Author: ஜோசப் பால்ராஜ்
•10:44 AM
சாதி ஒழியணும் ஆனால்... என்ற தலைப்பில் கோவி.க அண்ணண் எழுதிய பதிவிற்கு பின்னூட்டமிட்டிருந்த அது சரி என்பவர் பொருளாதரத்தில் முன்னேறியவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். எனது கேள்வியும் இதுவே.

க்ரீமி லேயர் என்று சொல்லும் இவர்கள் இட ஒதுக்கீட்டின் சலுகைகளை அனுபவித்துக்கொண்டே சென்றால் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள் அதே நிலையிலேயே தொடர்ந்து இருந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் எப்படி முன்னேற முடியும்?

இடஒதுக்கீட்டில் தற்போது இருக்கும் நடை முறை மாற வேண்டும். பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் ஒரு பிரிவாகக் கருதப்பட வேண்டும். அதாவது ஒரு குடும்பத்தில் இட ஒதுக்கீட்டில் கல்வி பயின்று, வேலை வாய்ப்பும் பெற்று நல்ல நிலைக்கு வந்தவர் இட ஒதுக்கீட்டின் பலனை அடைந்த முதல் தலைமுறை, இவரது மகன்/மகள் அந்த குடும்பத்தின் இரண்டாம் தலைமுறைக்கும் இட ஒதுக்கீடு அளிக்கலாம். ஆனால் அதற்கு பின்னர் மூன்றாம் தலைமுறை பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவாக அறிவிக்கப்பட வேண்டும்.அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன் போகக் கூடாது. இரண்டு தலைமுறையை தூக்கிவிட அரசு உதவலாம். அதற்கு மேல அவனே ஏற வேண்டியதுதான். தான் விலகிக்கொண்டு பிறருக்கு வழிவிட வேண்டும். சரியானத் திட்டமிடுதலின் மூலம் இதை அருமையாக நடைமுறைப் படுத்தலாம்.

இதை செயல்படுத்த முதல் தேவை ஒருங்கிணைந்த அடையாள அட்டை. ஒரு தனிப்பட்ட அடையாள எண் ( Unique Identification Number) கொண்ட ஒருங்கிணைந்த அடையாள அட்டை எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும். அரசின் சலுகைகள் மூலமாக அவர்கள் அனுபவித்த பலன் எல்லாம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு மாணவண் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் போது, அவனது அடையாள எண்ணைக் கொண்டு அவன் குடும்பத்தில் மொத்தமாக எத்தனை பேர் சலுகைகளை அனுபவித்துள்ளார்கள்,எத்தனை தலைமுறையாக அந்த குடும்பத்தினர் சலுகை அடைந்துள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, அதன் மூலம் அவர்களுக்கு இட ஒதுக்கிட்டின் பலனை அளிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம்.

மேலும் ஒருவர் எந்த முதலீடு செய்தாலும் அதில் அடையாள அட்டை எண் குறிப்பிடப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஒருவருக்கு உள்ள சொத்து மதிப்பின் அளவு தெரியும். அவரது குடும்பத்தாருக்கு உள்ள மொத்த சொத்து மதிப்பும் தெரியும். எனவே பொருளாதார அடிப்படையில் அவர்களால் கட்டண இடங்களில் படிக்க முடியுமா இல்லையா என்பதை தீர்மானிக்கலாம். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சொத்து உள்ளவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் கீழ் சலுகை காட்டக் கூடாது.

பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் என தற்போது இருக்கும் பிரிவுகளுள் பொருளாதாரத்தில் பின் தங்கியோர் என ஒரு பிரிவையும் சேர்க்க வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மொத்த‌ மாணவர்களில் மேம்பட்ட பொருளாதார வசதிகள் கொண்டவர்களை பொதுப்பிரிவாக கருதி, மீதம் உள்ள மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலனை அளிக்கலாம். தற்போது இட ஒதுக்கீட்டின் மூலம் எந்த சலுகையையும் அடைய முடியாத மேல்வகுப்பை சேர்ந்தவர்களாய் இருந்தாலும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாய் இருந்தால் அவர்களுக்கு பொருளாதாரத்தில் பின் தங்கியோர் பிரிவின் கீழ் சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்.

எந்த ஒரு அரசு ஊழியராவது லஞ்சம், ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டணை அடைந்திருந்தால் அந்த வழக்குகளின் விவரங்களும் அவரது அடையாள எண்ணை கொண்டு தெரிந்து கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட வேண்டும். இப்படி தண்டணை அடைந்தவர்களின் குடும்பத்தார்க்கு இடஒதுக்கீட்டின் பலன்கள் மறுக்கப்பட வேண்டும்.

அதே போல் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், நகராட்சி, மாகநகராட்சி மன்ற உறுப்பினர்கள் குழந்தைகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட கூடாது. இது ஏன் என தனியாக நான் சொல்ல வேண்டியதில்லை என நம்புகிறேன்.

