஒரு பெரிய‌ கூட்ட‌முங்கோ .
இப்போதைக்கு விருந்தாளி மீன‌வ‌ர்க‌ள் பிர‌ச்ச‌னை.


சற்றுமுன் சன் தொலைகாட்சியின் செய்தியில் கடலூரில் மத்திய அமைச்சர் திரு. வேங்கடபதியும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளாராம்.
இவங்க நக்கலுக்கு அளவே இல்லாம போச்சு போங்க... Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•6:11 PM
மீனவர்களின் உயிரைக்காக்குமாறு மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதப்போராட்டம்.

என்ன ஒரு அருமையான யோசனை???
எப்படி அய்யா இப்படி ஒரு அருமையான தீர்வை கண்டுபிடித்தீர்கள்? இந்த முடிவை எடுப்பதற்கு ஒரு உயர்மட்ட குழு கூட்டம் வேறு. மிக கேவலமாக இருக்கின்றது இந்த அரசியல்.

ம‌த்தியில் ஆளும் அர‌சில் நீங்க‌ளும் ஒரு அங்க‌ம் தானே? உங்க‌ள் கூட்ட‌ணிக்க‌ட்சி ஆளும் அர‌சின் க‌வ‌ன‌த்தை திருப்ப‌க் கூட‌ உண்ணாவிர‌த‌ம் இருந்தால்தான் முடியுமா?

சாதார‌ண‌நாட்க‌ளிலேயே ந‌ம்ம‌வ‌ர்க‌ள் இது போன்ற‌ ஒரு நாள் உண்ணாவிர‌த‌த்தையெல்லாம் க‌ண்டுகொள்ள‌ மாட்டார்க‌ள். அதிலும் ந‌ம்பிக்கை வாக்கெடுப்பில் அர‌சு த‌ப்புமா, க‌விழுமா என்ற‌ க‌ல‌க்க‌த்தில் காங்கிர‌ஸ்கார‌ர்க‌ள் இருக்கும் உதிரிக‌ட்சிக‌ளின் ஓட்டுக்க‌ளையெல்லாம் பெறுவ‌த‌ற்காக‌ ப‌கீர‌த‌ பிர‌ய‌த்த‌ன‌ம் செய்துகொண்டிருக்கும் இந்த‌ சூழ‌லில் உங்க‌ள் உண்ணாவிர‌த‌த்தையா க‌ண்டுகொள்ள‌ போகின்றார்க‌ள் ? இந்த‌ உண்ணாவிர‌த‌த்தால் ஏதாவ‌து ப‌ல‌ன் இருக்கும் என்று யாராவ‌து ஒருவ‌ராவ‌து ந‌ம்புகின்றீர்க‌ளா?
ஈழத்தமிழர் பிரச்சனையில் இலங்கையோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரிக்கை விடுத்து சாகும் வரை நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்த திலீபன், மற்றும் பூபதி அம்மாள் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்தது நம் காங்கிரஸ் தலைமையில் இருந்த மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கத்தான்.

அவர்கள் செத்தாலும் பரவாயில்லை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம் என்று இருந்து உண்ணாவிரதத்தால் திலீபனும், பூபதி அம்மாளும் உயிரை விடச்செய்தது இதே காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில்தான்.

சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கே அந்த நிலை என்றால், நீங்கள் காலையில் ஆரம்பித்து மாலை முடிக்கப்போகும் இந்த உண்ணாவிரதத்திற்கு மதிப்பளித்து உங்கள் கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ன ?

மீனவர்களின் உயிர்களும், அவர்களின் நலனும் முதல்வருக்கு முக்கியமேயில்லையா என்ன ? இதுவரை கடிதம் மட்டும் எழுதிக்கொண்டிருந்தார். இப்போது ஒப்புக்கு ஒரு உண்ணாவிரதம். வேறு எந்த உருப்படியான யோசனையும் தோன்றாத அளவுக்கு அறிவு பஞ்சமா ஆள்வோரிடம்?

ஏன் அனைத்துக்கட்சியையும் கூட்டி ஆலோசிக்க கூடாது?

நாளை ஏதாவது ஒரு பிரச்சனைக்கு, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதம் நீங்கள் அறிவித்தாலும், அதையும் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர எங்களால் வேறு என்ன செய்யமுடியும்? Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•12:29 AM
காதல் என்ற வார்த்தையை கூட எழுத்துக்கூட்டி சில பல பிழைகளுடன் படிக்கும் ஒரு பச்சிள‌ம் பாலகன் ஆகிய பால்ராஜ்ஜை இந்த தொடர் விளையாட்டில் மாட்டிவிட்ட அன்பு அண்ணண் அப்துல்லா வாழ்க.

அண்ணண் அப்துல்லாவின் பதிவை படித்தவுடன் பதறி அடித்துக்கொண்டு எழும் குரல் -‍ இது இன்னமும் மனதளவில் குழந்தையாகவே இருக்கும் பால்ராஜ் எழுப்புவது.

காதல் எனப்படுவது யாதெனில்னு ஒரு தலைப்பை குடுத்து வேற ஒன்னும் விவரமா சொல்லாம நம்மள எழுத சொல்லிட்டு போயிட்டாரே இந்த அப்துல்லா, நம்ம காதல் கதைய எல்லாம் எழுத ஆரம்பிச்ச அது உழவும் உழவர்களும் தொடர விட பெருசா போகுமே, எத எழுதுறது, எத விடுறது ?? - இது நம்ம ஜொசப் குரல்.

அடப்பாவி உன் மனைவி ஊர்ல இல்லங்குறதுனால நீ எல்லாத்தயும் சொல்லிடுவியா, அவங்க வந்தபின்னாடி உன் பதிவ எல்லாம் படிச்சா உனக்கு டின் கட்டிருவாங்கடினு ஒருத்தன் நடுவால இருந்து குரல் கொடுக்குறான், உத்து கேட்டாதான் தெரியுது அது நம்ம பெனடிக்ட்டோட குரல்.

( நல்ல வேளை இவனுக்கு ஜோசப் பெனடிக்ட் பால்ராஜ்னு மட்டும் பேரு வைச்சாங்க, இல்ல இவன் பாட்டுக்கு இந்த குரல் அந்த குரல்னு பதிவ நிரப்பிட்டு போயிருப்பான்னு நம்ம குசும்பன் குரல் கொடுப்பாரு, இருடி, அடுத்த ஆப்பு உனக்குத்தான்.)

ஆளாளுக்கு ஒரு குரல் கொடுத்துகிட்டு இருந்தா நம்ம அண்ணண் அப்துல்லாவுக்கு என்னா பதில் சொல்றதுனு நாங்க கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்து எழுதுவது யாதெனில்....

கவலைப்படாதிங்க, தொடரும் எல்லாம் போட மாட்டேன்.

காதல்...

அர்த்தமே புரியாத காலத்தில் இந்த வார்த்தை எனக்கு கெட்டவார்த்தை, ( அப்போ நான் விசயகாந்த ரசிகரு பாருங்க, ஏன்னா அவரு படத்துலதான் நிறைய சண்டை இருக்கும்).

10 ஆம் வகுப்பு படிச்சு முடிச்ச காலத்துலதான் நமக்கு காதலோட அர்த்தம் கொஞ்சம் கொஞ்சமா விளங்க ஆரம்பிச்சுது, ஆனா பாருங்க, அப்ப பார்த்த எல்லா பெண்ணையுமே பிடிச்சதே தவிர காதல்னு சொல்லிக்கிறமாதிரி எதுவும் வரலை.

அது இதுனு நிறைய படிச்சதுல , இதெல்லாம் இனக்கவர்ச்சினு புரிஞ்சுச்சு.
ஆனா பத்தாம்பு படிகிறப்பவே கல்யாணம்ணா அது காதலிச்சுத்தான்னு மனசுல ஒரு உறுதி வந்துருச்சு.

உன் பெற்றோரையோ, உடன்பிறப்புகளையோ, உறவினர்களையோ நீ தேர்ந்தெடுக்க முடியாது, இவையெல்லாம் உன்னை மீறியவை.
ஆனால் நண்பர்களையும், காதலியையும் மட்டும் நீயே தேர்ந்தெடுக்கலாம் .

இந்த தத்துவம்தான் காதல் திருமணம்தான் செஞ்சுக்கனும்னு என்னைய ரொம்ப தூண்டிய ஒன்று.

ஆன, படிச்சது எல்லாம் ஆண்கள் மட்டுமே படிக்கிற பள்ளிக்கூடத்துல, சரி கல்லூரிகாலத்துலயாவது பார்த்துக்கலாம்னு இருந்தா அங்கயும் நமக்கு வாய்ப்பு கிடைக்கல.

ஒரு வருடத்திற்கு 32000 ரூபாய் கட்டி படிக்கும் பிரிவில்( Government Payment Quota) பொறியியல் படிப்பிற்கு இடம் கிடைத்ததால், ஒழுங்கா படிச்சு அரசு ஒதுக்கீட்டுல (Merit Seat) இடம் வாங்க முடியாத உனக்கு பொறியியல் படிப்பு ஒரு கேடானு கேட்டு பி.எஸ்.ஸி இயற்பியல் பாடத்துல, அதுவும் ஆண்கள் மட்டுமே படிக்கும் பூண்டி புஷ்பம் கல்லூரியில படினு சொல்லி என் அண்ணண் சேர்த்துவிட்டதால என்னடா செய்யிறதுனு ஒரே சோகமா அந்த கல்லூரியில சேர்ந்த எனக்கு இருந்த ஒரே ஆறுதல் தஞ்சாவூர்ல இருந்து எங்க கல்லூரி வழியா திருவாரூர் போற புகை வண்டிதான்.

நாங்க போற அதே புகைவண்டியிலத்தான் எங்க கல்லூரியில இருந்து இரண்டு நிறுத்தம் தள்ளி இருக்க ஒரு பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளும் போவாங்க.

சாதரண கலைக்கல்லூரியில படிக்கிற நாம, ஒரு பொறியியல் கல்லூரி மாணவிய காதலிக்கனும்னா, நமக்குனு சில தனித்தகுதிகள் இருக்கனும்ல..
இதுனால பல பல தனித்தகுதிகள வளர்த்துகிட்டோம் பாருங்க..

எல்லாம் செஞ்சு என்ன உபயோகம், திடீர்னு இரயில்வே துறையினர் புகைவண்டியின் நேரத்தை மாத்தி சோதனை செஞ்சுட்டாங்க, இதனால ஒரே ரயில்ல போற அந்த ஒத்தை சந்தோஷமும் ஒன்றரை வருடங்களில் போயே போச்சு..

இந்த‌ ஒன்ற‌ரை வ‌ருட‌ங்க‌ளில் செந்தில் , ச‌ர‌வ‌ண‌ண் என்ற‌ என் இரு ஆருயிர் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து சென்சார்பால் என்ற‌ பெய‌ரில் ஒரு கையெழுத்து வார‌ இத‌ழை ஆர‌ம்பித்து வெற்றிக‌ர‌மாக‌ ந‌ட‌த்தினோம் என்ப‌து ஒரு த‌னிப்ப‌திவாக‌ போடும‌ள‌வுக்கு பெரிய‌ செய்தி. ( நாங்க‌ ஒன்னும் புதுசா எழுத‌ வ‌ர‌லை, அப்ப‌வே ஆர‌ம்பிச்சுட்டோம்!!).

இப்ப‌டியே க‌ழிந்த‌ என் க‌ல்லூரிக்கால‌ம் ஒரு முடிவுக்கு வ‌ந்து
சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவ‌ன‌த்தில் வேலைக்கு சேர்ந்தேன்.வேலைக்கு சேர்ந்து ச‌ம்பாதிக்க‌ ஆர‌ம்பித்துவிட்டாலும், வாழ்வின் ப‌ல‌ உண்மைக‌ள் தெரியாத‌,புரியாத‌ ப‌ருவ‌ம் அது.

என‌க்கு பிடித்த‌ பெண்ணிற்கு என்னை பிடிக்க‌வில்லை, என்னை விரும்பிய‌ பெண்களில் எவரையும் என‌க்கு பிடிக்க‌வில்லை .

வ‌ள்ளி ப‌ட‌த்துல‌ ர‌ஜினி சொல்ற‌ மாதிரி நாம‌க்கு பிடிச்சவங்களவிட , ந‌ம்ம‌ள‌ பிடிச்சவங்கள‌ ஏத்துகிட்டு இருந்துருக்க‌ணுமோ??????

என்னை விரும்பிய‌வ‌ர்க‌ளுட‌னும், நான் விரும்பிய‌ பெண்ணுட‌னும் இன்ற‌ள‌வும் ந‌ல்ல‌ ந‌ட்போடு இருப்ப‌தால் இத‌ற்கு மேல் என்னால் தெளிவாக‌ எழுத‌முடிய‌வில்லை . ( அவ‌ர்க‌ளோடு ந‌ல்ல‌ ந‌ட்பு இல்லாவிட்டாலும் அவ‌ர்க‌ளை ப‌ற்றி விரிவாக‌ எழுதுவ‌து நாகரீக‌மாக‌ இருக்காது என்ப‌துதான் என‌து நிலை).

எல்லாத்துக்கும் மேல தமிழகத்தில் சங்க இலக்கிய காலத்தில் இருந்தே இருப்பதாக சொல்லப்பட்டாலும், இன்று காதல் திருமணங்களை எல்லாப் பெற்றோரும் முழுமனதுடன் ஆதரிக்கின்றார்களா?

அன்றும், இன்றும் காலத்தால் அழியாத காதல் பாடல்களை பல திரைப்படங்களுக்கு எழுதியவரும், தன் கவிதை தொகுப்புகளில் எல்லாம் காதலை மிக உயர்வாக எழுதியவரும் கவிப்பேரரசு என்று அழைக்கப்படுபவருமான வைரமுத்துவின் மகன் கூட தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ள முதலமைச்சர் வீட்டிலிருந்து உதவியை எதிர்பார்க்க நேர்ந்தது என்றால், மற்றவர்கள் எல்லாம் ???

என்னை பொருத்தவரை காதல் என்பது எல்லோரையும் ஒரு குறிபிட்ட வயதில் தேடிவந்து கதவை தட்டும் ஒரு காற்று. அது க‌த‌வை த‌ட்டுவ‌து ஒரு இய‌ற்கை நிக‌ழ்வு. ( அறிவிய‌ல்ப‌டி இதை ஹார்மோன்க‌ளின் செயல்பாடு என்கிறார்க‌ள்.)

வெகுபலர் இந்த‌ க‌த‌வு த‌ட்டல் ஓசை கேட்டு வெகுண்டெழுந்து க‌த‌வை திற‌ந்து , காத‌லை வ‌ர‌வேற்று எல்லாவ‌ற்றிலும் காத‌லையே நிர‌ப்பி,ம‌ற்ற‌வையெல்லாம் இர‌ண்டாம்ப‌ட்ச‌ம் என்று க‌ருதி அந்நாளில் செய்ய‌வேண்டிய‌ ப‌ல‌வ‌ற்றை செய்ய‌ த‌வ‌றுகின்றார்க‌ள். ஒரு சில‌ர் இந்த‌ க‌த‌வு த‌ட்ட‌லை கேட்டாலும் கேட்காத‌துபோல் தாங்க‌ள் செய்ய‌ வேண்டிய‌ வேலையில் ஆழ்ந்து, சாதிக்க‌ வேண்டிய‌தை சாதிக்கின்றார்க‌ள்.

ஒன்று ம‌ட்டும் உண்மை. இப்ப‌டி முத‌ல் த‌ட்ட‌லின் போது காத‌ல் காற்றுக்கு க‌த‌வை திற‌க்காத‌வ‌ர்க‌ள், க‌த‌வை திற‌ந்த‌வ‌ர்க‌ளைவிட‌ ச‌ற்று அதிக‌மாக‌த்தான் சாதிக்கின்றார்க‌ள். காத‌ல் காற்று ஒரு முறை ம‌ட்டும் க‌த‌வை த‌ட்டுவ‌தில்லை. இவ‌ர்க‌ள் சாதித்த‌ப்பின் ச‌ற்று ப‌ல‌மாக‌வே இவ‌ர்க‌ளின் க‌த‌வை காத‌ல் த‌ட்டுகின்ற‌து.

என்னதான் பலமாக காதல் காற்று கதவை தட்டினாலும் , தாங்களே போய் கதவை திறக்காமல் பெற்றோரிடம் அந்த உரிமையை வேறு வழியின்றோ, அல்லது தாங்களாக விரும்பியோ ஒப்படைப்பவர்களும் உண்டு.

நாம‌ வாழ்க்கையில‌ செய்யிற‌ ப‌ல‌ த‌வ‌றுக‌ளுக்கு கார‌ண‌ம் என்ன‌னு யோசிச்சா, ஒன்னு முடிவெடுக்க‌ வேண்டிய‌ நேர‌த்துல‌ முடிவெடுக்காம‌ இருப்பது, இல்ல‌ முடிவெடுக்க‌ கூடாத‌ நேர‌த்துல‌ முடிவு எடுப்பது.இது தான் காரணமா இருக்கும்.
சரியான நேரத்துல சரியானத செய்யிறவங்களுக்கு காதல் மட்டும் இல்ல, எல்லாமே நல்லாத்தான் நடக்கும் .

"சீரியசான விஷயங்களைத் தவிர வேறு எதுவும் எழுதுவது இல்லை என சர்ச்சில் சத்தியம் செய்து வலைப்பூவைத் துவங்கி இருக்கும் "இன்டர்நெட் இங்கர்சால்'', வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும்''வலைத்தளத்தின் வள்ளலார்" அருமை அண்ணன் ஜோசப் பால்ராஜ் " என்றெல்லாம் எனக்கு அண்ணண் அப்துல்லா அடைமொழி கொடுத்ததை மெய்யாக்கும் வண்ணம் நானும் ரொம்ப சீரியசாத்தான் காதலைபத்தியும் எழுதிகிட்டு இருக்கேன்னு எனக்கெ தெரியுறதால ரொம்ப சுருக்கமா காதலை பத்தி நச்சுனு சொல்லிடுறேன்.

