Author: ஜோசப் பால்ராஜ்
•9:54 PM
கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக ஏறி, அதனால் பல நாடுகளின் பொருளாதரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,நான் ஏற்கனவே எழுதிய இப்பதிவை மீள்பதிவு செய்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

மேலும், இப்பதிவை நான் வெளியிட்ட போது எனது வலைப்பூவை தமிழ்மணத்துடன் இணைக்காததால் இது மிகச்சிலரையே சென்றடைந்தது. தற்போது தமிழ்மணத்தின் வாயிலாய் பெரும்பாலனவர்களை சென்றடையும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துகளை பின்னூட்டமிடுங்கள்.

மிக நீண்ட நாட்களாக என் மனதை அரித்துக்கொண்டிருக்கும் ஒரு ஆதங்கம் தான் இந்த பதிவு. இது ஒரு சுயநலம் கலந்த பொதுநலப் பார்வையும் கூட.

வளர்ந்து வரும் நவீனயுகத்தில் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையால் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் போன்ற மரபுசார் எரிபொருட்களின் தேவையும், சர்வதேச சந்தையில் அதிகரித்துவரும் கச்சா எண்ணெயின் விலையால் எல்லோரும் பாதிப்படைவது பற்றி நான் ஓன்றும் தனியாக சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் மரபுசாரா எரிசக்தி எனும் ஒரு அரிய வளத்தை நம் கையில் வைத்துக்கொண்டு இன்னும் ஏன் நாம் அதை உயோகிக்க மறுக்கிறோம் என்பது தான் எனது கேள்வி.

கரும்பில் இருந்து சர்கரை தயாரிக்கும் போது கிடைக்கும் கழிவுப்பாகில் (மொலாசஸ்) இருந்தும், மக்கா சோளத்தில் இருந்தும் தயாரிக்கப்படும் எத்தனாலை உயிர் எரிபொருளாக உபயோகிக்கலாம் என்பதை ஏற்கனவே பிரேசில் போன்ற நாடுகள் நிரூபித்துவிட்டன. விவசாயத்தை முக்கியத்தொழிலாக கொண்டுள்ள இந்தியாவில் கரும்பும் , சோளமும் மிக அதிகமாக பயிரிடப்படும் பயிர்கள் தான்.

பிரேசில் நாட்டில் உயிர் எரிபொருள்(Bio Fuel) ஆக எத்தனாலை பயன்படுத்தி கார் போன்ற வாகனங்களை இயக்கிவருகிறார்கள். தொழில்நுட்பம் குறித்த மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள இணைய முகவரிக்கு சென்று பாருங்கள். (http://en.wikipedia.org/wiki/Ethanol_fuel).


இது நாள்வரை சர்க்கரை ஆலைகளில் கழிவாக வெளியேற்றும் மொலசஸ் தற்போதுவரை வேண்டாத ஒரு கழிவாகத்தான் வீணாக்கப்படுகிறது. சொல்லப்போனால் ஆலைகளுக்கு இது ஒரு செலவு தான். ஆனால் இதே மோலாசஸ்தான் எத்தனால் தயாரிக்க முக்கியமான மூலப்பொருள்.

ஆனால் எத்தனால் என்பது இதுவரை சாரயமாகவும், மிக சில மருத்துவ தேவைகளுக்காகவும் மட்டுமே உபயோகிக்கப்படுவதால் தற்சமயம் பெருமளவில் தயாரிக்கப்படுவதில்லை. இதே எத்தனாலை உயிர் எரிபொருளாக உபயோகிக்கும் நிலை வந்து மிகப்பெருமளவில் தயாரிக்க வேண்டியத் தேவைகள் உருவானால் இன்று சர்க்கரை ஆலைகளுக்கு செலவாக இருக்கும் மொலசஸ் எத்தனால் தயாரிப்புக்கு மூலப்பொருளாக விற்கப்பட்டு வருவாயாக மாறிவிடும். இதனால் கரும்புக்கு கூடுதல் விலை கிடைக்கும் .

மக்காசோளம் மிக குறைந்த நீரைகொண்டு பயிரிடப்படும் ஒரு பயிர். கரும்பைவிட மிக குறைவான நாட்களில் விளையும், மழையை மட்டும் நம்பி விவசாயம் செய்யும் இடங்களிலும் பயிரிட முடியும். ஆனால் தற்போது உணவு பொருளாகவும், கோழி பண்ணைகளில் தீவனமாகவும் மட்டுமே பயன்படுவதால் மிகக்குறைந்த விலையே இதற்கு கிடைத்துவருகிறது. சோளத்தில் இருந்தும் எத்தனால் தயாரிக்கமுடியும் என்பதால் இதற்கும் நல்ல விலை கிடைக்கும். இவையெல்லாம் விவசாயிகளுக்கு கிடைக்கும் பலன்கள்.

பெட்ரோலிய எரிபொருட்களை உபயோகிப்பதால் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை விட , எத்தனாலையோ அல்லது எத்தனால் கலந்த எரிபொருளையோ உபயோகிப்பதால் ஏற்படும் கேடு குறைவானது என்றும் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. உலகின் வெப்பம் அதிகரித்து பல கடலோரப்பிரதேசங்கள் வெகுவிரைவில் நீரில் மூழ்கும் என்ற எச்சரிக்கை விடப்பட்டுள்ள இந்த சூழலில் சுற்றுபுறச் சூழலை பாதுகாக்கவும் இது ஒரு மி்கச்சிறந்த வழியாகும் என்பதில் ஐயமில்லை. ஆக சுற்றுப்புற சூழலை காரணமாக கொண்டும் இதை தடுக்க முடியாது.

நாட்டின் இறக்குமதியில் பெருமளவு கச்சா எண்ணெய் தான் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று , வெறும் 30 % எத்தனால் கலந்த எரிபொருளை உபயோகித்தால் கூட , கச்சா எண்ணெய் இறக்குமதி 30% குறையும் இதனால் ஒரு 15% பெட்ரோலிய பொருட்களின் விலை குறைந்தாலும் எல்லோருக்கும் நன்மைதானே ? மேலும் இறக்குமதி குறைவதால் நாட்டின் பொருளாதாரமும் உயரும் அல்லவா?

மேலும் இந்தியாவில் உயிர் எரிபொருள் பயன்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்தினால், மேலும் பல நாடுகள் இதை பயன்படுத்த முன்வரலாம், எல்லோராலும் எத்தனால் தயாரிக்கமுடியாது என்பதால் எத்தனால் ஏற்றுமதியில் கூட பெரும் லாபம் ஈட்ட முடியும்.

உயிர் எரிபொருள் தயாரிப்புக்கு உணவுப் பொருட்களை பயன்படுத்துவதால், உணவு பொருட்களுக்கு பற்றாகுறை ஏற்படும் என்ற ஒரு குற்றச்சாட்டும் வந்துகொண்டிருக்கின்றது.

ஆனால் நான் இங்கே குறிப்பிட்டிருக்கும் மொலசஸ் ஒரு உணவுப்பொருள் அல்ல. அதே போல் மக்காச்சோளம் ஒரு மானாவாரி பயிர் என்பதால், அதை உயிர் எரிபொருள் தயாரிப்பிற்கு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டால், அதற்கு நல்ல விலை கிடைக்கும் என்பதால் மேலும் பல விவசாயிகள் அதை பயிரிட முன்வருவார்கள். தரிசு நிலங்களை மேம்படுத்தி சுலபமாக மக்காச்சோளம் பயிரிடலாம் என்பதால் கட்டாயம் உணவுப் பற்றாகுறைக்கு இத்திட்டம் வழிவகுக்காது. ( இதை நான் என் முந்திய பதிவில் குறிப்பிடவில்லை).


ஆக என் சிற்றறிவுக்கு புரிந்த வகையில் எந்த கோணத்தில் பார்த்தாலும் நன்மையளிக்கும் இந்த திட்டத்தை ஏன் எந்த அரசாங்கமும் கண்டுகொள்ளவதில்லை?

சரி இதுல என்ன பொது நலம் கலந்த சுயநலம் உனக்கு அப்டினு யாரும் கேட்குற மாதிரி வைக்க கூடாதுல, அதையும் தெளிவா சொன்னாதானே சரியா இருக்கும்

பொது நலம் : 1) கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவதால் அதிகரிக்கும் நாட்டின்
பொருளாதார முன்னேற்றம்
2) குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்கள்.
3) சுற்றுப்புற சூழல் பாதிப்பு குறைவது.

சுய நலம் : என்னதான் கணிப்பொறி துறையில வேலை பார்த்துகிட்டு இருந்தாலும் நான் மாரனேரி என்னும் கிராமத்துல ஒரு விவசாய குடும்பத்துல பிறந்தவன் தானே. கரும்புக்கும் சோளத்துக்கும் நல்ல விலை கிடைக்கும்னா எங்க விவசாயகுலத்துக்கு பெரிய நன்மைதானே ... Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•4:59 PM
பிரபலாமவதற்கு இரண்டு வழிகள் உண்டு.சிரமப்பட்டு பிறருக்கு உதவும் வகையில் ஏதவது செய்வது ஒரு வகை. இது நேர்வழி. அப்துல கலாம் இந்த வகையை சார்ந்தவர்.

சிரமமேயில்லாமல் ஒரு பிரபலமானவரின் செயல்களை கன்னாபின்னா என்று எதிர்பது. கேணத்தனமாக கேள்வி கேட்பது. இதற்கு சமீபத்திய உதாரணம் ஞாநி.