இந்த முறையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தினால், வருடா வருடம் ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு மாணவர்கள் விண்ணப்பிக்கின்றார்கள் என்பதை கணக்கிட்டு இட ஒதுக்கீட்டின் சதவீதத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் படிப்படியாக பொதுப் பிரிவின் சதவீதம் கூடி , மற்றப் பிரிவுகளில் சதவீதம் குறைந்து கொண்டே வரும். 100 ஆண்டுகள் கழித்து சுத்தமாக சாதி ரீதியிலான‌ இட ஒதுக்கீடு மறைந்தாலும் மறைந்து விடும். அதன் பின் பொருளாதார வசதிகளின் அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு இருக்குமாறு செய்யலாம்.

இந்த இட ஒதுக்கீடு முறைக்கு முக்கிய தேவையாக நான் கூறும் ஒருங்கிணைந்த அடையாள அட்டை முறையை நடை முறைப்படுத்த மிக அதிக அளவில் செலவாகும், மிக அதிக நாட்கள் ஆகும் என்று தட்டிக்கழிக்க முற்படுவார்கள். 2 ஆண்டுகளாவது இதை நடைமுறைப்படுத்த ஆகும். மேலும் பொருட் செலவும் அதிகம்தான். ஆனால் இது ஒரு அடிப்படை வசதி, இது இட ஒதுக்கீட்டிற்கு மட்டும் பயன்படக்கூடிய ஒன்றல்ல. 110 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இன்னும் ரேஷன் அட்டையை அடையாள அட்டையாக உபயோகிக்கும் நிலையில்தான் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கின்றார்கள். இப்படி ஒரு அடையாள அட்டையை முதலில் கொடுத்து முழுமையான கணிணி நிர்வாகத்தை கொண்டுவருவது தகவல் தொழில்நுட்பத்தில் முண்ணணியில் இருக்கும் நாடான நமக்கு ஒரு பெரிய விசயமே அல்ல.

இட ஒதுக்கீட்டையும் ஓட்டு வாங்கும் துருப்புச் சீட்டாக பயன்படுத்தி, சாதி வித்தியாசங்களை ஒழிக்க முன்வராமல் அதைத் தூண்டிவிட்டு குளிர்காயும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை இந்தப் பிரச்சனைக்கு தீர்வு என்பதே இருக்காது. யாராவது ஒரு நல்ல தலைவர் இப்படிச் சிந்தித்தால்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். மாற்றம் வருமா ??? Udanz
This entry was posted on 10:44 AM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

36 comments:

On Mon Sep 08, 02:23:00 PM GMT+8 , ஜெகதீசன் said...

me the first
:)

 
On Mon Sep 08, 02:39:00 PM GMT+8 , குடுகுடுப்பை said...

இதனைப் பற்றி நான் ஒரு பதிவு எழுத வேண்டும் என நினைத்தேன்.இதுவேதான் என் கருத்தும்.முதலில் இதனை எதிர்க்கும் சமூக/ அரசியலார்கள் புரிந்து கொள்ள வேண்டும்

 
On Mon Sep 08, 02:56:00 PM GMT+8 , லக்கிலுக் said...

இடஒதுக்கீட்டு திட்டம் எதற்கென்றே தெரியாத நிலையில் அதற்கு ஒரு பதிவும் நீங்கள் போட்டிருப்பது நகைச்சுவையாக இருக்கிறது :-)

 
On Mon Sep 08, 03:17:00 PM GMT+8 , கிரி said...

கொஞ்சம் பெருசா இருக்கு..பொறுமையா படித்து விட்டு பதில் போடுறேன்...நீங்க கூறிய முதல் வரி ஆமோதிக்கிறேன் மீதிய படித்து விட்டு..

 
On Mon Sep 08, 03:22:00 PM GMT+8 , லக்கிலுக் said...

சார்!

நான் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன். காக்கா கீக்கா தூக்கிட்டுப் போயிடிச்சா? :-)

 
On Mon Sep 08, 03:39:00 PM GMT+8 , கார்க்கிபவா said...

நல்ல பதிவு.. ஏற்ககூடிய கருத்தும்.. ஆனால் நம் நாட்டில் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் இருக்கிறது. நான் பள்ளியில் படித்த போது ஆண்டு வருமானம் 25,000 க்கும் குறைவாக இருப்பவற்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மாதம் வெறும் 3000 சம்பளம் வாங்கிய ஒரு அரசு ஊழியரின் மகனுக்கு அந்த தொகை கிடைக்கவில்லை. ஆனால் மாதம் லட்சகணக்கில் சம்பாதித்த ஒரு தொழிலதிபரின் மகனுக்கு அது கிடைத்தது. காரணம் வருமான சான்றிதழ். மாத சம்பளம் வாங்குபர்கள் தங்கள் வருமானத்தை மாற்றி காட்ட முடியாது. ஆனால் தொழிலதிபர்கள், பெரிய விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பலருக்கு இது சாத்தியம்

 
On Mon Sep 08, 03:43:00 PM GMT+8 , ஜோ/Joe said...