காதல்ங்கிறது ஒரு நெருப்பு மாதிரி, இத வச்சு விளக்கு ஏத்தி இருளையெல்லாம் அகற்றவும் செய்யலாம்,
வீட்டை கொளுத்தி எல்லாத்தையும் ஒரே நொடியில அழிக்கவும் செய்யலாம்,
சிகரெட்ட கொளுத்தி கொஞ்சம் கொஞ்சமா தன்னையே அழிச்சுக்கவும் செய்யலாம்.


காதல் நெருப்பு எல்லார் கைக்கும் வரும், அத வைச்சு என்ன செஞ்சோம், செய்யப்போறோம்கிறதுதான் விஷயமே.

குறிப்பு:காதல் நெருப்ப வைச்சு நீ என்னடா செஞ்சனு கேட்டு வரும் பின்னூட்டங்களுக்கு பதிலளிக்கப்படமாட்டாது.

இப்ப நான் யாரையாவது இந்த தொடர் விளையாட்டுல‌ மாட்டிவிடனும், நல்லா யொசிச்சு பார்த்ததுல, நீ வேண்டும், நீ வேண்டும் என்றென்றும் நீ வேண்டும் என்ற அழகான காதல் கதைய எழுதிகிட்டு இருக்க அருமை பதிவர் திவ்யாவை மாட்டிவிட்டா பொருத்தமா இருக்கும்னு தோணுது. இப்ப நான் தப்பிச்சுக்கிறேன். ( நாங்களும் தான்னு எல்லாம் குரல் கொடுக்க கூடாது அப்துல்லா அண்ணா)

டிஸ்கி: குசும்பணத்தான் மாட்டிவிடணும்ணு நினைச்சேன், மாட்டிவிட்டா இதவைச்சு கூட அவரு ஏதவது குசும்பு பண்ணுவாரு. அதுனாலத்தான் மிக அருமையா காதல் கதை எழுதிகிட்டு இருக்க திவ்யாவ மாட்டிவிட்டாச்சு.
Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•8:53 PM
இலம்என்று அசைஇ இருப்பாரக் காணின்
நிலம்என்னும் நல்லாள் நகும்.


உழவும் உழவர்களும் - 1
உழவும் உழவர்களும் - 2
உழவும் உழவர்களும் - 3

விவசாயம் இயற்கையோடு பின்னிப்பிணைந்த ஒரு தொழில்.
இயற்கை பல நேரங்களில் எம்மை வாழ வைப்பதும் உண்டு, வீழ வைப்பதும் உண்டு.

நாற்று நட்டு வேர்விட நடவு செய்ததில் இருந்து ஒரு 10 நாட்கள் ஆகும். அதன் பின் அறுவடைக்கு 20 நாட்களுக்கு முன் வரை மழை பெய்தால் பயிர்களுக்கு எந்த சேதமும் இருக்காது. சொல்லப் போனால் இந்த நாட்களில் மழை பெய்வது பயிரை நன்கு வளர உதவி புரியும். இப்படி பெய்ய வேண்டிய நாட்களில் பெய்து காக்காமல், பயிர் அறுவடைக்கு தயாராக இருக்கும் நேரத்தில் மழை பெய்தால் மொத்த விளைச்சலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிவிடும்.

அடுத்து எங்கள் உழவர்களின் உழைப்பை பதம் பார்ப்பது பூச்சிகள். மிகக் கடுமையான விலை கொடுத்து வாங்கி பூச்சி கொல்லி மருந்தடித்தால் அடித்த ஒரு வாரத்திற்காவது வெயில் அடித்தால்தான் நல்லது. மருந்தடித்த உடன் மழை பெய்தால் எல்லாம் போச்சு.

இயற்கை நம் கைகளில் இல்லாத ஒன்று. மனித சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கையை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் காவிரி???

உணவு சம்பந்தப்பட்ட காவிரியை இருமாநிலங்களின் உணர்வு சம்பந்தப்பட்ட ஒன்றாக மாற்றி, ஓட்டுக்காக பயன்படுத்தும் அரசியல்வாதிகளால் பாதிக்கப்படுவது தமிழகத்தின் விவசாயி தானே?

இப்போதுகூட மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகு வேகமாக குறைந்து கொண்டே வருகின்றது, அணைக்கு வரும் நீரின் அளவு மிக குறைவாக இருக்கின்றது, கர்நாடகா எந்த தீர்ப்புக்கும் கட்டுப்படாமல், நமக்கு தரவேண்டிய நீரை தரவில்லை என செய்தித்தாள்களில் வாசிக்கும் போது இந்த ஆண்டு என்ன நேருமோ என உள்ளம் பதைபதைக்கின்றது.

பசியால் அழும் குழந்தைக்கு உணவு தர வழியில்லாத நிலையில் இருக்கும் தாயின் மனநிலை என்ன நிலையில் இருக்குமோ அதைவிட மோசமான நிலையில்தான் நீரின்றி வாடும் பயிறுக்கு நீர் தர வழியின்றி தவிக்கும் உழவனின் நிலையும் இருக்கும்.

தான் பெற்று, வளர்த்து ஆளாக்கிய மகன், அகால மரணமடைந்தபோது கூட அழாமல் இருந்த ஒரு முரட்டு மனிதர், தன் வயலில் நீரின்றி காய்ந்த பயிருக்கு நீர் தர எந்த வழியும் இல்லாத கையறு நிலையில் இருந்தபோது கதறி அழுததை கண்களால் கண்டவன் நான்.

நதி நீரை தேசியமயமாக்கிட துணிச்சல் இல்லாத மத்திய அரசுகளும், நதி நீர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண நினைக்காமல் அதை அரசியலாக்கி பிழைக்கப் பார்க்கும் மாநில அரசுகளும் இருந்து என்ன பிரயோசனம்?

2007 அக்டோபர் 1ம் நாள் ஏதோ ஒரு பிரச்சனைக்காக தமிழகத்தில் முழு அடைப்புக்கு மாநில அரசு அழைப்பு விடுத்தபோது, விடுமுறை நாள் என்ற போதிலும் இதுவரை இல்லாத வழக்கமாக நீதிமன்றம் கூடி அந்த முழு அடைப்பை சட்டவிரோதம் என்று தீர்பளிப்பதில் அக்கறைகாட்டிய வானளாவிய அதிகாரம் படைத்த உச்ச நீதிமன்றம், அதன் தொடர்சியாக தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசையே கலைக்க பரிந்துரை செய்வோம் என்றெல்லாம் தமிழக அரசின் மீது அத்தனை கடுமை காட்டிய மாண்புமிகுந்த உச்சநீதிமன்றம்,மக்களின் வாழ்வாதார நதி நீர் பிரச்சனைகளில் தனது தீர்ப்பை மதிக்க தவறி, நீதிமன்ற அவமதிப்பை செய்யும் கேரள, கர்நாடக மாநில அரசுகளை கண்டிக்க வழியில்லமல் இருப்பதும், தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளில் இரு மாநிலங்களும் பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும் என கூறும் போது, எப்படி பிழைக்க முடியும் எங்கள் உழவர்கள்?

நண்பர் ஸ்ரீராம் அவர்கள் எனது முந்தைய பதிவில் எல்லா வேலைகளிலும் தான் சிரமங்கள் உள்ளன, இதை எப்படி ஒரு விஷயமாக சொல்லலாம் என்ற அர்தத்தில் கேட்டிருந்தார்.

உழவர்கள் சந்திக்கும் எல்லா சவால்களையும் நீங்கள் சந்திக்கின்றீர்களா? மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்க்கும் நீங்கள் உங்களது ஊதியத்தை நீங்கள் நிர்ணயிப்பீர்களா, அல்லது நிறுவனத்தார் உங்கள் வேலைக்கு என்ன ஊதியம் கொடுக்கின்றார்களோ அதை மட்டும் வாங்கிக்கொண்டு சந்தோஷமாக இருப்பீர்களா?

உங்களுக்கு உங்கள் வேலையை செய்வதற்கு தேவையான கணிணியை மட்டும் கொடுத்துவிட்டு, அதை இயக்கத் தேவையான மின் இணைப்பை கொடுக்காமல் விட்டால் உங்களால் வேலை செய்ய முடியுமா? மென்பொருளை உருவாக்கத்தான் முடியுமா? கணிணியை இயக்க மின் இணைப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உழவுத் தொழிலுக்கு நீர். அது இல்லாமல் என்ன செய்வான் எங்கள் உழவன்?

ஒரு மென்பொருளாளரின் வேலையில் உள்ள சிரமங்கள் என்ன? அந்த சிரமங்களை எதிர்கொள்ள அவனுக்குள்ள வசதிகள் என்னென்ன? அப்படி சிரமங்களை எதிர்கொள்ளும் வசதி உழவனுக்கு இருக்கின்றதா?

20 பைசா உற்பத்தி செலவு செய்து ஒரு தீப்பெட்டியை தயார் செய்யும் தயாரிப்பாளர் கூட 30 பைசா லாபம் வைத்து 50 பைசாவுக்கு தனது பொருளை விற்க முடியும் எனும் போது, ஏராளமான சிரமங்களை தாண்டி , இயற்கையோடு போராடி உழைத்து விளை பொருளை கொண்டுவரும் உழவனுக்கு தனது பொருளின் விலையை நிர்ணயிக்கும் உரிமை உள்ளதா?

யூரியா போன்ற உரத்தட்டுபாடு, விதை தட்டுபாடு எல்லாம் செயற்கையானது. இதையெல்லாம் கூட எங்களவர்கள் எதிர்கொண்டு விடுவார்கள். உழைப்பிற்குறிய ஊதியம் கிடைக்காத போதுதான் துவண்டுவிடுவார்கள்.

ந‌ண்ப‌ர் ஸ்ரீராம் ஒரு த‌வ‌றான‌ த‌க‌வ‌லை குறிப்பிட்டிருந்தார். எந்த‌ உழ‌வ‌ரும் அரிசி விலை கிலோ 2 ரூபாய்க்கு விற்க‌ வேண்டும் என்று விரும்ப‌வில்லை. எந்த‌ விவ‌சாயியும் த‌ன‌து விளை பொருள் இந்த‌ அள‌வு குறைவான‌ விலையில் விற்க‌ப்ப‌டுவ‌தை வ‌ர‌வேற்க‌ மாட்டான். வேண்டுமானால் விவ‌சாய‌ கூலித் தொழிலை செய்ப‌வ‌ர்க‌ள் அதை வ‌ர‌வேற்க‌லாம். நான் ஏற்க‌ன‌வே என் ப‌ழைய‌ ப‌திவுக‌ளில் குறிப்பிட்டிருந்த‌ப்டி கிலோ 2 ரூபாய்கு அரிசி திட்ட‌ம் ப‌ல‌ரையும் சோம்பேறிக‌ள் ஆக்கி, விவ‌சாய வேலைக்கு ஆள் ப‌ற்றாகுறையைத்தான் ஏற்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தை அனைத்து உழ‌வ‌ர்க‌ளும் உண‌ர்ந்துள்ள‌ன‌ர்.

இப்படி இயற்கை சீற்றங்களாலும், செயற்கையான காரணங்களாலும் பாதிக்கப்படும் உழவர்கள் இழப்பது தங்களது லாபத்தை தான்.

2007 ஆன் ஆண்டு அறுவடை நேரத்தில் பெய்த மழையால் எங்களுக்கு ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 5000 முதல் 7500 வரை நட்டம்.இப்படி நஷ்டம் அடைந்தால் எங்களால் எப்படி தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட முடியும் ?

இயற்கை சீற்றங்களின் போதெல்லாம் அரசாங்கம் தான் உழவர்களுக்கு நிவாரண நிதி வழங்குகின்றதே என கூறுகின்றீர்களா?

அந்த கொடுமையைப் பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போமா? Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•10:34 AM
இன்றைய செய்தித்தாள்களில் கண்ட இரண்டு செய்திகள் ஒரு நல்ல செயலை முதல்வர் தொடங்கியிருப்பதை தெரிவித்தன.

முத‌ல் செய்தி: தூத்துக்குடி துறைமுக‌த்தின் ஒன்ப‌தாவ‌து ச‌ர‌க்கு த‌ள‌த்தை முத‌ல்வ‌ர் க‌ருணாநிதி சென்னை த‌லைமை செயல‌க‌த்தில் இருந்து "வீடியோ கான்ப‌ர‌ன்ஸிங்" முறையில் தொட‌ங்கிவைத்துள்ளார்.

2 வ‌து செய்தி: த‌ஞ்சையில் அர‌சு கேபிள் க‌ழ‌க‌த்தின் செய‌ல்பாட்டை முத‌ல்வ‌ர் க‌ருணாநிதி சென்னை த‌லைமை செயல‌க‌த்தில் இருந்து "வீடியோ கான்ப‌ர‌ன்ஸிங்" முறையில் தொட‌ங்கிவைக்கின்றார்.

இப்பதிவின் நோக்கம் தூத்துக்குடி துறைமுகத்தின் சரக்கு தளத்தை பற்றியோ, அல்லது அரசு கேபிள் கழகத்தை பற்றியோ அல்ல.

இந்த இரண்டு திட்டங்களையும் தொடங்கி வைத்த வழி இன்றையக் காலகட்டத்தில் மிகச் சிறந்த வழி. அதற்கு பாராட்டத்தான் இந்த பதிவு.

ஒரு முதலமைச்சர், பிரதமர், அமைச்சர்கள் போன்றோர் வெளியூர் பயணம் செய்ய அரசின் வழிகாட்டும் விதிமுறைகள் பல உள்ளன.

முதல்வர் வெளியூர் பயணம் செய்கின்றார் என்றால் அதற்கான ஏற்பாடுகள் குறைந்தபட்சம் ஒரு 15 நாட்களுக்கு முன்னால் இருந்தே தொடங்கிவிடும். காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் முதற்கொண்டு எல்லா அரசு அதிகாரிகளும் இதே வேலையாகத்தான் இருப்பார்கள். அரசு பணம் எல்லாவற்றிற்கும் செலவாகும்.

இது அரசுக்கு ஏற்படும் செலவு. அதைவிட முதல்வர் பயணத்தால் போக்குவரத்து நிறுத்தம் போன்றவை பொது மக்களுக்கு இடைஞ்சல்.

இங்கு நான் முதல்வர் கருணாநிதியின் பயண எளிமையைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். முடிந்த அளவுக்கு இவர் இரயில் பயணங்களைத்தான் மேற்கொள்வார். மிக குறைந்த அளவே விமானங்களில் செல்வார். அதுவும் பயணிகள் விமானத்தில்தான் செல்வார். அப்படி செல்லும் போதும் கூட பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. தனிவிமானத்தில் இவர் சென்றதாக இதுவரை நான் அறிந்ததில்லை. மேலும் இவர் பயணிக்கும் பாதையில் போக்குவரத்து மிக குறைந்த நேரமே நிறுத்தப்படும்.

சென்னையில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கே ஹெலிகாப்டரிலும், சாலை வழிப்பயணம் என்றால் பயணிகள் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தியும் சாதனைகள் புரிந்த முன்னாள் முதல்வரைக்குறித்து நான் தனியாக எழுத வேண்டியதில்லை.

மேலும் சாதரணமாக முதல்வர் ஒரு ஊருக்கு வருகின்றார் என்றால் அவர் சார்ந்த கட்சிக்காரர்கள் செய்யும் ரகளை இருக்கின்றதே அது சொல்லி மாளாது.
இது எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தும்.

ஒரு ஊருக்கு அரசு விழாவாக சென்றாலும், கட்டாயம் கட்சி பொதுக்கூட்டம் ஒன்றிலும் முதல்வர் கலந்துகொள்வார். கட்சி பொதுக்கூட்டத்திற்காக இவர்கள் வசூல் செய்வதும், ஊரெல்லாம் கட்சிகொடியை கட்டுவதும், தோரணங்கள், கட் அவுட்கள் என்று சாலைகளை பெயர்பது இவையெல்லாம் தவிர்க்க முடியாத நிகழ்வுகள்.

ஆக அரசு பணத்திற்கும் வீண் செலவு, அரசு அதிகாரிகளுக்கும் அதிக வேலைப்பளு, செலவு, மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு நன்கொடை செலவு, சாலைகளுக்கு பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கும் வீண்சிரமம் என எல்லாவற்றையும் தவிர்த்து, அதுவும் எரிபொருட்களின் விலை தாறுமாறாக ஏறியுள்ள இந்த நிலையில் முதல்வர் தூத்துக்குடிக்கும், தஞ்சைக்கும் பயணித்து இத்திட்டங்களை தொடங்கிவைக்காமல் , சென்னை தலைமை செயலகத்தில் இருந்தே வீடியோ கான்பரன்ஸிங் முறையில் தொடங்கி வைத்தது மிக நல்லது.

நேரில் சென்றே ஆக வேண்டிய நிகழ்ச்சிகளைத்தவிர்த்து மற்ற நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் இதே முறையில் அமைத்தால் அரசுப்பண செலவு, கால விரயம், மக்கள் சிரம் எல்லாம் தவிர்த்துவிடலாம்.

அமைச்சர்கள் செல்வதற்கு இவ்வளவு கெடுபிடிகள் இல்லையென்பதால், அமைச்சர்கள் எல்லோரும் பயணங்கள் செய்து மக்கள் பணியாற்றலாம்.

இந்த வாரம் ஞாநியும் தனது ஓ பக்கத்தில் இதற்காக முதல்வருக்கு பூச்செண்டு கொடுப்பார் என நம்புகின்றேன். Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•11:02 PM
அன்பார்ந்த சிங்கப்பூர் வாழ் பதிவர்களே,
நேற்று கோவையில் நடந்து முடிந்த பதிவர் மாநாட்டில் சிங்கப்பூரில் இருந்துகொண்டே கலந்துகொண்ட நான், சிங்கப்பூரில் நேரடியாக கலந்துகொண்டு உங்களையெல்லாம் சந்திக்க மிக்க ஆவலாக உள்ளேன்.

பதிவர் சந்திப்பு குறித்து சிங்கப்பூரின் மூத்த பதிவரும், பதிவர் சந்திப்புகள் பல கண்டவருமாகிய அண்ணண் கோவி.கண்ணண் அவர்களுடன் நான் கடந்த சனிக்கிழமை தொலைபேசியில் உரையாடிய போது, 26.07.2008 சனிக்கிழமை மாலை சந்திப்பை வைத்துக்கொள்ளலாம், அறிவிப்பை வெளியிடுங்கள் என்று கூறினார்.

