பரபரப்பாகத்தான் இருக்கிறது இந்த பதிவுலகம்.
யார் செய்தது சரி, யார் செய்தது தவறு என சொல்லவோ, அந்த அரசியலுக்குள் செல்லவே நான் விரும்பவில்லை. சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய நபர்களிடம் நேரடியாகச் சொல்லிவிட்டேன். நண்பர்களுக்குள் ஆரம்பித்த இந்த பிரச்சனை இப்போது ஒட்டுமொத்தமாய் சுற்றி சுழன்று எல்லோராலும் கிழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்தப் பிரச்சனைகளை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வந்த வகையில் இதிலிருந்து நான் கற்றவையும் பெற்றவையும் .
1) பிறர் கருத்துக்களை விவாதத்தின் மூலம் யாராலும் மாற்றவே முடியாது.
வாதத் திறமையால் விவாதத்தில் வேண்டுமானால் வெற்றி பெறாலாமே ஒழிய, எந்த விவாதமும் பிறர் கொண்டுள்ள கருத்தை மாற்றிவிடாது. அவரவர் செய்வதை செவ்வனே செய்து கொண்டு தான் இருப்பார்கள். வாதத் திறன் விவாதங்களை தான் வெல்லுமே ஒழிய விவாதிப்பவரின் மனதை அல்ல.
2) எந்தப் பிரச்சனையையும் முற்றிலுமாகத் தீர்க்க இயலாது, ஒத்திப் போட வேண்டுமானால் இயலும்.
யார் இடையில் நின்று சமாதானம் செய்து வைத்தாலும், அந்த நேரத்தில் பிரச்சனையை தற்காலிகமாக தள்ளிப் போட முடியுமே ஒழிய அதை முற்றிலுமாக இல்லாதொழிக்க இயலாது
3) அடித்த ஆணிகளை வேண்டுமானால் பிடுங்கிவிடலாம், அடித்த தடம் அப்படியே தான் இருக்கும்.
சுவற்றில் அடித்த ஆணியை பிடுங்கிய பின்னும் ஆணி பதிந்து ஏற்படுத்திய தடம்
அப்படியே இருப்பதை போல தான் வார்த்தைகளும், பதிவுகளும். பதிவுகளை நீக்கலாம்
மன்னிப்பு கேட்கலாம், ஏற்படுத்திய பாதிப்புகளை அவை நீக்கிவிடுமா?
4) நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
எந்தப் பிரச்சனையா இருந்தாலும் இந்தக் குறளப் படிச்சுட்டு தீர்ப்பு சொல்ல போறது
ரொம்ப நல்லது. இல்லையா சும்மா இருக்கது நல்லது.
5) நட்புக்கு இலக்கணம் காயமாற்றுதல் தானே ஒழிய, எதிர் தாக்குதலுக்கு
துணை போவதும் தூண்டுவதுமல்ல.
என் நண்பன் ஒரு தாக்குதலுக்குள்ளாகி காயமுற்றிருக்கின்றான் என்றால், நான் அவனது
காயத்திற்கு மருந்திட்டு, அவனை குணமாக்க தான் முதலில் முயல்வேன். அந்த தாக்குதல்
தொடர்ந்து நடைபெறாதிருக்க என்ன செய்ய வேண்டும் என்றுதான் யோசிப்பேன்.
காயமுற்றிருக்கும் நண்பனை தூக்கிக் கொண்டு எதிர் தாக்குதலுக்கு செல்ல மாட்டேன்.
காயமுற்றிருக்கும் நண்பனாலும் தாக்குதலை திறம்பட நிகழ்த்த முடியாது.
நண்பனைச் சுமந்து கொண்டிருக்கும் என்னாலும் தாக்குதலில் முழுதாய் ஈடுபட முடியாது.
காயங்கள் ஆறியவுடன், இதெல்லாம் ஒரு தாக்குதலான்னு கூடத் தோணலாம்.
காயத்துடன் எதிர்வினை ஆற்றுதல் பாதிப்பை பலமடங்காக்குமே ஒழிய குறைக்க உதவாது.
உண்மையான நட்பு, நண்பன் தவறு செய்தாலும் ஆதரிக்கவே ஆதரிக்காது. நீ என்ன செஞ்சாலும்
சரி, நான் உன்னைய ஆதரிப்பேன் என்று சொல்வது உண்மையான நட்பு அல்லவே அல்ல.
எதிரி மேல் தவறே இருந்தாலும் அதே வழியில் செல்ல தன் நண்பனுக்கு உதவுவது
தான் உண்மையான நட்பென்றால், I am Sorry, I can't be a True Friend to Anybody.
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
ஆனால் நடப்பவற்றை பார்க்கையில் கூடிக் கும்மாளவிடுவது மட்டுமே நட்பென்றாகிவிட்டதோ
என ஐயமுறச் செய்கின்றன
6) எல்லாப் பிரச்சனைகளிலும் எல்லோரும் கருத்து சொல்லியே
ஆகவேண்டும் என்பதில்லை
ஒரு பிரச்சனையென்றால் அதில் எல்லோரும் கட்டாயம் கலந்துக்கணும், கருத்து
சொல்லணும்னு எந்த நிர்பந்தமும் இல்லை. நம் சொற்கள் எரியும் தீக்கு எண்ணையாகுமா?
நீராகுமா? என உணராமல் சொல்வதில் எந்த அர்த்தமுமில்லை.
7) உண்மையான நடுநிலைவாதிகள் தங்கள் மெளனத்தைத் துறப்பதில்லை.
உண்மையான நடுநிலை என்பது மிக மிக அரிதானது. அப்படி அரிதிலும் அரிதாக இருக்கும்
நடுநிலையாளர்கள் மொளனம் துறப்பதில்லை. ஆனால் நான் நடுநிலையாளன் என
பேசுபவர்கள் 0.5 சதவீதமாவது ஏதாவது ஒரு பக்கம் சாய்ந்தவர்களாத்தான் இருக்கின்றார்கள்.
இன்னும் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன்.
காற்று உள் சென்று வெளிவந்து கொண்டிருக்கும் வரை கற்றல் நிற்காது தொடரும்.
ஆனா பதிவு தான் வருமான்னு தெரியாது .