இவர் ஓ பக்கம் என்று ஒரு பக்கத்தை முதலில் விகடனில் எழுதிக்கொண்டிருந்தார். அங்கே என்ன பிரச்சனையோ அங்கிருந்து குடிமாறி குமுதத்திற்கு சென்று அங்கேயும் அதே ஓ பக்கத்தை எழுதிவருகின்றார்.

விகடன் மின் பத்திரிக்கையில் வாசகர்கள் தங்களது கருத்துகளை எழுதும் வசதியிருப்பதால், அங்கு ஞாநியின் பல கட்டுரைகள் வாசகர்களின் பலத்த கண்டணங்களுக்கு உள்ளாகியிருந்தது. ஆனால் ஒரு முறை கூட வாசகர்களின் கருத்துகளுக்கு பதிலளித்தது இல்லை. வாசகர்களின் கருத்துக்களை அவர் படித்ததே இல்லை என்றுதான் நினைக்கின்றேன்.

குமுதம் மின் இதழ் வாசகர்களுக்கு கருத்து எழுதும் வசதியும் இல்லை என்பதால் ஞாநிக்கு எந்த கேள்வியும் இல்லை.

09.07.2008 தேதியிட்ட குமுதம் இதழில் அவர் எழுதியுள்ள ஓ பக்கத்தில் இவர் எழுதியுள்ள அபத்தங்கள் அவர் எழுதுவதை பிரபலமாக்க , பழுத்த மரமான அப்துல் கலாம் மீது கல்லெறியும் குயுக்தி, குறுக்கு புத்தி என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.

தன் வாழ்நாளை இன்றளவும் நாடு , நாட்டின் முன்னேற்றம் என்பதற்காக மட்டுமே செலவழித்துக்கொண்டிருக்கும் திரு. அப்துகலாமை, அவர் மாணவர்களையும், இளைஞர்களையும் வாழ்க்கையில் முன்னேற கனவுகாணுங்கள் என்று அடிக்கடி கூறினார் என்பதற்காக கனவுத்தாத்தா என்று விளித்திருப்பது, ஞாநியின் திமிர்தனத்தின் உச்சம் என்பதை தவிர வேறெதுவும் இல்லை.

இந்திய அரசியலமைப்பின்படி வானளாவிய அதிகாரங்கள் ஏதுமற்ற ஒரு அலங்கார பதவியாகிய குடியரசுத்தலைவர் பதவியில் இருந்து கொண்டு, வெறுமனே டில்லியில் அமர்ந்துகொண்டு, இந்தியா வரும் வெளிநாட்டு பிரநிதிகளுடன் கைகுலுக்குவதோடு மட்டும் நில்லாமல், தனது பதவி காலத்தில் நாட்டின் எல்லா பாகங்களுக்கும் பயணித்து லட்சக்கணக்கான மாணவர்களையும், இளம் வயதினரையும் சந்தித்து உரையாடி, அவர்களை ஊக்கப்படுத்திய கலாம், இளையோர்கள் கனவு காண வேண்டும் என்று சொன்னது எதற்காக ? இங்கு கனவு எனும் வார்த்தைக்கு என்ன அர்த்தம் ?இவற்றைக் கூட அறிந்துகொள்ள முடியாத அறிவிலிதான் நான் (ஞாநி) என்பதையும் அவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அக்கினிச் சிறகுகள், விஷன் 2020 ஆகியவற்றை படித்தால் இவருக்கு தூக்கம் வந்துவிடுகிறதாம். இத‌ற்கு க‌லாம் எந்த‌ வ‌கையில் பொறுப்பாவார்?இவ‌ர் போல் ப‌க‌ல் க‌ன‌வு காணுப‌வ‌ர்க‌ளுக்கு எப்ப‌டி அப்துல் க‌லாம் அவ‌ர்க‌ளின் க‌ன‌வுக்கு அர்த‌ம் தெரியும் ?

அக்னிச்சிறகுகள் எனும் நூல் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு என்பது கூட தெரியாமல் அதையும் கூட குறை கூறியிருப்பதில் இருந்தே, விஷயமறிந்தவர்களுக்கு ஞாநியின் அறியாமை புலப்படும்.

கலாமின் கனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு திட்டத்தை எதிர்பதற்காக தனது பகல் தூக்கத்தையும், பகல் கனவையும் தியாகம் செய்துவிட்டு எழுதியுள்ளாராம். இவ்வளவு கேவலமாக எழுதியதற்கு பதிலாக பேசாமல் நன்றாக தூங்கி, அவரது பகல் கனவையாவது கண்டிருக்கலாம்.

நீலகிரி மாவட்டத்தில் அமைய உள்ள‌ நியூட்ரினோ ஆராய்சிகூடத்தை எதிர்பதற்காகத்தான் அவர் இப்படி கலாம் அவர்களின் மேல் கல்லெறிந்து பிரபலப்படுத்திக்கொள்ள முயற்சி செய்துள்ளார். நியூட்ரினோ ஆராய்சி கூடம் என்பது நன்மையா , தீமையா என்பது குறித்து எனக்கு தெரியாது. எனவே அது குறித்து நான் கருத்து எதுவும் கூறமுடியாது.

ஆனால் ஞாநியின் கட்டுரை எழுதப்பட்ட விதம் கட்டாயம் கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே கலைஞரை ஒய்வெடுக்க கூறியதும் இதே வகை தான். இப்படி பிரபலமானவர்களின் மேல் கல்லெறிந்து எழுதுவதைவிட ஓ பக்கத்துக்கு ஓய்வு கொடுக்கலாம்.
அப்துல் கலாம் அவர்களை கேவலப்படுத்த முயலும் ஞாநியின் கட்டுரையை வெளியிட்ட குமுதம் இதழ் நிர்வாகிகளும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

ஒகேனக்கல் குடிநீர் பிரச்சனைக்காக திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின் போது பேசிய சத்தியராஜ், சரியான கருத்துக்களை தவறான வழியில் வெளிப்படுத்தினார் என்று எழுதிய அதே ஞாநி, இன்று தனது எதிர்ப்பை மிகக் கேவலமான வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ளதன் மூலம் பிறரை குட்டவோ, பூச்செண்டு கொடுக்கவோ தனக்கு எந்த அருகதையும் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் மீறி இவர் இனியும் பிறரை இந்த வார குட்டு என்ற தலைப்பில் குட்ட முனைவாரானால், முதலில் அப்துல் கலாம் அவர்களையும்,அவரது கனவு என்ற வார்த்தையும் சரியாக புரிந்துகொள்ளாமல் கிண்டலடித்த தனது அறியாமை அல்லது தனது திமிர்தனம் இவற்றில் ஒன்றைத்தான் இவர் குட்டிக்கொள்ள வேண்டும். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•11:18 AM
இது சமையல் குறிப்பு என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்...
நான் 1999ல் சென்னையில் வேலைக்கு சேர்ந்து சில‌ நாட்க‌ளில் ந‌ட‌ந்த‌ க‌தை இது.

க‌ல்லூரி முடிக்கும் வ‌ரை வீட்டில் சொகுசாய் வாழ்ந்து ப‌ழ‌கிய‌ எனக்கு சென்னையில் த‌னியாய் வாழ்வ‌து ப‌ழ‌கிகொண்டிருந்த‌ நேர‌ம் அது.
என்னோடு வேலை பார்த்த‌ இரு பீகார் பைய‌ன்க‌ள், ஒரு திருச்சிகார‌ர், ம‌ற்றும் நான் என‌ 4 பேர் ஒன்றாக‌ ஒரு வீடு எடுத்து த‌ங்கியிருந்தோம்.

பீகார்கார‌ர்களுக்கு சென்னையின் உண‌வை உண்டு ம‌கிழ‌த்தெரியாமையால், வீட்டில் ச‌மைக்க‌லாம் என‌ முடிவெடுத்து ச‌மைக்க‌ ஆர‌ம்பித்தோம். சுடுத‌ண்ணி போட‌க்கூட‌ ச‌மைய‌ல் குறிப்பை தேடும் என‌து ச‌மைய‌ல் திற‌மையை அறிந்த‌தால் என்னை ச‌மைய‌ல்க‌ட்டு ப‌க்க‌மே என் ந‌ண்ப‌ர்க‌ள் விடுவ‌தில்லை.

தின‌மும் சாத‌ம் அல்ல‌து ச‌ப்பாத்தி அத‌ற்கு தொட்டுக்கொள்ள‌ ப‌ருப்பு அல்ல‌து உருளைகிழ‌ங்கு இதை த‌விர‌ வேறெதுவும் அவ‌ர்க‌ளுக்கு தெரியாத‌தால், அவ‌ர்க‌ள‌து விதியின் ப‌டி ஒரு நாள் என்னை அழைத்து எப்ப‌டியாவ‌து சாம்பார் செய் என்று அன்புட‌ன் வேண்டினார்க‌ள்.

இத்த‌ன நாளு என்னைய‌ உக்கார‌வைச்சு சாப்பாடு போட்ட‌ ம‌க‌ராச‌னுங்க‌ கேட்டுட்டாங்க‌ளேனு, நானும் எப்ப‌டியாவ‌து சாம்பார் செய்ய‌னும்னு க‌ள‌த்துல‌ இற‌ங்கிட்டேன்.ஆனா எப்ப‌டி செய்யிற‌துனு தெரியல‌, சாம்பாருக்கு தேவையான மூல‌ப்பொருட்க‌ள் கூட‌ தெரியாது.