சிங்கை பதிவர்கள் அனைவரும் உங்களது விருப்பத்தை தெரிவியுங்கள்.

மாநாட்டு தேதியில் மாற்றம் செய்ய வேண்டுமெனில் குறிப்பிடுங்கள்.
மாநாட்டிற்கான இடம், நேரம் போன்றவை குறித்த உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
என்னை தொடர்புகொள்ள:
அலைபேசி எண் : +65 - 93372775.
மின்னஞ்சல் முகவரி : joseph.paulraj@gmail.com.

உங்கள் பேராதரவை வேண்டுகின்றேன்.

இப்படிக்கு ,
அ.ஜோசப் பால்ராஜ்.
சிங்க‌ப்பூர். Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•10:19 AM
இன்றைய தினமலர் செய்தியில் படித்த ஒரு செய்தி என்னை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.

ரயில் குண்டுவெடிப்பால் டாக்டரின் 'ஸ்பீக்கர்' அவுட்: யோகா, இயற்கை வைத்தியத்தால் கிடைத்தது பலன்.

தேவையேயில்லாமல் ஆங்கிலச் சொற்களை கலந்து தருவதில் தினமலர் தான் முதலிடத்தில் இருக்கும் பத்திரிக்கை. ஒரு தமிழ் தினசரியில் ஆங்கில வார்த்தைகளை எதற்கு கலக்க வேண்டும் ?

சில வார்த்தைகளை ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரியும், அதற்கான தமிழ் வார்த்தையே பலருக்கு புரியாது என்று சொல்லும் நிலை இன்று பல வார்த்தைகளுக்கு ஏற்பட்டுவிட்டது.

ஆனால் காது கேட்க்கும் திறனை இழந்தார், அல்லது காது செவிடாகிவிட்டது என்பது போன்ற வார்த்தைகள் கூடவா மக்களுக்கு புரியாமல் போகும்?

சரி ஆங்கிலத்தை கலந்ததுதான் கலந்தீர்கள், அதுவாவது சரியா ?
ஸ்பீக்கர் என்பது ஒலி பெருக்கி, ஒலியை பரப்ப பயன்படும் ஒரு வெளிப்படுத்தும் கருவி (Output Device). அது உள்வாங்கியல்ல ( Input Device). ஆனால் செவி என்பது ஒலியை உள்வாங்க பயன்படும் ஒரு உடல் உறுப்பு. எப்படி ஒரு வெளிப்படுத்தும் கருவியை போய் ஒரு உள்வாங்கும் உறுப்புக்கு பதிலாக உபயோகிக்கலாம்?

பல திரைப்படங்களில் நகைச்சுவைக்காக செவியை ஸ்பீக்கர் எனச் சொல்லியிருக்கலாம். அதற்காக அதுதான் சரியான் வார்த்தை என்பதுபோல் ஒரு தினசரி பத்திரிக்கை நடந்துகொள்வது என்ன நியாயம்?

எனது சிறுவயதில் நன்கு தமிழ் படிக்க வேண்டும் என்பதற்காக எங்கள் தாத்தா , என்னையும், என் சகோதரனையும் தினசி பத்திரிக்கையை சத்தமாக வாசிக்க சொல்லுவார். இதை பல பெரியவர்கள் செய்வார்கள். இனியெல்லாம் பிள்ளைகள் தமிழ் கற்க தமிழ் தினசரிகளை அவர்கள் கண்களிலேயே காட்டாமல் வைத்திருப்பதுதான் நல்லது.

நன்கு படித்த, அயல்நாடுகளில் வேலைபார்க்கும் பல வலை பதிவர்களுக்கு இருக்கும் மொழிப்பற்றுகூட ஏன் இந்த பத்திரிக்கைகாரர்களுக்கு இல்லை ? இது அப்பட்டமான மொழிக்கொலை. வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•6:34 PM
நாகப்பட்டிணம் ஆற்காடுபுரத்தை சேர்ந்த 2 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

நாகை ஆற்காடுபுரத்திலிருந்து, மீன் பிடிப்பதற்காக வாசகன், நாராயணசாமி மற்றும் முரளி ஆகியோர் தான் இலங்கை படையினரால் சுடப்பட்டு முரளி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். வாசகன், நாராயண சாமி இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

செத்தது தமிழர்கள் தானே? இவர்கள் என்ன தீவிரவாதிகளா? இவர்களுக்கும் முதல்வர் கருணாநிதி தானே? என்ன செய்யப்போகின்றீர்கள் இதற்கும் ?

இங்கு சாகும் ந‌ம்ம‌வ‌ர்க‌ளை ப‌ற்றி க‌வ‌லைப்ப‌ட‌ ந‌ம‌து முத‌ல்வ‌ருக்கு எங்கே நேர‌ம் இருக்கும்? அவ‌ருக்கு தான் ப‌ல‌ க‌வ‌லைக‌ள் இருக்குமே? இதை கேட்டால் அவ‌ர் என்ன‌ துப்பாக்கியை தூக்கிக்கொண்டா போய் ச‌ண்டை போட‌ முடியும் என்று அண்ண‌ண் ல‌க்கிலுக், அபி அப்பா போன்றோர் கேட்பார்க‌ள்.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதே சட்ட விரோதம் என்று அறிவிக்கச்சொல்லுங்கள். கடலில் இறங்கினால் நாங்களே சுடுவோம் என அறிவியுங்கள். செத்தாலும் இந்தியப் படையினரால் சுடப்பட்டு இறந்தோம் என்ற பெருமையாவது கிடைக்கட்டும் எங்கள் இந்திய மீனவர்களுக்கு.

ஏன் நம் நாட்டுக்கு கீழே கையகலமே உள்ள ஒரு நாட்டின் கடற்படையால் சுடப்பட்டு சாகணும்?
தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்தே பிரித்துவிட்டார்களா என்ன ? த‌மிழ‌ன் செத்தால் இந்தியா க‌ண்டுகொள்ளாதா?

ஈழத்தமிழர்களை மட்டுமல்ல, தமிழகத்தின் தமிழர்களை இலங்கைப்படை கொல்வதில் இருந்து காப்பாற்றமுடியவில்லை என்றால் இவர்களால் நமக்கு என்ன பயன்?

இத்தனை தமிழர்களை கொன்ற சிங்கள கடற்படையைப் பார்த்து இதுவரை ஒரு எச்சரிக்கை குண்டையாவது சுட்டிருக்கின்றதா பிராந்திய வல்லரசு நாடான இந்தியாவின் கடற்படை?

இனியும் எங்கள் கைகள் பூப்பறித்துக்கொண்டு இருக்காது என்று சட்டசபையில் அறிவித்த முதல்வர் இப்போது என்ன செய்யப்போகின்றார்? கடிதம் எழுதுவதைத் தவிர ?

இதுவரை எத்தனை மீனவர்களை கொன்றுள்ளது அந்த கேடுகெட்ட சிங்களப்படை? இதுவரை எத்தனை கடிதம் எழுதியுள்ளீர்கள்? அத்தனை கடிதங்களுக்கும் ஒரு பதில் கடிதாமாவது வந்துள்ளதா?

கலைஞரின் கடிதங்களாவது பிரதமரை சென்றடைகின்றதா? இல்லை அத்தனையும் குப்பை கூடைக்களுக்குத்தான் செல்கின்றதா? Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•5:29 PM
உழவும் உழவர்களும் - 1
உழவும் உழவர்களும் - 2

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டோம்என் பார்க்கும் நிலை.


முந்தைய இரு பாகங்களையும் படித்துவிட்டு கருத்துகளை எழுதிய அனைவருக்கும் நன்றிகள்.

சரி வாருங்கள், நாம் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகங்களினால் நடத்தப்படும் நேரடிக் கொள்முதல் நிலையங்களை பார்ப்போம்.

அறுவடை நேரங்களில் எல்லா ஊர்களிலும் தற்காலிகமாக நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பார்கள்.

நமது நெல் மூட்டைகளை எடுத்துக்கொண்டு இங்கு போய் காத்திருக்க வேண்டும்.
இங்கு நமது நெல்லை விற்க, நெல்லில் கட்டாயம் 18% க்கு மேல் ஈரப்பதம் இருக்க கூடாது. ஈரப்பதம் அதிகமாக இருந்தால் கட்டாயம் காயவைத்துக்கொண்டுதான் வரவேண்டும்.

ஈரப்பதம் எல்லாம் சரியாக இருந்து எடை போட வருகின்றாகள் அங்கு நடக்கும் ஒரு அநியாய கொள்ளை.இவர்களும் தங்கள் தராசில் தில்லுமுல்லு செய்து ஒரு மூட்டைக்கு 2 கிலோ வரை அதிகமாக வைத்து எடுப்பார்கள்.

இப்படி நம்மிடம் அதிகமாக எடுக்கும் நெல்லை எல்லாம் மூட்டையை தைக்கும் முன்னர் அளந்து எடுத்து, அங்கு வேலை செய்பவர்கள் எல்லாம் தங்களுக்குள் பிரித்துக் கொள்வார்கள். இது முதல் கொள்ளை.

இதை தடுக்க அரசு சென்ற ஆண்டு மின் தராசுகளை தந்தும்கூட பல இடங்களில் இன்னும் அதை உபயோகிக்க ஆரம்பிக்கவில்லை. சாதாரண தராசுகளில்தான் எடை போடுகின்றார்கள். மின் தராசுகளில் தில்லுமுல்லு செய்ய முடியாது என்பதால்தான் இப்படி.

அடுத்து, நெல்லை எடுத்துக்கொண்டபின் காசு கொடுக்கும் இடத்தில் முழுபணத்தையும் தராமல் கட்டாயமாக மூட்டைக்கு 15 ரூபாய் எடுத்துக்கொண்டுதான் தருவார்கள்.

இதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள், கிராமங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் இருந்து, கிடங்குகளுக்கு நெல்லை ஏற்றிச்செல்ல வரும் வாகனங்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும், சிந்தும் நெல்லுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும், அது இது என்று ஆயிரம் காரணம் சொல்லுவார்கள்.

முன்பு நெல்கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டையின் எடை 71கிலோ. ஒரு 71கிலோ மூட்டைக்கு 15ரூபாய் கொள்ளையடிப்பார்கள். தற்போது ஏற்றி இறக்கும் வசதிக்காக ஒரு மூட்டைக்கு 35 கிலோ என எடை வைத்து எடுக்கின்றார்கள். தற்போது ஒரு 35கிலோ மூட்டைக்கு 8ரூபாயில் இருந்து 10ரூபாய் வரை கொள்ளை.

ஒரு ஏக்கர் விவசாயம் செய்த ஒரு உழவருக்கு ஒரு ஏக்கருக்கு 45 மூட்டைகள் ( ஒரு மூட்டைக்கு 60 கிலோ) விளைகின்றது எனக்கொண்டால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இவர்கள் ஒரு மூட்டைக்கு நியாயமாக வைக்க வேண்டிய 36 கிலோ என்ற கணக்கில் வைத்தால் நம்மவருக்கு 75 மூட்டைகள் வரும். ஆனால் மூட்டைக்கு இரண்டு கிலோ கொள்ளையடிக்கப்படுவதால் நம்மவருக்கு கிடைப்பதோ 71 மூட்டைகள் தான்.மேலும் இந்த 71 மூட்டைகளுக்கு ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் வீதம் எடுத்துக்கொண்டாலும் நம்மவர் இழப்பது 710 ரூபாய்.

தற்போது அரசு நெல்லுக்கு அறிவித்துள்ள விலை குவிண்டாலுக்கு 1000 ரூபாய். இந்த விலையையே நம் கணக்கீட்டிற்கு பயன்படுத்தினால் நேரடி கொள்முதல் நிலையத்தில் நம்மவருக்கு ஒரு மூட்டைக்கு 350ரூபாய் கிடைக்கும் .

சரி நம்மவர் 4 மூட்டைகளை எடைபோடுவதில் நடந்த கொள்ளையில் இழந்தாரல்லவா? அதற்கு 4 X 350 = 1400.

ஆக ஒரு ஏக்கருக்கு நம்மவர் இழப்பது 2110.

இத்தொடரின் முதல் பாகத்தில் நாம் பார்த்தபடி ஒரு ஏக்கருக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய 10800 ரூபாய் லாபத்தில் இப்படி 2110 ரூபாயை இழந்துவிட்டால் இவர்களுக்கு மிஞ்சுவது 8690 மட்டுமே.

உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பார்கள், அது உண்மைதான் என்பது இப்போதாவது புரியும் என்று நினைக்கின்றேன்.

ஆக இது ஒழுங்காக தண்ணீரெல்லாம் கிடைத்து, இயற்கை சாதகமாக இருந்து, நன்கு விளைந்தால் மட்டும் கிடைக்கும் லாபம் இது.

இயற்கை சீற்றம், மற்றும் காவிரி நதி நீர் பிரச்சனை போன்றவை ஏற்படும் காலங்களில் ??????

அடுத்த பாகத்தில் தொடர்கின்றேன். Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•2:00 AM

சென்னை, கொருக்குப்பேட்டை குப்பை மேடு.
மலைமலையாகக் குவிந்திருக்கிறது குப்பைகள். தீயிடப்பட்டு புகை கக்கிக்கொண்டு இருக்கும் குப்பை மேடுகளில் சின்னதொரு உறுமலோடு ஏறி இறங்கி வருகிறது மாநகராட்சி லாரிகள்.

தூரத்தில் லாரியைப் பார்த்ததும் முதுகில் சாக்குப்பையைத் தூக்கிப் போட்டுக்கொண்டு ஓடி வருகிறார்கள் சிறுவர்கள். குப்பையைக் குறிவைத்து சிறுவர்களை முந்தி ஓடி வருகிறது தெரு நாய்கள். அவற்றை விரட்டி விட்டு பிஸ்கட் கவர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், காகிதங்கள், டின்கள் என விதவிதமான குப்பைகளைப் பொறுக்கி எடுக்க ஆரம்பிக்கிறார்கள் சிறுவர்கள். இது சென்னையின் ஒரு பகுதி வாழ்க்கை!

''அண்ணாத்தே... ஸ்கூல் போய்ப் படிக்கிற அளவுக்கு அப்பாகிட்ட துட்டு கிடையாது. அப்பா இங்கதான் எங்கேயாவது பொறுக்கினு இருக்கும். தெனம் ரெண்டு டைமாவது இப்படி குப்பை பொறுக்குனாதான் வீட்டுல ரெண்டு வேளைக்குச் சோறு திங்க முடியும். வூட்டுக்குப் போனா இருமல் வந்துகினேஇருக்கும். குப்பையிலே புரண்டுகிட்டு இருக்குறதால நைட்டு முழுக்கத் தூங்க முடியாது. நைநைன்னு அரிச்சுக்கிட்டே இருக்கும். ஒரு நாளைக்கு கொறஞ்சது முப்பது ரூபாயாவது கிடைக்கும். அத னால அரிப்பைப் பொறுத்துக் குவேன்''

இது ஆங்கே குப்பை பொறுக்கும் ஒரு சிறுவனின் குரல். இதுபோல் எத்தனையோ குரல்கள். இந்த வார விகடனில் படியுங்கள். மனசு வெறுத்து போகுது இதையெல்லாம் படித்து விட்டு.

இப்படியே விடலாமா? படித்துவிட்டு அதை வைத்து ஒரு பதிவும் போட்டுவிட்டால் போதுமா? நான் விகடனில் இந்த கட்டுரைக்கு எழுதிய கருத்தையே இங்கும் கொடுக்கின்றேன்.

குப்பையில் உழலும் இந்த சிறுவர்களின் குடும்பங்களை நன்கு ஆராய்ந்து பார்த்தீர்களேயானால், அவர்கள் பெற்றோர் இல்லாதவர்களாகவோ, அல்லது பெற்றோர் உழைக்க இயலாத உடல்நிலையில் உள்ளவர்களாகவோ, அல்லது உழைக்க உடல் வலு இருந்தும், உழைக்க மனமில்லா குடிகாரர்களாகவோ இருப்பார்கள்.

எத்தனை நாட்களுக்கு இப்படியே நாம் படித்துவிட்டு மனம் வருந்துவது போவது? இதற்கு தீர்வுதான் என்ன? எனக்கு தோன்றும் ஒரு யோசனையை இங்கு வைக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.

பெற்றோர் இல்லாதவர்கள், பெற்றோர் இருந்தும் குடிகாரர்களாகவோ இருக்கும் குழந்தைகளை ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலமாக, தத்தெடுத்து படிக்க வைக்கலாம்.

குழந்தைகளை குப்பை பொறுக்கவைத்து குடிக்கும் அந்த மிருகங்கள் எல்லாம் எப்படி போனால் என்ன ? முடிந்தால் உழைத்து உண்ணட்டும், இல்லையேல் போய் குப்பை பொறுக்கட்டும்.

உழைக்கும் நிலையில் உடல்வலு இல்லாமல் குழந்தைகளின் உழைப்பை நம்பி வாழும் நிலையில் உள்ள பெற்றோர்களையும் , அவர்கள் குழந்தைகளையும் சேர்த்து காப்பாற்ற வழிசெய்ய வேண்டும்.

ஏதவது ஒரு பகுதியில் நாம் எல்லாரும் சேர்ந்து செய்தால் நம்மைப் போல நல்ல உள்ளங்கள் கட்டாயம் இதை பிற பகுதிகளில் செய்ய முன்வருவார்கள்.ஊர் கூடினால் தான் தேர் இழுக்க முடியும். என்ன சொல்கின்றீர்கள் ?

ஏதாவது செய்யலாம், எத்தனைகாலம் தான் இப்படியே படித்துவிட்டோ அல்லது ஒரு பதிவு எழுதிவிட்டு சொல்வதோ தீர்வாகாது. நாம் ஒரு இயக்கமாக சேர்ந்து செய்ய வேண்டும் என்று நினைத்தால் முடியாத என்ன ?

உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்.

* இந்த பதிவை எழுத தூண்டியது ஆனந்த விகடன் 16-07-2008 தேதியிட்ட இதழில் வெளியான கட்டுரை. Udanz

Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•1:17 AM
உழவும் உழவர்களும் - 1

பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ ல்அவர்.