ஜோசப்,
நீங்கள் சொல்லுகிற 'கிரீமை லேயர்' பற்றி வலைப்பதிவுகளில் ஏகப்பட்ட விவாதங்கள் ஏற்கனவே நடந்திருக்கின்றன.

unique identity card கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒன்று .ஆனால் அதன் மூலம் கிடைக்கும் தகவல்களின் நம்பகத்தன்மை ஸ்திரம் ஆவதற்கு இந்தியா போன்ற நாட்டில் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை.

நீங்கள் சொல்லுகிற பொருளாதார அடிப்படை கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்க்கும் ..ஆனால் நடைமிறையில் வரும் போது நம் நாட்டில் ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலையை அதிகார பூர்வமாக கணிப்பது எவ்வளவு சிரமம் என்பது மட்டுமல்ல ,மேலும் பல குளறுபடிகளுக்கு வழிவகுக்கும் ..மாதச்சம்பளம் பெறாத பல பணக்காரர்களும் தங்கள் மாத வருமானம் வெறும் 2000 ரூபாய் தான் என எளிதாக சான்றிதழ் பெற்று விடலாம் ..ஆக என்னை எப்படி பணக்காரன் என சொல்லப்போச்சு என்று பலரும் (கணக்கு வழக்கில்லாமல் பல வழிகளில் அவர்களுக்கு வருமானம் வந்து கொண்டிருந்தாலும்).

மேலும் இட ஒதுக்கீடு வெறும் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்காக கொடுக்கப்படுவதல்ல ..அது சமுதாய ஏற்றத்தாழ்வுக்காக கொடுக்கப்படுவது ..மேல் ஜாதியினரில் ஏழையயும் ,ஒரு தலித் ஏழையையும் ஒரே தட்டில் வைக்க முடியாது ..ஏனென்றால் மேல் ஜாதி ஏழை பணமின்றி இருந்தாலும் தலைமுறை தலைமுறையாக அவர்களுக்கு கிடைத்து வரும் சுற்றுப்புற சூழலும் ,கைதூக்கி விட ,ஆலோசனை சொல்ல ,உதவி செய்ய அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் ஒரு தலித் ஏழைக்கு கிடைக்காது .

 
On Mon Sep 08, 04:35:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

அண்ணே மன்னிக்கனும்! கிரிமிலேயர்ன்னு சொல்லிகிட்டு அவனுங்க பண்ற உள்ளரசியல் உங்களுக்கு புரியலன்னு நினக்கிறேன்.

 
On Mon Sep 08, 04:39:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

இடஓதுக்கீடு காசுக்காக கொடுக்குறதுன்னு நினைச்சீங்களோ? அதை விளக்கமா சொல்லனும்னா நா 1928 ல இருந்து ஆரமிக்கனும். இப்ப இருக்குற வேளைப்பளுவில் எனக்கு கொஞ்சம் சிரமம்.முடிந்தா நேர்ல பாக்கும்போது சொல்றேன்.

 
On Mon Sep 08, 04:54:00 PM GMT+8 , Mahesh said...

சுத்தி சுத்தி பொருளாதார அடிபடையில ஒதுக்கீடு இருக்கணும்கறீங்க... இதத்தான் நம்ம ஆளுக ஒத்துக்கவே முடியாதுன்னு அடிச்சு சொல்லீட்டாங்க.... போன தேர்தல்ல பரித்ரண் அப்பிடின்னு ஒரு கட்சி, ஐ.ஐ.டி. மாணவர்களை வெச்சு உருவாச்சு. அவுங்க கூட இத சொன்னாங்க. கடைசீல அதுவும் பதவி சண்டைல புட்டுக்கிச்சு.

இட ஒதுக்கீடே கொஞ்ச நாள்ல இருக்கக் கூடாது. அப்பிடியே இருந்தாலும் அது பொருளாதார அடிப்படையில்தான் இருக்கணும். ஆனா துரதிருஷ்டவசமா இது ஒரு utopian ideology யாவே இருக்கு.

 
On Mon Sep 08, 06:48:00 PM GMT+8 , Anonymous said...

பொதுவாக பிரச்சனைகளை தான் எழுதுவார்கள். நீங்கள் தீர்வையும் எழுதுவது அருமையாக உள்ளது..

 
On Mon Sep 08, 07:56:00 PM GMT+8 , Iyappan Krishnan said...

citizen padam parththa mathiri irukku :))

 
On Mon Sep 08, 09:03:00 PM GMT+8 , அது சரி said...