1999ல‌ கை தொலைபேசிக‌ள் எல்லாம் இந்த‌ அள‌வுக்கு பிர‌ப‌ல‌ம் கிடையாது. எங்க‌ வீட்ல‌ கேட்க‌லாம்னா, தொலைபேசி செலவே 100 ரூபாய்கு மேல‌ வ‌ரும்.
அப்போ எல்லாம் சென்னையில இருந்து தஞ்சைக்கு தொலை தூர தொடர்பு கட்டணத்தில்(STD) தான் பேசனும், இப்போ மாதிரி உள்ளூர் அழைப்பு கட்டணத்துல பேச முடியாது.

அப்போ தான் என் ந‌ண்ப‌ண் ஒருவ‌ரின் தாயார் சென்னையில் இருக்கும் அவ‌ர்க‌ளது அண்ண‌ண் வீட்டிற்கு வ‌ந்திருந்த‌து நினைவில் வ‌ந்த‌து. உட‌னே அவ‌ங்க‌ள‌ தொலைபேசியில‌ தொட‌ர்பு கொண்டு செய்முறையை வாங்கிட்டேன்.

ஒரு வ‌ழியா ந‌ம்பிக்கை வ‌ந்து, சாம்பார் செய்ய‌ ஆர‌ம்பித்த‌பின்தான் தெரிந்த‌து எங்க‌ள் வீட்டில் புளியே இல்லை ( நானே ஒரு புலினாலும், சாம்பாருக்கு புளி தான் வேணும் பாருங்க). இந்த‌ புலி வைக்கிற‌ சாம்பாருக்கு புளி இல்லாம‌ பேச்சேனு, ம‌றுப‌டியும் என் ந‌ண்ப‌ணின் தாயாரை தொட‌ர்பு கொண்டு கேட்ட‌ப்ப‌, அவ‌ங்க‌ அவ‌ச‌ர‌கால‌ ஆலோச‌னையா த‌க்காளிய‌ போட்டு செய்ய‌ சொன்னாங்க.

ஒரு வ‌ழியா எல்லாம் செஞ்சு முடிச்ச‌ப்புற‌ம் ஏதோ ர‌ச‌ம் மாதிரியும் இல்லாம‌, சாம்பார் மாதிரியும் இல்லாமா ஒரு திர‌வ‌ உண‌வு வ‌கை இருந்துச்சு. (இன்னைய‌ வ‌ரைக்கும் அதுக்குனு த‌னியா ஒரு பெய‌ர் வைக்க‌ல‌).

எல்லாம் த‌யார், சாப்பிட‌ வேண்டிய‌துதான் . அதுவ‌ரைக்கும் வெளியில‌ போய் சுத்திட்டு, சாப்பிட‌ வ‌ந்த‌ பீகார் ம‌க‌ராச‌னுங்க‌, ஆளுக்கு ஒரு கிண்ண‌த்துல‌ இந்த‌ திர‌வ‌ உண‌வ‌ எடுத்து, ஒரு தேக்க‌ர‌ண்டி ( ஸ்பூன்) வைச்சு குடிச்சுகிட்டே, அதையே ஊத்தி சாத‌மும் சாப்பிட்டு முடிச்சுட்டு, க‌டைசியா கேட்டாணுங்க‌ ஒரு கேள்வி.. " ஆமா, இன்னைக்கு உன்ன‌ சாம்பார் செய்ய‌ சொன்னா, நீ சூப் செஞ்சுருக்க‌, எப்ப‌ சாம்பார் வைக்க‌ பேற‌ ? "

பி.கு 1: நான் சாம்பார் வைத்த கதையை கேட்ட ஒரு தோழி, என்மேல் பாவப்பட்டு ஒரு நாள் வீட்டுக்கு வந்து சுவையான சாம்பார் செய்துட்டு போனாங்க. அவங்கள அனுப்பிட்டு வந்து சாதத்துக்கு அரிசி வைச்சுட்டு, அரை மணி நேரம் கழிச்சு பார்த்தா , அரிசி அரிசியாவே இருந்துச்சு. என்னடானு பார்த்தா சமையல் எரிவாயு தீர்ந்து போச்சு. நல்ல சாம்பார் இருந்தும், சாதம் இல்லாமல் போன சோகம் அது. அத்தோட எங்க சாம்பார் முயற்சி நின்னு போச்சு.

பி.கு 2: நல்ல சமையல் குறிப்பு வேணும்ணா நம்ம தூயா பபாவின் வலைப்பூவுல போய் பார்த்துக்கங்க. Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•6:43 PM
அபி அப்பா பதில்களை இரண்டு பாகங்களாகத் தந்திருக்கின்றார் ( பாகம் 1, பாகம் 2) மிக்க நன்றி அபி அப்பா.
ஆனால் பல இடங்களில் கலைஞருக்கே உரிய வார்த்தை விளையாட்டுக்களை காணமுடிகின்றது.

மீண்டும் மீண்டும் நான் மிட்டாய், உணவு உதாரணத்தை உபயோகிக்க வேண்டியிருக்கின்றது. மிட்டாய் கொடுப்பதை தவறு என்று கூறவில்லை.ஆனால் உணவு அளித்துவிட்டு அதை கொடுங்கள் என்றுதானே சொல்கின்றோம்.
இலவச தொலைகாட்சி வழங்குவதால் எந்த வளர்சிப் பணி பாதிக்கின்றது என்று கேட்டுள்ளீர்கள். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் தீட்டப்பட்ட ஒன்று?
10 ஆண்டுகளுக்கு மேலாக திட்டம் கிடப்பில் போடப்பட்டு இன்று 10 மடங்கு அதிகமான செலவில் நிறைவேற்றப்படுகின்றது. அதுவும் ஜப்பான் நாட்டு வங்கியின் நிதியுதவியுடன். இத்தனை நாட்கள் தள்ளிப்போனதற்கு காரணம் நிதியில்லை என்பது தான்.
குடிநீர் திட்டத்திற்கு தேவை 1334 கோடி ரூபாய், இதற்கு அந்நிய நாட்டு நிதியுதவி தேவை. ஆனால் இலவச தொலைகாட்சி திட்டத்திற்கு எந்த நாட்டு வங்கியின் நிதியுதவியும் பெறாமல் 2000 கோடி ரூபாய் செலவழிக்கின்றோம் , இது நியாயமா சொல்லுங்கள்?

இலவசம் என்று கூறி மக்களை வீணாக்க வேண்டாம் என்றுதானே எல்லோரும் வேண்டுகின்றோம். நம் வரிப் பணம் தானே அய்யா இந்த இலவச திட்டங்களில் வீணாய் போகின்றது?
இன்னும் சாலைகள் இல்லாத, மின்வசதியில்லாத,பள்ளியில்லாத கிராமங்கள் எத்தனை உள்ளன தமிழகத்தில்? மின்வசதியே இல்லாத கிராமங்களுக்கு கூட இலவச தொலைகாட்சி கொடுத்த செய்தியும் நாம் படித்தோமே. ஆக அடிப்படை தேவைகளையே பூர்த்தி செய்யாமல் ஏன் ஆடம்பர பொருளை இலவசமாக கொடுக்க வேண்டும்?

ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் 30 ரூபாய் தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை வரவேற்கின்றேன், இதனால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு 100 கோடி. ஆனால் சினிமா கேளிக்கை வரி ரத்தால் ஏற்படும் இழப்பு எவ்வளவு ?
வரிவிலக்கு அளிப்பதனால் பலனடைவது யார்? திரைத்துறையில் இருக்கும் சாதாரண தொழிலாளர்களா? கோடிகளில் புரளும் தயாரிப்பாளர்கள் தானே? இதனால் ஏற்பட்ட நன்மைகள் என்று ஏதாவது உண்டா? குறைந்த பட்சம் திரையரங்குகளிலாவது கட்டணம் குறைந்ததா? ஏன் உள்ளவர்களுக்கே கொடுக்க வேண்டும் ?
ஒரு நிறுவனத்தில் வேலை பார்பவர்கள் அதன் முதலாளிக்கு லாபம் ஈட்டி தருபவர்கள், ஊழியர்கள் அதிக நேரம் வேலை பார்க்க அதிக சம்பளம் கொடுக்கலாம். ஆனால் ஒரு அரசாங்கம் அப்படி செய்வதை எப்படி சரி என்று சொல்வது ? லாபம் வரும் என்றால் ஊக்கத் தொகை அளிக்கலாம். திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு எதற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்? அவர்களால் அரசுக்கு ஏதேனும் லாபம் வருகின்றதா என்ன?
கேளிக்கை வரி விதித்தால் திரைப்படத்தொழில் நசிந்துவிடுமா? இப்போது கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டிருப்பதால் மட்டும் சாமன்ய தொழிலாளர்கள் எல்லாம் மாடி வீட்டு மகாதேவர்களாகவா இருக்கின்றார்கள்? கேளிக்கை வரி ரத்து திரைப்படத்துறையில் வேலை பார்க்கும் சாமன்யர்கள் ஆகட்டும், மற்ற சாமன்யர்களாகட்டும், யாருக்கும் உபயோகம் இல்லாத ஒன்று என்பதே உண்மை.
//" துபாயில் கடந்த 2 மாதங்களாக விஷம் போல விலைவாசிகள் ஏறி வந்துவிட்டன. 2 மாதம் முன்னதாக ஒரு கிலோ அரிசி 27 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு 102 ரூபாய். நம்புங்கள் உண்மை. ஆனால் உலகத்திலேயே 2 ரூபாய்க்கு அரிசி தமிழகத்தில் மட்டுமே கிடைக்கின்றது. துபாய் காசு 20 காசுக்கு 1 கிலோ அரிசி. இது சாதனையா இல்லை வேதனையா? முன்னே போனா கடிக்கிறீங்க பின்னே போனா உதைக்கிறீங்கப்பா. இப்படி ஒரு கேள்வி கேட்டு உங்கள் பதிவை நகைச்சுவை என வகைப்படுத்தி இருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும்."//