அறுவடை முடிந்தது, விளைச்சல் கையில் இருக்கின்றது. இனி என்ன விற்று காசு பார்க்க வேண்டியது தானே என தான் எல்லோரும் நினைப்பார்க‌ள். ஆனால் உழைக்க‌த் தெரிந்த‌ எங்க‌ள் உழ‌வ‌ர்க‌ளுக்கு பிழைக்க‌ அவ்வ‌ள‌வாக‌த் தெரியாது. இனியும் ப‌ல‌ போராட்ட‌ங்க‌ளை ச‌ந்தித்துதான் காசு பார்க்க‌ வேண்டும். அவை என்ன‌வென்று பார்ப்போமா...

தற்காலங்களில் கூலியாட்களின் பற்றாகுறையால் அறுவடை பெரும்பாலும் இயந்திரங்களின் மூலமாகத்தான் நடைபெறுகின்றது.

ஆட்கள் மூலம் அறுவடை செய்தால் கையால் அறுத்து கதிர்களை கட்டாக கட்டி, வயலுக்கு வெளியே அமைக்கப்படும் களங்களுக்கு அவற்றை எடுத்து வந்து, பின் அடித்து நெல்லை பிரிப்பார்கள். இதில் நெல் களத்தில் இருப்பதால் நேரடியாக வண்டி வைத்து ஏற்றிக்கொண்டு சென்றுவிடலாம்.

ஆனால் இயந்திரங்கள் கொண்டு அறுவடை செய்யும் போது, அவை வயலிலேயே அறுத்து, அடித்து நெல்லை கொடுத்துவிடும். இவற்றை மூட்டைகட்டி அங்கிருந்து வண்டிகளுக்கு எடுத்துவந்து தர தனியாக கூலியாட்களை நியமிக்க வேண்டும்.
இப்படி கஷ்டப்பட்டு கொண்டுவரும் நெல்லை விற்க, இரண்டு வழிகள் தான் எங்களுக்கு. ஒன்று தனியார் நெல் வியாபாரிகளிடம் விற்பது, அல்லது அரசாங்கத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பது.

தனியார் வியாபாரிகள் என்றால் அவர்கள் எங்களது வீட்டிலேயே வந்து எடை போட்டு நெல்லை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். ஆனால் இவர்களிடமிருந்து உடனடியாக பணம் கிடைக்காது. ஒரே நேரத்தில் மொத்தப்பணமும் கிடைக்காது. கொஞ்சம் கொஞ்சமாக இழுக்கப்போட்டுத்தான் தருவார்கள்.

இதுமட்டுமா, கட்டாயம் இவர்கள் எடைபோட பயன்படுத்தும் தராசுகள் சரியான அளவை காட்டாது. எடையில் தில்லுமுல்லு செய்துதான் இவர்கள் நெல்லை வாங்குவார்கள். கேட்டால் நெல்லை ஓரிட‌த்தில் இருந்து ம‌ற்றொரு இட‌த்திற்கு கொண்டுசெல்லும் போது சிந்துவ‌து,சித‌றுவ‌து இவ‌ற்றால் ஏற்ப‌டும் இழ‌ப்பை ச‌ரிக‌ட்ட‌த்தான் இப்ப‌டி செய்வ‌தாக‌ நியாய‌ம் வேறு பேசுவார்க‌ள்.

த‌னியார் வியாபாரிக‌ள் ஒரு மூட்டை 61கிலோ என்ற‌ அள‌வில் பிடிப்பார்க‌ள் ( நெல் எடை 60கிலோ + சாக்கு எடை 1கிலோ). ஆனால் அவ‌ர்க‌ள் த‌ராசில் 61கிலோ காட்டிய‌ மூட்டையை ஒரு ந‌ல்ல‌ த‌ராசில் வைத்துப்பார்த்தால் குறைந்த‌து 63 கிலோவாவது இருக்கும்.

குறுவை சாகுபடி அறுவடை சமயங்களில் பெரும்பாலும் மழை வந்துவிடும். மழை இல்லாவிட்டாலும் பனியால் குறுவை நெல்லில் சற்று ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இது போன்ற சமயங்களில் நெல்லில் ஈரம் அதிகமாக இருக்கின்றது என்று கூறி காயவைக்க சொல்வார்கள். அல்லது எடை அதிகமாக வைத்து வாங்கிக்கொள்கிறோம் என்று அதிலும் நல்ல லாபம் பார்ப்பார்கள் எங்கள் வியாபாரிகள்.

இப்ப‌டி எல்லாம் இவ‌ர்க‌ளிட‌ம் விற்க‌ வேண்டுமா? ஏன் அர‌சாங்க‌ நேர‌டி நெல் கொள்முத‌ல் நிலைய‌ங்க‌ளில் விற்க‌ கூடாது என‌ தோண‌லாம்.

அரசு கொள்முதல் நிலையங்களுக்கு எல்லாம் கொள்ளை நிலையங்கள் என்றுதான் பெயர் வைக்க வேண்டும்.
அங்கு நடக்கும் அநியாயங்கள் அத்தனை. அதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.. Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•10:20 PM
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்று எல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.


இது உழவனின் வாழ்க்கையை அலசும் தொடர்
வயலுக்குள்ளும், வெளியேயும் எங்கள் சொந்தங்கள் சந்திக்கும் சவால்களை உங்களுக்கு சொல்லவே இந்த தொடர்.

எனக்கு தெரிந்த பயிர்களான நெல், கரும்பு போன்ற பயிர்களை விவசாயம் செய்வது குறித்தும், அதில் ஆரம்பம் முதல், கடைசிவரை அதாவது விதைப்பில் இருந்து, அறுவடை செய்து பணமாக்குவது வரை விவசாயி என்ன பாடுபடுகின்றான் என்பது குறித்தும் விளக்கப்போவதுதான் இந்த தொடர்.

கரும்பு சாறும், இந்திய பொருளாதாரமும் என்ற எனது பதிவிற்கு பின்னூட்டமிட்ட என் நண்பர் அவர்களின் கேள்விகளுக்கு நான் அளித்த பதிலின்படி இத்தொடரை எழுதுகின்றேன்.

என்னைப்போல் விவசாயகுடும்பத்தை சேர்ந்த பல நண்பர்களும் பரந்துவிரிந்த இவ் வலையுலகில் இருப்பீர்கள். என் தொடரை படித்து உங்கள் ஆலோசனைகளை சொல்லுங்கள்.
விவசாயம் என்பதை வெளியில் இருந்து மட்டுமே பார்த்தவர்கள் என்னோடு வாருங்கள், எங்கள் வயல்வெளிகளை சற்று பார்த்துவிட்டு வருவோம்.

முதலில் தஞ்சை மாவட்ட விவசாயிகளின் நெல் சாகுபடியை குறித்து பார்ப்போம்.

வழக்கமாக ஜீன் மாதம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டால் அந்த வருடம் இரு போகம் நெல் விளையும். போதுமான அளவு நீர் இல்லாமல், அணை திறப்பு தள்ளிபோனால் ஒரு போகம் மட்டும்தான் நெல் விளைவிக்க முடியும்.

சரி, நடவு முதல் அறுவடை வரை ஆகும் செலவுகள் என்னவென்று பார்ப்போமா?

உழவு செய்ய உழவுஇயந்திர (Tractor) கூலி ஒரு ஏக்கருக்கு ஒரு உழவுக்கு 300 ரூபாய். கட்டாயம் 3 உழவு செய்துதான் நடவு செய்யமுடியும்,ஆக உழவு கூலி மட்டும் 900ரூபாய்.

நாற்றங்காலில் இருந்து நாற்று பறித்து நடவு வயலில் வைக்க ஒரு ஏக்கருக்கு 700 ரூபாய் கூலி. நாற்றங்காலில் இருந்து நடவு வயல் தூரமா இருந்தால் இது இன்னும் அதிகமாகும்.

நடவுக்கு ஒரு ஏக்கருக்கு கூலி 500 ரூபாய்.

அடியுரம் மற்றும் நடவுசெய்த உடன் இடும் மேலுரம் ஒரு ஏக்கருக்கு 4000ரூபாய். பூச்சி மருந்து ஒரு 1500 லிருந்து 2000 வரை. (மீண்டும் மீண்டும் பூச்சித்தாக்குதல் இருந்தால் இது இன்னும் அதிகரிக்கும்). உர‌ம் ம‌ற்றும் பூச்சிம‌ருந்து அடிக்க‌ ஆண் ஆளுக்கு கூலி 100ரூபாய். (காலையிலிருந்து ம‌திய‌ம் வ‌ரை ம‌ட்டுமே வேலை).தெளிக்கும் கூலி 500 என்று வைத்துக்கொள்வோம்.

களை பறிக்க ஒரு ஏக்கருக்கு எப்படியும் 20 ஆட்கள் தேவைப்படும். ஒரு பெண் ஆள் கூலி 40ரூபாய். ஆக களைபறிக்க மட்டும் 800ரூபாய். ஆக‌ க‌ளைப‌றிப்பு வ‌ரை ஒரு ஏக்க‌ருக்கு ஆகும் செல‌வு ம‌ட்டும் 8900 ஆகும்.

இத‌ற்குப்பின் அறுவ‌டை, அறுவ‌டைக்கு கூலி எப்போதும் ப‌ண‌மாக‌ கொடுப்ப‌து கிடையாது. ஆட்க‌ள் அறுவ‌டை செய்தால் நெல்லாக‌த்தான் கூலி கொடுப்போம். த‌ற்போது இய‌ந்திர‌ங்க‌ளை கொண்டு அறுவ‌டை செய்ய‌வ‌தால் ஏக்க‌ருக்கு 1800 ( இது க‌ட‌ந்த‌ ஆண்டு நில‌வ‌ர‌ம், டீச‌ல் விலை உய‌ர்வால் இவ்வாண்டு 2300 முத‌ல் 2500 இருக்கும் என‌ எதிர்பார்க்க‌ப்ப‌டுகின்ற‌து.) .

ஆக இயந்திர அறுவடை என்று வைத்துக்கொண்டால் கூட 11700 ரூபாய் ஆகும்.

இது தவிர வயலை உழவு செய்யும் முன்னர் ஆகும் முன்னற்பாடுகளுக்கு ஆகும் செலவுகளையும், அறுவடைக்கு பின்னர் ஆகும் சில செலவுகளையும் இந்த செலவு கணக்கில் சேர்க்கவில்லை.

சரி இதுவரை செலவுகளை பார்த்தோம். இனி வரவு என்னவென்பதை பார்ப்போம்.

ஒரு வயல் நன்றாக விளைந்தால் ஏக்கருக்கு 45 மூட்டைகள் விளைச்சல் வரும். மிக நன்றாக விளைந்தால் 48 முதல் 50 மூட்டைகள் வரை கிடைக்கும்.
சராசரியாக 45 மூட்டைகள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு மூட்டை சாதாரண ரக நெல் 500ரூபாய் என்று வைத்துக்கொண்டால் ஒரு ஏக்கருக்கு 22500 ரூபாய் கிடைக்கும்.

நான் இங்கே கொடுத்துள்ளது குறுவை எனப்படும் குறைந்த கால பயிருக்கு ஆகும் செலவுகள். குறுவை பருவத்தில் பொன்னி போன்ற அதி சன்னரக நெல்கள் பயிரிடப்படுவதில்லை. அவை சம்பா சாகுபடியில்தான் பயிரிடப்படும்.
சம்பா குறித்தும் தொடரின் பின் பகுதியில் விவரிக்கின்றேன்.

ஆகா , ஒரு ஏக்கருக்கு 10800 ரூபாய் லாபம் கிடைக்கின்றதே என்று ஆச்சரியப்பட வேண்டாம்.

உல‌க‌த்திலேயே, த‌ங்க‌ள் உற்ப‌த்தி செய்யும் பொருளுக்கு தாங்க‌ளே விலை நிர்ண‌யிக்க‌ முடியாத‌ ஒரே உற்ப‌த்தியாள‌ர் எங்க‌ள் உழவர்கள் ம‌ட்டும்தான்.

நெல்லை விலைக்கு வாங்கும் வியாபாரிகள் ஆகட்டும் அல்லது அரசாங்கத்தின் நேரடி நெல் கொள்(ளை)முதல் நிலையங்களாகட்டும் எல்லாம் எங்களை எப்படி அடிக்கின்றன என்றும், நெல்லை விற்று காசாக்குவதில் நாங்கள் படும் சிரமங்கள் என்ன என்றும் அடுத்த பாகத்தில் பார்க்கலாம். Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•10:21 AM
குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான 70 தமிழ் படங்களுக்கு ஒரு படத்திற்கு 7 லட்சம் வீதம் 4 கோடியே 90 லட்சம் ரூபாய் மானியமாக அளிக்கப்படுகின்றது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏன் திரைத்துறையினருக்கு மட்டும் இத்தனை சலுகைகளை வாரிவாரி வழங்க வேண்டும் என்று கேட்டால், அதில் லட்சக்கணக்கானோர் பணியாற்றுகின்றார்கள் என்று பதில் சொல்லும் அண்ணண் லக்கி லுக், அபி அப்பா போன்றோர், ஏற்கனவே எடுத்து வெளியிடப்பட்ட இந்த படங்களுக்கு இன்று சலுகை அளிப்பதால் இது தயாரிப்பாளரை மட்டும் சென்றடையுமா அல்லது அதில் பணிபுரிந்த அனைத்து சாதரண ஊழியர்களுக்கு கொடுக்கப்படுமா என்று விளக்கினால் நல்லது.

இன்னும் பள்ளிகளே இல்லாத எத்தனை கிராமங்கள் உள்ளன? பெயரளவில் பள்ளி இருந்தும் அதற்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாமலும், பள்ளிக்கு தேவையான கட்டிடங்கள் இல்லாமலும் எத்தனை பள்ளிகள் உள்ளன?
வெறும் மரத்தடியில் மாணவர்களை அமரச்செய்து பாடம் நடத்தும் அவலங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றது?


நெல்லை மாவட்டத்தில் நதியின் ஒரு கரையில் இருக்கும் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் நதியின் மறுகரைக்கு செல்ல பாலம் இல்லாமல், தினமும் தண்ணீரில் நீந்தி நதியை கடந்து அக்கரையை அடைந்து சொல்ல முடியாத துன்பங்களை அனுபவிக்கின்றார்கள். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட இப்படி நதியை கடந்து சென்றுதான் தங்கள் படிப்பையே தொடர வேண்டிய அவலமும் இதே தமிழகத்தில் தான் நடக்கின்றது.

அங்கு ஒரு பாலம் கட்ட கட்டாயம் 4.9 கோடி செலவு ஆகாது. அங்கு பாலம் கட்டினீர்களேயானால் எத்தனையோ மாணவர்கள் சிரமமின்றி தங்கள் கல்வியை தொடர்வார்கள்.

ஆனால் இவர் கதை வசனம் எழுதிய பாசக்கிளிகள் படத்திற்கும் சேர்த்து 70 தரமான படங்களுக்கு 7 லட்சம் உதவித்தொகை அளிக்கின்றார். இதில் தரமான படம் என்பதை எந்த அளவுகோலை வைத்து தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. இங்கிலிஷ்காரன், வெற்றிவேல் சக்திவேல், 6.2" போன்ற படங்கள் எல்லாம் அந்த தரமான படங்களின் பட்டியலில் இடம்பெற்று 7 லட்சம் பெறுகின்றன.

பட்டியலில் உள்ள பல படங்களின் பெயர்கள் கேள்விப்படமாதிரி கூட இல்லை என்பது தனிக்கதை.

அதிமுக‌ ஆட்சியில் கொடுக்க‌ப்ப‌டாத‌ ச‌லுகைக‌ளையும் சேர்த்து இவ‌ர் அறிவிக்கின்றார். இப்போது அறிவிக்க‌ப்ப‌ட்ட‌ 70 ப‌ட‌ங்க‌ளும் 2005 ம‌ற்றும் 2006 ஆண்டுகளில் வெளியான‌வை. அப்போ இதே போல் 2007ல் வெளியான‌ 45 ப‌ட‌ங்க‌ளுக்கு வேறு த‌ர‌ப்போகின்றீர்க‌ளா?

ஆக்கப்பூர்வமாக செய்ய வேண்டிய எத்தனையோ பணிகள் இருக்கும் போது, எப்படி மக்களின் வரிப்பணத்தை ஒரு துறைக்கும் மட்டும் வாரி இறைக்க ம‌ன‌ம் வ‌ருகின்ற‌து?

என்ன‌தான் திரைத்துறையில் இருந்து வந்திருந்தாலும், ஒட்டுமொத்த‌ த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கும் இவர்தான் முத‌ல்வ‌ர் என்ப‌தை நம் முதல்வருக்கு யாராவ‌து அடிக்க‌டி நினைவூட்ட‌ வேண்டுமா என்ன‌ ? Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•9:54 PM
கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக ஏறி, அதனால் பல நாடுகளின் பொருளாதரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,நான் ஏற்கனவே எழுதிய இப்பதிவை மீள்பதிவு செய்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

மேலும், இப்பதிவை நான் வெளியிட்ட போது எனது வலைப்பூவை தமிழ்மணத்துடன் இணைக்காததால் இது மிகச்சிலரையே சென்றடைந்தது. தற்போது தமிழ்மணத்தின் வாயிலாய் பெரும்பாலனவர்களை சென்றடையும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துகளை பின்னூட்டமிடுங்கள்.

மிக நீண்ட நாட்களாக என் மனதை அரித்துக்கொண்டிருக்கும் ஒரு ஆதங்கம் தான் இந்த பதிவு. இது ஒரு சுயநலம் கலந்த பொதுநலப் பார்வையும் கூட.

வளர்ந்து வரும் நவீனயுகத்தில் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையால் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் போன்ற மரபுசார் எரிபொருட்களின் தேவையும், சர்வதேச சந்தையில் அதிகரித்துவரும் கச்சா எண்ணெயின் விலையால் எல்லோரும் பாதிப்படைவது பற்றி நான் ஓன்றும் தனியாக சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் மரபுசாரா எரிசக்தி எனும் ஒரு அரிய வளத்தை நம் கையில் வைத்துக்கொண்டு இன்னும் ஏன் நாம் அதை உயோகிக்க மறுக்கிறோம் என்பது தான் எனது கேள்வி.