ஜோசப்,

நீங்க சொல்வது நன்றாக இருக்கிறது. அப்புறமா வந்து விளக்கமாக பின்னூட்டம் இடுகிறேன்

 
On Mon Sep 08, 09:20:00 PM GMT+8 , *** said...

நல்ல ஏற்கப் படவேண்டிய கருத்துகள்.

சிலர் சொல்ற மாதிரி க்ரிமிலேயர் ஒரு கிருமிலேயர்தான். எனது விவசாய நண்பர் ஒருவர் வருட வருமானம் 750 ருபாய் என அரசாங்க ரிக்கார்டு சொல்கிறது.ஆனால் அவரது ஸ்கார்ப்பியோவின் மாத பெட்ரோல் செலவு அதைவிட அதிகம். இதற்கு பதிலாக ஒருவர் இடஒதுக்கீடு சலுகை அனுபவித்துவிட்டால் அவரது குழந்தைகளுக்கு சலுகை இல்லை என மாற்றலாம்.இல்லையெனில் ஆங்கில மீடியத்தில் படித்தால் இட ஒதுக்கீடு இல்லை என ஆக்கலாம். சமூக நீதியோடு தமிழுக்கும் ஆக்கமுறும்.

மேல்தட்டு ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் கலைஞர் அல்லது மருத்துவர் ஐயாவின் பேரர்கள் வடக்குப்பட்டியில் செருப்பு தைக்கும் ராமசாமியின் பேரனுக்கான இட ஒதுக்கீட்டை அனுபவிக்க முடியாமல் போகவேண்டும்.

இடஒதுக்கீட்டின் நோக்கம் நிஜமான சமூக நீதியாக இருக்க வேண்டும்.

 
On Mon Sep 08, 10:45:00 PM GMT+8 , புருனோ Bruno said...

//அதே போல் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், நகராட்சி, மாகநகராட்சி மன்ற உறுப்பினர்கள் குழந்தைகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட கூடாது. இது ஏன் என தனியாக நான் சொல்ல வேண்டியதில்லை என நம்புகிறேன்.//

இதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஒருவர் 20 வருடங்களாக ”தொண்டராக” இருந்து கஷ்டப்பட்டு அதன் பின் ஒரு தேர்தலில் வெற்றி பெறுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவு நாளும் அவரது குழந்தைகள் “எம்.எல்.ஏ”வின் மகனாக / மகளாக கல்வி கற்றிருக்க மாட்டார்கள்.
-

 
On Mon Sep 08, 10:47:00 PM GMT+8 , புருனோ Bruno said...

//அதாவது ஒரு குடும்பத்தில் இட ஒதுக்கீட்டில் கல்வி பயின்று, வேலை வாய்ப்பும் பெற்று நல்ல நிலைக்கு வந்தவர் இட ஒதுக்கீட்டின் பலனை அடைந்த முதல் தலைமுறை, இவரது மகன்/மகள் அந்த குடும்பத்தின் இரண்டாம் தலைமுறைக்கும் இட ஒதுக்கீடு அளிக்கலாம். ஆனால் அதற்கு பின்னர் மூன்றாம் தலைமுறை பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவாக அறிவிக்கப்பட வேண்டும்.அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன் போகக் கூடாது. இரண்டு தலைமுறையை தூக்கிவிட அரசு உதவலாம். அதற்கு மேல அவனே ஏற வேண்டியதுதான். தான் விலகிக்கொண்டு பிறருக்கு வழிவிட வேண்டும். சரியானத் திட்டமிடுதலின் மூலம் இதை அருமையாக நடைமுறைப் படுத்தலாம்.//

சரியான கருத்து.

//இதை செயல்படுத்த முதல் தேவை ஒருங்கிணைந்த அடையாள அட்டை. ஒரு தனிப்பட்ட அடையாள எண் ( Unique Identification Number) கொண்ட ஒருங்கிணைந்த அடையாள அட்டை எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும்.//

அப்ப்டி ஒரு அட்டை வந்தால் பல பிரச்சனைகள் (கருப்பு பணம், வருமானத்திற்கு அதிகமான பணம்) தீரும்

பின் குறிப்பு ; கருப்பு பணம் வேறு, வருமானத்திற்கு அதிகமான பணம் வேறு என்பது பலருக்கு தெரியாது :) :)

 
On Mon Sep 08, 11:26:00 PM GMT+8 , கிரி said...

//இடஒதுக்கீட்டில் தற்போது இருக்கும் நடை முறை மாற வேண்டும். பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் ஒரு பிரிவாகக் கருதப்பட வேண்டும்//

இதியா கண்டறிவது எளிதான காரியமாக கருதவில்லை.

//சரியானத் திட்டமிடுதலின் மூலம் இதை அருமையாக நடைமுறைப் படுத்தலாம். //

மக்கள் தொகை மிகுந்த ஊழல்கள் மலிந்த நமது நாட்டில் சாத்தியமா?