துபாயில் அல்ல அய்யா, இங்கு சிங்கப்பூரிலும் அரிசி விலை 4 மடங்கு உயர்ந்துவிட்டது. அதற்கு காரணம் என்னவென்றால், இந்தியாவில் அதிகரித்துவரும் அரிசி விலை உயர்வைத்தடுக்க மத்திய அரசு, அரிசு ஏற்றுமதியை தடை செய்துவிட்டது.
வெளிநாடுகளில் அரிசி இருப்பு குறைந்துவிட்டதாலும், நெருக்கடியை பயன்படுத்தி லாபம் பார்க்கும் வியாபரிகளாலும் தான் இப்படி விலை உயர்ந்துவிட்டது.
2 ரூபாய் அரிசி திட்டத்தில் நான் கடிக்கவும் இல்லை, உதைக்கவும் இல்லை. போலி குடும்ப அட்டைகளை ஒழியுங்கள். மக்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்தி அவர்கள் எல்லோரையும் போல் உண்மையான விலையை கொடுத்து வாங்கும் நிலைக்கு உயர்த்துங்கள். இப்படி சலுகைகளையும், இலவசங்களையும் கொடுத்து சோம்பேறிகள் ஆக்காதீர்கள் என்றுதான் சொல்கின்றேன்.
இதில் நகைச்சுவை என்ன இருக்கின்றது என்று தெரியவில்லை.
//" கலைஞருக்கும் கடலோர காவல் படைக்கும் என்ன சம்மந்தம். கலைஞருக்கும் கடலுக்கும் உள்ள ஒரே தொடர்பு அவரை கடலில் தூக்கி போட்டால் கட்டுமரமாக மிதப்பார். நீங்கள் அதில் ஏறி பயணம் செய்யலாம் அவ்வளவே!! தமிழ் நாட்டின் புலிமலைப்பட்டியில் ஊர்காவல் படையில் வேலை பார்த்து கொண்டு ராவல்பிண்டி ரகீம்கானை பிடித்து வந்து லாக்கப்புல வச்சி எட்டு பக்க "தமில்" வசனத்தை பேசி பேசி அவன் டவுசரை உருவும் விசயகாந்து இல்லைப்பா கலைஞர்!! "//

அண்ணண் லக்கிலுக் அவர்களின் பதிவுக்கு நான் எழுதிய பதிலை நீங்கள் படிக்கவில்லை என்பது, கடற்படை குறித்து நீங்கள் எழுதியுள்ளதில் இருந்தே தெரிகின்றது. விசயகாந் செய்வது திரைபடத்தில், அதுபோல் ஒருவேளை அவரே முதல்வரானாலும் செய்ய முடியாது.

அதே போல் கலைஞர் அல்ல, எவரை தூக்கி கடலில் போட்டாலும் யாரும் கட்டுமரமாக முடியாது.
கலைஞரால் கட்டுமரமாக முடிந்தால் , விசயகாந்தும் ராவல்பிண்டி ரகீம்கானை கைது செய்யமுடியலாம். (இதனால் நான் விசயகாந்தின் ரசிகன் என்றோ, அவரது கட்சிக்காரன் என்றோ நினைத்து விடாதீர்கள்)
ஈழத்தமிழர்களை கொன்று குவிப்பதை தான் தடுக்க முடியவில்லை, குறைந்த பட்சம் நம் இந்திய தமிழர்களை சிங்களப்படைகள் கொல்வதைக் கூடவா பார்த்துக்கொண்டு சும்மாயிருப்பது?
மத்திய கூட்டணி ஆட்சியில் முக்கியத்துவம் வய்ந்த தலைவரும், பாதிக்கப்படும் தமிழர்களின் முதல்வரும் ஆன நம் கலைஞர் ஏன் இதற்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்ககூடாது?

போராடி பெற்ற அமைச்சகங்கள் மக்களுக்கு நன்மை செய்யத்தான் என்று சொன்னீர்கள் உண்மைதான், ஆனால் திறமையாக செயல்பட்ட தயாநிதிமாறனின் பதவியை குடும்ப சண்டையில் பறித்தபின் அதே துறைக்கு நியமிக்கப்பட்ட ராசா என்ன செய்கின்றார்? தயாநிதி அளவுக்கு திட்டங்கள் இல்லையே ? இப்போது மக்கள் நலன் எங்கு சென்றது ? மகனின் நலன் தானே முன் நின்றது?

மற்றபடி செயலலிதா வீட்டில் கோழி திருடிய கதையெல்லாம் உங்கள் வார்த்தைசித்து , அதற்கு நான் என்ன சொல்வது, படித்து ரசிக்கின்றேன்.
//"திமுகவில் இருக்கும் 2 கோடி உருப்பினர்களின் வீட்டு திருமணத்துக்கும், துக்க நிகழ்வுகளுக்கும் கலைஞர் போய் வந்தது போல தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் மட்டுமல்ல அகில உலகத்திலும் ஏதாவது ஒரு தலைவனை காட்டமுடியுமா தங்களால்??? அவர் நடத்தி வைத்த திருமணங்கள் எத்தனை? போய் வந்த துக்க நிகழ்ச்சிகள் எத்தனை? இண்டர்காம் தலைவரா அவர். கொஞ்சமாவது மனசாட்சியோடு கேள்வி கேட்க வேண்டாமா? தமிழகமே அவருக்கு உடன்பிறப்பு தான்! சந்தேகமே இல்லை!"//
ஆகா என்ன அருமையாக என்கேள்வியை திசை திருப்பி விட்டீர்கள்? கலைஞரை நான் என்ன எல்லா தொண்டன் வீட்டு நல்ல, கெட்ட காரியங்களில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றா கேட்டேன்? பதவியை ஏன் குடும்பத்தினருக்கே தருகின்றார் என்று தானே கேட்டேன்?
தகுதி வாய்ந்த எத்தனையோ கட்சிக்காரர்கள் இருந்த போதும் ஏன் கனிமொழிக்கும், கயல்விழிக்கும் வாய்பளிக்க வேண்டும்? இதற்கு பதிலையே காணோம்?
அரசு கேபிள் கழகத்தை செயலலிதா ஆரம்பிக்க முயன்ற போது அதை தடுக்க மாநில ஆளுநரிடம் புகார் கொடுத்த அதே கலைஞர் இன்று ஏன் அரசு கேபிள் கழகம் ஆரம்பிப்பதில் இத்தனை தீவிரம் காட்ட வேண்டும் ? அரசு கேபிள் கழகம் குறித்த கேள்விக்கு உங்களிடம் இருந்து பதில் ஒன்றும் இல்லையே ?

சேது சமுத்திர திட்டம் மிக அருமையானத் திட்டம்தான் அதை நான் குறை சொல்லவில்லை.
ஏழைகளுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டம் மிக நல்லத் திட்டம். இது தான் தூண்டிலை கையில் கொடுப்பது. அவனுக்கு தேவையான் மீனை அவனே பிடித்துக்கொள்வான் அல்லவா? அதை நான் வரவேற்கின்றேன்.

என் கேள்விகள் சாதாரணமாக எல்லோர் மனதிலும் தோன்றும் சந்தேகங்கள். எல்லாத் திட்டங்களையும் எதிர்பதோ, அல்லது விதண்டாவாதம் செய்வதோ என் நோக்கம் அல்ல. நானும் ஒரு திமுக அபிமான குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் , உரிமையுடன் தான் இந்த கேள்விகளை கேட்கின்றேன். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•8:23 PM
கலைஞருக்கு நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் சார்பாக பதிலளித்த லக்கி லுக் அண்ணண் அவர்களுக்கு எனது நன்றிகள்.

இது அவருடைய பதிலுக்கு பதில் பதிவு. ஆனால் இதிலும் சில கேள்விகள் இருக்கலாம். ஆனால் லக்கிலுக் அண்ணா, இதை விதண்டாவாதமாகவோ அல்லது எதிர்கட்சிகளின் பாணியிலோ கேட்கவில்லை. இந்த கேள்விகள் பெரும்பான்மையானவர்களின் மனதில் இருக்கின்றது. ஒரு ஆரோக்கியமான விவாதமாக இதை பாருங்கள். விவாதம் தானே ஒழிய விதண்டாவாதம் அல்ல.