கரும்பில் இருந்து சர்கரை தயாரிக்கும் போது கிடைக்கும் கழிவுப்பாகில் (மொலாசஸ்) இருந்தும், மக்கா சோளத்தில் இருந்தும் தயாரிக்கப்படும் எத்தனாலை உயிர் எரிபொருளாக உபயோகிக்கலாம் என்பதை ஏற்கனவே பிரேசில் போன்ற நாடுகள் நிரூபித்துவிட்டன. விவசாயத்தை முக்கியத்தொழிலாக கொண்டுள்ள இந்தியாவில் கரும்பும் , சோளமும் மிக அதிகமாக பயிரிடப்படும் பயிர்கள் தான்.

பிரேசில் நாட்டில் உயிர் எரிபொருள்(Bio Fuel) ஆக எத்தனாலை பயன்படுத்தி கார் போன்ற வாகனங்களை இயக்கிவருகிறார்கள். தொழில்நுட்பம் குறித்த மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள இணைய முகவரிக்கு சென்று பாருங்கள். (http://en.wikipedia.org/wiki/Ethanol_fuel).


இது நாள்வரை சர்க்கரை ஆலைகளில் கழிவாக வெளியேற்றும் மொலசஸ் தற்போதுவரை வேண்டாத ஒரு கழிவாகத்தான் வீணாக்கப்படுகிறது. சொல்லப்போனால் ஆலைகளுக்கு இது ஒரு செலவு தான். ஆனால் இதே மோலாசஸ்தான் எத்தனால் தயாரிக்க முக்கியமான மூலப்பொருள்.

ஆனால் எத்தனால் என்பது இதுவரை சாரயமாகவும், மிக சில மருத்துவ தேவைகளுக்காகவும் மட்டுமே உபயோகிக்கப்படுவதால் தற்சமயம் பெருமளவில் தயாரிக்கப்படுவதில்லை. இதே எத்தனாலை உயிர் எரிபொருளாக உபயோகிக்கும் நிலை வந்து மிகப்பெருமளவில் தயாரிக்க வேண்டியத் தேவைகள் உருவானால் இன்று சர்க்கரை ஆலைகளுக்கு செலவாக இருக்கும் மொலசஸ் எத்தனால் தயாரிப்புக்கு மூலப்பொருளாக விற்கப்பட்டு வருவாயாக மாறிவிடும். இதனால் கரும்புக்கு கூடுதல் விலை கிடைக்கும் .

மக்காசோளம் மிக குறைந்த நீரைகொண்டு பயிரிடப்படும் ஒரு பயிர். கரும்பைவிட மிக குறைவான நாட்களில் விளையும், மழையை மட்டும் நம்பி விவசாயம் செய்யும் இடங்களிலும் பயிரிட முடியும். ஆனால் தற்போது உணவு பொருளாகவும், கோழி பண்ணைகளில் தீவனமாகவும் மட்டுமே பயன்படுவதால் மிகக்குறைந்த விலையே இதற்கு கிடைத்துவருகிறது. சோளத்தில் இருந்தும் எத்தனால் தயாரிக்கமுடியும் என்பதால் இதற்கும் நல்ல விலை கிடைக்கும். இவையெல்லாம் விவசாயிகளுக்கு கிடைக்கும் பலன்கள்.

பெட்ரோலிய எரிபொருட்களை உபயோகிப்பதால் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை விட , எத்தனாலையோ அல்லது எத்தனால் கலந்த எரிபொருளையோ உபயோகிப்பதால் ஏற்படும் கேடு குறைவானது என்றும் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. உலகின் வெப்பம் அதிகரித்து பல கடலோரப்பிரதேசங்கள் வெகுவிரைவில் நீரில் மூழ்கும் என்ற எச்சரிக்கை விடப்பட்டுள்ள இந்த சூழலில் சுற்றுபுறச் சூழலை பாதுகாக்கவும் இது ஒரு மி்கச்சிறந்த வழியாகும் என்பதில் ஐயமில்லை. ஆக சுற்றுப்புற சூழலை காரணமாக கொண்டும் இதை தடுக்க முடியாது.

நாட்டின் இறக்குமதியில் பெருமளவு கச்சா எண்ணெய் தான் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று , வெறும் 30 % எத்தனால் கலந்த எரிபொருளை உபயோகித்தால் கூட , கச்சா எண்ணெய் இறக்குமதி 30% குறையும் இதனால் ஒரு 15% பெட்ரோலிய பொருட்களின் விலை குறைந்தாலும் எல்லோருக்கும் நன்மைதானே ? மேலும் இறக்குமதி குறைவதால் நாட்டின் பொருளாதாரமும் உயரும் அல்லவா?

மேலும் இந்தியாவில் உயிர் எரிபொருள் பயன்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்தினால், மேலும் பல நாடுகள் இதை பயன்படுத்த முன்வரலாம், எல்லோராலும் எத்தனால் தயாரிக்கமுடியாது என்பதால் எத்தனால் ஏற்றுமதியில் கூட பெரும் லாபம் ஈட்ட முடியும்.

உயிர் எரிபொருள் தயாரிப்புக்கு உணவுப் பொருட்களை பயன்படுத்துவதால், உணவு பொருட்களுக்கு பற்றாகுறை ஏற்படும் என்ற ஒரு குற்றச்சாட்டும் வந்துகொண்டிருக்கின்றது.

ஆனால் நான் இங்கே குறிப்பிட்டிருக்கும் மொலசஸ் ஒரு உணவுப்பொருள் அல்ல. அதே போல் மக்காச்சோளம் ஒரு மானாவாரி பயிர் என்பதால், அதை உயிர் எரிபொருள் தயாரிப்பிற்கு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டால், அதற்கு நல்ல விலை கிடைக்கும் என்பதால் மேலும் பல விவசாயிகள் அதை பயிரிட முன்வருவார்கள். தரிசு நிலங்களை மேம்படுத்தி சுலபமாக மக்காச்சோளம் பயிரிடலாம் என்பதால் கட்டாயம் உணவுப் பற்றாகுறைக்கு இத்திட்டம் வழிவகுக்காது. ( இதை நான் என் முந்திய பதிவில் குறிப்பிடவில்லை).


ஆக என் சிற்றறிவுக்கு புரிந்த வகையில் எந்த கோணத்தில் பார்த்தாலும் நன்மையளிக்கும் இந்த திட்டத்தை ஏன் எந்த அரசாங்கமும் கண்டுகொள்ளவதில்லை?

சரி இதுல என்ன பொது நலம் கலந்த சுயநலம் உனக்கு அப்டினு யாரும் கேட்குற மாதிரி வைக்க கூடாதுல, அதையும் தெளிவா சொன்னாதானே சரியா இருக்கும்

பொது நலம் : 1) கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவதால் அதிகரிக்கும் நாட்டின்
பொருளாதார முன்னேற்றம்
2) குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்கள்.
3) சுற்றுப்புற சூழல் பாதிப்பு குறைவது.

சுய நலம் : என்னதான் கணிப்பொறி துறையில வேலை பார்த்துகிட்டு இருந்தாலும் நான் மாரனேரி என்னும் கிராமத்துல ஒரு விவசாய குடும்பத்துல பிறந்தவன் தானே. கரும்புக்கும் சோளத்துக்கும் நல்ல விலை கிடைக்கும்னா எங்க விவசாயகுலத்துக்கு பெரிய நன்மைதானே ... Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•4:59 PM
பிரபலாமவதற்கு இரண்டு வழிகள் உண்டு.சிரமப்பட்டு பிறருக்கு உதவும் வகையில் ஏதவது செய்வது ஒரு வகை. இது நேர்வழி. அப்துல கலாம் இந்த வகையை சார்ந்தவர்.

சிரமமேயில்லாமல் ஒரு பிரபலமானவரின் செயல்களை கன்னாபின்னா என்று எதிர்பது. கேணத்தனமாக கேள்வி கேட்பது. இதற்கு சமீபத்திய உதாரணம் ஞாநி.

இவர் ஓ பக்கம் என்று ஒரு பக்கத்தை முதலில் விகடனில் எழுதிக்கொண்டிருந்தார். அங்கே என்ன பிரச்சனையோ அங்கிருந்து குடிமாறி குமுதத்திற்கு சென்று அங்கேயும் அதே ஓ பக்கத்தை எழுதிவருகின்றார்.

விகடன் மின் பத்திரிக்கையில் வாசகர்கள் தங்களது கருத்துகளை எழுதும் வசதியிருப்பதால், அங்கு ஞாநியின் பல கட்டுரைகள் வாசகர்களின் பலத்த கண்டணங்களுக்கு உள்ளாகியிருந்தது. ஆனால் ஒரு முறை கூட வாசகர்களின் கருத்துகளுக்கு பதிலளித்தது இல்லை. வாசகர்களின் கருத்துக்களை அவர் படித்ததே இல்லை என்றுதான் நினைக்கின்றேன்.

குமுதம் மின் இதழ் வாசகர்களுக்கு கருத்து எழுதும் வசதியும் இல்லை என்பதால் ஞாநிக்கு எந்த கேள்வியும் இல்லை.

09.07.2008 தேதியிட்ட குமுதம் இதழில் அவர் எழுதியுள்ள ஓ பக்கத்தில் இவர் எழுதியுள்ள அபத்தங்கள் அவர் எழுதுவதை பிரபலமாக்க , பழுத்த மரமான அப்துல் கலாம் மீது கல்லெறியும் குயுக்தி, குறுக்கு புத்தி என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.

தன் வாழ்நாளை இன்றளவும் நாடு , நாட்டின் முன்னேற்றம் என்பதற்காக மட்டுமே செலவழித்துக்கொண்டிருக்கும் திரு. அப்துகலாமை, அவர் மாணவர்களையும், இளைஞர்களையும் வாழ்க்கையில் முன்னேற கனவுகாணுங்கள் என்று அடிக்கடி கூறினார் என்பதற்காக கனவுத்தாத்தா என்று விளித்திருப்பது, ஞாநியின் திமிர்தனத்தின் உச்சம் என்பதை தவிர வேறெதுவும் இல்லை.

இந்திய அரசியலமைப்பின்படி வானளாவிய அதிகாரங்கள் ஏதுமற்ற ஒரு அலங்கார பதவியாகிய குடியரசுத்தலைவர் பதவியில் இருந்து கொண்டு, வெறுமனே டில்லியில் அமர்ந்துகொண்டு, இந்தியா வரும் வெளிநாட்டு பிரநிதிகளுடன் கைகுலுக்குவதோடு மட்டும் நில்லாமல், தனது பதவி காலத்தில் நாட்டின் எல்லா பாகங்களுக்கும் பயணித்து லட்சக்கணக்கான மாணவர்களையும், இளம் வயதினரையும் சந்தித்து உரையாடி, அவர்களை ஊக்கப்படுத்திய கலாம், இளையோர்கள் கனவு காண வேண்டும் என்று சொன்னது எதற்காக ? இங்கு கனவு எனும் வார்த்தைக்கு என்ன அர்த்தம் ?இவற்றைக் கூட அறிந்துகொள்ள முடியாத அறிவிலிதான் நான் (ஞாநி) என்பதையும் அவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அக்கினிச் சிறகுகள், விஷன் 2020 ஆகியவற்றை படித்தால் இவருக்கு தூக்கம் வந்துவிடுகிறதாம். இத‌ற்கு க‌லாம் எந்த‌ வ‌கையில் பொறுப்பாவார்?இவ‌ர் போல் ப‌க‌ல் க‌ன‌வு காணுப‌வ‌ர்க‌ளுக்கு எப்ப‌டி அப்துல் க‌லாம் அவ‌ர்க‌ளின் க‌ன‌வுக்கு அர்த‌ம் தெரியும் ?

அக்னிச்சிறகுகள் எனும் நூல் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு என்பது கூட தெரியாமல் அதையும் கூட குறை கூறியிருப்பதில் இருந்தே, விஷயமறிந்தவர்களுக்கு ஞாநியின் அறியாமை புலப்படும்.

கலாமின் கனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு திட்டத்தை எதிர்பதற்காக தனது பகல் தூக்கத்தையும், பகல் கனவையும் தியாகம் செய்துவிட்டு எழுதியுள்ளாராம். இவ்வளவு கேவலமாக எழுதியதற்கு பதிலாக பேசாமல் நன்றாக தூங்கி, அவரது பகல் கனவையாவது கண்டிருக்கலாம்.

நீலகிரி மாவட்டத்தில் அமைய உள்ள‌ நியூட்ரினோ ஆராய்சிகூடத்தை எதிர்பதற்காகத்தான் அவர் இப்படி கலாம் அவர்களின் மேல் கல்லெறிந்து பிரபலப்படுத்திக்கொள்ள முயற்சி செய்துள்ளார். நியூட்ரினோ ஆராய்சி கூடம் என்பது நன்மையா , தீமையா என்பது குறித்து எனக்கு தெரியாது. எனவே அது குறித்து நான் கருத்து எதுவும் கூறமுடியாது.

ஆனால் ஞாநியின் கட்டுரை எழுதப்பட்ட விதம் கட்டாயம் கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே கலைஞரை ஒய்வெடுக்க கூறியதும் இதே வகை தான். இப்படி பிரபலமானவர்களின் மேல் கல்லெறிந்து எழுதுவதைவிட ஓ பக்கத்துக்கு ஓய்வு கொடுக்கலாம்.
அப்துல் கலாம் அவர்களை கேவலப்படுத்த முயலும் ஞாநியின் கட்டுரையை வெளியிட்ட குமுதம் இதழ் நிர்வாகிகளும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

ஒகேனக்கல் குடிநீர் பிரச்சனைக்காக திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின் போது பேசிய சத்தியராஜ், சரியான கருத்துக்களை தவறான வழியில் வெளிப்படுத்தினார் என்று எழுதிய அதே ஞாநி, இன்று தனது எதிர்ப்பை மிகக் கேவலமான வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ளதன் மூலம் பிறரை குட்டவோ, பூச்செண்டு கொடுக்கவோ தனக்கு எந்த அருகதையும் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் மீறி இவர் இனியும் பிறரை இந்த வார குட்டு என்ற தலைப்பில் குட்ட முனைவாரானால், முதலில் அப்துல் கலாம் அவர்களையும்,அவரது கனவு என்ற வார்த்தையும் சரியாக புரிந்துகொள்ளாமல் கிண்டலடித்த தனது அறியாமை அல்லது தனது திமிர்தனம் இவற்றில் ஒன்றைத்தான் இவர் குட்டிக்கொள்ள வேண்டும். Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•11:18 AM
இது சமையல் குறிப்பு என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்...
நான் 1999ல் சென்னையில் வேலைக்கு சேர்ந்து சில‌ நாட்க‌ளில் ந‌ட‌ந்த‌ க‌தை இது.

க‌ல்லூரி முடிக்கும் வ‌ரை வீட்டில் சொகுசாய் வாழ்ந்து ப‌ழ‌கிய‌ எனக்கு சென்னையில் த‌னியாய் வாழ்வ‌து ப‌ழ‌கிகொண்டிருந்த‌ நேர‌ம் அது.
என்னோடு வேலை பார்த்த‌ இரு பீகார் பைய‌ன்க‌ள், ஒரு திருச்சிகார‌ர், ம‌ற்றும் நான் என‌ 4 பேர் ஒன்றாக‌ ஒரு வீடு எடுத்து த‌ங்கியிருந்தோம்.

பீகார்கார‌ர்களுக்கு சென்னையின் உண‌வை உண்டு ம‌கிழ‌த்தெரியாமையால், வீட்டில் ச‌மைக்க‌லாம் என‌ முடிவெடுத்து ச‌மைக்க‌ ஆர‌ம்பித்தோம். சுடுத‌ண்ணி போட‌க்கூட‌ ச‌மைய‌ல் குறிப்பை தேடும் என‌து ச‌மைய‌ல் திற‌மையை அறிந்த‌தால் என்னை ச‌மைய‌ல்க‌ட்டு ப‌க்க‌மே என் ந‌ண்ப‌ர்க‌ள் விடுவ‌தில்லை.

தின‌மும் சாத‌ம் அல்ல‌து ச‌ப்பாத்தி அத‌ற்கு தொட்டுக்கொள்ள‌ ப‌ருப்பு அல்ல‌து உருளைகிழ‌ங்கு இதை த‌விர‌ வேறெதுவும் அவ‌ர்க‌ளுக்கு தெரியாத‌தால், அவ‌ர்க‌ள‌து விதியின் ப‌டி ஒரு நாள் என்னை அழைத்து எப்ப‌டியாவ‌து சாம்பார் செய் என்று அன்புட‌ன் வேண்டினார்க‌ள்.

இத்த‌ன நாளு என்னைய‌ உக்கார‌வைச்சு சாப்பாடு போட்ட‌ ம‌க‌ராச‌னுங்க‌ கேட்டுட்டாங்க‌ளேனு, நானும் எப்ப‌டியாவ‌து சாம்பார் செய்ய‌னும்னு க‌ள‌த்துல‌ இற‌ங்கிட்டேன்.ஆனா எப்ப‌டி செய்யிற‌துனு தெரியல‌, சாம்பாருக்கு தேவையான மூல‌ப்பொருட்க‌ள் கூட‌ தெரியாது.

1999ல‌ கை தொலைபேசிக‌ள் எல்லாம் இந்த‌ அள‌வுக்கு பிர‌ப‌ல‌ம் கிடையாது. எங்க‌ வீட்ல‌ கேட்க‌லாம்னா, தொலைபேசி செலவே 100 ரூபாய்கு மேல‌ வ‌ரும்.
அப்போ எல்லாம் சென்னையில இருந்து தஞ்சைக்கு தொலை தூர தொடர்பு கட்டணத்தில்(STD) தான் பேசனும், இப்போ மாதிரி உள்ளூர் அழைப்பு கட்டணத்துல பேச முடியாது.

அப்போ தான் என் ந‌ண்ப‌ண் ஒருவ‌ரின் தாயார் சென்னையில் இருக்கும் அவ‌ர்க‌ளது அண்ண‌ண் வீட்டிற்கு வ‌ந்திருந்த‌து நினைவில் வ‌ந்த‌து. உட‌னே அவ‌ங்க‌ள‌ தொலைபேசியில‌ தொட‌ர்பு கொண்டு செய்முறையை வாங்கிட்டேன்.

