உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்று எல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.இது உழவனின் வாழ்க்கையை அலசும் தொடர்
வயலுக்குள்ளும், வெளியேயும் எங்கள் சொந்தங்கள் சந்திக்கும் சவால்களை உங்களுக்கு சொல்லவே இந்த தொடர்.
எனக்கு தெரிந்த பயிர்களான நெல், கரும்பு போன்ற பயிர்களை விவசாயம் செய்வது குறித்தும், அதில் ஆரம்பம் முதல், கடைசிவரை அதாவது விதைப்பில் இருந்து, அறுவடை செய்து பணமாக்குவது வரை விவசாயி என்ன பாடுபடுகின்றான் என்பது குறித்தும் விளக்கப்போவதுதான் இந்த தொடர்.
கரும்பு சாறும், இந்திய பொருளாதாரமும் என்ற எனது பதிவிற்கு பின்னூட்டமிட்ட என் நண்பர் அவர்களின் கேள்விகளுக்கு நான் அளித்த பதிலின்படி இத்தொடரை எழுதுகின்றேன்.
என்னைப்போல் விவசாயகுடும்பத்தை சேர்ந்த பல நண்பர்களும் பரந்துவிரிந்த இவ் வலையுலகில் இருப்பீர்கள். என் தொடரை படித்து உங்கள் ஆலோசனைகளை சொல்லுங்கள்.
விவசாயம் என்பதை வெளியில் இருந்து மட்டுமே பார்த்தவர்கள் என்னோடு வாருங்கள், எங்கள் வயல்வெளிகளை சற்று பார்த்துவிட்டு வருவோம்.
முதலில் தஞ்சை மாவட்ட விவசாயிகளின் நெல் சாகுபடியை குறித்து பார்ப்போம்.
வழக்கமாக ஜீன் மாதம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டால் அந்த வருடம் இரு போகம் நெல் விளையும். போதுமான அளவு நீர் இல்லாமல், அணை திறப்பு தள்ளிபோனால் ஒரு போகம் மட்டும்தான் நெல் விளைவிக்க முடியும்.
சரி, நடவு முதல் அறுவடை வரை ஆகும் செலவுகள் என்னவென்று பார்ப்போமா?
உழவு செய்ய உழவுஇயந்திர (Tractor) கூலி ஒரு ஏக்கருக்கு ஒரு உழவுக்கு 300 ரூபாய். கட்டாயம் 3 உழவு செய்துதான் நடவு செய்யமுடியும்,ஆக உழவு கூலி மட்டும் 900ரூபாய்.
நாற்றங்காலில் இருந்து நாற்று பறித்து நடவு வயலில் வைக்க ஒரு ஏக்கருக்கு 700 ரூபாய் கூலி. நாற்றங்காலில் இருந்து நடவு வயல் தூரமா இருந்தால் இது இன்னும் அதிகமாகும்.
நடவுக்கு ஒரு ஏக்கருக்கு கூலி 500 ரூபாய்.
அடியுரம் மற்றும் நடவுசெய்த உடன் இடும் மேலுரம் ஒரு ஏக்கருக்கு 4000ரூபாய். பூச்சி மருந்து ஒரு 1500 லிருந்து 2000 வரை. (மீண்டும் மீண்டும் பூச்சித்தாக்குதல் இருந்தால் இது இன்னும் அதிகரிக்கும்). உரம் மற்றும் பூச்சிமருந்து அடிக்க ஆண் ஆளுக்கு கூலி 100ரூபாய். (காலையிலிருந்து மதியம் வரை மட்டுமே வேலை).தெளிக்கும் கூலி 500 என்று வைத்துக்கொள்வோம்.
களை பறிக்க ஒரு ஏக்கருக்கு எப்படியும் 20 ஆட்கள் தேவைப்படும். ஒரு பெண் ஆள் கூலி 40ரூபாய். ஆக களைபறிக்க மட்டும் 800ரூபாய். ஆக களைபறிப்பு வரை ஒரு ஏக்கருக்கு ஆகும் செலவு மட்டும் 8900 ஆகும்.
இதற்குப்பின் அறுவடை, அறுவடைக்கு கூலி எப்போதும் பணமாக கொடுப்பது கிடையாது. ஆட்கள் அறுவடை செய்தால் நெல்லாகத்தான் கூலி கொடுப்போம். தற்போது இயந்திரங்களை கொண்டு அறுவடை செய்யவதால் ஏக்கருக்கு 1800 ( இது கடந்த ஆண்டு நிலவரம், டீசல் விலை உயர்வால் இவ்வாண்டு 2300 முதல் 2500 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.) .
ஆக இயந்திர அறுவடை என்று வைத்துக்கொண்டால் கூட 11700 ரூபாய் ஆகும்.
இது தவிர வயலை உழவு செய்யும் முன்னர் ஆகும் முன்னற்பாடுகளுக்கு ஆகும் செலவுகளையும், அறுவடைக்கு பின்னர் ஆகும் சில செலவுகளையும் இந்த செலவு கணக்கில் சேர்க்கவில்லை.
சரி இதுவரை செலவுகளை பார்த்தோம். இனி வரவு என்னவென்பதை பார்ப்போம்.
ஒரு வயல் நன்றாக விளைந்தால் ஏக்கருக்கு 45 மூட்டைகள் விளைச்சல் வரும். மிக நன்றாக விளைந்தால் 48 முதல் 50 மூட்டைகள் வரை கிடைக்கும்.
சராசரியாக 45 மூட்டைகள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு மூட்டை சாதாரண ரக நெல் 500ரூபாய் என்று வைத்துக்கொண்டால் ஒரு ஏக்கருக்கு 22500 ரூபாய் கிடைக்கும்.
நான் இங்கே கொடுத்துள்ளது குறுவை எனப்படும் குறைந்த கால பயிருக்கு ஆகும் செலவுகள். குறுவை பருவத்தில் பொன்னி போன்ற அதி சன்னரக நெல்கள் பயிரிடப்படுவதில்லை. அவை சம்பா சாகுபடியில்தான் பயிரிடப்படும்.
சம்பா குறித்தும் தொடரின் பின் பகுதியில் விவரிக்கின்றேன்.
ஆகா , ஒரு ஏக்கருக்கு 10800 ரூபாய் லாபம் கிடைக்கின்றதே என்று ஆச்சரியப்பட வேண்டாம்.
உலகத்திலேயே, தங்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு தாங்களே விலை நிர்ணயிக்க முடியாத ஒரே உற்பத்தியாளர் எங்கள் உழவர்கள் மட்டும்தான்.
நெல்லை விலைக்கு வாங்கும் வியாபாரிகள் ஆகட்டும் அல்லது அரசாங்கத்தின் நேரடி நெல் கொள்(ளை)முதல் நிலையங்களாகட்டும் எல்லாம் எங்களை எப்படி அடிக்கின்றன என்றும், நெல்லை விற்று காசாக்குவதில் நாங்கள் படும் சிரமங்கள் என்ன என்றும் அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.