//"தொலைக்காட்சி போன்றவை ஆடம்பரப் பொருட்களாக பார்க்கப்பட்டது சென்ற நூற்றாண்டில், இப்போது அவை அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. முன்பெல்லாம் ஏழைகளுக்கு இலவச பல்பொடி, இலவச செருப்பு வழங்கியது போல இப்போது இலவச டிவி வழங்கப் போகிறோம் என்று தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்தோம். இத்திட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் நாம் ஆட்சிக்கே வந்திருக்க முடியாது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. ஏழைகள் இருக்கும் வரை இலவசத் திட்டங்கள் அவசியமே."//

தொலைகாட்சி என்ப‌து ஒரு ஆட‌ம்ப‌ர‌பொருளாக‌ அல்லாம‌ல் அத்தியாவ‌சிய‌ பொருளாக‌ மாறிவிட்ட‌து என்கின்றீர்க‌ள். ஆனால் நான் என் கேள்வியில் குறிபிட்டிருந்த‌ப‌டி, ப‌சித்த‌வ‌னுக்கு தேவை மிட்டாயா, உணவா?

ம‌க்க‌ள் தீர்ப்பே ம‌கேச‌ன் தீர்ப்பு என்றால் இப்ப‌டி கூட்ட‌ணிக‌ளின் ப‌ல‌த்தில் இல்லாம‌ல் த‌னித்தே ஆட்சியை பிடிக்கும் அள‌வு த‌னிப்பெரும்பான்மை பெற்றிருக்க‌லாமே? அப்போ இந்த இலவசத் திட்டங்களை பிடிக்காதவர்களும் இருக்கின்றார்கள் என்றுதானே அர்த்தம் ?
ஏழைக‌ள் இருக்கும் வ‌ரை இல‌வ‌ச‌த்திட்ட‌ங்க‌ள் அவ‌சிய‌ம் என்கின்றீர்க‌ள். ஆனால் ஏழைக‌ள் முன்னேற்ற‌த்திற்கு என்று என்ன‌ திட்ட‌ம் இருக்கின்ற‌து? ஏழைக‌ள் ஏழைக‌ளாக‌வே இருந்து கொண்டிருந்தால், எத்த‌னை கால‌ம்தான் இல‌வ‌ச‌ங்க‌ளாக‌வே கொடுத்துக்கொண்டிருப்ப‌து?
எத்த‌னைகால‌ம் தான் மீனை கொடுப்ப‌து? தூண்டிலை கொடுங்க‌ள் என்றுதானே சொல்கின்றோம்.

//"அய்யா நேற்று கூட ஒரு 300 கோடி ரூபாய் அளவுக்கு திருநெல்வேலியில் டயர் தொழிற்சாலைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கலைஞரின் முந்தைய 96 ஆட்சியை விட இந்த ஆட்சியில் கல்வித்துறையில் புரட்சி நிகழ்ந்துவருகிறது. அன்றாடம் செய்தித்தாளை வாசிக்கவும். பொங்கிவரும் புனலென புதுப்புது திட்டங்கள் கலைஞரின் ஆட்சியில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தீட்டப்பட்டு, செயலாக்கப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டரை ஆண்டுகளில் இந்த ஆட்சி முழுமை பெறும்போதுதான் இதுவரை வந்த கலைஞரின் ஆட்சிகளிலேயே இது தலைசிறந்த ஆட்சிக்காலம் என்பதை உணர்வீர்கள்."//

கல்வித்துறையில் ஏற்பட்டிருக்கும் புரட்சியை நானும் ஒத்துக்கொள்கின்றேன். கல்வித்துறையை இரண்டாக பிரித்து இரு அமைச்சர்களை நியமித்தது வரவேற்கதக்கது. குறிப்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களின் பணி மிகக்குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. அதை நான் மறுக்கவில்லை. குறிப்பாக‌ ச‌மீப‌த்தில் அவ‌ர‌து தொகுதியில் அவ‌ர் ஏற்பாடு செய்த வேலை வாய்ப்பு முகாம் மிக‌ அதிக‌ள‌வில் ப‌ல‌ருக்கு வேலை வாங்கிகொடுத்தது . அதை எல்லாம் நான் ம‌றுக்க‌வில்லை.

//"துணைநகரத் திட்டம் வேறுவழியில் கண்டிப்பாக நிறைவேறும். அனேகமாக திருப்பெரும்புதூருக்கு அருகில் துணைநகரம் அமையலாம். அதுபோலவே விமானநிலைய விரிவாக்கத்துக்கும் மாநில அரசு கண்டிப்பாக நிலம் ஒதுக்கித்தரும். புதியதாக உருவாகப்போகும் துணைநகரத்தை ஒட்டி அந்த விரிவாக்கம் இருக்கும்."//
சீக்கிரம் நடக்கும் என்று சொல்கின்றீர்கள், நம்புவோம். ஆனால் இது போன்ற நல்ல திட்டங்களில் ஆர்வம் காட்டாமல் ஏன் அரசு கேபிள் கழகம் மற்றும் கலைஞர் டிவியிலேயே கவனத்தைக் காட்ட வேண்டும்?இந்த திட்டங்கள் எல்லாம் கிணற்றில் போட்ட கல்லாக அல்லவா இருக்கின்றன?

//"சினிமா என்ற தொழில் கிட்டத்தட்ட சிதையும் நிலையில் உள்ளது. சினிமாவில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கானோரை சினிமாவில் இருக்கும் பெரிய மனிதர்கள் காப்பார்களோ இல்லையோ, அவர்களுக்காக கலைஞர் எப்போதும் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவர்களது உரிமைகளுக்கு குரல் கொடுப்பார். சினிமாத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதியே அவர்களுக்க் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. கேளிக்கைவரி சலுகை வழங்கினாலும் கூட சினிமாத்துறை மூலமாக மற்ற வகைகளில் அரசுக்கு கணிசமான வருவாய் வந்துகொண்டு தானிருக்கிறது."//
சினிமா துறையிலும் அடித்தட்டு மக்கள் இருக்கின்றார்கள். ஆனால் உண்மையாக சொல்லுங்கள், கேளிக்கை வரிச்சலுகைகளால் அவர்கள் தான் பலனடைகின்றார்களா? பலனடைவது தயாரிப்பாளர், விநியோகிப்பவர், மற்றும் திரையர‌ங்கு உரிமையாளர்கள் தானே? எல்லாத் தயாரிப்பாளரும் நேர்மையாய் எல்லா கணக்கு வழக்கையும் தயாரித்து வரி கட்டி கொண்டா உள்ளார்கள்? அங்கு கறுப்பு பணம் அதிகம் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? இப்படி கறுப்பு பணம் மூலம் ஏற்கனவே வரி ஏய்பவர்களுக்கு ஏன் மேலும் வரிச்சலுகை ? மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரியை எடுத்துக்கொண்டுதானே சம்பளமே கிடைக்கின்றது. இவர்கள் நினைத்தால் கூட வரி ஏய்ப்பு செய்ய முடியாது. ஆனால் திரைப்படத்துறை அப்படியா?

//"மகத்தான திட்டம் என்று சொல்கிறீர்கள். ஒரு மகத்தான திட்டம் எப்படி சோம்பேறிகளையும், கடத்தல்காரர்களையும் உருவாக்க முடியும்? 2 ரூபாய் அரிசித்திட்டம் மிகச்சிறப்பாகவே நடக்கிறது. இதுவரை தினமலர் கூட சொல்லாத ஒரு புகாரை நீங்கள் கற்பனையாக சொல்லுவதாகவே நினைக்க வேண்டியிருக்கிறது."//
ம‌க‌த்தான‌ திட்ட‌ம்தான் ஆனால் அது த‌வ‌றாக‌ உப‌யோகிக்க‌ப்ப‌டுவ‌துதான் பிர‌ச்ச‌னையே. ஒரு மாத‌த்திற்கு 30கிலோ அரிசி 2ரூபாய் விலையில் வெறும் 60 ரூபாயில் வாங்கிவிட‌லாம்.இது ஒரு கூலி தொழிலாளியின் ஒரு நாள் ச‌ம்ப‌ள‌த்தை விட‌ குறைவு. ஆக‌ ஒரு மாத‌ தேவையை ச‌மாளிக்க‌ 10 நாட்க‌ள் வேலை பார்த்தால் போதும் என்று தொழிலாள‌ர்க‌ள் நினைக்கின்றார்க‌ள். இது எங்க‌ள் கிராம‌த்தில் கூட‌ ந‌ட‌க்கின்ற‌து. வ‌ய‌ல்க‌ளில் விவ‌சாய‌ வேலைக்கு வ‌ரும் கூலித்தொழிலாள‌ர்க‌ள், ஒழுங்காக‌ வ‌ருவ‌தில்லை. ஒரு சில‌ர் இதை ந‌ன்றாக‌ உப‌யோகித்து முன்னேறுகின்ற‌ன‌ர். ஆனால் பெரும்பான்மையின‌ர் இத‌னால் சோம்பேறிக‌ளாகின்ற‌ன‌ர். ச‌ரி, க‌ட‌த்த‌ல் எப்ப‌டி ந‌ட‌க்கின்ற‌து ? அடிக்க‌டி நியாய‌ விலைக்க‌டை அரிசி க‌ட‌த்தப்ப‌டுவ‌துகுறித்து நீங்க‌ள் செய்திதாள்க‌ளில் ப‌டித்திருப்பீர்க‌ள். த‌மிழ்நாட்டில் மொத்த‌ம் 60 ல‌ட்ச‌ம் போலி குடும்ப‌ அட்டைக‌ள் இருப்ப‌தாக‌ உண‌வுத்துறை அமைச்ச‌ர் திரு.வேலு ச‌ட்ட‌ச‌பையில் கூறியுள்ளார். ஒரு அட்டைக்கு ஒரு மாத‌த்திற்கு 30கிலோ வீத‌ம் 60 ல‌ட்ச‌ம் அட்டைக‌ளுக்கு எவ்வ‌ள‌வு அரிசி இந்த‌ குறைந்த‌ விலையில் செல்கின்ற‌து ? அது எல்லாம் க‌ட‌த்த‌ல்கார‌ர்க‌ளின் கைக‌ளுக்குத்தானே செல்கின்ற‌து? போலி குடும்ப‌ அட்டைக‌ளை க‌ளைய‌ இன்னும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வில்லையே ? போலி அட்டைக‌ள் அனைத்தும் இந்த‌ ஆட்சியில் கொடுக்க‌ப்ப‌ட்ட‌வை என‌ நான் சொல்ல‌வில்லை. ஆனால் க‌ளைய‌ தீவிர‌மான‌ ந‌ட‌வ‌டிக்கை தேவை என்றுதான் சொல்கின்றேன்.