ஒரு வ‌ழியா ந‌ம்பிக்கை வ‌ந்து, சாம்பார் செய்ய‌ ஆர‌ம்பித்த‌பின்தான் தெரிந்த‌து எங்க‌ள் வீட்டில் புளியே இல்லை ( நானே ஒரு புலினாலும், சாம்பாருக்கு புளி தான் வேணும் பாருங்க). இந்த‌ புலி வைக்கிற‌ சாம்பாருக்கு புளி இல்லாம‌ பேச்சேனு, ம‌றுப‌டியும் என் ந‌ண்ப‌ணின் தாயாரை தொட‌ர்பு கொண்டு கேட்ட‌ப்ப‌, அவ‌ங்க‌ அவ‌ச‌ர‌கால‌ ஆலோச‌னையா த‌க்காளிய‌ போட்டு செய்ய‌ சொன்னாங்க.

ஒரு வ‌ழியா எல்லாம் செஞ்சு முடிச்ச‌ப்புற‌ம் ஏதோ ர‌ச‌ம் மாதிரியும் இல்லாம‌, சாம்பார் மாதிரியும் இல்லாமா ஒரு திர‌வ‌ உண‌வு வ‌கை இருந்துச்சு. (இன்னைய‌ வ‌ரைக்கும் அதுக்குனு த‌னியா ஒரு பெய‌ர் வைக்க‌ல‌).

எல்லாம் த‌யார், சாப்பிட‌ வேண்டிய‌துதான் . அதுவ‌ரைக்கும் வெளியில‌ போய் சுத்திட்டு, சாப்பிட‌ வ‌ந்த‌ பீகார் ம‌க‌ராச‌னுங்க‌, ஆளுக்கு ஒரு கிண்ண‌த்துல‌ இந்த‌ திர‌வ‌ உண‌வ‌ எடுத்து, ஒரு தேக்க‌ர‌ண்டி ( ஸ்பூன்) வைச்சு குடிச்சுகிட்டே, அதையே ஊத்தி சாத‌மும் சாப்பிட்டு முடிச்சுட்டு, க‌டைசியா கேட்டாணுங்க‌ ஒரு கேள்வி.. " ஆமா, இன்னைக்கு உன்ன‌ சாம்பார் செய்ய‌ சொன்னா, நீ சூப் செஞ்சுருக்க‌, எப்ப‌ சாம்பார் வைக்க‌ பேற‌ ? "

பி.கு 1: நான் சாம்பார் வைத்த கதையை கேட்ட ஒரு தோழி, என்மேல் பாவப்பட்டு ஒரு நாள் வீட்டுக்கு வந்து சுவையான சாம்பார் செய்துட்டு போனாங்க. அவங்கள அனுப்பிட்டு வந்து சாதத்துக்கு அரிசி வைச்சுட்டு, அரை மணி நேரம் கழிச்சு பார்த்தா , அரிசி அரிசியாவே இருந்துச்சு. என்னடானு பார்த்தா சமையல் எரிவாயு தீர்ந்து போச்சு. நல்ல சாம்பார் இருந்தும், சாதம் இல்லாமல் போன சோகம் அது. அத்தோட எங்க சாம்பார் முயற்சி நின்னு போச்சு.

பி.கு 2: நல்ல சமையல் குறிப்பு வேணும்ணா நம்ம தூயா பபாவின் வலைப்பூவுல போய் பார்த்துக்கங்க. Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•6:43 PM
அபி அப்பா பதில்களை இரண்டு பாகங்களாகத் தந்திருக்கின்றார் ( பாகம் 1, பாகம் 2) மிக்க நன்றி அபி அப்பா.
ஆனால் பல இடங்களில் கலைஞருக்கே உரிய வார்த்தை விளையாட்டுக்களை காணமுடிகின்றது.

மீண்டும் மீண்டும் நான் மிட்டாய், உணவு உதாரணத்தை உபயோகிக்க வேண்டியிருக்கின்றது. மிட்டாய் கொடுப்பதை தவறு என்று கூறவில்லை.ஆனால் உணவு அளித்துவிட்டு அதை கொடுங்கள் என்றுதானே சொல்கின்றோம்.
இலவச தொலைகாட்சி வழங்குவதால் எந்த வளர்சிப் பணி பாதிக்கின்றது என்று கேட்டுள்ளீர்கள். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் தீட்டப்பட்ட ஒன்று?
10 ஆண்டுகளுக்கு மேலாக திட்டம் கிடப்பில் போடப்பட்டு இன்று 10 மடங்கு அதிகமான செலவில் நிறைவேற்றப்படுகின்றது. அதுவும் ஜப்பான் நாட்டு வங்கியின் நிதியுதவியுடன். இத்தனை நாட்கள் தள்ளிப்போனதற்கு காரணம் நிதியில்லை என்பது தான்.
குடிநீர் திட்டத்திற்கு தேவை 1334 கோடி ரூபாய், இதற்கு அந்நிய நாட்டு நிதியுதவி தேவை. ஆனால் இலவச தொலைகாட்சி திட்டத்திற்கு எந்த நாட்டு வங்கியின் நிதியுதவியும் பெறாமல் 2000 கோடி ரூபாய் செலவழிக்கின்றோம் , இது நியாயமா சொல்லுங்கள்?

இலவசம் என்று கூறி மக்களை வீணாக்க வேண்டாம் என்றுதானே எல்லோரும் வேண்டுகின்றோம். நம் வரிப் பணம் தானே அய்யா இந்த இலவச திட்டங்களில் வீணாய் போகின்றது?
இன்னும் சாலைகள் இல்லாத, மின்வசதியில்லாத,பள்ளியில்லாத கிராமங்கள் எத்தனை உள்ளன தமிழகத்தில்? மின்வசதியே இல்லாத கிராமங்களுக்கு கூட இலவச தொலைகாட்சி கொடுத்த செய்தியும் நாம் படித்தோமே. ஆக அடிப்படை தேவைகளையே பூர்த்தி செய்யாமல் ஏன் ஆடம்பர பொருளை இலவசமாக கொடுக்க வேண்டும்?

ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் 30 ரூபாய் தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை வரவேற்கின்றேன், இதனால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு 100 கோடி. ஆனால் சினிமா கேளிக்கை வரி ரத்தால் ஏற்படும் இழப்பு எவ்வளவு ?
வரிவிலக்கு அளிப்பதனால் பலனடைவது யார்? திரைத்துறையில் இருக்கும் சாதாரண தொழிலாளர்களா? கோடிகளில் புரளும் தயாரிப்பாளர்கள் தானே? இதனால் ஏற்பட்ட நன்மைகள் என்று ஏதாவது உண்டா? குறைந்த பட்சம் திரையரங்குகளிலாவது கட்டணம் குறைந்ததா? ஏன் உள்ளவர்களுக்கே கொடுக்க வேண்டும் ?
ஒரு நிறுவனத்தில் வேலை பார்பவர்கள் அதன் முதலாளிக்கு லாபம் ஈட்டி தருபவர்கள், ஊழியர்கள் அதிக நேரம் வேலை பார்க்க அதிக சம்பளம் கொடுக்கலாம். ஆனால் ஒரு அரசாங்கம் அப்படி செய்வதை எப்படி சரி என்று சொல்வது ? லாபம் வரும் என்றால் ஊக்கத் தொகை அளிக்கலாம். திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு எதற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்? அவர்களால் அரசுக்கு ஏதேனும் லாபம் வருகின்றதா என்ன?
கேளிக்கை வரி விதித்தால் திரைப்படத்தொழில் நசிந்துவிடுமா? இப்போது கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டிருப்பதால் மட்டும் சாமன்ய தொழிலாளர்கள் எல்லாம் மாடி வீட்டு மகாதேவர்களாகவா இருக்கின்றார்கள்? கேளிக்கை வரி ரத்து திரைப்படத்துறையில் வேலை பார்க்கும் சாமன்யர்கள் ஆகட்டும், மற்ற சாமன்யர்களாகட்டும், யாருக்கும் உபயோகம் இல்லாத ஒன்று என்பதே உண்மை.
//" துபாயில் கடந்த 2 மாதங்களாக விஷம் போல விலைவாசிகள் ஏறி வந்துவிட்டன. 2 மாதம் முன்னதாக ஒரு கிலோ அரிசி 27 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு 102 ரூபாய். நம்புங்கள் உண்மை. ஆனால் உலகத்திலேயே 2 ரூபாய்க்கு அரிசி தமிழகத்தில் மட்டுமே கிடைக்கின்றது. துபாய் காசு 20 காசுக்கு 1 கிலோ அரிசி. இது சாதனையா இல்லை வேதனையா? முன்னே போனா கடிக்கிறீங்க பின்னே போனா உதைக்கிறீங்கப்பா. இப்படி ஒரு கேள்வி கேட்டு உங்கள் பதிவை நகைச்சுவை என வகைப்படுத்தி இருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும்."//

துபாயில் அல்ல அய்யா, இங்கு சிங்கப்பூரிலும் அரிசி விலை 4 மடங்கு உயர்ந்துவிட்டது. அதற்கு காரணம் என்னவென்றால், இந்தியாவில் அதிகரித்துவரும் அரிசி விலை உயர்வைத்தடுக்க மத்திய அரசு, அரிசு ஏற்றுமதியை தடை செய்துவிட்டது.
வெளிநாடுகளில் அரிசி இருப்பு குறைந்துவிட்டதாலும், நெருக்கடியை பயன்படுத்தி லாபம் பார்க்கும் வியாபரிகளாலும் தான் இப்படி விலை உயர்ந்துவிட்டது.
2 ரூபாய் அரிசி திட்டத்தில் நான் கடிக்கவும் இல்லை, உதைக்கவும் இல்லை. போலி குடும்ப அட்டைகளை ஒழியுங்கள். மக்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்தி அவர்கள் எல்லோரையும் போல் உண்மையான விலையை கொடுத்து வாங்கும் நிலைக்கு உயர்த்துங்கள். இப்படி சலுகைகளையும், இலவசங்களையும் கொடுத்து சோம்பேறிகள் ஆக்காதீர்கள் என்றுதான் சொல்கின்றேன்.
இதில் நகைச்சுவை என்ன இருக்கின்றது என்று தெரியவில்லை.
//" கலைஞருக்கும் கடலோர காவல் படைக்கும் என்ன சம்மந்தம். கலைஞருக்கும் கடலுக்கும் உள்ள ஒரே தொடர்பு அவரை கடலில் தூக்கி போட்டால் கட்டுமரமாக மிதப்பார். நீங்கள் அதில் ஏறி பயணம் செய்யலாம் அவ்வளவே!! தமிழ் நாட்டின் புலிமலைப்பட்டியில் ஊர்காவல் படையில் வேலை பார்த்து கொண்டு ராவல்பிண்டி ரகீம்கானை பிடித்து வந்து லாக்கப்புல வச்சி எட்டு பக்க "தமில்" வசனத்தை பேசி பேசி அவன் டவுசரை உருவும் விசயகாந்து இல்லைப்பா கலைஞர்!! "//

அண்ணண் லக்கிலுக் அவர்களின் பதிவுக்கு நான் எழுதிய பதிலை நீங்கள் படிக்கவில்லை என்பது, கடற்படை குறித்து நீங்கள் எழுதியுள்ளதில் இருந்தே தெரிகின்றது. விசயகாந் செய்வது திரைபடத்தில், அதுபோல் ஒருவேளை அவரே முதல்வரானாலும் செய்ய முடியாது.

அதே போல் கலைஞர் அல்ல, எவரை தூக்கி கடலில் போட்டாலும் யாரும் கட்டுமரமாக முடியாது.
கலைஞரால் கட்டுமரமாக முடிந்தால் , விசயகாந்தும் ராவல்பிண்டி ரகீம்கானை கைது செய்யமுடியலாம். (இதனால் நான் விசயகாந்தின் ரசிகன் என்றோ, அவரது கட்சிக்காரன் என்றோ நினைத்து விடாதீர்கள்)
ஈழத்தமிழர்களை கொன்று குவிப்பதை தான் தடுக்க முடியவில்லை, குறைந்த பட்சம் நம் இந்திய தமிழர்களை சிங்களப்படைகள் கொல்வதைக் கூடவா பார்த்துக்கொண்டு சும்மாயிருப்பது?
மத்திய கூட்டணி ஆட்சியில் முக்கியத்துவம் வய்ந்த தலைவரும், பாதிக்கப்படும் தமிழர்களின் முதல்வரும் ஆன நம் கலைஞர் ஏன் இதற்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்ககூடாது?

போராடி பெற்ற அமைச்சகங்கள் மக்களுக்கு நன்மை செய்யத்தான் என்று சொன்னீர்கள் உண்மைதான், ஆனால் திறமையாக செயல்பட்ட தயாநிதிமாறனின் பதவியை குடும்ப சண்டையில் பறித்தபின் அதே துறைக்கு நியமிக்கப்பட்ட ராசா என்ன செய்கின்றார்? தயாநிதி அளவுக்கு திட்டங்கள் இல்லையே ? இப்போது மக்கள் நலன் எங்கு சென்றது ? மகனின் நலன் தானே முன் நின்றது?

மற்றபடி செயலலிதா வீட்டில் கோழி திருடிய கதையெல்லாம் உங்கள் வார்த்தைசித்து , அதற்கு நான் என்ன சொல்வது, படித்து ரசிக்கின்றேன்.
//"திமுகவில் இருக்கும் 2 கோடி உருப்பினர்களின் வீட்டு திருமணத்துக்கும், துக்க நிகழ்வுகளுக்கும் கலைஞர் போய் வந்தது போல தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் மட்டுமல்ல அகில உலகத்திலும் ஏதாவது ஒரு தலைவனை காட்டமுடியுமா தங்களால்??? அவர் நடத்தி வைத்த திருமணங்கள் எத்தனை? போய் வந்த துக்க நிகழ்ச்சிகள் எத்தனை? இண்டர்காம் தலைவரா அவர். கொஞ்சமாவது மனசாட்சியோடு கேள்வி கேட்க வேண்டாமா? தமிழகமே அவருக்கு உடன்பிறப்பு தான்! சந்தேகமே இல்லை!"//
ஆகா என்ன அருமையாக என்கேள்வியை திசை திருப்பி விட்டீர்கள்? கலைஞரை நான் என்ன எல்லா தொண்டன் வீட்டு நல்ல, கெட்ட காரியங்களில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றா கேட்டேன்? பதவியை ஏன் குடும்பத்தினருக்கே தருகின்றார் என்று தானே கேட்டேன்?
தகுதி வாய்ந்த எத்தனையோ கட்சிக்காரர்கள் இருந்த போதும் ஏன் கனிமொழிக்கும், கயல்விழிக்கும் வாய்பளிக்க வேண்டும்? இதற்கு பதிலையே காணோம்?
அரசு கேபிள் கழகத்தை செயலலிதா ஆரம்பிக்க முயன்ற போது அதை தடுக்க மாநில ஆளுநரிடம் புகார் கொடுத்த அதே கலைஞர் இன்று ஏன் அரசு கேபிள் கழகம் ஆரம்பிப்பதில் இத்தனை தீவிரம் காட்ட வேண்டும் ? அரசு கேபிள் கழகம் குறித்த கேள்விக்கு உங்களிடம் இருந்து பதில் ஒன்றும் இல்லையே ?

சேது சமுத்திர திட்டம் மிக அருமையானத் திட்டம்தான் அதை நான் குறை சொல்லவில்லை.
ஏழைகளுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டம் மிக நல்லத் திட்டம். இது தான் தூண்டிலை கையில் கொடுப்பது. அவனுக்கு தேவையான் மீனை அவனே பிடித்துக்கொள்வான் அல்லவா? அதை நான் வரவேற்கின்றேன்.

என் கேள்விகள் சாதாரணமாக எல்லோர் மனதிலும் தோன்றும் சந்தேகங்கள். எல்லாத் திட்டங்களையும் எதிர்பதோ, அல்லது விதண்டாவாதம் செய்வதோ என் நோக்கம் அல்ல. நானும் ஒரு திமுக அபிமான குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் , உரிமையுடன் தான் இந்த கேள்விகளை கேட்கின்றேன். Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•8:23 PM
கலைஞருக்கு நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் சார்பாக பதிலளித்த லக்கி லுக் அண்ணண் அவர்களுக்கு எனது நன்றிகள்.

இது அவருடைய பதிலுக்கு பதில் பதிவு. ஆனால் இதிலும் சில கேள்விகள் இருக்கலாம். ஆனால் லக்கிலுக் அண்ணா, இதை விதண்டாவாதமாகவோ அல்லது எதிர்கட்சிகளின் பாணியிலோ கேட்கவில்லை. இந்த கேள்விகள் பெரும்பான்மையானவர்களின் மனதில் இருக்கின்றது. ஒரு ஆரோக்கியமான விவாதமாக இதை பாருங்கள். விவாதம் தானே ஒழிய விதண்டாவாதம் அல்ல.

//"தொலைக்காட்சி போன்றவை ஆடம்பரப் பொருட்களாக பார்க்கப்பட்டது சென்ற நூற்றாண்டில், இப்போது அவை அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. முன்பெல்லாம் ஏழைகளுக்கு இலவச பல்பொடி, இலவச செருப்பு வழங்கியது போல இப்போது இலவச டிவி வழங்கப் போகிறோம் என்று தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்தோம். இத்திட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் நாம் ஆட்சிக்கே வந்திருக்க முடியாது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. ஏழைகள் இருக்கும் வரை இலவசத் திட்டங்கள் அவசியமே."//

தொலைகாட்சி என்ப‌து ஒரு ஆட‌ம்ப‌ர‌பொருளாக‌ அல்லாம‌ல் அத்தியாவ‌சிய‌ பொருளாக‌ மாறிவிட்ட‌து என்கின்றீர்க‌ள். ஆனால் நான் என் கேள்வியில் குறிபிட்டிருந்த‌ப‌டி, ப‌சித்த‌வ‌னுக்கு தேவை மிட்டாயா, உணவா?