//ஒருவர் எந்த முதலீடு செய்தாலும் அதில் அடையாள அட்டை எண் குறிப்பிடப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும்//

நீங்கள் கூறுவது சரி தான் ஆனால் இதை நடைமுறை படுத்த பல காலங்கள் ஆகும் ..இவர்கள் முதலில் திட்டமிட வேண்டும் பின் அதை செயல்படுத்த வேண்டும்..பின் அதை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்..பின் முதலில் அதில் உள்ள குறைகள் சரி செய்யப்பட வேண்டும்..ரொம்ப ரொம்ப தாமதாமாகும் ஆனால் வேறு வழி இல்லை. இதில் பல எதிர்ப்புகள் வரும் இதை சமாளிக்க வேண்டும்.. ம்ஹீம் ரொம்ப கஷ்டம்

//யாராவது ஒரு நல்ல தலைவர் இப்படிச் சிந்தித்தால்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். மாற்றம் வருமா ??? //

தற்போது மாற்றம் வர வாய்ப்பில்லை. இந்த தலைமுறை மாற வேண்டும்..

நமக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது மக்கள் தொகை அரசியல் கட்சிகள் ஜாதிகள். இவையே நம் நாட்டை முன்னேற்றம் அடையாமல் தடுக்கும் காரணிகள். எந்த ஒரு திட்டத்திற்கும் எதிர்ப்பு அனைத்திற்கும் முட்டுக்கட்டை.

சிங்கப்பூர் போன்ற நாடுகளில் எதையும் உடனே அமுல்படுத்த முடிகிறதென்றால் அதற்க்கு காரணம் மக்கள் எண்ணிக்கை..சிறிய ஊர். ஆனால் இந்தியா மிகப்பெரிய நாடு பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் இவை அல்லாமல் அரசியல் காரணங்கள் எனவே நீங்கள் கூறுவது போல நடக்க நம் தலைமுறையில் வாய்ப்பில்லை.

 
On Tue Sep 09, 02:18:00 AM GMT+8 , Anonymous said...

//ஒருவர் 20 வருடங்களாக ”தொண்டராக” இருந்து கஷ்டப்பட்டு அதன் பின் ஒரு தேர்தலில் வெற்றி பெறுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவு நாளும் அவரது குழந்தைகள் “எம்.எல்.ஏ”வின் மகனாக / மகளாக கல்வி கற்றிருக்க மாட்டார்கள்.//

டாகடர் ஸார் எந்தக் காலத்தில் இருக்கின்றார் எனத் தெரியவில்லை. தொண்டர்கள் எல்லாம் முன்னேறி எம்.எல்.ஏ ஆன தொல்லாம் அந்தக் காலம். இப்பவெல்லாம் குறைந்த பட்சம் 'குண்டராகவாவது' இருக்கனும். பெரிய கட்சிகளில் ஜாதி பண பல அடிபடையில்தான் சீட்டு!

 
On Tue Sep 09, 01:56:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

முதல் பின்னூட்டத்திற்கு நன்றி ஜெகதீசன் ,

வாங்க குடுகுடுப்பை,
நான் இப்பதிவில் சொல்லியிருக்கும் யோசனைகளை நடைமுறைப்படுத்த சில ஆண்டுகள் ஆகும். ஆனால் கட்டாயம் நடைமுறைப்படுத்த இயலும். நல்ல ஆட்சியாளர்கள் மனது வைத்தால்.

 
On Tue Sep 09, 02:10:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாங்க லக்கி,
இந்தப் பதிவு நகைச்சுவையானது நீங்க சொன்னீங்க. நேத்து நீங்களும் நானும் மின்னஞ்சலில் விவாதித்துக் கொண்டிருந்ததாலத்தான் உங்கள் பின்னூட்டத்த வெளியிடாம இருந்தேன்.

அம்பேத்கர் வெறும் 30 ஆண்டுகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் நாடு சுதந்திரமடைந்து 61 ஆண்டுகள் ஆகியும் அவர் விரும்பிய விளைவு ஏற்படாமல் போனதற்கு என்ன காரணம்? அப்போ, தற்போதைய நடைமுறையில் தவறு என்றுதானே அர்த்தம்? ஏன் அம்பேத்கர் எதிர்பார்த்த விளைவுகள் ஏற்படவில்லை?

சாதி பிரிவினைகளை வெறும் ஓட்டுக்காக பயன்படுத்தும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை என் யோசனைகள் கட்டாயம் நகைச்சுவையாகத்தான் இருக்கும்.