//"வேறு என்ன செய்யமுடியும்? கலைஞரா துப்பாக்கி எடுத்துக்கொண்டு போய் அவர்களை காக்க முடியும்? இந்திய மீனவர்கள் கொல்லப்படும் போதெல்லாம் கலைஞர் அதற்கான வருத்தங்களை தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார், நடவடிக்கை கோருகிறார். கடற்பாதுகாப்பு மத்திய அரசின் கையில்தானே இருக்கிறது?"//
க‌லைஞ‌ரை துப்பாக்கி தூக்க சொல்ல‌வில்லை. ஒரு முத‌ல‌மைச்ச‌ர், அதுவும் ம‌த்தியில் ஆளும் கூட்ட‌ணியில் மிக‌ செல்வாக்குள்ள‌ த‌லைவ‌ர், வெறும் வ‌ருத்த‌ம் தெரிவிப்ப‌தும், க‌டித‌ம் எழுதுவ‌தும் ம‌ட்டும்போதுமா? ஒரு நிர‌ந்த‌ர‌ தீர்வுகாண‌ வலியுறுத்த‌ வேண்டாமா? கூறிய‌ப‌டி இலாக்கா ஒதுக்காமையால் ப‌த‌வியேற்ற‌ திமுக‌ அமைச்ச‌ர்க‌ள் த‌ங்க‌ள் பொறுப்புக‌ளை ஏற்காமால் போராட‌வில்லை? அதுபோல் த‌மிழ‌ர்க‌ளின் உயிர்காக்க‌ ஒரு அழுத்த‌மான‌ போராட்ட‌ம் வேண்டாமா? இவ‌ர் அழுத்த‌ம் கொடுத்தால் ம‌த்திய‌ அர‌சு கேட்காம‌லா போகும்?

//" கலைஞரின் வாழ்வே போராட்டங்களால் நிறைந்தது. இதுகூட தெரியாமல் நீங்கள் எப்படித்தான் தமிழனாக இருக்கிறீர்களோ தெரியவில்லை. 1938 இந்தியெதிர்ப்பு போராட்டத்தில் தொடங்கி கல்லக்குடி போராட்டம், 1965 இந்தியெதிர்ப்பு போராட்டம், 1976 மிசா சட்டத்தை எதிர்த்துப் போராட்டம், 1980களில் ஈழத்தமிழருக்கான போராட்டம், எப்போதுமே இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் என்று போராளியாகவே கலைஞர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்."//
க‌லைஞ‌ரின் போராட்ட‌ங்க‌ள் தெரியாத‌ த‌மிழ‌ன் இல்லை நான். அவ‌ர் ஏற்க‌ன‌வே பல‌ போராட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்திய‌வ‌ர் என்ப‌தால் தான் த‌ற்போதும் அவ‌ரிட‌ம் இருந்து எதிர்பார்கின்றோம். 1980 க‌ளில் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ போராடினார். ஆனால் இன்ற‌ள‌வும் ஈழ‌ப்பிர‌ச்ச‌னை தீராம‌ல் தானே இருக்கின்ற‌து? இப்போது ஏன் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வ‌ளிக்க‌வில்லை? ச‌ட்ட‌ம‌ன்ற‌த்தில் தீர்மான‌மிய‌ற்றிய‌து ம‌ட்டும் போதாதே, அந்த‌ தீர்மானாத்தால் எந்த‌ உப‌யோக‌மும் இல்லை என்பது உங்க‌ளுக்கே ந‌ன்றாக‌ தெரியும். அது ம‌ட்டும் போதும் என்று நினைக்கின்றீர்க‌ளா?

//"இந்த கேள்வி மூலமாக என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்? கள்ளச்சாராயத்தை சட்டப்பூர்வமாக அனுமதிக்கச் சொல்கிறீர்களா? பூரணமதுவிலக்கை கடுமையாக வற்புறுத்திய காந்தி பிறந்த குஜராத்தில் கூட கள்ளச்சாராயச் சாவுகள் நடந்து வருகிறது."//

பூர‌ண‌ ம‌துவில‌க்கு வேண்டும் என்று சொல்ல‌வில்லை. க‌ள்ள‌ சாராய‌த்தை ஒழியுங்க‌ள் என்றுதான் சொல்கின்றேன். டாஸ்மாக்கில் இந்தியாவில் த‌யாரிக்கும் அய‌ல்நாட்டு ம‌துவ‌கைக‌ளை (IMFL) விற்கும் போது ஏன் க‌ள் இற‌க்க‌ அனும‌திக்க‌ கூடாது ? குடிப்ப‌வ‌ர்க‌ள் குடிக்க‌த்தான் செய்வார்க‌ள், அவ‌ர் அவ‌ர்களாகப் பார்த்து திருந்தினால்தான் உண்டு. ம‌ற்ற‌ ம‌துவ‌கைக‌ளோடு ஒப்பிடும்போது க‌ள் ஒன்றும் கொடிய‌து அல்ல‌வே? அதை ஏன் அனும‌திக்க‌ கூடாது?

//"தமிழை செம்மொழியாக ஆக்காமல் இருந்திருந்தால் எல்லாத் தமிழன் வீட்டிலும் அடுப்பு எரிந்துவிட்டிருக்குமா? - சும்மா ஏதாவது வார்த்தைஜாலத்தோடு கேட்கவேண்டுமே என்று கேட்காமல் கொஞ்சமாவது சிந்தித்து கேள்விகள் கேட்கவும்."//
நீங்க‌ள் தான் என‌து கேள்வியை புரிந்து கொள்ள‌வில்லை. த‌மிழை செம்மொழியாக்கிய‌து ம‌ட்டும் போதாது, த‌மிழ‌னின் வாழ்வும் செம்மையாக‌ வ‌ழிசெய்ய‌ வேண்டும் என்று தான் கேட்டுள்ளேன். இதில் வார்த்தை ஜால‌ம் ஏதுமில்லை. க‌லைஞ‌ரிட‌மே வார்த்தை ஜால‌ம் காட்டும் அள‌வுக்கு நான் பெரிய‌வ‌ன் இல்லை.

//" உங்களுக்கு அப்படி ஒரு ஐயம் ஏற்பட்டதற்காக வருந்துகிறோம். திமுகவில் கலைஞர் குடும்பத்தை தவிர வேறு எவருமே இல்லையா? தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் இரண்டு கோடி திமுகவினர் இருக்கிறார்கள். அந்த இரண்டு கோடி பேரும் கலைஞர் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்கிறீர்களா? "//
திமுக‌ வில் 2 கேடிக்கும் மேல் உறுப்பின‌ர்க‌ள் இருக்கின்றார்க‌ள்,ஆனால் க‌ட்சியில் எந்த‌ பொறுப்பிலுமே இதுவ‌ரை இருந்திராத‌, க‌ட்சி ப‌ணி எதுவும் செய்யாத‌வ‌ர்க‌ளுக்கு எல்லாம் எப்ப‌டி ப‌த‌வி கிடைக்கின்ற‌து?
ஸ்டாலின் த‌விர‌ க‌லைஞ‌ர் குடும்ப‌த்தில் யார் தீவிர‌ க‌ட்சிப்ப‌ணியாற்றிய‌து? முர‌சொலி மாற‌னின் ம‌க‌ன் என்ப‌தை த‌விர‌ வேறு எந்த‌ த‌குதியும் இல்லாத‌ போதும் த‌யாநிதி மாற‌ன் பார‌ளும‌ன்ற‌ உறுப்பின‌ராகி, ம‌த்தியில் கேபின‌ட் அமைச்ச‌ராக‌வும் முடிந்த‌து. வேறு யாருக்காவ‌து இப்ப‌டி வாய்ப்பு கிடைக்குமா?
திற‌மையாக‌ ப‌ணியாற்றிய‌ போதும் சொந்த‌ குடும்ப‌ மோத‌லால் அவ‌ர‌து ப‌தவியும் ப‌றிபோய்விட்ட‌து.
இன்று க‌னிமொழிக்கு வாய்ப‌ளிக்க‌ப்ப‌ட்ட‌து எப்ப‌டி? 2 கோடி பேருக்கு மேல் உறுப்பின‌ர்க‌ளை கொண்ட‌ திமுக‌ வில் க‌னிமொழியை விட‌ அனுப‌வ‌ம் வாய்ந்த‌ க‌ட்சி ப‌ணியாற்றிய‌வ‌ர்க‌ள் இல்லையா என்ன‌?
எத்த‌னையோ த‌குதிவாய்ந்த‌, ப‌ல‌ மேடைக‌ளில் பேசிய‌ அனுப‌வமிக்க‌ க‌ழ‌க‌ பேச்சாள‌ர்க‌ளுக்கு கிடைக்காத‌ வாய்ப்பு க‌ய‌ல்விழிக்கு எப்ப‌டி கிடைத்த‌து? இதையெல்லாம் பார்க்கும் எவ‌ருக்கும் ஐய‌ம் ஏற்ப‌டத்தானே செய்யும்?