ம‌க்க‌ள் தீர்ப்பே ம‌கேச‌ன் தீர்ப்பு என்றால் இப்ப‌டி கூட்ட‌ணிக‌ளின் ப‌ல‌த்தில் இல்லாம‌ல் த‌னித்தே ஆட்சியை பிடிக்கும் அள‌வு த‌னிப்பெரும்பான்மை பெற்றிருக்க‌லாமே? அப்போ இந்த இலவசத் திட்டங்களை பிடிக்காதவர்களும் இருக்கின்றார்கள் என்றுதானே அர்த்தம் ?
ஏழைக‌ள் இருக்கும் வ‌ரை இல‌வ‌ச‌த்திட்ட‌ங்க‌ள் அவ‌சிய‌ம் என்கின்றீர்க‌ள். ஆனால் ஏழைக‌ள் முன்னேற்ற‌த்திற்கு என்று என்ன‌ திட்ட‌ம் இருக்கின்ற‌து? ஏழைக‌ள் ஏழைக‌ளாக‌வே இருந்து கொண்டிருந்தால், எத்த‌னை கால‌ம்தான் இல‌வ‌ச‌ங்க‌ளாக‌வே கொடுத்துக்கொண்டிருப்ப‌து?
எத்த‌னைகால‌ம் தான் மீனை கொடுப்ப‌து? தூண்டிலை கொடுங்க‌ள் என்றுதானே சொல்கின்றோம்.

//"அய்யா நேற்று கூட ஒரு 300 கோடி ரூபாய் அளவுக்கு திருநெல்வேலியில் டயர் தொழிற்சாலைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கலைஞரின் முந்தைய 96 ஆட்சியை விட இந்த ஆட்சியில் கல்வித்துறையில் புரட்சி நிகழ்ந்துவருகிறது. அன்றாடம் செய்தித்தாளை வாசிக்கவும். பொங்கிவரும் புனலென புதுப்புது திட்டங்கள் கலைஞரின் ஆட்சியில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தீட்டப்பட்டு, செயலாக்கப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டரை ஆண்டுகளில் இந்த ஆட்சி முழுமை பெறும்போதுதான் இதுவரை வந்த கலைஞரின் ஆட்சிகளிலேயே இது தலைசிறந்த ஆட்சிக்காலம் என்பதை உணர்வீர்கள்."//

கல்வித்துறையில் ஏற்பட்டிருக்கும் புரட்சியை நானும் ஒத்துக்கொள்கின்றேன். கல்வித்துறையை இரண்டாக பிரித்து இரு அமைச்சர்களை நியமித்தது வரவேற்கதக்கது. குறிப்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களின் பணி மிகக்குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. அதை நான் மறுக்கவில்லை. குறிப்பாக‌ ச‌மீப‌த்தில் அவ‌ர‌து தொகுதியில் அவ‌ர் ஏற்பாடு செய்த வேலை வாய்ப்பு முகாம் மிக‌ அதிக‌ள‌வில் ப‌ல‌ருக்கு வேலை வாங்கிகொடுத்தது . அதை எல்லாம் நான் ம‌றுக்க‌வில்லை.

//"துணைநகரத் திட்டம் வேறுவழியில் கண்டிப்பாக நிறைவேறும். அனேகமாக திருப்பெரும்புதூருக்கு அருகில் துணைநகரம் அமையலாம். அதுபோலவே விமானநிலைய விரிவாக்கத்துக்கும் மாநில அரசு கண்டிப்பாக நிலம் ஒதுக்கித்தரும். புதியதாக உருவாகப்போகும் துணைநகரத்தை ஒட்டி அந்த விரிவாக்கம் இருக்கும்."//
சீக்கிரம் நடக்கும் என்று சொல்கின்றீர்கள், நம்புவோம். ஆனால் இது போன்ற நல்ல திட்டங்களில் ஆர்வம் காட்டாமல் ஏன் அரசு கேபிள் கழகம் மற்றும் கலைஞர் டிவியிலேயே கவனத்தைக் காட்ட வேண்டும்?இந்த திட்டங்கள் எல்லாம் கிணற்றில் போட்ட கல்லாக அல்லவா இருக்கின்றன?

//"சினிமா என்ற தொழில் கிட்டத்தட்ட சிதையும் நிலையில் உள்ளது. சினிமாவில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கானோரை சினிமாவில் இருக்கும் பெரிய மனிதர்கள் காப்பார்களோ இல்லையோ, அவர்களுக்காக கலைஞர் எப்போதும் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவர்களது உரிமைகளுக்கு குரல் கொடுப்பார். சினிமாத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதியே அவர்களுக்க் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. கேளிக்கைவரி சலுகை வழங்கினாலும் கூட சினிமாத்துறை மூலமாக மற்ற வகைகளில் அரசுக்கு கணிசமான வருவாய் வந்துகொண்டு தானிருக்கிறது."//
சினிமா துறையிலும் அடித்தட்டு மக்கள் இருக்கின்றார்கள். ஆனால் உண்மையாக சொல்லுங்கள், கேளிக்கை வரிச்சலுகைகளால் அவர்கள் தான் பலனடைகின்றார்களா? பலனடைவது தயாரிப்பாளர், விநியோகிப்பவர், மற்றும் திரையர‌ங்கு உரிமையாளர்கள் தானே? எல்லாத் தயாரிப்பாளரும் நேர்மையாய் எல்லா கணக்கு வழக்கையும் தயாரித்து வரி கட்டி கொண்டா உள்ளார்கள்? அங்கு கறுப்பு பணம் அதிகம் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? இப்படி கறுப்பு பணம் மூலம் ஏற்கனவே வரி ஏய்பவர்களுக்கு ஏன் மேலும் வரிச்சலுகை ? மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரியை எடுத்துக்கொண்டுதானே சம்பளமே கிடைக்கின்றது. இவர்கள் நினைத்தால் கூட வரி ஏய்ப்பு செய்ய முடியாது. ஆனால் திரைப்படத்துறை அப்படியா?

//"மகத்தான திட்டம் என்று சொல்கிறீர்கள். ஒரு மகத்தான திட்டம் எப்படி சோம்பேறிகளையும், கடத்தல்காரர்களையும் உருவாக்க முடியும்? 2 ரூபாய் அரிசித்திட்டம் மிகச்சிறப்பாகவே நடக்கிறது. இதுவரை தினமலர் கூட சொல்லாத ஒரு புகாரை நீங்கள் கற்பனையாக சொல்லுவதாகவே நினைக்க வேண்டியிருக்கிறது."//
ம‌க‌த்தான‌ திட்ட‌ம்தான் ஆனால் அது த‌வ‌றாக‌ உப‌யோகிக்க‌ப்ப‌டுவ‌துதான் பிர‌ச்ச‌னையே. ஒரு மாத‌த்திற்கு 30கிலோ அரிசி 2ரூபாய் விலையில் வெறும் 60 ரூபாயில் வாங்கிவிட‌லாம்.இது ஒரு கூலி தொழிலாளியின் ஒரு நாள் ச‌ம்ப‌ள‌த்தை விட‌ குறைவு. ஆக‌ ஒரு மாத‌ தேவையை ச‌மாளிக்க‌ 10 நாட்க‌ள் வேலை பார்த்தால் போதும் என்று தொழிலாள‌ர்க‌ள் நினைக்கின்றார்க‌ள். இது எங்க‌ள் கிராம‌த்தில் கூட‌ ந‌ட‌க்கின்ற‌து. வ‌ய‌ல்க‌ளில் விவ‌சாய‌ வேலைக்கு வ‌ரும் கூலித்தொழிலாள‌ர்க‌ள், ஒழுங்காக‌ வ‌ருவ‌தில்லை. ஒரு சில‌ர் இதை ந‌ன்றாக‌ உப‌யோகித்து முன்னேறுகின்ற‌ன‌ர். ஆனால் பெரும்பான்மையின‌ர் இத‌னால் சோம்பேறிக‌ளாகின்ற‌ன‌ர். ச‌ரி, க‌ட‌த்த‌ல் எப்ப‌டி ந‌ட‌க்கின்ற‌து ? அடிக்க‌டி நியாய‌ விலைக்க‌டை அரிசி க‌ட‌த்தப்ப‌டுவ‌துகுறித்து நீங்க‌ள் செய்திதாள்க‌ளில் ப‌டித்திருப்பீர்க‌ள். த‌மிழ்நாட்டில் மொத்த‌ம் 60 ல‌ட்ச‌ம் போலி குடும்ப‌ அட்டைக‌ள் இருப்ப‌தாக‌ உண‌வுத்துறை அமைச்ச‌ர் திரு.வேலு ச‌ட்ட‌ச‌பையில் கூறியுள்ளார். ஒரு அட்டைக்கு ஒரு மாத‌த்திற்கு 30கிலோ வீத‌ம் 60 ல‌ட்ச‌ம் அட்டைக‌ளுக்கு எவ்வ‌ள‌வு அரிசி இந்த‌ குறைந்த‌ விலையில் செல்கின்ற‌து ? அது எல்லாம் க‌ட‌த்த‌ல்கார‌ர்க‌ளின் கைக‌ளுக்குத்தானே செல்கின்ற‌து? போலி குடும்ப‌ அட்டைக‌ளை க‌ளைய‌ இன்னும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வில்லையே ? போலி அட்டைக‌ள் அனைத்தும் இந்த‌ ஆட்சியில் கொடுக்க‌ப்ப‌ட்ட‌வை என‌ நான் சொல்ல‌வில்லை. ஆனால் க‌ளைய‌ தீவிர‌மான‌ ந‌ட‌வ‌டிக்கை தேவை என்றுதான் சொல்கின்றேன்.

//"வேறு என்ன செய்யமுடியும்? கலைஞரா துப்பாக்கி எடுத்துக்கொண்டு போய் அவர்களை காக்க முடியும்? இந்திய மீனவர்கள் கொல்லப்படும் போதெல்லாம் கலைஞர் அதற்கான வருத்தங்களை தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார், நடவடிக்கை கோருகிறார். கடற்பாதுகாப்பு மத்திய அரசின் கையில்தானே இருக்கிறது?"//
க‌லைஞ‌ரை துப்பாக்கி தூக்க சொல்ல‌வில்லை. ஒரு முத‌ல‌மைச்ச‌ர், அதுவும் ம‌த்தியில் ஆளும் கூட்ட‌ணியில் மிக‌ செல்வாக்குள்ள‌ த‌லைவ‌ர், வெறும் வ‌ருத்த‌ம் தெரிவிப்ப‌தும், க‌டித‌ம் எழுதுவ‌தும் ம‌ட்டும்போதுமா? ஒரு நிர‌ந்த‌ர‌ தீர்வுகாண‌ வலியுறுத்த‌ வேண்டாமா? கூறிய‌ப‌டி இலாக்கா ஒதுக்காமையால் ப‌த‌வியேற்ற‌ திமுக‌ அமைச்ச‌ர்க‌ள் த‌ங்க‌ள் பொறுப்புக‌ளை ஏற்காமால் போராட‌வில்லை? அதுபோல் த‌மிழ‌ர்க‌ளின் உயிர்காக்க‌ ஒரு அழுத்த‌மான‌ போராட்ட‌ம் வேண்டாமா? இவ‌ர் அழுத்த‌ம் கொடுத்தால் ம‌த்திய‌ அர‌சு கேட்காம‌லா போகும்?

//" கலைஞரின் வாழ்வே போராட்டங்களால் நிறைந்தது. இதுகூட தெரியாமல் நீங்கள் எப்படித்தான் தமிழனாக இருக்கிறீர்களோ தெரியவில்லை. 1938 இந்தியெதிர்ப்பு போராட்டத்தில் தொடங்கி கல்லக்குடி போராட்டம், 1965 இந்தியெதிர்ப்பு போராட்டம், 1976 மிசா சட்டத்தை எதிர்த்துப் போராட்டம், 1980களில் ஈழத்தமிழருக்கான போராட்டம், எப்போதுமே இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் என்று போராளியாகவே கலைஞர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்."//
க‌லைஞ‌ரின் போராட்ட‌ங்க‌ள் தெரியாத‌ த‌மிழ‌ன் இல்லை நான். அவ‌ர் ஏற்க‌ன‌வே பல‌ போராட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்திய‌வ‌ர் என்ப‌தால் தான் த‌ற்போதும் அவ‌ரிட‌ம் இருந்து எதிர்பார்கின்றோம். 1980 க‌ளில் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ போராடினார். ஆனால் இன்ற‌ள‌வும் ஈழ‌ப்பிர‌ச்ச‌னை தீராம‌ல் தானே இருக்கின்ற‌து? இப்போது ஏன் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வ‌ளிக்க‌வில்லை? ச‌ட்ட‌ம‌ன்ற‌த்தில் தீர்மான‌மிய‌ற்றிய‌து ம‌ட்டும் போதாதே, அந்த‌ தீர்மானாத்தால் எந்த‌ உப‌யோக‌மும் இல்லை என்பது உங்க‌ளுக்கே ந‌ன்றாக‌ தெரியும். அது ம‌ட்டும் போதும் என்று நினைக்கின்றீர்க‌ளா?

//"இந்த கேள்வி மூலமாக என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்? கள்ளச்சாராயத்தை சட்டப்பூர்வமாக அனுமதிக்கச் சொல்கிறீர்களா? பூரணமதுவிலக்கை கடுமையாக வற்புறுத்திய காந்தி பிறந்த குஜராத்தில் கூட கள்ளச்சாராயச் சாவுகள் நடந்து வருகிறது."//

பூர‌ண‌ ம‌துவில‌க்கு வேண்டும் என்று சொல்ல‌வில்லை. க‌ள்ள‌ சாராய‌த்தை ஒழியுங்க‌ள் என்றுதான் சொல்கின்றேன். டாஸ்மாக்கில் இந்தியாவில் த‌யாரிக்கும் அய‌ல்நாட்டு ம‌துவ‌கைக‌ளை (IMFL) விற்கும் போது ஏன் க‌ள் இற‌க்க‌ அனும‌திக்க‌ கூடாது ? குடிப்ப‌வ‌ர்க‌ள் குடிக்க‌த்தான் செய்வார்க‌ள், அவ‌ர் அவ‌ர்களாகப் பார்த்து திருந்தினால்தான் உண்டு. ம‌ற்ற‌ ம‌துவ‌கைக‌ளோடு ஒப்பிடும்போது க‌ள் ஒன்றும் கொடிய‌து அல்ல‌வே? அதை ஏன் அனும‌திக்க‌ கூடாது?

//"தமிழை செம்மொழியாக ஆக்காமல் இருந்திருந்தால் எல்லாத் தமிழன் வீட்டிலும் அடுப்பு எரிந்துவிட்டிருக்குமா? - சும்மா ஏதாவது வார்த்தைஜாலத்தோடு கேட்கவேண்டுமே என்று கேட்காமல் கொஞ்சமாவது சிந்தித்து கேள்விகள் கேட்கவும்."//
நீங்க‌ள் தான் என‌து கேள்வியை புரிந்து கொள்ள‌வில்லை. த‌மிழை செம்மொழியாக்கிய‌து ம‌ட்டும் போதாது, த‌மிழ‌னின் வாழ்வும் செம்மையாக‌ வ‌ழிசெய்ய‌ வேண்டும் என்று தான் கேட்டுள்ளேன். இதில் வார்த்தை ஜால‌ம் ஏதுமில்லை. க‌லைஞ‌ரிட‌மே வார்த்தை ஜால‌ம் காட்டும் அள‌வுக்கு நான் பெரிய‌வ‌ன் இல்லை.

//" உங்களுக்கு அப்படி ஒரு ஐயம் ஏற்பட்டதற்காக வருந்துகிறோம். திமுகவில் கலைஞர் குடும்பத்தை தவிர வேறு எவருமே இல்லையா? தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் இரண்டு கோடி திமுகவினர் இருக்கிறார்கள். அந்த இரண்டு கோடி பேரும் கலைஞர் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்கிறீர்களா? "//
திமுக‌ வில் 2 கேடிக்கும் மேல் உறுப்பின‌ர்க‌ள் இருக்கின்றார்க‌ள்,ஆனால் க‌ட்சியில் எந்த‌ பொறுப்பிலுமே இதுவ‌ரை இருந்திராத‌, க‌ட்சி ப‌ணி எதுவும் செய்யாத‌வ‌ர்க‌ளுக்கு எல்லாம் எப்ப‌டி ப‌த‌வி கிடைக்கின்ற‌து?
ஸ்டாலின் த‌விர‌ க‌லைஞ‌ர் குடும்ப‌த்தில் யார் தீவிர‌ க‌ட்சிப்ப‌ணியாற்றிய‌து? முர‌சொலி மாற‌னின் ம‌க‌ன் என்ப‌தை த‌விர‌ வேறு எந்த‌ த‌குதியும் இல்லாத‌ போதும் த‌யாநிதி மாற‌ன் பார‌ளும‌ன்ற‌ உறுப்பின‌ராகி, ம‌த்தியில் கேபின‌ட் அமைச்ச‌ராக‌வும் முடிந்த‌து. வேறு யாருக்காவ‌து இப்ப‌டி வாய்ப்பு கிடைக்குமா?
திற‌மையாக‌ ப‌ணியாற்றிய‌ போதும் சொந்த‌ குடும்ப‌ மோத‌லால் அவ‌ர‌து ப‌தவியும் ப‌றிபோய்விட்ட‌து.
இன்று க‌னிமொழிக்கு வாய்ப‌ளிக்க‌ப்ப‌ட்ட‌து எப்ப‌டி? 2 கோடி பேருக்கு மேல் உறுப்பின‌ர்க‌ளை கொண்ட‌ திமுக‌ வில் க‌னிமொழியை விட‌ அனுப‌வ‌ம் வாய்ந்த‌ க‌ட்சி ப‌ணியாற்றிய‌வ‌ர்க‌ள் இல்லையா என்ன‌?
எத்த‌னையோ த‌குதிவாய்ந்த‌, ப‌ல‌ மேடைக‌ளில் பேசிய‌ அனுப‌வமிக்க‌ க‌ழ‌க‌ பேச்சாள‌ர்க‌ளுக்கு கிடைக்காத‌ வாய்ப்பு க‌ய‌ல்விழிக்கு எப்ப‌டி கிடைத்த‌து? இதையெல்லாம் பார்க்கும் எவ‌ருக்கும் ஐய‌ம் ஏற்ப‌டத்தானே செய்யும்?