 
On Tue Sep 09, 02:18:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாங்க கார்க்கி.
நீங்கள் சொல்வது சரிதான். தற்போதைய நடைமுறைப்படி வருமான சான்றிதழ் பெறப் போனால் கோடிஸ்வரனுக்கு கூட பிச்சைக்காரன் என்று சான்றிதழ் அளிப்பார்கள் நம் வருவாய் துறை அலுவலர்கள். ஆகவேத்தான் நான் சொல்லியிருக்கிறேன், ஒருங்கிணைந்த அடையாள அட்டை கட்டாயம் தேவை என்று. அதை நடைமுறைப்படுத்துவது கட்டாயம் சாதாரண விசயம் அல்ல. மிகுந்த சிரமங்களுக்குட்பட்டதுதான் அது. ஆனால் டி.என்.சேஷன் என்ற ஒருவரின் தீவிர முயற்சிதான் இன்று இந்தியா முழுமைக்கும் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை திட்டம் வந்தது. அதையே கொஞ்சம் தீவிரமாக செயல்படுத்தி எல்லா துறைகளையும் ஒழுங்காக ஒருங்கிணைத்தால் போதுமே. வெகு விரைவில் இதை செய்து முடித்துவிடலாமே.

 
On Tue Sep 09, 02:38:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாங்க ஜோ,
நீங்கள் சொல்வது போல் இதை நடைமுறைப்படுத்த சில காலங்கள் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் தற்சமயம் நமது மாநில அரசின் துறைகளை எடுத்துக்கொண்டோமானால் பத்திரப் பதிவுத் துறை, மோட்டார் வாகனத்துறை போன்ற முக்கியத் துறைகள் ஏற்கனவே கணிணிமயமாகிவிட்டன. வங்கிகளும் தற்போது கணிணிமயமாகிவிட்டன.
எனவே இது முற்றிலும் சாத்தியமே இல்லாத ஒரு திட்டமல்ல. ஒருவரது அசையும், மற்றும் அசையா சொத்துக்களின் பதிவுகள் எல்லாவற்றிலும் கட்டாயம் உரிமையாளரது அடையாள அட்டை எண் பதிவு செய்யப்பட வேண்டும், வங்கிக் கணக்குகள், பங்கு பத்திர வரவு செலவுகள் எல்லாவற்றிற்கும் அடையாள அட்டை எண் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்கினால் வெகு விரைவில் அதை நாம் செய்து முடித்து விடலாம்.

 
On Tue Sep 09, 02:53:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாங்க அப்துல்லா அண்ணே.
கட்டாயம் நேர்ல பேசுவோம். உங்களைச் சந்திக்க மிக்க ஆவலாய் உள்ளேன்.

வாங்க மகேஷ்.

அரசியல்வாதிங்க மனசு வைச்சா ரொம்ப சுலபமா நடக்க போற ஒரு விசயம் தான் இது. ஆனா ஓட்டு மட்டுமே குறிக்கோளா இருக்க அரசியல்வாதிங்க எப்படி இதையெல்லாம் நடைமுறைப் படுத்த விடுவாங்களா?

 
On Tue Sep 09, 05:36:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

நன்றி தூயா பபா.
நன்றி அது சரி.
நன்றி ஜீவ்ஸ்.

நன்றி ****
ஒருங்கிணைந்த அடையாள அட்டையை முழு நடைமுறைக்கு கொண்டுவந்து அனைத்து சொத்துவிவரங்களிலும் அவர்களது அடையாள அட்டை எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்கினால் பின்பு எப்படி ஒரு ஸ்கார்பியோ வைத்திருக்கும் விவசாயியின் மகன் 750 ரூபாய்க்கு வருமான சான்றிதழ் பெறமுடியும்?

 
On Tue Sep 09, 05:49:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாருங்கள் டாக்டர் புருனோ,

20 ஆண்டுகளாக தொண்டராக இருக்கும் போது அவரது பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க கூட வேண்டாம் என சொல்லவில்லையே. சட்ட மன்ற உறுப்பினராகவோ, பாராளுமன்ற உறுப்பினராகவோ ஆன பிறகு அவரது குடும்பத்திற்கு இட ஒதுக்கீட்டில் இடமளிக்க கூடாது என்பதே எனது வாதம்.

ஆனால் நீங்கள் சொல்லுவது போலா தற்போது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றார்கள்?

அடையாள அட்டைத் திட்டத்தை ஆதரித்தமைக்கு நன்றி, மேலும் இட ஒதுக்கீடு குறித்து பல பதிவுகள் எழுதியுள்ள நீங்கள் இரு தலைமுறைக்கு மேல் ஒரு குடும்பத்திற்கு இட ஒதுக்கீட்டின் பலன்கள் போகக் கூடாது எனும் கருத்தையும் ஆதரித்துள்ளீர்கள். அதற்கும் எனது நன்றிகள்.