//"விதண்டாவாதமாக கேட்டாலும் பதில் கொடுத்திருக்கிறோம். "//
உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி. இது விதண்டாவாதம் இல்லை, விவாதம் தான் என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லிக்கொள்கின்றேன். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•1:59 PM
அபி அப்பா எழுதிய பதிவுக்கு நான் அளித்த பின்னூட்டம்தான் இந்த பதிவு.

அபி அப்பா, நானும் கலைஞரின் ரசிகன் தான் ஆனால் இந்த ஆட்சியில் கலைஞரின் செயல்பாடுகள் எனக்கு பிடிக்கவில்லை.எனவே கலைஞருக்கு சில கேள்விகள் உங்கள் மூலமாக.
பதில் கலைஞர் சொன்னாலும் சரி அல்லது நீங்களே அவர் சார்பாக சொன்னாலும் சரி, கருத்து சரியாக இருப்பின் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.

இலவச டிவி என்பது, பசியால் அழும் குழந்தைக்கு இனிப்பு மிட்டாய் கொடுத்து சமாளிப்பது போன்றது. மிட்டாய் பசிக்கு உணவாகாது அல்லவா, அழும் குழந்தை மிட்டாயை பார்த்து சற்றே அழுகையை நிறுத்தி சிரிக்கலாம், ஆனால் அது நிரந்தரம் அல்ல. பசி தீரும் வரை அது அழத்தானே செய்யும். இன்னும் எத்தனை காலம் தான் இப்படி இலவசங்களின் பெயரால் மக்களை ஏமாற்ற முடியும்? 1996 - 2001 ஆட்சியில் செய்த அளவுக்கு கூட இந்த ஆட்சியில் நலத்திட்டங்கள் இல்லையே?

பா.ம.க வின் நிர்பந்தத்தால் தானே துணை நகரத்திட்டம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் போன்றவற்றை அறிவித்துவிட்டு நிறுத்தினீர்கள்? அதை இப்போது தீவிரமாக செயல்படுத்தலாமே? சென்னையில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்த பல வருடங்களுக்கு பிறகு பன்னாட்டு விமான நிலையங்கள் அமையப் பெற்ற பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் இன்று புதிய நவீன விமான நிலையங்கள் அமைந்துவிட்டன. ஆனால் சென்னை இன்னும் தூங்கி வழிகின்றது.

இலவச தொலைகாட்சியிலும், அரசு கேபிள் கழகத்திலும் காட்டும் ஆர்வம் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திலும், முல்லைப் பெரியார் அணை, பாலாறு, காவிரி பிரச்சனைகளிலும் ஏன் இல்லை ?
த‌மிழ்நாட்டில் த‌மிழில் தான் திரைப்ப‌ட‌ங்க‌ளுக்கு பெய‌ர் வைக்க‌ வேண்டும் என்று திரை குடும்ப‌த்தின் மூத்த‌ பிள்ளையாகிய‌ நீங்க‌ள் சொன்னால் உங்க‌ள் சினிமாக்கார‌ர்க‌ள் கேட்க‌ மாட்டார்களா ? அத‌ற்காக‌ த‌மிழில் பெய‌ர் வைத்தால் வ‌ரிவில‌க்கு என்று அர‌சாங்க‌த்திற்கு வ‌ரும் வ‌ருமான‌த்தை விட்டுக் கொடுக்க‌த்தான் வேண்டுமா?

க‌ட‌லூர் மாநாட்டில் பெண்க‌ளின் ந‌ல‌னுக்காக‌ எரிவாயு விலையில் 30 ரூபாயை அர‌சே ஏற்கும், அத‌னால் அர‌சுக்கு 100 கோடி ந‌ட்ட‌ம் என்று சொன்னீர்க‌ளே? கேளிக்கை வ‌ரி ர‌த்தால் அர‌சுக்கு ஏற்ப‌டும் வ‌ரி இழ‌ப்பு எவ்வ‌ள‌வு ? அதை ஒரு முறை கூட‌ நீங்க‌ள் சொன்ன‌தில்லையே ஏன்? கேளிக்கை வரியை வசூலித்தால் மொத்த விலையுவர்வான 50 ரூபாயையுமே ( ஒரு சிலிண்டருக்கு ) அரசே ஏற்கலாமே?

நீங்க‌ள் கேளிக்கை வ‌ரியை ர‌த்து செய்த‌தால் திரைய‌ர‌ங்குக‌ளில் க‌ட்ட‌ண‌ம் குறைந்துள்ள‌தா? அப்ப‌டியே குறைந்தாலும் இதுவும் ப‌சியால் அழும் பிள்ளைக்கு அளிக்க‌ப்ப‌டும் இன்னொரு மிட்டாய் தானே ஒழிய‌ , ப‌சி தீர்க்கும் உண‌வில்லை.

ஒருவ‌ன் மீனை கேட்டால் அவ‌னுக்கு தூண்டிலை கொடு என்று ஒரு ப‌ழ‌மொழி உண்டு. ஆனால் நீங்க‌ள் தூண்டிலை கேட்ப‌வ‌னுக்கு கூட‌ செத்துப்போன‌ மீனையோ அல்ல‌து மிட்டாயையோ கொடுத்து , உழைக்க‌ நினைப்ப‌வ‌னையும் சோம்பேறி ஆக்குகின்றீர்க‌ள்.
2 ரூபாய்கு ஒரு கிலோ அரிசி எனும் ஒரு ம‌க‌த்தான‌ திட்ட‌த்தின் மூல‌ம் ஒரு புற‌ம் சோம்பேறிக‌ளையும், ம‌றுபுற‌ம் அரிசி க‌ட‌த்த‌ல்கார‌ர்க‌ளையும் உருவாக்கிவிட்டீர்க‌ள்.

ந‌ம் பார‌த‌ நாட்டோடு மூன்று முறை நேரடியாக‌ போரிட்ட‌ இன்றளவும் மறைமுகமாக போரிடும் எதிரியாக‌ ந‌ட‌ந்து கொள்கின்ற‌ பாகிஸ்தான் நாட்டின் க‌ட‌ற்ப‌டை கூட‌ எல்லை தாண்டும் ந‌ம் நாட்டு மீன‌வ‌ர்க‌ளை சுட்டுக் கொன்ற‌தில்லை.

ஆனால் பார‌த‌த்தின் த‌ய‌வுட‌ன் இருப்பவர்களும், நண்பர்களாக தம்மை காட்டிக்கொண்டு ஆயுதமும் இன்ன பல உதவிகளும் பெற்றுக்கொண்டு, ந‌ம் தொப்புள் கொடி உற‌வுக‌ளான‌ ஈழத் த‌மிழ‌ர்க‌ளை கொன்று குவிக்கும் இல‌ங்கை நாட்டின் க‌ட‌ற்ப‌டை ந‌ம் மீன‌வ‌ர்க‌ளை சுட்டுக் கொல்லும் போது, உட‌னே பிர‌த‌ம‌ருக்கு ஒரு க‌டித‌ம் ம‌ட்டும் எழுதுவீர்க‌ள். ( ஒரு வேளை நீங்க‌ள் எழுதும் எந்த‌ க‌டித‌மும் பிர‌த‌மருக்கு போய் சேர‌வில்லையோ ? அஞ்ச‌ல் துறை அமைச்ச‌ர் எப்போதும் உங்க‌ளுக்கு தோள் கொடுத்து கொண்டே இருப்ப‌தால் அவ‌ரை கேட்டாலும் தெரியாது).

2004ல் மத்திய அமைச்சரவையில் திமுகா விற்கு கேட்ட‌ இலாக்காக்க‌ளை ஒதுக்க‌வில்லை என‌ போராடி பெற்ற‌ நீங்க‌ள், அது போன்ற‌ ஒரு போராட்ட‌த்தை ம‌க்க‌ளுக்காக‌ ஒரு போதும் செய்த‌தில்லையே ஏன்?

த‌மிழ‌க‌ மீன‌வ‌ர்க‌ள் சுட‌ப்ப‌டும் போது ம‌த்திய‌ அர‌சின் க‌வ‌ன‌த்தை ஈர்க்க‌ இப்ப‌டி ஒரு போராட்ட‌ம் ந‌ட‌த்தி இருக்க‌லாம், அல்லது நெல்லை விட‌ உற்ப‌த்தி செல‌வுகுறைவான‌ கோதுமைக்கு ஆதார‌ விலை குவின்டாலுக்கு 1000 ரூபாய் என்றும் நெல்லுக்கு அதை விட‌ குறைவாக‌வும் நிர்ண‌யித்த‌ போது போராடியிருக்க‌லாம், ஆனால் நீங்க‌ள் அதை செய்ய‌வில்லையே?

பூரண மதுவிலக்கு வேண்டும் என்று கேட்டால் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாமல் போய்விடும் என்பதால் பூரண மதுவிலக்கு ஏற்படுத்த முடியாது என்றீர்கள். ஆனால் இப்போது மட்டும் கள்ள சாராயம் முற்றிலுமாக ஒழிந்துவிட்டதா என்ன? அவ்வப்போது கள்ளச் சாராய சாவுகளும் நடந்துகொண்டுதானே இருக்கின்றன ?