//"விதண்டாவாதமாக கேட்டாலும் பதில் கொடுத்திருக்கிறோம். "//
உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி. இது விதண்டாவாதம் இல்லை, விவாதம் தான் என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லிக்கொள்கின்றேன். Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•1:59 PM
அபி அப்பா எழுதிய பதிவுக்கு நான் அளித்த பின்னூட்டம்தான் இந்த பதிவு.

அபி அப்பா, நானும் கலைஞரின் ரசிகன் தான் ஆனால் இந்த ஆட்சியில் கலைஞரின் செயல்பாடுகள் எனக்கு பிடிக்கவில்லை.எனவே கலைஞருக்கு சில கேள்விகள் உங்கள் மூலமாக.
பதில் கலைஞர் சொன்னாலும் சரி அல்லது நீங்களே அவர் சார்பாக சொன்னாலும் சரி, கருத்து சரியாக இருப்பின் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.

இலவச டிவி என்பது, பசியால் அழும் குழந்தைக்கு இனிப்பு மிட்டாய் கொடுத்து சமாளிப்பது போன்றது. மிட்டாய் பசிக்கு உணவாகாது அல்லவா, அழும் குழந்தை மிட்டாயை பார்த்து சற்றே அழுகையை நிறுத்தி சிரிக்கலாம், ஆனால் அது நிரந்தரம் அல்ல. பசி தீரும் வரை அது அழத்தானே செய்யும். இன்னும் எத்தனை காலம் தான் இப்படி இலவசங்களின் பெயரால் மக்களை ஏமாற்ற முடியும்? 1996 - 2001 ஆட்சியில் செய்த அளவுக்கு கூட இந்த ஆட்சியில் நலத்திட்டங்கள் இல்லையே?

பா.ம.க வின் நிர்பந்தத்தால் தானே துணை நகரத்திட்டம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் போன்றவற்றை அறிவித்துவிட்டு நிறுத்தினீர்கள்? அதை இப்போது தீவிரமாக செயல்படுத்தலாமே? சென்னையில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்த பல வருடங்களுக்கு பிறகு பன்னாட்டு விமான நிலையங்கள் அமையப் பெற்ற பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் இன்று புதிய நவீன விமான நிலையங்கள் அமைந்துவிட்டன. ஆனால் சென்னை இன்னும் தூங்கி வழிகின்றது.

இலவச தொலைகாட்சியிலும், அரசு கேபிள் கழகத்திலும் காட்டும் ஆர்வம் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திலும், முல்லைப் பெரியார் அணை, பாலாறு, காவிரி பிரச்சனைகளிலும் ஏன் இல்லை ?
த‌மிழ்நாட்டில் த‌மிழில் தான் திரைப்ப‌ட‌ங்க‌ளுக்கு பெய‌ர் வைக்க‌ வேண்டும் என்று திரை குடும்ப‌த்தின் மூத்த‌ பிள்ளையாகிய‌ நீங்க‌ள் சொன்னால் உங்க‌ள் சினிமாக்கார‌ர்க‌ள் கேட்க‌ மாட்டார்களா ? அத‌ற்காக‌ த‌மிழில் பெய‌ர் வைத்தால் வ‌ரிவில‌க்கு என்று அர‌சாங்க‌த்திற்கு வ‌ரும் வ‌ருமான‌த்தை விட்டுக் கொடுக்க‌த்தான் வேண்டுமா?

க‌ட‌லூர் மாநாட்டில் பெண்க‌ளின் ந‌ல‌னுக்காக‌ எரிவாயு விலையில் 30 ரூபாயை அர‌சே ஏற்கும், அத‌னால் அர‌சுக்கு 100 கோடி ந‌ட்ட‌ம் என்று சொன்னீர்க‌ளே? கேளிக்கை வ‌ரி ர‌த்தால் அர‌சுக்கு ஏற்ப‌டும் வ‌ரி இழ‌ப்பு எவ்வ‌ள‌வு ? அதை ஒரு முறை கூட‌ நீங்க‌ள் சொன்ன‌தில்லையே ஏன்? கேளிக்கை வரியை வசூலித்தால் மொத்த விலையுவர்வான 50 ரூபாயையுமே ( ஒரு சிலிண்டருக்கு ) அரசே ஏற்கலாமே?

நீங்க‌ள் கேளிக்கை வ‌ரியை ர‌த்து செய்த‌தால் திரைய‌ர‌ங்குக‌ளில் க‌ட்ட‌ண‌ம் குறைந்துள்ள‌தா? அப்ப‌டியே குறைந்தாலும் இதுவும் ப‌சியால் அழும் பிள்ளைக்கு அளிக்க‌ப்ப‌டும் இன்னொரு மிட்டாய் தானே ஒழிய‌ , ப‌சி தீர்க்கும் உண‌வில்லை.

ஒருவ‌ன் மீனை கேட்டால் அவ‌னுக்கு தூண்டிலை கொடு என்று ஒரு ப‌ழ‌மொழி உண்டு. ஆனால் நீங்க‌ள் தூண்டிலை கேட்ப‌வ‌னுக்கு கூட‌ செத்துப்போன‌ மீனையோ அல்ல‌து மிட்டாயையோ கொடுத்து , உழைக்க‌ நினைப்ப‌வ‌னையும் சோம்பேறி ஆக்குகின்றீர்க‌ள்.
2 ரூபாய்கு ஒரு கிலோ அரிசி எனும் ஒரு ம‌க‌த்தான‌ திட்ட‌த்தின் மூல‌ம் ஒரு புற‌ம் சோம்பேறிக‌ளையும், ம‌றுபுற‌ம் அரிசி க‌ட‌த்த‌ல்கார‌ர்க‌ளையும் உருவாக்கிவிட்டீர்க‌ள்.

ந‌ம் பார‌த‌ நாட்டோடு மூன்று முறை நேரடியாக‌ போரிட்ட‌ இன்றளவும் மறைமுகமாக போரிடும் எதிரியாக‌ ந‌ட‌ந்து கொள்கின்ற‌ பாகிஸ்தான் நாட்டின் க‌ட‌ற்ப‌டை கூட‌ எல்லை தாண்டும் ந‌ம் நாட்டு மீன‌வ‌ர்க‌ளை சுட்டுக் கொன்ற‌தில்லை.

ஆனால் பார‌த‌த்தின் த‌ய‌வுட‌ன் இருப்பவர்களும், நண்பர்களாக தம்மை காட்டிக்கொண்டு ஆயுதமும் இன்ன பல உதவிகளும் பெற்றுக்கொண்டு, ந‌ம் தொப்புள் கொடி உற‌வுக‌ளான‌ ஈழத் த‌மிழ‌ர்க‌ளை கொன்று குவிக்கும் இல‌ங்கை நாட்டின் க‌ட‌ற்ப‌டை ந‌ம் மீன‌வ‌ர்க‌ளை சுட்டுக் கொல்லும் போது, உட‌னே பிர‌த‌ம‌ருக்கு ஒரு க‌டித‌ம் ம‌ட்டும் எழுதுவீர்க‌ள். ( ஒரு வேளை நீங்க‌ள் எழுதும் எந்த‌ க‌டித‌மும் பிர‌த‌மருக்கு போய் சேர‌வில்லையோ ? அஞ்ச‌ல் துறை அமைச்ச‌ர் எப்போதும் உங்க‌ளுக்கு தோள் கொடுத்து கொண்டே இருப்ப‌தால் அவ‌ரை கேட்டாலும் தெரியாது).

2004ல் மத்திய அமைச்சரவையில் திமுகா விற்கு கேட்ட‌ இலாக்காக்க‌ளை ஒதுக்க‌வில்லை என‌ போராடி பெற்ற‌ நீங்க‌ள், அது போன்ற‌ ஒரு போராட்ட‌த்தை ம‌க்க‌ளுக்காக‌ ஒரு போதும் செய்த‌தில்லையே ஏன்?

த‌மிழ‌க‌ மீன‌வ‌ர்க‌ள் சுட‌ப்ப‌டும் போது ம‌த்திய‌ அர‌சின் க‌வ‌ன‌த்தை ஈர்க்க‌ இப்ப‌டி ஒரு போராட்ட‌ம் ந‌ட‌த்தி இருக்க‌லாம், அல்லது நெல்லை விட‌ உற்ப‌த்தி செல‌வுகுறைவான‌ கோதுமைக்கு ஆதார‌ விலை குவின்டாலுக்கு 1000 ரூபாய் என்றும் நெல்லுக்கு அதை விட‌ குறைவாக‌வும் நிர்ண‌யித்த‌ போது போராடியிருக்க‌லாம், ஆனால் நீங்க‌ள் அதை செய்ய‌வில்லையே?

பூரண மதுவிலக்கு வேண்டும் என்று கேட்டால் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாமல் போய்விடும் என்பதால் பூரண மதுவிலக்கு ஏற்படுத்த முடியாது என்றீர்கள். ஆனால் இப்போது மட்டும் கள்ள சாராயம் முற்றிலுமாக ஒழிந்துவிட்டதா என்ன? அவ்வப்போது கள்ளச் சாராய சாவுகளும் நடந்துகொண்டுதானே இருக்கின்றன ?

த‌மிழை செம்மொழி என்று சொன்னால் ம‌ட்டும் எல்லாத் த‌மிழ‌ன் வீட்டிலும் அடுப்பு எரிந்துவிடுமா? தமிழும் வளரவேண்டும் தமிழனும் வளரவேண்டும் அல்லவா?

ஒட்டுமொத்த தமிழர்களையும் உடன்பிறப்பே என்று அழைக்கும் நீங்கள் மொத்த தமிழகத்தையும் உங்கள் குடும்பமாக நினைத்தீர்கள் என்று அக மகிழ்ந்த எங்களுக்கு, இன்று உங்கள் குடும்பம் மட்டும்தான் ஒட்டுமொத்த தமிழகம் என நினைக்கின்றீர்களோ என்ற ஐயம் ஏற்பட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. நடப்பவை எல்லாம் அதை உறுதிபடுத்தும் விதமாகத்தான் இருக்கின்றன.

இதற்கெல்லாம் பதில் கிடைக்குமா? Udanz
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•1:05 AM
ஒரு சமுதாயம் முன்னேற மிகச் சிறந்த வழி, அது முழு கல்வியறிவு பெறுவதுதான்.
தீயாலோ, நீராலோ அழிக்க முடியாததும், எந்த கள்வராலும் கவரமுடியாததும், கொடுக்க கொடுக்க குறையாமல் அதிகரிப்பதும் கல்வியறிவு ஒன்றுதான்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் கல்வி எல்லோர்க்கும் எட்டும் நிலையில் இல்லை. தனியார் கல்வி நிலையங்களில் கல்வி என்பது ஏழைகளுக்கு எட்டாத இடத்தில்தான் இன்னும் இருக்கின்றது. அரசு பள்ளிகளில் கல்வியின் தரம் தற்போது முன்னேறிக்கொண்டிருந்தாலும் இன்னும் பல இடங்களில் தரம் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இல்லை.

ஏழைகளுக்கு எட்டாக்கனியாகிவிட்ட கல்வியை அவர்களுக்கு தரும் ஒரு சில நல்ல உள்ளங்களும் உள்ளார்கள்.

வ‌ருடா வ‌ருட‌ம் விகடன் குழுமத்தினர் பல ஏழை மாணவர்களின் நிலையை குறிப்பிட்டு அவர்களுக்கு கல்வி உதவி பெற்றுத் தந்து வழிகாட்டிகொண்டுள்ளார்கள்.
புதுகோட்டை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், மத்திய இணை அமைச்சருமான திரு.ரகுபதி அவர்கள், விகடனின் வேண்டுகோள்களை ஏற்று ப‌ல‌ ஏழை மாண‌வ‌ர்க‌ளுக்கு அவ‌ர‌து க‌ல்லூரியிலேயே த‌ங்கும் வ‌ச‌தியுட‌ன் இல‌வ‌ச‌ க‌ல்வி சேவை அளித்து வ‌ருகின்றார்.

இந்த‌ ஆண்டு ப‌னிரென்டாம் வ‌குப்பு தேர்வு முடிவுக‌ள் வ‌ந்த‌வுட‌ன் க‌ல்வி உத‌விகேட்டு விக‌ட‌னுக்கு க‌டித‌ம் எழுதிய‌ மாண‌வ‌ர்க‌ளுக்காக‌, விக‌ட‌ன் சார்பில் கும்ப‌கோண‌ம் அருகில் கோவிலாச்சேரி என்னும் ஊரில் உள்ள‌ அன்னை க‌ல்லூரியை அணுக, முத‌லில் 20 பேருக்கு ம‌ட்டும் இல‌வ‌ச‌ ப‌டிப்பு வ‌ழ‌ங்குவ‌தாக‌ கூறிய‌ நிர்வாக‌ம், உத‌வி கேட்ட‌ மாண‌வ‌ர்க‌ளை பார்த்த‌பின் எல்லோருக்குமே (116 பேர்) இல‌வ‌ச‌மாக‌ க‌ல்வியும், அவ‌ர்க‌ள‌து ஊரிலிருந்து க‌ல்லூரி வ‌ந்து போக‌ இல‌வ‌ச‌ பேருந்து வ‌ச‌தியும் அளித்துள்ளார்க‌ள்.

ஒரு த‌னியார் சுய‌ந‌தி க‌ல்லூரிக்கு வ‌ருமான‌மே மாண‌வ‌ர்க‌ளிட‌ம் இருந்து அவ‌ர்க‌ள் வ‌சூலிக்கும் க‌ட்ட‌ண‌ம்தான். ஆனால் அதையே அவ‌ர்க‌ள் வேண்டாம் என்று சொல்ல மிக‌ப்பெரிய‌ ம‌ன‌ம் வேண்டும். கல்லூரியின் நிர்வாகிகள் அப்துல் கபூர், ஹிமாயூன் கபீர், அன்வர் கபீர், அகமது யாசின் ஆகியோருக்கு அந்த பெரிய மனம் இருக்கின்றது. வாழ்க அந்த வள்ளல்கள். சரியான நேரத்தில் உதவி தேவைப்படும் மாணவர்களையும், உதவி செய்யும் நல்ல உள்ளங்களையும் இணைக்கும் பாலமாக இருந்த விகடனும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே.

கல்வி கட்டணத்திற்கு அடுத்தபடியாக மாணவர்களுக்கு மிக முக்கிய தேவை பாட புத்தகங்கள். பள்ளிகளில் இலவச புத்தகங்கள் இருப்பதால் ஏழை மாணவர்கள் சமாளித்துவிடுகின்றார்கள். ஆனால் கல்லூரிகளில் புத்தகங்களின் விலை வேறு மிக அதிகமாக இருக்கும்.

புத்தகம் வாங்க முடியாமல் தவிக்கும் விருதுநகர் மாவட்ட மாணவர்களுக்கு சிவகாசி தொழிலதிபர்கள் அணில் மேத்தா, சிவசண்முகம், உமாசங்கர், முத்துவிஜயன், ராஜா சங்கர் மற்றும் வெங்கடேஷ் ஆகிய ஆறு பேரும் எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், தங்கள் சொந்த பணத்தில் கடந்த 10 ஆண்டுகளாக, ஆண்டுக்கு லட்சம் ரூபாய்க்கு உயர் கல்விக்கான பாட புத்தகங்களை வாங்கி ஓசையில்லாமல் மாணவர்களுக்கு உதவி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்களுக்கு உதவும் வகையில் புத்தக வங்கி ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளனர். இதில் சுமார் 10 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. மாறிவரும் கல்வி தரத்திற்கு ஏற்ப தொழில்நுட்பம், கணிப்பொறி அறிவியல்(Computer Science) , உயிர் தொழில்நுட்பம் ( Bio Technology) என புதிய பாடதிட்டங்களில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு தேவைப்படும் புத்தங்களை வாங்குகின்றனர். ஒவ்வொரு புத்தகமும் ரூ.300 முதல் ரூ.ஆயிரம் வரை மதிப்புடையது. மாணவர்கள் அதை பயன்படுத்திவிட்டு திரும்பத் தந்துவிட வேண்டும் என்ற நியதியும் உண்டு.

இதை தவிர டாட்டா கன்சல்டன்சி (TCS) நிறுவனத்தில் வேலைபார்க்கும் மென்பொருள் வல்லுநர்கள் சேர்ந்து உருவாக்கிய வி ஷேர் ( VShare ) அமைப்பு. இதில் உலகெங்கும் மென்பெருள் துறையிலும், மற்ற துறைகளிலும் வேலை பார்க்கும் பலர் ( நான் உட்பட) உறுப்பினர்கள். உறுப்பினர்கள் தரும் பணத்தை கொண்டு, இவ்வமைப்பு பலருக்கும் உதவி வருகின்றது.
சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் சாலமன் சொசைட்டி எனும் ஆதரவற்ற சிறார்கள் இல்லம், பாதை என்ற சிறார்கள் மற்றும் முதியோர் இல்லம் ஆகியவற்றிற்கு குழந்தைகளின் படிப்பு செலவு, அவர்களின் உணவுத் தேவைகள் என‌ முழு உதவிகளையும் செய்து வருகின்றோம். இது தவிர எமது உறுப்பினர்கள் மூலமாக உதவி கேட்பவர்களுக்கு கல்வி உதவிகளும், மருத்துவ உதவிகளும் செய்துவருகின்றோம்.

எங்களைப் போல பலரும் குழுக்களாக இணைந்து இதே போல் செய்துவருகின்றார்கள். உங்களுக்கு தெரிந்து யாரும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.

நம்மில் பலருக்கும் இப்படி நல்ல காரியங்களில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் எப்படி செய்வது, யார் மூலம் செய்வது என்று தெரியாமல் இருக்கலாம். ஒரு குழுவாக இணைந்து வி ஷேர் ( VShare) போல செயல்படுங்கள், அல்லது உங்கள் சிந்தனையோடு ஒத்துபோகும் நண்பர்களுடன் இணைந்து ஒரு குழுவை ஆரம்பித்து செயல்பட ஆரம்பியுங்கள். உதவி வேண்டுவோர் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

உதவி தேவைப்படுவோர் அதிகம், ஆனால் உதவும் உள்ளங்கள் இன்னும் வேண்டும். உங்களுள் உதவும் எண்ணம் இருப்பின் இன்றே ஆரம்பியுங்கள். Udanz
Links to this post
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க