 
On Tue Sep 09, 05:54:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

கிரி,
கட்டாயம் அதிக காலம் பிடிக்கும் திட்டம்தான் நான் சொல்வது. ஆனால் கட்டாயம் பலன் அளிக்கும் திட்டம் இது. சிங்கப்பூரின் மக்கள் தொகை மிகக் குறைவாக இருப்பதால்தான் இங்கு வெற்றிகரமாக செயல்படுத்த முடிகின்றது என்று சொல்லியுள்ளீர்கள். ஆனால் அமெரிக்காவிலும் இந்த நடைமுறை இருக்கின்றதே, அதை என்ன சொல்வீர்கள்? அங்கு இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாதல்லவா? ஒருவரது ஐ கொண்டு அவரது முழு விவரங்களையும் அறியுமளவுக்கு வைத்துள்ளார்கள் அல்லவா? அது போல் ஏன் நம்மால் செய்ய முடியாது? ஊழல் மலிந்த இந்த நாட்டில்தான் டி.என்.சேஷன் என்ற ஒற்றை மனிதர்தானே போராடி புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை கொண்டுவந்தார்?

 
On Tue Sep 09, 05:56:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாங்க அணாணி,
உங்க கருத்தோடு ஒத்துப் போகிறேன்.

 
On Tue Sep 09, 08:38:00 PM GMT+8 , Sanjai Gandhi said...

அட பொருளாதார அடிபப்டையில் இட ஒதுக்கீடு குடுக்க சொல்லுங்கய்யா.. ஜாதிய ஒதுக்கீடு தேவை இல்லை.

இவண்,
பதிவை படிக்காமலே கமெண்டுவோர் சங்கம்
கோவை தலைமையகம்.

 
On Tue Sep 09, 10:42:00 PM GMT+8 , கையேடு said...

//அதற்கு மேல அவனே ஏற வேண்டியதுதான். தான் விலகிக்கொண்டு பிறருக்கு வழிவிட வேண்டும். சரியானத் திட்டமிடுதலின் மூலம் இதை அருமையாக நடைமுறைப் படுத்தலாம்.//

ஒரு நிகழ்வு:

இடம்: ஒரு நேர்முகத் தேர்வு

மாணவர்: சமூகத்தில் தாழ்த்தப்பட்டவராக அறியப்பட்டவர்.தந்தையார் ஆசிரியர் என்பதால் தனது கல்விப் பயணத்தில் எவ்வித இடஒதுக்கீடும் பயன்படுத்த விரும்பாமல் முதுகலைப் படிப்பிற்கான நேர்முகத்திற்கு வந்திருப்பவர்(அதிலும் தனது கல்விப்பயணத்தில் எப்போதும் சாதித்தது போலவே எவ்வித இடஒதுக்கீடும் தேவையற்ற அளவிற்கு நுழைவுத்தேர்வில் மதிப்பெண்பெற்றிருப்பவர்).

தேர்வாளர்: சமூகத்தில் மிகவும் உயர்ந்தவராக அறியப்பட்டவர்

நிகழ்வு: அவர் மறுத்தாலும் அவரை தாழ்த்தப்பட்டவருக்கான பிரிவிலேயே சேர்த்துக்கொள்வது.

சாதித்தது: இட ஒதுக்கீட்டின் தேவையிருக்கும் ஒருவரை புறந்தள்ளியது மற்றும் தகுதியும் திறமையும் அற்ற ஒருவரை அனுமதித்துக் கொண்டது.

அதைவிட முக்கியமாக அம்மாணவரின் திறமையையும் துணிவையும் புறக்கணித்தது, மற்றும் உளவியல் ரீதியாக நீ இடஒதுக்கீட்டில் வரவேண்டியவன் என்ற சாதீய மேலாண்மையைத் திணித்தது.

இப்போது இம்மாணவர் எந்த லேயரில் வருவார் பால்.. !!??

நிற்க.

இடஒதுக்கீடு வேண்டாம் என்றால் எல்லா ரீதியிலும் இட ஒதுக்கீடு தேவையற்றதுதான். பொருளாதார ரீதியிலும் இடஒதுக்கீடு தேவையற்றதுதான்.

பொருளாதார இடஒதுக்கீடும் நிறுவனப்படுத்தப்பட்ட கல்விமுறையினால் முன்னிறுத்தப்படும் ஒருவகை கருத்துருவாக்கமே.

உதாரணம்: உயர்கல்விக்கான தேசியநுழைவுத்தேர்வுகளின் கட்டணங்கள் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டன.

சொல்லப்பட்ட காரணம்: எழுதுபவரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக. அப்படியானால் யாருடைய எண்ணிக்கையைக் குறைக்க முற்படுகிறார்கள்..????

எந்த வகையிலும் இடஒதுக்கீடு தேவையற்ற ஒரு சமூகச் சூழலை முதலில் உருவாக்குவோம். பின்னர் இட ஒதுக்கீட்டின் தேவை தாமாகவே மறைந்துவிடும்.