த‌மிழை செம்மொழி என்று சொன்னால் ம‌ட்டும் எல்லாத் த‌மிழ‌ன் வீட்டிலும் அடுப்பு எரிந்துவிடுமா? தமிழும் வளரவேண்டும் தமிழனும் வளரவேண்டும் அல்லவா?

ஒட்டுமொத்த தமிழர்களையும் உடன்பிறப்பே என்று அழைக்கும் நீங்கள் மொத்த தமிழகத்தையும் உங்கள் குடும்பமாக நினைத்தீர்கள் என்று அக மகிழ்ந்த எங்களுக்கு, இன்று உங்கள் குடும்பம் மட்டும்தான் ஒட்டுமொத்த தமிழகம் என நினைக்கின்றீர்களோ என்ற ஐயம் ஏற்பட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. நடப்பவை எல்லாம் அதை உறுதிபடுத்தும் விதமாகத்தான் இருக்கின்றன.

இதற்கெல்லாம் பதில் கிடைக்குமா? Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•1:05 AM
ஒரு சமுதாயம் முன்னேற மிகச் சிறந்த வழி, அது முழு கல்வியறிவு பெறுவதுதான்.
தீயாலோ, நீராலோ அழிக்க முடியாததும், எந்த கள்வராலும் கவரமுடியாததும், கொடுக்க கொடுக்க குறையாமல் அதிகரிப்பதும் கல்வியறிவு ஒன்றுதான்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் கல்வி எல்லோர்க்கும் எட்டும் நிலையில் இல்லை. தனியார் கல்வி நிலையங்களில் கல்வி என்பது ஏழைகளுக்கு எட்டாத இடத்தில்தான் இன்னும் இருக்கின்றது. அரசு பள்ளிகளில் கல்வியின் தரம் தற்போது முன்னேறிக்கொண்டிருந்தாலும் இன்னும் பல இடங்களில் தரம் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இல்லை.

ஏழைகளுக்கு எட்டாக்கனியாகிவிட்ட கல்வியை அவர்களுக்கு தரும் ஒரு சில நல்ல உள்ளங்களும் உள்ளார்கள்.

வ‌ருடா வ‌ருட‌ம் விகடன் குழுமத்தினர் பல ஏழை மாணவர்களின் நிலையை குறிப்பிட்டு அவர்களுக்கு கல்வி உதவி பெற்றுத் தந்து வழிகாட்டிகொண்டுள்ளார்கள்.
புதுகோட்டை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், மத்திய இணை அமைச்சருமான திரு.ரகுபதி அவர்கள், விகடனின் வேண்டுகோள்களை ஏற்று ப‌ல‌ ஏழை மாண‌வ‌ர்க‌ளுக்கு அவ‌ர‌து க‌ல்லூரியிலேயே த‌ங்கும் வ‌ச‌தியுட‌ன் இல‌வ‌ச‌ க‌ல்வி சேவை அளித்து வ‌ருகின்றார்.

இந்த‌ ஆண்டு ப‌னிரென்டாம் வ‌குப்பு தேர்வு முடிவுக‌ள் வ‌ந்த‌வுட‌ன் க‌ல்வி உத‌விகேட்டு விக‌ட‌னுக்கு க‌டித‌ம் எழுதிய‌ மாண‌வ‌ர்க‌ளுக்காக‌, விக‌ட‌ன் சார்பில் கும்ப‌கோண‌ம் அருகில் கோவிலாச்சேரி என்னும் ஊரில் உள்ள‌ அன்னை க‌ல்லூரியை அணுக, முத‌லில் 20 பேருக்கு ம‌ட்டும் இல‌வ‌ச‌ ப‌டிப்பு வ‌ழ‌ங்குவ‌தாக‌ கூறிய‌ நிர்வாக‌ம், உத‌வி கேட்ட‌ மாண‌வ‌ர்க‌ளை பார்த்த‌பின் எல்லோருக்குமே (116 பேர்) இல‌வ‌ச‌மாக‌ க‌ல்வியும், அவ‌ர்க‌ள‌து ஊரிலிருந்து க‌ல்லூரி வ‌ந்து போக‌ இல‌வ‌ச‌ பேருந்து வ‌ச‌தியும் அளித்துள்ளார்க‌ள்.

ஒரு த‌னியார் சுய‌ந‌தி க‌ல்லூரிக்கு வ‌ருமான‌மே மாண‌வ‌ர்க‌ளிட‌ம் இருந்து அவ‌ர்க‌ள் வ‌சூலிக்கும் க‌ட்ட‌ண‌ம்தான். ஆனால் அதையே அவ‌ர்க‌ள் வேண்டாம் என்று சொல்ல மிக‌ப்பெரிய‌ ம‌ன‌ம் வேண்டும். கல்லூரியின் நிர்வாகிகள் அப்துல் கபூர், ஹிமாயூன் கபீர், அன்வர் கபீர், அகமது யாசின் ஆகியோருக்கு அந்த பெரிய மனம் இருக்கின்றது. வாழ்க அந்த வள்ளல்கள். சரியான நேரத்தில் உதவி தேவைப்படும் மாணவர்களையும், உதவி செய்யும் நல்ல உள்ளங்களையும் இணைக்கும் பாலமாக இருந்த விகடனும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே.

கல்வி கட்டணத்திற்கு அடுத்தபடியாக மாணவர்களுக்கு மிக முக்கிய தேவை பாட புத்தகங்கள். பள்ளிகளில் இலவச புத்தகங்கள் இருப்பதால் ஏழை மாணவர்கள் சமாளித்துவிடுகின்றார்கள். ஆனால் கல்லூரிகளில் புத்தகங்களின் விலை வேறு மிக அதிகமாக இருக்கும்.

புத்தகம் வாங்க முடியாமல் தவிக்கும் விருதுநகர் மாவட்ட மாணவர்களுக்கு சிவகாசி தொழிலதிபர்கள் அணில் மேத்தா, சிவசண்முகம், உமாசங்கர், முத்துவிஜயன், ராஜா சங்கர் மற்றும் வெங்கடேஷ் ஆகிய ஆறு பேரும் எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், தங்கள் சொந்த பணத்தில் கடந்த 10 ஆண்டுகளாக, ஆண்டுக்கு லட்சம் ரூபாய்க்கு உயர் கல்விக்கான பாட புத்தகங்களை வாங்கி ஓசையில்லாமல் மாணவர்களுக்கு உதவி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்களுக்கு உதவும் வகையில் புத்தக வங்கி ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளனர். இதில் சுமார் 10 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. மாறிவரும் கல்வி தரத்திற்கு ஏற்ப தொழில்நுட்பம், கணிப்பொறி அறிவியல்(Computer Science) , உயிர் தொழில்நுட்பம் ( Bio Technology) என புதிய பாடதிட்டங்களில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு தேவைப்படும் புத்தங்களை வாங்குகின்றனர். ஒவ்வொரு புத்தகமும் ரூ.300 முதல் ரூ.ஆயிரம் வரை மதிப்புடையது. மாணவர்கள் அதை பயன்படுத்திவிட்டு திரும்பத் தந்துவிட வேண்டும் என்ற நியதியும் உண்டு.

இதை தவிர டாட்டா கன்சல்டன்சி (TCS) நிறுவனத்தில் வேலைபார்க்கும் மென்பொருள் வல்லுநர்கள் சேர்ந்து உருவாக்கிய வி ஷேர் ( VShare ) அமைப்பு. இதில் உலகெங்கும் மென்பெருள் துறையிலும், மற்ற துறைகளிலும் வேலை பார்க்கும் பலர் ( நான் உட்பட) உறுப்பினர்கள். உறுப்பினர்கள் தரும் பணத்தை கொண்டு, இவ்வமைப்பு பலருக்கும் உதவி வருகின்றது.
சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் சாலமன் சொசைட்டி எனும் ஆதரவற்ற சிறார்கள் இல்லம், பாதை என்ற சிறார்கள் மற்றும் முதியோர் இல்லம் ஆகியவற்றிற்கு குழந்தைகளின் படிப்பு செலவு, அவர்களின் உணவுத் தேவைகள் என‌ முழு உதவிகளையும் செய்து வருகின்றோம். இது தவிர எமது உறுப்பினர்கள் மூலமாக உதவி கேட்பவர்களுக்கு கல்வி உதவிகளும், மருத்துவ உதவிகளும் செய்துவருகின்றோம்.

எங்களைப் போல பலரும் குழுக்களாக இணைந்து இதே போல் செய்துவருகின்றார்கள். உங்களுக்கு தெரிந்து யாரும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.

நம்மில் பலருக்கும் இப்படி நல்ல காரியங்களில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் எப்படி செய்வது, யார் மூலம் செய்வது என்று தெரியாமல் இருக்கலாம். ஒரு குழுவாக இணைந்து வி ஷேர் ( VShare) போல செயல்படுங்கள், அல்லது உங்கள் சிந்தனையோடு ஒத்துபோகும் நண்பர்களுடன் இணைந்து ஒரு குழுவை ஆரம்பித்து செயல்பட ஆரம்பியுங்கள். உதவி வேண்டுவோர் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

உதவி தேவைப்படுவோர் அதிகம், ஆனால் உதவும் உள்ளங்கள் இன்னும் வேண்டும். உங்களுள் உதவும் எண்ணம் இருப்பின் இன்றே ஆரம்பியுங்கள். Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க