இது குறித்தான பிரச்சனையில் விரிவான உரையாடல்கள் சிலவற்றை டாக்டர். புருனோ அவர்களின் வலைப்பதிவில் காணலாம். அநேகமாகப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

 
On Wed Sep 10, 03:40:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

நண்பர் கையேடு...

நீங்க சொல்லியிருக்க மாதிரியே ஒரு நிகழ்வு எனக்கு தெரிந்த ஒரு மத்திய அரசின் ஆராய்சி நிறுவனத்துல நடந்தது. ஒரு ஆண்டுக்கு 2 இடங்கள் மட்டுமே கொண்ட முனைவர் பட்டப் படிப்பிற்கு, இந்தியா முழுவதிலுமிருந்து 1000 க்கு மேற்பட்டோர் பரிட்சை எழுதினார்கள். அந்த நிறுவனத்தில் ஒவ்வொரு படிப்பிலும் 50% இடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கானது. எனவே 2 இடங்களில் ஒரு இடம் தாழ்த்தப்பட்டவருக்கானது. அந்த தேர்வில் 100க்கு 98 எடுத்த பொதுப் பிரிவு மாணவர் ஒரு இடத்தை வாங்கி விட்டார். ஆனால் 100 க்கு 97 , 95, 90 என மதிப்பெண்கள் பெற்ற மற்ற மாணவர்களை விட 100 க்கு 60 எடுத்த தாழ்த்தப்பட்ட மாணவருக்கு அந்த இரண்டாவது இடம் கிடைத்தது. அந்த தாழ்த்தப்பட்ட மாணவரின் தந்தை ஒரு வங்கி மேலாளர். ஆனால் 97 மதிப்பெண் வாங்கிய மாணவரது தந்தையார் ஒரு சாதாரண விவசாயி. இதற்கு என்ன சொல்கின்றீர்கள் நண்பரே? இது உண்மைச் சம்பவம். 60 மதிப்பெண் பெற்று இடம்பிடித்தவரும் , 97 மதிப்பெண் பெற்றும் இடம் கிடைக்காது போனவரும் எனக்கு நன்கு தெரிந்தவர்களே.

இட ஒதுக்கீடு தேவையில்லாத சமூகச் சூழலே எனது ஆசையும்.

 
On Wed Sep 10, 04:45:00 PM GMT+8 , கையேடு said...

//இட ஒதுக்கீடு தேவையில்லாத சமூகச் சூழலே எனது ஆசையும்.
//
இப்புள்ளியில் இருவரும் இணைவதால், மேற்கொண்டு எடுத்துக்காட்டுகளுடன் விவாதித்துக் கொண்டே செல்வது தேவையற்றதும் கூட. தொடருங்கள் பால்..

 
On Thu Sep 11, 10:23:00 AM GMT+8 , Anonymous said...

கிரிமீ லேயர் என்ற 'கேள்வியேத் தவறு' என்கிறார் தமிழகத்தின் நாடாளமன்ற உறுப்பினரான கனிமொழி.

http://www.youtube.com/watch?v=NyzbWEWJu1Q

அரசியல் மன மாற்றம் தான் இந்த சிந்தனையை மக்களிடம் கொண்டு செல்ல இயலும்.

 
On Fri Sep 12, 05:57:00 PM GMT+8 , Sen said...

New Exam pattern in India (Revised):

1. General students - Answer ALL questions.
2. OBC - WRITE ANY one question.
3. SC - ONLY READ questions.
4. ST - THANKS FOR COMING..

CHEERS TO RESERVATION

ஐயோ ஐயோ...

Note:
My previous comment abt this post has disappeared somewhere.. but.. my comment and Dr. Sir's (கையேடு) are more or less the same.. so.. i'm seconding Dr's thots..

 
On Sat Sep 13, 04:27:00 PM GMT+8 , Anonymous said...

நன்றி சார், என் கருத்துக்களைத் தனிப் பதிவாக எழுதி இருக்கிறேன்.

 
On Sat Sep 13, 06:27:00 PM GMT+8 , புருனோ Bruno said...

//நிகழ்வு: அவர் மறுத்தாலும் அவரை தாழ்த்தப்பட்டவருக்கான பிரிவிலேயே சேர்த்துக்கொள்வது.//

இடப்பங்கீட்டை முறையாக கடைபிடிக்கும் இடங்களில் அப்படி நிகழ்வதில்லை. ஆனால் இடப்பங்கீடை சரியாக செயல்படுத்தக்கூடாது என்று நினைக்கும் ஏய்ம்ஸ் போன்ற இடங்களில் தான் நீங்கள் கூறும் இந்த குழப்படி நடக்கிறது

 
On Sat Sep 13, 06:29:00 PM GMT+8 , புருனோ Bruno said...

//New Exam pattern in India (Revised)://

உண்மையில் நடப்பது என்ன தெரியுமா.....

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க